குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, January 22, 2021

திருத்தப்பட்ட விவசாய சட்டம் சொல்வது என்ன? உண்மை அறிக்கை

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகை இட்டு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஏன் மற்ற மாநில விவசாயிகள் போராட்டமோ அல்லது பெரிய அளவில் கவன ஈர்ப்புக்கான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. 

காங்கிரஸ் கட்சியினர் தூண்டி விட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. அடியேன் டிவி செய்திகளைப் பார்ப்பது இல்லை. அது அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலாகிப் போனவை. பத்திரிக்கைகளோ இன்னும் ஒரு படி மேல் சென்று அதிகாரத்தின் அடியில் படுத்தே விட்டன.

இந்தியா வாட்சிங்க் என்று அனைவரையும் ஒழுக்கத்தின் உத்தமராக, நேர்மையின் சின்னமாக டைம்ஸ் நவ் டிவியில் கத்திக் கொண்டிருந்த மன்னிக்க ஊளையிட்டுக் கொண்டிருந்த அர்னாப், பின்னர் டைம்ஸ் நவ்வுக்கு 100 கோடிக்கு தண்டம் கட்ட வைத்து விட்டு, ரிபப்ளிக் டிவியை ஆரம்பித்து, இன்றைக்கு பாகிஸ்தானின் சதி, அரசியல் சதி என்று கதறிக் கொண்டிருக்கிறான். விதி விட்டு விடாது. நாம் ஆனானப்பட்ட எத்தனையோ ஆட்களின் அழிவுகளைப் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம். இந்திய ராணுவ வீரர்களைப் பலி கொடுத்ததை அர்னாப் கொண்டாடுகிறான் என்றால் அதன் பின்னால் பலி கொடுத்த திட்டம் நிச்சயம் இருந்திருக்கும். காலமும், கடவுளின் விதியும் ஒரு நாள் அதை வெளிப்படுத்தாமல் போகாது.

பொய்கள் படாடோபமாக இருக்கும். ஆனால் உண்மை உறங்கிக் கொண்டிருக்கும் என்பார்கள். அதைப் போல ஆங்காங்கே சோஷியல் மீடியாக்களில் வரும் செய்திகளில் தான் ஓரளவு உண்மையைக் கண்டறிய முடியும். யுடியூப் சானல்களோ பொய்களுடன் தான் செய்திகளாக்கப்படுகின்றன.

உண்மைச் செய்தியைக் கண்டுபிடிக்க பெரும் முயற்சி தேவைப்படுகிறது. மோடி அரசாங்கம் வந்தபின் பொய் செய்திகள் தான் தினசரிகளில் வெளி வருகின்றன. சரி விவசாய சட்டத்திற்கு வந்து விடலாம்.

மோடி அரசு மூன்று விவசாய சட்டங்களை நிறைவேற்றியது. 

  • விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் – 2020 
  • விவசாயிகளின் விளைபொருட்கள் வியாபாரம் வர்த்தகம் (மேம்படுத்துதல் மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் – 2020
  • அத்தியாவசிய பண்டங்கள் திருத்தச் சட்டம் – 2020

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட(??) மத்திய அரசு மக்களின் நன்மைக்காகவே சட்டங்களையும் மசோதாக்களையும் இயற்றும். அதனால் மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மை உண்டாகும் என்பது பொதுவாக ஜனநாயகத்தில் நம்பப்படும் நம்பிக்கை. இதுவரையிலான அரசுகள் அப்படித்தான் செய்து வந்தன.

மோடி அரசு எப்போது ஆட்சிக்கு வந்ததோ அன்றிலிருந்து தமிழ் சினிமா இயக்குனர் சங்கரின் படத்தில் வரும் காட்சிகளை செயல்படுத்த ஆரம்பித்து விட்டது. டிமாண்டிசேஷன் என ஆரம்பித்த அறிவிக்கை முதல் அனைத்து மக்களை பாதிக்கும் ஒவ்வொரு அரசாணைக்கும். மோடி தன்னந்தனியாகவே அறிவிக்கை கொடுக்க ஆரம்பித்தார். ஊடகங்களை அவர் சந்திப்பதே இல்லை. மக்களுடன் நேரடியாக டிவியில், ரேடியோக்களில், ஆன்லைனில் பேசுகிறார். மக்களின் மன நிலை என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள அவர் இடம் கொடுப்பதே இல்லை. இணையதளம் மூலம் மக்கள் பிரதமரை அணுகலாம் என்றாலும் அவ்வளவு எளிதில் அதுவும் நடக்காது.

இப்படியான சூழலில் மூன்று விவசாயச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்றன.

14/09/2020ம் தேதியன்று மூன்று சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

17/09/2020ம் தேதி அதாவது அடுத்த மூன்றாவது நாளில் லோக்சபாவில் விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

அடுத்த மூன்றாவது நாளில் அதாவது 20ம் தேதியில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படுகிறது.

அடுத்த நான்காம் நாள் 24ம் தேதியில் குடியரசு தலைவரிடம் கையெழுத்துப் பெறப்பட்டு இந்திய அரசு கெஜெட்டில் வெளியிடப்படுகிறது.

பத்து நாட்களுக்குள் 50 சதவீத விவசாய இந்திய மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய மூன்று சட்டங்களையும் மோடி அரசு சட்டமாக்குகிறது.

மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்களை உருவாக்கக் கூடிய மசோதாக்களோ சட்டங்களோ நாடாளுமன்றத்தில் சட்டமாக்க வைக்கப்படும் போது அது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி விவாதம் செய்யப்பட்டு, பிற இயக்கங்கள், அமைப்புகள் ஆகியோரிடம் கருத்துக்கள் பெற்று அதன் பிறகு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும்.

ஆனால் இந்த மூன்று சட்டங்கள் அப்படி செய்யப்படவில்லை என்பது ஏன் என்ற சந்தேகம் எல்லோருக்குள்ளும் எழும்புவது இயற்கை. பத்து நாட்களுக்குள் அவசர அவசரமாக சட்டமாக்கியதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

கொரானா காலத்தில் நாடாளுமன்றத்தினைக் கூட்டி விரிவாக விவாதிக்க இயலாத சூழலில் அவசர அவசரமாக இச்சட்டத்தினை கொண்டு வரக் காரணம் என்ன என்று கேட்டால் மக்கள் நலன் என்கிறது மோடி அரசு.

மோடி அரசுக்கு மட்டும் தான் மக்கள் நலன் மீது அக்கறை இருக்கிறதா? பிற கட்சிகளில் இருக்கும் தலைவர்கள் எல்லோரும் மக்களை வெறுக்கின்றார்களா? இல்லை மக்களால் வெறுக்கப்படுகின்றார்களா என்று அவர்தான் தெரிவிக்க வேண்டும்.

உலக பெரிய நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியப் பிரதமர், ஜன நாயகத்தின் மூன்றாம் தூணான செய்தி ஊடகங்களைச் சந்திக்கவே சந்திக்காத தன்மை கொண்ட நிலையில் அவர் மீதான நம்பிக்கையின்மை வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில் இச்சட்டம் மக்கள் நலனுக்கானது என்று மக்கள் எப்படி நம்புவார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு.

உலகை முடக்கிய கொரானா காலத்தில் கூட வியாபாரம் ஆனது விவசாய விளைபொருட்கள் மட்டுமே. மற்ற எல்லா விதமான வியாபாரங்களும் முடங்கின. விவசாயமும், தனியார் நிறுவனங்களுக்கு என்றைக்கும் அழியாத சந்தை விவசாயச் சந்தை என தெரிய வந்தது. மோடி அரசு விவசாயச் சட்டத்தினை தனியார் முதலாளிகளுக்கு லாபம் அளிக்கக் கூடிய வகையில் திருத்தம் செய்து வெளியிட்டனர் என்பது தான் உண்மை.

மாநில அரசின் அதிகாரத்தில் வரக்கூடிய விவசாயத்துறைக்கு மோடி அரசு எப்படி பொதுவாக சட்டம் இயற்றலாம்? முடியாது. ஆனாலும் இயற்றினார்கள்.

ஏன்? காரணம் தெள்ளத்தெளிவு.

இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.

மோடி அவர்கள் டீமாண்டிசேஷனின் போது, அடுத்து பினாமி சொத்துக்களை அரசுடமையாக்கப்போவதாக பத்திரிக்கைகள் பெருமிதமாக செய்தி வெளியிட்டன. அச்செய்தி இணையதளத்தில் காணக்கிடக்கின்றன. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மூன்று சட்டங்களின் வெகு முக்கியமானவற்றைப் பார்க்கலாம்.

நில உச்ச வரம்புச் சட்டத்தின் படி ஒரு நிறுவனமானது எவ்வளவு நிலங்கள் வாங்கலாம் என்ற வரையறை உள்ளது. இச்சட்டத்தின் படி ஒரு தனியார் நிறுவனம் விவசாயத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம். இங்கு நில உச்சவரம்புச் சட்டம் நிர்கதியாக்கப்படுகிறது.

இத்தகைய தனியார் நிறுவனங்கள் தங்கள் உணவு தானியக் கிடங்குகளில் எவ்வளவு உணவுப் பொருளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உணவு பதுக்கல் சட்டம் நிர்கதியாக்கப்படுகிறது.

கீழே இருக்கும் படத்தில் தனியார் நிறுவனங்கள் எவ்வளவு கிடங்குகளை வைத்திருக்கின்றன என்ற விபரங்கள் இருக்கின்றன. படித்துக் கொள்ளுங்கள்.மோடி அரசாங்கம் ஒவ்வொரு விவசாயியும் நேரடியாக யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் நிலத்தில் விளையும் விளை பொருட்களை விற்கலாம். இடைத்தரகர்கள் இல்லாமல் போவார்கள். இடையில் நிற்கும் தரகு பணமும் நேரடியாக விவசாயிக்கே கிடைக்கும் என்று பெருமை பேசுகின்றார்கள்.

ஒரு சாதாரண நான்கு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒருவர், எவ்வாறு ஒரு கார்ப்பொரேட் உடன் உடன்படிக்கை மேற்கொண்டு விளை பொருளை விற்பார். சாத்தியமா? யோசித்துக் கொள்ளுங்கள்.

தரத்தினையும், டெலிவரி தேதியையும் குறிப்பிட்டு ஒப்பந்தமிட்டால், கால நிலை, பருவ நிலைக்கு ஏற்ப மாறுபடும் சூழலுக்கு உகந்த விளை பொருட்கள்தான் விளைவிக்க முடியும். அவ்வாறு இருக்கும் போது, போல்டு நட்டு தயாரிப்பது போல விவசாயியும் விளைபொருட்களை எங்ஞனம் விளை விக்க முடியும்? தனியார் நிறுவனம் பொருள் சரியில்லை என நிராகரித்தால் அவர் யாரிடம் சென்று விற்பார்? உதாரணத்துக்கு உருளைக் கிழங்கு இன்ன சைசில் தான் இருக்க வேண்டுமென்று ஒப்பந்தமிடுவார்கள். சின்ன சைஸ் உருளையை வாங்க மாட்டார்கள். அதை விவசாயி யாரிடம் விற்பார்?

அக்ரிமெண்ட் போட்டு அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் விவசாயி கோர்ட்டுக்குப் போக முடியாதாம். கலெக்டரோடு முடித்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் மீது வழக்கு கூட தொடுக்க முடியாதாம்.

REF: THE FARMERS’ PRODUCE TRADE AND COMMERCE (PROMOTION AND FACILITATION) ACT, 2020 - CHAPTER V – SECTION 12 TO 16

இப்படியான வகையில் ஒவ்வொரு திருத்தமும் வெகு கவனமாக பெரும் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமைச் சாசனம் செய்ய வைக்கவும். இயலாத பட்சத்தில் நிலங்களை அவர்களிடமே கொடுத்து விடும்படியான சூழலை உருவாக்கும் வகையிலும், வெகு துல்லியமாக, புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட சட்டங்கள் இது என்பதை அச்சட்டத்தினைப் படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.

எக்கனாமிக்ஸ் வீக்லியில் இந்த மாதம் வெளிவந்த கட்டுரை உணவுப்பொருட்களின் எம்.எஸ்.பி விரிவாக கட்டுரை வெளியிட்டிருக்கிறது. குறைந்த அளவு விலை உத்தரவாதத்தினை கூட அரசு செயல்படுத்தாது என்றுச் சொன்னால் பின்னர் அரசு எதற்காக இருக்கிறது என்று தெரியவில்லை.

இங்கே இருக்கும் அதிமுக ஆட்சி நடத்தும் திடீர் முதல்வர் ஆஹா ஓஹொ என்கிறார். என்ன சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. அத்தனையும் தன்னையும், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் சொத்து பத்துக்களையும் காப்பாற்ற எடுத்த முடிவாகத்தான் மக்கள் கருதுவார்கள். கடவுள் ஒரு சிலருக்கு ஒரு முறைதான் வாய்ப்புக் கொடுப்பார். அதை நல்ல முறையில் மக்களுக்கு பயன் உள்ள வகையில் செயல்படுத்தினால் வரலாறு பாராட்டும். நான்கரை லட்சம் கோடி தமிழகத்தின் கடன் வைத்து விட்டுச் செல்வதும், விளம்பரங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவழிப்பதும் தான் மிகச் சிறந்த ஆட்சி என்று எவரும் சொல்லப் போவதில்லை.

இந்த விவசாயச் சட்டங்களின் திருத்த வடிவம் முற்றிலும் விவசாயிகளுக்கு விரோதமானது. அது கார்பொரேட் நிறுவனங்களின் நலனை முன்னிட்டு உருவாக்கப்பட்டு அவசர அவசரமாக சட்டமாக்கப்பட்டவை.

குறிப்பு: தமிழகத்தில் கரும்பின் ஆதார விலை 2500 ரூபாய் என அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு கிடைப்பதோ 1800லிருந்து 2000 ரூபாய் வரை. மீதி ரூபாய் எங்கே போகிறது? கமிஷன், மில் மேனேஜர், மில்கள் ஆகியவைகள் கூட்டாக இணைந்து மிகத் துல்லியமான திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து திருடுகிறார்கள். இதைச் சரி செய்ய எளிய மெக்கானிஷம் இருக்கிறது. ஆனால அரசாங்கங்கள் கண்டு கொள்ளாது. ஏனென்றால் ஒவ்வொரு ஆலையிலும் அரசியல்வியாதிகளுக்கும் பங்குண்டு.

இன்னும் ஒரு குறிப்பு: ஒரு பெரிய வெளி நாட்டு நிறுவனம் தமிழ் நாட்டில் கம்பெனி துவக்குவதாக இருப்பின், அந்த ஊர் பஞ்சாய்த்து போர்டு, கட்சி ஆட்கள் அந்த நிறுவனத்துக்கு ஏதாவது ஒரு வகையில் சப்ளையராக இருப்பர், இருக்க வேண்டுமென்பது நியதி. ஏனென்று உங்களுக்குப் புரிகிறதா?

இதுதான் அரசியல்! இந்த அரசியலில் விளைந்ததுதான் விவசாய திருத்தச் சட்டங்களும்.

புரிந்தவர்களுக்கு புரியும். புரியாதவர்களுக்கு ஒன்றும் சொல்வதிற்கில்லை.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.