பா.சிங்காரம் அவர்களின் ’புயலிலே ஒரு தோணி நாவல்’ போன்ற ஒரு நாவலை இதுவரை படித்ததே இல்லை. கடல் தனக்குள்ளே விழுங்கும் மழை நீரைப் போல மனதை உள்ளே இழுத்துக் கொண்டது. அந்தக் கால தெருக்களும் மனிதர்களும் வட்டிக்கடைகளும் கண் முன்னே படம் விரிந்தது போல விரிந்தன. அந்தக் காட்சிக்குள்ளிலிருந்து வெளி வருவதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது. சென்று கொண்டே இருந்த நாவலுக்குள் ’மாணிக்கம்’ என்றொரு பெயர் வர எனக்குள்ளே ஏதோ ஒரு சிறிய பொறி தட்டியது.
இந்திய தேசிய ராணுவத்தின் லெப்டினெண்டாக இருந்து பர்மா, சுமத்ரா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் போர் செய்தும் பின்னர் கைதாகி சிறையில் கிடந்து விடுதலையாகி ஊருக்கு வந்த என் அம்மா குட்டியம்மாளின் தகப்பனாரும், எனது தாத்தாவுமான மாணிக்கதேவரின் உருவம் கண் முன்னே வந்து நின்றது. எனது தாத்தாவுடன் அருணாசலத்தேவரும், தனுக்கோடிதேவரும், பைத்தவிடுதியைச் சேர்ந்த அண்ணாமலை உடையாரும் நினைவிலாடினார்கள். அடிக்கடி அருணாசலத்தேவர் தாத்தாவைத் தேடி வருவார். அண்ணாமலை உடையார் பைத்தவிடுதியிலிருந்து சைக்கிளில் தான் வருவார். ராஜாக்கண்ணு உடையார் ஆள் கெச்சலாக இருப்பார். ஐவரும் தமிழக அரசின் தாமிரப்பட்டயம் பெற்றார்கள். டெல்லியில் இந்திரா காந்தி அம்மையார் வழங்கிய இந்திய அரசின் தாமிரப்பட்டயத்தையும் பெற்றார்கள். மூவருக்கும் இந்திய விடுதலை தியாகிகள் பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது.
அருணாசலம் மாமாவுக்குப் போன் செய்து பா.சிங்காரத்தைப் பற்றியும் நாவலைப் பற்றியும் சொல்லி விசாரித்தேன். இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றுச் சொன்னார். சிறு பிள்ளையாக இருந்த போது தாத்தா சின்னப்பிள்ளைப் பாட்டிக்கு எழுதிய கடிதங்கள், இந்திய அரசும், தமிழக அரசும் தாத்தாவுக்கு அனுப்பிய கடிதங்கள் ஆகியவற்றைப் படித்த நினைவுகள் வந்து சென்றன. இப்போது அண்ணாமலை உடையார் மட்டும் இருக்கிறார். அவரைச் சந்திக்கச் செல்ல வேண்டும். அவரின் பையன் குணசேகர் தாத்தா வீட்டிலிருந்துதான் படித்தார். குணம் என்று அழைப்பார்கள். அமைதியான சாந்தமே உருவானவர்.
ஒரு முறை நானும் என் தம்பி ஜெயபாலும் பக்கத்து வீட்டாரிடம் பிரச்சினை செய்து விட்டோம். அவர்கள் காவல்துறையில் கம்ப்ளைண்ட் கொடுத்து விட்டார்கள். அண்ணாமலை உடையார் வீட்டுத் தோட்டத்துக்குக் கிணற்றுச் சாளையில் தான் பதுங்கி இருந்தோம். போலீஸ் அங்கெல்லாம் நினைத்தால் கூட வர முடியாது. திகிலடிக்கும் காடுகள் நிறைந்தவை அந்த தோட்டம் இருந்த பகுதி. ஒரு வழியாக சமாதானம் பேசி வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
தாத்தாவுடன் இருந்த ஐவரில் நால்வர் காலமாகி விட்டனர். தாத்தா உயிரோடு இருந்திருந்தால் பா.சிங்காரத்தைப் பற்றி விசாரித்திருப்பேன். தாத்தாவின் முஸ்லிம் நண்பர் இஸ்மாயில் ராவுத்தரும் காலமாகி விட்டார். இவர் வட்டிக்கடையில் வேலை செய்தவர். அண்ணாமலை உடையார் இப்போதும் இருக்கிறார். ஆனால் எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. தாத்தாவுக்கும் பா.சிங்காரத்துக்கும் தொடர்பு இருந்திருக்குமா? நாவலில் வரும் மாணிக்கம் என்ற கேரக்டர் தாத்தா தானா? என்றொரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தாத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் வழங்கிய காக்கி உடையினை உடுத்தி தேசியக் கொடிக்கு சல்யூட் செய்வார். வயதாக அவரால் உடை உடுக்க முடியவில்லை. அந்தக் காக்கிச் சட்டையை நான் தான் குளிருக்கு இதமாய் போட்டுக் கொள்வேன். தாத்தா வைத்திருந்த கொலைகார கத்தி ஒன்றும் வீட்டில் இருந்தது. ஒரு சிறு பை ஒன்றும் இருந்தது. அது நீண்ட நாள் கழித்து மக்கிப் போனது. பா.சிங்காரத்தின் நாவலில் வரும் மாணிக்கம் என்ற கேரக்டர் எனது தாத்தாவா என்றுச் சொல்லிட இன்று யாரும் இல்லை. காலம் தனக்குள்ளே புதைத்துக் கொண்ட வரலாற்றுப் பக்கங்களில் இதுவும் ஒன்று. அண்ணாமலை உடையாருக்கு நினைவுகள் தப்பாமல் இருந்தால் கண்டுபிடித்து விடலாம். பார்க்கலாம்.
காலம் எத்தனை எத்தனையோ மனிதர்களை தனக்குள்ளே விழுங்கிக் கொண்டே இருக்கின்றது. பிறப்பதும் இறப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. வருகிறார்கள் மறைகிறார்கள். ஆனாலும் ஒரு சிலர் தான் தங்களின் இருப்பை வரலாற்றில் பதிய வைத்துச் சென்றிருக்கின்றார்கள். இந்த நாவலில் வரக்கூடிய ஒவ்வொரு மாந்தர்களும் அவர்களின் வாழ்க்கையும் எக்காலத்திலும் மறைந்து விடப்போவதில்லை. படிக்கும் ஒவ்வொரு வாசகனின் நினைவிலும் வந்து செல்லும்.
இந்த நாவல் காட்டும் மனிதர்களும், போர்க்களங்களும், மனித வாழ்க்கையும் புரிந்தும் புரிந்து கொள்ள முடியாத மர்மப்பக்கங்களைப் போல இருக்கின்றன. மனிதர்கள் ஏன் உழைக்கின்றார்கள்? ஏன் வெளி நாடுகளுக்குச் சென்று தங்கள் இளமையை இழந்து பொருளீட்டுகின்றார்கள்? அதன் பலன் என்ன? என்றெல்லாம் யோசிக்க வைத்து விடுகின்றன. வாழ்க்கை எனும் கடலில் தோணி போலத்தான் மனிதனும் மிதக்கின்றானா என்ற புரியாத கேள்வியை எழுப்பி விடுகிறது. ஊரில் இருக்கும் தன் கடைசிப் பெண்பிள்ளை இறந்தது கேட்டு பித்துப் பிடித்தது போல ஆன ஒரு கேரக்டரும் உண்டு. ஏன் இந்தப் பித்து நிலை ஏற்பட்டது என்று எவராலும் கண்டு பிடிக்க முடியுமா? காரணத்தை அறிந்து கொள்ளத்தான் முடியுமா?
சுதந்திரம், சமத்துவம், சகோதரதத்துவம் எல்லாம் மாயக்கற்பனை என்றும், கற்பனை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை, கொள்கை இல்லை, சமுதாயமில்லை என்றும் கற்பு எனும் கற்பனை இன்றேல் குடும்ப வாழ்க்கை அதாவது லட்சிய வாழ்க்கை இல்லை என்று விவரிக்கிறது நாவல்.
ஒவ்வொரு அறிவுக்கும் ஒவ்வொரு உண்மை புலப்படும். அவரவர் அறிவுப் போக்கில் சென்றால் குழப்பமும் அழிவுமே கிடைக்கும் என்றும் அறிவுக்கும் ஒரு முட்டுக்கட்டை போட்டாக வேண்டும் என்கிறது நாவல். அறிவதையே குறிக்கோளாக கொள்ளும் அறிவு அறிவாகாது. சமுதாய மொத்த நலனைக் கருத்தில் கொண்டே நல்லதெனும் தீயதெனும் அறியப்படுகிறது எனவும் நாவல் விவரிக்கிறது.
இந்த நாவல் சொல்லும் வாழ்க்கை அழகானது அல்ல. அபத்தமானது. ஆறறறிவு கொண்ட மனிதனின் அறிவிலி வாழ்க்கையை விவரிக்கின்றது. தமிழர்கள் அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நாவல் இது. வாழ்வின் நோக்கமென்ன என்பதை புரிய வைத்து விடும் இந்த நாவல்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.