குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, January 7, 2012

மல்லிக்கட்டு ஐந்து ரூபாய்

தை மாதம் வந்து விட்டாலே மல்லித்தழை விலை குறைந்து விடும். மல்லித்தழைக்கு கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும். வளர்ந்து விடும். விளைச்சல் அதிகமாக வருவதால் விலை குறைந்து போய் விடும். கட்டு அஞ்சு ரூபாய்க்கு கீழே விற்றால், கொடுத்த கூலி இரு நூறு ரூபாய்க்கு கட்டுபடியாகாதே என்றார் ஒரு விவசாயி. உண்மைதான், விவசாயி உழுத கூலி கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது. முன்பு ஒரு தடவை கட்டு 25 ரூபாய்க்கு மல்லித்தழை விற்றது. இன்றைக்கு கருவேப்பிலை கிலோ 55 ரூபாய் என்றார்கள்.

மல்லித்தழை என்றவுடன் உங்களுக்கு நல்ல ஒரு சமையல் குறிப்பினை வழங்கிட வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது. மல்லித்துவையல் அல்லது சட்னி என்று இந்தக் குறிப்புக்குப் பெயர் வைத்துக் கொள்வோம்.

ஒரு கைப்பிடி அளவுக்கு சுத்தம் செய்த மல்லித்தழையை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு கீற்று இளம் தேங்காய், சிறிய துண்டு இஞ்சி, கொட்டைப்பாக்கு அளவுக்கு புளி, இரண்டு பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்த் மிக்ஸியில் கொரகொரப்பாய் அரைத்துக் கொள்ளவும். மேற்கண்டவற்றை வதக்க தேவையில்லை. அரைத்த விழுதுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்துக் கொட்டினால் அருமையான இயற்கையான “கொத்தமல்லிச் சட்னி” தயார். சூடாக இரண்டு இட்லியின் மேல் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அதனுடன் இச்சட்னியைச் சேர்த்துச் சாப்பிட்டால் அமிர்தம்.

கொத்தமல்லித்தழையினை உணவில் சேர்த்து கொண்டால் என்னபலன் கிடைக்கும் தெரியுமா?

இதயம், மூளை, ஈரல் நன்கு பலப்படும். ரத்தம் சுத்தமாகும். கண்கள் நன்கு பளிச்சிடும். வாய் துர் நாற்றம் நீங்கும். ஆணுறுப்பில் புண்கள் அல்லது கொப்புளங்கள் வந்தால் இதன் நீரைப் பயன்படுத்தினால் புண்கள் ஆறும். அதுமட்டுமல்ல சொர சொரப்பான தோலில் கொத்தமல்லிச்சாறை தேய்த்துக் குளித்து வந்தால் தோல் பளபளப்பாகும். நன்கு பசியெடுக்கும். மேற்கண்ட் சட்னியைச் சாப்பிடுபவர்களுக்கு இத்தனை பலன்களைத் தரும் .

அவசியம் மேற்கண்ட சட்னியைச் செய்து தரச் சொல்லி வாரம் ஒரு முறை சாப்பிட்டு விடுங்கள். மூலிகைகள் எதுவும் அலோபதி மருந்து போல உடனடி பலன் தராது. கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் பலன் தரும்.

திருமணமான ஆண்கள் மனைவியை தொந்தரவு செய்யாமல் நீங்களே செய்ய முனையுங்கள்.

அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * *

1 comments:

துளசி கோபால் said...

அருமை.

அதிலும் அந்தக் கடைசி வரி நச்:-)))))

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.