எல்லோருக்கும் பிடித்தமான பொய் உலகம் “சினிமா”. சினிமாவில் வெற்றியடைவோர் இல்லவே இல்லை. தோல்விதான் முடிவில். அது யாராக இருந்தாலும் சரி. படைப்பாளிகள் அனைவரும் வெற்றியடைகின்றார்களா என்றால் நிச்சயம் இல்லை. ஏன் இல்லை?
கலைஞர் டிவியில் திரைப்பட பிதாமகன், புரட்சியாளர் திரு பாரதிராஜாவின் “அப்பனும் ஆத்தாளும்” என்ற தொடரில் நடிகை சுகன்யா தாவணி போட்டுக் கொண்டு இளமை வேடத்தில் நடித்தார். நம்பினால் நம்புங்கள். எனக்கு திரு பாரதி ராஜாவின் நம்பிக்கையின் மீது சந்தேகமே வந்து விட்டது. கர்வமும், தானென்ற நினைப்பும் எந்த ஒரு படைப்பாளிக்கும் வந்து விட்டால் இது போன்ற அவலக்காட்சிகளைத் தான் படம் பிடிக்க முடியும்.
இயல்பு மாறும் எந்த ஒரு படைப்பும் முடிவில் தோல்வியைத் தரும் என்பதில் பாரதி ராஜாவும், பாலச்சந்தரும் விதிவிலக்கல்ல என்பதற்கு கண்களால் கைது செய் திரைப்படமும், பொய் திரைப்படமும் உதாரணம்.
இயல்பு மாறாத திரைப்படங்கள் வெற்றியைத் தந்தே தீரும். நாடோடிகள் திரைப்படத்தின் கதை மாந்தர்கள் கதையோடு ஒன்றியவர்களாய், கதைக்களம் நடிகர்களோடு ஒன்றியதாய் இருந்தது.
மைனா படத்தின் காட்சிகள் ஆக்கமும், ஆடுகளம் திரைப்படத்தின் காட்சிகளும் வெகு இயல்பாய் படத்தின் கதைக்கும், நடிகர்களுக்கும், களத்திற்கும், இசைக்கும், உரையாடலுக்கும் எந்த வித மன அதிர்ச்சி வேறுபாடின்றி இருந்தன.
இருட்டில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகனுக்கு திரைப்படம் ஆரம்பித்த அடுத்த சில நொடிகளில் அவனின் இருப்பு திரைப்படத்திற்குள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் படம் தோல்விப் படம் என்றுச் சொல்வதை விட படைப்பாளி தோற்று விட்டான் என்று அர்த்தமாகிவிடும்.
கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ஓடுவதில்லை. ஓட வைக்கப்படுகின்றன. இவர்களுக்கான மார்க்கெட்டுகள் என்று எதுவுமே இல்லை. ஆனால் உருவாக்கப்படுகின்றன. இதற்கு சாட்சியாய் ரஜினி, கமல், சூர்யா, விஜய, அஜித் என்று காட்ட இயலும். ஆனால் இவர்களைத் தான் பெரும் நடிகர்கள் என்று காட்டுகின்றன மீடியாக்கள் (போலிகளின் ராஜ்ஜியத்தில் பத்திரிக்கை உலகம் இருக்கிறது)
திரைப்பட ரசிகனை தன் படைப்பிற்குள் இழுத்துக் கொள்ளாத எந்த ஒரு படைப்பும் வெற்றி அடையாது. தன் நடிப்பு எனும் மாயவலைக்குள் ரசிகனைக் கட்டிப் போடாத எந்த ஒரு நடிகனும் “சோப்” விற்கும் விளம்பர மாடலாக மட்டுமே நிலைக்க முடியுமே தவிர, நடிகனாய் பரிணமளிக்க முடியாது. இதற்குத் தேவை கர்வமற்ற, தானென்ற நினைப்பற்ற படைப்பாளிகளும் அவருக்கு உதவி செய்யும் சினிமாவைக் காதலிக்கும் டெக்னீஷியன்களும். கோடிகளில் சம்பளம் வாங்கும் “சோப்புக் கலைஞர்கள்” இது போன்ற படைப்பாளிகளுக்குத் தேவையே இல்லை.
தொழிலைச் சரியாகச் செய்தால் “பணம்” தானாக வரும் என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை.
- அன்புடன்
கோவை எம் தங்கவேல்.