அமைதியான விடிகாலைப் பொழுது. மயிலொன்றின் அகவல் சத்தம் கேட்டு விழித்தேன். மூச்சு சரியாக ஓடிக் கொண்டிருக்கிறதா என்று கவனித்து விட்டு எழுந்தேன். பிள்ளைகள் இருவரும் இன்னும் சிறிது நேரத்திற்குள் எழுந்து கொள்வார்கள். விடிகாலை பொழுதின் அமைதி அவர்களுக்கு நற்சிந்தனை, ஊக்கம், சிறந்த செயல்பாடு ஆகியவற்றினைத் தரும் என்பதற்காக சிறு வயதிலிருந்தே ஐந்து மணிக்கு எழுந்து கொள்ள பழக்கப்படுத்தினோம். விடுமுறையானாலும் விடிகாலை ஐந்து மணி தான். இன்னும் கொஞ்ச நாட்களில் நான்கரை மணிக்கு பழக்கப்படுத்தி விட வேண்டும். இரவு ஒன்பதரைக்கு தூங்கச் செல்லவும் பழக்கப்படுத்தி இருக்கிறேன்.
அமைதியான காலைப் பொழுதின் துவக்கத்திலே படிப்பதையும், அலுவலக வேலைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து விடுவது வாடிக்கை. நாளொன்றுக்கு சிவில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் படித்து விடுவது வாடிக்கை. அள்ள அள்ளக் குறையாத அற்புதமான சட்ட விளக்கங்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என அசத்தும் தீர்ப்புகளைப் படிக்கவில்லை என்றால் எனக்கு நாளே ஆகாது. அதை முடித்து விட்டால் ஏகப்பட்ட கடமைகள் வரிசை கட்டி நிற்கும். ஒவ்வொன்றாய் முடித்து வர இந்த விடிகாலை ஒழுங்கமைவுச் செயல்கள் அன்றைய தொடர் பணிகளை எந்த இடையூறும் இன்றி செவ்வனே செய்து வர உதவிடும்.
நிசப்தம் மணிகண்டனின் வலைப்பூவை தினமும் படித்து விடுவதுண்டு. தன் வேலையையும் செய்து கொண்டு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை செம்மைப்படுத்தி உதவி வரும் மனப்பாங்குடன் இப்படியான ஆட்கள் பூமியில் அவதரிப்பது அரிதிலும் அரிது. மணிகண்டனை நினைக்கையில் மனது இளகி விடும். அந்த வகையில் தினமும் அவரின் பிளாக்கை படித்து விடுவது வாடிக்கையாகிப் போனது.
இன்றைக்கு அவரின் ஆளுமைன்னா என்னன்னு தெரியுமா? என்ற பதிவினைப் படித்து விட்டு கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். மனம் சலனமற்று இருந்தது. சிந்துவின் மனதை என்னால் உணர முடிந்தது. ஆணாக நான் என் உடலால் பட்ட துயரங்களை விட பெண்ணான அந்தப் பெண் பெரும் துயரங்களை அனுபவித்திருப்பார். வார்த்தைகளால் விவரித்து விட முடியாத வலிகள் அவை. என்னாலும் விவரித்து விட முடியாது. வலிகள் தரும் வேதனையை விட விவரிப்பது என்பது மிக அதிக வலியைத் தரும். இந்த உலகில் வலியும், வேதனையும், துன்பமும் இல்லாதவர்கள் தான் ஏது? ஒவ்வொருவரின் வலி அவரவருக்கு மட்டுமே சொந்தம். ஆறுதலான வார்த்தைகள் வேண்டுமெனில் சிறிது வலியைக் குறைப்பது போலத் தெரியலாம். ஆனால் உண்மையில் அது குறைவதே இல்லை. அவரவர் வலியை அவரவர் அனுபவித்துதான் ஆக வேண்டும். பிள்ளைகளானாலும் சரி, மனைவியானாலும் சரி. நம் வலியை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியுமா? முடியாது.
சிந்துவின் “எல்லோருக்கும்தான் துக்கம் இருக்கு...எனக்கு இருக்கிற துக்கம்தான் பெரிய துக்கம்ன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்...உங்க துக்கம்தான் பெருசுன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க..இல்லையா?” இந்த வார்த்தைகள் உண்மைதான். துக்கம் என்பது சாதிப்பதற்கான ஊன்றுகோல். வாழ்க்கையைக் கடந்து செல்வதற்கான பாதை. வாழ்வின் நிதர்சனத்தை சுட்டிக்காட்டும் சுட்டி. வாழ்வின் நிலையாமையை வெளிப்படுத்தும் வெளிச்சம். துக்கமும் துயரமும் துன்பமும் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை.
ஒவ்வொருவருக்கும் துக்கமும், தாழ்வு மனப்பான்மையும் இருந்து கொண்டே தான் இருக்கும். சமூகச் சூழல், பொருளாதாரச் சூழல் ஆகியவற்றை முன்னிருத்தி ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு நொடியில் துக்கமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் அவர்கள் வாழ்ந்து முடியும் வரை. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது.
எப்போதுமே ஊனமுற்றவனாக இருக்கிறேன் என்ற சிந்தனை வந்ததே இல்லை. என்னிடம் ஒரு சிலர் ”எப்படி சார் சமாளிக்கின்றீர்கள்?” என்பார்கள். ”உங்களால் ஓட முடியும், நடக்க முடியும் என்னால் அது இரண்டும் முடியாது அவ்வளவு தான் விஷயம்” என்றுச் சொல்லி முடித்து விடுவேன்.
சிந்துவின் அச்சீவபிள் டார்க்கெட்டை அவர் அடைந்து விட்டார் என்றால் அவரை வளர்த்த அந்த முகம் தெரியாத பெரியவர்களை விட நான் தான் அதிக சந்தோஷம் அடைவேன். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.
தடம் மாறிச் சென்று கொண்டிருக்கிறது. இதோ இணைப்புத்தடம் வந்து விட்டது.
ஐந்தாம் வகுப்பு வரை ஆவணம் அரசினர் துவக்கப்பள்ளியில் தான் படித்தேன். மாமா அப்பள்ளியில் பணி செய்து கொண்டிருந்தார். தரையில் போடப்பட்டிருக்கும் குட்டைப்பலகையில் அமர்ந்து தான் கல்வி. அனவயல் கணேசன் வாத்தியார் தான் பிரபலம், கணக்கு வாத்தியார். வாய்ப்பாட்டு சொல்லவில்லை என்றால் பின்புறம் பழுத்து விடும், உள்ளங்கைகள் இரண்டும் சிவந்து விடும். வாசகம் என்றொரு தோழன் இருந்தான். கணேசன் வாத்தியார் மூன்றாம் வாய்ப்பாடு சொல் என்றால் நன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு வரிசை தப்பி விடும். கால்சட்டையிலேயே ஒன்றுக்குப் போய் விடுவான். கைகாட்டியிலிருந்து வரும் விச்சாணி எனும் சிவசுப்ரமணியனுக்கு கால்களும், கைகளும் உதறெலெடுக்க ஆரம்பித்து விடும். ஒரு சில நாட்களில் உப்பு நீர் அபிஷேகத்தையும் நடத்தி விடுவான். விச்சாணி செய்திருக்கும் ஒரு செயல் ஆஹா ரகம். மனிதன் என்றால் மனிதன் அவன் தான். ஏலக்கடை மற்றும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டும் விவசாயமும் செய்து வருகின்றான்.
துவக்கப்பள்ளிக்கு வடபுறம் சேரிக்குச் செல்லும் தார்ச்சாலை. சாலையின் வடபுறம் குடை போல பரந்து விரிந்து கிடந்த புளியமரம் ஒன்று இருந்தது. மரத்தின் நேர் மேற்கே சற்று வடபுறமாக சிதிலமடைந்து கிடந்த சிவன் கோவில் ஒன்றும் இருந்தது. அந்தச் சிவன் கோவிலில் இருக்கும் ஆவுடையார் சிலையை என் தாத்தா மாணிக்கதேவர் தான் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு தஞ்சாவூர் பக்கம் சென்று வண்டியில் கொண்டு வந்து சேர்த்தாராம். கம்பி போட்ட கதவுக்குப் பின்னால் பெரிய உருவத்துடன் கருகருவென இருப்பார் சிவனார். விழா நாட்களில் மாலையும் சந்தனமுமாகச் ஜொலிப்பார். பிற நாட்களில் தனி வாசம் தான்.
இந்தப் புளியமரத்தின் அடியில் தான் விவசாய வேலைகள் பலவும் நடக்கும். கதிர் அடிப்பது, நெற்மணிகளைத் தூசி இன்றி காற்றிலாட்டி சுத்தம் செய்வது, நெற்மணிகளைக் காய வைப்பது. கதிர் அடித்து போர் போட்டு வைத்து பின்னர் போர் அடித்து நெற்மணிகளைச் சேர்ப்பது, அவித்த நெற்மணிகளைக் கொண்டு வந்து காய வைப்பது, எள் அடிப்பது, தூசி தட்டி சுத்தம் செய்வது போன்ற அனைத்து வேலைகளும் இந்த மரத்தின் அடியில் தான் செய்வார்கள். நல்ல இனிப்பு புளியங்காய்கள் கிடைக்கும். பழங்களும் இனிக்கும்.
பள்ளியில் இடைவேளை விட்டால் போதும். மாணவர்கள் அனைவரும் அந்த மரத்தடிக்கு விளையாடச் செல்வதுண்டு. சிலர் மரமேறி உயரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். ஒரு சிலர் பளிங்கு வைத்து லாக் விளையாடுவர்கள். பெண்கள் நொண்டியாட்டம் விளையாடுவார்கள். கபடி விளையாடுவார்கள். ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலர் அதன் பெருத்த வேர்களுக்கிடையில் துண்டு விரித்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் தாயம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒரு சில கிராமத்துப் பெண்கள் தரையில் பல்லாங்குழி பறித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில மாணவர்கள் கிட்டி விளையாடுவார்கள். பள்ளியில் மணி அடித்ததும் கூடுகளுக்குள் சென்று சேரும் பறவைகள் போல வகுப்புகளுக்குள் சென்று சேர்ந்து விடுவார்கள். அடியேனும் நாள் தவறாது நண்பர்களுடன் விளையாடச் செல்வதுண்டு.
புளியமரத்தின் நேர் வடக்கில் தூண்டிக்காரன் கோவில் உள்ளது. ஆள் உயரத்தில் குதிரையில் கையில் வாளுடன் முறுக்கிய மீசையுடன் தூண்டிக்காரன் உட்கார்ந்திருப்பார். கோவிலை ஒட்டி புதுக்குளம் இருக்கிறது. தூண்டிக்காரன் கோவிலின் நேர் மேற்கே பின்புறமாக பிடாரி அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு தான் ஊர் திருவிழாவின் போது முளைப்பாரி கொட்டி, பிடாரி அம்மனுக்கு ஆடு வெட்டி பலி கொடுத்து விழா எடுப்பார்கள்.
ஆவணம் கிராமத்து மக்களைத் தாயைப் போல அரவணைத்து ஆதரவளித்தது அந்தப் புளியமரம். சாதாரண மரமில்லை அது. பத்து ஆட்கள் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவு பெரியது. பெரிய பெரிய கிளைகள் விரிந்து கிடந்தன. அந்தப் புளியமரம் இப்போது அங்கு இல்லை. அது எப்போது வளர ஆரம்பித்தது என்ற வரலாற்றினைச் சொல்ல எவரும் இல்லை. அந்த மரம் பூமியிலிருந்து வெளிவந்து எண்ணற்றோருக்கு உதவிகளைச் செய்தது. காலம் மாற மாற அம்மரமும் காணாமல் போனது.
நேற்று விடிகாலையில் சிவன் கோவிலும், புளியமரமும் நினைவிலாடின. எழுதுவது போல கனாக்கண்டேன். எனக்கு விளையாட இடம் கொடுத்தது அந்தப் புளியமரம். அதன் நிழலில் நான் சந்தோஷமாக விளையாடினேன். அதன் நிழலில் மறைந்து போன சிவபக்தர் வேலாயுதனார் திருச்சிற்றம்பலம் சிவபெருமானைப் பற்றி வீச்செழுத்தில் எழுதிய ஆசிரியப்பா பாடல்களை அச்சுக் கோர்ப்பதற்காக, எனது அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுக்க இடமளித்தது அந்தப் புளியமரம். அவ்வப்போது பச்சைப்புளியங்காய்களை தின்னக் கொடுத்தது அது. அந்தப் பள்ளிக் கூடத்தில் படித்து முடித்து இன்றைக்கு சுமார் 30 வருடங்கள் கடந்து விட்டன. அந்த மரம் செய்த உதவியை நான் மறந்து விட்டேன். அதுவாகவே எனக்குள் இருந்து கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டது இன்றைக்கு. அந்தப் புளியமரத்தினை ஊர்க்காரர்கள் மறந்து இருக்கலாம். ஆனால் நான் மறக்கவில்லை. அது என்னை மறக்கவும் விடவில்லை.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
(குறள் 110 - அதிகாரம்: செய்நன்றி அறிதல்)
மேலே கண்ட குறள் உங்களுக்குப் புரியும் தானே?
1 comments:
அருமை
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.