ஒல்லியான தேகம். நல்ல உயரம். நெற்றியில் வகிடெடுத்து குங்குமம் தீட்டி இருக்கும். வலது மூக்கில் மூக்குத்தி.
வலது கையில் டீ கேன். இடது கையில் பலகாரம்.
திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாறிய டெண்டரால் இவருக்கு அந்தக் கடை கிடைத்ததாம். ஒரு வேளை அதிமுகவின் கடை நிலைத் தொண்டராக இருக்கக்கூடும். சிங்கா நல்லூர் உழவர் சந்தையில் இருக்கும் தேநீர்க்கடையில் மேலே சொல்லும் பெண் இருக்கிறார்.
ஓரிடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்கமாட்டார். சுறு சுறுவென நடை. டீ ஊற்றிக் கொடுப்பது என்ன? பலகாரம் எடுத்துக் கொடுப்பது என்ன? அடுத்த நபரிடம் இவ்வளவு பாக்கி என்றுச் சொல்லி காசு வாங்கி வைத்துக் கொள்வது என மனித தேனீ போல உழைத்துக் கொண்டிருப்பார் அப்பெண்.
அன்பு நண்பர்களே! இன்றைய பெரும்பாலான வீட்டில் இருக்கும் பெண்கள் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறார்கள் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
வீடு சுத்தம் செய்து, வாசல் தெளித்து, கோலம் போடுவது எத்தனை பெண்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
இயற்கையின் கொடையான சாணத்தை எத்தனை பெண்கள் வாசலில் தெளிக்கின்றார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
இந்தச் சாணியில் தானே அந்தக் காலத்துக் குழந்தைகள் புரண்டு உருண்டு வளர்ந்தன. அப்போதெல்லாம் எந்த மருத்துவமனைக்கு குழைந்தகளை அழைத்துச் சென்றார்கள்? நோயெதிர்ப்பு மருந்தாகிய சாணத்தை இன்று எந்தப் பெண்ணாவது தொட விரும்புவாரா?
சுத்தம் சுத்தம் என்றுச் சொல்லி கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தி முடிவில் மருத்துவ மனைக்குத்தானே சென்று கொண்டிருக்கிறோம்.
பெண்கள் இன்றைக்கு உடம்பு வியர்க்க வேலை செய்கிறார்களா என்று கேட்டால் வேலையா நானா என்பார்கள். துவைக்க, அரைக்க, சாப்பிட என எல்லாமே ரெடிமேட்.
முடிவில் நோயாளியாய் மாறி மருத்துவ மனைக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
உங்களைச் சுற்றி இருக்கும் பல பெண்கள் நோயோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சருமம் மட்டும் பளபளவென இருந்தால் அழகோ அழகு என்று நினைக்காதீர்கள். அது அழுகிக் கொண்டிருக்கும் உடம்பு என்பதை உணருங்கள். தினமு உழைத்து உழைத்து உரமேரிப் போன பெண்கள் தானே பேரழகிகள்.
வாரம் தோறும் உழவர் சந்தைக்குச் செல்லும் வழக்கம். என்னைப் பார்க்கும் போதெல்லாம், ”அண்ணா டீன்னா” என்று கேட்பார் அவர். மறுத்து விடுவேன். இது வாரம் தோறும் நடக்கும் ஒரு சம்பவம். இந்த சம்பவத்தால் ஒரு பிரச்சினை வந்து விட்டது எனக்கு.
நானும், மனையாளும், மனைவியின் உறவினர் அரசமரத்தோட்ட கவுண்டரும் பேசிக் கொண்டிருந்தோம். நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், “கோதை, இந்த ஏரியாவிலேயே பேரழகி இவர் தான்” என்று அப்பெண்ணைப் பார்த்துச் சொன்னேன். அப்படி வெட்கப்பட்டார் அப்பெண். கோதைக்குச் சிரிப்பு.
அவர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து அகன்றதும், கவுண்டர் என்னைப் பார்த்து, “ ஏங்க, எம்ம புள்ளைய பக்கத்துல வச்சுக்கிட்டே இப்படிப் பேசுறீங்களே”ன்னார்.
அசட்டுச் சிரிப்பொன்றினைச் சிரித்து வைத்தேன்.
பிரச்சினை இத்தோடு முடியவில்லை. இப்போது சந்தைக்குச் சென்றால் அவர் அருகில் வந்து விட வேண்டுமென்ற உத்தரவால் ஆப்பசைத்த குரங்கு கதையாகிப் போனது எனக்கு.