இது கலிகாலம். பணம் மட்டுமே கோலோச்சும் உலகம். பெண்களிடமிருந்து வெட்கம், நாணம் என்ற உணர்ச்சி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் விடும். திருடன் பணம் வைத்திருந்தால் அவனுக்கு தான் முதல் மரியாதை கிடைக்கும். பணத்தினை வைத்து தான் மனிதன் அளவீடு செய்யப்படுவான். நல்ல குணம், நல்ல உள்ளங்கள், நல்ல செயல்களை உலகம் கேனத்தனம் என்று சொல்லி விடும். பிழைக்கத்தெரியாதவன் என்ற பட்டமும் கொடுக்கும்.
ஜோசியக்காரர்களுக்கும், மாந்திரீக ஆட்களுக்கும் அதிக மரியாதை கிடைக்கும். பூசாரிகளுக்கு மிக அதிக மரியாதையைக் கொடுப்பார்கள். சூட்சுமான சில விஷயங்களைக் கற்றுக் கொண்டவர்களின் காலடியில் கொண்டு போய் பணத்தினைக் கொட்டும். புத்தி மாறிப்போய், சுய நலம் மிகுந்து நன்மை தீமைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல் இன்றைய நாளுக்கான வாழ்க்கையை பற்றி மட்டுமே சிந்திக்கும். எவன் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு நானும் என் குடும்பமும் மட்டுமே முக்கியம் என கருத வைக்கும். சாலையில் அடிபட்டு கிடந்தால் கூட கண்டும் காணாமல் ஓடும். ஒவ்வொருவரும் தனக்கான சுகத்தை மட்டுமே யோசிப்பார்கள்.
வெகு சமீபத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது கிடைத்த பகீர் விஷயம் இது. இப்போதும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு சகோதரர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை இது.
அப்பா இறந்த பிறகு அண்ணனும் தம்பியும் பாகம் பிரித்துக் கொண்டார்கள். பெரும் சொத்து இருவருக்கும் கிடைத்தது. வேண்டாம் என்று பிரித்துக் கொடுத்த தம்பியின் ஒரு பகுதி சொத்து அருகில் சாலை வந்ததால் பெரும் விலை மதிப்பு கொண்டதாகி விட அண்ணனுக்கு கடும் எரிச்சல். தம்பி நம்மை விட பெரிய பணக்காரன் ஆகி விடுவானே என்ற பொறாமையில் தனக்கு மிகவும் நெருக்கமான மாந்திரீகர் ஒருவரைச் சந்திக்கிறார். மாந்திரீகர் தம்பிக்கு சில காரியங்களைச் செய்தால் சொத்தினை உங்களிடமே கொடுக்கும்படி செய்கிறேன் என்றுச் சொல்ல அதற்கான வேலைகளைச் செய்யும்படி அண்ணன் கேட்டுக்கொள்கிறார்.
தொடர் மாந்திரீக வேலைகளால் தம்பிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. தம்பியின் மனைவி பிரிந்து போகின்றார். பிள்ளைகள் அம்மாவுடன் செல்கின்றார்கள். தம்பி உணவுக்காக அண்ணனிடம் கையேந்துகிறார். சொத்து பத்துக்கள் இருந்தாலும் உடனடியாக எதுவும் செய்ய முடியாத நிலையில் பாதிப்பு அதிகமாகின்றது. தம்பிக்காக செய்யும் செலவுகளுக்காக அண்ணன் தம்பியிடம் சொத்தினை எழுதிக் கேட்கிறார். தாத்தாவின் சொத்துக்களை விற்க முடியாது என்ற தகவலைத் தாங்கி பிரச்சினை தம்பியின் மனைவி மூலமாக வக்கீல் நோட்டீஸ் மூலம் வருகிறது.
தம்பியின் மகன் படித்த புத்திசாலியாக இருக்கிறான். அண்ணன் மீண்டும் மந்திரவாதியை அணுக, அவரோ தம்பி மகனின் பிறந்த நேரம், தேதி போன்றவற்றை கேட்கிறார். சொத்து பிரித்தவுடன் தம்பியிடம் எந்த வித ஒட்டும் உறவும் கொள்ளாத அண்ணனுக்கு இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மந்திரவாதி ’கவலையை விடுங்கள், முட்டாள் சனங்க இப்போ அதிகம் இருக்கின்றார்கள்’ என்றுச் சொல்லியபடியே தம்பி மகனின் பெயரைக் கேட்க அடுத்த சில நொடிகளில் தம்பி மகனின் ஜாதகமே கையில் கிடைக்கிறது. இது சரிதானா என்று ஆராய்ந்து தரும் படி மாந்திரீகர் கேட்க அண்ணன் தன் சதியை தொடர்கிறார். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக புரோக்கர் மூலமாக அணுகி தம்பி மகனின் ஜாதகத்தைப் பெறுகிறார். மந்திரவாதி கொடுத்த ஜாதக கணிப்பும், புரோக்கர் மூலமாக கிடைத்த ஜாதகமும் அச்சு அசல் ஒன்றே. இது எப்படி என்று தெரிந்து கொள்ள அண்ணன் மீண்டும் மந்திரவாதியை அணுக அவர் ’இது ஒன்றும் பெரிய விஷயமில்லை, இப்போதெல்லாம் நட்சத்திரப்படி தானே மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர்களை வைக்கின்றார்கள். அதனால் எளிதாக கண்டு கொள்ள முடியும்’ என்றுச் சொல்கிறார்.
’சில ஜோதிட கணிப்பாளர்கள் பிரசன்னம் பார்க்கிறேன் என்றுச் சொல்லி ஜாதகத்தை அப்படியே அலசுவார்கள். இந்த விஷயம் தெரியாத மண்டுகள் ஜோசியக்காரரை கடவுள் என போற்ற ஆரம்பித்து விடுவார்கள்’ என்றுச் சொன்னார் அந்த மாந்திரீகவாதி.
திடீரென்று தம்பியின் மகன் தனக்கு ஏதோ நேர்ந்ததை புரிந்து கொள்கிறான். ஒரு சில அறிகுறிகள் மூலம் தன் குடும்பத்திற்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை அந்தப் பையன் அட்சர சுத்தமாகப் புரிந்து கொண்டு மலையாள தேசத்து ஆட்களைப் பிடிக்கின்றான். தொடர்ந்து தன் பெரியப்பாவின் வேலைகளைக் கண்டுபிடித்து தன் அப்பாவை அந்தப் பாதிப்பிலிருந்து மீட்கிறான், மீண்டும் குடும்பம் ஒன்று சேர்கிறது. அதைக் கண்டு அண்ணனுக்கு கடும் கோபம் ஏற்படுகிறது. எழுதிக் கொடுக்கிறேன் என்ற சொன்ன தம்பி ஆரோக்கியமாக நடமாடுவதைக் கண்டு கோபம் கொள்கிறான். மீண்டும் மந்திரவாதியை அணுக முயற்சிக்கும் நேரத்தில் மலையாள தேசத்து ஆட்களின் கைங்கரியத்தால் கை கால்கள் இழுத்துக் கொள்கின்றன. பெட்டில் தான் எல்லாமுமாக கிடக்கிறார். தம்பி பத்து வருடங்களாக அனுபவித்த வந்த கொடும் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார். அண்ணன் சந்தித்த அதே மாந்திரீகரைச் சந்தித்து அவர் செய்த அத்தனை விஷயங்களையும் நீக்குகிறார் தம்பி. அண்ணனிடமும் காசு வாங்குகிறார் தம்பியிடமும் காசு வாங்குகிறார் மாந்திரீகர். அது அவர் தொழில் தர்மம் என்றாராம் தம்பியிடம். அந்த தம்பிதான் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர்.
விஜய் மல்லையா கடன் வாங்கி தொழில் செய்வது தொழில் தர்மம் என்றால் கட்டாமல் கம்பி நீட்டுவதும் தொழில் தர்மம் தான்.
அவர் சொன்ன பல மாந்திரீக விஷயங்களை எழுத ஆரம்பித்தால் நடுக்கம் வரும். அந்தளவுக்கு கடும்பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்றுச் சொன்னார். எனக்கு கடவுள் மீது தான் நம்பிக்கை என்றாலும் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் என் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் எனக்குள்ளே இன்னும் பதியமிட்டிருக்கிறது.
என் சித்தி, அம்மாவின் தங்கை இருந்தவாறு திடீரென்று கைகால்கள் இழுத்துக் கொண்டு வாயில் நுரை தள்ளி காக்காவலிப்பு போல கிடப்பார். திருமணமாகி மூன்றாவது வருடத்தில் ஆரம்பித்தது இந்தப் பிரச்சினை. நடு இரவில் கயிறை எடுத்துக் கொண்டு மரத்தில் தூக்குப் போட பல தடவை முயற்சித்து காப்பாற்றினார்கள். சின்னம்மா அடிக்கடி இவ்வாறு ஆரம்பிக்க, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். முதன் முதலாக வீட்டுக்கு வந்தவர் கையில் சிலுவைக் குறி தாங்கிய செயினை கையில் வைத்துக் கொண்டு வீட்டு மனையைச் சுற்றி நடக்கிறார். கூடவே அனைவரும் செல்ல இரண்டு இடங்களில் அந்தச் செயின் தானாகவே சுற்ற ஆரம்பித்தது. இரண்டு இடங்களிலும் நான்கு அடி ஆழத்தில் மண்ணால் சீலை செய்யப்பட்ட ஒரு வஸ்து கிடைக்கிறது. அதை எடுத்து உடைத்து என்னவோ செய்தார்கள். அதன் பிறகு சின்னம்மாவுக்கு காக்கா வலிப்பும் வருவதில்லை, இரவில் கயிறையும் தூக்கிக் கொண்டு ஓடமாட்டார்கள். இந்தச் சம்பவம் என் வாழ்வில் நடந்த ஒன்று.
பகுத்தறிவுக்குத் தொடர்பே இல்லாத, அறிந்து கொள்ள முடியாத பல்வேறு மர்மங்களை உள்ளடக்கியது இந்த உலகம். உடனே இது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று நினைக்க வேண்டாம். சூரியனைப் பார்த்து திரும்பும் சூரியகாந்தி, தொட்டால் சுருங்கும் தொட்டால் சிணுங்கி போன்ற தாவரங்கள் நமக்குப் புரிந்து கொள்ள முடியாத அமைப்புக் கொண்டவை. இது போன்ற இன்னும் எத்தனையோ பகுத்தறிவுக்கு ஒப்பாதவை இருக்கின்றன.
ஜாதகப்படி, நட்சத்திரப்படி பெயர் வைப்பது எல்லாம் கடந்த பத்து பதினைந்து வருடங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன. நம் முன்னோர்கள் எவரும் ஜாதகம் பார்த்து நமக்கு பெயர் வைக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
ஜாதகப்படி, நட்சத்திரப்படி பெயர் வைப்பது எல்லாம் கடந்த பத்து பதினைந்து வருடங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன. நம் முன்னோர்கள் எவரும் ஜாதகம் பார்த்து நமக்கு பெயர் வைக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
சொல்ல விரும்பினேன் எழதி விட்டேன்.