டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரையைப் படித்தேன். நண்பர்களுக்கு உடனடியாக தெரிவித்து விட வேண்டும் என்ற ஆவலில் இந்தப் பதிவு.
விட்டமின் டி நம் உடலுக்குத் தேவையான ஒரு சத்து, இந்தச் சத்து கால்சியம் சம்பந்தமான பொருட்களை ஜீரணிக்கவும், அதை வெளியேற்றவும், எலும்புகளுக்கு உறுதியைத் தரவும் உதவுகின்றது. 60 பர்சண்டேஜிலிருந்து 90 பர்செண்டேஜ் இந்தியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் விட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விட்டமின் டியை பால் மற்றும் உணவு எண்ணெயில் சேர்த்தல் நலம் பயக்கும் என்பதாகும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
பால், எண்ணெய் பொருட்கள் மனிதனுக்கு கொழுப்பை உருவாக்கும் என்பதாலும், விட்டமின் டி மாத்திரைகள் அவ்வளவு நல்ல பலனை தராது என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விட்டமின் டியைப் பெறுவதே சாலச் சிறந்தது என்கிறார்கள்.
மனித உடலின் இருபது சதவீத பகுதியை வாரத்தில் இரண்டு முறை பதினைந்து நிமிடம் வெயிலில் காட்டினால் நம் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைத்து விடும். சூரிய ஒளியில் நீச்சலடிப்பது, சூரிய ஒளியில் விளையாடுவது போன்றவையும் விட்டமின் டி உடலில் சேர உதவும். இந்த விட்டமின் டி பற்றாக்குறையால் " Cardio Vascular Disease, Rickets and Osteoporosis" நோய்கள் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.
பானிபூரி சாப்பிடுவோரே ஜாக்கிரதை என்கிற பதிவின் பின்னூட்டத்தில் இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நண்பர்கள் கேட்டிருந்தார்கள். இதோ சில விபரங்கள்.
பானி தண்ணீரில் புளிப்புச் சுவைக்காக சாட் மசாலாவுடன், மோனோ சோடியம் குளுடோ மேட் என்கிற கெமிக்கல்ஸ் சேர்த்து அதிகப் புளிப்புத் தன்மையை ஏற்றுகிறார்கள். அத்துடன் ரசாயனச் சாயங்களும் கலக்கப்படுகின்றனவாம். இந்தக் கலவையை இரண்டு நாட்களுக்கும் மேல் ஊற வைத்து, அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து விற்பனைக்கு கொண்டு வருகின்றார்கள். அதீத புளிப்புச் சுவை கொண்ட இந்த வகை பானி, அல்சரை உருவாக்கும். அல்சர் இருப்பவர்கள் தொடவே கூடாது. அதுமட்டுமல்ல இப்பானியைச் சாப்பிட்டால் உடனடி வயிற்று வலியுடன், நாள்பட பசியும் அறவே குறைந்து போய் விடும். சாலையோரங்களில் விற்கப்படும் இவ்வகை இன்ஸ்டண்ட் உணவு வகைகள் தயாரிப்பாளர்கள் சாப்பிடும் நபர்களின் ஆரோக்கியத்தை ஒரு கணம் கூட எண்ணிப் பார்ப்பதே இல்லை.
எனது ஆரம்ப காலங்களில் நான் பெரும்பாலும் சற்றே சுத்தமான இடங்களில் இருக்கும் சாலையோரக் கடைகளில் எப்போதாவது சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை மனைவி வெளியூர் சென்றிருந்த சமயம், குழந்தைகளுடன் எனக்கு நன்கு அறிமுகமான நண்பரொருவரின் சாலையோரக்கடையில் ஆளுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு வந்தோம். அதன் பலனாய் மூவருக்கும் வாய்ப்புண் உண்டாகி, தொண்டையில் அழற்சி ஏற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது.
விசாரித்துப் பார்த்தால் இட்லி மாவில் புளிப்புச் சுவைக்காக சோடியம் தண்ணீர் கலப்பதாக அறிந்தேன். ஒரு வாளியில் தண்ணீர் போன்ற ஒன்றினைக் கொண்டு வந்து அளவாக கலந்து இட்லி தோசை மாவுகள் விற்பனையாளர்கள் விற்கின்றார்கள்.அதுமட்டுமல்ல சில ஹோட்டல்களில் விற்கும் மீன் குழம்பில் இதே சோடியம் கலந்த தண்ணீர் கலக்கப்பட்டு வருகின்றனவாம்.
காசு போனாலும் பரவாயில்லை என்று உயர்தரமான ஹோட்டல்களில் தயிர்சாதம், கொஞ்சம் காய்கறிகள் சாப்பிடுவதே சாலச் சிறந்தது என்கிறார் எனது நண்பரொருவர். இன்னொரு நண்பரோ பேசாமல் பழக்கடையை நோக்கிச் சென்று விடலாம் என்றார். ஆனால் பழங்கள் உடலுக்கு நன்மையைத் தருகிறதா என்று கேட்டால் மருத்துவ நண்பரொருவர் சொன்ன சில விபரங்கள் அதிர்ச்சி அளிப்பனவாக இருந்தன. அது என்ன? விரைவில்
ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்