குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 8, 2008

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் - 2

அந்த கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர். சமமாக சொத்து பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அண்ணனுக்கு நான்கு பிள்ளைகள். தம்பிக்கு ஒன்று. தம்பி மனைவிக்கும், தம்பிக்கும் அண்ணனைப் பார்த்து பொறாமை. பக்கத்து பக்கத்து வீடாகையால் அடிக்கடி ஏதாவது பிரச்சினை செய்வார் தம்பி. அண்ணன் ஒதுங்கிச் செல்வார். அண்ணன் மீதும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் துவேஷம் கொள்ளக் காரணம் அரசாங்கத்திடமிருந்து மாதா மாதம் விடுதலைப் போராட்ட வீரருக்கான பணம் வருவது. இது இப்படி இருக்க, அண்ணன் குடும்பத்தார் அனைவரும் விவசாய வேலையில் இறங்கியதால் குடும்பம் முன்னேறிக்கொண்டிருந்தது. தம்பிக்கு ஒரே ஒரு பிள்ளை ஆகையால் கூட மாட வேலை செய்ய ஆள் இல்லை. அதனால் அவரின் வளர்ச்சி தடைப் பட்டது. அண்ணன் குடும்பம் முன்னேறுவது கண்டு வெம்மையில் வாடிய தம்பி குடும்பம், பட்டுநூல்கார மந்திரவாதியை அணுகினர். எப்படியாவது அண்ணன் குடும்பத்திலிருப்போரை ஒழித்துக் கட்டி விட வேண்டுமெனச் சொல்லி காசையும் கொடுத்தனர். கொடுத்த காசுக்கு துரோகம் செய்யாமல் பட்டு நூல்காரனும் பில்லி வைத்தான். அண்ணன் குடும்பத்தாருக்குச் சொந்தமான மாட்டு மந்தையில் இருந்த மாடுகள் செத்து வீழ்ந்தன. பாரம் இழுக்கும் வண்டி மாடுகள் வாயில் ரத்தம் தள்ளி இறந்தன. ஆட்டு மந்தையில் ஆடுகளும் இறந்தன. என்ன காரணமென்று தெரியாமல் கலங்கினர் அண்ணன் குடும்பத்தார். தம்பி குடும்பமோ குதூகலத்தில் கொக்கரித்தது. அண்ணன் மனைவி கால் கடுப்பிலேயே செத்தாள். குடும்பத்தின் குலவிளக்கு அணைந்தது. ஒழிந்தது அண்ணன் குடும்பம் என்று சந்தோஷத்தில் மிதந்தது தம்பி குடும்பம். தம்பி மகனுக்கு வந்த மனைவியும் பட்டு நூல்காரனை விடாமல் பிடித்துக் கொண்டாள். விளைவு மேலும் மேலும் அண்ணன் குடும்பத்தில் இழப்புகள். பிரச்சினைகள். அண்ணன் குடும்பம் தவித்தது.

அண்ணன் வீட்டிற்கு ஒரு பாதிரியார் வந்தார். வீட்டின் சனி மூலையிலும், சனி மூலைக்கு நேரெதிர் மூலையிலும் புதைக்கப்பட்டிருந்த பில்லியினை எடுத்து சுடுகாட்டில் வைத்து எரித்தார். பிரச்சினை முடிவுக்கு வந்தது. என்ன காரணமென்று தெரிந்து கொண்டார்கள் அண்ணன் குடும்பத்தார். தம்பி குடும்பத்தார் செய்யும் எந்த மந்திரவாத தொல்லைகளும் தங்களைப் பாதிக்காதவாறு தற்காத்துக் கொண்டார்கள். தம்பி குடும்பத்தார் சோர்ந்து போனார்கள். அண்ணன் குடும்பத்தில் வளர்ச்சி வேகமெடுத்தது.

காலங்கள் உருண்டோடின. பிள்ளைகள் பெரியவர்களானார்கள். அண்ணனுக்கும் தம்பிக்கும் பேரன் பேத்திகள் வந்தார்கள். தம்பி திடீரென நோயில் விழுந்தார். தம்பி மகன், தகப்பனை வீட்டின் வெளியில் இருந்த மரத்தடியில் போட்டான். மலம், நீர் எல்லாம் படுக்கையிலேயே சென்றன. உடம்பில் புண் வைத்து புழு நெளிந்தது. சாப்பாடும் கிடைக்காது. கத்தி கத்தி தொண்டையும் வறண்டு போனது. மருமகளும், மகனும் உதாசீனப் படுத்தினர். மழையிலும், வெயிலிலும் கிடந்து வாடினான் தம்பி. தம்பியின் துயரம் பொறுக்க முடியாமல் தம்பி மகனுக்கும், மனைவிக்கும் தெரியாமல் அண்ணன் சாப்பாடு வாங்கி வந்து போட்டார். தம்பி அழுதான். தம்பியை தன் பராமரிப்பில் விட ஆள் வைத்து தூது விட்டான் அண்ணன். தம்பி மகன் மறுத்து விட்டான். மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் ஒரு குடையின் கீழ் மரத்தடியில் கிடந்தான் தம்பி. ஊரே பார்த்தது. யாரும் எதுவும் கேட்கவில்லை. இரவுகளில் அழுது புலம்புவான் தம்பி. தம்பி மனைவியை வீட்டை விட்டு அடித்து விரட்டினாள் மருமகள். தம்பியைச் சுற்றிச் சுற்றி வருவான் அண்ணன். ஒரு நாள் உடம்பில் புழுக்கள் அதிகமாக, குடிக்க கஞ்சியின்றி மழையிலும் வெயிலிலும் கிடந்து செத்தான் தம்பி. ஊரே ஒன்று கூடி மலர் படுக்கையில் கிடத்தி சுடுகாட்டில் வைத்து எரித்தார்கள். பலகாரங்கள் சாப்பிட்டார்கள். கறி சமைத்து ஊரே சாப்பிட்டது. தம்பியின் மனைவி ஊரை விட்டு ஒதுங்கி இருந்த ஒரு வீட்டில் கொண்டு போய் கிடத்தப்பட்டாள். நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பாடு கிடைத்து அவளுக்கு. அவளும் இருட்டறையில் கிடந்து பசியோடு செத்தாள். அவளுக்கும் காரியத்தைச் செய்து முடித்தார்கள். தம்பியின் இழப்புத் தாங்காமல், தம்பி செத்துப் போன ஒரு வருடத்திற்குள் அண்ணனும் செத்துப் போனான்.

தர்மத்தின் தீர்ப்பைப் பார்த்தீர்களா? தர்மம் சூட்சுமமானது தானே? எப்படி சூரியனும் பூமியும் ஒரு வித கணக்கோடு இயங்குகிறதோ அது போல மனிதனின் வாழ்க்கையும் மாயமான கணக்கின் ஒழுங்கோடு இயக்கப்படுகிறது என்பது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

குறிப்பு : தர்மம் சூட்சுமமானது எந்த தலைப்பில் வெளிவந்த முதல் பதிவுக்குப் பின் வரும் பதிவுகள் கதைகளாய் எழுதப்பட்டு, இன்றிலிருந்து தலைப்பும் தர்மத்தின் தீர்ப்புக் கதைகளாய் மாறிவிட்டது. படிக்க படிக்க கடவுளின் மீது பற்று ஏற்படுவதாய் கருதினால் அதற்கு நான் பொறுப்பாளி ஆக முடியாது. நடந்ததைச் சொல்கிறேன். இக்கதைகளில் வரும் மாந்தர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். அவர்களின் மூலம் கேட்ட சம்பவங்கள் தான் கதைகளாய் எழுதப்படுகிறது. சம்பவங்களின் உண்மைத் தரத்துக்கு நான் உத்திரவாதம் தர இயலாது. ஒரு வேளை இக்கதைகளின் மாந்தர்கள் சொல்லிய கதைகள் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.