அலைகள் - இந்த வார்த்தையைப் படித்தவுடனே உங்களுக்குள் தோன்றி இருக்கும்.
உயரமான, தாழ்வான, மிகத்தாழ்வான, மிக மிக உயரமான அலைகள் கடற்கரை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு அலைகளும் கரையை அடைந்து ஆக்ரோசமெல்லாம் இல்லாமல், வெறுமென நீராக சலம்பி பின் மீண்டும் கடலுக்குள்ளே சென்று மறைந்து விடுகின்றன. அடுத்த அலை வருகிறது. அதன் பின்னாலே அலைகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே கரையைத் தேடி வந்து கொண்டே இருக்கின்றன. கரை வந்தவுடன் சிறுத்துப் போய் ’உஷ்’ என்றாகிறது. பின்னர் கடலுக்குள் சென்று வந்த இடம் தெரியாமல் மறைந்து போகிறது.
காற்று விடாமல் அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. அலைகள் கரையை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. மனித வாழ்க்கையும் அலைகளும் ஒன்று தான்.
புகழ், பதவி, அதிகாரம் இருந்தும் தன் உடலை தான் சொன்னபடி கேட்க வைக்க இயலாமல் ஒருவர் கரைந்தே போனார். உலக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவரின் மகளின் வாழ்க்கை இன்று கோர்ட்டில் வந்து நிற்கிறது. அவர் நடத்தி வரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்ற செய்திகள் வருகின்றன. இதெல்லாம் எதைச் சுட்டிக் காட்டுகிறது?
ஓடம் தண்ணீரில் தான் செல்ல முடியும். அந்த தண்ணீர் தான் ஓடத்தை வழி நடத்தும், அந்த ஓடம் தண்ணீருக்குள் மூழ்கி விட வேண்டுமா? இல்லை கரையைத் தொட்டு விட வேண்டுமா என்பதை முடிவு செய்வது காற்றும், தண்ணீரும் தான். அந்த ஓடம் எந்தப் பக்கமாக பயணிக்க வேண்டும் என்பதை மட்டுமே நாம் முடிவு செய்ய இயலும். ஆனால் பயணம் செய்தே ஆக வேண்டும். தண்ணீருக்குள் இருக்க முடியாது. ஓடம் சென்று சேர வேண்டிய இடம் கரை.
அதிகாரமும், பணமும், புகழும் எந்த மனிதனுக்கு எதையும் தரப்போவதில்லை. வெற்று மாயை! பணமும் வந்த இடம் தெரியாமல் சென்று விடும். புகழோ - வெற்றுக்கூச்சலும், வெறும் ஈகோவும் தான் தரும். அதிகாரம் அயோக்கியத்தனம் செய்ய வைக்கும். ஒன்றுமே இல்லாத வாழ்க்கையில் எல்லாமும் இருப்பதாக நினத்துக் கொண்டிருப்பது ஏமாளித்தனமானது.
பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனியானவன் தான். அவனவன் வலி அவனுக்கு மட்டுமே. அதை பிறர் அனுபவிக்க முடியாது. எத்தனை உற்றார் உறவினர்கள் இருந்தாலும் தான் என்ன? வலியை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்களா? அருமை பெருமையாக வளர்த்த அம்மா அப்பா மறைந்தவுடன் அவர்களுடனேவா பிள்ளைகள் இறந்து போகின்றார்கள்? இல்லையே? உறவுகள் நிதர்சனம் என்று நினைப்பது முட்டாள்தனம். உறவுகளின் பயன் பாதுகாப்புக்கு மட்டுமே.
2016 ஆம் ஆண்டின் கடைசி நாள் இன்றைக்கு. கடந்து வந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்ற திட்டமில்லாமல் வாழ்ந்த வாழ்க்கைப் பாதைக்கு ஒரு வழி கிடைத்தது. இந்தப் பாதையில் சென்றால் வாழ்க்கைப் பயணத்தை சிரமமில்லாமல் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்த வருடம் இது. கணிணி, ஏற்றுமதி இறக்குமதி, டிரேடிங்க், விளம்பரத்துறை என்று அலைந்து கொண்டிருந்தவனுக்கு இதுதான் உன் பாதை என 2016 காட்டிக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை மிக அழகாகப் புரிய வைத்தது 2016. இந்த வயதில் இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்த வரமாகவே நினைக்கிறேன்.
உறவுகள், நட்புகள், வியாபாரங்கள் என்றால் என்ன அதன் முழு அர்த்தம் என்ன? மனிதர்களை படிப்பது எப்படி? என்றெல்லாம் அறிந்து கொள்ள முடிந்த வருடம் 2016. எந்த ஒரு உறவும், நட்பும், வியாபாரமும் பலனின்றி இல்லை என்பதினை சம்மட்டியால் அடித்துச் சொல்லியது 2016.
ஆன்மீக வாழ்க்கையில் இதுவரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத சூட்சுமான பாதையை அனுபவத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. தொட்டும் தொடாமலும், விட்டும் விடாமலும், இருந்தும் இல்லாமலும் இருப்பதைப் பற்றி பாடமே கிடைத்தது இந்த 2016ல். நோக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்பதை அட்சர சுத்தமாக அதன் சூத்திரத்தை புரிந்து கொள்ள வைத்திருக்கிறது 2016.
நானும் ஒரு அலைதான். கரையைத் தேடி விரைந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் ஒரு அலைதான். நீங்கள் எனக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ கரையைத் தேடி விரைந்து கொண்டிருக்கின்றீர்கள். நாம் அனைவரும் சென்று சேரும் இடம் கரைதான். கரையில் உங்களின் உயரமும், எனது உயரமும் கலைந்து நாம் நீராகி விடுவோம். கடலுக்குள் கலந்து விடுவோம்.
விடைபெறட்டும் 2016. அது வந்த வேலையை நிறைவாகச் செய்து விட்டு செல்லப்போகின்றது. அதற்கு நாம் விடை கொடுப்போம்.
அடுத்து வரப்போகும் 2017ல் நாம் அன்பாயிருப்போம், அமைதியாக இருப்போம். ஆனந்தமாக இருப்போம்.
2017ஆம் ஆண்டில் எதார்தத்தை உணர்ந்து கொண்ட வாழ்க்கையினை வாழலாம் வாருங்கள்! கோபம் வேண்டாம், பொறாமை வேண்டாம், சூது வேண்டாம். எதனாலும் நம் வாழ்க்கை சிறப்படைய போவதில்லை. அன்பாயிருத்தலாலும், அமைதியாக இருத்தலாலும் நாம் அடைவது ஆனந்தமே!