குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தாயம். Show all posts
Showing posts with label தாயம். Show all posts

Monday, January 2, 2017

பல்லாங்குழி தாயம் பம்பரம்

அரையாண்டு விடுமுறையில் பசங்க இருவருக்கும் உருப்படியாக ஏதாவது கற்றுக் கொடுக்கலாம் என்ற நினைப்பில் பல்லாங்குழி, தாயம், பம்பரம் ஆகியவை வாங்கிக் கொடுக்க முயன்றேன். 

பல்லாங்குழியை கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கி விட்டேன். ஆனால் புளியங்கொட்டைக்கு எங்கே போவது?  முள்ளங்காடு வனத்தில் மரத்துக்கு மரம் திரிந்து குரங்குகள் தின்று போட்ட புளியங்கொட்டைகளை பொறுக்கி எடுத்து வந்தேன்.  சொரசொரப்பான பல்லாங்குழியை தேய்க்கும் காகிதம் வைத்து தேய்த்து அதில் வார்னீசு அடித்து காய வைத்து ஒரு வழியாக பெண்ணுக்கும் பையனுக்கும் சொல்லிக் கொடுத்தேன்.

ஒரு வாரமாக காலையிலிருந்து இரவு வரை டிவி ஆஃப் செய்து இருந்தது. இருவரும் டிவி பக்கம் போகவே இல்லை. அடுத்து தாயக்கட்டைக்கு அலைந்து திரிந்து ஏதோ ஒரு ஸ்டோரில் பிடித்து விட்டோம். பிறகு தாயக்கட்டங்கள் உருவாக்கி விளையாடக் கற்றுக் கொடுத்தேன். தாயம் தாயம் என்று ஒரே சத்தம்.

செம்மேட்டில் பசங்க பம்பரம் சுற்றிக் கொண்டிருந்தார்கள். விசாரித்து இரண்டு பம்பரங்களை வாங்கிக் கொண்டு வந்து சுற்றி விடலாம் என்று முயற்சித்தால் தலைகீழாக சுற்றியது. மனையாளோ நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள். பசங்க இருவரும் என்னப்பா இது? என்று கேள்வி கேட்டு டென்சன் படுத்திக் கொண்டிருந்தார்கள். கடையில் பம்பரக்கயிற்றை சிறிதாக நறுக்கிக் கொடுத்து விட்டான். அதைக் கண்டுபிடித்து சற்றே நீளமான கயிறாக எடுத்து சுற்றி விட்டால் ’உம்..உம்’ என்று சத்தத்துடன் பம்பரம் அருமையாக சுற்றியது.

பசங்க இருவரும் பம்பரம் சுற்றி விட முயற்சித்து காலையில் ஆரம்பித்து மதியம் போல பம்பரம் விட பழகிக்கொண்டனர்.

ஒரு வழியாக மூன்று விளையாட்டுக்களையும் பசங்களுக்கு கற்றுக் கொடுத்த சந்தோஷம். வீட்டில் கார்ட்டூன் சானலும் ஓடவில்லை, டிவியும் ஓடவில்லை. அதுபாட்டுக்கு இருந்தது. தெருவில் நின்று பம்பரம் விட்டுக் கொண்டிருந்தார்கள். 

நிவேதிதா பம்பரம் விடுவது எப்படி என்று சொல்லித் தரும் வீடியோ கீழே.


உங்கள் பசங்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.  நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் எத்தனையோ இருந்தன. எனக்குத் தெரிந்து இவை மூன்றும் நான் அடிக்கடி விளையாடியவை. கிட்டிப்புள், பளிங்கு விளையாட்டுக்களைக் கற்றுத் தர வேண்டும். 

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.