இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை யுன்னாதே - பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் : பட்டினத்தார்.
பட்டினத்தாரைப் போல வாழ்ந்தாரும் இல்லை. வாழப்போவாரும் இல்லை. லெளகீக வாழ்க்கையின் உச்சத்தையும் தொட்டார். ஆன்மீக வாழ்வின் உச்சத்தையும் அடைந்தார். வாழ்க்கையின் விளக்கம் அவரது வாழ்க்கையிலே கிடைக்கும். ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே செய்யும் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே என்ற படி பிறருக்கு துன்பமிழைப்பதையே வாழ்வின் நோக்கமாக கொண்டுள்ளனர் மாந்தர்கள்.
தெய்வம் நின்று கொல்லுமென்பார்கள். ஆனால் தெய்வம் அன்றே கொன்ற கதை ஒன்றும் உண்டு.
அவன் அந்த ஊரில் எவருக்கும் அடங்கா காளை. இரண்டு பெண்மக்கள் அவனுக்கு. இருப்பினும் பிறர்த்தியாருக்கு அவன் செய்யும் அடாவடி, கொடுஞ்செயலைக் கண்டு துளியும் கவலைப்பட்டானில்லை. ஆண்டவனும் அவனுக்குப் பாடம் புகட்டாமல் விடுவதில்லை என்று முடிவுகொண்டான்.
தன் வீட்டுக்குப் போகும் வழியில் இருந்த நிலத்தின் மீது கண் கொண்டான் கயவன். அந்த நிலம் கைம்பெண்ணின் ஒருத்திக்குச் சொந்தமானது. அதில் சிறு வீடு கட்டினாள். வேலை பார்த்த கொத்தனாரையும், சித்தாளையும் நையப்புடைத்தான் கயவன். எனக்கு இந்தச் சொத்தில் பங்கிருக்கிறது என்றான். கைம்பெண்ணோ அழுதாள். புலம்பினாள். விட்டானில்லை கயவன். தடுத்திட்டான் வீட்டு வேலையினை. ஊரும் பார்த்தது. ஒடுங்கிக் கிடந்தது. கேட்டால் ஊரே என்னது என்பான் இந்தக் கொலைக்கும் அஞ்சாத கயவன் என்று ஒதுங்கிக் கொண்டது.
என்ன செய்வது? சட்டத்தின் கதவினைத் தட்டினாள் கைம்பெண். சட்டம் அவனைக் கேள்வி கேட்கவுமில்லை. கைம்பெண்ணினுதவிக்கும் வரவில்லை.
யாருமெனக்குத் தேவையில்லை என்று சென்றாள் கோவிலை நோக்கி. அழுதாள். வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள்.
மறு நாள் காலையில் கயவனின் மகள் ஒருத்தி தாலி அறுத்தாள். மருமகன் மண்டையைப் போட்டான். அடுத்த நான்காவது நாளில் கையும் காலும் இழுத்துக் கொண்டது. வாயில் இருந்து எச்சில் ஒழுகியது கயவனுக்கு. கைம்பெண்ணின் வீட்டு வேலை ஜரூராக நடந்தது.
தெய்வம் நின்று கொல்லுமென்பது தெய்வத்திடம் அடைக்கலமாவோரின் வேண்டுதலைப் பொறுத்தது.
தர்மம் சூட்சுமமானது தானே....
1 comments:
தர்மம் மிகவும் சூட்சுமமானது... அதை புரிந்து கொள்வது மிக கடினம்.. நம்பினார் கைவிடப்படார் என்பது சத்தியமான வாக்கு...
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.