குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கருணை. Show all posts
Showing posts with label கருணை. Show all posts

Saturday, January 9, 2021

ஆறு நாய்க்குட்டிகளும் நிவேதிதா ரித்திக்நந்தாவும்

தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை கருணை. வாக்கியங்களில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’. வள்ளலால் பெருமகனார் சொன்னது.

பயிர் அது வாடத்தான் செய்யும். அதைக் கண்ட போது மனது வாடினேன் என்கிறார் பெருமான். அவரின் நெஞ்சமெல்லாம் நிரம்பிய கருணையின் வெளிப்பாடு.

கருணை இல்லா உயிர்கள் இவ்வுலகில் வாழவே அருகதை அற்றவை. பெற்றவளின் கருணையினால் உயிர் பிழைக்கும் கருவானது உருவாகி பின்னர் தலைவராகி பிறரைக் கொல்கிறது. கொன்று தின்கிறது. கொல்லச் சொல்லி வேடிக்கை பார்க்கிறது. நான் எவரையும் சொல்லவில்லை. பொதுவாகச் சொன்னேன்.

அம்மாவை வணங்குகிறார்கள். இன்னொரு அம்மாவின் குழந்தையை நடு வீதியில் மல்லாக்க கிடத்தி, கருவறையை அறுத்து குழந்தையை எடுத்து அதைக் கத்தியால் குத்தி விளையாடும் மாபெரும் வீரர்களின் விளையாட்டை வேடிக்கை பார்த்த மாபெரும் வீரப்பெருமகனார் வாழ்கின்ற தேசம் இது.

ஆனால் பாருங்கள் அவரவருக்கு அவரவர் நியாயம் இருக்கிறது. எல்லா குற்றங்களுக்கும் செயல்களுக்கும் பின்னால் அவரவர் நியாயங்கள் உண்டு. நியாயங்கள் வேறு உண்மை வேறு.

அவரவர் தர்மங்கள் அவரவருக்கு கர்மங்களாகின்றன. கர்மத்தின் கணக்குகளை விதி டிரம்புக்கு தற்போது தீர்த்து வைப்பது போல தீர்த்து வைக்கும். நம் இந்தியாவில் இருந்து கூட டிரம்புக்கு ஒருவர் பிரச்சாரம் மேற்கொண்டார் அல்லவா? இருந்து டிரம்ப் தோற்றுப் போனார். அதுதான் கர்ம வினைகளின் கணக்குத் தீர்க்கும் தொடக்கம்.

நான் தர்மத்தை நம்புகிறவன். உண்மையை நம்புகிறவன். எல்லோருக்கும் தர்மத்தின் முன்னாலே, உண்மையின் முன்னாலே தீர்ப்பு வழங்கப்படும் நாட்கள் இப்போதெல்லாம் உடனுக்குடன் வந்து விடுகிறதை நினைத்து மகிழ்ச்சி உண்டாகிறது.

பிக்பாஸ் பார்க்கின்றீர்கள் என நினைக்கிறேன். ஆரி அர்ஜுனனை அங்கிருந்த பதினேழு நபர்களும் எவ்விதம் நடத்துகிறார்கள் என்று பாருங்கள். உலகத்தின் டிசைன் இது. உலகோடு ஒத்து வாழ், இல்லையெனில் நாங்கெல்லாம் உன்னை ஒழிப்போம் என்கிறார்கள் அந்த பேதைகள். பேசாமலே இருந்து கொண்டு பாம்பினைப் போல ஒரு பெண் (அவள் பெயரைச் சொல்லக்கூட கூசுகிறது எனக்கு) உள்ளே இருக்கின்றாளே என்ன ஒரு கொடூரம். இவளுக்கும் கருவிலே பெண்ணைக்கொல்லும் தாய்க்கும் என்ன வித்தியாசம் இருக்க இயலும். அப்படி ஒரு கொடூரமான மனதுடைய பெண்ணை இனிமேல் என்னால் பார்க்கவே கூடாது என நினைக்கிறேன். அவள் வருவதால் பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்தியே விட்டேன்.

கருணையற்ற கொடூரத்தின் உச்சம் அவள்.

நேற்றிலிருந்து வீட்டில் ஒரு அக்கப்போர்.

மாலை நேரம், ரித்திக் வந்து தயங்கி நின்றான்.

“அப்பா, வீட்டுக்குப் பின்னாலே நாய் குட்டிங்க கிடக்குது” என்றான்.

“அதுக்கென்ன? கிடக்கட்டுமே?”

“இல்லைப்பா, தூக்கி வந்து பால் கொடுத்துட்டு, ஆஸ்ரமத்துக்கு அனுப்பி வைக்கலாமா” இது நிவேதிதா குரல்.

என் வீட்டு மகாராணியைப் பார்த்தேன். கண்களில் நெருப்பு தகித்தது.

பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே ரூடோஸும், மணியும் இருக்கிறார்கள். ரூடோஸ் குட்டிகளைப் பார்த்து விட்டால், சாப்பிடாமல் பட்டினி கிடப்பாள். அவள் முகம் வாடினால் அடியேனுக்குத் தாங்காது. ஆகவே மகாராணியின் கண்களில் அக்னி.

தயங்கினேன்.

“காலையில் பார்த்துக்கலாம்” என்றேன்.

இன்றைக்கு காலையில் நிவேதிதா மீண்டும் என்னிடம்.

“சரி, என்னவோ செய்யுங்கள்”

அட்டைப்பெட்டி ஒன்றினை எடுத்து அதற்குள் துணி வைத்து மெத்தை போலச் செய்து வெளியில் சென்றார்கள் இருவரும். சிறிது நேரத்தில் ஆறு நாய்க்குட்டிகள். இன்னும் கண்கள் திறக்காதவை. பால் குடிக்ககூட தெரியாதவை. யாரோ ஒருவர் அவற்றைக் கொண்டு வந்து வீட்டின் பின்னால் போட்டு விட்டுச் சென்ற காலடித்தடம் இருந்தது என்றான் ரித்திக்.

ஊசி மூலம் பால் எடுத்து ஆறு குட்டிகளுக்கு ஊட்டி விட்டனர் இருவரும். மாடியில் கொண்டு போய் வைத்து விட்டனர். இன்றைக்குப் பார்த்து ஆன்லைன் வகுப்பு இல்லை. காலை ஆறுமணிக்கு நிவேதிதாவைப் பார்த்தது. குளிக்கவில்லை, சாப்பிடவில்லை. மதியம் போலத்தான் சாப்பிட வந்தார்.

யார் யாருக்கோ போன் செய்து ஆறு குட்டிகளில் ஐந்து குட்டிகளை அவரவர் நண்பர்களுக்கு கொடுத்து விட்டனர். காரில் வந்தெல்லாம் நாய்க்குட்டியைக் கொண்டு போனார்கள். யாரோ ஒரு பையன் பக்கத்து வீட்டுப் பையனுக்கு எனச் சொல்லி வாங்கிக் கொண்டு போனானாம். ஆனால் அவனே இரண்டு குட்டிகளையும் வைத்துக் கொண்டு விட்டானாம். அது ஒரு பிரச்சினையாக வந்தது.

இன்னும் ஒரு குட்டி மட்டும் அதுவும் பெண் குட்டி அட்டைப் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. சிரிஞ் மூலம் பால் ஊட்டினார் நிவேதிதா. குடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.

பிள்ளைகள் இருவர் முகத்திலும் மலர்ச்சி தெரிந்தது. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் வள்ளலார் பெருமகனார் என் பிள்ளைகளிடத்தில் கொஞ்சம் தெரிகிறார்.

எனக்குள் கொஞ்சம் நம்பிக்கை.

பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்திருக்கிறேன் போல. இனிமேலும் இக்குணம் மாறாமல் அவர்கள் இருவரும் வாழ்ந்தாலே அதுவே எனது வாழ்வின் அர்த்தம் என நம்புகிறேன்.

கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா?

அவர்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களையும், அன்பினையும் வழங்குங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.