குரு வாழ்க ! குருவே துணை !!

Tuesday, January 30, 2018

டிசைன் அப்படி

யாரோ ஒருவர் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் சினிமாவில் இருக்கிறார். பி.ஆர்.ஓவாக பணி. அதுமட்டும் வேலையல்ல. ஃபைனான்ஸ், வெளியீடு, கடன் வாங்கிக் கொடுத்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்வார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஏதோ ஒரு தேவைக்காக நண்பரை அணுகினால் முடிந்தது காரியம் என்று நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அவரின் செயல்கள் இருக்கும்.

ஆனால் நண்பர் அவரை வைத்து அடுத்த ஒரு மாதத்திற்கு வசூலிக்க ஆரம்பித்து விடுவார். அது அவருக்குத் தெரியாது. தினமும் குறைந்தது 500 ரூபாய் அவரின் குறிக்கோள். அத்துடன் சாப்பாடு. சிக்கியிருப்பவரின் தகுதிக்கு ஏற்ப சில பல கதைகளை அவிழ்த்து விடுவார். சினிமா பிரபலங்களை கனெக்ட் செய்வார். போனில் பேச வைப்பார். பிரபலங்களிடம் பெரிய பைனான்சியர் என்றுச் சொல்லி வைப்பார். இது சிக்கி இருப்பவருக்குத் தெரியாது. இவ்வளவு பெரிய ஆளா என்று சிக்கி இருப்பவர் மலைத்தே போய் விடுவார். ஜொள்ளு விடுபவர் என்றுத் தெரிந்தால் பல்வேறு நடிகைகளை போனில் பேச வைத்து கிறுகிறுக்க வைத்து விடுவார். அவ்வளவு திறமைசாலி.

என்னிடம் பல முறை சிக்கிக் கொள்வார். ”அதெயெல்லாம் கேக்காதீங்கண்ணே” என்று நழுவி விடுவார். ”ஏதோ பிழைச்சுப் போறேன், விட்டுடுங்களேன்” என்பார். சென்னை சென்றால் பொழுது போக்க அவரை வரவழைத்து விடுவேன். செமையா ரீல்களை விடுவார். இயக்குனர்கள் எல்லாம் தோற்றுப் போய் விடுவார்கள். பிரியாணியும், கைச்செலவுக்கு 500 கொடுத்து விடுவதுண்டு.  சிக்கன் பிரியாணி என்றால் உயிர் அவருக்கு. இடையில் என்னைப் பார்க்க எவராவது வந்து விட்டால் அவர் பாடு திண்டாட்டம் தான். நம்ம நண்பர் தானே என்ற வகையில் என்னைப் பார்க்க வருபவரிடம் எப்படியெல்லாம் சொன்னால் ஆள் பயப்படுவாரோ அப்படிச் சொல்லி, சகஜமாக வந்தவரை அட்டென்சனில் நிற்க வைத்து விடுவார்.

“ஏம்பா, நீ இவ்ளோ பெரிய ஆளா? ஒன்னுமே சொல்ல மாட்டேன் என்கிறாயே?” என்று கோபித்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு என்னை உயரத்தில் ஏற்றி விடுவார். வாங்கிக் கொடுக்கும் பிரியாணிக்கும், 500 ரூபாய்க்கும் மேலே, அதுக்கும் மேலே காரியத்தை கன கச்சிதமாகச் செய்து விடுவார். அந்த நண்பரை இவர் எங்காவது பார்த்தார் என்றால், என் பிள்ளைக்கு காய்ச்சல் என்று கதை சொல்லி 500 ரூபாயை ஆட்டயப் போட்டு விடுவார்.

அவரிடம் சிக்கினார்கள் என்றால் மெதுவாக வறுபடும் கிரில் சிக்கனாகி விடுவார்கள். இவரைப் பற்றி ஒரு மாதத்திற்குள் தெரிந்து விடும். பெருமூச்சோடு கடந்து போய் விடுவர். ஒரு மாதம் மட்டுமே தாக்குப் பிடிக்கும் அளவுக்கு அவரின் ரீல்கள் பலம் வாய்ந்தவை.

இப்படியான ஆட்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள். இன்றைக்கு என்ன கிடைக்கும் என நினைக்கும் ஆட்களே நம்மைச் சுற்றி அதிகமிருக்கின்றார்கள். அவர்களின் செயல்கள் இப்படித்தானிருக்கும்.

அப்படி இவரிடம் சிக்கிய ஒருவர் என்னிடம் பேசினார். மனசு வெறுத்துப் போய் பேசினார். ஒரு லட்சமாவது செலவழித்திருப்பார் என நினைத்தேன். புலம்பிக் கொண்டிருந்தார் அரை மணி நேரமாக. பொறுமையாகக் கேட்டு விட்டு அவரிடம் சொன்னேன் இப்படி.

”அது அவரின் டிசைன், அதாவது அவர் அப்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறார். புரிகிறதா?” என்றேன். எதிர்முனையில் சத்தமே இல்லை.

ஐந்து லட்ச ரூபாய் காரின் டிசைனும், ஒரு கோடி ரூபாய் காரின் டிசைனும் வெவ்வேறு அல்லவா? டிசைனுக்குத் தகுந்தவாறு தான் கார்களின் செயல்பாடுகளும் இருக்கும். அதே தான் மனிதனுக்கும். உண்மையை மட்டும் பேசும் டிசைன், பொய் மட்டுமே பேசும் டிசைன், சுயநல டிசைன், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் டிசைன், ஏதும் அறியாது எல்லாம் அறிந்த டிசைன் இப்படி ஒவ்வொரு மனிதனும் டிசைன் செய்யப்பட்டிருப்பான். தொழில்களில் இருப்போரின் டிசைன்கள் வேறு வகையானவை. அரசியல் டிசைனும் வேறு வகையானது.

யோசித்துப் பாருங்கள். உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும்,அவர்களின் செயல்பாடுகளைப் பற்றியும் அலசுங்கள். ஒவ்வொருவரின் டிசைன் உங்களுக்குள் தெள்ளத் தெளிவாக விரியும். அவர்கள் பேசுவதை உற்றுக் கவனியுங்கள். அவர்களின் மொத்த டிசைனும் புரிந்து விடும். பின்னே என்ன? நமக்கேற்ற டிசைனை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

எந்த டிசைன் அருகில் இருக்க வேண்டும், எந்த டிசைன் தூரத்தில் இருக்க வேண்டும், எந்த டிசைனுக்கு எப்படி பேசினால் புரியும், எந்த டிசைனை நமக்கு ஏற்றவாறு மாற்ற முடியும் என்பதெல்லாம் பட்டவர்த்தமாக தெரிந்து விடும். கோபம் வராது. டென்சனாகாது. வாழ்க்கை சுவாரசியமிக்கதாக மாறி விடும்.

முயற்சித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!1 comments:

Jayakumar Chandrasekaran said...

தினமலர் வாரமலரில் வரும் அந்துமணி பா கே ப போன்ற நடையில் உள்ளது இந்த பதிவு.
Jayakumar

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.