கடந்த வாரம் பிக்பாஸில் காயத்ரியை எளிமையான கேள்வி கேட்டு அவர் எலிமினேசனில் இருந்து காப்பாற்றபடுகிறார் என்று அறிவித்தார்கள். உலகமே பார்க்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பங்கெடுக்க வைக்கும் அற்புதமான நிகழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பார்வையாளர்களையும் பங்கேற்க வைத்து தர்ம நியாயத்தை வளர்க்கும் அற்புதமான நிகழ்ச்சி அது என்றும் நம்பிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் தினமும் காலையில் நெட்டில் ஓட்டும் போட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால் அவை அனைத்தையும் யாரோ ஒருவருக்காக பல கோடி மக்களின் முகத்தில் கரியைப் பூசிய விஜய் டிவியும், அதற்கு ஒத்து ஊதிய கமலையும் நினைத்தாலே அறத்தின் சீற்றம் பெருமூச்சாய் எழுகிறது. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனம் தான் முன்னே நின்றது. எவ்வளவு பைத்தியக்காரர்களாக நாம் இருக்கிறோம் என்பதற்கு கமலும், விஜய் டிவியும் சேர்ந்து நமக்கு உணர்த்தின. அவர்கள் தாங்கள் விரும்பியதை நாம் விரும்பியதாக எவ்வளவு சாதுரியமாக மாற்றுகின்ற மாயாஜாலத்தில் நமக்குள் இருக்கும் அறத்தினை, தர்மத்தினை அழிக்க முனைந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
பதினைந்து பேரில் அகங்காரம், ஆணவம், சிண்டு முடிதல், புறம் பேசுதல், புரணி பேசுதல், ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி பிறரை அசிங்கப்படுத்துதல் என அத்தனை அயோக்கியத்தனத்தினையும் செய்து வரும் ஒருவரை உலகமே வெளியேற்று என்றது. ஆனால் அதை மறுத்து ஓட்டளித்தவர்களின் அறத்தின் மீது உமிழ்ந்து, உங்கள் அறம் ஒன்றும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனச் சொல்லிக் காப்பாற்றுகின்றார்கள். கமல் அதற்கு ஸ்ரீபிரியாவை வைத்து சாதுரியமாக காய் நகர்த்தியதைக் கண்டதும் நாமெல்லாம் கேனயர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை அறிய முடிந்தது. யூடியூப்பில் கமெண்ட் போட்டு ஆத்திரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். வேறு என்ன செய்ய முடியும்? ஒருவராலும் ஒரு ’ஹேரையும்’ புடுங்க முடியாது. அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதைச் செய்வார்கள். அதை நாமெல்லாம் வேடிக்கை தான் பார்க்க முடியும்.
இது ஒன்றும் நமக்கு பெரிய விஷயம் இல்லைதான். ஏற்கனவே நம்பி நம்பி ஓட்டுப் போட்டு செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவர்கள் தான் நாம். இருந்தாலும் சினிமாவில் அறத்தைப் பற்றிப் பேசி வரும் கமல் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையை, அவ்வாறு நினைக்காதீர்கள், நானும் இப்படித்தான் என்று உடைத்தார். என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார் அவர்.
பின்னர் ஏன் தமிழக அரசியல் பற்றி கமெண்டுகளை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வாறு எழுதுவதற்கு தனக்கு தகுதி இருப்பதாக அவர் நினைக்கிறார் என்பது புரிந்தாலும் கமலுக்கு தமிழக அரசியல் பற்றிய அறச்சீற்றம் எழுவது போல விஜய் டிவியைப் பார்த்து, அதில் பங்களித்தவர்களுக்கும் இருக்கும் அல்லவா? அதை அவர்கள் எளிதாக புறம் தள்ளி ஒதுக்கி விட்டார்கள். மீண்டும் ஒரு நம்பிக்கைத் துரோகம். அதற்கு துணை போனவர் கமல்ஹாசன். தமிழக அரசியலுக்கு வாருங்கள் கமல். உங்களை வச்சு செய்வார்கள் நம் மக்கள் என்று நினைக்கிறேன்.
தவறு செய்தால் அது தவறுதான். அதற்கு எந்த வித சப்பைக்கட்டு கட்டினாலும் தவறு நியாயமாகி விடுமா கமல் அவர்களே? கம்பெனி ரூல், சுவாரசியம் ஆகிய இன்னபிற காரணங்களை அடுக்கினாலும் தவறு செய்தீர்கள், உங்களை நம்பி நியாயமாக இருந்தவர்களை ஏமாற்றி இருக்கின்றீர்கள் என்பதுதானே உண்மை.
தர்மம், நியாயம், நல்லவர்கள் இவர்களைப் பற்றிப் பேச இனி விஜய் டிவிக்கு என்ன அருகதை இருக்க முடியும்? கமல்ஹாசனுக்கும் அந்த கோடு இல்லை என்பதும் உண்மைதானே?
கமல்ஹாசனுக்கும் விஜய் டிவிக்கும் ஒரு திருக்குறளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
ஒருவனுக்குச் செய்யும் நன்மை இதுகாறும் கமல் காத்து வந்த அறத்தினை அழித்து விட்டது. நீயா நானா? நடத்தும் விஜய் டிவியின் அறக்கோடும் அழிந்து போனது.
கமல்ஹாசனுக்கு மட்டும் கீழே இருக்கும் திருக்குறள் சமர்ப்பணம்.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
இங்கு பயன் தூக்கார் என்பது தமிழக மக்கள் என்று அர்த்தம் கொள்க. அவர்களுக்கு கமல் செய்தது என்ன? என்று அவரே நினைத்துப் பார்த்துக் கொள்ளட்டும்.
இருப்பினும் கமலின் தர்மம் மறுத்துப்பேசும் சாதுர்யமும், பிக் பாஸிடம் காயை நகர்த்தும் “அவா” புத்தித்தந்திரமும், காயத்ரியின் மீது கொண்டுள்ள ”அவா” பாசத்தின் காரணமும் அசத்தல் தான்.