குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, March 10, 2021

தேர்தல் கமிஷனின் ஜனநாயக தேசதுரோக 2021 தேர்தல் - ஜிமோடி வெர்ஷன்

தேர்தல் வந்து விட்டது. தேர்தல் கமிஷன் நாடகம் நடத்துகிறது. எல்லோருக்கும் தெரியும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என. பெரும்பாலானோர் பணம் வாங்குவதும் தெரியும் தேர்தல் கமிஷனுக்கு. ஆனாலும் தேர்தல் நடத்தப்படுகிறது.

பணம் கொடுக்கப்பட்டது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சட்டம் என்ன செய்து கிழித்தது?

இங்கு யாருக்கும் வெட்கமில்லை. 

இந்திய அரசிலமைப்புச் சட்டம் கேலிக்குட்படுத்தப்படுவதை எல்லோரும் வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொண்டிருக்கிறோம்.

என்ன செய்ய முடியும் நம்மால்? வேடிக்கை...வேடிக்கை. வேடிக்கை பார்ப்பதை தவிர?

காவல்துறை காவல் காக்கிறது. பணம் யாரும் எடுத்துப் போக கூடாது என. ஆளும்கட்சி ஆட்களை காவல்துறை என்ன செய்து விட முடியும்?

தேர்தல் கமிஷனின் மற்றுமோர் தேசதுரோகம் (ஆம் தேச துரோகம் என்றுதான் சொல்கிறேன்) தமிழகத்தில் நடத்தப்படும் 2021 தேர்தல்.

எப்படி என்று பார்க்கலாமா?


மேலே இருக்கும் தேர்தல் கமிஷன் அறிவிப்பினைப் பாருங்கள். தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் தேதி 19.03.2021. விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் நாள் 22.03.2021ம் தேதி. 

விண்ணப்பம் ஏற்கப்படுகிறதா இல்லையா என்பது 22ம் தேதிதான் தெரியும். அதாவது போட்டியிடுகிறோமா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள தேர்தலுக்கு 14 நாட்களுக்கு முன்புதான் தெரிய வரும்.

இந்த பதினான்கு நாட்களுக்குள் சுயேச்சையாக ஒருத்தர் போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் எப்படி தொகுதி முழுக்கவும் பிரச்சாரம் செய்ய முடியும்?

பெரிய கட்சிகளுக்கு சின்னம் பேசும். கட்சி ஆட்கள் கார்களில் சுற்றி வந்து விடுவார்கள். அவர்களுக்கான கட்டமைப்பு இருக்கிறது. எளிதில் போஸ்டர் ஒட்டுவதிலிருந்து எல்லா பிரச்சாரத்தையும் செய்து விடுவார்கள். 

ஆனால் ஒரு சுயேச்சையினால் அது முடியுமா? பதினைந்து தெருக்கள் பிரச்சாரம் செய்யவே பத்து நாட்கள் ஆகி விடும். இதர பகுதிகளுக்கு எங்கனம் செல்ல இயலும்? இது கொடுமை அல்லவா? வாய்ப்பு கொடுக்காமல் ஏன் இத்தனை குறுகிய காலத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும்? என்ன அவசரம் வந்து விட்டது? ஓட்டு எண்ணுவதற்கு ஏன் 30 நாட்கள்?

இதுதான் தேர்தல் கமிஷன் செய்திருக்கும் ஜன நாயக தேசத்துரோகம். தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகமே அழிக்கப்பட வேண்டும் என்றான் ஒருவன். 

வெட்கமாயில்லையா தேர்தல் கமிஷனுக்கு?

தனியொருவன் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவும், சிறிய கட்சிகளை அழித்திடவும் ஆளும் பாஜகவினரால் மிக மிகத் தந்திரமாக மோசடி செய்யப்பட்டு இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. 

அதை தேர்தல் கமிஷன் கொஞ்சம் கூட யோசிக்காமல், ஏற்றுக்கொண்டு சுதந்திரத்தும், இந்திய இறையாண்மைக்கும், ஜன நாயகத்திற்கும், இந்திய மக்களுக்கும் துரோகத்தினையும் அக்கிரமத்தினையும் செய்துள்ளது.

இதைப் பற்றி எவரும் இங்கு பேசியதாக தெரியவில்லை. வெட்கமில்லாதவர்கள், அறமற்றவர்கள், தீங்கிழைப்பவர்களால் இதைப் பற்றி யோசிக்க கூட முடியாது.

ஆனால் இவர்கள் தான் ஆன்மீகம் பேசுகிறார்கள். மதம் பேசுகிறார்கள். தர்மம் அறம் பற்றி மேடைகளில் கத்துகிறார்கள்.

இங்கு இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரின் அதர்மங்களை நாம் அறிவோம். ஆனாலும் யாரோ ஒருவருக்கு ஓட்டுப் போடுவோம். இவ்வுலகிற்கு தீங்கு செய்வதில் மனிதர்களுக்கு நிகர் எவருமுண்டா என்று யோசித்துப் பாருங்கள்.

எங்கே சென்றது நல் எண்ணங்கள்? எங்கே போனது அறம்? எங்கே போனது தர்மம்? ஏன் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்? ஒளிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை சுகமாகி விடுமா?

வாழும் நாட்களில் நாம் வாழும் பூமிக்கும், சமுதாயத்துக்கும் நன்மை செய்யக்கூடாதா? கொஞ்சம் கூட அறச்சிந்தனை அற்றவர்களாக மாறிப் போனீர்களே ஏன்? யோசித்துப் பாருங்கள்.

துன்பம், துயரம், கஷ்டம் என்று கதறிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் அதர்மங்களை மனம் கூசாமல் செய்பவர்களுக்கு கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உனக்கு வரும் நல்லது கெட்டது எல்லாமே உன்னால் தான் என்பதை நீ அறியும் போது வாழ்வின் கடைசி நிலையில் இருப்பாய் என்பார்கள். 

இதோ தமிழ் நாட்டில் ஓட்டே போடாத ஒருவர் முதலமைச்சர் ஆனார். வேடிக்கை பார்த்தோம். ஐந்து லட்சம் கோடி கடன் வைத்தார் வேடிக்கை பார்த்தோம். மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை எட்டாமல் ஆக்கினார். வேடிக்கை பார்த்தோம். மின்சாரத்துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் என்கிறது சிஏஜி. வேடிக்கை பார்த்தோம். சாலைகளில் ஊழல், பாலங்களில் ஊழல், ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை பராமரிப்பு மூன்று கோடி என ஊழல். முட்டையில் ஊழல், ரெவின்யூ துறையில் தொட்டதற்கெல்லாம் ஊழல். எல்லாவற்றையும் வேடிக்கைதான் பார்க்கிறோம். இனியும் என்ன ஆகப்போகிறது? மீண்டும் வேடிக்கை பார்ப்போம்.

இந்த 2021 தேர்தல் தேசத்துரோக தேர்தல் என்றுதான் அழைக்கப்பட வேண்டும். தேர்தல் கமிஷன் யாரோ ஒரு கட்சிக்கு அடிபணிந்து இந்திய மக்களுக்கு தேசத்துரோகம் செய்திருக்கிறது என்பது உண்மை.

குறிப்பு : கடந்த தேர்தலில் அடியேன் சுயேச்சை ஒருவருக்கு ஓட்டுப் போட்டேன். அந்த ஓட்டு பதிவாகவே இல்லை. விவிபாட் ஒப்புகை சீட்டு கூட பரிசீலிக்கப்படாது என்கிற போது ஓட்டுப் போடுவதால் என்ன பயன் என்று தெரியவில்லை. ஓட்டு மெஷின் நம்பிக்கையற்றவை.

மேலும் ஒரு உபகுறிப்பு: ஜோதிடம் என்பது மோசடி பொய் என்பதற்கான ஆதாரத்துடன் அடுத்த கட்டுரை வரும். அதிரப்போகின்றீர்கள்.

Monday, March 1, 2021

நிலம் (77) - சென்னை செங்கல்பட்டு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்ட கிராமங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய தமிழ் திசை தினசரியில் வெளியான செய்தியைப் பற்றிய விழிப்புணர்வு பதிவு இது.

1990களில் கல்பாக்கம் அணுமின் நிலைய பயன்பாட்டுக்கு நிலமெடுப்பு நடத்தப்பட்டன. அவை எந்தெந்த கிராமங்களில் என்னென்ன சர்வே எண்களில் எடுக்கப்பட்டன என்ற விபரங்கள் என்னிடம் இருக்கிறது. 

அந்த சர்வே எண்களின் அருகிலோ அல்லது அந்த ரெவின்யூ கிராமங்களில் குறிப்பிட்ட ஒரு சில தூரங்களில் உள்ள இடங்களை வாங்குவதற்கோ அல்லது கட்டிடம் கட்டுவதற்கோ கல்பாக்கம் அணு மின் நிலையத்திடமிருந்து தடையில்லாச் சான்று பெறப்பட வேண்டும்.

சமீபத்தில் அனுமதி பெறாத மனைப்பிரிவு அனுமதிக்காக அரசு தனிப்பட்ட வகையில் அரசாணை வெளியிட்டு மனைப்பிரிவுகள் வரன்முறை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் அருகில் இருக்கும் பல ரெவின்யூ கிராமங்களில் உருவாக்கப்பட்ட அனுமதி பெறாத வீட்டுமனைகளை ஆன்லைனில் பணம் கட்டிய பிறகு, அனுமதிக்காக டிடிசிபி அலுவலகத்தை மக்கள் அணுகிய போது, டிடிசிபி அலுவலர் கல்பாக்கம் அணு மின் நிலையத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வரும்படி கேட்டுக் கொண்டார்கள்.

அவ்வாறு தடையின்மைச் சான்றுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் அச்சான்றினைப் பெற முடியவில்லை. தடையின்மைச் சான்றிதழ் பெற பல்வேறு வரன்முறைகள் பின்பற்ற பட வேண்டும். ஆகையால் உடனடியாக வழங்க மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல அணுமின் உலையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு கதிர்வீச்சு அபாயம் உண்டானால், அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற பெரும் சிரமம் உண்டாகும் என்பதால், கல்பாக்கம் அணுமின் உலை அருகில் இருக்கும் ஒரு சில கிராமங்களில் பத்திரங்கள் பதிவு செய்வதை அரசு தடை செய்திருக்கிறது. ஆகவே இப்பகுதியில் நிலங்கள் வாங்க வேண்டாமென்று நம் பிளாக்கின் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இப்பதிவினை எழுதி இருக்கிறேன்.



அணுமின் நிலையம் அருகில் இருக்கும் கிராமங்களும் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்ட விபரமும் கீழே

மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், கல்பாக்கம், மணமை, குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமைப்பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம்

மேற்கண்ட கிராமங்களில் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல, உங்களுக்கு இன்னும் ஒரு சில கூடுதல் செய்திகள் இங்கே.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பில்டிங்க மதீப்பீட்டுத் தொகை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. வீடுகள் வாங்கும்ப் போது அதற்கான முத்திரைத் தொகை செலுத்தப்பட வேண்டும். ஆகவே தனிப்பட்ட முறையில் வீடுகளோ அல்லது வணிகக்கட்டிடங்களோ வாங்கும் போது அதற்கான சரியான மதிப்பீட்டுத் தொகையினைக் கணக்கீடு செய்து அதற்கான முத்திரைத் தீர்வினைக் கட்டி விடுங்கள்.

கொரானா காலத்தில் தொழில் முடக்கம், சம்பளக் குறைப்பு ஆகியவற்றால் அவதியுற்று கடன் கட்ட வழியில்லாமல், செலவு மட்டும் அதிகரிக்கும் நிலையில் ஆளும் அதிமுக அரசும், பிஜேபி அரசும் வரிகளாக விதித்து மக்களின் இரத்தம் உறிஞ்சுகின்றன.

வாங்கும் திறன் குறைந்திருக்கும் போது, பொருட்களின் விலை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. வெங்காயத்தின் விலையும், பருப்பின் விலையும் உயர்ந்தது இன்னும் குறையவே இல்லை. ஆனால் மக்களின் வருமானம் மட்டும் குறைந்து விட்டது.

இது என்ன மாதிரியான ஆட்சி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

வரி, வரி, வரி இதை மட்டும் தான் இன்றைக்கும் பிஜேபி அரசு செய்து வருகிறது. டோல்கேட்டில் ஒரு நாள் வசூல் 100 கோடிக்கும் மேல். பின் ஏன் சாலை வரி எனக் கேட்டால் பதில் சொல்வார் யாருமில்லை. 

தேர்தல் வந்து விட்டது. திமிர்தனம் கொண்ட மக்களை வரி போட்டு கொடும் ஆட்சி நடத்தும் அரசுகளுக்கு அதிர அதிர மக்கள் புரிய வைக்க வேண்டும். 

நாம் இங்கு அறம் மட்டுமே பேசுவோம். அரசியல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம்மையும், இனி வரப்போகின்றவர்களையும் வாழ வைப்பது அறம் எனும் தர்மம் மட்டுமே.

வாழ்க வளமுடன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

Monday, February 15, 2021

36வது ஆண்டு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் குருபூஜை விழா அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே,

நிகழும் சார்வரி வருடம், மாசி மாதம், 12ம் தேதி (24.02.2021) அன்று எம் குருவின் 36வது ஆண்டு குருபூஜை விழா சிறப்புற நடைபெற இருக்கிறது.

கீழே அழைப்பிதழ் இணைத்துள்ளேன். 

வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் கோவையில் அமைந்திருக்கும் எம் குருவின் ஜீவசமாதியில் நடைபெற இருக்கும் விழாவிற்கு தாங்களும், தங்கள் நண்பர்களும், குடும்பத்தாரும், உற்றாரும், உறவினரும், சுற்றாரும் வந்து குருவருள் பெற்று வளம் பல பெற்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ அன்புடன் அழைக்கிறேன்.



கீழே யூடியூப் அழைப்பிதழ் இணைத்துள்ளேன்





Monday, January 25, 2021

நிலம் (76) - கோவை மேற்கு மண்டல ரிங்க் சாலை நிலமெடுப்பு

கோவை மாவட்டத்தில் பேரூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை மேற்கு ரிங்க் ரோடு அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்த ரிங்க் ரோடு செட்டிபாளையம், நஞ்சுண்டாபுரம், தீத்திபாளையம், சுண்டக்காமுத்தூர், நரசிம்மன் நாயக்கன்பாளையம், குருடாம்பாளையம் வடவள்ளி, சோமையாம்பாளையம், பன்னிமடை, கூடலூர், சிக்கதாசம்பாளையம் ஆகிய கிராமங்களின் வழியே செல்கின்றது. மேற்படி கிராமங்களில் உள்ள சர்வே எண்களில் தான் நிலமெடுப்பு மற்றும் அதற்கான இழப்பீடு தொகையினை பிரைவேட் நெகோஷியேசன் வழியில் செய்கிறார்கள்.

இந்தக் கிராமங்களில் நிலம் வாங்க விரும்புவர்கள் மேற்கண்ட ரிங்க் ரோடு செல்லும் இடங்களைத் தவிர்த்து விட்டு வாங்கவும். இந்த நோட்டிபிகேசன் இன்னும் ஒவ்வொரு துணை பதிவு அலுவலகங்களிலோ அல்லது பட்டாவிலோ அப்டேட் செய்யவில்லை என்பதை மறந்து விட வேண்டாம்.

அதுமட்டுமின்றி இந்த ரிங்க் ரோட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் அதாவது 300 அடி தொலைவில் நிலம் வாங்குவதாக இருந்தால் வாங்கவும். 100 மீட்டருக்குள் வாங்க வேண்டாம்.

மேலும் இந்த ரிங்க் ரோட்டின் அருகில் அமைந்திருக்கும் அரசு தொடர்பான எந்த நிலங்கள் இருப்பினும் 100 மீட்டர் தொலைவில் இருப்பதாக பார்த்து வாங்கிக் கொள்ளவும்.

மேலும் மேற்கண்ட பதினோறு கிராமங்களில் நில எடுப்பு சர்வே எண்கள் பற்றிய விபரங்கள் வேண்டுமெனில் உங்களுக்கு எந்த சர்வே எண் பற்றிய சந்தேகமோ அதைப் பற்றி கேட்டால் பதில் தர இயலும்.

அரசு இழப்பீட்டு தொகையினை அரசாணையின் படி பெற்றுக் கொள்ள முயலுங்கள். இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்த இழப்பீட்டு தொகையினைப்  பெற அரசாணை வழிகாட்டி முறையினை வழங்கி இருக்கிறது. இந்த நிலமெடுப்பு அரசாணையின் கீழ் நில உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் கையொப்பம் செய்து கொடுத்து ஏமாற வேண்டாம். அரசாணையின் படி, அதில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி இழப்பீடு பெற முயலுங்கள். இது பற்றி உதவி தேவை எனில் அணுகவும். நிச்சயம் உதவி செய்கிறேன். போனில் கூப்பிட்டுக் கேட்டால் நிச்சயம் என்னால் முடியாது. தொடர்புடைய ஆவணங்களோடு என்னை நேரில் அணுக வேண்டும். போன் மூலம் நிவாரணம் கேட்டால் நிச்சயம் சொல்ல இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்

Friday, January 22, 2021

திருத்தப்பட்ட விவசாய சட்டம் சொல்வது என்ன? உண்மை அறிக்கை

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகை இட்டு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஏன் மற்ற மாநில விவசாயிகள் போராட்டமோ அல்லது பெரிய அளவில் கவன ஈர்ப்புக்கான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. 

காங்கிரஸ் கட்சியினர் தூண்டி விட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. அடியேன் டிவி செய்திகளைப் பார்ப்பது இல்லை. அது அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலாகிப் போனவை. பத்திரிக்கைகளோ இன்னும் ஒரு படி மேல் சென்று அதிகாரத்தின் அடியில் படுத்தே விட்டன.

இந்தியா வாட்சிங்க் என்று அனைவரையும் ஒழுக்கத்தின் உத்தமராக, நேர்மையின் சின்னமாக டைம்ஸ் நவ் டிவியில் கத்திக் கொண்டிருந்த மன்னிக்க ஊளையிட்டுக் கொண்டிருந்த அர்னாப், பின்னர் டைம்ஸ் நவ்வுக்கு 100 கோடிக்கு தண்டம் கட்ட வைத்து விட்டு, ரிபப்ளிக் டிவியை ஆரம்பித்து, இன்றைக்கு பாகிஸ்தானின் சதி, அரசியல் சதி என்று கதறிக் கொண்டிருக்கிறான். விதி விட்டு விடாது. நாம் ஆனானப்பட்ட எத்தனையோ ஆட்களின் அழிவுகளைப் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம். இந்திய ராணுவ வீரர்களைப் பலி கொடுத்ததை அர்னாப் கொண்டாடுகிறான் என்றால் அதன் பின்னால் பலி கொடுத்த திட்டம் நிச்சயம் இருந்திருக்கும். காலமும், கடவுளின் விதியும் ஒரு நாள் அதை வெளிப்படுத்தாமல் போகாது.

பொய்கள் படாடோபமாக இருக்கும். ஆனால் உண்மை உறங்கிக் கொண்டிருக்கும் என்பார்கள். அதைப் போல ஆங்காங்கே சோஷியல் மீடியாக்களில் வரும் செய்திகளில் தான் ஓரளவு உண்மையைக் கண்டறிய முடியும். யுடியூப் சானல்களோ பொய்களுடன் தான் செய்திகளாக்கப்படுகின்றன.

உண்மைச் செய்தியைக் கண்டுபிடிக்க பெரும் முயற்சி தேவைப்படுகிறது. மோடி அரசாங்கம் வந்தபின் பொய் செய்திகள் தான் தினசரிகளில் வெளி வருகின்றன. சரி விவசாய சட்டத்திற்கு வந்து விடலாம்.

மோடி அரசு மூன்று விவசாய சட்டங்களை நிறைவேற்றியது. 

  • விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் – 2020 
  • விவசாயிகளின் விளைபொருட்கள் வியாபாரம் வர்த்தகம் (மேம்படுத்துதல் மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் – 2020
  • அத்தியாவசிய பண்டங்கள் திருத்தச் சட்டம் – 2020

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட(??) மத்திய அரசு மக்களின் நன்மைக்காகவே சட்டங்களையும் மசோதாக்களையும் இயற்றும். அதனால் மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மை உண்டாகும் என்பது பொதுவாக ஜனநாயகத்தில் நம்பப்படும் நம்பிக்கை. இதுவரையிலான அரசுகள் அப்படித்தான் செய்து வந்தன.

மோடி அரசு எப்போது ஆட்சிக்கு வந்ததோ அன்றிலிருந்து தமிழ் சினிமா இயக்குனர் சங்கரின் படத்தில் வரும் காட்சிகளை செயல்படுத்த ஆரம்பித்து விட்டது. டிமாண்டிசேஷன் என ஆரம்பித்த அறிவிக்கை முதல் அனைத்து மக்களை பாதிக்கும் ஒவ்வொரு அரசாணைக்கும். மோடி தன்னந்தனியாகவே அறிவிக்கை கொடுக்க ஆரம்பித்தார். ஊடகங்களை அவர் சந்திப்பதே இல்லை. மக்களுடன் நேரடியாக டிவியில், ரேடியோக்களில், ஆன்லைனில் பேசுகிறார். மக்களின் மன நிலை என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள அவர் இடம் கொடுப்பதே இல்லை. இணையதளம் மூலம் மக்கள் பிரதமரை அணுகலாம் என்றாலும் அவ்வளவு எளிதில் அதுவும் நடக்காது.

இப்படியான சூழலில் மூன்று விவசாயச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்றன.

14/09/2020ம் தேதியன்று மூன்று சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

17/09/2020ம் தேதி அதாவது அடுத்த மூன்றாவது நாளில் லோக்சபாவில் விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

அடுத்த மூன்றாவது நாளில் அதாவது 20ம் தேதியில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படுகிறது.

அடுத்த நான்காம் நாள் 24ம் தேதியில் குடியரசு தலைவரிடம் கையெழுத்துப் பெறப்பட்டு இந்திய அரசு கெஜெட்டில் வெளியிடப்படுகிறது.

பத்து நாட்களுக்குள் 50 சதவீத விவசாய இந்திய மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய மூன்று சட்டங்களையும் மோடி அரசு சட்டமாக்குகிறது.

மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்களை உருவாக்கக் கூடிய மசோதாக்களோ சட்டங்களோ நாடாளுமன்றத்தில் சட்டமாக்க வைக்கப்படும் போது அது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி விவாதம் செய்யப்பட்டு, பிற இயக்கங்கள், அமைப்புகள் ஆகியோரிடம் கருத்துக்கள் பெற்று அதன் பிறகு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும்.

ஆனால் இந்த மூன்று சட்டங்கள் அப்படி செய்யப்படவில்லை என்பது ஏன் என்ற சந்தேகம் எல்லோருக்குள்ளும் எழும்புவது இயற்கை. பத்து நாட்களுக்குள் அவசர அவசரமாக சட்டமாக்கியதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

கொரானா காலத்தில் நாடாளுமன்றத்தினைக் கூட்டி விரிவாக விவாதிக்க இயலாத சூழலில் அவசர அவசரமாக இச்சட்டத்தினை கொண்டு வரக் காரணம் என்ன என்று கேட்டால் மக்கள் நலன் என்கிறது மோடி அரசு.

மோடி அரசுக்கு மட்டும் தான் மக்கள் நலன் மீது அக்கறை இருக்கிறதா? பிற கட்சிகளில் இருக்கும் தலைவர்கள் எல்லோரும் மக்களை வெறுக்கின்றார்களா? இல்லை மக்களால் வெறுக்கப்படுகின்றார்களா என்று அவர்தான் தெரிவிக்க வேண்டும்.

உலக பெரிய நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியப் பிரதமர், ஜன நாயகத்தின் மூன்றாம் தூணான செய்தி ஊடகங்களைச் சந்திக்கவே சந்திக்காத தன்மை கொண்ட நிலையில் அவர் மீதான நம்பிக்கையின்மை வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில் இச்சட்டம் மக்கள் நலனுக்கானது என்று மக்கள் எப்படி நம்புவார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு.

உலகை முடக்கிய கொரானா காலத்தில் கூட வியாபாரம் ஆனது விவசாய விளைபொருட்கள் மட்டுமே. மற்ற எல்லா விதமான வியாபாரங்களும் முடங்கின. விவசாயமும், தனியார் நிறுவனங்களுக்கு என்றைக்கும் அழியாத சந்தை விவசாயச் சந்தை என தெரிய வந்தது. மோடி அரசு விவசாயச் சட்டத்தினை தனியார் முதலாளிகளுக்கு லாபம் அளிக்கக் கூடிய வகையில் திருத்தம் செய்து வெளியிட்டனர் என்பது தான் உண்மை.

மாநில அரசின் அதிகாரத்தில் வரக்கூடிய விவசாயத்துறைக்கு மோடி அரசு எப்படி பொதுவாக சட்டம் இயற்றலாம்? முடியாது. ஆனாலும் இயற்றினார்கள்.

ஏன்? காரணம் தெள்ளத்தெளிவு.

இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.

மோடி அவர்கள் டீமாண்டிசேஷனின் போது, அடுத்து பினாமி சொத்துக்களை அரசுடமையாக்கப்போவதாக பத்திரிக்கைகள் பெருமிதமாக செய்தி வெளியிட்டன. அச்செய்தி இணையதளத்தில் காணக்கிடக்கின்றன. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மூன்று சட்டங்களின் வெகு முக்கியமானவற்றைப் பார்க்கலாம்.

நில உச்ச வரம்புச் சட்டத்தின் படி ஒரு நிறுவனமானது எவ்வளவு நிலங்கள் வாங்கலாம் என்ற வரையறை உள்ளது. இச்சட்டத்தின் படி ஒரு தனியார் நிறுவனம் விவசாயத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம். இங்கு நில உச்சவரம்புச் சட்டம் நிர்கதியாக்கப்படுகிறது.

இத்தகைய தனியார் நிறுவனங்கள் தங்கள் உணவு தானியக் கிடங்குகளில் எவ்வளவு உணவுப் பொருளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உணவு பதுக்கல் சட்டம் நிர்கதியாக்கப்படுகிறது.

கீழே இருக்கும் படத்தில் தனியார் நிறுவனங்கள் எவ்வளவு கிடங்குகளை வைத்திருக்கின்றன என்ற விபரங்கள் இருக்கின்றன. படித்துக் கொள்ளுங்கள்.



மோடி அரசாங்கம் ஒவ்வொரு விவசாயியும் நேரடியாக யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் நிலத்தில் விளையும் விளை பொருட்களை விற்கலாம். இடைத்தரகர்கள் இல்லாமல் போவார்கள். இடையில் நிற்கும் தரகு பணமும் நேரடியாக விவசாயிக்கே கிடைக்கும் என்று பெருமை பேசுகின்றார்கள்.

ஒரு சாதாரண நான்கு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒருவர், எவ்வாறு ஒரு கார்ப்பொரேட் உடன் உடன்படிக்கை மேற்கொண்டு விளை பொருளை விற்பார். சாத்தியமா? யோசித்துக் கொள்ளுங்கள்.

தரத்தினையும், டெலிவரி தேதியையும் குறிப்பிட்டு ஒப்பந்தமிட்டால், கால நிலை, பருவ நிலைக்கு ஏற்ப மாறுபடும் சூழலுக்கு உகந்த விளை பொருட்கள்தான் விளைவிக்க முடியும். அவ்வாறு இருக்கும் போது, போல்டு நட்டு தயாரிப்பது போல விவசாயியும் விளைபொருட்களை எங்ஞனம் விளை விக்க முடியும்? தனியார் நிறுவனம் பொருள் சரியில்லை என நிராகரித்தால் அவர் யாரிடம் சென்று விற்பார்? உதாரணத்துக்கு உருளைக் கிழங்கு இன்ன சைசில் தான் இருக்க வேண்டுமென்று ஒப்பந்தமிடுவார்கள். சின்ன சைஸ் உருளையை வாங்க மாட்டார்கள். அதை விவசாயி யாரிடம் விற்பார்?

அக்ரிமெண்ட் போட்டு அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் விவசாயி கோர்ட்டுக்குப் போக முடியாதாம். கலெக்டரோடு முடித்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் மீது வழக்கு கூட தொடுக்க முடியாதாம்.

REF: THE FARMERS’ PRODUCE TRADE AND COMMERCE (PROMOTION AND FACILITATION) ACT, 2020 - CHAPTER V – SECTION 12 TO 16

இப்படியான வகையில் ஒவ்வொரு திருத்தமும் வெகு கவனமாக பெரும் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமைச் சாசனம் செய்ய வைக்கவும். இயலாத பட்சத்தில் நிலங்களை அவர்களிடமே கொடுத்து விடும்படியான சூழலை உருவாக்கும் வகையிலும், வெகு துல்லியமாக, புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட சட்டங்கள் இது என்பதை அச்சட்டத்தினைப் படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.

எக்கனாமிக்ஸ் வீக்லியில் இந்த மாதம் வெளிவந்த கட்டுரை உணவுப்பொருட்களின் எம்.எஸ்.பி விரிவாக கட்டுரை வெளியிட்டிருக்கிறது. குறைந்த அளவு விலை உத்தரவாதத்தினை கூட அரசு செயல்படுத்தாது என்றுச் சொன்னால் பின்னர் அரசு எதற்காக இருக்கிறது என்று தெரியவில்லை.

இங்கே இருக்கும் அதிமுக ஆட்சி நடத்தும் திடீர் முதல்வர் ஆஹா ஓஹொ என்கிறார். என்ன சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. அத்தனையும் தன்னையும், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் சொத்து பத்துக்களையும் காப்பாற்ற எடுத்த முடிவாகத்தான் மக்கள் கருதுவார்கள். கடவுள் ஒரு சிலருக்கு ஒரு முறைதான் வாய்ப்புக் கொடுப்பார். அதை நல்ல முறையில் மக்களுக்கு பயன் உள்ள வகையில் செயல்படுத்தினால் வரலாறு பாராட்டும். நான்கரை லட்சம் கோடி தமிழகத்தின் கடன் வைத்து விட்டுச் செல்வதும், விளம்பரங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவழிப்பதும் தான் மிகச் சிறந்த ஆட்சி என்று எவரும் சொல்லப் போவதில்லை.

இந்த விவசாயச் சட்டங்களின் திருத்த வடிவம் முற்றிலும் விவசாயிகளுக்கு விரோதமானது. அது கார்பொரேட் நிறுவனங்களின் நலனை முன்னிட்டு உருவாக்கப்பட்டு அவசர அவசரமாக சட்டமாக்கப்பட்டவை.

குறிப்பு: தமிழகத்தில் கரும்பின் ஆதார விலை 2500 ரூபாய் என அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு கிடைப்பதோ 1800லிருந்து 2000 ரூபாய் வரை. மீதி ரூபாய் எங்கே போகிறது? கமிஷன், மில் மேனேஜர், மில்கள் ஆகியவைகள் கூட்டாக இணைந்து மிகத் துல்லியமான திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து திருடுகிறார்கள். இதைச் சரி செய்ய எளிய மெக்கானிஷம் இருக்கிறது. ஆனால அரசாங்கங்கள் கண்டு கொள்ளாது. ஏனென்றால் ஒவ்வொரு ஆலையிலும் அரசியல்வியாதிகளுக்கும் பங்குண்டு.

இன்னும் ஒரு குறிப்பு: ஒரு பெரிய வெளி நாட்டு நிறுவனம் தமிழ் நாட்டில் கம்பெனி துவக்குவதாக இருப்பின், அந்த ஊர் பஞ்சாய்த்து போர்டு, கட்சி ஆட்கள் அந்த நிறுவனத்துக்கு ஏதாவது ஒரு வகையில் சப்ளையராக இருப்பர், இருக்க வேண்டுமென்பது நியதி. ஏனென்று உங்களுக்குப் புரிகிறதா?

இதுதான் அரசியல்! இந்த அரசியலில் விளைந்ததுதான் விவசாய திருத்தச் சட்டங்களும்.

புரிந்தவர்களுக்கு புரியும். புரியாதவர்களுக்கு ஒன்றும் சொல்வதிற்கில்லை.

Wednesday, January 13, 2021

திருவள்ளுவர் கண்ணகி சிலப்பதிகாரம் - 15 ரூபாய் நோட்டு

காமதேனு இதழில் வெளியாகி இருந்த ஒரு சிறிய கட்டுரையினை இணைப்பில் படித்துப் பாருங்கள்.

கலைஞரின் ஆளுமை மீதும், அவரின் தமிழின் மீதும் அடியேனுக்கு பெரும் பிரமிப்பு உண்டாகும் எப்போதும். அவரின் தமிழ் மொழி, அவரின் பேச்சு, அவரின் எழுத்துக்கள் இன்றைக்கும் என்னை வியப்பில் ஆழ்த்தும்.

பல அரசியல்வியாதிகள் கலைஞரைப் பற்றி விமர்சிப்பார்கள். எனக்குத் தெரிந்து கலைஞரை விமர்சிக்க இங்கு இருக்கும் ஒரு அரசியல்வியாதிக்கும் தகுதி இல்லை. அவரின் காலடியில் உருண்ட ஒரு தூசுக்கும் சமமில்லாத ஈனர்களே, கலைஞரைப் பற்றி விமர்சிப்பார்கள். அவர்கள் இழிபிறவிகள் என்று தான் எனக்குத் தோன்றும்.

வட இந்திய திணிப்பான பிள்ளையார், கிருஷ்ணன், ராமன் வகையறாக்கள் பற்றி திராவிட கழகத்தார் கழுவி கழுவி ஊற்றுவார்கள். திராவிட நாடு பத்திரிக்கைகள் படித்தால் மண்டையில் உக்குடுமி வைத்திருந்தவர்கள் தமிழர்கள் நாட்டினை எவ்விதம் மாற்றினார்கள் ஆங்கிலேயர்கள் துணை கொண்டு என்று அறியலாம். 

இன்றைக்கு கிட்டத்தட்ட ஆயிரமாயிரம் மருத்துவர்கள் படிப்பினை வட இந்தியர்களிடம் இழந்திருக்கிறோம் நீட் என்ற பாஜகவின் உக்குடுமி சட்டத்தினால். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலைமை நிச்சயம் வந்திருக்காது. ஆனால் இடப்பாடி செய்த தமிழக விரோத அயோக்கியத்தனத்தினை நம் தமிழர்கள் எவரும் மறந்து விடவே கூடாது. 

இதோ ஒரு அருமையான கட்டுரை காமதேனுவில் வந்தது. படித்துப் பாருங்கள். கலைஞர் தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் என்று புரிய வரும். 

நன்றி : காமதேனு.




நிலம் (75) - சூலூரில் பிரபல பில்டரின் மோசடி - லீகல் ஒப்பீனியன்

ஒரு இடத்தின் விலை எப்படி உயர்கிறது? எப்போதாவது யோசித்தது உண்டா? 

கோவை நூறடிச் சாலையில், பஸ் ஸ்டாண்ட் நோக்கி இருக்கும் இடத்தின் ஒரு செண்ட் விலை இரண்டு கோடியே நாற்பது லட்சம். அதே நூறடிச் சாலையில் குறுக்குச் சாலையில் இருக்கும் நிலத்தின் ஒரு செண்ட் விலை ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாய்.

இப்படியான விலை உயர்வுக்கு காரணம் என்ன? தேவையா? இல்லை என்னவாக இருக்கும்? யோசித்தது உண்டா?

ஒரு பொருளின் தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை உயரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு செண்டின் விலை கோடிகளுக்கு மேல் சென்றால் அந்த நிலத்தினை வாங்க போட்டி அதிகமிருக்காது. ஆனாலும் விலை உயர்ந்து கொண்டே போகிறது என்ன காரணம்?

யோசித்துப் பாருங்கள். இது உங்களுக்காக எழுப்பபட்ட கேள்வி. பதில் எனக்குத் தெரியும். ஆனால் எழுதப் போவதில்லை. நீங்கள் தான் யோசிக்க வேண்டும்.

சார், வங்கியில் ஆவணம் வைத்திருக்கிறோம். எதற்கு லீகல் பார்க்கணும்? வங்கியிலேயே லீகல் பார்த்துதான் லோனே கொடுப்பார்கள் என்று என்னிடம் அடிக்கடிச் சொல்வார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? தற்போது வங்கிகள் சொத்தினை மட்டும் நம்பிக் கடன் கொடுப்பதில்லை. கடன் வாங்குபவர் மீது இன்ஸ்சூரன்ஸ் போடச் சொல்லி விடுகிறது. 

வங்கிகளின் லீகல் பிராசசிங் 30 வருடங்கள் மட்டுமே இருக்கும். அதனால் அந்த சொத்தானது வில்லங்கம் இல்லாதது என்று சொல்ல இயலாது.

சூலூரில் ஒரு பிரபல கட்டுமான நிறுவனம் இரண்டு ஏக்கர் நிலத்தினை அக்ரிமெண்ட் போட்டு சுமார் 30 வீடுகளை கட்டி விற்றிருக்கிறது. அதில் மோசடி நடந்திருக்கிறது என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியின் விபரம் புகைப்படத்தில் இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள்.



இந்த வீட்டினை வாங்கியவர்களின் கதி இனி என்ன? முறைகேடான பத்திரம் போட்டு கிரையம் செய்யப்பட்டிருக்கிறது. நிலத்தின் உரிமையாளர் கையொப்பம் இல்லாமல் கட்டுமான நிறுவனம் வீடுகளை விற்றிருக்கிறது. அதைக் கூடவா வீடு வாங்கியவர்கள் பார்க்கவில்லை? லீகல் பார்த்திருப்பார்களே அவர்களால் இதைக் கண்டு பிடிக்க இயலவில்லையா?

அந்தளவுக்கா கேனத்தனமாக லீகல் பார்க்கப்பட்டிருக்கும்? 

இனி வழக்கு, இழப்பு, பிரச்சினை? இந்தச் செய்தி சொல்ல வருவது எனன்வென்றால் இழப்பு வீட்டினை வாங்கியவர்களுக்கு மட்டுமே. கட்டிட ஒப்பந்ததாரர் பணத்தைப் பெற்று விட்டார். அவர் இனி அதைத் திருப்பிக் கொடுத்தாலும், அவருக்கு அது வட்டி இல்லாத பணம். நிலத்தின் உரிமையாளருக்கு நிலம் உரிமையாகி விடும். முறைகேடாக வீடு வாங்கியவர்களுக்கு மட்டுமே இழப்பு.

இந்தப் பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்றால் இனி என்னென்ன செலவுகளும், அலைச்சலும் உண்டாகும். விளைவு ஏண்டா இந்த வீட்டினை வாங்கினோம் என்கிற நிலை. வங்கிக் கடன் வாங்கி இருந்தால் அது வேறு பிரச்சினை. 

ஒரு கட்டிய வீடு வாங்கப் போகின்றீர்கள் என்றால் அதற்கென என்னென்ன ஆவணங்களைப் பார்க்க வேண்டுமென்ற லிஸ்ட் இருக்கிறது. அது மட்டுமின்றி நிலத்தின் உரிமை முதலில் சரி பார்க்கப் பட வேண்டும். அதன் பிறகு கட்டிடத்தின் அனுமதி மற்றும் ஒப்பந்த அனுமதி ஆராயப்பட வேண்டும்.

சமீபத்தில் கோவையில் பிரபலமான ஒரு கட்டிட நிறுவனத்தின் வீட்டினை என் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க பார்க்கச் சென்றிருந்தேன். அப்கோர்ஸ் கட்டணச் சேவை. அந்த வீட்டினை வாங்கலாமா வாங்க கூடாதா என அடியேன் சொல்ல வேண்டும். 

வீட்டின் அமைப்பினைப் பார்க்கும் முன்பு நிலத்தின் அமைப்பினை ஆராய்ந்தால் வாஸ்து அல்லது நில அமைப்பு முற்றிலும் நெகட்டிவாக இருந்தது. அதுமட்டுமல்ல அவர்கள் வீட்டின் தன்மையையே மாற்றி இருந்தார்கள். மின் விளக்கு இல்லாமல் இருக்க இயலாது. மின் கட்டணம் அதிகமாகும். வீட்டிற்குள் அலுவலக செட்டப் வேறு. விலையோ கோடிக் கணக்கில். மாதா மாதம் சுமார் 6000 ரூபாய் மெயிண்டனன்ஸ் கட்டணம் வேறு வரும். இப்படியான ஒரு நவீன கட்டமைப்பில் இருந்தது அவ்வீடுகள். இம்மாதிரியான வீடுகளை விரும்பும் நபர்களும் இவ்வுலகில் உண்டு. அப்ரிஷியேசன் ஆகும் என்று சொல்வார்கள். ஒரு வீடு அப்ரிஷியேசன் ஆகும் என்றுச் சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். வீடு இருக்க இருக்க பழையதாகும் என்பதை மறந்து விடக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை செங்கலுக்கும், கம்பிக்கும், சிமெண்டுக்கும் கொடுக்கும் விலையானது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். ஆடம்பரமாக வாழ்வதன் அர்த்தமற்ற செலவுகள், செலவு செய்பவர்களின் எதிர்காலம் சூனியமாகி விடும். எத்தனையோ வீடுகள் விற்பனைக்கு வருகின்றன. பார்த்துப் பார்த்துக் கட்டி இருப்பார்கள். கடைசியில் விற்பனைக்கு வந்து விடும். வியாபாரம் என்பது வேறு, வசிப்பிடத்தினை விற்பது என்பது வேறு. 

லீகல் பார்க்கும் போது அதற்கென ஒரு சில வரையறைகள் உண்டு. அதை வைத்து லீகல் சரிபார்கக் வேண்டும். நான் என்னிடம் லீகல் செக்கிங்க் வருபவர்களிடம் பல வித ஆவணங்களைக் கேட்பேன். வெகுவாகச் சலித்துக் கொள்வார்கள். இன்றைய சலிப்பு நாளைக்கு ஆபத்தினை உருவாக்கி அமைதியின்மையை தருவிக்கும் சூழல் உண்டாகலாம்.

ஆகவே வீடோ அல்லது நிலமோ எதுவாக இருப்பினும் நல்ல அனுபவம் தெரிந்தவர்களிடம் லீகல் பார்த்து வாங்குங்கள். 

நிலம் என்பது நம்மை வாழ வைக்கும் ஒரு உயிரிடம். ஒரு சிலருக்கு ஒரு சில இடங்களே வாழ்க்கையில் முன்னேற்றத்தினையும், சந்தோஷத்தையும் தரும். அதற்காக அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.

குறிப்பு: ஒரு சில இடங்களில் வீடுகள் வாங்கினால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். ஆகவே வீடுகள் வாங்கும் போது வெகு கவனம் தேவை.

Saturday, January 9, 2021

ஆறு நாய்க்குட்டிகளும் நிவேதிதா ரித்திக்நந்தாவும்

தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை கருணை. வாக்கியங்களில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’. வள்ளலால் பெருமகனார் சொன்னது.

பயிர் அது வாடத்தான் செய்யும். அதைக் கண்ட போது மனது வாடினேன் என்கிறார் பெருமான். அவரின் நெஞ்சமெல்லாம் நிரம்பிய கருணையின் வெளிப்பாடு.

கருணை இல்லா உயிர்கள் இவ்வுலகில் வாழவே அருகதை அற்றவை. பெற்றவளின் கருணையினால் உயிர் பிழைக்கும் கருவானது உருவாகி பின்னர் தலைவராகி பிறரைக் கொல்கிறது. கொன்று தின்கிறது. கொல்லச் சொல்லி வேடிக்கை பார்க்கிறது. நான் எவரையும் சொல்லவில்லை. பொதுவாகச் சொன்னேன்.

அம்மாவை வணங்குகிறார்கள். இன்னொரு அம்மாவின் குழந்தையை நடு வீதியில் மல்லாக்க கிடத்தி, கருவறையை அறுத்து குழந்தையை எடுத்து அதைக் கத்தியால் குத்தி விளையாடும் மாபெரும் வீரர்களின் விளையாட்டை வேடிக்கை பார்த்த மாபெரும் வீரப்பெருமகனார் வாழ்கின்ற தேசம் இது.

ஆனால் பாருங்கள் அவரவருக்கு அவரவர் நியாயம் இருக்கிறது. எல்லா குற்றங்களுக்கும் செயல்களுக்கும் பின்னால் அவரவர் நியாயங்கள் உண்டு. நியாயங்கள் வேறு உண்மை வேறு.

அவரவர் தர்மங்கள் அவரவருக்கு கர்மங்களாகின்றன. கர்மத்தின் கணக்குகளை விதி டிரம்புக்கு தற்போது தீர்த்து வைப்பது போல தீர்த்து வைக்கும். நம் இந்தியாவில் இருந்து கூட டிரம்புக்கு ஒருவர் பிரச்சாரம் மேற்கொண்டார் அல்லவா? இருந்து டிரம்ப் தோற்றுப் போனார். அதுதான் கர்ம வினைகளின் கணக்குத் தீர்க்கும் தொடக்கம்.

நான் தர்மத்தை நம்புகிறவன். உண்மையை நம்புகிறவன். எல்லோருக்கும் தர்மத்தின் முன்னாலே, உண்மையின் முன்னாலே தீர்ப்பு வழங்கப்படும் நாட்கள் இப்போதெல்லாம் உடனுக்குடன் வந்து விடுகிறதை நினைத்து மகிழ்ச்சி உண்டாகிறது.

பிக்பாஸ் பார்க்கின்றீர்கள் என நினைக்கிறேன். ஆரி அர்ஜுனனை அங்கிருந்த பதினேழு நபர்களும் எவ்விதம் நடத்துகிறார்கள் என்று பாருங்கள். உலகத்தின் டிசைன் இது. உலகோடு ஒத்து வாழ், இல்லையெனில் நாங்கெல்லாம் உன்னை ஒழிப்போம் என்கிறார்கள் அந்த பேதைகள். பேசாமலே இருந்து கொண்டு பாம்பினைப் போல ஒரு பெண் (அவள் பெயரைச் சொல்லக்கூட கூசுகிறது எனக்கு) உள்ளே இருக்கின்றாளே என்ன ஒரு கொடூரம். இவளுக்கும் கருவிலே பெண்ணைக்கொல்லும் தாய்க்கும் என்ன வித்தியாசம் இருக்க இயலும். அப்படி ஒரு கொடூரமான மனதுடைய பெண்ணை இனிமேல் என்னால் பார்க்கவே கூடாது என நினைக்கிறேன். அவள் வருவதால் பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்தியே விட்டேன்.

கருணையற்ற கொடூரத்தின் உச்சம் அவள்.

நேற்றிலிருந்து வீட்டில் ஒரு அக்கப்போர்.

மாலை நேரம், ரித்திக் வந்து தயங்கி நின்றான்.

“அப்பா, வீட்டுக்குப் பின்னாலே நாய் குட்டிங்க கிடக்குது” என்றான்.

“அதுக்கென்ன? கிடக்கட்டுமே?”

“இல்லைப்பா, தூக்கி வந்து பால் கொடுத்துட்டு, ஆஸ்ரமத்துக்கு அனுப்பி வைக்கலாமா” இது நிவேதிதா குரல்.

என் வீட்டு மகாராணியைப் பார்த்தேன். கண்களில் நெருப்பு தகித்தது.

பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே ரூடோஸும், மணியும் இருக்கிறார்கள். ரூடோஸ் குட்டிகளைப் பார்த்து விட்டால், சாப்பிடாமல் பட்டினி கிடப்பாள். அவள் முகம் வாடினால் அடியேனுக்குத் தாங்காது. ஆகவே மகாராணியின் கண்களில் அக்னி.

தயங்கினேன்.

“காலையில் பார்த்துக்கலாம்” என்றேன்.

இன்றைக்கு காலையில் நிவேதிதா மீண்டும் என்னிடம்.

“சரி, என்னவோ செய்யுங்கள்”

அட்டைப்பெட்டி ஒன்றினை எடுத்து அதற்குள் துணி வைத்து மெத்தை போலச் செய்து வெளியில் சென்றார்கள் இருவரும். சிறிது நேரத்தில் ஆறு நாய்க்குட்டிகள். இன்னும் கண்கள் திறக்காதவை. பால் குடிக்ககூட தெரியாதவை. யாரோ ஒருவர் அவற்றைக் கொண்டு வந்து வீட்டின் பின்னால் போட்டு விட்டுச் சென்ற காலடித்தடம் இருந்தது என்றான் ரித்திக்.

ஊசி மூலம் பால் எடுத்து ஆறு குட்டிகளுக்கு ஊட்டி விட்டனர் இருவரும். மாடியில் கொண்டு போய் வைத்து விட்டனர். இன்றைக்குப் பார்த்து ஆன்லைன் வகுப்பு இல்லை. காலை ஆறுமணிக்கு நிவேதிதாவைப் பார்த்தது. குளிக்கவில்லை, சாப்பிடவில்லை. மதியம் போலத்தான் சாப்பிட வந்தார்.

யார் யாருக்கோ போன் செய்து ஆறு குட்டிகளில் ஐந்து குட்டிகளை அவரவர் நண்பர்களுக்கு கொடுத்து விட்டனர். காரில் வந்தெல்லாம் நாய்க்குட்டியைக் கொண்டு போனார்கள். யாரோ ஒரு பையன் பக்கத்து வீட்டுப் பையனுக்கு எனச் சொல்லி வாங்கிக் கொண்டு போனானாம். ஆனால் அவனே இரண்டு குட்டிகளையும் வைத்துக் கொண்டு விட்டானாம். அது ஒரு பிரச்சினையாக வந்தது.

இன்னும் ஒரு குட்டி மட்டும் அதுவும் பெண் குட்டி அட்டைப் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. சிரிஞ் மூலம் பால் ஊட்டினார் நிவேதிதா. குடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.

பிள்ளைகள் இருவர் முகத்திலும் மலர்ச்சி தெரிந்தது. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் வள்ளலார் பெருமகனார் என் பிள்ளைகளிடத்தில் கொஞ்சம் தெரிகிறார்.

எனக்குள் கொஞ்சம் நம்பிக்கை.

பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்திருக்கிறேன் போல. இனிமேலும் இக்குணம் மாறாமல் அவர்கள் இருவரும் வாழ்ந்தாலே அதுவே எனது வாழ்வின் அர்த்தம் என நம்புகிறேன்.

கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா?

அவர்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களையும், அன்பினையும் வழங்குங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.

ஏமாளி தமிழர்களே - திருந்துங்கள் - உதயசந்திரா கதை

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழரும் தமிழ் இனமும் எவ்வாறெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் வந்தன என்பதை பல்வேறு புத்தகங்கள் மூலம் கடந்த காலத்தில் படித்துத் தெரிந்து கொண்டேன்.

இணையதளங்களில் அவ்வகையான பல்வேறு புத்தகங்கள் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் எழுதியவை படிக்க கிடைக்கின்றன.

நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்கள். இரத்தம் கொதிக்கும்.

சுய நலப் பேய்களால், நய வஞ்சகர்களால் தமிழினமும், தமிழர் பண்பாடும் அதிகாரத்துக்காகவும், சொகுசாக வாழவும் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அது இன்றும் தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கின்றன. இனி இழக்க ஒன்றுமில்லை என்கிற போது நாம் எல்லாவற்றையும் இழந்திருப்போம். அதற்குள் விழித்துக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

பொங்கலுக்கு 2500 ரூபாய் வாங்க வரிசையில் நிற்கும் அவலமான வாழ்வியல் சூழலில் நாமெல்லாம் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கு காரணமானவற்றை ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதிலிருந்து வெளி வர முயற்சியுங்கள்.

நம் பாரம்பரிய தமிழர் விளையாட்டான ஜல்லிக்கட்டையும் தடை செய்தார்கள். போராடிய மாணவர்களை முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு பன்னீர்செல்வம் போலீஸை வைத்து அடித்து துவைத்து எறிந்த காட்சிகளும், கடலுக்குள் அவர்களை உயிரோடு சமாதி வைக்க துணிந்த காட்சிகளையும், காவல்துறையினர் ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்திய வீடியோக்களும் இன்னமும் இணையதளங்களில் காணக்கிடைக்கின்றன. 

ஒவ்வொன்றையும் என்றைக்கும் மறந்து விடாதீர்கள். மறக்கவே மறக்காதீர்கள். இனி வரக்கூடிய நாட்களில் எவரெல்லாம் என்னென்ன செய்தார்கள் என்பதை உள்ளத்தில் அணையா எரிமலை போல வளர்த்து வாருங்கள். இவற்றை உலகிற்கும், உங்கள் நட்புக்களுக்கும் கொண்டு செல்லுங்கள். அதுதான் நம்மைத் தொடர்ந்து வாழ இருக்கும் சந்ததியினருக்கு நாம் செய்யும் பேருதவி.

இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்தக் கதை நிஜக்கதை. சாட்சிகள் உண்டு.

ஒரு நடிகை நகைக்கடை திறக்க வந்தால், அங்கு கூடும் கூட்டத்தின் அளவு எண்ணிலடங்காதவை. ஏன் நடிகை வந்தால் இத்தனை கூட்டம் கூடுகிறது? காரணம் அவள் நடிகை. கூட்டம் கூடி என்ன செய்யும்? அவள் சிரிப்பதையும், கை ஆட்டுவதையும், அவளின் அங்கங்கள் அசைவதையும் பார்த்து ரசிக்க. 

கூட்டம் அவளை ரசித்த பிறகு, அவள் கடை திறப்பு விழாவுக்கு வந்து கையை ஆட்டி விட்டு போகும் போது கை நிறைய காசைக் கறந்து கொண்டு போய் விடுவாள். கூடிய கூட்டமோ வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் ஈ என இளித்துக் கொண்டு கிளம்பும்.

ஒரு நிமிடம் யோசித்தீர்களா? இதனால் யாருக்கு என்ன பயன் என்று. இன்றைக்கு ஒவ்வொரு நடிகைகளும் இன்ஸ்டாவில் தீயாய் சூட்டைக் கிளப்பும் புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றார்கள். ஏனென்று என்றாவது ஒரு நாள் யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? இத்தனை கோடி ரசிகர்கள் அவளைப் பின் தொடர்கிறார்கள் என்றால் இன்ஸ்டா மற்றும் ஒரு சில நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அவளுக்கு வாரி வழங்குகின்றன என்பது எவருக்கேனும் தெரியுமா? 

கஷ்டப்பட்டு ஜிபிக்கு ரீசார்ஜ் செய்து, நடிகை போடும் ஆபாச படத்தினைப் பார்த்து விட்டு கவட்டிக்குள் நாய் காலால் சொரிவதைப் போல சொரிந்து கொள்வதைத் தவிர வேறு என்ன பலன் கிடைக்கும்?

யோசித்திருக்க மாட்டீர்கள் என்பதை நன்கு அறிவேன். 

ஏனென்றால் நடிகனுக்கு நாட்டை ஆளக் கொடுத்த பரம்பரை நாம். நடிகைக்காக கோவில் கட்டிய பரம்பரை நாம். 

உலகிற்கு பொது மறை கொடுத்த திருவள்ளுவர் பிறந்த நாட்டில் வாழும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் ஊன் குழியைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் அவலத்தில் வாழ்கிறோம்.

வயதான நடிகன், நடிகையை திரையில் தடவுவதைப் பார்த்து, அவன் அவளின் கவட்டியை விரித்துக் காட்ட, அதனை விழி பிதுங்கப் பார்த்துக் கொண்டிருக்கும் படு ஈனமான வாழ்க்கையில் வாழ்கிறோம்.

ஒவ்வொருவருக்கும் சொத்துக்கள், உறவுகள், படிப்பு ஆகியவை இருக்கின்றனவோ என்னவோ, ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் சினிமா ஹீரோவுக்கு ரசிகனும், ரசிகையும் இருக்கிறார்கள். அவரவர் வீட்டிலும் ஒரு நடிகன் போட்டோவோ அல்லது நடிகையின் போட்டோவோ இருக்கும்.

நானும், என் பிள்ளைகளின் உங்களின் தீவிர ரசிகர்கள் என்றுச் சொல்வதில் புளகாங்கிதம் அடையும் உள்ளங்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம்.

ஒரு நடிகை வருகிறாள் என்றால் பசி, தூக்கம், துன்பம், வெயில் எதுவும் பார்க்காமல் அவளைப் பார்க்க மணிக்கணக்கில் விழித்திரை மூடாமல் காத்துக் கொண்டிருக்கும் பரம்பரையில் நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்படியெல்லாவற்றையும் நடிகனுக்கும், நடிகைக்கும் கொடுத்துக் கொடுத்தே எல்லாவற்றையும் இழந்து கல்வி படிக்க சீட்டுக்கும், மருத்துவத்துக்கும் ஆலாய் பறந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு நடிகை படத்தில் நடிக்கிறாள் என்றால் அவளின் திரைப்படத்திற்கு பின்பான வாழ்க்கை என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்க மாட்டீர்கள். 

இதோ உதயசந்திரா என்ற நடிகையின் வாழ்க்கையும், அவரின் சொத்துக்கள் பற்றிய ஒரு சில விபரங்கள் கீழே.

ஆர்.ஆர்.ஹாலிடேஸ் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இதன் கீழ் யூடிஎஸ் ஹோட்டல் நிறுவனத்தில் கோவளத்தில் ஒரு ஹோட்டல், சங்குமுகம் என்கிற இடத்தில் ஒரு ஹோட்டல், ஆலப்புழாவில் ஒரு ஹோட்டல், வாகாமன் என்கிற இடத்தில் ஒரு ஹோட்டல், ஹவ்தியார் என்ற இடத்தில் ஒரு ஒரு அழகு நிலையம். இது மட்டுமா இரண்டு எலக்ட்ரோட் தயார் செய்யும் நிறுவனங்கள், இரண்டு உணவு ஹோட்டல்கள் இது போல இன்னும் பல சொத்துக்கள். இத்தனைச் சொத்துக்களையும் நடிகையும், நடிகையின் அன்புக் கணவரும், இவர்களின் பிள்ளைகளும் நிர்வகிக்கின்றார்கள். மொத்தமாய் ஒரு ஆயிரம் கோடிக்கும் மேல் வரும் சொத்து மதிப்பு.

அவர்கள் நன்றாக வாழணும், வாழ வேண்டும். கடின உழைப்பைக் கொட்டி சம்பாதித்த துட்டு. ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் ஒய்யாரமாய் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு, ரசிகனின் கனவுக் கன்னியாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. அவர்கள் நன்றாக வாழட்டும். அவர்களை வாழ்த்துகிறோம். 

கனவுக் கன்னிகளை உருவாக்கும் ரசிகனின் நிலை என்னவாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். கனவு ஹீரோக்களை சிலாகித்து அவர்கள் பின்னே திரியும் ஒவ்வொருவரின் வாழ்க்கை சூழல் என்னவாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.

கனவுக் கன்னியும், ஹீரோவும் ஒவ்வொரு ரசிகனால் எவ்வளவு துட்டுகளை சம்பாதிக்கின்றார்கள் என்று பாருங்கள்.

உலகமே கொரானாவினால் செத்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஆறு மாத காலம் நடிக்க 50 கோடியைச் சம்பளமாக வாங்கும் நடிகன் சினிமா தியேட்டரில் முழு கொள்ளளவு ரசிகர்களை அமர வைக்க வேண்டுமென்று மாபெரும் போராளி, மக்களுக்காகவே வாழும் உத்தமர் எடப்பாடி பழனிசாமி முதல்வரிடம் சென்ற அடுத்த நொடி, அரசே ஆணை பிறப்பிக்கிறது.

அப்படி என்ன அந்த நடிகன் அரசுக்கும், மக்களுக்கும் செய்திருக்கிறான் என்று தெரியவில்லை. 

ரசிகன் என்று வீட்டில் எவராது சொன்னால் வாயில் சுடு தண்ணீரை கொட்டுங்கள். தீவிர ரசிகர்கள் என்றால் அவர்கள் நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு என்று தெரிய வையுங்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர் கையில். அதை நாம் தான் வாழ வேண்டும். நடிகனோ கனவுக் கன்னியோ வாழ வைப்பதில்லை.

ஏமாளி ரசிகனால் கோடிகளுக்கு அதிபதி ஆகின்றார்கள். அதை உணர்ந்து கொள்ளுங்கள். நடிகன் வந்தால் நாய்க்கு கொடுக்கும் மரியாதை கூட கொடுக்காதீர்கள். அவனைப் பார்க்க செல்கிறேன் என்று எவராவது கிளம்பினால் சூட்டுக் கோலால் சுட்டு வையுங்கள். அடுத்த வேளை பசிக்கும். அப்பசிக்கு நீங்களும் நானும் உழைக்க வேண்டும். இல்லையெனில் வயிற்றில் எரியும் தீக்கு இரையாவோம்.

எது நிதர்சனம்? எது உண்மை? எது அவசியம்? எது தேவை? எது தேவையில்லாதது? எது நம்மை அழிக்கிறது? எது நம்மை வாழ வைக்கிறது? என்று உணருங்கள்.

சரி, இனி சாட்சிக்கு வருகிறேன்.

யார் அந்த உதய சந்திரா? என்று கேட்பீர்களே? இதோ அவரின் புகைப்படம். இவரின் கட்டுரை இணைப்பு கீழே இருக்கிறது. ஏதோ பொறாமையால் எழுதி இருக்கிறேன் என்று நினைப்பீர்கள். அவ்வாறு நினைக்காவிட்டால் அது அதிசயம். அப்படி நினைத்தால் அது உங்கள் பிரச்சினை. எனக்கு நான் வாழும் சமூகம் தெளிவாக வாழ வேண்டுமென்ற ஆவல் உண்டு. அதற்குதான் இந்தப் பதிவு.

நன்றி விகடன்.


நடிகை ராதாவின் உண்மை  பெயர் உதயசந்திரா

இவரின் ஹோட்டல் இணையதளம் : https://udshotels.com/


நேரம் இருப்பின் ஹோட்டல் இணைப்பினை சொடுக்கிப் பாருங்கள். விருப்பமிருந்தால் ஹோட்டலில் தங்கி இளைப்பாறலாம். அடியேன் ஆலப்புழாவில் ராதாவின் ஹோட்டல் அருகில் இருக்கும் புராதன ரிசார்ட்டில் ஒரு நாள் வாசம் செய்திருக்கிறேன். ஆலப்புழா இயற்கையின்  சொர்க்கம்.

Thursday, December 24, 2020

மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பற்றிய விபரங்கள்

மத்திய அரசின் நேரடி ஸ்காலர்ஷிப் உதவித் தொகை பற்றிய விபரங்கள் கீழே இருக்கின்றன. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.