திருவான்மியூரில் இருக்கும் திருமதி.ஜோதி அவர்கள் தெரு நாய்களுக்காக 12 வருடங்களாக உணவு கொடுத்து வருகிறார் என்ற செய்தியை விகடனில் ஆன்லைனில் படித்தேன். மனதுக்கு இதமாக இருந்தது. அந்தப் பெண்மணி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென மனசு நெகிழ வேண்டிக் கொண்டேன். ஆனால் அதற்கு ஒரு ஆத்மா இப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறது.
( நன்றி : விகடன் )
நாய்களை விட மனிதர்கள் எவ்வளவோ அக்கிரமங்களைச் செய்கின்றார்கள். அவர்களை எல்லாம் உணவிடாமல் கொன்று விடலாமா என்று இந்த அக்கப்போர் சொல்லுமா? எனத் தெரியவில்லை. இது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியவில்லை. மனிதப்பண்பு அற்ற இந்த கமெண்டுகளை எப்படித்தான் எழுதுகின்றார்களோ தெரியவில்லை. இப்படியும் ஒரு சில ஜீவன்கள் இந்தப் பூமியில் வாழ்கின்றன. என்ன செய்வது?
அடுத்த நொடியில் மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்தே பார்க்க முடிவதில்லை. நம்ம முன்னாள் முதலமைச்சர் அதற்கொரு உதாரணம். இப்படி பல்வேறு சம்பங்களை நாம் கடந்து வந்திருக்கும் வாழ்க்கையில் கண்டிருப்போம். இப்படியான நிலையில் நிரந்தரமில்லா வாழ்க்கையில் எதுதான் சாசுவதம் என்று புரிந்து கொள்வதற்குள் ஆயுளே முடிந்து போகின்றது. எல்லாம் புரிந்த பிறகு செய்ய முடியாது போய் விடுகிறது.
கோவையில் எனக்குத் தெரிந்த ஒரு நபர், நல்ல மனிதர் அவர். விவசாயி. படிக்கவில்லை. ஏகப்பட்ட சொத்துக்கள். மாதம் தோறும் கொட்டும் வாடகைப் பணம். பிரஷர் இல்லை, சர்க்கரை இல்லை. தினமும் எட்டு மணி நேரம் உழைப்பு. இன்று கே.எம்.சி.ஹெச்சில் ஆஞ்சியோ செய்யப்பட்டுக் கிடக்கிறார். நேற்றுக்கு முதல் நாள் பேசிக் கொண்டிருந்தார். இன்றைக்கு மருத்துவமனையில் கிடக்கிறார்.
எனக்கு உடம்பில் சில நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இவ்வளவுக்கு அடியேன் சுத்த சைவம். முட்டை கூட எடுத்துக் கொள்வதில்லை. எண்ணைப் பலகாரங்கள், பால் பொருட்கள், கொழுப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்த்து விடுவேன். கால் வயிறுதான் உணவு எடுத்துக் கொள்வேன். இருப்பினும் அவ்வப்போது நோயின் பிடியில் சிக்கி விடுவேன். அடிக்கடி சளி பிடிக்கும். இந்த முறை மட்டும் தான் மருந்தே இல்லாமல் சரியானது. எளிமையான மருத்துவம் தான். ஆனால் இன்ஸ்டண்ட் உணவுகளை உண்ணும் இந்த உலகம் அதை ஏற்பதில்லை. இப்படியெல்லாம் வாழ்ந்து கடைசியில் உடம்பு என்ன இரும்பாகவா இருக்கப் போகின்றது? அழியத்தான் போகிறது. ஆனால் மருத்துவமனையில் சென்று படுக்கக் கூடாது என்று மனது ஆசைப்படுகிறது.
இதற்காக அக்குபிரஷரில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். கொஞ்சம் உடல் பருமனைக் குறைக்க, உணவு பழக்கத்தை சீராக்கவும் தொடர்ந்து சென்று வருகிறேன். அங்கு ஐ.டியில் பணிபுரியும் பல்வேறு பெண்களைச் சந்திக்கிறேன். ஒவ்வொரு பெண்களும் காரில் வருகின்றனர். லட்சங்களில் சம்பளம். வரும் போதே போனும் கையுமாகத்தான் வருகின்றனர். அடிக்கடி வரும் அழைப்புகளில், ‘சரி ஹெட், காலையில் வந்து விடுகிறேன்’ என்ற வார்த்தைகள் கேட்கும். ஐடிக்கணவர்கள் போனுடன் வாழ்க்கை நடத்துகின்றார்கள். அவர்களின் உடைகள் பல ஆயிரங்கள் இருக்கும். செம மாடர்ன் பெண்கள். அவர்களின் பின்னே அப்பெண்களின் அம்மாக்கள் கையில் குழந்தைகளுடன் சில நேரங்களில் வருவர். ஒரு சில பெண்கள் தங்கள் குழந்தைகளை (எக்ஸ்ட்ரா லக்கேஜ்கள்) அம்மாக்களிடம் கொடுத்து விட்டு பால் கவுச்சி அடிக்காமல் இருக்க டியோடரண்டுகளை அடித்துக் கொண்டு பால் கொடுப்பது அழகுக்கு ஆபத்து என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
லட்சங்களில் கார், ஆயிரங்களில் உடைகள் ஆனால் இளமை முழுவதும் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு அர்ப்பணிக்கின்றார்கள். அவர்கள் கொடுக்கும் லட்சங்களை முன்னே பின்னே பார்த்தறியாதவர்களுக்கு எது வாழ்க்கை என்று புரிபடவே இல்லை. பெரும்பாலான ஐடியில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகள் நோயுடனே பிறக்கின்றன. அவர்களின் நோயுக்கான சிகிச்சையை அவர்கள் செய்கின்றார்கள். நோஞ்சான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர்களின் அம்மாக்கள் சிகிச்சைக்கு வருகின்றார்கள். இந்தக் கொடுமைகளை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பிள்ளைகளின் அழுகுரல்கள் கேட்கும் போது அது எனக்கு நரகத்தை விடக் கொடுமையானவையாகத் தோன்றுகிறது.
பணத்தின் முன்னே சலாமிடும் உலக மாந்தர்கள் இருக்கும் வரை இப்படியான அழுகுரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும் போல. இரக்கத்துடன் நாய்களுக்கு உணவிடுபவரைக் கூட கிண்டல் செய்து, அதில் ஒரு கெட்ட எண்ணத்தைப் பதிவிடும் மாந்தர்கள் இந்த உலகில் இருக்கும் வரை தீமைகள் இருக்கத்தான் செய்யும். அந்தப் பின்னூட்டம் என்ன ஒரு அரக்கத்தனமான எண்ணம் என்பதைக் கவனியுங்கள். இவர்களும் நம்முடன் தான் வாழ்கின்றார்கள்.