குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, December 10, 2008

கண்ணதாசனின் சப்பைக்கட்டு

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்காவது பகுதியில் தெய்வம் அன்றே கொல்லும் என்ற கதையினைப் பார்த்தோம். சும்மா கதை விடுகிறானென்று படிப்பவர்கள் நினைப்பார்கள். இங்கு, எனக்கு துணையாய் வருபவர் கண்ணதாசன். அவரின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார். இந்தச் சம்பவம் தெய்வம் அன்றே கொடுக்குமென்பதற்கு உதாரணமாய் மிளிர்கிறது.

திரையுலகின் ஜாம்பவான் சின்னப்பாதேவர் (பஹ்ரைன் செந்தில் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை) முப்பத்தைந்து வயது வரையில் வறுமையிலும், ஏழ்மையிலும் உழன்ற போதிலும் நேர்மையினைக் கடைப்பிடித்தார். வெற்றிலைப்பாக்கு கடையில் வாங்கிய ஆறு ரூபாய்க் கடனுக்காக கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினான் கடைக்காரன். நிதித் துன்பம் தாங்காமல் மருதமலை கோவிலுக்குச் சென்று முருகனிடம் அழுது புலம்பி விட்டு திரும்பிய போது காலில் இடறிய சிகரெட் பாக்கெட்டினை எத்தியவாறே வந்தவர் ஏதோ நினைத்தபடி பாக்கெட்டை எடுத்து பிரிக்க, உள்ளே இரு சிகரெட்டுகளும், பத்து ரூபாயும் இருந்ததாம். கடன் ஆறு ரூபாய். தெய்வம் கொடுத்தது பத்து ரூபாய். அழுத அன்றே கொடுத்தது தெய்வம்.
தொடர்ந்து கண்ணதாசனே எனது கதைகளுக்கு உதவியாய் வருகிறார். அவரது அந்தக் கட்டுரையில் இருந்து சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

" பாவமாம் புண்ணியமாம் எந்த மடையன் சொன்னான், சொர்க்கமாம் நரகமாம் எங்கே இருக்கின்றன அவை?, பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக் கொள்வோம் பின்னாலே " இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன் மொழிகள். நரம்பு தளர்ந்து போன கிழவர்கள் மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை என்று நினைக்கிறார்கள். எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள் என்கிறது கிறிஸ்தவம். மேலும் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்கிறது.

இப்படி எழுதி வரும் கண்ணதாசன் தர்மத்தின் தீர்ப்பு சூட்சுமமானது என்று சொல்லிவருமெனக்கு உதவியாய் கதை ஒன்றினையும் எழுதியிருக்கிறார். அவரின் வார்த்தைகளிலேயே சற்று சுருக்கமாய்ச் சொல்கிறேன்.

மாயவரத்திலே வாழ்ந்து வந்த விதவையினை ஐந்து பேர் சேர்ந்து கற்பழித்தனர். மூச்சுத் திணறி இறந்த பிறகும் பிணத்தையும் ஒருவன் கற்பழித்தான். நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். பிடிபட்டவர்கள் ஏழு பேர். ஏழு பேருக்கும் மறுநாள் தூக்கு. ஆறுபேர் அழுது துடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவன் மட்டும் சலனமேயில்லாமல் அமைதியாக இருந்தான். நானும் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அமைதியாக இருந்த மனிதனிடம் பேச்சுக் கொடுத்தோம். அவன் சொன்னான்.

"ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதவாறு அலிபி தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று, நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன் தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்து விட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்றுபேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததினால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கனவே செய்த கொலைக்களுக்காக சாகப் போகிறேன். "

அவன் சொல்லி முடித்த போது "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியே என் நினைவுக்கு வருகிறது.

தர்மு தன்னையும் மறந்து சொன்னார். " என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா! " ஆமாம் பாவம் கொடுத்த "போனஸ்" தான் செய்யாத கொலைக்குத் தண்டனை.

"என்ன விலை நிர்ணயிக்கிறாயோ, என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்" என்று எழுதி இருக்கிறார்.

இந்தக் கதையில் தர்மம் சற்று சூட்சுமமாகத்தான் தன்னை நிலை நாட்டி இருக்கிறது என்பதும் படிப்போராகிய உங்களுக்கு புரிகிறதா.

ஆதலால் தான் சொல்கிறேன் " தர்மம் சூட்சுமமானது தானே? "

நன்றி : கண்ணதாசன், வானதி பதிப்பகம்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.