குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, June 12, 2008

ஆசியன் நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள்

எண்ணெய் வள நாடுகளும் அதன் வியாபார தொடர்பு நிறுவனங்களும் இணைந்து வளரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு வேட்டு வைக்கவும், வளர விடாமலும் செய்ய சிண்டிகேட் அமைத்து குருடு ஆயிலின் விலையினை அதிகப்படுத்தி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.

கேஸ்பிராமின் தலைவர் ஒருவர் தி ஹிண்டுவில் குருடு ஆயில் 250 அமெரிக்க டாலரை எட்டும் என்று ஜோசியம் சொல்லி இருக்கிறார். இந்த நிலை வந்தால் உலகில் என்ன நடக்கும் ? மக்கள் என்ன ஆவார்கள் ? ஆளும் அரசுகள் என்ன செய்யும்... ? விளைவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே முடியாது.

இதற்கு என்னதான் தீர்வு ?

எண்ணை வள நாடுகளில் உணவுப் பொருட்கள் விளைவிக்க இயலாது. ஆதலால் அந்த நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகள் உணவுப் பொருட்களுக்கான விலையினை 100 மடங்கு அதிகம் செய்ய வேண்டும். அரசாங்கமே உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்று மிக அதிக விலைக்கு விற்றால் தான் எண்ணை வள நாடுகளின் ஆட்டம் குறையும்.

அதுவுமின்றி, ஆசிய நாடுகளில் இருந்துதான் மிக அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இதற்க்கும் அவ்வாறே செய்தால் ஆடிப் போய் விடுவார்கள்.

கடைசியாக ஒரு வேண்டுகோள் : ஆசிய நாடுகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட கரன்சி முறையினை ஏற்படுத்தினால் இப்படிப்பட்ட விளைவுகளை முற்றிலுமாக ஒழித்து விடலாம். ஐரோப்பாவுக்கு என்று ஈரோ இருப்பது போல ஆசிய நாடுகளுக்கு என்று தனிப்பட்ட கரன்சி உருவாக்கினால் தான் ஆசிய நாடுகள் வளர முடியும்.

ஆசிய நாடுகளின் தலைவர்களும், நிதியமைச்சர்களும் ஆவன செய்வார்களா ?

கணவன் மனைவி உறவு

கணவனின் மனத்தை கொள்ளை அடிப்பது எப்படி?
















மனைவியின் மனத்தைக் கொள்ளை அடிப்பது எப்படி ?
















புதுச்சேரியிலிருக்கும் எனது உறவுக்காரப் பெண் அனுப்பிய போட்டோவைப் பார்த்ததும் எனக்கு தோன்றியது. வாழ்க்கை என்பது கொடுத்து பெறுவது. அது அன்பானாலும் சரி... வேறு எதுவானாலும் சரி.


ஆனால் இவ்வுலகம் இப்போது நடைபோடும் பாதை ஃபேண்டஸி வே.. எதார்த்தம் சிறிதும் வாழ்க்கையில் எதிர்படாமல் வாழ நினைக்கிறார்கள். எதார்த்தம் கண் முன்னே நிற்கும் போது ஏற்றுக்கொள்ள இயலாமல் செய்வதறியாமல் விழித்து நிற்கும் பைத்தியக்காரனை போல நிற்கிறார்கள் மனிதர்கள்.

Wednesday, June 11, 2008

பாடப் புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம்

மத்திய அரசு சிலபஸ் சி.பி.எஸ்.இ ஆறாம் வகுப்பில் நியூ லேர்னிங் டு கம்யூனிகேட் என்ற பாடப்புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இருப்பதாக செய்தி படித்தேன். அதனால் உண்டான சர்ச்சைக்கு கேள்வி ஒன்றே ஒன்று தான். ஏன் ரஜினி பற்றி படிக்கக் கூடாது. ரஜினி ஒரு சாதனையாளர் தான். சினிமாவில் நடித்தவர்கள் தான் தமிழ் நாட்டினை ஆண்டிருக்கிறார்கள். ஆண்டும் வருகிறார்கள். அமெரிக்காவிலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இதிலென்ன தவறு இருக்கிறது. ரஜினி ஒரு சரித்திர நாயகன் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது ?

வேலூர் மாவட்ட டி.ஆர்.ஓ சுகந்தி

வேலூர் மாவட்டத்தின் எட்டு தாலுக்காக்களில் டி.ஆர்.ஓ சுகந்திக்கு எதிராக அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஒட்டு மொத்தமாக சிக் லீவ் என்று போராட்டம் நடத்தினார்கள். காரணம் என்னவென்றால் டி.ஆர்.ஓ, சக ஊழியர்களை அசிங்கமாகப் பேசுவது, மன உளைச்சல் ஏற்படுத்தியதால் தான் இந்தப் போராட்டம் என்று அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிலுப்பன் சொன்னதாக குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இவரே , டி.ஆர்.ஓ மிகவும் நல்லவர், அரசின் சலுகைகளை உரியவர்களிடம் சேர்க்கும் நேர்மையாளர், சிபாரிசுகளுக்கு செவிசாய்க்காத துணிச்சல் காரர் என்று நற்சாட்சி பத்திரமும் வாசிக்கிறார்.

வேலூரில் உள்ள விவசாய சங்கங்கள் டி.ஆர்.ஓவுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் மெமோ கொடுத்து விட்டார் என்ற வதந்திக்காக போராட முடிவெடுத்ததாம். இப்படி மக்களுக்கு நல்லதை செய்ய நினைக்கும் டி.ஆர்.ஓவுக்கு எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் ( தகவல் உதவி )

Tuesday, June 10, 2008

அன்பு மகனுக்கு கடிதம் 5 10.06.2008

ரித்தி உனக்கு ஸ்கூல் ஆரம்பித்துவிட்டது. உன் வாழ்க்கையின் முக்கியமான பகுதியில் இருக்கிறாய். கற்றல் தான் வாழ்வின் பெரும்பகுதியினை ஆக்ரமித்துள்ளது. கற்றல்... ஆராய்தல்... தெளிதல்.. அதற்கேற்ப வாழ்க்கையினை அமைத்தல். நன்கு படிப்பாய் என்று தெரியும். கீழே சில விஷயங்களை சொல்லி இருக்கிறேன். புரிந்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.

பள்ளி பஸ் கட்டணம் பாதி அளவுக்கு உயர்த்தி இருக்கின்றார்கள். கேட்டால் மேனேஜ்மெண்ட் முடிவு. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள். கல்விக் கூடங்களை நடத்துவது டிரஸ்ட். பொதுச் சேவை நிறுவனம் என்பார்கள். லாபம் இன்றி நடத்துவதாக டீடில் எழுதி இருப்பார்கள். ஆனால் கட்டிட நிதிக்கு என்று தனி வசூல், டியூசன் பீஸ் என்று தனி வசூல். புத்தகத்துக்கு என்று தனி வசூல். பதிப்பாளர்கள் 20 லிருந்து 40 பெர்சண்ட் வரை கமிஷன் தருகிறார்கள் பள்ளிகளுக்கு. பொதுச் சேவை நிறுவனங்களுக்கு எதுக்குப் லாபம் என்று தெரியவில்லை. அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு அடிமாட்டுச் சம்பளம் தருவார்கள். டிரஸ்ட்டில் வரும் வருமானத்துக்கு 80ஜி என்ற சட்ட விதிப்படி வருமான வரி விலக்கும் உண்டு. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேட்பார் இல்லை. அரசியல்வாதிகள் இது உங்களுக்கான அரசு என்பார்கள். ஆனால் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. இப்படி எல்லாம் நாடகம் போடுபவர்களை உனக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடிதமெழுதுகிறேன்.

ரித்தி உனக்குப் புரியுமோ இல்லையோ தெரியாது. ஆனால் அனைவரும் தவறு செய்யவேண்டுமென நோக்கோடுதான் செயல்படுகிறார்கள். யாரும் உண்மையாக இல்லை. பணம் ஒன்று தான் குறிக்கோள். அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நமது அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதற்கு உனக்கு விளக்கம் சொல்கிறேன். கேள்..

என் வண்டிக்கு பெட்ரோல் போடுகிறேன் அல்லவா. அதுக்கு வரி உண்டு. இந்த வரியும் மற்ற பொருட்களுக்கு போடப்படும் வரியும் வித்தியாசமானவை. எப்படி என்று கேட்கின்றாயா ? சொல்கிறேன் கேள்.

செருப்பு வாங்கினோம் என்றால், செருப்பின் விலையில் 10% வரி என்று போடுவார்கள். செருப்பு ரூபாய் 100 என்று வைத்துக் கொள்வோம்.வரி 10 ரூபாய். மொத்தம் 110 ரூபாய் ஆகும்.

ஆனால் பெட்ரோலுக்கு அப்படி இல்லை. ஒரு ரூபாயில் 52 பைசா மத்திய அரசுக்கும் 12 பைசா மாநில அரசுக்கும் வரியாக செலுத்த வேண்டும். ஆக 64 பைசா வரி போக பெட்ரோலின் உண்மையான விலை 26 பைசாதான். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் வரி மட்டும் 64 ரூபாய். பெட்ரோலின் உண்மையான விலை 26 ரூபாய்தான். புரிகிறதா உனக்கு?மக்களிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் வரி வசூலித்து அதுக்கு நிதி, இதுக்கு நிதி, அந்த வளர்ச்சி திட்டம், இந்த வளர்ச்சித் திட்டம், ரோடு போடுகிறோம் அது இதுவென்று சொல்லிச் சொல்லி ஏமாற்றுகிறார்கள். எல்லாவற்றிலும் இவர்களுக்கு பணம் வரும்.

குருடு ஆயிலை சுத்திகரித்த பின்பு பெட்ரோலுக்கான ஒரு லிட்டர் விலை இவ்வளவு அதற்கு இவ்வளவு வரி என்று போட்டால் என்ன ? போட மாட்டார்கள். ஏனென்றால் இந்த எரிபொருள் அத்தியாவசிய தேவை. மக்களின் அன்றாடத் தேவையில் கை வைத்தால் வேறு வழியின்றி மக்கள் வாங்கித்தான் ஆவார்கள் என்ற எண்ணம் தான்க் ஆரம். அதிக வரி விதித்தால்தான் அரசியல்வாதிகள்க சொகுசு வாழ்க்கை நடத்த முடியும்.

அடுத்த ஒரு அக்கிரமம் பற்றிச் சொல்கிறேன் கேள்.

தா.பாண்டியன் என்ற கட்சித்தலைவரின் பேட்டியினைக் காண நேர்ந்தது. சில அதிர்ச்சி தரும் விஷயங்களை சொன்னார்.

இந்தியாவுக்கு தேவையான குரூடு ஆயிலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம் அல்லவா. ஆனால் இந்தியாவில் இருந்து குருடூ ஆயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார். இந்தியாவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அரசாங்கம் எண்ணை துரப்பண பணிகளை கொடுத்து இருக்கிறதாம். அவர்கள் உலக பெரும் பணக்கார எண்ணெய் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்களாம். வெளி நாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்தால் வரக்கூடிய லாபத்தை பணமாக மட்டும்தான் எடுத்துச் செல்லலாம் என்று முன்பு ஒரு சட்டம் இருந்ததாம். அதை வெளியில் சொல்லாமல் மாற்றி விட்டதாகவும், இப்போது வரக்கூடிய லாபத்தை பொருளாகவும் எடுத்துச் செல்லலாமென்றும் மாற்றி வைத்திருப்பதாகவும், அதனால் அந்த எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் இருந்து குருடூ ஆயிலை அவர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் சொன்னார். இந்தியாவுக்குத் தேவையான குரூடு ஆயிலை வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்திருக்கும் அவலத்தைப் பார் ரித்தி.

இதை விட இன்னொரு கூத்தினை சொல்கிறேன் கேள். சமீபத்தில் ஒரு டாலருக்கு சமமான இந்திய ரூபாய் 38 ஆக இருந்தது இப்போது 43 ரூபாய் ஆகப்போகிறது. காரணம் என்னவென்றால் ரிசர்வ் பேங்க எத்தனையோ கோடி டாலர்களை மிகச் சமீபத்தில் வாங்கியதாகவும் அதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதாகவும் பாண்டியன் அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் தான் ரூபாயின் மதிப்புக் குறைந்து விட்டதாகவும் சொன்னார். நமது இந்திய நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்புக் குறைந்தால் தான் லாபம் வருமாம். என்ன ஒரு நாட்டுப் பற்று... பார்....

இப்படி அரசியல்வாதிகளும், பிசினஸ் செய்பவர்களும் சொல்லி வைத்து இந்தியாவைக் கூட்டுக் கொள்ளை இடுகின்றார்கள். ஏழை மக்களை நினைத்துப் பார் ரித்தி. ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் அவர்களை நீ முன்னேற்ற வேண்டும். நீ பெரியவனாக ஆகி, நாட்டை ஆளும் பொறுப்பு கிடைத்தால் அரசியல் சட்டத்தையும் , தொழில் சட்டத்தையும் அடியோடு மாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்த சிலவற்றை வரும் கடிதங்களில் எழுதுகிறேன். அது உனக்கும் பயன்படுமென்றால் உபயோகப்படுத்திக் கொள்.

இப்படிக்கு
உன் அன்பு அப்பா...

Monday, June 9, 2008

மேகமும் மறைக்க முடியுமா சூரியனை ?

சாரு நிவேதிதா மூலம் அறிமுகமானவர் ராஜநாயஹம். அவரைப் பற்றி லியர் மன்னன் என்ற கட்டுரையினை www.charuonline.com ல் எழுதினார் சாரு. எனது MARK ADMAN என்ற அட்வர்டைசிங் கம்பெனியின் வேலைக்காக ராஜ நாயஹத்தை அனுகலாம் என்று கருதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரின் பேச்சு என்னை ஏதோ ஒரு வகையினில் ஈர்த்தது.

சந்திக்க வேண்டுமென்ற ஆவல் மனதினுள். நேற்று அதற்கான நேரம் கிடைக்க, எனது நண்பருடைய மாமனாரின் காரை எடுத்துக் கொண்டு திருப்பூருக்குப் பயணம் செய்தேன். கையில் ஹெச்பியின் டச் ஸ்கீரின் லேப்டாப். டாட்டா இண்டிகாமின் பிளக் அண்ட் சர்ப் இணைய கனெக்‌ஷன். பென் டிரைவுடன் அவரை சந்தித்தேன். ஆனால் என் செல்போன் நோக்கியா 1100. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

திருப்பூர் சென்று சேரும் வரையில் ஐந்து தடவை போன் செய்து விட்டார். அவரது பையன் கீர்த்தி எதிரில் வந்து வழிகாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ராஜ நாயஹம் காரில் இருந்து முதன் முதலாய் பார்த்தேன். அசல் ஹீரோ தான். வயசு என்னவென்றே கண்டு பிடிக்க முடியவில்லை. அது எனக்கு தேவையுமில்லை. அவரின் டிரஸ்ஸிங்க் சென்ஸ் – என்னை ஒரு நிமிடம் அவரின் மேல் பொறாமை கொள்ளச் செய்து விட்டது.

சரளமான பேச்சு. புதிய விஷயங்களை கண்டால் ஆச்சரியப்படுவது. குடும்ப விஷயம் மற்றும் இன்ன பிற பேசினோம். நான் எதற்கு அவரைப் பார்க்கச் சென்றேனோ அதை மறந்து விட்டேன். பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சாப்பாடு தயார் சாப்பிடலாம் என்றார்கள் ராஜ நாயஹத்தின் துணைவியார்.

அதற்கு முன்பு லேப்டாப்பை ஆன் செய்து அவரையும் என்னையும் சேர்த்து படம் எடுத்துக் கொண்டேன். புகைப்படம் ஒன்றினையும் எடுத்துக் கொண்டேன்.
(நானும் தமிழன் தான் என்பது உங்களுக்கு நினைவுக்கு வருவது எனக்கு தெரிகிறது. என்ன செய்ய ? பழக்க தோஷம் விடுமாட்டேன் என்கிறது). லேப்டாப்பை பார்த்து அவருக்கு ஒரே ஆச்சரியம் தான். சின்னக் குழந்தை போல ஆச்சரியம் அடைந்தார்

தமிழில் பிளாக் இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றார். யாகூவில் மட்டும் பிளாக் இருப்பதாகவும் சொன்னார். நான் தமிழில் பிளாக் தயார் செய்து தருகிறேன் என்றேன். அப்படியா என்று ஆச்சரியப்பட்டார். இதென்ன பிரமாதம் என்று சொல்லியபடி சரியாக இருபது நிமிடத்தில் அவருக்கான பிளாக்கை உருவாக்கினேன். www.rprajanayahem.blogspot.com மனிதருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்படி ஒரு குதூகலம் முகத்தில். ஏதேதோ கேள்விகள் கேட்டார். சொன்னேன். பிறகு சாப்பாடு.

மட்டன் வறுவல் – எங்க வீட்டு அம்மனி செய்வதைப் போல வெகு டேஸ்ட். சாம்பார் ( அவரைக்காய் ), ரசம் என்ன ஒரு சுவை.. வாழை இலையில் சூடான சாதத்துடன் அப்படி ஒரு வித்தியாசமான கலவையுடன் நிறைவான சாப்பாடு. நான் அதிகம் சாப்பிடமாட்டேன் என்பதால் அளவோடு நிறுத்திக் கொண்டேன்.

நானோ பிசினஸ் பேசுபவன். என் நேரமும் அதே சிந்தனையாக இருப்பவன். அவரோ இலக்கியவாதி. அவரின் மூச்சே இலக்கியமாகத்தான் இருக்கும். மிக நன்றாக பாட்டுப் பாடுவார் என்று சொன்னார். தினமலரில் அவரின் பேட்டி பார்த்தேன். கி.ராஜநாரயணன், அசோகமித்திரன், கோணங்கி, சாரு நிவேதிதா என்று பலராலும் பாராட்டப்பட்டவர். வெளி நாட்டு இலக்கியத்தில் அவரின் அறிவுத்திறன் உச்சம். நானோ அவரின் உலகத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதவன். இருப்பினும் எனக்கேற்றவாறு பேசினார் அவர்.

இப்படி எல்லாம் நல்ல மனிதர்கள் உலகில் வாழ்கிறார்கள் என்று அவரைச் சந்தித்த பின்புதான் அறிந்து கொண்டேன்.

அவரைக் காணமல் போக வைக்க பிரமப் பிரயத்தனங்கள் நடக்கின்றன என்று அவரின் பேச்சு மூலம் தெரிந்து கொண்டேன். இலக்கிய உலகில் மிக முக்கியமான் இடத்தில் இருக்கும் அவர் சரியான ஆதரவு இன்றி வாடுபவர். இன்றைய உலகில் இணையம் இன்றி வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. அதன் பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் இலக்கியவாதி அவர்.

பூப்போல பாதுகாக்கணும் என்று நினைத்திருக்கிறேன். அவரின் எழுத்துக்களை உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களிடம் சென்று சேர்க்க வேண்டுமென்பது என் ஆவல். முயற்சிகள் ஆரம்பித்து விட்டன. விரைவில் புதுப் பொலிவுடன் RPராஜநாயஹத்தின் எழுத்துக்கள் இணைய உலகில் பைனரி எண்களாய் டிஜிட்டல் வடிவத்தில் மிதந்து கொண்டிருக்கும்.

தமிழ் இலக்கிய உலகில் அவருக்கான தடம் மிக அழுத்தமாகப் பதிக்கப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

Thursday, June 5, 2008

ஏமாளி மக்களா நாம் ?

பணவீக்கம் என்பது என்ன ?

கடந்த வருடம் இதே தேதியில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருள் இந்த வருடம் 110 ரூபாய் விற்றால், 10% பண வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். வெளி நாட்டு இணையதள செய்தி ஒன்று இந்தியாவின் பணவீக்க விகிதம் 10 சதவீதத்தை தொட்டு விட்டதாக சொல்கிறது. ஆனால அரசு 7.8% என்று சொல்கிறது. எது உண்மை ? செய்தி சொல்லுவதா ? இல்லை அரசு சொல்லுவதா ? தெரியவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலை இப்போது அதிகப்பட்சமாக உயர்ந்து இருக்கிறது. இனிமேலும் பணவீக்க விகிதம் உயரத்தான் போகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. காங்கிரஸ் அரசு ஓட்டு பெறுவதற்காக விலையேற்றத்தை தள்ளி வைத்து விட்டு, கர்நாடகத்தில் தோற்றபின் அதிரடியாக விலையேற்றம் செய்கிறது. யாருக்கு இப்போ நஷ்டம்? ஒரு சாதாரண ஓரளவு படித்த குடும்பப் பெண் நிதி நிலைமைக்கு ஏற்ப செலவை சரி செய்வாள். அது கூட தெரியாமல் சரியான நேரத்தில் விலையேற்றாம் செய்ய மறுத்து விட்டது காங்கிரஸ் அரசு. பலன்... கடுமையான விலையேற்றம். அடுத்த ஆட்சி பிஜேபி தான் என்று காங்கிரஸ்காரர்கள் கட்டியம் செய்து அதன் படி நடக்கின்றார்கள்.. வரட்டும் .. பிஜேபி.... அவர்களாவது ஏதாவது செய்கிறார்களா என்று பார்க்கலாம்.

அரசின் அடுத்த கேடு கெட்டதனம் ஒன்று இருக்கிறது. அதைச் சொன்னால் அதிர்ச்சி தான் வரும். இந்தச் செய்தியினை நான் ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்து அதிர்ந்தே போனேன். அரசின் இந்த கேடு கெட்ட தனத்துக்கு அளவே இல்லையா... எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா ? அதுவும் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் தான் அடிக்கின்றார்கள். என்ன அது என்று கேட்க தோன்றுகிறது அல்லவா ? சொல்கிறேன்... கேளுங்கள்....

ஒரு லட்ச ரூபாயை பேங்கில் போட்டால் வட்டி வருஷத்துக்கு 8500 ரூபாய் தருகிறது வங்கி. இந்த வட்டிக்கு 1% வரி போடுகிறது அரசு. சரி அதனால் என்ன என்கின்றீர்களா. இதே பணத்தை பங்குச் சந்தையில் போட்டால் வரும் வருமானத்துக்கு வட்டி இல்லை. இது எப்படி இருக்கிறது பாருங்கள்.. பண முதலாளிகளுக்கு வரும் வருமானத்தில் வட்டி இல்லை. மிடில்கிளாஸ் மக்களின் பாடுபட்டு சேர்த்த பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு. எரிச்சலா இல்லை உங்களுக்கு....

மிடில்கிளாஸ் மக்கள் யாராவது பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வார்களா.. மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பணம் பாதுகாப்பாய் இருக்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு அடாவடியாக அரசு மிடில் கிளாஸ் மக்களின் தலையினை உருட்டி சம்பாதிக்கிறது. கோடிகளில் புழங்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலாளிகள் வரிப்பணம் கட்ட வேண்டாமாம். வாயையும் வயிற்றினையும் கட்டி காசு சேர்த்து வைக்கும் மிடில்கிளாஸ்ஸின் பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு...

எதற்கு என்று கேட்கின்றீர்களா ? அரசியல்வாதிகளின் சம்பளத்தை உயர்த்தவும், சட்டசபையினிலும், நாடாளுமன்றத்திலும் கூச்சலும் குழப்பமும் செய்யவும் தான். ஆனால் படிக்காசு எல்லாம் பத்திரமாக அவர்களுக்கு சென்று சேர்ந்து விடும்.

கட்டிடம் கட்டும் சித்தாளின் கூலி, வயலில் வேலை பார்க்கும் பெண்ணின் கூலியினை உயர்த்த யாராவது இதுவரை குரல் கொடுத்து இருப்பார்களா ? சொல்லுங்கள்.... ப

பணவீக்கம் அதிகமானால் அதிகச் செலவு செய்ய வேண்டுமே ? என்ன செய்வது... சம்பளத்தில் பண வீக்கத்துக்கு ஏத்தவாறு அதிகம் கொடுப்பார்களா ? கேளுங்கள் ? யாராவது வாயைத் திறக்கனுமே ? அரசியல் வாதிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்..

பணவீக்கம் உயர்ந்தால் பேங்கில் போடப்படும் பணத்துக்கும் 7.8% பணவீக்கம் விகிதப்படி பணம் கொடுத்தால் அல்லவா பொதுமக்கள் சமாளிக்க முடியும். இலலையெனில் பணவீக்க விகிதத்துக்கு ஏற்றபடி சம்பளமும் உயர்த்தப்பட வேண்டும் அல்லவா ? யார் தான் செய்வார்கள் ?

சொல்லனும்னு தோணுச்சு சொல்லிவிட்டேன்...

Friday, May 30, 2008

கள்ளும் நானும்.....

இந்தக் கள் இருக்கே.... அதன் சுவையும் போதையும் ஒரு அலாதியான விஷயம்.

சின்ன வயதில் எங்க வீட்டு வேலைக்காரர் அம்மாவிடம் என்னை தோப்புக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு கிடைத்த பின்பு, மாட்டு வண்டியில் பயணம் செய்தோம். தோப்பில் 20 தென்னை மரங்களும், 30 பலா மரங்களும் இடையிடையே கொய்யா மரங்களும் இருக்கும். வடக்குப் பக்கமாக ஒரு அகன்ற கேணி ஒன்றும் உண்டு. அதில் மாடுகளைக் கட்டி ஏற்றம் இறைக்க ஆரம்பித்தார் ஜெயராஜ். பெரிய அகன்ற பாத்திரம் போல ஒரு தொட்டியினை கிணற்றுக்குள் இறக்கி தண்ணீரை நிறைத்து அதை மேலே இழுத்து அடிப்புறம் பிளாஸ்டிக் டியூப்பினை கயிற்றால் இழுத்தால் தண்ணீர் வாய்க்காலில் கொட்டி அப்படியே சென்று நிலக்கடலை பயிறுக்குள் பாயும். பார்க்க பார்க்க பரவசமாய் இருக்கும். வாய்க்காலின் மேல் உட்கார்ந்து கொண்டு அந்த தண்ணியில் கையை வைத்தால் சிலீரென்று இருக்கும். அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும்.

அப்போது தென்னையில் கள் இறக்க ஆள் ஒருத்தர் வந்தார். ஜெயராஜ் ஓடிப்போய் ஒரு மரத்துக் கள்ளினை வாங்கி வந்து,
” இதைக் குடிடா “ என்று சொல்ல நான் மறுத்தேன்.
”அம்மா அடிக்கும் “
” உடம்புக்கு நல்லதுடா தங்கம். கொஞ்சமா குடி “
“ வேணாம் ஜெயராசு... ”
“ அம்மாட்டே நான் சொல்லுறேன். நீ குடிச்சுப்பாரு “
தயக்கத்துடன் கள்ளை வாங்கி வாயருகில் கொண்டு செல்ல புளிச்ச வாடை அடிக்க, முகத்தை சுளித்தேன்.
“ ஒன்னும் பண்ணாது. குடி ... “ என்று மீண்டும் சொல்ல

கண்ணை மூடிக்கொண்டு அரை லிட்டர் அளவுக்கு குடித்து வைத்தேன். கள்ளைக் குடித்ததும் முன்பே வாங்கி வைத்திருந்த இட்லியும், காரச் சட்டினி, தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து பிரித்து வைத்தார். காரச் சட்டினியுடன் இட்லி தேவாமிர்தமாக இருக்க, சுவைத்து ரசித்து சாப்பிட்டேன்.

பச்சை வாழை இலையில் சிவப்பாய் காரச்சட்டினி, வெள்ளை கலரில் இட்லி மஞ்சள் கலரில் சாம்பார் என்று அந்தக் கலர் காம்பினேஷனே பார்க்க நவீன ஓவியம் போல இருக்கும்.

பலா மரத்தடியில் வைக்கோலை போட்டு துண்டு விரித்து வைத்து இருந்தார். அதில் சென்று படுத்தேன். ஆரம்பித்தது சோதனை...

போதை.. தலை சுற்ற என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை. பக்கத்து தோட்டத்தில் இருந்த தக்காளிச் செடியில் பழுத்து இருந்த தக்காளிப் பழங்களை பறித்தும், வெண்டை, கத்தரிக்காய்களை பிடிங்கி எறிந்தும் ரகளை பண்ணியிருக்கிறேன். ஏதோ செய்து ஜெயராசு என்னை படுக்க வைத்தார் போலும். தூங்கிவிட்டேன்.

மாலையில் அம்மாவிடம் பக்கத்து தோட்டக்காரர் விஷயத்தை போட்டு உடைக்க, அம்மாவின் தம்பியான மாமாவின் பிரம்படி ஒன்று கிடைத்தது. தாத்தாதான் தடுத்தார் மேலும் பிரம்படி கிடைக்காமல். ஜெயராசுக்கு திட்டு விழுந்தது.

ஆனால் அந்தக் கள்ளு சுவையாகத்தான் இருந்தது.....

Monday, May 26, 2008

ஹாக்கர்ஸால் தாக்கப்படும் செல்போன்கள்

எஸ் எம் எஸ் மூலம் ஹாக்கர்ஸ் செல்போன் பயன்படுத்துபவர்களின் தகவலை திருடி விடுகிறார்கள். இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் என்று வரும் எஸ் எம் எஸ்க்களை உடனே அழித்து விடவும். இல்லையென்றால் அந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் செல்போனின் தகவல்கள் அனைத்தையும் அந்த மெசேஜ் அனுப்பியவரை சென்று சேரும். இன்கமிங், அவுட்கோயிங் அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள். இல்லையெனில் ஐடிடெண்டியினை அழித்து விடுவார்கள்.

உங்கள் புருஷனுக்கு ஆக்ஸிடென்ட், இந்த ஆஸ்பிட்டலில் சேர்த்து இருக்கிறோம். ஹாஸ்பிட்டல் செலவுக்கு பணம் எடுத்துக் கொண்டு இந்த முகவரிக்கு உடனே வரவும் என்ற மெசேஜ் கிடைத்து அரக்க பரக்கச் சென்று அந்தப் பெண்ணை வழிமறித்து பணத்தை சுவாகா செய்த நிகழ்ச்சி எல்லாம் நடந்திருக்கிறது.

ஜாக்கிரதை...

Saturday, May 24, 2008

விமர்சகர்களுக்கு கேள்விகள்

சினிமா விமர்சனம் தமிழ் உலகில் பரபரப்பானது. சினிமாவினைப் பற்றிய விமர்சனம் போதை
தரும் என்பதால் அதை விட்டு விடுகிறேன். இலக்கிய உலகத்துக்கு வந்தால் அப்பப்பா
எத்தனை எழுத்துக்கள். எத்தனை விமர்சனங்கள்.

எண்ணி அறிய இயலா பிளாக்குகள். அத்தனையிலும் விமர்சனம். விமர்சனம். அந்த
எழுத்தாளர் அதில் இப்படி எழுதியிருக்கிறார். ஆனால் வாழ்வில் வேறு எப்படியோ இருக்கிறார்.
இன்னொருவரின் கதையினை திருடி விட்டார். இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது
என்று இன்னும் வகைப்படுத்த முடியாத அளவுக்கு விமர்சனங்கள்.

அத்தனையும் படிக்க உட்கார்ந்தால் பயித்தியக்காரனும் தெளிந்து விடுவான்.
இங்கு பயித்தியக்காரன் ஒருவன் தான் சுயபுத்தியோடு இருக்கிறான்.

காப்பி அடித்து எழுதுகிறார் என்று விமர்சனம் எழுதுகிறார்கள்.
ஏனய்யா விமர்சனம் எழுதும் வித்தகா நீயே உன் அப்பாவோ இல்லை அம்மாவின் காப்பி தானய்யா ? இந்த லட்சனத்தில் விமர்சனம் எழுதுகிறாய்.

இன்னும் ஒரு அபத்தம் நடக்கிறது பிளாக்குகளில். ஒருவரின் கதை புரியவில்லை என்றால் உடனே அய்யோ அம்மா என்று அலறி புடைத்து சமூக காவலாளி வேஷம் போட்டு எழுத்தா அது புண்ணாக்கு அது இதுவென்று எழுதுவது...

விமர்சகா, உனக்கு விளங்க வில்லை என்றால் மேலேயும் கீழேயும் பொத்திக் கொண்டு போகனும். அதற்கு எழுதியவனை விமர்சிப்பது உன்னுடைய அறியாமையை காட்டும். அதாவது நீ புத்தி இல்லாதவன் என்று நீயே உன்னை விமர்சிப்பது தான் அது.

படி. ரசி... பிடிக்கவில்லை எனில் ஒதுக்கு. அதை விடுத்து விமர்சனம் என்ற பெயரில் அலறுவது குறை சொல்லுவது, கூட்டம் போட்டு திட்டுவது, ஏன் உனக்கு இந்த வேலை ?

மற்றவனை பற்றி விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார். பின்னர் எழுத துவங்கு.