குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, May 6, 2016

குருநாதரின் பேரருள் - உண்மைச் சம்பவம்

எனது குரு நாதர் ஜோதி ஸ்வாமி குழந்தைகள் இருவரையும் வெள்ளிங்கிரி ஆண்டவர் அருள் பாலிக்கும் ஏழாம் மலைக்கு அழைத்துச் சென்று வரக் கோரியிருந்தேன். சுவாமியும் அதற்கொரு தகுந்த நாளினைச் சொல்வதாகச் சொல்லி இருந்தார். கடந்த செவ்வாய்கிழமையன்று ரித்திக் நந்தாவும், நிவேதிதாவும் வெள்ளிங்கிரி ஆண்டவரின் அருள் பெறுவதற்காக மலையேறுவதற்கு ஆசிரமம் அழைத்துச் சென்றேன். 


எனக்கு எப்போதுமே தண்ணீரும், பசுஞ்சோலைகள் நிறைந்த இடமும் நிரம்பவும் பிடிக்கும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கேரளா சென்று வருவதுண்டு. சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் ஆசிரமத்தின் பின்புறம் வளைந்தோடும் நொய்யல் ஆற்றில் சுவாமியுடன் உதவியோடு அவ்வப்போது குளிப்பது உண்டு. செவ்வாய் அன்றைக்கு நானும், குழந்தைகள் இருவரும், சாமியுடன் ஆற்றில் உடம்பு சூடு குறைய குளியலை முடித்து விட்டு ஆசிரமம் சென்றோம்.

சுவாமியைத் தரிசித்து விட்டு, உணவு அருந்த அமர்ந்திருந்த போது ஒரு வாளிப்பான வாலிபர் ஒருவர் முகமெல்லாம் சிரிப்போடு அனைவருக்கும் கேட்டுக் கேட்டு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். ஓடியாடி ஆசிரம பணிகளைச் செய்து கொண்டும், சுவாமியைத் தரிசிக்க வந்தவர்களுக்கு உணவு பரிமாறியும் துருதுருவென திரிந்து கொண்டிருந்தார்.

ஆசிரமத்திலிருந்து பசுமடத்திற்கு வரும் வழியில் சாமியிடம் அவர் பற்றி விசாரித்தேன். 

“ஆண்டவனே, அவருக்கு நுரையீரலில் பிரச்சினை, கிட்னி பெயிலியர் என்று இன்னும் ஒரு சில மாதங்களே உனக்கு இருக்கிறது என்றுச் சொல்லி மருத்துவர் அனுப்பி விட்டார். அவருக்கு எந்த வித கெட்டபழக்கமும் கிடையாது. திருமணத்திற்கும், அதற்குபிறகு பிறக்கும் குழந்தைக்கும் kuuta பொருள் சேர்த்து வைத்திருக்கிறார். இடையில் உடல் நிலை சரியில்லாத போது மருத்துவரிடம் காட்டி இருக்கிறார்.  ஏகப்பட்ட ஸ்கேன் அது இதுவென்று எடுத்துப் பார்த்து நுரையீரல் பாதிப்பு, கிட்னியில் ஒன்று போச்சு என்றுச் சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நிலையில் யார் மூலமாகவோ ஆசிரமத்திற்கு வந்தார்.

யாருக்கு எத்தனை நாள் என்பதை அந்த ஆண்டவர் தான் முடிவு செய்யனும், குரு நாதரிடம் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்லுங்கள். ஒன்றும் ஆகாது. பதினைந்து நாட்கள் சென்று எல்லா டெஸ்டும் செய்து விட்டு ஆசிரமத்திற்கு மீண்டும் வாருங்கள் என்று சொன்னேன். வருத்தத்தோடு சென்றார். எல்லா டெஸ்டுகளையும் மீண்டும் எடுத்துப் பார்த்தால் அனைத்து சரியாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். உடனே இங்கு வந்து விட்டார். அதுதான் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்” என்றார்.

”சரிங்க சாமி, ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது உடம்பு தேய்ப்பதற்கு மண்ணை எடுத்தேன். நீங்கள் வேண்டாமென்று தடுத்தீர்கள். அடுத்த நொடியில் எனது கையில் புத்தம் புதிய பீர்க்கின் குடல் கிடைத்தது. அதை வைத்து தேய்த்துக் குளித்தேன். மீண்டும் அதைக் காணவில்லை. அப்போது அது எப்படி வந்தது என்றும் எப்படிப் போனது என்றும் எனக்குத் தோன்றவில்லை. இப்போது கேட்கிறேன், அது எங்கிருந்து வந்தது?  எங்கே போனது எனச் சொல்லுங்கள்”

“அதுவா ஆண்டவனே, சொல்கிறேன்” என்றார்.


Tuesday, April 19, 2016

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம்

லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே!

18-03-2016ம் தேதியன்று ஜீ டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற உங்களின் நிகழ்ச்சியைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. ஆச்சரியம் அடைந்தேன். டிவியில் ஆங்கராக இருப்பதால் எல்லாமும் தெரியும் என்பது போல நீங்கள் பேசுவது சரியில்லை என்று நினைத்தேன். அதற்காகத் தான் இந்தக் கடிதம்.

அலோபதி மருத்துவத்தில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஒரு சாமியாரைக் கூட்டி வந்து அவர் தவறான சிகிக்சை அளிப்பதாய் அவரிடம் சொல்லி குற்றம் என்றெல்லாம் பயமுறுத்துகின்றீர்கள். இந்த அதிகாரத்தை அரசு உங்களுக்கு கொடுத்திருக்கிறதா?  இது கட்டப்பஞ்சாயத்து செய்யும் முறையாகும். அரசிடம் இதற்கு அனுமதி பெற்றிருக்கின்றீர்களா என்பது தெரியவில்லை. 

சரி அலோபதி மருத்துவம் மட்டுமே மிகவும் சிறந்தது போன்ற உங்களின் பேச்சு எனக்கு உங்களின்  மீது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகின்றது.

அலோபதி மருத்துவத்தில் இருக்கும் யாராவது ஒரு மருத்துவரை அழைத்து வந்து நீங்கள் தவறான சிகிக்சை அளித்துள்ளீர்கள், அது குற்றம் என்று உங்களால் குற்றம் சாட்ட முடியுமா? அதற்கு உங்களுக்கும் உங்கள் டிவிக்கும் தைரியம் இருக்கிறதா?

அலோபதி மருத்துவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மருந்துகளின் தாக்கத்திலும், பின் விளைவுகளில் உயிரழப்போர் கோடிக்கணக்கானவர்கள் என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன. அலோபதி மருந்துகள் பின் விளைவுகள் ஏற்படுத்துகிறது என்றுச் சொல்லி அரசுகள் அம்மருந்துகளைத் தயாரிக்கத் தடை விதிக்கின்றன. தடை விதிப்பதற்கு முன்பு அம்மருந்தைச் சாப்பிட்டவர்களின் கதி என்ன என்று யாருக்குத் தெரியும்? இதைப் பற்றி ஏன் நீங்கள் பேசுவது இல்லை.

அலோபதி என்கிற நவீன மருத்துவத்தில் அனைவரும் பிழைத்து விடுகின்றார்களா?  என்று உங்களால் 100 சதவீதம் உறுதியாகச் சொல்ல முடியுமா? முழு உடலுக்கும் வைத்தியம் பார்க்காமல் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு உடலைக்கூறு போட்டு வைத்தியம் பார்க்கும் அலோபதி மருத்துவத்தின் கொடுமைகளை விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

எந்த விதப் புற்று நோய்க்கும் மிகச் சரியான முறையில் உணவும், மருந்தும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். உணவே மருந்து என்ற முறையில் வாழ்வியல் நெறி கொண்டது தமிழர் பண்பாடு. 

எந்த ஒரு மருத்துவரும் அது அலோபதி மருத்துவராக இருந்தாலும் சரி, நோயாளியிடம் அவரின் உணவு பழக்கம், இன்ன பிற பழக்கங்கள் பற்றி விசாரிப்பர். அடுத்து அவரொரு முடிவிற்கு வந்து மருந்துகளை கொடுப்பர். இதுதான் அனைத்து மருத்துவரும் செய்யும் சிகிக்சை முறை. 

நீங்கள் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவரும் அதைத்தான் செய்தார். உடனே நீங்கள் ஏன் அவர்களின் உணவுப் பழக்கங்களை விசாரிக்கின்றீர்கள் என்று கேட்கின்றீர்கள். நாடி பிடித்துப் பார்த்துச் சொல்ல வேண்டியதுதானே என்று கேள்வி வேறு கேட்டீர்கள். இதெல்லாம் என்ன? நாடியில் பிழை இருப்பது தெரியும். ஆனால் அது என்ன பிழை என்பதை அவர்களின் உணவுப் பழக்கத்தை வைத்துத்தான் ஓரளவு நிதானிக்க முடியும். அப்படிச் செய்வது தவறு என்கின்றீர்கள். அது குற்றம் என்கின்றீர்கள். இதையே அலோபதி மருத்துவரிடம் பேசிப்பாருங்கள். உங்களின் நிலமை என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 

ஏழைகளை அழைத்து வந்து மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து டிவியில் ஒளிபரப்பிக் காசு பார்க்கும் திறமையே திறமைதான். வேறு யாருக்கு வரும் இப்படி ஒரு திறமை.

உங்களுக்கு ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக்குச் சளி பிடித்து விடும். கண்கள் சிவந்து, மூக்கு சிவந்து பெரும் கொடுமையாக இருக்கும். தலைவலி வேறு வந்து விடும். உடனே அலோபதி மருத்துவரை நாடுவேன். மருந்து கொடுப்பார். நான்கு நாட்களுக்கு மருந்தைச் சாப்பிடுவேன். உடம்பு அசதியாக இருக்கும். சளி கொஞ்சம் கொஞ்சமாக அமுங்கி விடும். அடுத்த நாளில் மூக்கிற்குள் நாற்றமெடுக்கும். சளி கட்டி விடும். அதைக் கரைக்க அடுத்த மருந்து. இப்படி மருத்துவருக்கும் மருந்துக்கும் என 1000 ரூபாய் செலவாகி விடும். அதுமட்டுமல்ல உடம்பு சொல்லொண்ணா துயரத்தைத் தரும். இந்த மருத்துவ முறையினைத்தான் நான் கிட்டத்தட்ட் 30 ஆண்டுகள் பயன்படுத்தினேன். எனது குழந்தைகள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ஆனால் இப்போது அப்படி அல்ல மேடம். எனது மனையாள் தொடு வர்ம சிகிக்சையளிக்க முறையான வர்ம மருத்துவரிடம் பயிற்சி பெற்றார். சளி வந்தால் அவரது விரலால் சிறிய அழுத்தம் தருகிறார். இரவில் உணவினைத் தவிர்க்கச் சொல்கிறார். நீராகாராம் தருகிறார். அடுத்த நாளே சளி இருக்குமிடம் தெரிவதில்லை. 

அலோபதி மருத்துவத்தில் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது மேடம்.

சர்க்கரை சர்க்கரை என்று இந்த உலகம் அலறுகின்றதே அது ஏன் தெரியுமா மேடம். WHO நிறுவனத்தின் சர்க்கரை கட்டுப்பாட்டு அளவீடு மாறியதால் ஒரே நாளில் உலகமெங்கும் சர்க்கரை நோயாளிகள் அதிகமாகிவிட்டார்கள். இரத்தக் கொதிப்பு அளவீடும் இதே கதிதான்.

தொடு வர்மத்தில் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவரிடம் சென்றால் சர்க்கரை நோய் இருக்குமிடம் தெரியாது. சர்க்கரை நோய்க்கு மருந்தே தேவையில்லை மேடம்.

மருத்துவ உலகத்தில் இன்னும் பல்வேறு மிக முக்கியமான நிலைகள் இருக்கின்றன. நாடி பிடித்துப் பார்ப்பதிலும் காலம் உண்டு. ஒரு சில கத்துக் குட்டி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளை, என்னவோ அனைவரும் செய்வது போன்ற காட்சியினை நீங்கள் மக்கள் வெளியில் உருவாக்க முனைகின்றீர்கள்.

முற்றிலும் தெரியாத விந்தை உலகமான மருத்துவத்தை நீங்கள் ஒரு சார்பாகக் கிண்டலடிப்பதும், கீழ்தரமானது என்று பிறர் நினைக்கும் படி செய்வதும் சரியல்ல மேடம்.

ஒவ்வொருவரும் இந்தச் சமூகத்தில் பெற்று வாழ்ந்ததை, சமூகத்திற்கே திரும்பவும் கொடுத்து விட்டுச் செல்வதுதான் மிக உயர்ந்த வாழ்க்கை.

காசு பணம் புகழ் என்பதெல்லாம் எதுவும் தந்து விடப்போவதில்லை மேடம்.

சேலம் பைபாஸ் சாலையில் நானும் ஒரு சில நண்பர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் ஏற்காடு சென்றிருந்தோம். நூற்றி இருபது கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற காரின் முன்புற இடது பக்க டயர் திடீரென வெடித்தது.

”டயர் வெடித்து விட்டது பிரேக் போடுங்க” என்றுச் சொன்னேன். நண்பர் காரை நிறுத்தி இடது பக்கமாக ஓரம் கட்டினார். யாருக்கும் எந்த காயமும் இல்லை. கார் கவிழவும் இல்லை. இது சாத்தியமா என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

நண்பருக்கு ஆச்சரியம்.

”என்னால் நம்பவே முடியவில்லை, கார் உருண்டு விடும் என்று நினைத்தேன்” என்றார். 

”நீங்கள் பதட்டமே கொள்ளாமல் இருக்கின்றீர்களே?”என்று கேட்டார். 

”யாருக்கும் எவருக்கும் எந்தக் கெடுதலையும் நீங்களும் நானும் செய்வதில்லை. ஆகவே எதுவுமே நடக்காது, ஸ்டெப்னியை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடரலாம்” என்றேன்.

என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

உங்களின்  சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மனித குலத்துக்கு நன்மை செய்கிறது என்றால் மகிழ்ச்சியே.

மருத்துவத்தில் அலோபதி ஒரு சில நோய்களுக்கு மிகச் சரியான தீர்வைத் தரும். சித்த, ஆயுர்வேதம், வர்மம் போன்றவை பல நோய்களுக்கு நல்ல தீர்வைத் தரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

பல அலோபதி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சரியான மருந்தினைக் கொடுப்பதில்லை என்பது உங்களுக்கும் தெரியும். பல நோய்கள் அலோபதியில் சரி செய்யப்படுவதும் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.

எழுத வேண்டுமா என நினைத்தேன். வேறு வழி இல்லை என்பதால் எழுதி விட்டேன். மனது வருத்தமேற்பட்டால் மன்னித்து விடவும். உங்களைச் சங்கடப்படுத்த வேண்டுமென்பதில் எனக்கு ஆர்வமில்லை. உண்மையறியாமல் பேசுகின்றீர்களே என்ற நினைப்புத்தான் எனக்கு.

மிக்க நன்றி !

- கோவை எம். தங்கவேல்



Friday, March 18, 2016

ஆப்ஸ் மூலம் வரும் ஆபத்துக்கள்

ஒரு மாதமிருக்குமென்று நினைவு. ஒரு பிரபலமான ஆப்ஸ் ஒன்றினை எனது ஐபோனில் இன்ஸ்டால் செய்தேன். ஒரு மணி நேரமிருக்கும். புதியதாக ஒரு குறுஞ்செய்தியை போன் கொண்டு வந்தது. புதிய ஆப்ஸ் வழியாக ஒரு சினேக வேண்டுகோள்.  ஏற்றுக் கொண்டு அந்த முகம் தெரியாதவரிடம் சாட்டிங் செய்ய ஆரம்பித்தேன். சிறிது நேரம் சென்ற பிறகு அது ஒரு பெண் என்று தெரிந்தது. 

சாட்டிங்கில் இருந்தவர் திடீரென்று வீடியோ அழைப்பு கொடுத்தார். ஏற்றுக் கொண்டு பார்த்தால் அது அவரின் படுக்கை அறை. முதலில் கையை மட்டும் காட்டினார். பின்னர் கால் என்று தொடர்ந்த காட்சியில் அவர் முழு நிர்வாணமாக படுத்திருப்பதைக் கண்டேன். சிரிப்புத்தான் வந்தது. அவரிடம் கேட்டேன்.

“என்ன ஆயிற்று உங்களுக்கு? முன்பின் தெரியாதவரிடம் இவ்வாறு தன் உடம்பைக் காட்டலாமா? “

“காட்டக்கூடாதுதான், ஆனால் என் தேவையை என் கணவனால்  நிறைவேற்ற முடியவில்லையே? நான் என்ன செய்ய? “ என்று அவரொரு கேள்வி கேட்டார்.

அவரொரு மேலை நாட்டுப்பெண். கல்யாணம் ஆகி விட்டது. குழந்தைகள் இருக்கிறார்கள்.  

அவரின் இந்தக் கேள்வி மிகச் சிக்கலானது. 

வாழ்வியல் சூழலில் ஆண்கள் சுயச்சார்பு உடையவர்கள். ஆனால் உளவியல் முறையிலும், உடல் முறையிலும் பெண்கள் சார்பு நிலை கொண்டவர்கள். காலச் சூழலின் காரணமாக பெண்களின் உள்ளக்கிடக்கையை ஆண்கள் உணர்ந்து கொள்ள தவறி விடுகின்றார்கள். பிரச்சினை வேறு மாதிரியாக வடிவமெடுத்து விஸ்ரூவமாகிக் கொண்டிருக்கிறது.

அப்பெண்ணின் பிரச்சினையை தீர்க்கவே முடியாது. எந்த வழியாக தீர்க்க முயன்றாலும், அதன் தொடர்ச்சியாக எண்ணற்ற உபப் பிரச்சினைகள் உருவாகி அப்பெண்ணின் வாழ்க்கையே வீணாகப் போய் விடும் ஆபத்துகள் அதிகம். இது போன்ற கணவர்களால் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இந்த செக்ஸ் என்ற உளவியல் பிரச்சினை காரணமாக சின்னாபின்னமாகி விட்டது. நண்பர் ஃப்ரான்சில் வசிக்கிறார். தன் பிள்ளைகள் படிப்புக்காக குழந்தைகளையும், மனைவியையும் இந்தியா அனுப்பி வைத்திருக்கிறார். வந்த இடத்தில் நண்பரின் மனைவிக்கும் யாரோ ஒருவருக்கும் தொடர்பு ஆகி அது பெரிய பிரச்சினை ஆகி விட்டது. எந்த வயதில் வழிகாட்டியாக பெற்றோர் இருக்க வேண்டுமோ அந்த வயதில் அந்தக் குழந்தைகளுக்கு இருவரும் அருகில் இல்லை. நண்பரும் சோக கீதம் வாசித்துக் கொண்டிருக்கிறார். வாழ்க்கைக்கும் பணம் வேண்டுமென்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வேண்டியதில்லை. ஆனால் யாரோ ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு உழைக்கும் நேரத்தில் மனைவிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருந்தால் இந்தச் சூழல் வந்திருக்குமா?

உடனடியாக அந்த ஆப்ஸை அன் இன்ஸ்டால் செய்தேன். பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்து விடும் இது போன்ற ஆபத்தான ஆப்ஸ்களை வெகு கவனமுடன் கையாள வேண்டும். இல்லையென்றால் பெரும் பிரச்சினைகளைக் கொண்டு வந்து விட்டு விடும்.

மிக நல்ல குடும்பங்கள் இது போன்ற பிரச்சினைகளில் சிக்கி சிதறிக் கொண்டிருக்கின்றன. ஒரு நிமிட சபலம் தீர்க்கவே முடியாத சிக்கல்களில் கொண்டு போய் தள்ளி விடும்.

போன் என்பது இப்போது மிகப் பெரிய ஆபத்தான ஒரு கருவியாக மாறிக் கொண்டிருக்கிறது. போனைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது. இல்லையென்றால் ஆபத்துதான்.


Saturday, November 14, 2015

எம்.எல்.ஏ - 4

”அண்ணே ! இந்த உலகத்தில் நல்லவர்களே கிடையாதா?” என்று கேட்டார் சுதந்திரம்.

”சுதந்திரம், நீ அர்ச்சுனனும் இல்லை, நான் கிருஷ்ணனும் இல்லை, உனக்கு எது சொன்னாலும் புரியாதய்யா, அதனால தான் நீ என்கிட்ட அல்லக்கையா இருக்கிற, புரியுதா?” என்று கேட்டார் எம்.எல்.ஏ

கார் விரைவாகச் சென்று கொண்டிருந்தது. சுதந்திரத்துக்கு கழிவிரக்கம் வந்து விட்டது. இத்தனை நாளா அண்ணன் கூட இருக்கிறோம், நம்மைப் போய் இப்படிச் சொல்லிட்டாரே என்று அவருக்கு மனதுக்குள் வருத்தமேற்பட்டது. 

சுதந்திரத்தைப் பார்த்த எம்.எல்.ஏவுக்கு மனதுக்குள் அவரின் மீது இரக்கம் ஏற்பட்டது. 

“சுதந்திரம், உன்னோடு பெரிய அழிச்சாட்டியமாய் போயிடுச்சுய்யா. ஏதாவது கேட்டு என்னைப் பாடாய் படுத்துகிறாய். சரி நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன் கேளும்” என்றார்.

பளிச்சென்று சுதந்திரம் எம்.எல்.ஏ பக்கமாய் திரும்பினார்.

“இந்த உலகத்தில் நல்லவர்கள் என்று யாருமே இல்லவே இல்லைய்யா சுதந்திரம். மகாபாரதத்தை எடுத்துக் கொள். அந்தத் தர்மனே உண்மையை மெதுவாகச் சொல்லித்தான்யா துரோணரைக் கொல்ல உதவி செஞ்சாரு. சத்தமா சொன்னாலும், மெதுவாச் சொன்னாலும் பொய் பொய்தான்யா. ஜெயிப்பதற்கு உண்மை தேவையில்லைய்யா. பொய் தான் தேவை” என்றார் எம்.எல்.ஏ

சுதந்திரக்கு புரியற மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.

மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள்

மாலை நேரம் !

மனதை மயக்கும் பறவைகளின் ஒலியில் கரைந்து கொண்டிருக்கும் காலத்தினூடே நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் இருவர் ஆற்றங்கரை ஓரமாய் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் குரு மற்றொருவர் சீடன்.

ஆற்றங்கரையோரமாய் இருக்கும் தவக்குடிலுக்கு அவ்வப்போது வரும் சீடன் குருவிற்கு பணிவிடைகள் செய்து, குடிலுக்கான காரியங்களைச் செய்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுவான். இப்படியோ கொஞ்ச நாட்கள் கழிந்து கொண்டிருந்தன.

சீடனுக்கும் குருவைப் போல சந்நியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் ஆவல். ஆனால் அழகே உருவான மனைவி, ஆசைப் பிள்ளைகள், அன்பே உருவான தாய், தந்தை மற்றும் உறவினர்களையும், அவர்கள் இவன் மீது வைத்து இருக்கும் பாசத்தை எண்ணியும் சந்நியாசம் பற்றி மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.

சீடனின் மனக்குழப்பத்தின் காரணம் அறிய குரு” சீடனே  உனக்குள் என்ன பிரச்சினை? “ என்று கேட்டார்.

சீடனும் குருவிடம் விஷயத்தை மறைக்காமல் சொன்னான். அதற்கு குரு ”சீடனே, உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். அதை நீ வீட்டுக்குச் சென்ற உடன் சொன்னாயானால், உன் குழப்பத்துக்கு ஒரு விடை கிடைக்கும் ” என்றார்.

அதன்படி குரு சீடனுக்கு அந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

சீடனும் வீட்டை நோக்கி பீடு நடை போட்டுச் சென்றான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அழகான மனைவி அவனுக்கு அமுது படைத்திட அருகில் குழந்தைகளுடன் ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தான்.

அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கை அறைக்குச் சென்றனர்.

சீடன் குரு உபதேசித்த மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் சீடனின் உடல் தானாகவே படுக்கையில் விழுந்தது. மூச்சு நின்றது. உடம்பு பிணம் போல ஆனது. ஆனால் சீடன் அவன் உடம்பை பார்த்துக் கொண்டிருந்தான். இது என்ன குழப்பம் என்று யோசித்த போது குரு உபதேசித்த மந்திரத்தின் மகிமை என்று அவன் புரிந்து கொண்டான்.

படுக்கையறைக்கு வந்த மனைவி பிணம் போல கிடந்த கணவனைக் கண்டு அலறினாள், துடித்தாள், துவண்டாள். கண்ணீரில் அவளின் கண்கள் குழமாயின. அழுது அழுது அவள் முகம் சிவந்து போனது. மணாளன் மறைந்து விட்டானென்று அவளும், சீடனும் உறவினர்களும் அழுது புரண்டனர். வீடே அழும் வனமாக மாறிப்போனது.

இது அத்தனையும் சீடனின் ஆன்மா பார்த்துக் கொண்டிருந்தது. உறவினர்களை எண்ணி அவன் மனம் துடித்தது. எவ்வளவு பாசக்காரர்கள் இவர்கள் என்று அவன் புளகாங்கிதமடைந்தான்.

சீடனின் குருவிற்கு தகவல் எட்டி அவர் சீடனின் வீட்டுக்கு வந்தார்.

அழும் அனைவரையும் பொறுமையாகப் பார்த்து விட்டு அனைவரையும் அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.

”என் சீடனுக்காக இவ்வளவு பாசம் கொண்ட உறவினர்கள் இருப்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆகையால் நானொரு காரியம் செய்யலாமென்று நினைக்கிறேன்” என்றார்.

அனைவரும் குருவினைப் பார்த்தனர்.

”என் தவ வலிமையால் சீடனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வேறொரு உயிர் வேண்டும். யார் இவனுக்கு உயிர் கொடுத்து உதவுகின்றீர்கள்” என்று கேட்டார்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஒருவரும் சீடனுக்காக உயிரைக் கொடுக்க முன் வரவில்லை.

குரு சீடனின் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சென்றார். அவர்களைப் பார்த்து, “உங்களில் யார் என் சீடனுக்காக தங்கள் உயிரைக் கொடுக்க விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.

சீடனின் மனைவி குருவிடம், “அவர் இறந்தது இறந்தது போலவே இருக்கட்டும், இனி உயிர் பெற்று ஒன்றும் ஆகப் போவதில்லை. நான் என் குழந்தைகளுடன் வாழ்ந்து கொள்கிறேன்” என்றாள்.

குரு சிரித்துக் கொண்டே கமண்டலத்தை எடுத்தார். தண்ணீரை சீடனின் முகத்தில் தெளித்தார். தூக்கத்திலிருந்து எழுந்த சீடன் யாரிடமும் எதுவும் பேசாமல் குருவின் பின்னே நடந்தான்.






Thursday, July 23, 2015

எம்.எல்.ஏ - தொடர் 2

டிவியில் பிரதமர் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்வதாக காலில் சுடுதண்ணீர் கொட்டியவன் கதறுவது போல கதறிக் கொண்டிருந்தார்கள்.

”சுதந்திரம், பிரதமர் காங்கிரஸ் கட்சியை அறுபதாண்டுகால ஊழல் ஆட்சி என்றுச் சொல்லிக் கிழித்தார், இப்போ என்ன செய்யறாருன்னு பார்த்தீயா? கம்முனு இருக்காரு?”

“ஆமான்னா, ஒரு அமைச்சர் இந்திய அரசால் தேடப்படுவருக்கு உதவி செய்கிறார். அது சட்டப்படி தேசத்துரோக குற்றம் என்கிறார்கள். ஆனால் அது மனிதாபிமான செயல் என்கிறார்கள் இவர்கள், இதென்னன்னா மனச்சாட்சியே இல்லாமல் இப்படிப் பேசுகிறார்கள்? சாதாரண மனுஷன் இப்படிச் செய்தால் சும்மா விடுவானுவங்களா இவனுங்க?”

”மனச்சாட்சியா? மண்ணாங்கட்டி! ஏன்யா சுதந்திரம், நல்லவன் வாரான்னா மரியாதையா குடுக்குது இந்த சமூகம்? பணக்காரன் வந்தாதான்யா எழுந்து நிக்கிறாங்க. திருடனா இருந்தாக்கூட பணக்காரனா இருந்தால் தான் அவனை மதிக்கிறாங்க. இவனுககிட்டே மனசாட்சிப்படியா நடந்துக்க முடியும்?”

”இருந்தாலும் கூசாமா பேசுகிறார்களே, அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல”

“அதனாலதான்யா நீ என்கிட்டே பிஏவா கையைக் கட்டிக்கிட்டு நிக்கிற, இல்லேன்னா நீயும் ஒரு தலைவரா இருந்துருப்பே. சுதந்திரம், கூசாம பொய் பேசறவந்தான் அரசியல்வாதியா இருக்க முடியும், தெரிஞ்சுக்க! பதவி கிடைக்கிற வரைக்கும் யோக்கியனா நடிக்கனும், பேசனும். பதவி கிடைத்து விட்டால் காது கேக்காதவன் மாதிரி இருந்துக்கணும். இதற்குப் பெயர் தான்யா அரசியல்”

வாசலில் ஆள் நடமாடும் சத்தம் கேட்க, சுதந்திரத்தைப் பார்க்கிறார் எம்.எல்.ஏ.

“யாருன்னு பாருய்யா?”

“ரெகமெண்டேசனுக்கு வந்துருக்காங்கய்யா”

“சரி, சரி ! லூசுப்பயலுவலுக்கு ஒரு லெட்டர் பேடு வச்சுருக்கேமே அதை எடு” 

அரை மணி நேரம் கழித்து வாசலில் சென்று கொண்டிருந்தவர்கள் இப்படி பேசிக் கொண்டே நடந்து சென்றார்கள்.

”நம்ம எம்.எல்.ஏவைப் பார்த்தீங்களா, தொகுதிக்காரன்னு சொன்னவுடனே ஒரு வார்த்தைப் பேசாம ரெகமெண்ட் லெட்டர் கொடுத்தாரு, ரொம்ப நல்ல மனுஷன்யா நம்ம ஆள்”

குறிப்பு: லூசுப்பயல்கள் லெட்டர் பேடில் எழுதப்படும் எந்த ஒரு ரெகமெண்டேசனுக்கு யாரும் எந்த வித ரெஸ்பான்ஸும் குடுக்கமாட்டார்கள் என்றொரு ஏற்பாடு சம்பந்தப்பட்டவர்களுக்குள் உள்ளது.

Thursday, July 9, 2015

எம்.எல்.ஏ தொடர் - 1


மாடியிலிருந்து இறங்கி வந்த எம்.எல்.ஏ, வரவேற்பரையில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரில் நின்றிருந்த பிஏ சுதந்திரத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே”இன்றைக்கு என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

"அதையே ஏன்னா கேட்கிறீங்க? " என்று சொல்லிய சுதந்திரத்தின் கையில் வெள்ளை வெளேர் என்று ஒரு போனைப் பார்த்தார்.

“புது போனாய்யா?”

சுதந்திரம் மந்தகாசமாய் புன்னகைத்துக் கொண்டே “அம்பதாயிரம்னா, ஐபோனு” என்று பெருமையாகச் சொன்னார்.

சுதந்திரத்தை ஏற இறங்கப் பார்த்த எம்எல்ஏ, “ஏன்யா? அம்பதாயிரம் போனை உன் தலையில கட்டின கம்பெனிக்காரந்தான்யா பெருமைப்படனும், நீ எதுக்குய்யா பெருமைப்படறே, நீயெல்லாம் திருந்தவே மாட்டியாய்யா? என்கிட்ட பிஏவா இருந்துக்கிட்டு லூசுத்தனமா இருக்காதய்யா” என்றார்.

சுதந்திரம் காற்றுப் போன பலூனாகி விட, “வேற என்னய்யா சமாச்சாரம்?”.

தொடரும் ...

குறிப்பு : எனக்கு நீண்ட நாட்களாக 150 பக்கத்தில் நாவல் எழுத வேண்டுமென்ற ஆவல். கற்பனைகளை கலந்து கட்டி எழுதுவதென்பதெல்லாம் எனக்கு ஐம்பது வயது வரும் போது சாத்தியமோ என்னவோ?

நான் எழுத நினைத்துக் கொண்டிருக்கும் நாவலின் வடிவமோ வேறு. உண்மைக்கும் பொய்யுக்குமான உரையாடலாய் சமீபகாலத்து நிகழ்வுகளை கலந்து வரலாற்றுப் பதிவாய் பதிய வேண்டுமென்ற எண்ணத்துடன் நான்கைந்து வாரமாய் சிந்தனையோட்டம் சென்று கொண்டிருந்தது. இதோ ஆரம்பித்து விட்டேன். விரும்பியவர்கள் படிக்கலாம். விரும்பாதவர்கள் எப்படியோ அது அவர்கள் பாடு.

Thursday, June 25, 2015

அவன் பெயர் சதக்கத்துல்லா


புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதிதான் எனது ஊர். ஆவணம் தாத்தா ஊர். நெடுவாசல் எனது ஊர். ஆனால் வளர்ந்ததெல்லாம் தாத்தாவிடம். ஒரு பெண்ணால் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஊரில் பெரும் தனக்காரனாய் வாழ வேண்டிய அடியேன் ஊரு விட்டு ஊர் வந்து பிழைக்க வேண்டிய விதிப்பலனை அடைந்திருந்தேன்.

பிள்ளை பிராயத்தின் போது கூட பழகிய பல்வேறு வகுப்புத் தோழர்கள் காலவெள்ளத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டிருக்கிறோம். ஆவணத்தின் வடக்குத் தெருவில் இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் தான் எனது ஆரம்பக்கல்வி ஆரம்பம். எனது பள்ளித்தோழன் சின்னையனை இன்றும் மறக்க முடியவில்லை. ஊரில் பெரும் பணக்காரனான சின்னையன் என் மீது கொண்ட அன்பினால் என்னை முதுகில் சுமந்து என் வீட்டுக்கு அழைத்து வர முற்படுவான். அவனது தாத்தா அதற்காக அவன் முதுகில் சவட்டி விடுவார். அருகிலிருக்கும் பிள்ளையார் கோவிலில் என்னை அமர வைத்து விட்டு அம்மாவிடம் சென்று அழுது கொண்டே தங்கவேலை தூக்கிக் கொண்டு வர விடமாட்டேன் என்று தடுத்து விட்டார் என்றுச் சொல்லி இருக்கிறான். ஏன் இந்த அன்பு? காரணங்கள் அறியா வயதில் ஏற்படும் அன்பு வயது வளர வளர காரணங்களை அறிந்து கொள்ள முயல்கிறது. வயது  ஏற ஏற அனுபவங்களை மற்றும் மனது அறிந்து கொள்வதில்லை. அன்பினை மறைத்து விடவும் முயல்கிறது. பயன் கிடைக்குமா என்று அலைபாய்கிறது. 

சிறு வயதில் சின்னஞ்சிறு பாலகர்களுக்கிடையே உண்டாகும் நட்புக்கு ஏதும் காரணமும் இருக்க முடியுமோ? காரணம் அறிந்தா நட்பு ஏற்படும்? 

எத்தனை வயது ஏறினாலும் என்ன? சின்னஞ்சிறு வயதில் கொண்ட நட்பு சிதைந்தா போய் விடும். இன்னும் சிதையாமாலிருக்கும் இன்னுமொரு நண்பணுண்டு.

அவனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பல்வேறு துயரங்களிலும் துன்பங்களிலும் ஆட்பட்டுக்கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றான் அவன்.

எங்கிருப்பான் அவன்? அனுமானிக்கவே முடியாது. ஆவணத்திலிருப்பான் அல்லது மலேசியாவில் இருப்பான் அல்லது சிங்கப்பூரில் இருப்பான். திடீரென்று துபாயிலிருந்து பேசுகிறேன் என்பான்.

ஏதாவதொரு நாள் போன் வரும். ”தங்கம் ! சதக்கு பேசுறேண்டா” என்பான். ஊருக்குச் சென்றால் எங்கிருந்தாலும் தேடி வந்து விடுவான். ஊருக்கு வந்து விட்டான் என்றால் உடனே போன் வரும். 

எனது பாலப்பிராயத்திலிருந்து அவனிடமிருந்து நான் அடைந்தது அவனின் அன்பு மட்டுமே. அன்றைக்கு இருந்த அதே அன்பு இன்றைக்கும் அவனிடமிருந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவனிடமிருந்து போன் வந்து, அவன் பேசினால் எனக்கு உலகம் இயங்குவது நின்றே போய் விடும். அவனின் ஏகாந்த அன்பில் கரைந்து போய் விடுவேன்.

ஊருக்கு வந்தானென்றால் பலாப்பழத்தைத் தூக்கிக் கொண்டு கோவைக்கு வருவான். ”ஒரு நாள் கூட இருடா” என்பேன். கேட்கமாட்டான் உடனே சென்று விடுவான்.

பலனை எதிர்பாராத அந்த அன்பு உயிரை நான் என்றைக்கேனும் மறக்க முடியுமா? அவன் தான் எனது ஆருயிர் நண்பர் “சதக்கத்துல்லா!”

Friday, June 19, 2015

மருதாணி போட்டு விடுவது எப்படி?

இது கொஞ்சம் பிரச்சினையான பதிவு தான்(எனக்கல்ல). எனது பிளாக்கிற்கு அனேக பெண் வாசகிகள் உண்டு என்பதையும் அதனால் உருவாகப் போகும் ஒரு சில பின் விளைவுகளைப் பற்றியும் யோசித்தபோது மனதுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்ததாலும் இப்படி ஆரம்பித்து விடுகிறேன்.

ஓட்டைகள் இருக்கும் பையில் எதையேனும் ஊற்றி வைத்தால் ஒழுகிப் போய் விடும் அல்லவா? ஏழு ஓட்டைகள் இருக்கும் பையான நம் உடலில் இருக்கும் மூச்சு மட்டும் உள்ளுக்குள்ளேயே சென்று வந்து கொண்டிருக்கிறதே அது எப்படி? அதைத்தான் ‘நம் உடலொரு மாயப்பை” என மரணத்துக்கு விளக்கம் கேட்ட நசிகேதன் சொன்னான். மூச்சை விட்டால் முடிந்து போகும் எல்லாம். இப்படியான ஓட்டைப்பையில் நல்லது கெட்டது என்று வகை தொகையில்லாமல் நாம் சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றோம். பொய், சூது, திருட்டு, பொறாமை இப்படி தீமைகளாய் நாம் சேர்த்துக் கொண்டே வைத்திருக்கிறோம். அதனால் என்ன கிடைத்து விடப்போகிறது? மாயப்பை என்றேனுமொரு நாள் அழிந்து விடும் என்பதை மனதில் எப்போதும் இருத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

மதிய நேரத்தில் உணவுக்குப் பின்னால் விஜய் டிவியில் வரும் சரவணன் மீனாட்சி தொடரை அவ்வப்போது மனையாள் சகிதம் கண்டு கடுப்பதுண்டு. மதுரை சீரியலில் ஆரம்பித்து மீனாட்சி வரை அழகாய் சென்று கொண்டிருந்த அந்த சீரியல் ஏனோ திடீரென வேறு பக்கம் செல்ல ஆரம்பித்தது. ஓங்கு தாங்கு என்று உதடு பெருத்த ஒரு நாயகியை, கதாநாயகியாக வைத்த இயக்குனரின் ரசனைக்கு என்ன காரணமோ? இருப்பினும் அந்த ஏலேலோ பாடலுக்காக சரவணன் மீனாட்சியை கடுப்புடன் காண்பதுண்டு.

அதிலொரு நாள் மருதாணி வைக்கும் படலம் வந்தது. சரவணன் மீனாட்சிக்கு மருதாணி வைத்து விடுவான். மறு நாள் காலையில் ஒவ்வொருவராக வந்து கையை சுத்தம் செய்து பார்ப்பார்கள். அதில் மீனாட்சியின் கை மட்டும் மருதாணியால் ரத்தச் சிவப்பாக மாறி இருக்கும். அங்கிருக்கும் பாட்டி உனக்கு கணவனாக வருபவன் உன் மீது கொள்ளை அன்பு வைத்திருப்பான் என்றுச் சொல்வார். ’இப்படி வேற ஒன்னு இருக்கோ?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்று இரவு உணவை முடித்து விட்டு பான் ஸ்டார்ஸ் பார்ப்பதற்காக டிவியை ஆன் செய்தேன். 

“ஏங்க உங்களுக்கு ஒரு வேலை இருக்கு” என்றார் மனையாள்.

”சொல்லு கோதை, என்ன?”

முகமெல்லாம் புன்னகையுடன் கையொலொரு பிளாஸ்டிக் உறையுடன் அருகில் அமர்ந்து “மருதாணி வைத்து விடுங்கள்” என்றார்.

எனக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது.

“அய்யய்யோ! அடக்கடவுளே! இதென்னடா எனக்கு வந்த சோதனை? அதுவும் பதினைந்து வருடம் கழித்து? இப்படியெல்லாமா மனுசனுக்கு சோதனை வரும்? “ என்று மனது தானாகவே புலம்ப ஆரம்பித்து விட்டது.

// ஆமா நான் ஏன் புலம்புகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? //

இந்த ஆளு நம்ம மேல பிரியமா இருக்காரா இல்லையான்னு பார்க்கணும் என்று அம்மணி முடிவெடுத்து விட்டார். (டிவி சீரியலினால் எனக்கு வந்த பிரச்சினையைப் பார்த்தீர்களா???) நான் வைத்து விடும் மருதாணி நன்றாக சிவக்கவில்லை என்றால் என் கதியை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். காதலித்து கடத்திக் கொண்டு போய் கல்யாணம் செய்தவன் அடியேன். மருதாணி வழியாக என் காதலுக்கு வந்த சோதனையை நானெப்படி வெல்வது? 

தோட்டத்தில் இருந்த மருதாணிச் செடியை பையனிடம் ”வெட்டி வீசி விடு” என்றுச் சொல்லி இருந்தேன். சரியென தலையை மட்டும் ஆட்டி விட்டான். அந்த மருதாணியால் நான் படும் பாடு அவனுக்கு எங்கே தெரியப்போகிறது? பயல் எனக்கு வேட்டு வைத்து விட்டான். சரி அவன் எதுக்கு வந்தானோ அதைச் செய்கிறான். மனதுக்குள் “ நீ நல்லா வருவாயடா பயலே!” என்று நினைத்துக் கொள்வதை எனக்கு வேறு என்ன வழிதான் இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்?

”தென்னையை வைத்தால் இளநீரு, பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு” என்று அன்றைக்கே சொல்லி வைத்தார்கள். எவன் கேட்கிறான்? பட்டால் தான் புத்தி வருகிறது.

இடது கையில் மனையாள் மருதாணியை வைத்துக் கொண்டார். அது முடியும் தருவாய் வரைக்கும் எனக்குள் திக்கென்று இருந்தது. வலது கையை என்னை நோக்கி புன்னகையுடன் நீட்டினார். அது ஏதோ ஒரு பெண் சாமி சூலாயுதத்தை என்னை நோக்கி நீட்டியது போலவே எனக்குத் தோன்றியது.

நெஞ்சுக்குள் படபடப்புடன் கையைப் பிடித்து மருதாணியை எடுத்து விரலில் வைத்து விட்டு, கையின் நடுவில் வட்டம் போல அழகாய் இட்டு, சுற்றி வர ஏழு புள்ளிகளை வைத்து விட்டேன்.

மருதாணி வைத்துப் படுத்துக் கொண்டால் விடிகாலையில் அல்லவா கையைச் சுத்தம் செய்வார்கள்? ஆனால் மனையாளோ பாதி ராத்திரியில் எழுந்து போய் அதுவும் நான் மருதாணி வைத்து விட்டேன் அல்லவா அந்த வலது கையை மட்டும் கழுவி விட்டு வந்து விட்டார். 

இது செல்லாது செல்லாது என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. எனக்குப் புரிந்து என்ன ஆகப்போகின்றது? புரிய வேண்டியவர்களுக்கு அல்லவா புரிய வேண்டும்? எல்லாம் எனக்கு வந்த சோதனை. 

விடிய விடிய நானல்லவா உலகத்தில் இருக்கும் அத்தனை சாமிகளை எல்லாம் தூங்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருந்தேன். நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்று அம்மணி நினைத்துக் கொண்டு கையைக் கழுவி வந்து விட்டார். எனக்குள் பீதி கிளம்ப ஆரம்பித்து விட்டது. இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் நண்பர்களே, இப்போது இந்தச் சோதனையெல்லாம் தேவையா? நீங்களே சொல்லுங்கள். இப்படியும் கொடுமைகள் இந்த உலகில் நடக்குமா? பெண்கள் ஏன் இப்படியெல்லாம் இந்த் ஆண்களை வதைக்கின்றார்களோ தெரியவில்லை.

உண்மையில் ஆண்கள் தான் பெண்களிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிப்போய் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று யாருக்குத் தெரியப்போகின்றது? 

எல்லாம் மாயை!

பொழுதும் விடிந்தது. 

விடிய விடிய இடது கையில் காய்ந்து இருந்த மருதாணி ஓரளவுக்குத்தான் சிவந்திருந்தது.  ஆனால் பாதி ராத்திரியில் எழுந்து போய் கையைக் கழுவி விட்டு வந்த அதுவும் அடியேனால் வைத்து விடப்பட்ட வலது கை ரத்தச் சிவப்பில் சிவந்து இருந்தது. மனையாளுக்கு ஒரே சந்தோஷம்.

அலுவலகத்துக்கு கிளம்பும் போது தோட்டத்தில் இருந்த மருதாணிச் செடியைப் பார்த்தேன். அது காற்றில் அசைந்து என்னிடம் ஏதோ சொல்ல வருவது போல இருந்தது. புன்னகையுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.




Tuesday, June 9, 2015

காணாமல் போய்விட்ட கைப்பக்குவம்

என் சின்னம்மா வைக்கும் மீன் குழம்பில் ‘கவுச்சி’ வாடையே அடிக்காது. கடல் மீனாக இருந்தாலும் சரி, ஆற்று மீனாக இருந்தாலும் சரி. பைங்கால் சித்தி வைக்கும் சாம்பாரும், இறால் குழம்பும் ஒரு குண்டாச் சோற்றை அள்ளி அள்ளி விழுங்க வைக்கும். இறால் வருவலின் சுவைக்கு ஈடே இல்லை. அம்மா வைக்கும் சாம்பாருக்கு இணை இதுவரையிலும் சுவைக்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு கோபி சென்று திரும்புகையில் புஞ்சை புளியம்பட்டியில் நம்பியூர் போகும் வழியில் ஒரு வீட்டு மெஸ்ஸில் கத்தரிக்காயும், உருளையும் சேர்ந்த பொறியல் சாப்பிட்டேன். அந்த மாதிரியான சுவையான பொறியலை இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை. ஆஹா அற்புதம். (ஆமாம் உங்களுக்கு புஞ்சை புளியம்பட்டியின் ஸ்பெஷல் கதை தெரியுமல்லவா???)

திருவாரூருக்குச் சென்றிருந்த போது எனது நண்பரின் வீட்டில் மாங்கொட்டை சாம்பாரும், பிஞ்சுப் பறங்கிக் காய் மசாலாவும் சாப்பிட்டேன். அவர் எப்போது திரும்பவும் திருவாரூர் வருவார், திரும்பவும் எப்போது மாங்காய் சாம்பாரும், பறங்கிக்காய் மசாலாவும் சாப்பிடுவோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நண்பரின் மனைவியாரின் கைப்பக்குவத்தில் அவர் சமைக்கும் “புளியதோரை” தெய்வத்தின் சன்னிதியில் தரும் பிரசாதம் போலவே இருக்கும்.

ஊருக்கு ஒரு ஸ்பெஷல் உணவு என்பது போல வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் உணவு இருக்கும். அதுவெல்லாம் அந்தக்காலமாகி விட்டது.

இப்போதெல்லாம் பெண்கள் சமையல் கட்டில் சென்று சமைப்பது என்றாலே எட்டிக்காயைக் கடித்தது போல ஆகி விடுகின்றார்கள். கோவையில் ஹோட்டல்கள் ஆட்களால் நிரம்பி வழிகின்றன. அதே போல மருத்துவமனைகளிலும் ஆட்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

சாந்தி ஹியர் கேண்டீனில் ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேர் சாப்பிடுகின்றார்களாம். பிரபல ஹோட்டல்களில் நுழையவே முடியவில்லை. பெண்களுடன் ஆண்களும் குழந்தைகளும் ஒவ்வொரு ஹோட்டலாய் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

சமீபத்தில் கேரளா சென்றிருந்த போது அங்கிருக்கும் ஹோட்டல்களில் மசாலா உணவுகள் தான் கிடைத்தன. சாம்பாரில் கூட மசாலாவைச் சேர்க்கின்றார்கள். சாதம் கேட்டால் முடிந்து விட்டது என்று நாண், சப்பாத்தி, புல்காவைக் கொண்டு வந்து வைக்கின்றார்கள். அதற்கு இணை உணவு மசாலா. ஒரே ஒரு நேரம் சாப்பிட்டதன் விளைவாக ஒரு நாள் முழுவதும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு விட்டது.

எந்த வகை உணவானாலும் ஒரே மாதிரியாகத்தான் சமைக்கின்றார்கள். கோபி சென்றிருந்தேன். சாம்பார் சாப்பிட்டேன் ஒரே சுவை. எனது நண்பர் வீட்டில் எனது வீட்டில் வைக்கும் சாம்பார் போலவே இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டில் விசாரித்த போதுதான் தெரிந்து கொண்டேன். மார்க்கெட்டிங்க் எந்தளவுக்கு மனிதர்களை மாற்றம் செய்து விட்டது என்று அதிர்ந்து விட்டேன்.

சக்தி மசாலா, ஆச்சி மசாலா என்ற மசாலாக்கள் ஒவ்வொரு அடுப்பங்கரையிலும் நுழைந்து விட்டன. சாம்பார் பொடி, ரசப்பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, மீன் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் என கிட்டத்தட்ட தமிழர்களின் பெரும்பாலோனோர் வீட்டில் மேற்படி மசாலாக் கம்பெனிகளின் மசாலாப் பாக்கெட்டுகள் தான். பின்னர் எங்கே கைப்பக்குவம் இருக்கும்? தமிழர்களின் பெரும்பாலான வீட்டில் ஒரே சாம்பார், ஒரே சுவை.

மசாலாக் கம்பெனியார்கள் பெண்களை மூளைச்சலவை செய்து விட்டனர். இன்ஸ்டண்ட் மசாலாவை பெண்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். வீட்டுச் சாப்பாட்டுக்கும், ஹோட்டல் சாப்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது.

என் வீட்டில் அம்மா ஊரிலிருந்து அரைத்துக் கொடுத்து விடும் மல்லித்தூள் மசாலாதான் குழம்புக்கு பயன்படுத்துகிறோம். ஸ்பெஷலாக சாம்பார் தூளை அரைத்து விட்டார் மனையாள். சாம்பார் வாசம் அசத்தும். எந்த ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றாலும் வீட்டு உணவு நினைவுக்கு வந்து விடுவதை தவிர்க்க முடியவில்லை.

உங்கள் வீட்டில் அடுப்பங்கரைக்குள் சென்று பாருங்கள். மசாலா பாக்கெட்டுக்களை எடுத்துக் குப்பைக் கூடையில் போடுங்கள். மனையாளின் கைப்பக்குவத்தை உணர வையுங்கள். காணாமலே போய் விடக்கூடிய மனைவியின் கைப்பக்குவத்தை உங்களின் குடும்பத்துக்கு உணர்த்துங்கள்.

வாழ்க வளமுடன் !!!

Saturday, December 27, 2014

ஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம்

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கோவையில் தன் பதிப்பினை வெளியிட்ட ஆண்டு முதலாய் இது நாள் வரையிலும் தொடர்ந்து அப்பத்திரிக்கையை வாசித்து வரும் வாசகன் என்ற முறையில் இப்பதிவு எழுத எனக்கு உரிமை இருக்கிறது என்ற வகையில் எழுதுகிறேன்.

தினமணி, தினத்தந்தி, தினமலர் மற்றும் இதர நாளிதழ்களை நான் செய்திக்காக மட்டுமே படிப்பேன். ஒரு வகையான டெம்ப்ளேட் தனமான செய்திகளையே தொடர்ந்து வழங்கி வரும் இப்பத்திரிக்கைகள் மீதான ஒரு வித பிடிமானம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை மீது எனக்கு மிகுந்த பிரியம். அதன் செய்திகளும் தலைப்பும் செய்திக்குச் சம்பந்தப்பட்டவர்களை விமர்சித்தே வெளிவரும். தகவல் செய்திகள் கூட அப்படித்தான் இருக்கும்.

மக்களின் வரிப்பணத்தில் ஊழியம் பெறும் அரசு வேலையில் இருப்போரும், மக்கள் பணத்தை செலவிடும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் தன் கடமை மறந்து தனக்கு சம்பளமும், பணிப்பாதுகாப்பும் தரும் மக்களுக்குத் துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபடும் போது அந்தத் தவற்றினைச் சுட்டிக்காட்டி அவர்களை சட்டப்படியான வழியில் பணியைத் தொடரச் செய்ய வேண்டிய மாபெரும் சேவையில் இருக்கும் ஊடகத்தினர் தம் கடமை மறந்து செய்திகளை வெளியிட மறுப்பதும், மறைப்பதும் தகுமா? என்ற கேள்வி எனக்குள் உதித்தது.

ஏனென்றால் சின்னஞ் சிறு செய்தியாக இருப்பினும் அதை விரிவாக எழுதும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தமிழகத்தின் தன்னிகரில்லா நடிகரும், உலகத்திலேயே அதிக மக்கள் விரும்பும் நடிகருமான திரு.ரஜினி காந்த் சொத்து ஏலம் வருகிறது என்ற செய்தியை ஒரு வரியாகக் கூட வெளியிடவில்லை. ஏனென்று யாரும் கேட்கப்போவதில்லை அப்படியே கேட்டாலும்  அவர்கள் பதில் சொல்லப்போவதும் இல்லை. எந்தச் செய்தியை வெளியிட வேண்டும்? எந்தச் செய்தியை வெளியிடக்கூடாது என்ற சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது என்கிற போதிலும், டைம்ஸ் நவ் டிவியில் பலரைக் கேள்வி கேட்கும் அர்னாப்பை இனி பார்க்கும் போது மனதுக்குள் நகைப்புத்தான் தோன்றும்.

வேஷம் கலைந்து விட்டது....



Wednesday, October 8, 2014

நீதியா வென்றது?

உண்மை என்பது எப்போதும் இருப்பது. எப்போதும் பேசுவதுமில்லை. சாட்சியாக வந்து நிற்பதும் இல்லை. உண்மையின் அர்த்தமே மனிதனின் வாழ்க்கையோடு சூட்சுமமாய் புதைந்து கிடப்பது. உண்மை மனிதனின் மனசாட்சியுடன் தொடர்புடையது.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் புதை குழியில் பதுங்கி இருந்த போது அவருடன் உரையாடிக்கொண்டிருந்துப்பது எதுவோ அது தான் உண்மை. என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு நிச்சயம் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

உண்மையும் நீதியும் வேறு வேறு. நீதிக்கு என்று தனி வரையறை. உண்மைக்கென்று தனி வரையறை. இன்னும் புரியும் படிச் சொல்ல வேண்டுமென்றால் மகாபாரதக்கதையை எடுத்துக் கொள்வோம்.

மகாபாரதத்திலே பாண்டவரின் அரண்மனையில் தண்ணீரில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்து நகைத்த பாஞ்சாலி சிரிப்பு முகத்தினால் துரியோதனன் நடந்து கொண்டது அவனுக்கான நீதி. இந்த ஒரு காரணத்தால் அவிழ்ந்து விழுந்த கூந்தலுக்காக கொன்று குவிக்கப்பட்டார்கள் துரியோதனாதிகள். ஆனால் அதுதான் உண்மையா? உண்மை என்பது என்ன? என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

உண்மை தனக்கானவற்றை என்றேனும் பெற்றுக் கொண்டு விடும். மனிதர்களின் வேதனைகளுடனும், துன்பங்களுடனும், துயரங்களுடனும் பின்னிக் கிடப்பது உண்மை. அந்த உண்மையின் வீச்சு படு கொடூரமானதாய் இருப்பினும் அதனிடமிருந்து தப்பிப்பது முடியாத காரியம்.

வாழும் வரை பிறருக்கு உபயோகமாய், பிறரை கிஞ்சித்தும் வஞ்சித்து அவர்களின் சாபங்களைப் பெறாத வரையில் உண்மை உறங்கிக் கொண்டிருக்கும். சாபங்கள் தான் உண்மைக்கு உரம். உரமில்லாத உண்மையால் யாருக்கும் எந்த வித துன்பமுமில்லை. துயரமுமில்லை.

உரத்தை தயார் செய்வது அவரவர் செயலில் உள்ளது.


Monday, June 2, 2014

கதை சொல்லும் வீடு - (1)

எகிப்திய பிரமிடுகள், இந்துக் கோவில்கள் போன்ற மர்மங்கள் நிறைந்து கிடக்கும் இடங்கள் இவ்வுலகில் பல உண்டு. இந்த மர்மங்களுக்குச் சாட்சியமாய் இருந்த மனிதர்கள் கால ஓட்டத்தில் ஒரு நாள் காணாமலே போய் விடுகின்றார்கள். அவர்களூடே அவர்கள் சம்மந்தப்பட்ட மர்மங்களும், ரகசியங்களும் மறைந்து போய் மேலும் மேலும் புதிராய், வரலாற்றுச் சுவடாய் நின்று கொண்டிருக்கின்றன. அந்த ரகசியங்கள் வெளிப்பட்டிருந்தால் மனிதனுக்கு உதவியாக இருந்திருக்கும். 

நான் அப்படி இருக்கப் போவதில்லை. எனக்குள் மனிதர்களால் நிகழ்த்தப்படும் ரகசியங்களை நான் எழுதத் துணிந்து விட்டேன். நானொரு வீடு என்று உங்களுக்குத் தெரியும். வீடு கதை சொல்லுமா என்றெல்லாம் யோசித்து மூளையைச் சூடாக்கிக் கொள்ளாதீர்கள்.

பாலு மகேந்திராவின் வீடு படம் பார்த்திருக்கின்றீர்கள் தானே. அந்த வீடு சொல்லும் கதையைப் பார்த்திருக்கின்றீர்கள் தானே? அதைப் போலத்தான் நானும் உங்களிடம் கதைச் சொல்லப் போகின்றேன். நான் பிறந்த தேதி எனக்குத் தெரியும். என் வாழ் நாள் எத்தனை நாட்கள் என்று எனக்குத் தெரியாது. நானும் மனிதனைப் போலத்தான். 

 நான் சொல்லும் கதையைக் படிக்க விரும்பியவர்கள் படிக்கலாம்.

-
தொடரும்



Monday, May 26, 2014

பேரழகியால் வந்த பிரச்சினை

ஒல்லியான தேகம்.  நல்ல உயரம். நெற்றியில் வகிடெடுத்து குங்குமம் தீட்டி இருக்கும். வலது மூக்கில் மூக்குத்தி.

வலது கையில் டீ கேன். இடது கையில் பலகாரம்.

திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாறிய டெண்டரால் இவருக்கு அந்தக் கடை கிடைத்ததாம். ஒரு வேளை அதிமுகவின் கடை நிலைத் தொண்டராக இருக்கக்கூடும்.  சிங்கா நல்லூர் உழவர் சந்தையில் இருக்கும் தேநீர்க்கடையில் மேலே சொல்லும் பெண் இருக்கிறார்.

ஓரிடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்கமாட்டார். சுறு சுறுவென நடை. டீ ஊற்றிக் கொடுப்பது என்ன? பலகாரம் எடுத்துக் கொடுப்பது என்ன? அடுத்த நபரிடம் இவ்வளவு பாக்கி என்றுச் சொல்லி காசு வாங்கி வைத்துக் கொள்வது என மனித தேனீ போல உழைத்துக் கொண்டிருப்பார் அப்பெண்.

அன்பு நண்பர்களே! இன்றைய பெரும்பாலான வீட்டில் இருக்கும் பெண்கள் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறார்கள் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

வீடு சுத்தம் செய்து, வாசல் தெளித்து, கோலம் போடுவது எத்தனை பெண்கள் என்று எண்ணிப் பாருங்கள். 

இயற்கையின் கொடையான சாணத்தை எத்தனை பெண்கள் வாசலில் தெளிக்கின்றார்கள் என்று நினைத்துப் பாருங்கள். 

இந்தச் சாணியில் தானே அந்தக் காலத்துக் குழந்தைகள் புரண்டு உருண்டு வளர்ந்தன. அப்போதெல்லாம் எந்த மருத்துவமனைக்கு குழைந்தகளை அழைத்துச் சென்றார்கள்? நோயெதிர்ப்பு மருந்தாகிய சாணத்தை இன்று எந்தப் பெண்ணாவது தொட விரும்புவாரா?

சுத்தம் சுத்தம் என்றுச் சொல்லி கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தி முடிவில் மருத்துவ மனைக்குத்தானே சென்று கொண்டிருக்கிறோம்.

பெண்கள் இன்றைக்கு உடம்பு வியர்க்க வேலை செய்கிறார்களா என்று கேட்டால் வேலையா நானா என்பார்கள். துவைக்க, அரைக்க, சாப்பிட என எல்லாமே ரெடிமேட்.

முடிவில் நோயாளியாய் மாறி மருத்துவ மனைக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களைச் சுற்றி இருக்கும் பல பெண்கள் நோயோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சருமம் மட்டும் பளபளவென இருந்தால் அழகோ அழகு என்று நினைக்காதீர்கள். அது அழுகிக் கொண்டிருக்கும் உடம்பு என்பதை உணருங்கள். தினமு உழைத்து உழைத்து உரமேரிப் போன பெண்கள் தானே பேரழகிகள்.

வாரம் தோறும் உழவர் சந்தைக்குச் செல்லும் வழக்கம். என்னைப் பார்க்கும் போதெல்லாம், ”அண்ணா டீன்னா” என்று கேட்பார் அவர். மறுத்து விடுவேன். இது வாரம் தோறும் நடக்கும் ஒரு சம்பவம். இந்த சம்பவத்தால் ஒரு பிரச்சினை வந்து விட்டது எனக்கு.

நானும், மனையாளும், மனைவியின் உறவினர் அரசமரத்தோட்ட கவுண்டரும் பேசிக் கொண்டிருந்தோம். நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், “கோதை, இந்த ஏரியாவிலேயே பேரழகி இவர் தான்” என்று அப்பெண்ணைப் பார்த்துச் சொன்னேன். அப்படி வெட்கப்பட்டார் அப்பெண். கோதைக்குச் சிரிப்பு.

அவர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து அகன்றதும், கவுண்டர் என்னைப் பார்த்து, “ ஏங்க, எம்ம புள்ளைய பக்கத்துல வச்சுக்கிட்டே இப்படிப் பேசுறீங்களே”ன்னார்.

அசட்டுச் சிரிப்பொன்றினைச் சிரித்து வைத்தேன்.

பிரச்சினை இத்தோடு முடியவில்லை. இப்போது சந்தைக்குச் சென்றால் அவர் அருகில் வந்து விட வேண்டுமென்ற உத்தரவால் ஆப்பசைத்த குரங்கு கதையாகிப் போனது எனக்கு.


Thursday, May 15, 2014

தாவணியும் பழைய சாதமும்




தமிழர்கள் ஏன் தங்களது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வருகின்றார்கள் என்பதே புரியவில்லை. இவர்கள் என்ன தான் நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்றே புரியவில்லை. அமெரிக்காகாரன் ஆராய்ச்சி செய்து, “பழைய சாதத்தில் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும், உடலுக்கு ஊட்டம் தரும் சக்தியும், அத்துடன் இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் மேலும் உடலுக்கு வலு சேரும்” என்று சொல்கிறான். ஆனால் பழைய சாதத்திற்குச் சொந்தக்காரர்களோ பழைய சாதமா “அய்யே! “ என்கிறார்கள்.

இரவு படுக்கப் போகும் முன்பு, மண்சட்டியில் இரவு வடித்த ஆறிய சாதத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வைத்து விட்டு மறு நாள் காலையில் கிடைக்கும் சாதமும், அதன் நீரும் தான் “அமிர்தம்”

இதற்காகவே ஊருக்குச் சென்றிருக்கும் போது மண்சட்டி வாங்கி வந்து மனையாளிடம் கொடுத்தேன். நகரத்தில் வாழ்ந்தவள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பெரும்பாலும் குழம்பு, பொறியல் போன்றவைகள் மண்சட்டியில் தான் சமைக்கிறார்.

இப்போதெல்லாம் காலையில் கொஞ்சம் மோர் விட்டு, கரைத்து, தொட்டுக்கொள்ள காய்கறிகள் கூட்டும், கொஞ்சம் சின்ன வெங்காயமும் சாப்பிடுகிறேன். தற்போது கோவையில் குளிராக இருந்தாலும் அமிர்தச் சாப்பாடு இல்லையென்றால் எனக்கு இறங்கவே இறங்காது. வாரம் நான்கைந்து தடவை பழைய சாதமும், சின்ன வெங்காயமும் தான்.

சமீபத்தில் ஒரு கோவிலுக்குச் சென்றிருந்த போது அங்கு வந்திருந்த பெரும்பாலான இளம் பெண்கள் சுடிதார், டைட் டீசர்ட், பேண்ட் அணிந்து வெகு கவர்ச்சியாய் பார்ப்போரை கிளர்ச்சியடையும் விதமாக வந்திருந்தார்கள்.

அதில் ஒரு சில பெண்கள் தாவணி அணிந்து, தலையில் பூச்சூடி, நெற்றியில் திலகம் துலங்க “அம்மனைப்” போல வந்திருந்தார்கள்.

தமிழர்கள் தனி அடையாளமான “தாவணியும் பாவாடையும்” கொஞ்சம் கொஞ்சமாய் காணாமலே போய்க் கொண்டிருக்கிறது. தமிழனுக்குரிய அடையாளத்தை இழந்து அப்படி என்ன மிகச் சிறந்த நாகரீக வாழ்க்கை வாழ்கிறார்களோ தெரியவில்லை.

மலேயாக்காரர்கள்,சீ னர்கள் எங்கு சென்றாலும் தங்கள் அடையாளங்களை எப்போதும் இழப்பதில்லை. ஆரியர்கள் என்றுச் சொல்லக்கூடிய பிராமணர்களும் தங்களுக்குரிய எந்த ஒரு அடையாளத்தையும் இழக்கவே மாட்டார்கள். யூதர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்க நாடில்லாத போது ஒரு தனிப்பட்ட குழுவை உருவாக்கி, அவர்களுக்கு உதவி செய்து யூத கலாச்சார, இலக்கிய விழுமியங்களை பாதுகாத்து வந்தார்கள். இன்றைக்கு இஸ்ரேல் என்றொரு தனி நாட்டையே உருவாக்கி வாழ்ந்து வருகிறார்கள்.

உலகிற்கே நாகரீகம் கற்றுக் கொடுத்த தமிழர்கள் இப்படியா தரம் தாழ்ந்து போவார்கள்.

மனது வலிக்கிறது.


Saturday, May 10, 2014

ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா




கீரமங்கலம் அரசு பள்ளியில் ப்ளஸ் 1, 2 படித்துக் கொண்டிருந்த போது பைங்காலில் இருந்த சின்னம்மா வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்தேன். தம்பி நடராஜ் தான் அழைத்து வருவான்.

காலை, மாலை சின்னம்மா வீட்டில் சாப்பாடு, மதியம் மட்டும் செட்டியார் கடையில் சாப்பாடு. செட்டியார் அழுக்கு வேட்டி கட்டி இருப்பார். எப்போதுமே வியர்வையுடனே இருப்பார். புகை படிந்த ஹோட்டல். இரண்டு பக்கமும் பெஞ்ச் போடப்பட்டிருக்கும்.

மாதா மாதம் செட்டில்மெண்ட் என்பதால் எனக்கு இரண்டு ரூபாய் சாப்பாடு எனக்கு ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா. சிறு வயதிலிருந்தே அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் 75பைசா விலை குறைத்து தான் சாப்பாடு போட்டார்.

வாழை இலை மீது சூடான சாதத்தைப் போட்டு குழம்பு ஊற்றுவார் அப்படி ஒரு வாசம் வரும். அத்துடன் அவர் வைக்கும் கூட்டு சுவையோ சுவையாக இருக்கும். ஆனால் மோர் மட்டும் புளிச்ச வாடை இல்லாது இருக்கவே இருக்காது.

அருகில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் இலையில் மீன் வறுவல் வைப்பார். என்னைப் பார்ப்பார் வைக்கவா என்பார். நான் மறுத்து விடுவேன்.

கிட்டத்தட்ட ஆறு மாதம் அக்கடையில் சாப்பிட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் மீன் வைக்கவா என்று அவர் கேட்கத் தவறுவதில்லை. நான் மறுப்பதையும் விடுவதில்லை.

அவர் ஏன் தினமும் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது எனக்குப் புரியவே இல்லை.

செட்டியார் கடைச் சாப்பாட்டுச் சுவையும், அவை வைக்கும் கூட்டும் இன்றைக்கும் என் நாவில் மறையாது இருக்கிறது.

அது ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா சாப்பாடு என்பதால் தானோ என்னவோ அவ்வளவு சுவையாக இருந்தது போலும்.

அதுமட்டுமல்ல காரணம் !

செட்டியாரின் மீன் வறுவலும் தான் என்கிறது மனசு !


Wednesday, May 7, 2014

நிலம்(6) – பத்திரங்கள் எழுதும் போது கவனம்

சமீபத்தில் ஒருவர் தன் இரண்டு மனைகளை விற்பனை செய்ய சப்ரெஜிஸ்டர் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். கிரையப்பத்திரம் எழுதும் போது சர்வே எண் தவறாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால் இவர் முன்பு கிரையம் பெற்றவரின் பத்திரத்திலும் இதே தவறு நடந்திருக்கிறது. இதை எவரும் கண்டுபிடிக்கவில்லை. இரண்டு பத்திரங்கள் தவறான சர்வே எண் குறிப்பிடப்பட்டு பதிவாகி இருக்கிறது. இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் இல்லாத சொத்துக்கு பத்திரம் இருக்கிறது என்பதுதான்.

இரண்டு பத்திரங்களில் பிரச்சினை இருக்கிறது. இதை எப்படிச் சரி செய்வது? வழி என்ன? என்று குழம்பிப் போய் நம்மிடத்தில் வந்தார்கள்.

பத்திரங்கள் எழுதும் போது மிகக் கவனமாய் இருத்தல் முக்கியம். அவசர அவசரமாக பத்திரம் எழுதுவது, தெரிந்தவர் தானே என நினைத்துக் கொண்டு எழுதுவது இதெல்லாம் செய்தால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினை வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

கிராமப்புறங்களில் சொத்து வாங்குவது என்பது வேறு. அதே நகர்ப்புறங்களில் சொத்துக்கள் வாங்குவது என்பது வேறு. கிரையம் செய்யும் போது ஒவ்வொரு ஆவணங்களையும் சரி பார்த்து, சிட்டா, அ பதிவேடு மேலும் இன்ன பிற ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தல் வேண்டும். சில லீகல் ஒப்பீனியன் வழங்கும் வக்கீல்களே தவறு செய்கின்றார்கள். ஆகவே வெகு கவனமாய் இருத்தல் மிக அவசியம்.

இல்லையென்றால் உழைத்துச் சேர்த்த பணத்தினை இழக்க நேரிடும்.


Wednesday, April 16, 2014

ஜல் ஜல் சலங்கை ஒலி



ஆவணம் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் முடிவாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆரம்பமாகவும் இருக்கும் ஒரு ஊர். காவிரி ஆறு பாயும் கடை நிலைக் கிராமம். எனது தாத்தா ஊர் அதுதான். 

காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து தான் ஊரில் விவசாயம் ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று குளங்கள் இருக்கின்றன.

விவசாயம் ஆரம்பித்து விட்டால் விடிகாலையில் மாட்டு வண்டிகள் வயல்களுக்குச் செல்ல ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு விதம். சில மாடுகள் கருத்தாய் இருக்கும். சில மாடுகள் சண்டித்தனம் செய்யும்.

என்ன தான் இருந்தாலும் அதுகள் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையும், வண்டிச் சக்கரத்தின் கடையாணியில் மாட்டியிருக்கும் ஒரு வித பூ இலை போன்ற தகடுகளும் இசைக்கும் ஒலிக்கு இணையாக எதையும் சொல்லி விட முடியாது.

சல சலவென மடையிலிருந்து வயலுக்குள் பாயும் தண்ணீரை உழப்பி இரண்டடி ஆழம் புதையும் சகதிக்குள் கால்களை வைத்து கொண்டு வெண்ணெய் போல உழும் வண்டி மாடுகளைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. மாடுகள் இல்லையென்றால் மனிதர்கள் வாழ்வதற்கு பெரும் சிரமப்பட்டிருப்பார்கள்.

விவசாயம் ஆரம்பித்த உடனே ஆவணத்து ஆற்றங்கரையோரம் புதியதாக ஒரு இட்லிக் கடை முளைக்கும். சூடாக டீயையும், இட்லியையும் விற்றுக் கொண்டிருப்பார்கள். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆற்றுக்கு அடுத்து குளங்கள் அதைத் தொடர்ந்து வயல்வெளிகள், அவ்வயல்களுக்கு இடையே ஊர்ந்து செல்லும் வெள்ளை பாம்பு போல சிற்றாறுகள் என கண்களைக் கட்டி இழுக்கும் ஆவணம் கிராமம்.

விவசாயமெல்லாம் முடிவும் தருவாயில் ஆவணத்தான் குளத்தின் மறுகரையில் இருக்கும் மாயன்பெருமாள் கோவில் பொங்கல் வந்து விடும். மாட்டு வண்டி கட்டிக் கொண்டு அம்மாவுடன் கோவிலுக்குச் செல்வோம். ஜெயராஜ் மாட்டினைக் குளிப்பாட்டி கழுத்தில் சலங்கை கட்டி விடுவார். சும்மா ஜல் ஜல் என ஜலங்கைகள் ஒலிக்க மாட்டு வண்டியில் பயணிப்பதே ஒரு அலாதி சுகம் தான்.

மாமா, தாத்தா, அக்கா, தங்கை என அனைவரும் அங்கு ஆஜராவோம். சிறு வயதில் எனக்கு பெரிய ஆற்றைப் பார்க்க பயம். அதுவும் கருப்புக் கலரில் இருக்கும் தடுப்பையும், தடுப்பை மீறிக் கொப்பளிக்கும் தண்ணீரையும் பார்த்தால் கிலி பிடித்து விடும்.

கண்ணையும், காதையும் பொத்திக் கொண்டு குப்புறப்படுத்துக் கொள்வேன். ஆனால் மாரிமுத்து திரையரங்கில் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டை போடும் போது நானும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் தோழிகளின் முதுகில் டிஸ்ஸூம் டிஸ்ஸூம் என்று குத்தி சண்டையிடுவேன் என்று அம்மா சொல்வார்கள்.

இதெல்லாம் எனது கடந்த கால நினைவுகளாய் எதிரே மாட்டுக் கொம்பில் ஜலங்கை கட்டி, வண்டியில் தன் குடும்பத்தோடு வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைக் கண்ட போது எனக்குள் நிழலாடியது.

எங்கெங்கு காணினும் பஸ்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் என்று வெள்ளிங்கிரி மலை அடிவாரம் முழுவதும் ஆட்கள் மயம்.

பலரின் கையில் ஊன்று கோல்களுடன் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசிக்கவும், மணோண்மணியம்மையைத் தரிசிக்கவும் ஆட்கள் படை படையாய் வந்திருந்தனர். நிமிஷத்திக்கொரு தரம் பஸ்கள் நிரம்பி வழியும் ஆட்களுடன் பயணித்துக் கொண்டிருந்தன.

சித்திரை மாதம் முதல் தேதி அல்லவா? அதனால் நானும் மனையாளும் குருதேவரைச் சந்திக்கச் சென்று விட்டு, மதியம் பதினொன்று போல முட்டம் நாகேஸ்வரரையும், முத்துவாளியம்மனையும் தரிசிக்கச் சென்று கொண்டிருந்த போது பார்த்தவை தான் மேலே உள்ளவை.

சித்திரை முதலாம் தேதி அன்று தான் அம்மனைத் தொட்டு வழிபாடு செய்ய அனுமதிப்பார்கள். சுமார் 5000 ஆண்டுகள் பழமையான அம்மன் அல்லவா அவர். வெள்ளி வளையம் அணிந்து அம்மனின் பாதங்கள் சிலு சிலுவென குளிர்ந்தது. ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி அவருக்கு பாதம் சுத்தம் செய்து அம்மனின் பாதம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன். மனசு இலேசாகிப் போனது. இதை விட பேரின்பம் என்ன வேண்டி இருக்கு?

நாகேஸ்வரப் பெருமான் பாம்பு சுற்றி இருக்க முழு அலங்காரத்தில் கொள்ளை அழகில் பார்ப்போர் மனதைச் சொக்கி இழுத்தார். சொக்கியின் கணவர் அல்லவா? எல்லோரையும் சொக்க வைத்து விடுவதில் அவருக்கு நிகர் அவரே.

காளகஸ்தி சென்று ராகு கேது பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்கே நாகேஸ்வரரைச் சந்தித்து பசும்பாலில் வாரமொரு தடவை அபிஷேகம் செய்தால் சொக்கியின் கணவர் ராகுவையும், கேதுவையும் சும்மா இருங்கப்பா, நம்ம பையன் இவர் என்றுச் சொல்லி சிபாரிசு செய்வார்.

தரிசனம் முடித்து பேரூர் நோக்கி வந்து கொண்டிருக்கையில் மாதம்பட்டியில் புதியதாய் முளைத்திருந்த ஒரு கும்பகோணம் டிகிரி காப்பிக் கடையில் ஒரு காப்பியையும், வாயில் இட்டவுடன் கரைந்தோடிய பக்கோடாவையும் சாப்பிட்டு விட்டு சந்தோசத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டுக்குள் நுழைந்தும் ஜல் ஜல் சலங்கை ஒளி  காதுகளில் கொண்டே இருந்தது.

நாம் இழந்து போன இன்பம் அல்லவா அந்தச் சத்தம் !


Monday, March 31, 2014

மனதைப் போட்டு அழுத்துகிறதா பிரச்சினை? இதோ வழி

மனிதர்களில் பெரும்பாலானோருக்குப் பிரச்சினையே அவர்களின் மனசு தான். அரை நிமிடம் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? அப்படியே அரை மணி நேரம் மனதில் எந்த ஒரு சிந்தனையும் இன்றி இருந்தால்....

தூக்கத்தில் தான் மனசு சிந்தனையற்று இருக்கும். அதுகூட சில சமயங்களில் கனவாய் வந்து மிரட்டும்.

வேறு வழி இன்றி தன்னிலை மறக்க தமிழக அரசின் மரணக்கடைக்குச் செல்ல வேண்டியதுதான். வித விதமான மருந்துகளை வாங்கிக் குடித்து தன்னிலை மறந்து போதையில் திளைத்தால் தான் மனதைப் பிடித்து அழுத்திக் கொண்டு படாதபாடு படுத்தும் அந்தப் பிரச்சினை தீரும்.

காதலி கோவித்துக் கொண்டு ஊடலாகி விட்டாள். உடனே தமிழக அரசின் மரணக்கடை மருந்து. மனைவி கோவித்துக் கொண்டு போய் விட்டார். உடனே தமிழக அரசின் மரணக்கடை மருந்து என்று எதற்கெடுத்தாலும் மருந்தாய்க் குடித்துக் குடித்து மரணத்துக்கு வரவேற்பு வைக்கின்றார்கள்.

சரி என்னதான் வழி என்கின்றீர்களா?

ஒரு பிரச்சினை வந்து விட்டது. பிரச்சினை ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும். முடிவு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொண்டு விடுவோம் அல்லவா? அதற்குள் ஏன் மனதைப் போட்டு குழப்பி, குழம்பி அய்யோ அம்மா என்று அரற்ற வேண்டும்?

ஆகவே என்ன பிரச்சினை வந்தாலும் சரி, உடனே அட... என்று உதறித் தள்ளி விடுங்கள். மனசு இலேசாகி விடும். ஒரு நாள் அதை மறந்து விடுங்கள். பின்னர் அப்பிரச்சினைக்கு ஒரு முடிவு உங்களுக்கே தெரியும். மேட்டர் ஓவர்.

ஏதாவது ஒரு அரசியல்கட்சித் தலைவரை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 

ஒரே ஒரு தொழில், ஒரே ஒரு மனைவி, ஒன்றிரண்டு பிள்ளைகள் வைத்திருக்கும்  நம்மை விட எத்தனைப் பிரச்சினைகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்திப்பார்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் கவலைப்பட்டு உள்ளுக்குள் புழுங்க ஆரம்பித்தால் அவர் ஹாஸ்பிட்டலில் ஹோமாவில் படுத்திருக்க வேண்டும். என்ன செய்கிறார்? சிந்தியுங்கள்.

ஆகவே ... இனி என்ன பிரச்சினை வந்தாலும் தூக்கித் தூர கடாசி விட்டு, அடுத்த வேலையில் மூழ்குங்கள். பிரச்சினை வந்த இடம் தெரியாமல் ஓடிப் போய் விடும்.

ஓகே !

”ஏங்க... ஏங்க....”

-இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் ஏங்கனுமோ தெரியலை!-(மனசுக்குள் நான்)

”என்ன கோதை?”

“லேட்டாயிடுச்சு... வந்து காய்கறி நறுக்கிக் கொடுங்க...” என்றாள்.

”என்ன கோதை காலையிலேயே ஆரம்பிச்சுட்டே, பேப்பர் படிக்க விட மாட்டியா?, தொந்தரவு செய்கிறாயே?” என்றேன்.

“அதுக்கு நீங்க சாமியாரா இருக்கணும். யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க” என்றார்.

வேறு வழி !!! 

இது போன்ற பிரச்சினைகளை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தீரவே தீராது.



Monday, March 17, 2014

பெண்கள் சுயநலமானவர்களா?

பள்ளியில் இருந்து வரும்போது அம்மு முகத்தை தூக்கி வைத்திருந்தார்.

எனக்குத் தாங்காது.

விஷயமென்னவென்று விசாரித்தேன். 

பையன் லீவு நாளில் பாஸ்கெட் பால் ட்ரெய்னிங்கில் சேர்ந்து விட்டானாம்.
பயிற்சிக்கு அவன் பள்ளிக்குப் போக வேண்டும். அதனால்  நாங்கள் யாரும் வெளியூர் போக முடியாது. அம்முவின் ஆண்டி அவளை மஸ்கட்டுக்கு லீவுக்கு அழைத்திருப்பதால் அவள் எப்படி மஸ்கட்டுக்குப் போவது? இதுதான் பிரச்சினை.

உன்னாலே நான் வீட்டுக்குள்ளேயே கிடக்கனுமா? என்று ரித்தியுடன் சண்டை. அதனால் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு இருந்தார்.

”உங்க மக ஊரு சுத்தறதுக்கு எம் மவன்(எப்பூடி பேசுறாங்கன்னு பாருங்க) பயிற்சிக்கு போகாக்கூடாதுங்கறளே, இவளைப் பார்த்தீங்களா?”ன்னு கோதை எரியற நெருப்புல எண்ணெயை ஊத்த அம்முவுக்கு பத்திக்கிட்டு வந்துருச்சு. அம்மு கண்ணுல தண்ணி. எனக்கு கிர்ரென்னு இருந்தது. மகள் அழுதுட்டா எனக்கு தன்னாலே பிபி உச்சத்துக்கு எகிறிடும்.

சாப்பிடும் போதும் அம்மு உம்முனே இருந்தார்.

ஒரு வழியா சாப்பிட்டு முடித்து உம்மென்ற முகத்தோடு படித்துக் கொண்டிருந்தார் அம்மு.

நான் மெதுவாக ஆரம்பித்தேன்.

”கோதை இன்னும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தால் அம்மு கூட யாராவது விளையாட கூட இருப்பாங்களே”

“ஆமா, என்ன என்ன செய்யச் சொல்றீங்க. எனக்கு இரண்டுதான்னு ஆயிருச்சு” என்றார் கோதை.

”வேற ஏதாவது ஐடியா இருந்தாச் சொல்லேன் கோதை” என்றேன்.

”வேற ஐடியாவா...? இனி ஒன்னே ஒன்னுதான் பாக்கி, நீங்க இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டா இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கலாம்” என்றார் கோதை.

”சரி பொண்ணுக்கு எங்கே போறது?”

“ அதான் உங்க அக்கா, தங்கை, மாமா, அம்மான்னு ஆயிரம் பேர் இருக்காங்களே உங்களுக்கு. சொன்னா எங்காவது பிடிச்சு ஒரு பொண்ணைக் கொண்டாந்து நிறுத்திடுவாங்களே!”

”சரி அம்மாகிட்டே போனைப் போட்டுச் சொல்றேன். அம்முக்கு கூட விளையாட ஆள் வேணுமாம். அதானால நானும் கோதையும் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம். இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டு இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கலாம்னு ஐடியா, அதனால பொண்ணு பாருன்னு பேசட்டுமா?”

“உடனே அதைச் செய்யுங்க...”

படித்துக் கொண்டிருந்த அம்மு  நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு வெளியில் வந்தார்.

”நான் எங்கேயும் போகல. உனக்குக் கல்யாணமெல்லாம் வேணாம்” என்றார்.

“இல்லம்மா, நீதானே மஸ்கட்டுக்குப் போகனும், ரித்தி இருந்தாதானே நல்லா இருக்கும்னு சொன்னியே” என்றேன்.

“சும்மா சொன்னேன். உடனே அப்பத்தாகிட்டே பேசி பொண்ணெல்லாம் பார்க்கச் சொல்லாதே. நானும் ஏதாவது ஒரு பயிற்சியில் சேர்ந்துக்கலாம்னு இருக்கேன்” என்றார். அம்முவின் கண்கள் கோதையை ரகசியமாய் சந்தித்தன. அம்மாவும் மகளும் ரகசியமாய்ச் சிரித்துக் கொண்டதை தெரிந்தும் தெரியாமலும் பார்த்தேன்.

சிரித்துக் கொண்டே அலுவலகம் கிளம்பினேன்.

பெண்கள் எப்போதும் சுய நலமே உருவானவர்களாகவே இருக்கிறார்கள் போல தெரிகிறதே என  நினைத்தேன்.

சுயநலம் எப்போதும் நன்மையைத் தருமென்றால் அது நலம் தானே !