குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, December 7, 2008

மேஜிக் செய்வது எப்படி ? மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்

சமீப காலமாக சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவிக்களில் மேஜிக் ஷோக்கள் களைகட்டுகிறது. பார்க்க படு சுவாரஸியமாக இருக்கிறது. இன் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது என் மாமாவும், என் முதுகும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. ஏன் அப்படி என்றால், என் சிறு வயதில் என் அப்பா வைத்திருந்த மகேந்திர ஜாலம் புத்தகத்தில் ஒரு மேஜிக் சமாச்சாரம் பற்றி படித்தேன். அதாவது நாயுருவி இலையினை நன்றாக மென்று குதப்பி துப்பிய பின்பு மண்ணை வாயில் போட்டு மெல்லலாம் எனவும், கண்ணாடியைக் கூட கடிக்கலாம் என்று எழுதி இருந்தார்கள். பரீட்சித்துப் பார்க்கலாம் என்று செயலில் இறங்கிய போது அதை எப்படியோ மோப்பம் பிடித்த மாமா என் முதுகில் விளையாடி விட்டார். முதுகில் அடிவாங்கிய பின்பும் தொடர்ந்து பரீட்சையில் இறங்கினால் விளைவுகள் படு மோசமாய் இருக்குமென்பதால் அத்தோடு மறந்து விட்டேன். மேஜிக் நிகழ்ச்சியினைப் பார்க்கும் போதெல்லாம் மாமாவும், என் முதுகும் நினைவுக்கு வருவதை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை.

அந்தப் புத்தகத்தில் இன்னொரு சமாச்சாரம் படித்தேன். வேரில்லாக் கொத்தான் செடி என்று ஒன்று இருக்கிறதாம். அது கள்ளிச் செடிகளின் மேல் கொடி போல படர்ந்து இருக்குமாம். வேர் இருக்காதாம். பின்னே எப்படி பச்சையாக இருக்கிறது என்று கேட்கத் தோன்றும். நடு இரவில் அந்த கொடி பூமியில் புதைந்து கிடக்கும் அதன் வேரான கிழங்கினை நோக்கி திரும்பும் எனவும், அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் என்று எழுதி இருந்தார்கள். உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. இந்த வேரில்லாக் கொத்தானை ஏதாவது எதிர்கள் வீட்டில் சொருகி வைத்து விட்டால் அவ்வீடு குட்டிச்சுவராய் ஆகிவிடும் என்று எழுதி இருந்தனர்.

நிலம்புரண்டி வேர் என்று ஒன்று உண்டாம் இந்தச் செடியின் விசேஷம் என்னவென்றால், புதையலைக் கண்டு பிடிக்க உதவுமாம். காடுகளில் கிடைக்கும் இந்தச் செடி மனித வாடை பட்டதும் பூமிக்குள் மறைந்து விடுமாம். இதைக் கண்டு பிடிக்க தேத்தா மரத்தின் கொட்டைகளை கையில் எடுத்துக் கொண்டு சென்றால், இந்தச் செடி இருக்கும் இடத்தில் தேத்தா மரத்துக் கொட்டைகள் வெடிக்குமாம். இப்படியெல்லாம் ஏதேதோ எழுதி இருந்தது. புலிப்பாணி ஜாலமென்று இன்னுமொரு புத்தகம் கிடைத்தது. படித்தால் தலை கிறு கிறுத்து விடும். அந்த அளவுக்கு படு பயங்கரமாக இருக்கும். தமிழில் இப்படியெல்லாம் புத்தகங்கள் இருக்கிறது என்பது எனக்கு புதிய தகவலாய் இருந்தது.

அந்த வயதில் சுபாவின் நரேந்திரன், வைஜெயந்தி நாவலில் மூழ்கி இருந்த எனக்கு இப்படிப் பட்ட புத்தகங்கள் வேறொரு உலகினை எனக்கு அறிமுகப்படுத்தியது. இப்பதிவின் மூலமாக அந்த உலகத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

புலிப்பாணி ஜாலமென்ற புத்தகத்தில் இருந்து ஒரு பாடலையும், காசு, கார்டு வைத்து எப்படி மேஜிக் செய்வது என்ற வீடியோவினையும் உங்களுக்கு வழங்குகிறேன். படித்தும், பார்த்தும் ரசித்து விட்டு இதைப் போன்றதொரு சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நடந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பூசித்தான் வெற்றிலையிற் பொட்டைப் பார்த்தாற்
புவனத்திலுள்ளதெலா முனக்கே தோன்றும்
நேசித்த சேடன்முடி காண்பாய் வைத்த
நிதியான புதையலெலா முன்ன தாமே
பூசித்தே சக்தியின்மா பீஜம் நாட்டிப்
புணர்ப்பான வாயிரத் தெட்டுருவே செய்ய
நேசித்துக் கருணையுடன் வருவளானா
னிதியோடு சூனியந்தர னெடுத்திடாயே


இது அஞ்சன மை தயாரிக்கும் முறை பற்றிய பாடல். அஞ்சன மை என்பது பரவை அஞ்சனம், பாதாள் அஞ்சனம் என்று இரு வகைப்படும். பரவை அஞ்சனமை பூமியிலுள்ள பொருட்களை எல்லாம் காட்டுமாம். பாதாளமென்பது பூமிக்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் காட்டுமாம்.

வாழ்க்கை படு மர்மமாக இருக்கிறது அல்லவா... ???????

சரி, மேஜிக் ட்ரிக் எப்படி செய்கிறார் என்று பார்த்து முயற்சிக்கவும்.


3 comments:

astle123 said...

நண்பர்களே!

சித்தர்கள் என்போர் பல அற்புதங்களை (அறிவியல் ரீதியானவை - மருத்துவமும் உண்டு) நமக்கு செய்து காட்டி உள்ளனர்.

இதில் புலிப்பாணி என்பவர் மிகவும் பிரசித்தியானவர். ஆனால் இவ்வகை சித்துகள் தீயவர்களுக்கு சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே வேண்டுமென்றே குழப்பும் வகையில் (உவகையாகவும், தமிழிலக்கணத்தை பயன்படுத்தியும், பூடகமாகவும்) செய்யுள்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

சித்தர் பாடல்களை புரிந்து கொள்ள நல்ல தமிழறிவும், சித்த மருத்துவ அறிவும் மிக மிக அவசியம்.

இப்பாடல்களை நேரடி தமிழர்த்தம் எடுத்து கொண்டால் அதன் அர்த்தமும், விளைவுகளும் பயங்கரமானவையாக இருக்கும்.

எனவே நல்ல வழிகாட்டுதலுடன் கற்று கொள்வதே அவசியமானது.

வாழ்த்துக்கள்!!

ISR Selvakumar said...

அந்தப் புத்தகங்களை பிரதி எடுத்து அனுப்புங்கள். படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

rajendran said...

வேரில்லா கொத்தான் இருப்பது உண்மைதான். மற்ற செடிகளின் தண்டினுள் சாறு உறிஞ்சி வாழும். இலை இல்லாமல் கொடி மட்டுமே படர்ந்திருக்கும். மாடுகள் க்ழிச்சல் நோய்க்கு போட்டு குணமாக்கியிருக்க்றேன். நீங்கள் குறிப்பிட்ட புத்தக நகல் எனக்கு அனுப்பி வைக்க முடிந்தால் மிக்க உதவியாக இருக்கும்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.