வீட்டின்
எதிரில் பெரிய ஓட்டு வீடு. யாரோ ஒரு தேவரின் வீடு. அதை முஸ்லிம் ஒருவரிடம் விற்று
விட்டு தெற்கே குடி போய் விட்டார். வீட்டு வாசலின் இடது பக்கமாக மூன்று நாவல்
மரங்கள் இருந்தன. ஒன்று முஸ்லீம் வீட்டாருக்கு பாகம். இன்னொன்று வீட்டின் இடது
பக்கமாய் இருக்கும் மாமாவுக்கு பாகம். மேற்கு பக்கத்தில் இருக்கும் மரம் என்
தாத்தாவுக்கு பாகம்.
எதிர் வீடு பெரிய கட்டு வீடு.
கிழக்குப் புறத்தில் ஒருவர் குடியிருந்தார். மேல்புறத்தில் ஆசாரி குடியிருந்தார்.
அவருக்கு மூன்று ஆண் பசங்க. அதில் ஒருவன் என்னோடு படித்தான். எங்கே படித்தான்? படிக்கிறேன் பேர்வழி என
புத்தகமட்டையைத் தூக்கிக் கொண்டு திரிந்தான். ஆசாரி வீட்டின் எதிரே பெரிய மாமரம்
ஒன்று அகல விரிந்து கொண்டிருந்தது. அதன் நிழலில் தான் ஆசாரி மர வேலைகளைச் செய்து
கொண்டிருப்பார்.
எதிர் வீட்டுக்கு தென்புறமாக
சலுவாவின் வீடு. கிழக்குப் பார்த்த வீடு. அங்கு அதிகம் பேர் வாழ்ந்தார்கள். சலுவா
தான் எதிர் வீட்டையும் வாங்கினார். சல்வா வீட்டுக்காரர் மலேசியாவில் வேலை
பார்த்தார். அவருக்கு நிறைய பெண்களும், ஆண்களும் இருந்தனர்.
நாவல் மரத்தில் பழங்கள்
கொத்துக் கொத்தாய் பழுத்து தொங்கும். குருவிகளும் இன்னபிற பறவைகளும் விடாது சத்தம்
எழுப்பியபடி பழங்களை ருசிக்க வந்து விடும். கல் வாசலில் நாவல் பழங்கள் வந்து
விழும். மண் ஒட்டாது இருப்பதால் அடிக்கடி நான் அவைகளை எடுத்து தின்பதுண்டு.
மண்ணில் விழுந்தால் அதை நாசூக்காக எடுத்து விட்டு சாப்பிடுவதுண்டு. இருந்தாலும்
மண்ணும் வயிற்றுக்குள் சென்று விடும். அதையெல்லாம் நாக்கு கண்டு கொள்வதே இல்லை.
ருசி என்று வந்து விட்டால்
மண்ணாவது ஒன்னாவது? இரவுகளில்
வவ்வால்கள் வந்து நாவல் பழங்களைக் கொத்துக் கொத்தாகச் சப்பி போட்டு விட்டு சென்று
விடும். ஒரு முறை வடக்கித் தெருவில் இருக்கும் ஒருவரைக் கொண்டு வந்து மரத்தைச்
சுற்றி வலைகளைக் கட்டி வைத்து விட்டோம். மூன்று வவ்வால்கள் மாட்டின. அதை வறுவல்
செய்ய அறுக்கும் போது தான் அருகில் இருந்து பார்த்தேன். அதன் கலரும் மூஞ்சியும்
சகிக்காது.
அன்றிலிருந்து எனக்கு
வவ்வால்களைக் கண்டாலே ஆகாது. நான் ஆவலுடன் சாப்பிடும் நாவல் பழங்களை அவைகள் தின்று
விடுவது ஒரு காரணம். மரத்தில் இருந்து பழங்களை உலுப்பி எடுத்து தண்ணீரில் அலசி
கொஞ்சம் உப்புத்தூள் தூவி குலுக்கி வைத்து விட்டு அரை மணி நேரம் சென்று எடுத்துச்
சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். சட்டி சட்டியாகச் சாப்பிட்டிருக்கிறேன்.
ஆசாரி வீட்டில் விசேசம் போல.
வாசலில் பந்தல் போட்டார்கள். பந்தலில் அழகான ஓலைகள் தொங்க விடப்பட்டன.
ஒலிப்பெருக்கியை வைத்துப் பாடல் போட ஆரம்பித்தார்கள். பெரும் சத்தத்துடன் பாடல்கள்
ஒலிக்க ஆரம்பித்தன. இன்னும் இரண்டு நாட்களுக்கு ஒலிபெருக்கிகள் விடாது பாடல்களை
ஒலித்துக் கொண்டிருக்கும். தீன் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் தான் வருவார்கள். கருப்பு
கலரில் இருக்கும் தட்டுகளிலிருந்துதான் பாடல்கள் ஒலிக்கும். நான் சென்று பார்த்து
வருவதுண்டு.
ஆச்சரியத்தில் விழிகள்
பிதுங்கியபடி தட்டையான கலர் படங்கள் பதிந்த கவருக்குள் இருக்கும் தட்டுகளை எடுத்து
எடுத்துப் பார்ப்பதுண்டு. மைக் செட்டுக்காரர் ’பக்கத்தில் உட்கார்ந்து இரு’ என்றுச் சொல்லி விட்டு பீடி
குடிக்கப் போய் விடுவார். கிராம போன் பாடி முடித்ததும் மீண்டும் ஒரு தட்டை எடுத்து
மாட்டி நானே பாட விடுவேன். நான் சரியாகச் செய்கிறேனா என்று மைக் செட்டுக்காரர்
மேற்பார்வை பார்ப்பார். குஷியாக இருக்கும். அம்மாவிடம் வந்து, ”அம்மா, இது நான் போட்ட பாட்டு எப்படி
இருக்கு?” என்று
பெருமிதமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
ஆசாரி வீட்டு விசேசத்தில்
இரவுகளில் பளீரென்று வெளிச்சம் அடிக்கும் ஒரு வஸ்துவை நான் பார்த்தேன். அதுதான்
பெட்ரோமாக்ஸ் லைட். விஸ் என்ற சத்தத்துடன் ஒளி வீசிக் கொண்டிருக்கும். பார்க்கப்
பார்க்கப் பரவசமாய் இருக்கும். அதில் ஒளி வீசும் பகுதி ஒன்றிருக்கும். அதன் பெயர்
மேன்டில். வலை போன்றிருக்கும். மண்ணெண்ணெய் தான் எரிபொருள். ஒரு லிட்டர்
பிடிக்கும். ஆனால் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும். விசேசங்கள் என்று வந்து
விட்டால் கடைத்தெருவில் இருந்து வாடகைக்கு கொண்டு வந்து இரவுகளில் வைத்து
விடுவார்கள்.
எங்கள் வீட்டிலும் சலுவா
வீட்டிலும் தான் கரண்ட் இருக்கும். நான்கு பல்புகள் அவ்வளவுதான் வீடு
முழுமைக்கும். டியூப் லைட் ஒன்று இருந்தது. அது நீண்ட நாட்களாக எரிவதில்லை. அம்மா
வீடு கூட்டிப் பெருக்கும் போது கரண்ட் மீட்டரில் ஒரு அடி வைப்பார். அது ஏன் என்று
ரொம்ப நாட்களுக்கு முன்பு வரை தெரியாது. பின்னர் தெரிந்த பிறகு அம்மாவின்
சிக்கனத்தை நினைத்துச் சிரித்துக் கொள்வேன். ”அதை தொட்டுக்கிட்டு விடாதேடா, புடிச்சுக் கொன்னுடும்” என்று என்னிடம் சொல்லி
வைப்பார். அது எனக்கு எட்டாது. அதனால் அதைத் தொட்டுப்பார்ப்பது பார்ப்பதோ அல்லது
அது என்னைப் புடிச்சுக்கொல்வதோ ஆகாத காரியம்.
நான் தான் தட்டான்கள், வண்ணாத்துப்பூச்சிகள், பொன்வண்டுகளைப் பிடித்துக்
கொண்டு வந்து கொன்று கொண்டிருந்தேனே? அவ்வப்போது கரட்டான்களை வேறு
கொலைகள் செய்து கொண்டிருந்தேன்.
வீட்டின் இடது புறமிருந்த
கொல்லையில் தும்பைச் செடிகள் அதிகம் இருக்கும். கடுகு போன்ற ஒரு செடியும்
இருக்கும். அது பெயர் என்னவென்றுதான் தெரியவில்லை. தும்பைப்பூவில் தேன்குடிக்க
வரும் வண்ணாத்துப்பூச்சிகளை சத்தமே காட்டாமல் உட்கார்ந்து அமுக்கிப் பிடித்து
விடுவேன். மூன்று தும்பைச் செடிகளைப் பிடித்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வண்ணாத்துப் பூச்சி வந்து
அமரும் போது ஒரே அமுக்கு. அது செத்தே போய் விட்டோம் என்று மயக்கத்தில் இருக்கும்.
பிடித்து விடுவேன். அதைக் கொண்டு வந்து அதன் பின்புறம் நூலைக் கட்டிப் பறக்க
விடுவேன். சிலதுக்கு பின்புறம் நூலோடு வந்து விடும். வெறும் தலையோடு பறந்து போய்
விடும். எனக்குத்தான் எரிச்சலாக இருக்கும். மீண்டும் பிடிக்க வேண்டும்.
தட்டான்களில் நூல் கட்டுவது என்பது பெரும்பாடு.
வீட்டு வாசலில் பறக்கும்
தட்டான்களைப் பிடிப்பதே பெரும் கலையம்சம் பொருந்தியது. பெரிய துண்டாக வைத்துக்
கொண்டு சத்தமே காட்டாமல் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அருகில் பறக்கும் போது ஒரே
அடி. துண்டுக்குள் சிக்கி விடும். சில தட்டான்கள் செடிகளில் உட்காரும் போது சத்தமே
காட்டாமல் அதன் வாலைப் பிடித்து அமுக்கி விடுவேன்.
மாமா பையன் விட்டியன் தான்
பொன்வண்டுகளையும் அதுகள் சாப்பிடும் இலைகளையும் கொண்டு வந்து தருவான். அதன்
கழுத்தில் நூலைக் கட்டி ஒரு சுற்றுச் சுற்றினால் சும்மா விர்ரென்று சுற்றும்.
ஆனால் அதன் கழுத்தில் மட்டும் விரலை வைத்து விடக்கூடாது. ஒரே கடி என்று விட்டியன்
என்னை பயமுறுத்தி வைத்தான். நானா அடங்குவேன். கையில் துணியைச் சுற்றிக் கொண்டு
விரலை வைப்பதுண்டு. பொன்வண்டு மஞ்சள் கலரில் முட்டைபோடும். இதெல்லாம் விளையாட்டு
எனக்கு.
எங்களூரில் ஆட்டக்குதிரைகளை
வியெஸெம் ராவுத்தர் வளர்த்து வந்தார். அந்தக் குதிரை எம்.ஜி.ஆர் படத்தில் கூட
நடித்திருக்கிறது என்றார்கள். நான் டியூசன் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும்
போது வியெஸெம் ராவுத்தர் வெள்ளைகலரில் இருக்கும் குதிரைக்கு ஆடச் சொல்லிக்
கொடுத்துக் கொண்டிருப்பார். வேடிக்கைப் பார்ப்பதுண்டு. ஒரு தாம்பாளத்தட்டில்
கால்களை வைத்து ஆடிக் கொண்டிருக்கும் அந்தக் குதிரை. ராவுத்தர் கையில் சாட்டை
ஒன்று இருக்கும். சாட்டையால் ஒரு விளாசு விளாசுவார்.
குதிரை கனைத்துக் கொண்டே
கால்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கும். முஸ்லிம் வீட்டு
விசேசங்களில் மாப்பிள்ளை முகம் முழுவதும் சரம் சரமாய் தொங்கும் பூக்களை அணிந்து
கொண்டு குதிரை மீது வருவார். குதிரையின் முன்னே பெட்ரோமாக்ஸ் லைட்டுகளை தலை மீது
வைத்துக் கொண்டு ஆட்கள் செல்ல பாண்டு வாத்தியங்களுடன் ஊர்வலம் சலுவா வீடு
வரைக்கும் வந்து திரும்பிச் செல்லும்.
அம்மா என்னைத் திட்டி விட்டால்
அருவாளைத் தூக்கிக் கொண்டு வீட்டின் இடது புறம் இருந்த நீண்டு வளர்ந்த பனை
மரத்தின் அடியில் இருந்த மஞ்சமினா மரத்தினை வெட்டிச் சாய்த்து விடுவேன். அது
வளரும் வரை எனக்கு கோபம் வராது. மீண்டும் கோபம் வந்தால் மீண்டும் வெட்டிக்
குதறிவிடுவேன். அந்த மரமும் விடாது துளிர்ப்பதும் நான் கோபம் வந்தால்
வெட்டுவதுமாய் எனக்கு விபரம் தெரிந்த நாள் வரைக்கும் தொடர்ந்தது. கல்லூரிக்குச்
சென்ற பிறகு அந்த மஞ்சமினா மரம் வளர்ந்து படர்ந்து நின்றது. மாமா ஒரு நாள் அதையும்
வெட்டி விட்டார். வீட்டைச் சூழ்ந்த கொடத்தடி மாமரம், காசாலட்டு, பெரிய மாமரம், பாவக்காய் மாமரம், தேத்தாமரம், வேப்பமரங்கள் எல்லாம்
கவர்மெண்டு போட்ட ஆழ்துளைகுழாயினால் பட்டுப் போயின. இப்போதும் ஊருக்கு அந்தக்
ஆழ்துளைக் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் ஊரெங்கும் இருந்த பச்சை
காணாமல் போய் விட்டது அத்துடன் தட்டான்களும், வண்ணத்துப்பூச்சிகளும், பொன்வண்டுகளும், பெட்ரோமாக்ஸ் லைட், கிராம போன் மற்றும்
ஆட்டக்குதிரையும் தான்.
மலைகள்.காமில் 112 வது இதழில் வெளியான கட்டுரை. அடுத்த இதழ் வெளிவந்து விட்டதால் பிளாக்கில் வெளியிடுகிறேன். நன்றி சிபிச்செல்வன்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.