அந்தக் கால வாழ்க்கை முறை சிறப்பானதா? அல்லது இந்தக் கால வாழ்க்கை முறை சிறப்பானதா? என்ற தர்க்கம் எழுந்தது எனக்கும் எனது சக தோழன் ஒருவனுக்கும். அவன் டிவி விவாதங்களைப் போல பேசினான். நான் மறுதலித்தேன். இந்தக் கால வாழ்க்கை முறையின் சிக்கல்களுக்கு முதன்மையானது பின் நவீனத்துவத்தின் (நவீன யுகம்) சிந்தனை போக்கு மேலெழுந்தவாரியாக மனிதர்களிடம் பிரதிபலிப்பது என்ற காரணத்தை முன் வைத்தேன். அவனுக்குப் புரியவில்லை. அதைப் புரிய வைக்கும் விதமாக இந்தப் பதிவு.
சிறுகதை ஒன்று. சுவாரசியமாகத்தான் இருக்கும். கதையில் செக்ஸ் பற்றி வருகிறது. ராம்கோபால்வர்மாவின் கடவுள், செக்ஸ், உண்மை எனும் படத்தின் இணையதளம் பார்வையாளர்களால் திணறியதாம். அந்தளவுக்கு இந்தியர்கள் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள மனிதர்களிடையே செக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் அதிகமும், ஆர்வமும் அதிகம். தீரவே தீராத விளையாட்டு. முற்றிலும் மானுடத்தால் புரிந்து கொள்ள முடியாத ஒரு விளையாட்டும் கூட.
அந்த நகரத்தில் மணமாகாத பெரும் பணக்காரி ஒருத்தி வசித்து வந்தாள். அவள் எவரையும் நம்பமாட்டாள். அதனால் அவளை எவரும் ஏறெடுத்தும் பார்ப்பதும் இல்லை. அதுமட்டும் காரணமல்ல. அவள் அழகு குறைவானவள். அவளுக்கு எவரைப் பற்றியும் கவலையும் இல்லை. கோடீஸ்வரியானவளுக்கு பிறரைப் பற்றிய கவலை இருப்பதில் அர்த்தமும் இல்லை. திடீரென அவளுக்கு ஒரு மனப்பிரச்சினை எழுந்தது. இதுவரை என்னை ஏறெடுத்தும் பார்க்காத இந்த நகரை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.
ஒரு வக்கீலை அழைத்தாள். அவரிடம், ”நான் இறந்த பிறகு என் இறுதிச் சடங்கின் போது இந்த நகரமே எழுந்து நிற்க வேண்டும். அதற்காக விழா போன்று என் இறுதி யாத்திரை இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதை நிறைவேற்றிட என்னிடமிருக்கும் ஒரு கோடி ரூபாயில் 75 லட்சம் ரூபாயை அதற்கு ஒதுக்கி வைக்கிறேன் என்று உயில் எழுத வேண்டும்” என்றாள்.
”ஆஹா…! தன் உடலைப் புதைப்பதற்கு இது நாள் வரை செலவு செய்துள்ளதில் இது தான் மிக அதிகம். உங்கள் விருப்பம் போல எழுதி விடலாம் என்கிறார்” அந்த வக்கீல். தொடர்ந்து “மிச்ச பணத்தை என்ன செய்வதாக எழுத வேண்டும்?” என்று கேட்டார்.
அப்பெண், “அதை நான் பார்த்துக் கொள்கிறேன், இதுவரைக்கும் நான் எந்த ஆணுடனும் உறவு வைத்துக் கொள்ளவில்லை. நான் இறப்பதற்கு முன்பு அதை அனுபவிக்க விரும்புகிறேன். இளமையும், அழகும் உள்ள, என்னை போதுமான அளவுக்கு திருப்திப்படுத்த திறமை உள்ளவனைக் கண்டுபிடித்து அனுபவிக்க விரும்புகிறேன். அவனுக்காக மீதமுள்ள 25 லட்சத்தையும் செலவழிக்கப் போகின்றேன்” என்றுச் சொன்னாள்.
அன்றிரவு பேச்சுவாக்கில் வக்கீல் இதனை தன் மனைவியிடம் தெரிவித்தார். மனைவியும் அவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ’அந்த 25 லட்சம் நமக்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே?’ என்றார் மனைவி. இருவரும் மீண்டும் கலந்துரையாடினார்கள். பின்னர் மனைவி காரை ஓட்டிக் கொண்டு போய் அந்த மணமாகாத பெண்ணின் வீட்டின் முன்பு நிறுத்தி தன் வக்கீல் கணவரை இறக்கி விட்டாள்.
வக்கீலும், ’இரண்டு மணி நேரம் கழித்து வந்து அழைத்துச் செல்’ என்று சொல்லி வீட்டுக்குள் சென்று விட்டார்.
மிகச் சரியாக இரண்டு மணி நேரம் கழித்து வக்கீலின் மனைவி காரின் ஒலிப்பானை ஒலிக்க விட்டாள். அந்த வீட்டிலிருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை. மீண்டும் நீள் சத்தத்தை ஒலித்தாள். சன்னலோரம் அந்தப் பெண் முகம் தோன்றியது. பின்னால் வக்கீல் தோன்றி இப்படிக் கத்திச் சொன்னார்.
“இந்தப் பெண், தான் இறந்த பிறகு முனிசிபல்காரர்களே புதைத்துக் கொள்ளட்டும் என்கிறாள். ஆகவே நீ நான்கு நாட்கள் கழித்து வா”
கதை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
பின் நவீனத்துவத்தின் கோட்பாடு எல்லாவற்றையும் தனித்தனியாக ஆராய்வது. நவீன கால தொழில் நுட்பத்தின் வளர்ச்சியோடு இயைந்த பின் நவீனத்துவக் கோட்பாடு மனித வாழ்க்கையின் மீது தற்கால தனது அடையாளங்களைப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறது. அதன் அடையாளமாய் தமிழகத்தில் வெளியானது இயக்குனர் ராமின் ‘தரமணி’ திரைப்படம். தமிழர்களுக்கு திரைப்பட உதாரணம் தான் உடனடி காஃபி போல புரியும். ஆகவே இங்கு சினிமா வந்து விட்டது.
கற்பியல் கோட்பாடுகளைப் பொருளாதாரப் பின்னனியின் பாலும், தனி மனித பொருளாதார விடுதலையின் மீதும் கேள்வி கேட்கிறது பின் நவீனத்துவம். இயற்கை விதித்த வாழ்வியல் கோட்பாடுகளின் கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும் உலகினை உருவாக்கி வருகிறது. முற்றிலுமான பாதுகாப்பற்ற தன்மை மிக்க பொருளாதாரத்தின் பின்னனியில் மனித ஒழுக்க நெறிகளை கேள்வி கேட்கிறது. அதன் வசீகரத்தன்மை சுய ஒழுங்கற்ற மானுடவியலாளர்களுக்கும், பொருளாதார பெரும்புள்ளிகளுக்கும் பெரும் லாபங்களை ஈட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது. அந்த வசீகரத்தில் வீழ்ந்து விடுகிறது உணர்வுகளின் பால் கவர்ச்சியுற்ற மானுடர்களின் வாழ்க்கை. பொருளாதார வீழ்ச்சியின் போது நிறுவனங்களை மூடிவிடலாம். ஆனால் மனித உணர்வுகளை என்ன செய்வது என்பதற்கான தர்க்கங்களை அது வைத்திருக்கவில்லை என்பது நிதர்சனம்.
இன்றைய காலகட்டத்தின் நிலையை ஓஷோ ‘இன்று புதிதாய் பிறந்தோம்’ நூலில் சொல்லிய கதையின் வடிவம் தான் நீங்கள் மேலே வாசித்தது.
காசே தான் கடவுளடா (பின் நவீனத்துவத்தின் சினனிம்)
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.