குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, September 10, 2022

திருக்குரானில் ஹிஜாப் - உச்ச நீதிமன்றத்துக்கு மத விடயங்களில் தலையிட அனுமதி உண்டா? ஓர் பார்வை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனும் ஆகிய இறைவனை வணங்கி இந்த பதிவைத் தொடங்குகிறேன்.

ஆதம் முதலாய் உலகிற்கு அருளப்பட்ட இறைத்தூதர்களின் வழியாக இறைவன், இறைத்தூதர்கள் வழியே மனிதர்களின் வாழ்க்கை ஒழுங்கு நெறிக்கு பல அறிவுரைகளை வழங்கி வந்து இருக்கிறார்.

அந்த வகையில் கி.பி.570 ஆண்டுகளில் முஹம்மது என்று அழைக்கப்படும் ஸல் நபிகள் நாயகத்தின் வழியாக, இறைவனால் வழங்கப்பட்ட ஒப்பற்ற ஒரு மார்க்கத்தின் விளக்கம் தான் திருக்குரான்.

திருக்குரான் நபிகள் வழியாக உலகிற்கு வழங்கப்படும் முன்பு, மக்களின் வாழ்க்கையை படியுங்கள் அன்பர்களே!

உயிரை நடுங்கச் செய்யும் பழக்க வழக்கங்களை வாழ்க்கையாக மக்கள் வாழ்ந்து வந்தனர். விலங்குகளை விட கொடிய, கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். 

 • கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்.
 • பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
 • குடம் குடமாக மதுபானங்கள் அருந்தினார்கள்.
 • காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்.
 • பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்.
 • தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வசாதாரணமாக இருந்தது.
 • சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது.
 • ஒரு குலம் மட்டுமே உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் என்றார்கள்.
 • அரபுமொழி பேசுவோர் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்றமொழி பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் மொழிவெறியில் மயங்கிக் கிடந்தனர்.
 • மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்.
 • தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காமல் விடமாட்டார்கள். அவரைத் தம்மால் பழி வாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.

கி.பி.570 வருடங்களில் மக்கள் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. இதைக் கண்ட ஸல் - நபிகள் அவர்கள் ஹிரா குகைக்குள் சென்று தனிமையில் இருக்க ஆரம்பித்தார். அந்த நாட்களில் அவர் இறைவனின் தூதராக அறிவுறுத்தப்பட்டு, அவர் மூலம் திருக்குரான் மக்களுக்கு அருளப்பட்டது.

தற்போது உலகில் பெரும்பான்மையான மக்களால் வாழப்படும் மார்க்கமாக இஸ்லாம்  திகழ திருக்குரானின் வசனங்களே ஆதாரமாய் உள்ளது.

சமீபத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றம், இஸ்லாமிய பெண்கள் பள்ளிகளுக்கு வரும் போது ஹிஜாப் அணியக் கூடாது எனத் தடை விதித்தது.  ஏனென்றால் கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உபகிளையான பிராமணிய ஜாதிய கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் இந்தப் பிரச்சினை உருவாக்கப்பட்டது. 

இப்போது உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதி கொண்ட அமர்வில் இந்தத் தடை பற்றிய விசாரணை நடக்கிறது. விசாரணையின் போது நீதிபதிகள் சொல்லியதாக பல கருத்துகள் பத்திரிக்கைகளில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

வக்கீல் பாட்ஷா என்பவர் குஜாராத் சீக்கிய மதத்தினர் தலைப்பாகை அணிவது போலத்தான், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர் என்று வாதிடும் போது, அதுவும் இதுவும் ஒன்றல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. சீக்கியர் மதம் வேறு, இஸ்லாம் மதம் வேறு. சீக்கிய ஆண்கள் தலைப்பாகை அணிவதும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதும் ஒன்றல்லவாம்.

Thanks to : Times of India.

ஹிஜாப் பற்றிய தீர்ப்பு எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்து விட்டது நீதிபதிகளின் கருத்துகள். மை லார்டுகள், கேள்வி கேட்க முடியுமா?   

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மட்டுமே கருவறைக்குள் அர்ச்சனை செய்ய வேண்டும், அது ஆகமம் என்றொரு தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருப்பதை நினைவில் கொள்க. மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது என்றும் கூடுதல் அறிவுறுத்தலும் இருக்கிறது.

சாதிய வன்முறையினை ஊக்குவிக்கும் ஆகமங்கள் உயர்ந்தது என்ற பார்வையில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். இறைவன் முன்னால் மனிதர்களில் வேறுபாடு இருக்க முடியுமா? 

இறைவன் மனிதர்களுக்குள் வேறுபாடு வைத்தா படைத்திருக்கிறான்? இல்லையே? 

தீண்டாமை குற்றம் என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அந்தச் சட்டம் கோவிலின் கருவறைக்குள் செல்லாத ஒன்றா? எழுபது ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.

சாதி வெறியர்களிடமிருந்து இன்னும் நடராஜர் கோவிலை மீட்க முடியாமல் உலகிற்கே மறை சொன்ன தமிழர் இனம் கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நீதிமன்றங்களும், நீதிபதிகளும் கட்சி மற்றும் மதச்சார்பு கொண்டிருப்பது சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது என்கிறது செய்திகள்.

மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு அனுமதி இல்லையெனில் நீதிமன்றத்துக்கு எந்தச் சட்டத்தின் படி அரசியல் சட்டமைப்பு அதிகாரம் கொடுத்திருக்கிறது என்றும் தெரியவில்லை. 

சிதம்பரம் நடராஜர் கோவிலும் ஆகமும், மதமும் ஒன்றெனில் இஸ்லாம் மதமும், ஹிஜாப்பும் வேறா? 

இஸ்லாம் மத விவகாரத்தில் தலையிட அரசுக்கோ அல்லது  நீதிமன்றத்துக்கோ அனுமதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலும் மதம் தொடர்பானதே அல்லவா? ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான விதிகள் உள்ளனவா என்றும் தெரியவில்லை.

எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. திருக்குரானில் ஹிஜாப் பற்றி ஏதும் இறை வசனங்கள் உண்டா?  கேள்விக்கு விடை தேடினேன். 

திருக்குரானில் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் அருளப்பட்ட இறை வசனங்கள் 114 அத்தியாயங்களில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் 24வது அத்தியாயத்தில் அந் நூர் (அந்த ஒளி) என்ற பகுதியில் 31வது வசனமாக ஹிஜாப் பற்றி இப்படித் தெரிவித்திருக்கிறார் அல்லாஹ்.

24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

ஆகையால் திருக்குரானில் அல்லாஹ்வினால் அருளப்பட்ட வசனங்களில் பெண்கள் முக்காடுகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தி இருப்பதைப் பார்க்கலாம்.

அரசாங்கத்தில்  மதச்சார்பு உடையவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இறைவனின் அருளுரையில், வஞ்சக எண்ணத்துடன், மத அத்துமீறல்களை நிகழ்த்துவதென்பது வாடிக்கையாக இருப்பது வேதனை. 

நீதியும், நீதிமன்றங்களும் தெய்வத்தின் இருப்பிடமாகக் கருதப்படுபவை. அந்த அமைப்பில் மதச்சார்புடையவர்கள் தன் சுயநலத்துக்காகவும், எதிர்கால எம்.பி.பதவிகளுக்காகவும் இறைவனால் உலகிற்கு அருளப்பட்டவைகளை விசாரணை செய்கிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

கடவுள் எப்போதும் இருப்பவர். அவரால் படைக்கப்பட்டவர்களின் காலமும் நேரமும் அவனின் கைகளில் உள்ளது. 

நீதிபதிகளை மக்கள் இறைவனின் பிரதிநிதியாகப் பார்க்கின்றார்கள்.  தங்களின் பொறுப்பு எதுவோ அதை உணர்ந்தவர்கள் தன் உயரத்தை அறிவர்.  தன் உயரம் அறிந்தவர்கள் தன் எல்லையை அறிவர். அறியாதவர்களும் அவர்களின் வாரிசுகளும் தர்மத்தின் முன்னால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

தங்களை மன்னர்களாக கருதிக் கொள்வர்களுக்கும் ஒரு நாள் இறைவன் தேதி குறித்திருப்பான் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

எதை விதைக்கின்றார்களோ அதை அறுவடை செய்தே தீர வேண்டியவர்கள் மனிதர்கள். அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனும் மனிதர்களின் செயல்களுக்கு தகுந்த தீர்ப்பினை நாடிடுவான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

இறுதியாக அல்லாஹ்வின் இறை வசனத்தோடு இப்பதிவினை முடிக்கிறேன்.

24:64. கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. எதில் நீங்கள் இருக்கிறீர்களோ அதை அவன் அறிவான். அவனிடம் அவர்கள் கொண்டு செல்லப்படும் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

எல்லாப் புகழுக்கும் உரியவர் அல்லாஹ் ஒருவரே!

வாழ்க வளமுடன் - ஒன்றே குலம், ஒருவனே தேவன்!

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.