குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, July 26, 2017

சிவன் ருத்ரன் விஷ்ணு பிரம்மா - குழப்பிய திருமூலர்

திருமூலரின் திருமந்திரம் எனக்கு மிகவும் பிடித்த நூல். அதன் பாடல்களின் அர்த்தம் தெரிந்து கொள்வதற்காக மூவாயிரம் பாடல்களின் தெளிவுரை புத்தகம் ஒன்றினை சமீபத்தில் வாங்கினேன். படிக்க ஆரம்பித்தேன். மண்டை காய வைத்தார் திருமூலர். பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் ஆறாவது பாடலைப் படித்ததும் திகில் தான் ஏற்பட்டது. ஏதோ ஒரு உணர்ச்சியால் பீடிக்கப்பட்டேன். அறியாமையா, போதாத அறிவா, தெளிவடையாத புத்தியா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

இதுகாறும் நான் பிரம்மன், விஷ்ணு, சிவன் என்ற மூன்று தெய்வங்கள் தான் படைத்தல், காத்தல், அழித்தல் செய்கின்றார்கள் என்று நினைத்திருந்தேன். நீங்களும் என்னைப் போலத்தான் நினைத்திருப்பீர்கள். வழி வழியாக நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட ஆன்மீகம் இதுதான். ஆனால் திருமூலர் இந்த மூவருக்கும் மூத்தவன் ஒருவர் உளார். அவரின் பெயர் சிவன் என்று பாடி இருக்கிறார். கிறுகிறுவென ஆகியது எனக்கு.

அதுமட்டுமின்றி அந்தச் சிவன் எப்படி இருப்பார்? அவருக்கு உருவ வழிபாடு இருக்கிறதா? அப்படி இருந்தால் எந்த இடத்தில் இருக்கிறார். இதுவரை சிவன் என்றால் சிவபெருமான், சிவலிங்கம் என இரண்டு உருவ வழிபாடு தானே செய்து வந்தோம். சிவன் வேறு, ருத்ரன் வேறு என்றால் ருத்ரன் எப்படி இருப்பார்? அவரின் உருவம் எப்படி இருக்கும்? இப்படி பல்வேறு கேள்விகள் ஊற்றுக்குள் இருந்து கொப்பளிக்கும் தண்ணீரைப் போல மனதுக்குள் எழும்ப ஆரம்பித்தது. ஜோதி ஸ்வாமியிடம் கேட்டேன் அவர் விளக்கங்கள் சொன்னார்.

ஆனாலும் பழைய வாசனை என்னை விட்டு அகலவே மாட்டேன் என்கிறது. குழப்பமான குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறேன். என் அறிவுக்கு எட்டியவாறு எனக்கு இருக்கும் புத்தியில் பதியும் படி திருமூலர் தான் அதற்கொரு விடையைச் சொல்ல வேண்டும். நான் மட்டும் குழம்பினால் போதாது என்று உங்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டேன். விடை தெரிந்தால் மெயில் அனுப்பி வையுங்களேன். புண்ணியமாகப் போகும்.


இதோ திருமூலர் என்னை திக்குமுக்காடச் செய்த அந்தப் பாடல்.

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

இதன் உரையை கீழே படியுங்கள்.

ஒவ்வொரு தொழிலே உடைய அயன் அரி அரன் என்னும் மூவரும் அவ்வத் தொழில் ஒன்றேபற்றி தம்முள் ஒப்பாவர். அம் மூவர்க்கும் முழுமுதலாய்ச் சிறந்தோனாய் என்றும் காணப்படுபவன் சிவன். மூப்பு - சிறப்பு. அச் சிவன் தன்னை யொப்பாக ஒரு பொருளுமில்லாத தனிமுதல்வன். அவனை விட்டு நீங்காது ஒட்டியுறைவோன் என்னுங் கருத்தால் அப்பன் என்று அன்பாய்ச் கூறின், அப்பனுமாவன். அவன் ஆருயிர்களின் நெஞ்சத் தாமரையின் உன்னிடத்தான். அந்நெஞ்சத்தாமரையின்கண் பொன்னொத்துத் திகழ்கின்றனன். பொன் : பொதுப்பெயர்; அஃது இரும்பு, பொன் என்னும் இரண்டினையும் குறிக்கும் ஆருயிரின், நெஞ்சம் ஆணவச் சார்பால் இரும்பொக்கும்; அருட்சார்பால் பொன்னொக்கும்.

இணைப்பு : http://www.ssivf.com/ssivf_cms.php?page=262


Thursday, July 20, 2017

நிலம் (39) - சுவாரசியமான வழக்கு - எது முதலில்

ரியல் எஸ்டேட் தொழில் தற்போதைய சூழலில் கடலுக்குள் அகப்பட்ட தோணி போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ரெரா என்கிறார்கள், ஜிஎஸ்டி என்கிறார்கள் இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். மணல் விலையை யார் நிர்ணயிக்கின்றார்கள் என்பது தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது போல மர்மமாக இருக்கிறது. அரசு ஒரு விலை சொல்கிறது, மார்க்கெட்டில் ஒரு விலை விற்கப்படுகிறது. வீடு வாங்கவோ அல்லது வீட்டு மனை வாங்கவோ விரும்பினால் குதிரைக்கு கொம்பு முளைக்கிற கதை தான் இனி. மிடில் கிளாஸ் மக்களின் அத்தியாவசிய தேவையான வீடு இனி அவர்களுக்கு வசப்படுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இரண்டொரு நாட்களுக்கு முன்பு அனுமதி பெறப்பட்ட மனைக்கு பட்டா தரமாட்டேன் என்று ஒருவர் அணுகினார். என்னவென்று பார்த்தால் எனக்கு தலையே கிறுகிறுத்தது. சுமார் 25 வீட்டு மனைகளுக்கான பட்டா பிரச்சினையாக இருக்கிறது. தற்போது அரசு நிலம் என்று வருகிறது. வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் ரிட்டயர்ட் ஆகி வீட்டில் இருக்கின்றார்கள். இதைச் சரி செய்து தர முடியுமா? என்றுக் கேட்டிருக்கின்றார்கள்.

ஒரு ஊரில் பெரும் தனக்காரர் இருந்திருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. அவைகளில் அவர் விவசாயம் செய்து வந்தார். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக தன் நிலத்தில் பெரிய ஏரியைக் கட்டி அதில் தண்ணீர் தேக்கி பரம்பரை பரம்பரையாக தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்திருக்கிறார். தன் நிலத்தில் விளையும் விவசாய பொருட்களை அருகில் இருக்கும் ரெயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு சென்று ரயிலில் ஏற்றி பக்கத்து ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று ஒரு நாள் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஏரி நிரம்பி உடைப்பெடுத்து வழிந்து அது ரயில்வே தண்டவாளங்களைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விட்டன. ரயில் பாதை முற்றிலுமாக அழிந்து விட்டது. அரசாங்கம் இவரின் மீது ஏரியைக் கவனமாக பராமரிக்காத காரணத்தினால் உடைப்பு ஏற்பட்டதாகவும், ஆகவே இந்த இழப்புக்கு அவர் நஷ்ட ஈடு தர வேண்டுமென்று வழக்குத் தொடுத்தது.

அந்த ஊரில் புகழ் பெற்ற வக்கீல் ஒருவரிடம் வழக்கு விவரத்தினைத் தெரிவித்து ஜெயித்துக் கொடுக்கும்படியும், அட்வான்ஸாக பணமும் கொடுத்து விட்டு வந்து விட்டார் விவசாயி. நீண்ட நாட்களாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. திடீரென்று ஒரு நாள் வக்கீலுக்கு வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது என அறிவிப்பு வர ஆள் சரியான டென்ஷன் ஆகி விட்டார். வழக்கு விபரங்கள் ஏதும் இல்லை, ஆவணங்கள் ஏதும் இல்லை. வழக்குதாரர் ஊரில் இருப்பதால் உடனடியாக வரச்சொல்லவும் முடியவில்லை. என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார். இரவெல்லாம் தூக்கமில்லாமல் சிந்தனையில் இருந்தவர், விடிகாலையில் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு வழக்கு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டு சமையற்காரன் நேரமாகி விட்டது எனவும், சாப்பிட வரும்படியும் அவரை அழைக்க, வருகிறேன் என்றுச் சொல்லி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் சமையற்காரன் இவரை சாப்பிட அழைக்க, அவனிடம் இவர் எரிந்து விழுந்திருக்கிறார். வழக்கு விபரத்தைச் சொல்லி என்ன செய்வதென்று தெரியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன் உனக்கு நான் சாப்பிடுவது தான் முக்கியமா? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த சமையற்காரன் எது முன்னாலே என்று கேட்டுப் பாருங்கள். வழக்கே முடிந்து விடும் என்றுச் சொல்ல வக்கீலுக்கு பொறி தட்ட குஷியாகி விட்டார். ரயில்வே நிலையம் அமைப்பதற்கு முன்பு ஏரி கட்டப்பட்டதா? இல்லை ரயில்வே நிலையம் வந்த பிறகு ஏரி கட்டப்பட்டதா? இந்தக் கேள்விக்குப் பதில் தான் வழக்கின் தீர்ப்பும். எந்த வித இழப்பீடும் தர வேண்டியதில்லை என வழக்கில் வெற்றி பெற்று விட்டார் அந்த வக்கீல். சட்டப்புத்தகத்தைப் படித்து பெரும் புகழ் பெற்றவரானாலும், அவரின் சமையறகாரனின் புத்திசாலித்தனம் தான் அந்த வழக்கில் அவர் வெற்றி பெற உதவியது. 

இந்தக் கதையில் இருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். வழக்கே ஆனாலும் சட்டப்புத்தகத்தினால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது. அனுபவம் என்றொரு விஷயம் இருக்கிறது. அந்த அனுபவ அறிவு தான் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வினைத் தரும்.

ரியல் எஸ்டேட் தொழிலில் பலரும் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு வருகின்றனர். கொஞ்ச நாளில் ச்சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்பதாய் கருதத் தொடங்கி விடுகின்றனர். நொடிக்கு நொடி மாறும் உலகம் இது. இந்த நிமிடத்தில் இருக்கும் ஒரு விஷயம் அடுத்த நொடியில் இருப்பதில்லை. ரியல் எஸ்டேட் தொழில் கற்றுக் கொள்வதல்ல. ஒவ்வொரு சம்பவத்திலும் கற்றுக் கொள்பவை. 

ஆயிரக்கணக்கில் பத்திரங்கள் படித்திருக்கிறேன். கோயம்புத்தூர் நகரின் ஒட்டு மொத்த சொத்தின் விபரமும் என்னிடத்தில் இருக்கின்றன. ஒரு சொத்தின் தன்மையை நான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொண்டு விடுவேன். லீகல் சரி செய்யலாம். ஆனால் நடை முறை என்பது வேறு. தமிழகத்தின் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் சீரமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ரெவின்யூ டிபார்ட்மெண்டில் இருப்போருக்கு எல்லா விஷயமும் தெரிந்து விடுவதில்லை. ரெவின்யூ டிபார்ட்மெண்ட் என்பது ஒரு கடல். என் அறிவு என்பது அதில் இரு துளி மட்டும் தான். பிற விஷயங்கள் அனுபவத்தில் மட்டுமே தான் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் விஷயங்களைத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். 

வெறும் ஏட்டறிவு மட்டும் இருந்தால் அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை என்பதைத்தான் அந்த சுவாரசியமான வழக்குச் சொல்கிறது.

குறிப்பு : மேலே இருக்கும் வழக்கு விபரம் அப்துற் றஹீம் அவர்களின் ’எண்ணமே வாழ்வு’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. நன்றி!


Tuesday, July 18, 2017

பிக்பாஸ் கமலின் நியாயம்

காயத்ரி ரகுராம் - கன்ஃபெக்சன் அறையில் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் வேண்டுமென்று கேட்ட போது மருத்துவரிடம் செக்கிங்க் செய்த பிறகு கால்சியம் சரியாக இல்லை என்றால் தரப்படும் என்று சொல்லப்படுகிறது. பிறகு மருத்துவரிடம் ஆலோசித்தால் காயத்ரியின் கால்சியம் லெவல் சீராக இருப்பதாகவும் ஆனாலும் இந்த வாரத்தின் குடும்பத்தின் தலைவராக இருப்பதால் அவர் கேட்டதைக் கொடுப்பதாகவும் குரல் ஒலிக்கிறது. வெளியில் வந்த காயத்ரி எனக்கு கால்சியம் லெவல் குறைவாக இருக்கிறது என்றுச் சொல்லி விட்டு, அதனால் பிக்பாஸ் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் பாக்கெட் தந்தார் என்கிறார்.

அவர் ஒரு பெண். பெண்கள் எப்போதும் சுய நலமாகத்தான் யோசிப்பார்கள். அதுவும் காயத்ரியின் தந்தை பிரபல நடன ஆசிரியர். தலைக்குள் கொஞ்சம் மமதை ஏறி விடும். இது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். அதில் தவறில்லை. தன்னை பிறரிடமிருந்து தனிப்படுத்திக் காட்டிக் கொள்வதற்காகவும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் காயத்ரி ரகுராம் சாக்லேட் மில்க் பவுடர் கேட்டார். அதைக் கொடுத்தார்கள். அதற்கொரு காரணத்தையும் சொல்லி விட்டார். தன் படுக்கையின் அருகே வெகுபாதுகாப்பாக வைத்துக் கொண்டு அவர் மட்டும் பயன்படுத்தி வருகிறார். இதில் எதுவுமே தவறில்லை.

ஆனால் கமல் செய்த விஷயம் தான் மனதை உறுத்துகிறது. கமல்ஹாசன் கலைத்தாகத்தைப் பற்றி பல செய்திகள் படித்திருக்கிறோம். ஒருவர் ஒரு துறையில் பிரபலமாக இருப்பது என்பது பெரிய விஷயம் இல்லை. தொழில் பக்தியின் காரணமாக மிளிர்வது என்பது சகஜம். தியாகராஜ பாகவதருக்கு மிஞ்சியா கமல் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்? ஆனானப்பட்ட அவரே தன் இறுதியில் என்ன ஆனார் என்பது வரலாறு. 

கோடிக்கணக்கான பேர் டிவி நிகழ்ச்சியைப் பார்க்கின்றார்களே அதில் தீர்ப்புச் சொல்லக்கூடிய இடத்தில் நாம் இருக்கின்றோமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உறுத்தல் கொஞ்சம் கூடவா இல்லாமல் போகும்?

காயத்ரி ரகுராம் பொய் சொன்ன விசயத்தை அப்பட்டமாக மறைத்தாரே அது என்ன விதமான செயல் என்று தான் எனக்குப் புரியவில்லை. கால்சியம் சீராக இருக்கிறது என்றால் காயத்ரிக்குத் தெரியாதா? அவர் என்ன சின்னப்பாப்பாவா? சீர் என்றால் என்ன என்று சினேகனைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டாராம். அட ஙொய்யாலே, அப்போ இருப்பினும் நீங்க தலைவராக இருப்பதால் தருகிறோம் என்று அந்தக் குரல் சொன்னதே அதை ஏன் இவர் மறந்தார்? அல்லது மறைத்தார் என்று கமலுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு சீராக இருக்கிறது என்றால் என்னவென்று தெரியாதாம்? காயத்ரிக்கு வாயில் கை வைத்தால் கடிக்கவே தெரியாது என்கிறார். அதையும் கமல் ஏற்றுக் கொள்கிறார். உங்க நியாயம் எனக்குப் பிடித்திருக்கிறது மிஸ்டர் கமல்! 

புரொகிராம் முடிந்தவுடன் காயத்ரி அந்த சாக்லேட் மில்க் பவுடரை எடுத்துக் கொடுத்து விடுகிறார். அவருக்கு வேண்டாமாம். அதையும் காட்டினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது என்றால் அது மிகையில்லை. உலகம் அப்படித்தான் இருக்கும். எல்லாமே சரியாக இருந்தால் மனித வாழ்க்கை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. மக்களிடம் பிரச்சினை இருந்தால் தான் அரசு இருக்கும். பிரச்சினையே இல்லை என்றால் அரசு எதற்கு? ராணுவம் எதற்கு? நாடு எதற்கு? ஒன்றும் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தாமதமாகத் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்டு உடனுக்குடன் தெரிந்து விடுகிறது என்பது போல நம்ப வைக்கப்படுகிறது.

காயத்ரி பொய் சொன்னதில் தவறில்லை. ஆனால் கமல்ஹாசன் அதை சாதுர்யமாக மறைத்தாரே அதுதான் எதற்கு என்று புரியவில்லை. 

Saturday, July 15, 2017

முதல் தேர்தலில் வெற்றியடைந்த கதை

மாலை நேரம், குழந்தைகள் இருவரும் பள்ளியிலிருந்து வந்தனர். ரூடோஸின் அட்டகாசம் ஆரம்பித்து ஒரு வழியாக இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். பையன் அப்பா என்று இழுவை போட ஆரம்பித்தான். மனையாள் மெதுவாக ஆரம்பித்தாள்.

”ஏங்க (எத்தனை நாளைக்குத்தான் ஏங்குறதோ தெரியவில்லை?), ஸ்கூலில் சேர்மன் தம்பியை ஏ.எஸ்.பி.எல் பதவிக்கு தேர்தலில் நிற்க வேண்டுமென்று சொல்லி இருக்கின்றாராம்? என்னங்க செய்யறது?” என்று இழுத்தாள்.

“அவனுக்கு அனுபவமாக இருக்கும் கோதை. நிக்கட்டுமே?” என்றேன்.

பையனுக்கு குஷி ஆகி விட்டது. அப்போதைக்கு சொல்லி விட்டேன். இருந்தாலும் மனதுக்குள் ஒரு நெருடல். நன்றாகப் படிக்கும் பையன். பதவியில் அமர்ந்தால் படிப்புக் கெட்டு விட்டால் என்ன செய்வது என்ற சிந்தனை. அப்படி ஏதேனும் நேர்ந்தால் பார்த்துக் கொள்ளலாம். அவனுக்கும் தேர்தல் பற்றிய அனுபவம் கிடைத்தால் அது நல்ல விஷயம் தான் என்று நினைத்துக் கொண்டேன். இருப்பினும் அவன் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் என்ன நினைப்பானோ? என்றொரு பதட்டமும் ஏற்பட்டது.

மறு நாள் மாலையில் “அப்பா, காய்கறிகளில் ஏதாவது ஒரு காயைத்தான் சின்னமாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லி இருக்கின்றார்கள்,  எனது போட்டோவுடன், அருகில் சின்னத்தை வைத்து நோட்டீஸ் தயார் செய்யச் சொல்லி இருக்கின்றார்கள்” என்றுச் சொன்னான்.

என்னைப் பொறுத்த வரையில் தேர்தலில் சின்னம் என்பது மக்கள் மனதில் பதியக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இரட்டை இலை, கைச் சின்னம், உதய சூரியன் ஆகியவை அதனால் தான் மக்கள் மனதில் பதிந்து விட்டன. ஆகவே பையன் முதன் முதலாக பள்ளியில் நடக்கும் தேர்தலில் நிற்கின்றான். ஆகவே சின்னம் வெகு முக்கியம் என்று திட்டமிட்டேன். காய்கறிகளில் தான் சின்னம் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டது. பல சிந்தனைகளில் ஒரு வழியாக ஒரு சின்னத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  

ரெட் சில்லி - சிவப்பு மிளகாயைத் தேர்ந்தெடுத்தேன்.  அடியேன் கம்யூனிஸ்ட் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய அரசியல்வாதிகள் பலர் பிரதமரை விமர்சித்தால் கூட தேசத்துரோகி என்கிறார்கள். சிவப்பு உடை உடுத்தி இருந்தாலே கம்யூனிஸ்ட் என்கின்றார்கள்.

பையனை போட்டோ ஸ்டுடீயோவிற்கு அழைத்துச் சென்று போட்டோ எடுத்து அதனுடன் ரெட் சில்லி சின்னைத்தை இணைத்து சிறிய நோட்டீஸ் தயாரித்து கொடுத்து அனுப்பி வைத்தாகி விட்டது.

பையனே பிரச்சாரம் செய்து கொள்ள வேண்டுமென்பதால் அவன் பிரச்சாரத்திற்காக சிறு உரையும் தயார் செய்து, அதை எப்படிப் பேச வேண்டுமென்று பயிற்சியும் கொடுத்து இருந்தேன்.

தேர்தல் அன்று மாலையில் ஓட்டு போட்டு விட்டு வீடு வந்த போது, ”அப்பா, ரிசல்ட் என்னாகும் என்று தெரியவில்லை” என்றுச் சொல்லிக் கொண்டிருந்தான். நிவேதிதா அண்ணன் தான்பா ஜெயிப்பான் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ரிசல்ட் வெளியிட மூன்று நாட்கள் ஆகி விட்டன. எனக்குள் பதட்டம் அதிகமாயிருந்தது. ரிசல்ட் அன்று கூட காலையில் பதட்டத்துடன் தான் இருந்தேன். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முதன் முதலாக தேர்தலில் போட்டி இடுகிறான். வெற்றி பெற்றால் அது அவனின் நினைவலைகளில் அழிக்க முடியாத சுவடாக நின்றிடுமே என்றொரு அற்ப சந்தோஷம் எனக்கு. ஆனால் என்ன நடக்கும் என்று தெரியாது.

மாலையில் பள்ளியிலிருந்து வீடு வந்த பையன், அப்பா ஜெயித்து விட்டேன் என்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தான். விஷயம் என்னவென்றால் பள்ளியின் எஸ்.பி.எல்லை விட இரு நூறு ஓட்டுக்கள் இவனுக்கு அதிகம் கிடைத்திருக்கின்றது. ரித்திக் தன்னுடன் போட்டி போட்ட இரண்டு சக மாணவர்களை விட 400 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தான்.

பதவி ஏற்புக்காக சிறு விழா நடைபெற்று ஏ.எஸ்.பி.எல்லாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றான்.

”யார் எதைச் சொன்னாலும் கோபப்படாதே. சரி, ஆகட்டும், பார்க்கலாம் என்ற வார்த்தைகளைத் தவிர வேறோன்றும் சொல்லி விடாதே” என்று அவனிடம் சொல்லி இருக்கின்றேன்.

Friday, July 7, 2017

இறைவனின் கண்ணீர்

மனிதனுக்கு பகுத்து அறியும் அறிவு இருப்பதினாலே அவன் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அனுபவத்தின் அறிவு கிடைக்கும் போது எல்லாமும் முடிந்து சமூகத்தில் இருந்து ஒதுங்கி விடுகிறான். பிறகு புலம்புகிறான். இறந்து போகின்றான்.

தற்சமயம் தமிழ் நாட்டில் (எவன் சொன்னான்னு தெரியவில்லை?) பிரபலமாக இருப்பது “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சி என்கிறார்கள். யூடியூப்பில் பிக் பாஸும் சீமானும் டிரண்டில் இருக்கின்றார்கள். சீமானின் நாம் தமிழர் கட்சி படு வேகமாக வளர்கிறது என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். பிக் பாஸில் ஜூலியான டிரண்ட் என்கிறார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு சில தடவைப் பார்த்திருக்கிறேன். காயத்ரி என்றொரு பெண்(?????). அந்தப் பெண்ணின் மூளைக்குள் இருப்பது ஒன்றே ஒன்றுதான் - ஈகோ. உடம்பு, மனசு முழுவதும் ஈகோ. இதனால் அவருக்குக் கிடைப்பது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அந்த ஈகோவிற்காக அவர் வாழ்கிறார். அவரின் முழு மனித தன்மை அவரிடமிருந்து விலகி ஓடி விட்டது. அவர் எந்த நொடியும் எந்தப் பொழுதும் தனக்காக என்றொரு வாழ்க்கையை வாழவே இல்லை. 

கஞ்சா கருப்பு - கஞ்சா இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு போதைப் பொருள். அதை தன் பெயரோடு இணைத்துக் கொண்டவரிடம் மனிதத் தன்மை இருக்குமா என்று எதிர்பார்ப்பது வீண்.

சக்தி - இயக்குனர் வாசுவின் மகனாக இல்லை என்றால் ஒரு தெரு நாய் கூட இவரைத் திரும்பிப் பார்க்காது. அது ஒன்று தான் இவருக்கான தகுதி. ஆனாலும் மனசு முழுக்க அகங்காரம். தன் நிலை மறந்து வாழும் ஒரு ஜீவாத்மா.

ஓவியா, ரைசா, ஜூலி, பரணி, வையாபுரி, நமீதா, அனுயா, ஆர்த்தி, ஸ்ரீ, கணேஷ், சினேகன் (டயனமிக் திருமணப் புகழ்), ஆரார் - இவர்களைப் பற்றி நீங்களே நான் எப்படி அவதானித்துள்ளேன் என அவர்களையும் அவதானித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் யோசியுங்கள். உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு நொடியும் நம்மிடமிருந்து போவது நம் வாழ் நாளும் இளமையும். ஆனால் அடைவது அனுபவம். குழந்தைப் பருவத்திலிருந்து இது நாள் வரையிலும் நம்மை வாழவே விடாமல் பலரின் சிந்தனைகளுக்காக, வழிகாட்டுதலுக்காக, பிறரின் மூளையை நம் மூளைக்குள் திணித்துக் கொண்டு அந்த வழியாகவே வாழ்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். உண்மையாக நமக்காக வாழ்ந்து வந்திருந்தால் கோபம், தாபம், எரிச்சல், பொறாமை இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால் சமூகத்தின் கட்டுப்பாடு என்ற பெயரில் தனி மனிதன் தன் இயல்பு மறைந்து, தன் நிலை மறந்து வேறு எவருக்காகவோ வாழ்ந்து வருகின்றான். யோசித்துப் பாருங்கள்.

திரு மூலர் அன்றே எழுதி வைத்துச் சென்றார். நீயே கடவுள் என்று. எவரும் நம்புவதும் இல்லை. அதைப்பற்றிச் சிந்திப்பதும் இல்லை. இங்கே இந்த வீடியோவைப் பாருங்கள். கடவுளின் கண்ணீர் என்ற ஒன்று உங்களுக்குத் தெரிய வரும். இந்த மனது உங்களிடம் இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் நீங்களும் கடவுளே!


நிலம் (38) - அன் அப்ரூவ்டு மனைகளை அப்ரூவ்ட் செய்வது எப்படி

தவறுகளுக்குப் பிராயசித்தம் செய்தால் சரியாகி விடும் என்பது இந்து மத வழக்கம். அதை அரசும் செய்கிறது. சட்டத்தினை மீறினால் அரசுக்குப் பணம் கட்டு, சரி செய்து தரலாம் என்கிறது. பெரும்பான்மை மக்களின் நன்மையை உத்தேசித்து இந்த முடிவுக்கு வருவது நல்ல விஷயம் தான். கிராமப்புறங்களில் பஞ்சாயத்தில் ஒரு சில விஷயங்களில் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்படும். அபராதம் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகி விடும். என்றாலும் அபராதம் செலுத்தியவர்களுக்கு அது அவமானமாகவே இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

பஞ்சாயத்து அப்ரூவ்டு என்ற ஒன்று இல்லாத போது விற்பனை களை கட்டியது. அதை பதிவுத்துறையும் ஏற்றுக் கொண்டு பதிவு செய்தது. அரசுக்கு வருமானமும் கொட்டியது. பதிவுத்துறைக்கும் பல வருமானங்கள். பஞ்சாயத்துக்களுக்கு வருமானம் கொட்டியது. ஒரு தவறை அழகாக எந்த வித மனசாட்சியும் இல்லாமல் அனைவரும் சேர்ந்து செய்தார்கள். அது சரியல்ல என்று நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது. நீதிமன்றம் அதற்கும் ஒரு விதிவிலக்கினை கொடுத்து மனை வரன்முறைப் படுத்த உத்தரவிட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மொத்தத்தில் பாதிக்கப்பட்டது யார் தெரியுமா? பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் விலை குறைவு என்று நினைத்து வாங்கினார்கள் அல்லவா அவர்கள் தான் மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். விலை குறைவு என்று நினைத்தவர்களுக்கு இப்போது அந்த மனையை வரன்முறைப்படுத்த கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.  மனை விற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மனை வாங்கியவர்கள் அப்போதே டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அப்ரூவல் மனைகளை வாங்கி இருந்தால் இந்தச் செலவு இல்லை அல்லவா? பதிவு துறையினருக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை. மனை விற்றவர்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லை. அரசுக்கு எந்த விதப் பிரச்சினையும் இல்லை, பஞ்சாயத்தார்களுக்கும் எந்த வித பிரச்சினையும் இல்லை. 

மொத்தப் பிரச்சினையும் மனை வாங்கியவர்களின் தலையில் வந்து விடிந்திருக்கிறது.  படித்துப் படித்துச் சொன்னாலும் எவரும் கேட்கவில்லை. டிடிசிபி மனைகள் விலை அதிகம் என்றால் அந்தளவுக்கு செலவு செய்தால் தான் மனை அப்ரூவல் பெற முடியும் என்பதால் விலை அதிகம். 

பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகளுக்கு யாரிடமும் எவரிடமும் அப்ரூவலும் பெற வேண்டியதுமில்லை செலவும் இல்லை. அதனால் தான் விலை குறைத்து விற்கப்பட்டது. படித்தவர்களும் அன் அப்ரூவ்டு மனைகளைத்தான் வாங்கினார்கள். இப்போது அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

சரி இனி அவ்வாறு வாங்கிய அன் அப்ரூவ்டு மனைகளை எப்படி அப்ரூவ்டு செய்வது என்று பார்க்கலாம்.

பத்திரத்தின் நகல்
பட்டா காப்பி
அ பதிவேடு
வில்லங்கச் சான்றிதழ்
மனை வரைபடம் ( சர்வே நம்பர் காட்டப்பட்டிருக்க வேண்டும்)
நிலத்தின் புல வரைபடம்
கிராம புல வரைபடம்
மனைக்குச் செல்லும் பாதை வரைபடம் - சர்வேயரிடம் சான்றிதழ் பெற வேண்டும்
தாசில்தார் என்.ஓ.சி - (விவசாய பூமியாக இருந்தால்)

மேற்கண்ட ஆவணங்களை வைத்து இணையதளத்தில் அப்ளை செய்து கட்டணம் செலுத்தி மேற்கண்ட விண்ணப்பத்தை உள்ளூர் பஞ்சாயத்திலும், உள்ளூர் அல்லது நகர் புற திட்டக்குழுமத்திடமும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் ரெகுலரிஷேசன் மற்றும் அபராத கட்டணங்களை கேட்கும் போது கட்டினால் தனி வீட்டு மனையை சப்டிவிஷன் செய்து அப்ரூவல் வழங்குவார்கள்.

இது பற்றிய மேலதிக விபரம் தேவைப்படுபவர்கள் போனில் தொடர்பு கொண்டு நேரில் வந்தால் உதவி செய்யத் தயாராக உள்ளேன்.