குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, January 10, 2017

தொலைக்காட்சியின் கொடூரம்

வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக கவனித்தால் அப்பொருள் ஏதோ ஒரு தொலைக்காட்சி வழியாக நமக்குள் புகுந்து வீட்டுக்குள் வந்து இருக்கும். துணி துவைக்கும் சோப்பிலிருந்து சானிட்டரி நாப்கின் வரை ஒவ்வொரு பொருளும் டிவி மூலமாகத்தான் விற்கின்றார்கள். டிவி என்பது பொழுதுபோக்கு என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. அது ஒரு மார்க்கெட்டிங்க் சாதனம். அதுமட்டுமா அந்த மார்க்கெட்டிங்க் செய்யும் டிவியை நாமே விலைகொடுத்து வாங்கி மாதா மாதம் அதற்கு சம்பளம் வேறு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். யாரோ ஒருவரின் பொருளை விற்பதற்கு நாம் செலவு செய்து ஏமாந்து கொண்டிருக்கிறோம். வீட்டிலுள்ள பொருட்களின் அவசியத்தினை யோசித்துப் பார்த்தால் தேவையில்லாத பொருட்கள் தான் வீடு நிறைய கிடக்கும். வாங்கிய நொடியிலிருந்து அப்பொருளின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

ஆறு இலட்ச ரூபாய் போட்டு வாங்கும் காரின் விலை, வாங்கிய அடுத்த நொடியில் குறைந்து விடுமா இல்லையா? கார் பயன்படுத்தத்தான் வாங்குகிறோம் ஆனால் அதன் மதிப்பு? அதுமட்டுமா காரைத் தொடர்ந்து அதற்கு பொண்டாட்டிக்குச் செய்யும் செலவை விட அதிகமல்லவா செலவழிக்கின்றோம். யோசித்துப் பாருங்கள். காருக்கு ஆகும் செலவு கொஞ்சமா நஞ்சமா? 

ஒரு ரூபாய் செலவு செய்தால் அதன் பயன் என்ன என்று யோசித்துப் பாருங்கள். அந்த ஒரு ரூபாயைச் சம்பாதிக்க நாம் படும் பாடு என்ன என்று நினைத்துப் பாருங்கள். கையில் காசு இல்லாமல் இருக்கும் போது தான் காசு சம்பாதிக்க நாம் என்னவெல்லாம் இழந்திருக்கிறோம் என்று புரியவரும். 

எனக்கொரு தோழி இருக்கிறார். வாரம் தோறும் நகைக்கடை செல்பவர். டிசைனர் சாரி தான் உடுத்துவார். ஒரு நாள் அவரைச் சந்தித்தபோது காட்டன் சேலையில் எளிமையாக இருந்தார். கண்கள் விரிய அவரை நோக்கிய போது புரிந்து கொண்டு, ”தங்கம், ஒரு நாள் இருப்பந்தையாயிரம் ரூபாய்க்கு சேலை எடுத்து அணிந்து கொண்டு திருமண விழாவிற்குச் சென்றேன், பெருமையாக இருந்தது. எல்லோரும் என்னைப் பார்க்கின்றார்கள் என்று தற்பெருமை தாங்க முடியவில்லை. படியில் ஏறிக் கொண்டிருந்த போது கால் வழுக்கி விழுந்தேன். அந்தச் சேலை நார் நாராகக் கிழிந்து விட்டது. அத்தோடு அனைவரும் வேடிக்கைப் பார்க்கும்படி கேவலமாகப் போய் விட்டது. அங்கு வந்திருந்த ஒரு பாட்டி 250 ரூபாய்க்கு ஒரு காட்டன் சேலை வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தால் இந்த அசிங்கம் தேவையா? ஊர் முழுக்க உன் உடம்பைப் பார்த்து விட்டார்களே, இந்தச் சேலையை புத்திசாலிப் பெண் எவராவது வாங்குவாரா? என்று கேட்டார். எனக்கு அந்த நொடியில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. என்னதான் தேய்த்து தேய்த்துக் குளித்தாலும் குளித்து முடித்த அடுத்த நொடியிலிருந்து நம் உடம்பு நாற ஆரம்பித்து விடுகிறது தங்கம். வீட்டுக்கு வந்து பீரோவைத் திறந்து கணக்கெடுத்துப் பார்க்கிறேன் கிட்டத்தட்ட அரை கோடி ரூபாய்க்கு புடவைகள். எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் நாராய் கிழிந்து போய் விடும். நிலம் வாங்கிப் போட்டிருந்தாலும் விலை ஏறி இருக்கும். ஏதோ உபயோகமாக இருக்கும். ஆனால் இந்தப் புடவைகளால் எனக்கு என்ன பயன்? யோசித்தேன், இதோ இப்போது நீங்கள் பார்க்கும் நான், அனுபவம் தான் கற்றுக் கொடுக்கிறதுப்பா!” என்றார்.

இந்த டிவியைப் பற்றி எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சிறிய வயதில் டியூசன் சென்று விட்டு வரும் போது வி.எஸ்.எம். ராவுத்தர் வீட்டில் பாசமலர் படம் ஓடிக் கொண்டிருந்தது. கருப்பு வெள்ளை டிவியில் டெக் போட்டு தீன் மியூசிக் கடையில் கேசட் எடுத்து வந்து அந்த வீட்டிலிருந்தோர் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் வேண்டா விருந்தாளியாகச் சென்று படம் பார்க்க உட்கார்ந்து கொண்டேன். ஆயிற்று மணி ஒன்பது. ஏழு மணிக்குள் வீட்டுக்கு திரும்பி வரும் பையனைக் காணவில்லை என்று ஊர் முழுக்க வலை வீசி தேடி இருக்கின்றார்கள். டியூசன் வாத்தியார் ஜோசப் வீட்டுக்கு ஆள் சென்று விசாரித்து வந்திருக்கின்றார்கள். வீட்டில் பெரிய ரகளை நடந்து கொண்டிருப்பது தெரியாமல் நான் படம் முடிந்து வந்து சேர்ந்தேன். அருகிலிருந்து பூவரசு மரத்துக் குச்சியை பிடுங்கி எடுத்து விளாசு விளாசுன்னு விளாசிவிட்டார் மாமா. 

அடுத்த ஒரு வாரத்தில் டயனோரா டிவி வந்து விட்டது. பெரிய ஆண்டனாவிலிருந்து வயர் போட்டு கருப்பு நிறத்தில் கதவுகள் கொண்ட டயனோரா டிவிக்கு புதிய மேஜை ஒன்று அடித்து அதில் வைத்து விட்டார்கள். அடியேன் தான் டிவி ஆபரேட்டர். 

கபடி விளையாடுவது, பம்பரம் விடுவது, பல்லாங்குழி ஆடுவது, தாயக்கட்டை உருட்டுவது,  பட்டம் விடுவது, மீன் பிடிக்கச் செல்வது, நவாப்பழம் பறிக்கச் செல்வது, தட்டான் பிடிப்பது, பொன் வண்டு பிடிப்பது, ஒளிந்து விளையாடுவது இப்படி அனைத்து விளையாட்டுக்களையும் டிவி தனக்குள் இழுத்துக் கொண்டது. பள்ளி, டியூசன் விட்டு வீடு வந்ததும் டிவி. 1991 வாக்கில் மதியம் போல சன் டிவி ஆரம்பிப்பார்கள். பதினோறு மணி வரை டிவி பார்ப்பேன். படிப்பதில்லை, தட்டைப் பார்த்துச் சாப்பிடுவதில்லை. இப்படி பல வேலைகள் அனைத்தும் டிவியின் முன்னாலே முடங்கிப் போயின. கிணற்றடியில் நானே தயார் செய்திருந்த தோட்டம் தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து போய் கருகிப் போயின. அந்தளவுக்கு டிவி என்னை ஆக்ரமித்திருந்தது. இது நாள் வரை யோசித்துப் பார்க்கிறேன் டிவியால் நான் பெற்றது என்ன என்று ஒரு எழவும் புரியமாட்டேன் என்கிறது. டிவியால் எனக்கு என்ன நன்மை கிடைத்தது என்று யோசித்தால் என் மீதே எனக்கு எரிச்சல் வருகிறது. எவ்வளவு முட்டாளாய் இருந்து விட்டோம் இத்தனை நாளாக என்று மீண்டும் மீண்டும் எரிச்சல் வருகிறது. 

எல்லா வீட்டிலும் முக்கிய அங்கத்தினராக டிவி மாறிப் போய் விட்டது. எங்களூர் பக்கம் சித்தி சீரியலில் ஒரு பெண் இறந்து போனதற்காக பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது குளத்தில் குளித்து விட்டு வந்தார்கள் என்றுப் பேசிக் கொண்டார்கள். புருஷன்கள் எவரும் ஒன்பது மணி வரை வீட்டுப்பக்கம் செல்வதில்லையாம். ஊரெல்லாம் கருப்பு வயர்கள் தொங்கின. வீடெல்லாம் டிவிக்கள். மாலை நேரங்களில் பெண்கள் எவரும் வீட்டை விட்டு வெளியில் வருவதே இல்லை. நகரங்களில் சொல்லவே வேண்டாம்.

பிள்ளைகள் கார்ட்டூன் சானல்களில் உட்கார்ந்து விட்டார்கள். பெண்டுகள் நாடகம் பார்க்கின்றன. இளசுகள் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்து விடுகின்றார்கள். வயதானவர்கள் காலையிலிருந்து இயற்கை மருத்துவத்திலிருந்து பழைய சினிமா பாடல்கள் வரை பார்க்க ஆரம்பித்து டிவியின் முன்னால் தங்கள் உடல் நலத்தையும், வாழ்க்கையையும் முடக்கி விட்டார்கள். இனி டிவி இல்லாமல் எவரும் வாழவே முடியாது என்கிற நிலைக்குச் சென்று விட்டார்கள். இறைவனைக் கூட டிவியில் பார்த்து விடுகின்றார்கள். கோவில்களுக்குச் செல்லும் வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன.

அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள். டிவியினால் நாம் பெறுவது என்ன? பொழுது போக வேண்டுமா? ரேடியோவை ஆன் செய்து திருச்சி ரேடியோ கேளுங்கள். மறந்தும் எஃப்.எம்மைக் கேட்டு விடாதீர்கள். காதுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி நாளடைவில் உங்கள் காது ஜவ்வினைக் கிழித்து மருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்கள். ரேடியோ மிர்ச்சி செந்தில் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து தன்னுடன் நடித்த பெண்ணைக் காதலித்து இப்போது அந்தப் பெண்ணை டிவியில் நடிக்க வைத்து பணம் சம்பாதிக்கிறார். எஃப். எம்மைக் கேட்ட நீங்கள் கேனயர்களாக இருப்பது மட்டுமல்ல நேரத்தையும் இழந்து இருக்கின்றீர்கள். எனக்கு எப்போது எஃப். எம் ரேடியோ கேட்டுப் பழக்கமே இல்லை. 

டிவியில் விவாதம் ஆரம்பித்த காலத்தில் பார்ப்பதுண்டு. இப்போது செய்தி சானல்கள் பக்கம் திரும்புவதே இல்லை. தினசரி படிப்பதுண்டு, வாரப்பத்திரிக்கைகள் படிப்பதுண்டு. அத்துடன் நிறுத்தி விடுகிறேன். அவ்வப்போது டிஸ்கவரி சானல், ஆங்கில மொழி படங்கள் (அதுவும் சப்டைட்டில் இருந்தால் தான்) பார்க்கிறேன். குழந்தைகளும் அப்படியே. வீட்டில் நாடகம் பார்க்க மாட்டார்கள். புத்தகம் படிப்பதுண்டு, பசங்களுக்கு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துப் படிக்கவும், பம்பரம் விடுவது, தாயம் விளையாடுவது, தோட்ட பராமரிப்பு என்று பழக்கப்படுத்தி உள்ளேன். 

பெண்களுக்கு முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். சுத்த பைத்தியக்காரத்தனமான நிகழ்ச்சி என்று ஒன்று இருந்தால் அது சமையல் நிகழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை. செஃப் தாமோதரன் சமையல் குறிப்புகளைப் பின்பற்றினால் விரைவில் எமலோகத்திலிருந்து உங்களுக்கு ஓலைதான் வரும். செஃப் வெங்கடேஷ் பட்டின் குறிப்புகளைப் பின்பற்றி சமைத்தீர்கல் என்றால் மருத்துவமனைகள் உங்களை வா வா என வரவேற்க ஆரம்பிக்கும். வீட்டில் நம் காலத்தில் எப்படி சமைத்து உண்டார்களோ அதைப் போல சமைத்துக் கொடுங்கள்.

தொலைக்காட்சி பெட்டி எனும் கொலைக்காட்சிப் பெட்டியை அவ்வப்போது திறப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அது உங்கள் குடும்பத்தின் நலத்தையும் குடும்பத்தையும் கொன்றொழித்து விடும் என்பதை மறவாதீர்கள்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.