குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நீல பத்ம நாபன். Show all posts
Showing posts with label நீல பத்ம நாபன். Show all posts

Tuesday, November 29, 2011

பள்ளியறையின் மிச்சமே வாழ்க்கையின் தத்துவம்

அறுவடைக் காலமது. வயலில் வடகாட்டிலிருந்து வந்த வேலையாட்கள் கதிரறுத்து, நெல் தூற்றி மூட்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஜோசப் வாத்தியாரிடம் டியூசனுக்குச் சென்ற நானும், என் தங்கையும் ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி விடுவோம். அன்றைக்கு எட்டு மணி வரையிலும் வராது கண்டு, வீட்டிற்கு நெல்மூட்டை கொண்டு வந்த வேலையாட்களுடன், உறவினர்கள் சேர்ந்து தேட ஆரம்பித்து விட்டனர்.

நாங்கள் இருவரும் நாட்டியக் குதிரை ஸ்பெஷல் கேள்விப்பட்டிருப்பீர்களே, குதிரைக்கார வி எஸ் எம் ராவுத்தர் வீட்டில் “பாசமலர்” திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம். வீட்டில் நடந்த களேபரம் எதுவும் தெரியவில்லை. வெளி நாட்டிலிருந்து வந்த வீடியோ பிளேயரில் படம் போட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் டிவி என்பது பெரிய அதிசயம்.

இந்திராகாந்தி இறந்த போதும், எம் ஜி ஆர் இறந்த போதும் என் நண்பனின் வீட்டில் இருக்கும் டிவியில் நேரடி ஒளிபரப்பினைப் பார்த்தோம். கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் இருப்பார்கள். எம் ஜி ஆருக்கு கூட்டம் அதிகம் என்றுப் பேசிக் கொண்டது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து மாமாவிடம் பூவரசன் கம்பால் நான்கு அடிகள் வாங்கிக் கொண்டோம். வேலைக்கு வந்தவர்கள் மாமாவின் கோபத்தைச் சரி செய்தார்கள்.தங்கைக்குத்தான் தடித்துப் போய் விட்டது. அடுத்த ஒரு வாரத்தில் மாமா ஆபீசில் லோன் போட்டு பெரிய டயனோரா டிவி ஒன்றினைக் கொண்டு வந்து விட்டார். கருப்பு கலரில் இரண்டு பக்கமும் திறக்கும்படியான பிளாக் அண்ட் வொயிட் டிவி அது. படத்தினைக் கீழே பார்த்துக் கொள்ளுங்கள்.



எனக்கு சிலோனின் ரூபவாகினிதான் பிடிக்கும். ஊர் கடற்கரையோரம் இருந்ததால், சிலோன் ரேடியோவும், எப்போவாவது ரூபவாஹினி டிவியும் கிடைக்கும். அவ்வப்போது தமிழ் நாடகங்கள் கூட போடுவார்கள். படம் பிரிண்ட் செய்தாற்போல இருக்கும்.

டிவி ஆபரேட்டராய் மாறிய பின்பு வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் படம் பார்க்க கூட்டம் கூடும். மளிகைக் கடை செட்டியாருக்கு கிரிக்கெட் என்றால் பைத்தியம். கடையை யாராவது பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, கிரிக்கெட் நாட்களில் வீட்டுக்கு வந்து டிவி போடச் செய்து என்னை எரிச்சல் படுத்துவார். ஆனாலும் அவர் கொண்டு வந்து தரும் மேரி பிஸ்கட், பட்டாணி, பேரீச்சைக்கு ஆசைப்பட்டு நானும் கிரிக்கெட் பார்ப்பதுண்டு. செட்டியார் மாமாவின் நண்பர் வேறு என்பதால் மறுக்கவெல்லாம் முடியாது. இந்த அன்பினால் அவரின் கல்லாப்பெட்டிக்கு காவலனாய் கோடை விடுமுறையில் அவரிடம் வேலைக்குச் சென்றதுண்டு. மாதம் 50 ரூபாய் கொடுத்தார். அத்துடன் தினமும் இலவச இணைப்பாய் ரொட்டிகளும், பேரீச்சையும் ஒரு பள்ளிக்கூடப் பையும் கொடுத்தார்.

இப்படியான நாட்களில் எங்கள் வீட்டுக்கு இடது பக்கமாய் மரக்காட்டுக்குள் இருந்த ஒரு வீட்டின் பெண்மணி அடிக்கடி டிவி பார்க்க வருவார். எம் ஜி ஆர் பாடல் என்றால் அவருக்கு உயிர். விபரம் தெரியாத வயதில் அவர் சொல்லியது எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. “வீட்டுக்காரனுடன் படுத்துக் கொண்டிருக்கும் போது, நான் எம் ஜி ஆரைத்தான் நினைச்சுக்குவேன்” என்றார் அந்தப் பெண்.


சாகித்ய அகாடமி பரிசு பெற்ற திரு நீல பத்ம நாபன் அவர்களின் பள்ளிகொண்டபுரம் நாவலைப் படிக்க நேர்ந்த போது, நாவலின் பிரதான கதாபாத்திரமான அனந்தன் நாயரின் வாழ்க்கையை எழுத்தின் மூலம் உணர்ந்தேன்.


கதை ஒன்றும் முக்கியமில்லை. கதாபாத்திரப் படைப்பின் மூலம் உலக வாழ்வியலை அலசுதல் என்பதுதான் முக்கியமானது. இந்த நாவலின் ஹீரோவான அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயனி வேறொருவருடன் ஓடிப் போய் விடுவாள். அனந்தன் நாயரின் வீழ்ச்சி இங்கு ஆரம்பமாகிறது. ஒரு நாள் வாழ்க்கையோடு அவரின் கதை நினைவுகளின் சொச்சமாய் எழுத்தாய் வரும் போது வெளிப்படும் நிதர்சன உண்மைகள் பலவும், சிந்தித்துப் பார்க்கையில் மனிதன் தனக்குள்ளே போட்டுக் கொண்ட அவிழ்க்க முடியா முடிச்சுக்கள் ஒவ்வொன்றிற்கும் அவனே காரணமாய் இருப்பதினை நீல பத்ம நாபன் வெகு அழகாய் வெளிப்படுத்தி இருப்பார். மனிதனின் வீழ்ச்சிக்கும், உயர்வுக்கு அவனே காரணம் என்பதை இந்தப் பள்ளிகொண்டபுரம் நாவல் வெளிப்படுத்தி இருக்கிறது. 

இளம் வயது வாலிபன் ஒருவன் வரப்போகும் முதுமை காலத்தினை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால், பொருள் சார்ந்த ஆடம்பர வாழ்க்கையின் மிச்சத்தை அவனால் நிச்சயம் உணர முடியும். மனிதனாகப் பிறந்த எவருக்கும் முதுமை வந்தே தீரும் என்கிற போது, இன்றைக்கே வாழ் என்கிற உணர்ச்சி ததும்பும் இன்பம் தரும் வாழ்க்கை என்பது போலியானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி ஆணுக்கு வாழ்க்கை என்பது திருமணப் பந்தத்தின் மிச்சமாய் கண் முன்னே நடமாடும் வாரிசுகளை வைத்துத் தான் தொடரும். உடலிச்சை மீதான ஆர்வம் பின்னர் மயங்கிக் கிடக்கும் பாச வலைக்குள் வாரிசுகளிடம் சிக்கிய பின்புதான் முழுமையடைகிறது. 

பள்ளிகொண்டபுரம் நாவலைப் படித்த போது மேலே நான் சொன்ன பெண்மணியின் கூற்றும், நம் வாழ்க்கையின் தத்துவமே பள்ளியறையின் மிச்சமாய் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.  நேரமிருந்தால் ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான நாவல்தான் “பள்ளிகொண்டபுரம்”.

இந்த நாவல் பற்றி திரு ஜெயமோகன் எழுதியிருக்கும் பத்தியினை நீங்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். 


- கோவை எம் தங்கவேல்

* * * * *