எனக்கு நாயென்றால் அப்படி ஒன்றும் பிடிக்காத விஷயமல்ல. அதுவும் ஒரு உயிர் தானே என்றளவில் கொஞ்சம் பிரியம் இருக்கின்றது. எனக்கொரு தோழி நெட்டில் அறிமுகமானவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார். நான் சிரமப்பட்ட காலத்தில் உடனுக்குடன் எனக்கு பணம் அனுப்பி வைத்தார். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், கடைகள் என நல்ல வசதியான பெண்மணி. அங்கிருந்து வருடம் ஒரு தடவையாவது பரிசுகள் வரும். நான் எதுவும் அனுப்புவதில்லை. போன் கூட அவர் தான் செய்வார். இணையத்தில் பேசிக் கொள்வதுண்டு. அவர் ஊரில் நாய்க்கறி பேஃமசாம். அவரிடம் கேட்டேன். அருமையாக இருக்கும் என்றார். அன்றிலிருந்து அவரிடம் பேசுகின்ற போதெல்லாம் செத்துப் போன நாய்கள் அவரின் பின்னே அவரைத் துரத்துவது போல நினைவலைகள் வந்து விடும். விவசாயமெல்லாம் அழிந்து போன பிறகு நாய்க்கறியைத் தின்னாமல் மனுசனையா தின்ன முடியும். எனக்கென்னவோ இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளில் நாய்க்கறி பிரபலமாகி விடும் போல. நம்ம நாடு போகிற போக்கினைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.
பிலிப்பைன்ஸுக்கு வா என்று பத்து ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தோடு செல்ல வேண்டும். இப்ப ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.
நேற்றைக்கு முதல் நாள். நானும் பையனும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண், அங்கிள் இங்கே மருத்துவமனை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். சரவணம்பட்டி காளப்பட்டி சாலையில் ஒரு மருத்துவமனையைப் பார்த்த நினைவில் இந்தப் பக்கம் என்று கைகாட்டி விட்டேன். கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினால் அந்தப் பெண்கள் தெரிந்தார்கள். அதிலொரு பெண் நடக்கவே முடியாமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். சாலையைக் கடந்து வந்தார்கள். மருத்துவமனையில் டாக்டர் இல்லை. சோர்ந்து போய் விட்டார்கள். அந்தப் பெண்ணைத் தொட்டுப் பார்க்க உடல் கொதித்துக் கொண்டிருந்தது. சரியான காய்ச்சல். வெயில் வேறு அனத்திக் கொண்டிருந்தது. பையனை இன்னொரு பெண்ணுடன் இறக்கி விட்டு விட்டு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இரண்டொரு மருத்துவமனைக்குச் சென்றால் ஒருவரும் இல்லை. ஒரு வழியாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைக் கண்டுபிடித்து அங்கு கொண்டு போய் விட்டேன். மருத்துவர் இருந்தார். மீண்டும் என் பையனும் இன்னொரு பெண்ணும் இருக்கும் இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருப்பினேன். அப்போது அந்தப் பெண், ”ரித்திக், வெயிலில் நிற்காதே, நிழலில் நில்” என்று இரண்டு மூன்று தடவை சொன்னது. எனக்குச் சரியான எரிச்சல். நான் வெயிலில் இவள் தோழியை அழைத்துக் கொண்டு நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பெண்ணுக்கு யார் மீது அக்கரை என்று பார் என்று கடுப்பானது. காலம் மாறுகிறது என்பது பளிச் சென்று புரிந்தது. அப்பெண்ணை மருத்துவமனையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன். நன்றி சார் என்றது அப்பெண். நல்லா இருங்கம்மா என்றுச் சொல்லி விட்டு பையனை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன். நீ பாட்டுக்கு இப்படி உதவி செய்யக் கிளம்பி விடாதே ரித்திக் என்று அவனிடம் சொல்லி வைத்தேன். எதுக்கும் இருக்கட்டும். சரி அடுத்த கதைக்கு வந்து விடுகிறேன்.
சிறுவயதில் செவலை நாயொன்றும், கருப்பு நாயொன்றும் வீட்டில் இருந்தது. செவலை நாய் நல்ல நாய். வீட்டை விட்டு எங்கும் செல்லாது. ஆனால் கருப்பு நாயோ எமகாதக நாய். ஊர் சுற்றி. கையில் இருந்தாலும் கடித்து தின்று விடும். அதை நான் அடித்து துரத்தி விடுவேன். அப்போதெல்லாம் நாய்க்குப் பெயர் வைப்பதெல்லாம் இல்லை. நாயை நாயென்றுதான் அழைப்போம். ஆனால் இப்போதோ வேறு நிலை. நாய்க்கு வைக்கும் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அது நாயா இல்லை ஆளா என்றொரு குழப்பம் வந்து விடும் எனக்கு.
இன்றைக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. ரிப்ளை செய்யும் போது அது ஆணா பெண்ணா என்று குழப்பம் ஏற்பட எதுக்கு வம்பு பேசாமல் டியர் என்று போட்டு விடுவோம் என்று நினைத்து டியர் <அந்த பெயர் போட்டு> மெயில் அனுப்பி விட்டேன். அது ஒரு பெண்ணாக இருந்து நான் ஆணல்ல என்று ஆரம்பித்து அதுவே தொடர்கதையாகி, ஏற்கனவே திருமணமானவன். அதுவும் நாற்பதுகளில் இருப்பதால் நாய் குணம் வேறு வந்து விடும் என்பார்கள். எக்குத்தப்பாக ஆகிவிட்டால் நன்றாகவா இருக்கும்? சரி விஷயத்துக்கு வந்து விடலாம்.
அந்தச் செவலை நாய் ஒரு நாள் வாய் கிழிந்து வந்தது. இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கியது. எதித்த வீட்டுப் பெண்மணி வெங்காய வெடியை கருவாட்டுக்குள் வைத்துச் சுருட்டிப் போட்டு விட்டார். அதை எடுத்துக் கடித்திருக்கிறது. வெங்காய வெடி வெடித்து இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கி விட்டது. இடது பக்க பற்கள் எல்லாம் வெளியில் தெரிந்தது. எனக்குப் பயமாகவும், பாவமாகவும் இருந்தது. சாப்பாடு வைத்தேன். சாப்பிட்டது ஆனால் சோறு இடது பக்கமாக வெளியில் வந்து விட்டது. கொஞ்ச நாளில் அது வாசலில் படுத்திருந்தது. பட்டினியாகவே கிடந்து இறந்து போனது. வீட்டின் பின்புறம் குழி வெட்டி புதைத்து விட்டோம்.
கருப்பு நாயை பஞ்சாயத்திலிருந்து நாய் பிடிக்க வந்தவன் பிடித்துக் கொண்டு போய் விட்டான் போலும். நீண்ட நாட்கள் அதைக் காணவில்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் சும்மாவா? வீட்டுக்கே ஆகாது என்பார்கள். நாயைச் சொல்லவா வேண்டும்? அதுகளுக்கு அப்போது பீட்ச்சா அடச்சே பீட்டா, ப்ளூகிராஸ் மாதிரியெல்லாம் ஆட்கள் இல்லை. இப்போதல்லவா இருக்கின்றார்கள். அவனவன் ஆட்களை ஆடுகள் கழுத்தறுப்பது போல அறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதைக் கேட்க ஆட்கள் இல்லை. நாயை அடித்தாலோ அல்லது மாட்டை அடித்தாலோ கேஸ் போடுகின்றார்கள். சிறு வயதில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது சண்டித்தனம் செய்யும் மாட்டினை சாட்டையால் விளாசி இருக்கிறேன். அப்போது இந்த பீட்டாக்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? மாட்டுக்குப் பதிலாக இவர்கள் நுகத்தடியில் கழுத்தை கொண்டு வந்து நீட்டி வண்டியை இழுப்பார்களா? என்று தெரியவில்லை. என்ன நியாயமோ என்ன சட்டமோ? ஒன்னும் சரியில்லை.
கிரடிட் கார்டுகள், பண அட்டைகள் வந்தாலும் வந்தன. மனிதன் இப்போது பைத்தியம் பிடிக்காத குறையாகத்தான் திரிகின்றான். ஏசியில் ஐந்து நிமிடம் நின்று ஏடிஎம்மில் பணம் எடுப்பது அப்போதெல்லாம் கவுரவம் நிரம்பியது. ஆனால் இப்போதோ ஏடிஎம் என்றாலே அலறல் தான் கேட்கிறது. டெக்னாலஜி வந்தாலும் வந்தது பிடித்தது சனியன். கருப்புப் பணத்தை இனி கண்ணால் கூட பார்க்க முடியாது போலும். ஆனால் அரசியல்வாதிகள் காட்டிலோ மழையோ மழைதான். ஒரு கார் வாங்கலாம் என்றால் நாய்க்கு நாக்குத் தள்ளிய மாதிரி நமக்கு நாக்குத் தொங்கி விடுகிறது. கவுன்சிலர் ஆனவுடனே ஸ்கார்ப்பியோவில் வருகின்றார்கள். என்ன தான் தில்லுமுல்லு செய்வார்களோ தெரியவில்லை. அடுத்தவன் பணத்தில் வாழ்வதுக்கும் ஒரு மச்சம் வேண்டும். மச்சம் மட்டும் இருந்து என்ன ஆகப் போகிறது? புத்திசாலித்தனமும் வேண்டும். மோடி சரியான அரசியல்வாதியாக இருக்கிறார். கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்றார். நாமெல்லாம் நினைத்தோம். அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்டு வந்து விடுவார் என. ஆனால் பாருங்கள் என்ன நடந்தது என்று. இது தான் பிரதமர் மோடி. வெகு புத்திசாலியானவர். திறமையானவர். யாரை எங்கே எப்படி என்ன என்பதெல்லாம் அவரிடம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இது வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் ஆகச் சிறந்தவர் மோடி அவர்கள் தான் என்கிறேன். இப்படி ஒரு ட்விஸ்டை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்களா? நிச்சயமாக இப்படியெல்லாம் நடக்குமா என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். அதுதான் பிளான். அதுதான் திட்டம்.
சரி திரும்பவும் எங்கேயோ போய் விட்டேன். இந்த மூளை இருக்கிறதே அது படுத்தும் பாடு இருக்கிறதே? பெரிய ரோதனை இதோடு. உங்களுக்கும் போர் அடித்திருக்கும் அல்லவா?
இரண்டு நாட்களுக்கு முன்பு ரித்திக் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் போது. அவன் கூடவே குட்டியாக, செவலை நாய்க்குட்டி ஒன்று அவனுடன் வந்து விட்டது. ரித்திக்குக்கு நாய், பூனை என்றால் பிரியம். ஆனால் மனையாளுக்கோ ஆகவே ஆகாது. அப்பா இந்த நாயை வளர்க்கலாமா? என்று கேட்க இரண்டு மாதம் வீட்டில் சும்மாதானே இருக்கின்றார்கள், பொழுது போக்காக இருக்கட்டும் என்றுச் சொல்லி சரி என்றுச் சொல்லி விட்டேன்.
போன மாதம் கருகருவென நாய்க்குட்டி ஒன்றினை வளர்க்கலாம் என்று நினைத்து கவுண்டரிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரும் திரிந்தலைந்து 22 நகங்களுடன் கருப்பு நாய்க்குட்டி ஒன்றினைப் பிடித்து வைத்திருந்தார். எனது நண்பர் நாயை ஓசியில் வாங்கக் கூடாது. யாருக்கும் கொடுக்கவும் கூடாது என்றுச் சொல்லி விட கவுண்டரிடம் வேண்டாம் என்றுச் சொல்லி விட்டேன். அத்தோடு நாய் வளர்க்கும் ஆசை போய் விட்டது. ஆனால் அதுவே வீடு தேடி வருகிறது.
ரூடோஸ் தற்போது
ரூடோஸ் எதிர்காலத்தில்
லேப்ராடர் வகை நாய்க்குட்டி அது. எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை? யார் வளர்த்ததோ தெரியவில்லை? அதற்குச் சாப்பாடு போட்டு, குளிப்பாட்டி, கழுத்திலொரு பட்டியைக் கட்டி, அத்துடன் கயிற்றைக் கட்டி விட்டான் பையன். காலையில் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டி, நாய்க்கடைக்குச் சென்று கழுத்துப் பட்டி, கயிறு வாங்கி வந்து மாட்டி காலையிலும் மாலையில் ஜாக்கிங்க் சென்று கொண்டிருக்கின்றார்கள் ரித்தியும், அம்முவும். இப்போது அது நன்றாக இருக்கிறது. இன்றைக்கு காலையில் பேப்பரைக் கடித்துக் குதறி விட்டது. ஒரு அதட்டுப் போட்டேன். அவ்வளவுதான் அருகிலேயே வரமாட்டேன் என்றது. ஒரு வழியாக சமாதானம் செய்து அதன் பயத்தைப் போக்க வேண்டியதாகி விட்டது.
இதற்கொரு பெயர் வையுங்கள் சாமி என்று கேட்டேன்.
”ரூடோஸ்” என்றார். எங்கிருந்தோ வந்தது ரூடோஸ். இப்போது என்னுடன் இருக்கிறது. காலையில் எழுந்ததும் அதனுடன் கொஞ்ச நேரம் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாலையில் அதனுடன் விளையாடுவதும் சந்தோஷம் தருகிறது. ஒரு குழந்தையைப் போல அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
பக்கத்து வீட்டில் சைபீரியன் ஹஸ்கி என்ற பெய்லி (பெயர்) வளர்கிறது. மாலையில் வாக்கிங் செல்லும் போது பெய்லியைப் பார்த்து கர்ண கடூரமாகக் குலைக்கிறது ரூடோஸ். சரியான காமெடி. பயமில்லாமல் குலைத்து விட்டு ஓடோடி வந்து அருகில் அமர்ந்து கொள்கிறது.
பசங்க இருவரும் டிவி பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார்கள்.
குறிப்பு: எல்லா பத்திகளிலும் நாய் வந்திருப்பதைக் கவனிக்கவும். உன் வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறாய் என்பதற்காக ஊர் கதையெல்லாமா அளப்பது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்குத்தான் இந்தக் குறிப்பு.
பக்கத்து வீட்டில் சைபீரியன் ஹஸ்கி என்ற பெய்லி (பெயர்) வளர்கிறது. மாலையில் வாக்கிங் செல்லும் போது பெய்லியைப் பார்த்து கர்ண கடூரமாகக் குலைக்கிறது ரூடோஸ். சரியான காமெடி. பயமில்லாமல் குலைத்து விட்டு ஓடோடி வந்து அருகில் அமர்ந்து கொள்கிறது.
பசங்க இருவரும் டிவி பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார்கள்.
குறிப்பு: எல்லா பத்திகளிலும் நாய் வந்திருப்பதைக் கவனிக்கவும். உன் வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறாய் என்பதற்காக ஊர் கதையெல்லாமா அளப்பது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்குத்தான் இந்தக் குறிப்பு.