குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 9, 2025

வாழ்க்கையின் நிலையாமை - அபூர்வம் சித்தியின் மறைவு

பத்தாம் வகுப்பு வரை ஆவணம் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். மூன்று சக்கர சைக்கிள் உதவியுடன் பள்ளித் தோழர்களின் உதவியால் வீட்டுக்கும் பள்ளிக்கும் சென்று வருவது பிரச்சினையாக இல்லை. பனிரெண்டாம் வகுப்புக்கு கீரமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்க வேண்டி இருந்தது.

மச்சான் ஆத்மநாதன் அங்கு தான் படித்தான். இருவரும் பள்ளிக்கு சென்று வருவோம். இடையில் என் அம்மாவுக்கும், அவனது அம்மாவுக்கும் கிராமத்து சண்டை வர, அவன் என்னை சைக்கிளில் அழைத்து செல்ல மறுத்து விட்டான். ஒரு வாரம் லீவு. 

ஒரு வழியாக நெடுவாசலில் இருந்து வரும் பாலநாதன் என்னை அழைத்துச் செல்வான். கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தூரம். ஆவணம் கைகாட்டியில் இருந்து செல்லும் ஆனந்தனும் அழைத்துச் செல்வான். ஒரு கட்டத்தில் கீரமங்கலத்தில் தங்கும் அறையொன்றினை வாடகைக்குப் பிடித்து தங்கி விட்டேன். 

கீரமங்கலம் போலீஸ் ஸ்டேசன் பின்னால் தங்கும் அறை.  மண்பானை விற்ற பள்ளித் தோழன் இப்ராம்ஷா உதவி. தினமும் காலையில் ஹோட்டலில் இட்லி, மதியம் பட்டினி, இரவில் ஒரு தோசை என ஏற்பாடு. அரசு ஹாஸ்டலில் தங்க எனக்கு அனுமதி கிடைத்தது. அது ஒரு நரகம். சாப்பாடோ கொடுமை.

இப்படித்தான் எனது உயர்நிலை பள்ளிக் கல்வி கடந்தது. பெரிய கொடுமையை அனுபவித்தேன். சாப்பாடு கிடைக்காது. இப்ராம்ஷா வரவில்லை எனில் அல்லது மறந்து விட்டாலோ பட்டினி. பள்ளிக்கும் போக முடியாது. அன்றைக்கு லீவு. இந்த லட்சணத்தில் எங்கே படிப்பது? ஒரு வழியாக முட்டி மோதி படித்துக் கொண்டிருந்தேன்.

அபூர்வம் சின்னம்மா பைங்கால். கீரமங்கலத்துக்கு பக்கத்து ஊர். சித்தப்பா நாகப்பன். அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. என் அப்பாவின் தங்கையின் மகள். சித்தி கூட பிறந்தது வீரப்பன், குட்டியப்பன், வீரியம்மாள், சிவையாள், பாப்பாத்தி, அபூர்வம் மற்றும் நாகம்மாள் என ஏழு பேர். 

அம்மா சித்தியிடம் பேசி, பைங்காலில் தங்கிக் கொண்டு, நாகப்பன் சித்தப்பாவின் அண்ணன் மகன் நடராஜனுடன் கீரமங்கலம் பள்ளிக்கு சென்று வர ஏற்பாடு செய்தார்கள்.

பைங்கால் வாசி ஆகி விட்டேன். ரெஸ்ட் ரூம் பெரிய பிரச்சினை. குளிக்க ஆத்துக்கு நடராஜன் அழைத்து செல்வான். நினைத்தவுடன் ஒன்றுக்கு போக முடியாது. கிராமங்களில் கழிவறையெல்லாம் இருக்காது. ஒப்பன் கழிவறை. என் நிலையெல்லாம் நினைத்துப் பாருங்கள். வாழும் போதே நரகத்தை அனுபவித்தேன்.

சித்தி வீடு எனக்கு சொர்க்கம். சித்தப்பா பாலனின் மகள் மாலதி எனது தங்கை, அங்கையற்கண்ணி இன்னொரு தங்கை, ராமசாமி தம்பி, பாட்டி மற்றும் நடராஜன் என உறவுகள். விடிகாலையில் மாலதி ஒரு குவளை காப்பி தரும். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் அபூர்வம் சித்தி எருமை பாலில் காப்பி தரும். தினமும் சூடான சாப்பாடு. மாலதி தினமும் வெண்ணெய் கொண்டு வந்து சோற்றுக்குள் வைக்கும். நெடுவாசலில் கட்டிக் கொடுத்த மாலதி, ஏதோ பிரச்சினையால் இறந்து போச்சு. இன்று வரை என்னால் மறக்கவே முடியாத தங்கை. மாலதி என யாரவது தெரிந்தால் போதும், கண்கள் கலங்கி விடும்.

பள்ளிக்கு பத்து பைசா வாங்கி செல்லும் அங்கையற்கண்ணி, ஒரு மிட்டாய் வாங்கி உள்ளங்கைக்குள் வைத்து கொண்டு, மாலையில் பள்ளியில் இருந்து வரும் எனக்கு ஈரத்தால் கசிந்து போனதை தரும். ராமசாமி இரவில் என்னுடன் படுத்துக் கொள்வான். கொல்லைப்பக்கம் போக எனக்கு உதவி செய்வான். 

மாலையில் பாட்டியின் படுக்கையில் தான் படுத்திருப்பேன். தூங்கி விடுவேன். பாட்டி தனது சேலையால் போர்த்தி விட்டு, சத்தம் காட்டாமல் இருப்பார்கள். அபூர்வம் சித்தி ஒன்பது மணிபோல எழுப்பி வேறு அறையில் தூங்க வைக்கும்.

நாகப்பன் சித்தப்பா கீரமங்கலம் தியேட்டருக்கு படம் பார்க்க சென்று திரும்பி வரும் போது, பலகாரம் வாங்கி வருவார். இரவில் எழுப்பி சாப்பிட சொல்வார். தூக்க கலக்கத்துடன் சாப்பிட்டு விட்டு, தூங்கி விடுவேன். பாப்பாத்தி சித்தி, அவ்வப்போது வீட்டில் ஏதாவது ஸ்பெஷல் செய்தால் கொண்டு வந்து தரும்.

அபூர்வம் சித்தியின் கைப்பக்குவம் போல யாருக்கும் வாய்க்காது. இறால் குழம்பும், வறுவலும், மீன் குழம்பும், மீன் வறுவலும், சாம்பாரும், வற்றல் குழம்பு, ரசம் - சொல்லால் எழுத முடியாது. வாரா வாரம் பேராவூரணிக்கு சென்று வரும் சித்தி, எனக்கு பலகாரகங்கள் வாங்கி தரும். ஒரு வாரம் பலகாரகங்கள் சாப்பிட வரும்.

கெச்சலான உடல். திருத்திய முகம் என தெய்வாம்சம் பொருந்திய சித்தி இன்றைக்கு இல்லை. அவர் இறைவனை நாடி சென்று விட்டார். பல்வேறு பணி சுமைகளால் என்னால் அவர் உடல் நிலை சரியில்லாத நிலையில் சென்று பார்க்க முடியவில்லை. நேற்றைக்கு முதல் நாள் இரவு 11 மணிக்கு காலமாகி விட்டார் என அண்ணன் கேசவன் சொன்னார். 

அபூர்வம் சித்தி - நாசூக்கானவர். அவரின் உடை உடுத்தும் விதம், மற்றவர்களுடன் உரையாடும் விதம், பேசும் விதம் எல்லாம் கெத்தாக இருக்கும். வீரப்பன் மாமா, குட்டியப்பன் மாமா - அபூர்வம் சித்தி மூவரும் ஒரே மாதிரி இருப்பார்கள். இறந்து போன எனது தாய்மாமா அருணாசலத்துக்கும், என் அம்மாவுக்கும் பிடித்தவர். 

விடிகாலையில் எழுந்து வாசல் பெருக்கி, மாடுகளுக்கு தீவனம் போட்டு, சாணக் கழிவுகளை எடுத்து, பால் கறந்து, உலை வைத்து சோறு பொங்க அடுப்பை தூண்டி விட்டு, எனக்கு காப்பி போட்டுக் கொடுத்து விட்டு, வயல்காட்டுக்கு சென்று, வேலையாட்களை பார்த்து விட்டு, சித்தப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு என பம்பரம் தோற்றுப் போய் விடும். நினைத்துப் பார்க்க முடியாது. ஓயாது ஒழியாது வேலை வேலை என ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

மூன்று மாதங்கள் என நினைவு. சித்தி வீட்டில் இருந்து பள்ளி சென்று வந்து பனிரெண்டாம் வகுப்பு முடித்தேன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். ஊருக்கு சென்று வரும் போதெல்லாம் சித்தப்பாவையும், சித்தியையும் பார்த்து விட்டு வருவேன். இனி?

சித்தப்பாவுடன் கல்யாணத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது - டிவிஎஸ் பைக்கின் பின்புறம் அமர்ந்து இருந்தவர் பின்னால் விழுந்து விட்டார். தலையில் அடி. சித்தப்பா பெரிய செலவு செய்து சிகிச்சை கொடுத்தார். சித்திக்கு சரியாகவில்லை. 

எல்லோருக்கும் பிடித்த அவர் இன்று இல்லை. அவரை இழந்து வாடும் சித்தப்பாவுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் தகாது. சித்தியின் மகன் நீதிக்கு என்ன ஆறுதல் சொல்வது எனவும் தெரியவில்லை.

என்னால் இந்த இழப்பில் இருந்து மீள முடியவில்லை. அம்மா, அப்புறம் சித்தி என இயற்கையின் செயலால் உண்டான இழப்புகள் என்னை வாட்டி வதைக்கிறது. 

சித்தியின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன்

 09.05.2024 (5.25AM)

Tuesday, May 6, 2025

ஐந்து ரூபாய் கட்டணம்

இன்று காலையில் சம்பளமாக கிடைத்தது ஐந்து ரூபாய் காசு.

கோவை காவல் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு காவல்துறை அதிகாரிகளுடன் நீதிக்காக பேசிய அந்த தருணத்தில், தன்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற உண்மை உரைத்த அந்த நொடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர் எனக்குள் ஏற்படுத்திய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல. 

சட்டப் போராட்டம் என்பது அவ்வளது எளிதானதல்ல. காவல்துறை அதிகாரமிக்கது. ஆளும் கட்சியின் ஆளுமையின் கீழ் உள்ளது. அது என்ன குற்றம் செய்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது சாதாரணமல்ல. ஜெய் பீம் படம் பார்த்திருப்பீர்கள். ஆளும் கட்சியின் அசுர பலத்துக்கு முன்னால் யாரால் என்ன செய்ய முடியும்? 

இது ஒரு வகை என்றால் சிவில் வழக்குகள் இருக்கிறதே அது இதை விடக் கொடுமையானது. படிக்காதவர்கள் என்றால் சிவில் வழக்குகளின் கொடூரமென்பது கொலையை விட கொடுமையான தாக்கத்தை அவர்கள் வாழ்வில் உண்டாக்கும். ஒரு வி ஏ ஓ செய்யும் ஒரு தவறை சரி செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என நினைத்துப் பாருங்கள். எத்தனை ஊழல் கைதுகள், எத்தனை சஸ்பெண்டுகள் நடக்கின்றன. செய்திகளைப் படித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் பாதிக்கப்படுபவர்களின் மன நிலையும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், துயரமும் எதை வைத்து சரி செய்ய முடியும்? 

நான் இறந்து விட்டேன் என சொல்லி ஒரு வி ஏ ஓ பட்டாவில் இருந்து பெயரை நீக்கி விட்டான். ஜமா பந்தியில் என் அம்மா, என்னைத் தூக்கி கொண்டு போய்  டி. ஆர். ஓவிடம் விட்டு இவனை இங்கேயே கொன்னு போடுங்க. இவன் பெயரில் சொத்து பத்திரம் இருக்கிறது, இந்தப் படுபாவி இவன் இறந்து விட்டான் என பட்டா கொடுத்திருக்கிறான் என்று கதறியது. இப்படியெல்லாம் சொத்தினால் துன்பத்தில் ஆழ்ந்தவன் நான். 

இதுவே பணம் இல்லாதவர்கள் எனில் என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். நிலத்தின் மீது நடத்தப்படும் அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு சாதாரணன் இனி ஒரு வீடு வாங்க முடியுமா? இப்போது சம்பளம் 12000 ரூபாயிலிருந்து 25000 வரைக்கும்தான் கொடுக்கிறார்கள். 

விலைவாசி உயர்வு, வீடு வாடகை உயர்வு, போக்குவரத்து கட்டணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இப்படி சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துபாட்டுக்கே சரியாக இருக்கும் போது வீடு வாங்க முடியுமா?

கல்லில் கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் பூக்களுக்காகவும், பூசைக்காகவும், பார்ப்பான் தட்டுக்களில் போடும் காசினால் அந்தக் கடவுள் அவர்களுக்கு எதையும் தருவதில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை மட்டும் அவை தரும். நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ்ந்து விட போராடும் ஒவ்வொருவரும் தன் வாழ் நாள் வரையிலும் ஏதோ நடக்கும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் வாழ்வை வாழ்ந்து விடுகிறார்கள்.

முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீடு, இனி உனக்கு சொந்தமில்லை என ஒருவர் சொல்லும் போது, அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ஒரு சாதாரண குடும்பத்தால்? இப்படியான ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு நாட்கள் ஆகின. உண்மை என்ன என கண்டுபிடிக்க. அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் நிலை அப்படி. அது என்ன, எப்படி சரி செய்ய வேண்டுமென சரியான விபரங்களுடன் அவர்களுக்குப் புரிய வைத்து, அது தொடர்பான பணிகளைச் செய்ய சொன்னேன். அவர்களுக்கு இதை எப்படி கையாளனும் என சொல்லிக் கொடுத்தேன். 

இனி அந்தப் பிரச்சினை தொடர்ந்து நடக்கும். சிவில் பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதம். எல்லோருக்கும் அது எளிதில் புரிந்து விடாது. சிவில் வழக்குகள் என்பவை சரியான ஆதாரங்களுடன் நடத்தப்பட வேண்டியவை. அப்படி இருக்கலாம், இப்படி இருக்காலம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை.

ஆவண சாட்சியங்கள் வேண்டும். அது இல்லாமல் சிவில் வழக்குகள் சரியான தீர்வைத் தராது. பணம் எல்லா இடத்திலும் வேலை செய்யாது. அதிகார மீறலும் வேலை செய்யாது. புத்திசாலித்தனமும், நிதானமும் வேண்டும்.

இன்று காலையில் அவர்கள் எனக்கு கட்டணமாக பெரிய தொகை கொடுத்தார்கள். அது அவர்களுக்கு ரொம்பவும் பெரியது. 

"ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்" என்றேன். 

திகைத்து நின்றார் அவர். 

சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து டெஸ்கில் வைத்தார். 

திடீரென்று என் கையைத் தொட்டு வணங்கினார். 

"அய்யா, அதோ என் குருநாதர் அவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னேன். 

அவர் என் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமியை வணங்கிவிட்டு சென்றார். 

கோதையிடம் "இதை எடுத்துக் கொண்டு போய் பத்திரமாக வை" எனச் சொன்னேன்.

படிக்காதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தொண்டு செய்வதை விட வேறு என்ன பெரியதாய் செய்து விட முடியும்? 

என்னால் நடக்க முடியாது. என் உடலே எனக்கு எதிரி. என் உடலை வெற்றி கொள்வதில் தான் என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. 

இல்லையெனில் இந்தியா இன்னொரு சேகுவேராவைப் பார்த்திருக்கும். 

ஒரு சக மனிதன் - இல்லாதாவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதிகாரத்தினால், சதியால் வாழ்வை இழந்தவர்களுக்கும் ஆதரவாய் போராடிக் கொண்டிருப்பான்.

இதைப் படிக்கும் எவராவது ஒருவர் துன்பத்தில் உழலும் சக மனிதனுக்கு உதவினால் அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை. 

இதை விட இன்னும் ஒன்று இருக்கிறது. எவருக்கும் எந்த துன்பமும் தராமல் இருந்தாலே அதுவே கடவுளை விட பெரியது. 

கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா?

வளமுடன் வாழ்க.

Saturday, May 3, 2025

கடவுள் இருக்கின்றாரா? மீண்டும் ஓர் ஆய்வு

என்னிடத்தில் ஒருவர் அவர் தொடர்பான பிரச்சினையை சொல்லி உதவும் படி கேட்டுக் கொண்டார். அதற்காக அவரிடத்தில் ஒரு ஆலோசனை அக்ரிமெண்ட் பெற்று அவருக்குத் தேவையான ஆவணங்களை எடுத்துக் கொடுத்தேன். 

இதைக் கண்ட அவரது எதிரி (கோர்ட் வார்த்தை) தொடர்ச்சியாக அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்து, தமிழக அரசால் வழங்கப்பட்ட சுற்றறிக்கையை கவனத்தில் கொள்ளாத, ஒரு இன்ஸ்பெக்டர் வெள்ளிக்கிழமை இரவு அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்து விட்டார். 

அவருக்கு உடனடியாக உதவ யாரும் இல்லை. பெயில் எடுக்க வேண்டும். 

அவரைக் காவல்துறையில் விசாரணை செய்யும் போது, அதாவது கைது செய்யும் முன்பு சென்று பார்த்தேன். ஒரு வக்கீலை அறிமுகம் செய்து வைத்தேன். அதை அவர் நினைவில் வைத்திருந்தார். 

ஞாயிற்றுக் கிழமை காலை அவரைப் பார்க்க அவரது மகனுடன் நானும் ஜெயிலுக்கு சென்றிருந்தேன். அதற்குள் வேறு இருவர் மனு கொடுத்து உள்ளே சென்று விட்டனர்.

ஏன் தெரியுமா?

அவரிடம் இருந்து வேறு வக்கீல்கள் வக்காலத்தில் கையொப்பம் வாங்கினால், அவரின் உண்மையான வக்கீல், ஜாமீன் கோரி வாதாடும் போது, பல வக்கீல்கள் எழுந்து நான் தான் அவரின் வக்கீல் என ஆட்சேபனை தெரிவித்தால் ஜட்ஜ் அய்யா கடுப்பாகி ஜாமீன் கொடுக்க மாட்டார். 

நண்பரின் மீது புகார் கொடுத்தவரின் திட்டம் இது.  

அதற்காக இருவரை முன்பே அனுப்பி வைத்திருந்தார். ஒரு தடவை ஒருவரை பார்க்க அனுமதித்தால் மறுபடியும் அனுமதி கிடைக்காது. வெளியில் என்ன நடக்குது என அவருக்கு தெரியாமல் ஜாமீன் கொடுக்க வேறு வக்கீலை அனுப்பி இருப்பதாக நினைத்து வக்காலத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டால் அடுத்த 40 நாட்கள் ஜெயில் வாசம். அடுத்தும் இதேபோல செய்து தொடர்ச்சியாக ஜெயில் வைத்து விடலாம் என திட்டம்.

அதை நிறைவேற்ற வேறு ஆட்கள் உள்ளே சென்று விட்டார்கள். 

நானும் பையனும் செய்வதறியாது திகைத்து நின்றோம். 

அப்போது ஜெயில் பாதுகாப்பில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து விசாரித்தார். 

விபரம் சொன்னேன். இரத்த உறவுக்குதான் முதல் அனுமதி தருவோம். இது ஏதோ பிரச்சனை போல இருக்கு என சொல்லி, மனு கொடுத்து உள்ளே சென்ற இருவரையும் உடனடியாக தடுத்து நிறுத்தி, மீண்டும் அழைத்து வந்து விட்டார்.

வந்த இருவரும் என்னைப் பார்த்ததும் தலையை எடுத்து விடுவேன், கையை உடைத்து விடுவேன், நீ இப்படி இருந்து கொண்டு என்னெவெல்லாம் செய்கிறாய். உன்னை சும்மா விடமாட்டேன் என ஜெயில் வாசலிலில் நின்று கொண்டு மிரட்ட ஆரம்பித்தனர். 

பயத்தில் உடலெல்லாம் நடுங்கி வியர்த்து வழிந்து அய்யோ என்னை விட்டு விடுங்க என அவரிடத்தில் கதறி விட்டேன். ஓட கூட முடியாது. என் நிலையை பார்த்தீர்களா? அவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டேன். இனி வரவே மாட்டேன் அய்யா என கதறி விட்டேன். நானென்ன ஹீரோ பாலகிருஷ்ணாவா? சவால் விட்டு, ஒரே உதையில் இருவரையும் பறக்க விட? இல்லை பனையூர் பண்ணையாரா? பயந்து தானே ஆகனும்?

ஆனால் அவர்கள் கொடுத்த மனு  ரத்து செய்யப்பட்டு நானும் அவரின் பையனும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தோம். சனிக்கிழமை அன்றே ஒரு சில வக்கீல்கள் உள்ளே சென்று வக்காலத்கில் கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். அவர் முடியாது என சொல்லி விட்டார். அந்த கடுப்புக்காக அவரை மிரட்ட தான் இவர்கள் வந்திருக்கிறார்கள்.

வெளியில் வந்ததும் அவர்கள் இருவரும் ஜெயிலின் வாசலில் காத்துக் கொண்டிருந்தனர். இனி அவரின் வழக்கில் தலை இட கூடாது என மிரட்டினார்கள். நானும் இனி அவர் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்து விட்டு வந்தேன். நானென்ன அரிச்சந்திரனா சத்தியத்தைக் காப்பாற்ற? அடியேன் புனர்பூச நடசத்திரத்தில் பிறந்த கிருஷ்ணர் அவதாரம். (மன்னிக்கவும் - பழக்க தோஷம் விடாது கருப்பு போல தொடர்கிறது)

திங்கள் கிழமை பெயில் எடுத்து - நான் ஜாமீன் கொடுத்தேன். அவர்கள் சுமார் பதினைந்து பேர்கள் வந்திருந்தனர். நாக்கை நீட்டி மிரட்டினார்களாம், கொலை செய்து விடுவேன் என கையால் கழுத்தில் காட்டினார்களாம். 

ஜாமீன் கிடைத்த பிறகு கூட இருந்த நண்பர் என்னிடத்தில் சொன்னார். அன்றைக்குப் பார்த்து கண்ணில் கோளாறு. ஆகையால் அவர்களை பார்க்க முடியவில்லை. 

செவ்வாய் கிழமை அவரை வீட்டில் விட்டு வீடு வந்தேன். மாலையில் தான் ஜாமின் ஆர்டர் கிடைத்தது. அதற்குள் ஜெயிலில் ஜாமீன் விடுவதற்கான நேரம் முடிந்தது.

இங்கே கடவுள் எங்கே வந்தார் என கேட்கின்றீர்களா? புரியவில்லை எனில் தொடருங்கள்.

என்னை விசாரிக்க வந்தார் அல்லவா ஒரு காவல்துறை அலுவலர், அவரே தான். 

ஒரு காவலர் உள்ளே போடுகிறார். ஒரு காவலர் உதவுகிறார். இது என்ன விதமான செயல்பாடு? இதற்கும் கடவுளுக்கும் தொடர்பு உண்டா? 

கேள்விகள், கேள்விகள். 

விடை சொல்ல முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்றா? 

நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றா? இது எது? 

இதற்கெல்லாம் பதில் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அதை சொல்ல முடியாது. 

ஏனெனில் அதன் தத்துவம், அதன் அர்த்தம் நாம் வாழும் வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவத்தில் கிடைக்காது. 

நம்மிடத்தில் இருக்கும் அறிவு பிறரால் புகுத்தப்பட்டது. இந்த அறிவு அடிமைக்கானது. அடிமை வாழ்வுக்கானது. அதுவே உன்னதமானது என சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நம்மால் விட முடியாது. உண்மையை உணரவும் முடியாது.

வளமுடன் வாழ்க.

Thursday, May 1, 2025

தலைவன் எப்படி உருவாகிறான்?

ஒரு ஊரில் ஒரு அரசியல்வாதி இருந்தான். அவனிடம் பிச்சைனு ஒரு எடுப்பாள் இருந்தான். அரசியல்வாதிக்கு எடுப்பாள் மீது  உள்ளூர கடுப்பு இருந்தது. அவன் இவன் மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வான் என்பதால்.

பிச்சைக்கு அரசியல்வாதி உயிர் போல.  செம்புல நீர்போல பேச்சு இருந்தாலும் ஒரு நாள் வெளுத்துப் போகுமே?

தேர்தல்  அறிவித்தார்கள் ஜனா நாயகத்தைக் காக்கும் தேர்தல் கமி சனர்கள். 

அரசியல்வாதிக்கு பிச்சை மேல இருந்த எரிச்சலில் பிரச்சாரத்தின் போது பிச்சைக்காரர்கள் இல்லாத ஊராக மாற்றுவேன் என வாக்கு கொடுத்தான். 

பிரச்சாரமும் நடந்து கொண்டிருந்தது. 

கோவிலில் தங்கி இருந்து, பரநாட்டத்தின் மீது பற்றுக் கொண்டு, இல்லற வாழ்க்கையை தியாகம் செய்து, காவி உடுத்தி, வீடு வாசல் துறந்து, வயித்துப் பசி தீர்க்க மகளுக்கு அருளாசி புரிந்து, ஆண்டியாய், சாமியாராய் அலைந்து திரிந்து, சித்தம் போக்கு சிவன் போக்கு என்னும் வாக்குக்கு இணங்க திரிந்து கொண்டிருந்த பல பிச்சைக்காரர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

காவல்துறை புலன் ஆய்ந்து இது கொலைதான் என கண்டுபிடித்தார்கள்.  ஒரு சில சிவ பெருமானின் ஊழித் தாண்டவமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்கள். சூலாயுதத்தால் கொல்லப்பட்டிருந்தார்கள் அவர்கள். 

தேர்தலில் அரசியல்வாதி தோற்று விட்டான்.

பிச்சைக்காரர்கள் கொலையைப் பற்றி போலீஸ் விசாரிக்க அரசியல்வாதியிடம் வந்ததது. 

அவர்கள் சென்றவுடன் அரசியல்வாதிக்கு சந்தேகம் எழ  பிச்சையை அழைத்தான்.

அதேதான் வாக்கை நிறைவேற்ற பிச்சை தான் பிச்சைக்காரர்களைக் கொலை செய்திருக்கிறான்.

"என்னடா இப்படி செஞ்சு வச்சிருக்கே?"

"நீங்க சொன்னீங்க, நான் செஞ்சேன், யாரு கேட்டாலும் அப்படித்தான் சொல்வேன்" என்றான்.

அடுத்த ஒரு சில நாட்களில் பிச்சை, தலைவர் பிச்சை ஆனார்.

டெல்லிக்கு செல்லும் தமிழன் என பிச்சையை அறிமுகம் செய்து வைத்தார் பத்திரைக்கைகார்களிடம். 

* * *

Friday, April 25, 2025

நரலீலைகள் (17) - உருவமற்றது உணர்வுடையது

கோவிட் நேரம்.  காலை ஏழு மணி போல பீமாவும், ரயானும், ஆறுமுகமும் தேனிக்கு கிளம்பினார்கள். சாலையில் வண்டி வாகனங்கள் ஏதுமில்லை. சாலை வெறிச்சோடிக் கிடந்தது. எந்தக் கடையும் திறந்திருக்கவும் இல்லை. ஆங்காங்கே ஒரு சில ஆட்கள் தென்பட்டனர்.

ஒட்டன் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு சிறு டீக்கடையின் முன்பு காரை நிறுத்தி ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டார் ரயான். வயது 23 இருக்கும். மாநிறம். தெளிவான முகம். சுடிதார் அணிந்திருந்தாள். கைகளில் வண்ண வளையல்கள்.

”அண்ணே, நம்முடன் வருகிறார் இவர். உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமேன்னு வரச் சொல்லி இருந்தேன்” என்றார் பீமாவிடம் ரயான்.

அடுத்த நாள் விடிகாலையில் கட்டிலில் மங்கலான வெளிச்சத்தில் கலைந்த ஓவியமாய் அவள் படுத்திருந்ததைப் பார்த்த பீமா, சத்தமிடாமல் எழுந்து ஷோபாவில் சென்று அமர்ந்தான். 

ஏசி சிறிய சத்தத்துடன் குளிர் காற்றை வீசிக் கொண்டிருந்தது. சன்னல் திரையை நகர்த்தினான். வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது.

இரவு அருகில் படுத்திருந்த மதிவதனியிடமிருந்து ஒரு சத்தமும் எழவில்லை. அடித்துப் போட்டது போல தூங்கினாள். அறை முழுவதும் நறுமணம் கமழ்ந்திருந்தது. வெளியில் கொட்டும் மழையின் சத்தம் சிறிதாக கேட்டுக் கொண்டிருந்தது. 

அன்று இரவு பதினோறு மணிக்கு கதவு தட்டப்பட்டது. 

”உள்ளே வரலாமா?” மதி நின்று கொண்டிருந்தாள்.

பெங்களூர் இரும்புத்தாது ஏற்றுமதியாளரைச் (தற்போது அவர் அரசியல்வாதி) சந்திக்கச் சென்றிருந்த போது, டிரைவரின் மீது கொண்ட அன்பினால் சூட் ரூமில் கீழே படுக்கச் சொல்லி இருந்தான். இரவில் அவர் விட்ட கொறட்டையில் அலறி அடித்துக் கொண்டு, அவரை எழுப்பி காருக்குச் சென்று தூங்கச் சொன்னது பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. அன்றிலிருந்து தனியாகத்தான் தங்குவான். 

”வாம்மா..! என்ன ஆச்சு?”

”ஓவராக சரக்கை போட்டுட்டு வம்பு செய்கிறார்கள் இருவரும். உங்க கூட தங்கிடவா? ப்ளீஸ்..!”

மாலையிலிருந்து இருந்து பீமாவை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். தயக்கத்துடன் சம்மதித்தான்.

”கீழே படுத்துக்கிறேன், தலையணை மட்டும் தாங்க”

”பெட்டில் படுத்துக் கொள்!”

பீமாவின் அருகில் படுத்துக் கொண்டாள்.

சன்னலோரமாய் அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரமானது தெரியவில்லை. அப்படியே அசந்து போய் கண்ணசந்து விட்டான்.

“சீக்கிரமா முழிச்சிட்டீங்களா?”

குரல் கேட்டு விழித்து, அவளைப் பார்த்தான். ஆமாம் என்பது போல தலையாட்டினான்.

முடியை ஒதுக்கிக் கொண்டே எதிரில் அமர்ந்தாள். 

”பல் விளக்கிட்டீங்களா? பேஸ்ட் எடுத்தாரவா? டீ கலந்து தரட்டா?”

அவளை அழைத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவளுக்கு வெட்கம் வர தலையை அவன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள். சன்னலுக்கு வெளியே பார்க்கும்படி சொன்னான். அவள் கண்ணாடிக்கு வெளியே கொட்டிக் கொண்டிருந்த மழையைப் பார்த்தாள். இடது கையை முதுகுக்குப் பின்னால் கொடுத்து அவனை நெருக்கிக் கொண்டாள். கண்ணை மூடிக் கொண்டாள். 

பீமா மழையை தன் நெஞ்சுக்குள் உணர்ந்தான்.

சிறிய மூக்கு, காதில் தொங்கட்டான்கள், நெற்றியில் புரண்ட முடிக்கற்றைகள், அவள் மீது வீசிய ஏதோ ஒரு டியோரண்டின் வாசம். அளவான உதடுகள். சற்றே உப்பிய கச்சிதமான உடல். 

மெல்லிய கொலுசு அணிந்திருந்தாள். அதன் ஓசை அலாதியானது. அவளின் இருப்பை அந்தச் சத்தம் அடையாளப்படுத்தியது.  அங்குமிங்கும் சென்று வரும் போது எழும் கொலுசின் ஒலி - பீமாவின் மனதுக்குள் சட்டென்று அமைதியைக் கொண்டு வந்து கொண்டிருந்தது. ஏகாந்தமான அந்த ஓசைக்குள் மூழ்கிக் தன் இருப்பை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தான். 

இருப்பென்பது பெயருமல்ல, உருவமும் அல்ல. இருப்பென்பது இல்லாமலிருப்பது. ஓசை அதை ஒரு வகையில் உருவாக்குகிறது. 

அந்த நொடியில் பீமாவுக்கு ரூமியின் கவிதை நினைவிலாடியது.


I choose to love you in silence…

For in silence I find no rejection,


I choose to love you in loneliness…

For in loneliness no one owns you but me,


I choose to adore you from a distance…

For distance will shield me from pain,


I choose to kiss you in the wind…

For the wind is gentler than my lips,


I choose to hold you in my dreams…

For in my dreams, you have no end.

― Rumi

அமைதியில், தனிமையில், தூரத்தில், காற்றில், கனவுகளில் உன்னை காதலிக்கிறேன் காதலி என்கிறார். காதலியால் விலகி விட முடியாத காதல். காதலுக்கு காதலி என்ற உணர்வு மட்டுமே தேவை. காதலியல்ல. காதல் உருவமற்றது ஆனால் உணர்வானது. 

அதெல்லாம் சாத்தியமா? 

அதன் பெயர் ஒரு காதலா? 

கேள்வி எழுகிறதா? 

தமிழை ஆண்ட ஆண்டாளின் காதல் கண்ணன் மீது. திருப்பாவையில் புலம்பி இருப்பாள் ஆண்டாள். 

அவளின் காதலும் ரூமியின் கவிதையும் ஒன்றிணைந்து விடுகிறது. 

ஒவ்வொன்றும் வேறொன்றாக பிறப்பது இயற்கை அல்லவா?

மாலையில் மீட்டிங்க் முடிந்ததும் நண்பர்களுடன் அறைக்குள் வந்த போது, அவள் அவனது அறையில் தான் இருந்தாள். தலைக்கு குளித்து விட்டு முடியைக் கோதிக் கொண்டிருந்தாள். கண்களில் மை இட்டிருந்தாள். 

”அண்ணா ரெஸ்ட் எடுப்பாங்க, நீ நம்ம ரூமுக்கு வந்துடு” ன்னு ரேயான் அவளை அழைத்து சென்றார். 

அதன் பிறகு தான் அன்று இரவு பதினோறு மணிக்கு மதியின் வருகை. 

பத்து மணி போல ஊருக்கு கிளம்பினார்கள். 

காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தாள் மது. 

ஒட்டன் சத்திரம் அருகில் வரும் போது, பீமாவுக்கு நெஞ்சு எரிச்சல் உண்டானது. எங்கெங்கோ சென்று அலைந்து தேடிப் பிடித்து ஒரு கடையில் தயிர் வாங்கிக் கொடுத்தாள் மது. 

அவளின் கொலுசொலியைக் கேட்டபடியே இருந்தான் பீமா. 

ஏதோ ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டாள்.

நான்காம் நாள் மதுவிடமிருந்து போன்.

”சென்னைக்குச் செல்ல இருப்பதாகவும், டிக்கெட் புக்கிங்க் செய்து தர முடியுமா?” எனக் கேட்டாள்.

ஏசி பஸ்ஸில் டிக்கெட் புக் செய்து அனுப்பினான். 

“பணம் வேண்டுமா?” எனக் கேட்டான். 

”எதுக்கு?”

”தோணுது மதி”

”நான் ஒன்றுமே செய்யவில்லையே உங்களுக்கு?”

அவளுக்குப் புரியுமா எனத் தெரியவில்லை. 

பீமாவின் நெஞ்சுக்குள் அந்த நாளின் ஹோட்டலின் அறையில் அந்த ஒரு நொடியில் மழையாய் நிறைந்து போனாள் அவள் என்பது. 

இப்போது மீண்டும் ரூமியின் கவிதை மீண்டும்.


I choose to love you in silence…

For in silence I find no rejection,


I choose to love you in loneliness…

For in loneliness no one owns you but me,


I choose to adore you from a distance…

For distance will shield me from pain,


I choose to kiss you in the wind…

For the wind is gentler than my lips,


I choose to hold you in my dreams…

For in my dreams, you have no end.

- ரூமி


***

நாவல் எழுதப்படாமல் நீண்ட நாட்கள் ஆகி விட்டதே என்ற கவலையில் இருந்த மாயாவுக்கு பெருமிதம் தாங்க முடியவில்லை. சந்து தலையைச் சொரிந்து கொண்டே வந்தான்.

”அண்ணே, இதென்ன? கையில் வெண்ணெய் கிடைத்த போது, மழை கிழைன்னு உளறிகிட்டு இருக்கார் நாவல் ஆசிரியர்.

”சந்து, அதெல்லாம் உனக்குப் புரியாதுடா பயலே..!”

“என்ன இழவோ... மொத்தத்தில் வடை போச்சு...! இதெல்லாம் ஒரு நாவலா? எனச் சொல்லியபடி கடுப்பானான் சந்து.

* * *

தொடரும்...!

Saturday, April 12, 2025

முருங்கைக்காய் ரசம் - அடிபோலி ரகம்

பக்கத்து வீடுகளிலிருந்து தினமும் முருங்கைக்காய் இலவசமாய் வீட்டுக்கு வந்து விடுகிறது. அம்மணியின் கைப்பக்குவ மெனுக்களில் முருங்கைக்காய் தவறாது இடம் பெற்று விடுகிறது. எங்கே திரும்பினாலும் முருங்கைக்காய் மயம்.

தட்டுகளில் பலவித மெனுக்களில் முருங்கைக்காய் வரிசை கட்டி நிற்கிறது. அத்துடன் எனக்குள் கற்பனையும் கலந்து விடுவதால் தட்டில் நெளியும் பச்சைப்பாம்பு போலவும் தெரிகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனப் புரிகிறது. மனித இயல்பு தானே?

பாக்கியராஜ் செய்த அடாவடிகளில் ஒன்று இந்த முருங்கைக்காய் மேட்டர். எல்லா மனிதர்களின் மனதிலும் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். பல் இருக்கும் சினிமாக்காரர்கள் அவல் மெல்லுகிறார்கள். ரசிகர்கள் வாய் ஹீட்டில் காய்ந்து போய் கிடக்கும். அது அவரவர் பிரச்சினை.

இப்போதைக்கு மனிதர்கள் சாப்பிடும் காய்கறிகளில் அக்மார்க் ஆர்கானிக் இந்த முருங்கைக்காய் மட்டுமே. 

இந்த முருங்கைக்காயில் ஒரு மகத்துவம் உண்டு. ஒன்றுக்குப் போன பிறகு ஒரு சிலருக்கு சிறுநீர் சொட்டுச் சொட்டாக நீண்ட நேரம் வடியும். அதற்கு இந்த முருங்கைக்காய் ஒரு வரப்பிரசாதம்.

அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சொட்டுச் சொட்டாய் நனைவது நின்று விடும்.

புதுக்கோட்டை - நெடுவாசல் பக்கம் முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து மசாலா ரசம் வைப்பார்கள். அது ஆட்டு எலும்பு ரசத்தின் சுவைக்கு ஈடு சேர்க்கும். கொஞ்சம் கலக்கி சேர்க்கும் வேலை தான். ஆனாலும் ஒரு தட்டு சோறு உள்ளே போகும். எப்படி செய்வது எனச் சொல்கிறேன்.

முதல் ஸ்டெப் :

ஒரு குக்கரில் இரண்டு லிட்டர் தண்ணீரில், பெரிய வெங்காயம்(1) அதனுடன் தக்காளிகளை(3) துண்டு துண்டாக நறுக்கி போட்டு, ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து விட்டு, குக்கரை மூடி நான்கு விஷில் விட்டு இறக்கவும். 

இரண்டாவதாய்ச் செய்ய வேண்டியது :

கத்தரிக்காய்(2), நன்கு நீண்ட முருங்கைக்காய்கள்(3), உருளைக் கிழங்குகளை(2) நறுக்கி கழுவி விட்டு குக்கரில் சேர்த்து வேகப் போடவும். அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.

மூன்றாவதாய் செய்ய வேண்டியது :

ஒரு மிக்ஸியில் இஞ்சி(1-துண்டு), பூண்டு(6 துண்டுகள்), பட்டை(1), கிராம்பு(4), ஏலக்காய்(3), கசகசா(1 ஸ்பூன்), முந்திரி(6), ஒரு ஸ்பூன் தேங்காய் துண்டு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு, நன்கு அரைத்து எடுத்து, இந்த மசாலாவை வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்க விடவும். மணக்க ஆரம்பிக்கும். இஞ்சி பூண்டு வாசனை போகும் வரை வேக விடவும். ஒரு ஐந்து நிமிடம் ஆகும்.

நான்காவதாய்ச் செய்ய வேண்டியது :

ஒரு பாத்திரத்தில் மல்லித்தூள்(2), மிளகாய் தூள்(1), சீரகத்தூள்(1), சோம்புத்தூள்(1) ஆகியவைகளைச் சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து வெந்து கொண்டிருக்கும் இஞ்சி பூண்டி வாசனை போன ரசத்துடன் சேர்த்து கலக்கி விடவும். தேவையான உப்புச் சேர்க்கவும்.

ஒரே ஒரு கொதி விட்டு இறக்கி விடவும். கவனிக்க சீரகமும், சோம்பும் கலந்திருப்பதால் கடுத்து விடும் ஆபத்து உள்ளது. வாயில் வைக்க முடியாது. அது ஒரு தினுசாக இருக்கும். 

ஐந்தாவதாகச் செய்ய வேண்டியது :

இலுப்பைச் சட்டியில் இரண்டு ஸ்பூன் நல் எண்ணெய் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயமும், ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு பிரிஞ்சி இலை அத்துடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்புடன் சேர்த்துக் கிளறி விட்டு மூடி வைக்கவும்.

ஆறாவதாகச் செய்ய வேண்டியது :

ஒரு தட்டில் சுடச் சுட சோற்றினைப் போட்டுக் கொண்டு, அதில் நடுவில் குழி பறித்துக் கொள்ளவும். ரசத்தையும், காய்கறிகளையும் அந்தக் குழிக்குள் நான்கு கரண்டி எடுத்து ஊற்றவும். காய்கறிகளை எடுத்து ஓரமாக வைத்து விட்டு, முருங்கைக்காயை எடுத்து வாயில் வைத்து - ஒரே உறிஞ்சு. உள்ளே போயிடுச்சா. எலும்பினை உறிஞ்சியது போல இருக்கும். செம டேஸ்ட்டா இருக்குமுங்க.

சோற்றுடன் கத்தரிக்காய், உருளைக்கிழங்குகளை சேர்த்துப் பிசைந்து ஒரு உருண்டையை உள் நாக்கில் வைக்கவும். லபக்கென வயிற்றுக்குள் சென்று விடும்.

ஆட்டு எலும்பு ரசம் இதன் அருகில் நிற்கமுடியாது. எப்படின்னா ராஷ்மிகா மந்தனாவும், சரோஜா தேவியையும் அருகருகில் நின்றால் நம் கண்ணும், கவனமும் யாரிடம் போகும்? அதே தான். ரசனை வேறு, ருசி வேறு.

மணமும், குணமும் - ரகமுமாக முருங்கைக்காய் ரசம் அடிபோலி ரகம்.

திருமணம் ஆன அம்மணிகள் கவனிக்க: இது புளி சேர்க்காத ரசம். ஒரு முறை வச்சு கொடுங்க. அப்புறம் அதே தான்....! அடி போலி ..... அடி போலி.....!

Tuesday, April 1, 2025

தனுஷின் நாய்க்காதல் - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?

ஆறறிவு கொண்ட மனிதன் விலங்குகளை விட கேவலமான நிலைக்குச் செல்வான் - வரலாறு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம்.

மார்கழி மாதம் நாய்கள் தெருவில் காதல் செய்வதைப் பார்த்திருப்போம். மனிதர்கள் செய்தால் - அதுவும் தனுஷின் அக்கா பையன் பவிஷ் ( சுவற்றில் வச்சு தேச்சாலும் கிளம்பாத முகம்) - விசிலடிச்சான் குஞ்சுகளுக்குப் புதுவழி காட்டிய நாய்க்காதல் படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். 

நாய்களுக்கு நேரமும் இல்லை, காலமும் இல்லை - தேவையென்னால் இடம் பொருள் பார்க்காமல் கோர்த்துக் கொள்ளும். அதை தான் தனுஷ் படமாக எடுத்து இருக்கிறார்.

தனுஷை கொண்டாடி ஆடி பாடி தீர்க்கும் ரசிகன் எவனையாவது ஹீரோவாக்கலாமே தனுஷ். ரசிகனின் காசு மட்டும் வேண்டும். ஆனா உங்க குடும்பம் மட்டுமே தான் ஹீரோவாக நடிக்கனுமா தனுஷ்? உம்ம பையன் அடுத்த ஹீரோ...வா? 

காசையும் நேரத்தையும் கொடுத்து, நாசமாக போகவென தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வரையிலும் உங்களைப் போன்றோர்களின் ஆட்டம் அடங்கவா போகுது?

நாயகி அனிகா சுரேந்திரன் - பிஞ்சிலே பழுத்தது. முகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தால் நித்தியானந்தாவாக இந்தியாவை விட்டு ஓடிப் போகனும்.  உருண்டு திரண்ட உடலிருந்தால் - அந்த நான்கு இஞ்ச் இடத்தை தவிர மற்றதெல்லாம் காட்டினால் ஹீரோயின். இன்ஸ்டாகிராமில் ஆட்டம்.

ப்ரியா பிரகாஷ் வாரியர் - ஒற்றை விரலை நீட்டி கண்ணடித்த கலையுலக நடிகை. இது நாள் வரை எங்கே போனாரோ தெரியவில்லை. தனுஷுக்கு மாமி நடிகைகளை ரொம்பவும் பிடிக்கும் போல. 

எங்கேயிருந்து பிடிக்கிறானுங்களோ? 

மேத்யூ தாமஸ் - மலையாள படங்களில் இருந்து ஓய்வு பெற்ற ஷகிலா இப்போது அம்மா ஆகி புனிதராகி விட்டார். சிலுக்கு நடித்த லயனம் பட ஹீரோ நந்து போல இருக்கிறார். விரைவில் மலையாள சூப்பர் ஹீரோக்களுக்கு ஷகிலா போல டஃப் கொடுக்கலாம். 

ரம்யா ரங்கநாதன்  - அச்சு அசல் மாமி. தனுஷ்ஷுக்குப் பிடிக்க இந்த ஒன்றே போதும்.

கவட்டிக்குள் சொரியும் கதையில் நடித்தால் தான் ரசிகனின் மனதைக் கொள்ளை கொள்ள முடியும். அதைத்தான் மாமியாரைத் தடவி ஹீரோவான  சோசப் - இப்போது முதலமைச்சராக வேண்டுமென கதறிக் கொண்டிருக்கிறான்.

ஆபாசப்படம் - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். 

ஒழுக்கமென்றால் என்னவென்று தெரியுமா தனுஷ் உங்களுக்கு?

சுய ஒழுங்கு என்றால் என்னவென்று உங்களைப் போன்றோருக்குத் தெரியாது. 

பெண்களை அசிங்கப்படுத்தும் போக்கினை எப்போதுதான் உணர்வீர்களோ தெரியவில்லை. 

சுயகவுரம் இல்லாத பெண்களை நடிகைகளாக்கி - நாசகாரம் செய்யும் இதைப் போன்ற படங்களை காசு கொடுத்துப் பார்க்கும் ரசிகர்களின் எதிர்காலத்தை நினைக்கும் போது ஆயாசம் தான் ஏற்படுகிறது.

தனுஷ் நீங்கள் வாழும் காலம் வரை - ஒரு நல்ல செயலையாவது செய்யுங்கள்.  மலத்தை தட்டில் வைத்து பரிமாறும் மனத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

பெண்கள் ஆலமரம் போன்றோர்கள். அவர்களை அசிங்கம் செய்யாதீர்கள். சரோஜாதேவி கதைப் படங்களை அமெரிக்கா சென்று எடுங்கள். அந்த ஃபீல்ட் தனி. 

சன்னிலியோன்களை தமிழ் நாட்டில் உருவாக்கிட முயலாதீர்கள். 

Monday, March 24, 2025

ஆர்.எச்.ஆர் - ரத்னவேல் அய்யா

2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி - காலை நேரம் - கோவை இரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கும் ராயல் தியேட்டருக்கு ஒரு வேலை நிமித்தமாகச் சென்றிருந்தேன். அங்கு தான் திரு.ரத்னவேல் அய்யாவை முதன் முதலில் பார்த்தேன்.

(திரு.ரத்னவேல் அய்யா)

கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.





அடியேன் பிறந்தது ஆவணம் கிராமத்தில் என்பதால் எனக்குத் தெரிந்த தியேட்டர்கள் - வீட்டுக்கு வடக்குப் பக்கமாக - மாலையில் ஒலிபெருக்கியில் பாட்டுப் போட்டால், கேட்கும் தூரத்தில் இருந்த மாரிமுத்து திரையரங்கம் (ஆவணம்) இது ஒரு டூரிங்க் டாக்கீஸ்.

வீட்டிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் தெற்குப் பக்கமாக ஆவணம் கைகாட்டியில் இருந்த ஸ்டார் தியேட்டர். 

அடுத்தாக மேற்குப் பக்கமாக வடகாடு தங்கம் தியேட்டர், கிழக்குப் பக்கமாக  திருச்சிற்றம்பலத்தில் ஒரு தியேட்டர். பெயர் மறந்து விட்டது.

பெரிய தியேட்டர் என்றால் கீரமங்கலத்தில் இருந்தது. அடுத்துப் பேராவூரணி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் சாந்தி தியேட்டர். 

இப்படி ஊரைச் சுற்றிலுமிருந்த தியேட்டர்களில் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் படம் பார்த்தது உண்டு. நண்பன் ஜஹாங்கீர் ஆலத்தின் வீட்டில் வீடியோ டெக் வந்து விட்டதால் - டிவியில் படம் பார்த்துக் கொள்வதுடன் தியேட்டரில் படம் பார்ப்பது ஓய்ந்தது.

ஒர் இரவில் இரண்டாம் ஆட்டம் பார்க்க நானும், ஜஹாங்கீரும் கைகாட்டி ஸ்டார் தியேட்டருக்குச் சென்றோம். நான் மாடியில் உட்கார்ந்து கேப்டன் பிரபாகாரன் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவனைக் காணோம். படம் முடிவதற்குள் வந்து விட்டான். அவனின் ஒரு சில நண்பர்கள் அவனுக்கு பல முட்டுச் சந்து வழிகளைக் காட்டி, அப்பாதையில் சென்று - ஒருவழியாக மேலே போய் விட்டான்.

தியேட்டர்களுடனான எனது வாழ்க்கை இப்படித்தான் இருந்தது.

நமது தமிழ்நாட்டின் தலையெழுத்து தியேட்டர்களின் மூலமாக துவங்கப்பட்டது என்ற அறிவெல்லாம் எனக்கு அந்த வயதில் கிடையாது.

அனுபவமும், கொஞ்சூண்டு அறிவும் வந்த பின்னால் தான் தெரிந்தது - தியேட்டர்கள் தமிழர்களின் வாழ்க்கையில் முக்கால் பாகத்தை விழுங்கிக் கொண்டிருப்பது. அதுதான் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் களமாக இருக்கிறது என்பதும்.


எம்.ஏ.குருசாமி நாடார், சின்னதாயம்மாள் ஆகியோரால் 1946 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது இந்த ராயல் தியேட்டர். ஆரம்பத்தில் இது நாடகம் நடத்தும் தியேட்டராக இருந்தது என அய்யா என்னிடம் சொன்னார். தியேட்டரின் கீழே ஒரு பகுதியாம் அது. மேலே தியேட்டர் எனச் சொன்னார். என்னால் மூடிகிடந்த தியேட்டருக்குள் செல்ல முடியவில்லை. ரித்திக் நந்தா உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தான். இடிபாடுகளுடன் குடோனாக இருந்தது அந்த தியேட்டர். அய்யா அவர்கள் வெற்றி விழா கொண்டாடப்பட்ட பல படங்களில் ஷீல்டுகளை ரித்திக்கை எடுத்து வரச் சொல்லி காட்டினார். பெரிய பிரமிப்பாக இருந்தது. எந்தக் காலத்திலோ மக்களால் கொண்டாடப்பட்ட நடிகர்கள் கலந்து கொண்டு வழங்கப்பட்ட ஷீல்டுகள் அவை. அவைகளை நான் தொட்டுப் பார்ப்பேன் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

அய்யாவின் அப்பா ராயல் தியேட்டர் மட்டும் ஆரம்பிக்கவில்லை, அத்துடன் ராயல் ஹிந்து ரெஸ்டாரெண்ட் ஒன்றினையும் ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது ஆர்.எச்.ஆர் ஹோட்டல். ரத்னவேல் மற்றும் மாணிக்கவேல் ஆகிய இரு சகோதரர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது ராயல் தியேட்டர்.

காலத்தின் பாதையில் எது என்னவாகும் என்பதெல்லாம் எவராலும் கணிக்க முடியாது.  அய்யாவுடன் பேசிக் கொண்டிருந்த போது பல சினிமா பிரபலங்களைப் பற்றி சொன்னார். ஒவ்வொரு செய்தியும் ஆச்சரியப்படுத்தியது. அவரின் தகப்பனார் சினிமா பிரபலங்களுடன் கொண்ட நட்பு பெரிது. சிறிய வயதில் குருசாமி நாடார் காலமாகி விட, இவரின் தாய் தொடர்ந்து தியேட்டரை நடத்தி வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அய்யா அவர்கள் நிர்வாகத்திற்குள் வந்து விட்டார். 

இடையில் ஒரு சொருகலாக உங்களுக்கு ஒரு செய்தி : அது என்னவென்றால் செண்ட்ரல் தியேட்டர் இருக்கிறதே கோவையில். தெரியும் தானே உங்களுக்கு? அந்த தியேட்டரை எனது நண்பரொருவருக்காக விலை பேச சென்ற போது மறைந்து போன தம்பு நாயக்கரைப் பார்த்தேன். அவர் கொடுத்த ஆவணங்களில் சரோஜா தேவியும், தம்பு நாயக்கரின் தாத்தாவும் சேர்ந்துதான் இந்த தியேட்டரை உருவாக்கினார்கள் என்ற விபரம் தெரிந்தது.

நடிகை சரோஜா தேவியின் புண்ணியத்தில் கோவை மக்கள் செண்ட்ரல் தியேட்டரில் படமும், தியேட்டருடன் இருந்த அன்னபூர்ணா கேண்டினில் வடை, காப்பியும் ரசித்து, ருசித்து புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். இந்த அன்னபூர்ணா கேண்டீனுக்கு பால் சப்ளை செய்தவர் கவுண்டர் மச்சான்.  

அம்மா இறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. அந்த நேரத்தில் தான் அவரைச் சந்தித்தேன். அய்யாவின் மகனார் குருசாமி எனக்கு நல்ல நண்பர். மிகச் சிறந்த மனிதர் அய்யாவைப் போல. தியேட்டரின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் காஃபி வந்தது. குருசாமி அவர்கள் இதுவரையிலும் பாதுகாப்பாக வைத்திருக்கும் செவர்லே காரின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டேன். 

பின்னர் நானும், மகனும் அவருடன் காஸ்மோபொலிட்டன் கிளப்புக்கு மதிய உணவுக்காக சென்றோம். மாடியில் இருக்கும் ரெஸ்டாரெண்டில் அமர்ந்து கொண்டு பல கதைகளைப் பேசினோம். மகன் ரித்திக் நந்தாவுக்கு புதுப் புது உணவுகளை தருவித்து சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்குத் தாத்தா இல்லாத குறையை அவர் அன்று நிவர்த்தி செய்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதன் முதலில் பார்த்த ஒருவர் மீது அவர் கொண்ட தூய அன்பினை எப்படி விவரிப்பது? தூய்மையான உள்ளமுடையவரே அவ்வாறு இருக்க இயலும்.

மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று பேசிக் கொண்டிருந்தேன். அவர் ட்ரீடெமெண்ட் எடுக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்லச் சொல்லி இருந்தார். மனையாளும், மகளும் மருத்துவரிடம் சென்று விட்டு, வீடு திரும்பிய வரை ஃபாலோ அப் செய்து கொண்டிருந்தார் என மனைவி சொல்லிக் கொண்டிருந்தார்.

பெரிய மனதுள்ளவர்களும், நல் இயல்பு உள்ளவர்களையும் இக்காலத்தில் பார்ப்பது அரிது. அவருக்கு முன்னால் நானெல்லாம் ஒன்றுமே இல்லை. இன்று கோவையில் ஆர்.எச்.ஆர் கொடிகட்டிப் பறக்கிறது. அவருக்கு எப்படியாவது ராயல் தியேட்டரை மீண்டும் நடத்தி விட மாட்டோமா என்ற ஆவல் இருந்தது. ஆனால் குடும்பத்தின் சூழலும், அவரின் உடல் நிலையும் அதற்கு ஒத்து வரவில்லை.

திரைப்பட விநியோகத்தில் அவர் சந்தித்த பல பிரச்சினைகள் என்னிடம் பகிர்ந்து கொண்டார். படம் எடுக்கலாம் என்ற ஆசையே போய் விட்டது. சினிமா என்பது பெரிய கடல், அதற்குள் என்னவெல்லாம் இருக்கும் எனத் தெரியவே தெரியாது. படகில் பயணிக்கலாம், தூண்டிலும் போடலாம். ஆனால் என்ன கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்பதெல்லாம் விதியின் கையிலே.

சினிமாவில் வெற்றி பெற்றவர்களை விட தோல்வி அடைந்து வாழ்க்கையை இழந்தவர்கள் கோடானு கோடி பேர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு ஏலத்துக்கு வந்த கொடுமையெல்லாம் நாம் பார்த்தோம். 

எனக்கு அவ்வப்போது தரமத்தின் மீதும், அறத்தின் மீது நம்பிக்கையற்றுப் போகும். ஆனால் இதைப் போன்ற சம்பவங்கள் எனக்கு, “ நானும் இருக்கிறேன்” என்று காட்டிக் கொண்டிருக்கும். சிவாஜி கணேசன் வீடு ஏலம் என்பதற்குப் பின்னால் ஒரு தத்துவ ஆய்வு இருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

அய்யாவை மீண்டும் சந்திக்கும் நேரம் அமைந்தது. மீட்டிங்க் முடிந்து நானும் அவரும், மகள் மகனுடன் சிங்கா நல்லூர் ஆர்.எச்.ஆர் ஹோட்டலுக்குச் சாப்பிட அழைத்துச் சென்றார். மகள் நிவேதிதாவுக்கும், மகன் ரித்திக் நந்தாவுக்கும் வழக்கம் போல வித விதமான உணவுகளைக் கொண்டு வரச் செய்து சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டினைச் சுற்றிக் காட்டி விட்டு, கையில் பல தின்பண்டங்களுடன் இருவரையும் அனுப்பி வைத்தார். 

அவரைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு மனம் அமைதியில் ஆழ்ந்து விடும். எதிர் எண்ணங்களோ அல்லது ஒரு மாதிரியான மன நிலையோ வராது. ஒரு தகப்பனார் அருகில் இருப்பது போன்று இருக்கும். எனக்கு என் தகப்பனாரின் அருகாமையும், அன்பும் கிடைக்கவே இல்லை. அதை அவரிடம் நான் கண்டேன். 

என்ன ஒரு பிரியம்? என்ன ஒரு பரிவு? என் மீதும், குழந்தைகள் மீதும்.

அவரின் அன்பு திக்குமுக்காட வைக்கும். என்னைப் பொறுத்தவரை அவர் மனித உருவில் கடவுளாக இருந்தார்.

அவரை இழந்தது என் வாழ்க்கையின் பெரும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் நிறைமனிதர், இறை மனிதர். 

அவரை என் வாழ்வில் சந்தித்த அந்த நாட்களும், அவருடனான நினைவுகளும் எனக்கு கிடைத்த வரமாகக் கருதுகிறேன்.

இனிய நண்பர் குருசாமி அவர்களுக்கும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் என் நெஞ்சுக்குள் கல்வெட்டு போல பதிந்து இருக்கிறார். அவரின் நினைவாக கருடன் படத்தை எனது டிபி போட்டோவாக வைத்திருக்கிறேன். அவர் என்னிடம் கருடன் பற்றிய பல ரகசியங்களைச் சொல்லி இருக்கிறார்.


Wednesday, March 19, 2025

வீட்டுக்கு வந்த ரவுடிகள் - புதிய சட்ட நிறுவனம் துவக்கம்

சமீபத்தில் ஒரு நாள், காலை நேரம் ஒரு கார் வீட்டுக்கு முன் வந்து நின்றது. அதிலிருந்து மூன்று பேர் இறங்கினார்கள். வீட்டுக்குள் வந்தனர். 

என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டவுடன், ஃபைனான்ஸ் தொடர்பாக பேச வேண்டும். அதற்காக வந்திருக்கிறோம் என்றனர்.

ஒரு கார்டைக் கொடுத்து, இந்த நம்பருக்கு அழைத்துப் பேசுங்கள் என்றார்கள். அதில் ஒருவன் ஷோபாவில் படுத்துக் கிடந்தான். இன்னொருவன் தாடியுடன் முறைத்துக் கொண்டிருந்தான். மற்றொருவன் கையில் போனைக் கொடுத்து, அவன் போனில் இருந்து பேசச் சொன்னான்.

நானே பேசிக் கொள்கிறேன் என்று சொல்லி - அந்தக் கார்டில் இருக்கும் போனுக்கு அழைத்தேன். அப்போதுதான் தெரிந்தது அவர்கள் என்னை மிரட்டி, அழைத்துக் கொண்டு போக வந்தது.

ஒரு கிளையண்டுக்கு - ரெவின்யூ ஆவணங்களை எடுத்துக் கொடுத்த வகையில் - கிளையண்டுடன் உண்டான பிரச்சினையில் கிளையண்டின் எதிரியின் சார்பாக, நான் தான் அவருக்கு எல்லா உதவியும் செய்கிறேன் எனக் கருதிக் கொண்டு வந்திருக்கின்றனர். 

அதன் பிறகு அடியேனைப்  பற்றித் தெரிந்தவுடன் வெளியேறி விட்டனர். அதுமட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து என் மீது பல புகார்களைக் கொடுத்தனர். அதையெல்லாம் சட்டப்படி எதிர் கொண்டேன் என்றாலும் இனிமேல் வாளாயிருந்தால் நன்றாக இருக்காது என முடிவு செய்து கொண்டேன். 

நேர்மையாக இருப்பதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டிய சூழல் இந்தியாவில் உருவாகி இருக்கிறது. நேர்மையற்றவர்களால் நியாயப்படுத்தப்படும் பொய்களை உடைத்து, சிதறடித்து வெற்றி பெற பெரும் போராட்டங்களை செய்ய வேண்டிய நிலையில் இந்தியா திகழ்கிறது. 

சட்டம் எல்லோருக்கும் சமமானது என்ற பொய்யை நான் இந்தச் சம்பவத்தின் மூலமாக கிடைத்த அனுபவத்தினால் கற்றுக் கொண்டேன். 

வக்கீல்கள் என்றால் என்ன? கோர்ட்டுகள் என்றால் என்ன? காவல்துறை என்றால் என்ன? அரசியல்வாதிகள் என்றால் என்ன? இப்படி பல என்ன என்ன ஆகியவற்றுக்கான பதிலை நன்கு தெரிந்து கொண்டேன். 

இப்போது சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கனடா ஆகிய இடங்களில் எங்களது சட்ட ஆலோசனை நிறுவனத்தை துவக்கி இருக்கிறோம். அடியேன் நிறுவனத்தின் அட்வைசரி கவுன்சில் உறுப்பினராக இருக்கிறேன்.

CIVIL CASES, CRIMINAL CASES, LITIGATION DISPUTES, CORPORATE LAW, EMPLOYMENT LABOUR LAW, INTELLECTUAL PROPERTY RIGHTS (IPR), PRIVACY DATA PROTECTION, CYBER CRIME & CYBER LAW, PROPERTY DISPUTES, CONSUMER PROTECTION, DRT CASES, DRAT CASES, NCLT CASES, NCLAT CASED, PIL CASE 

மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளின் படியான வழக்குகளை எமது நிறுவனம் கையாளும். மிகச் சிறந்த, திறமையானவர்களுடன் இணைந்து நிறுவனம் மக்களுக்குச் சேவை செய்து கொண்டிருக்கிறது.

உங்களுக்கு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, என்னைத் தொடர்பு கொள்ளவும். எமது நிறுவனத்தின் மூலமாக தேவையான அத்தனை சட்ட ஆலோசனைகளும், உதவியும் கிடைக்கும்.

Sunday, March 16, 2025

ஹிந்தி இப்போது சமஸ்கிருதம் எப்போதும்

இந்தக் கட்டுரையை எழுதியது முன்னால் காவல்துறை அதிகாரி. அதிகார மட்டத்தில் ஒரு சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவார்கள் என்று அவருக்கு நன்கு தெரிந்திருக்கும் என்பதால் இப்பதிவினை இங்கு பதிப்பிக்கிறேன். நன்றி ஆசிரியருக்கு.

 "ஹிந்தி இப்போது சமஸ்கிருதம் எப்போதும்" -இதுதான் இந்திய தேசிய கல்விக் கொள்கை: 

ஒன்றிய கல்வி அமைச்சர் மிகத் திறமையாக மொழிக் கொள்கையை சில புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு தம்மையும் குழப்பி மற்றவர்களையும் உண்மையான தேவையான மொழி கொள்கையிலிருந்து திசை திருப்ப முனைகிறார் என்பதே அவரது பாராளுமன்ற பேச்சு நமக்கு உணர்த்துகிறது. 

ஆனால், உண்மைகளை தமக்கு தகுந்தபடி வளைத்தும் நெளித்தும் பேசுவதில் ஆர் எஸ் எஸ் பயிற்சி பெற்றவர்கள் திறமையானவர்கள் என்பது நாடு அறிந்ததே. 

மொழிக் கொள்கை: 

இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில் மொழிக் கொள்கையை மூன்று வகையாகப் பிரித்து பார்க்க வேண்டும். 

1. ஒன்று பயிற்சி மொழி (medium of instruction).

2. மற்றொன்று ஆட்சி மொழி (official language).

3. இன்னொன்று தொடர்பு மொழி (link language). 

பயிற்சி மொழி (medium of instruction): 

பயிற்சி மொழி தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் என்பது உலகமே ஒத்துக் கொண்ட பயன் தரக்கூடிய உண்மை. ஏனெனில் தாய்மொழிக் கல்வியே சுய சிந்தனையை வளர்த்து அவர்களுடைய அடிப்படையான ஆற்றலை வெளி கொணரப் பயன்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. 

அப்படித்தான் ஜப்பானும் சைனாவும் மற்ற சில நாடுகளும் இன்று விஞ்ஞான வளர்ச்சியில் தாய்மொழி கல்வியால் உயர்ந்து நிற்கின்றன.

புதிய தேசிய கல்விக் கொள்கை "பள்ளி கல்லூரிகள் அனைத்திலும் ஒவ்வொரு மாநிலமும் மேல்படிப்பு வரை அவர்களின் தாய் மொழியைத்தான் பயிற்சி மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று சொல்லவில்லை. அப்படி கூறியிருந்தால் வரவேற்று பாராட்டி ஏற்றுக்கொள்ளலாம். 

ஏனெனில் மேல்படிப்பு வரை அவரவர் தாய் மொழியிலேயே எல்லோரும் கற்கு மிடத்து வேலைகள் அனைத்தும் அவர்களை விட்டு வெளியில் போகவோ மற்ற மொழி படித்து அவற்றை பிடுங்கவோ வாய்ப்பு இல்லை.

மாறாக "ஐந்தாவது அல்லது எட்டாவது வரை தாய் மொழியில் படித்தால் போதும்" என்று சொல்லுவது அம்மொழியை மறக்காமல் இருப்பதற்கு பயன்படுமே தவிர கல்வியை தாய்மொழியில் கற்று தமது அடிப்படை சிந்தனையை வளர்த்து மேம்படுவதற்கு உரியதாகாது; அம்மொழியை ஆதிக்க மொழியிலிருந்து காப்பாற்றவும் உதவாது.

ஆகவே மொழி பற்றிய இத்தேசிய கொள்கை ஆர் எஸ் எஸ் கண்டுபிடித்த ஒரு ஏமாற்று வித்தை.

அடுத்து ஆட்சி மொழி (official language): 

பல மொழிகள் கொண்ட குறிப்பாக 22 மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்த அரசியல் சட்டத்தை கொண்ட இந்தியாவில் எம் மொழியை ஆட்சி மொழியாக்குவது என்பது பற்றியது. 

விஞ்ஞானம் எல்லா மொழிகளையும் அவரவர் விரும்புகின்ற மொழியில் மொழி பெயர்த்து கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விட்ட பிறகு சில நாடுகளில் உள்ளது போல் அனைத்து தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக்கினால் அது "பாரபட்சமற்ற, ஒரு மொழி ஆதிக்க மற்ற" தன்மையை ஏற்படுத்தி எல்லா மொழி பேசுபவர்களையும் சமமாக நடத்தும் நிலைக்கு கொண்டு செல்லும். 

அல்லது, "எல்லா மொழி பேசும் மக்களுக்கும் பொதுவாகவும் எல்லோருக்கும் உலகளாகப் பயன்படும் மொழியாகவும் இந்திய மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக அறிமுகமாகியுள்ள ஆங்கிலத்தை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி யாக்கினால் அது மொழியால் பாரபட்சம் காட்டாமல் எல்லோரையும் சமமாக நடத்துகின்ற ஒரு நிலையை ஏற்படுத்தும்".

பழமொழிகள் பேசும் இந்திய மக்களை ஒன்று படுத்துவதற்கும் உலகளாவிய பலன்களை பெறுவதற்கும் ஆங்கில மொழி வழி வகுக்கும். 

நடைமுறையில் இன்று இந்தியாவில் அதுதான் உள்ளது.

ஆனால், இந்தி, சமஸ்கிருத ஆதிக்க சக்திகளால் அவ் சமநிலையைப் பங்கப்படுத்தி "22 தேசிய மொழிகளை கொண்ட இந்தியாவில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி" என்று சட்டம் செய்து கொண்டு காலப்போக்கில் அவ் 'ஒற்றை மொழி' ஆதிக்கத்தை இந்தியா முழுதும் ஏற்படுத்துவதே இத்தேசிய கல்வி கொள்கை நமக்கு காட்டும் வழி.

பிறகு தருணம் பார்த்து "சமஸ்கிருதத்தை அந்த இடத்திற்கு கொண்டு வந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை சாதிகளாக பிரித்து படிப்பை மறுத்து சொல்லணாத் துயரங்களுக்கு ஆளாக்கி வதைத்த "சனாதன மனு சாஸ்திர' ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது" என்று திட்டமிடும் ஆர்எஸ்எஸ்ஸின் நச்சு எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 

மோடி அவர்கள் 2014 இல் ஆட்சிக்கு வந்த பிறகு ஓசை இன்றி சைனாவுடன் ஒரு கலாச்சார ஒப்பந்தம் இந்தியா போட்டுள்ளது. அதில் "சைனாவின் மேன்றி கலாச்சாரமும் இந்தியாவின் சமஸ்கிருத கலாச்சாரமும்" ஒப்பந்தம் போடுவதாக கூறப்பட்டுள்ளது.

இப்படித்தான் ஆர் எஸ் எஸ் ஓசையின்றி ரகசியமாக இந்தியா என்றால் அது சமஸ்கிருத கலாச்சார நாடுதான் என்று உலகத்துக்கு பறைசாற்றி வருகிறது. 

என்ன காரணமோ இவ் ஒப்பந்தம் பாரத மாதாவின் பிள்ளைகளாகிய ஊடகங்களை உறுத்தவில்லை, எதிர்க்கட்சிகளையும் எட்டவில்லை.

(சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றால் இறந்து போன அம்மொழிக்கு 1200 கோடி அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லையே.)

நம் கண் முன்னால் நடந்த உண்மை என்ன? ஏற்கனவே உத்திரபிரதேசம் உட்பட வடமாநிலங்களில் இருந்து வந்த தாய் மொழிகளை அழித்து இந்தி ஆதிக்கம் செலுத்தி வருகிறதே. அதே போல் தமிழ் உட்பட மற்ற மொழிகளையும் காலப்போக்கில் காணாமல் போகச் செய்து நமது கலாச்சாரம் பண்பாடு அனைத்தையும் அழித்து சமஸ்கிருத ஒற்றை மொழி ஆட்சியை நிறுவி விடுவார்கள்தானே.

ஆகவேதான் தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் ஹிந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தை எதிர்த்து களத்தில் நிற்கின்றது.

அடுத்து தொடர்பு மொழி (link language): 

நமது நாடு மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரு மாநிலம் தமது அண்டை மாநிலங்களோடு தொடர்பு கொள்வதற்கு அண்டை மாநில மொழிகளை கற்றுக் கொண்டால் அவர்களுக்குள் நெருக்கமான உறவை ஏற்படுத்தும். அப்படித்தான் ஒவ்வொரு மாநிலத்தின் எல்லை பகுதியிலே இருப்பவர்கள் 'இவர் அவர் மொழியையும் அவர் இவர் மொழியையும்' கற்று பேசி மகிழ்ந்து வருகிறார் கள்.

காலப்போக்கில் "தாய்மொழிக் கல்வியும் ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்றலும்" இந்திய மக்களிடையே பாரபட்சமற்ற ஏற்றத்தாழ்வற்ற ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி உலக அரங்கில் தாய்மொழி கல்வியால் பல விஞ்ஞானிகளை உருவாக்கி இந்தியா உன்னதமான இடத்தை பெறும் என்பதில் ஐயமில்லை. அதேபோல் மாநிலங்களுக்கு இடையிலும் ஒன்றிய அரசோடும் தொடர்பு மொழியாகவும் ஆங்கிலம் நமக்கு பணி புரியும்.

இவ்வாறு "இந்தியாவின் மொழிக் கொள்கையை" கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கொண்டு வரவில்லை. மாறாக"இந்தி இப்போது சமஸ்கிருதம் எப்போதும்" என்ற நச்சு எண்ணத்தில் வகுக்கப்பட்டது தான் இந்திய தேசிய கல்விக் கொள்கை.

ஆகவே ஒன்றிய கல்வி அமைச்சர் பாராளுமன்றத் தேர்தல் சில புள்ளி விவரங்களை காட்டி விளையாடும் விளையாட்டு கஸ்தூரிரங்கன் குழு கொடுத்த நச்சுக் கொள்கையை அமல்படுத்த செய்கின்ற சூழ்ச்சியேயாகும்.

தமிழக அரசின் கொள்கை "தமிழில் படிக்காமல் ஆங்கிலத்தில் படிப்பதை ஊக்குவிப்பது அல்ல. மாறாக தாய்மொழி தமிழில் எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்பதும் ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் மட்டுமே இருக்க வேண்டுமென்பதே".

ஆனால் அதற்கு இத்தேசியக் கல்வி கொள்கை வழி வகுக்க வில்லை.

இப்பதிவில் யாருக்கும் ஐயம் இருந்தால் அதற்கு பதில் சொல்ல தயாராக உள்ளேன். 

இப்பதிவில் கூறப்பட்டுள்ளது தான் இந்தியாவிற்கு உகந்த "மொழிக் கொள்கை" என்று ஏற்றுக்கொண்டால் உங்கள் அனைத்து தொடர்புகளுக்கும் இதை அனுப்பி வைக்கவும். 

எஸ். இராமநாதன், ஐபிஎஸ், ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் இயக்குனர்.  

(S. Ramanathan, IPS, ADGP, Rtd.)

15-03-2025.