குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, May 21, 2014

இப்படியும் சில பெண்கள்

இன்று காலையில் வழக்கம் போல வினாயகரை தரிசனம் செய்து விட்டு, வயதான அர்ச்சகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இரயில்வேயில் டிரைவராக இருந்தவர். 32 வருடம் சர்வீஸ். ஒரு முறை கூட ஆக்சிடெண்ட் செய்யாதவர். அதற்காக பத்தாயிரம் ரூபாய் அவார்டும், ஹெச் எம் டி வாட்ச்சும் பரிசு பெற்றவர்.

”சார், ரேஷன் கார்டு முகவரி மாற்றத்திற்காக கோவை ஆர்டிஓ ஆபிசில் அருகில் இருக்கும் தாசில்தார் அலுவலகத்தின் மேல் மாடியில் இருக்கும் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.கணிணியில் ஒரு சீட்டுக் கொடுத்தார் அங்கிருந்த பெண்மணி” என்றார்.

ஒரு வாரம் கழித்து முகவரி மாற்றம் செய்து வாங்கி வரலாம் என்று சென்றேன். ”நாளை வாருங்கள். தாசில்தார் வெளியே சென்று விட்டார் என்றுச் சொல்ல நானும் வந்து விட்டேன். இப்படியே மூன்று மாதமாய் என்னை படாதபாடு படுத்தினார் அப்பெண்மணி" என்றார். 

ரிட்டயர்மெண்ட் வாங்கிக்கொண்டு வயதான காலத்தில் அமைதியாக இருக்க வேண்டிய வயதுள்ள கிழவரை, ரேசன் கார்டில் முகவரி மாற்றத்திற்காக அவரை மூன்று மாதம் அழைக்கழித்திருக்கிறார் அந்தப் பெண்மணி. என்ன ஒரு மனசோ அவருக்கு தெரியவில்லை.

மூன்றாவது மாதம் ஒரு நாள் காலையில் சென்றவர் அந்தப் பெண்மணியுடன் சண்டைக்குச் சென்றிருக்கிறார். அதற்கு அப்பெண்மணி ”உஷ் இது அலுவலகம்” என்று மிரட்டி இருக்கிறார்.

”இன்றைக்கு ரேஷன் கார்டு தரவில்லை என்றால் கலெக்டரிடம் போவேன்” என்றுச் சொல்லி சத்தம் போட்டிருக்கிறார் பிராமணர். 

அதன் பிறகு அவரின் கைப்பையில் இருந்து முகவரி மாற்றப்பட்ட ரேஷன் கார்டை எடுத்துக் கொடுத்திருக்கிறார் அவர்.  "இது போல கட்டாக பல ரேஷன் கார்டுகளை அவர் கைப்பையில் வைத்திருந்தார்" என்றார் பெரியவர்.

"கடவுளாகப் பார்த்துக் கொடுத்த வேலைக்காவது அவர்  நியாயமாக இருக்கவில்லை அந்தப் பெண்மணி" என்றார் அவர்.

வயதானவர்களிடம் சாபம் பெற்று அவர் என்ன சாதித்து விடப்போகிறார் என்று தெரியவில்லை.

கோடி கோடியாய் குவித்து வைத்திருக்கும் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் கைகளைக் கட்டிக் கொண்டு கோவில் கோவிலாய் ஏறி இறங்குகின்றார்கள். தான் செய்த பாபம் கழிக்க வெளியில் தெரியாமல் அனேக காரியங்களைச் செய்கிறார்கள். 

பெண்களுக்கு இரக்க உள்ளம் என்கிறார்கள். இந்தப் பெண்மணிக்கு என்ன மாதிரியான உள்ளமோ தெரியவில்லை.

ஏழை அர்ச்சகரின் சாபம் பலித்து விடக்கூடாது என நினைத்தேன். 


Thursday, May 15, 2014

தாவணியும் பழைய சாதமும்




தமிழர்கள் ஏன் தங்களது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வருகின்றார்கள் என்பதே புரியவில்லை. இவர்கள் என்ன தான் நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்றே புரியவில்லை. அமெரிக்காகாரன் ஆராய்ச்சி செய்து, “பழைய சாதத்தில் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும், உடலுக்கு ஊட்டம் தரும் சக்தியும், அத்துடன் இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் மேலும் உடலுக்கு வலு சேரும்” என்று சொல்கிறான். ஆனால் பழைய சாதத்திற்குச் சொந்தக்காரர்களோ பழைய சாதமா “அய்யே! “ என்கிறார்கள்.

இரவு படுக்கப் போகும் முன்பு, மண்சட்டியில் இரவு வடித்த ஆறிய சாதத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வைத்து விட்டு மறு நாள் காலையில் கிடைக்கும் சாதமும், அதன் நீரும் தான் “அமிர்தம்”

இதற்காகவே ஊருக்குச் சென்றிருக்கும் போது மண்சட்டி வாங்கி வந்து மனையாளிடம் கொடுத்தேன். நகரத்தில் வாழ்ந்தவள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பெரும்பாலும் குழம்பு, பொறியல் போன்றவைகள் மண்சட்டியில் தான் சமைக்கிறார்.

இப்போதெல்லாம் காலையில் கொஞ்சம் மோர் விட்டு, கரைத்து, தொட்டுக்கொள்ள காய்கறிகள் கூட்டும், கொஞ்சம் சின்ன வெங்காயமும் சாப்பிடுகிறேன். தற்போது கோவையில் குளிராக இருந்தாலும் அமிர்தச் சாப்பாடு இல்லையென்றால் எனக்கு இறங்கவே இறங்காது. வாரம் நான்கைந்து தடவை பழைய சாதமும், சின்ன வெங்காயமும் தான்.

சமீபத்தில் ஒரு கோவிலுக்குச் சென்றிருந்த போது அங்கு வந்திருந்த பெரும்பாலான இளம் பெண்கள் சுடிதார், டைட் டீசர்ட், பேண்ட் அணிந்து வெகு கவர்ச்சியாய் பார்ப்போரை கிளர்ச்சியடையும் விதமாக வந்திருந்தார்கள்.

அதில் ஒரு சில பெண்கள் தாவணி அணிந்து, தலையில் பூச்சூடி, நெற்றியில் திலகம் துலங்க “அம்மனைப்” போல வந்திருந்தார்கள்.

தமிழர்கள் தனி அடையாளமான “தாவணியும் பாவாடையும்” கொஞ்சம் கொஞ்சமாய் காணாமலே போய்க் கொண்டிருக்கிறது. தமிழனுக்குரிய அடையாளத்தை இழந்து அப்படி என்ன மிகச் சிறந்த நாகரீக வாழ்க்கை வாழ்கிறார்களோ தெரியவில்லை.

மலேயாக்காரர்கள்,சீ னர்கள் எங்கு சென்றாலும் தங்கள் அடையாளங்களை எப்போதும் இழப்பதில்லை. ஆரியர்கள் என்றுச் சொல்லக்கூடிய பிராமணர்களும் தங்களுக்குரிய எந்த ஒரு அடையாளத்தையும் இழக்கவே மாட்டார்கள். யூதர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்க நாடில்லாத போது ஒரு தனிப்பட்ட குழுவை உருவாக்கி, அவர்களுக்கு உதவி செய்து யூத கலாச்சார, இலக்கிய விழுமியங்களை பாதுகாத்து வந்தார்கள். இன்றைக்கு இஸ்ரேல் என்றொரு தனி நாட்டையே உருவாக்கி வாழ்ந்து வருகிறார்கள்.

உலகிற்கே நாகரீகம் கற்றுக் கொடுத்த தமிழர்கள் இப்படியா தரம் தாழ்ந்து போவார்கள்.

மனது வலிக்கிறது.


Saturday, May 10, 2014

ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா




கீரமங்கலம் அரசு பள்ளியில் ப்ளஸ் 1, 2 படித்துக் கொண்டிருந்த போது பைங்காலில் இருந்த சின்னம்மா வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்தேன். தம்பி நடராஜ் தான் அழைத்து வருவான்.

காலை, மாலை சின்னம்மா வீட்டில் சாப்பாடு, மதியம் மட்டும் செட்டியார் கடையில் சாப்பாடு. செட்டியார் அழுக்கு வேட்டி கட்டி இருப்பார். எப்போதுமே வியர்வையுடனே இருப்பார். புகை படிந்த ஹோட்டல். இரண்டு பக்கமும் பெஞ்ச் போடப்பட்டிருக்கும்.

மாதா மாதம் செட்டில்மெண்ட் என்பதால் எனக்கு இரண்டு ரூபாய் சாப்பாடு எனக்கு ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா. சிறு வயதிலிருந்தே அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் 75பைசா விலை குறைத்து தான் சாப்பாடு போட்டார்.

வாழை இலை மீது சூடான சாதத்தைப் போட்டு குழம்பு ஊற்றுவார் அப்படி ஒரு வாசம் வரும். அத்துடன் அவர் வைக்கும் கூட்டு சுவையோ சுவையாக இருக்கும். ஆனால் மோர் மட்டும் புளிச்ச வாடை இல்லாது இருக்கவே இருக்காது.

அருகில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் இலையில் மீன் வறுவல் வைப்பார். என்னைப் பார்ப்பார் வைக்கவா என்பார். நான் மறுத்து விடுவேன்.

கிட்டத்தட்ட ஆறு மாதம் அக்கடையில் சாப்பிட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் மீன் வைக்கவா என்று அவர் கேட்கத் தவறுவதில்லை. நான் மறுப்பதையும் விடுவதில்லை.

அவர் ஏன் தினமும் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது எனக்குப் புரியவே இல்லை.

செட்டியார் கடைச் சாப்பாட்டுச் சுவையும், அவை வைக்கும் கூட்டும் இன்றைக்கும் என் நாவில் மறையாது இருக்கிறது.

அது ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா சாப்பாடு என்பதால் தானோ என்னவோ அவ்வளவு சுவையாக இருந்தது போலும்.

அதுமட்டுமல்ல காரணம் !

செட்டியாரின் மீன் வறுவலும் தான் என்கிறது மனசு !


Wednesday, May 7, 2014

நிலம்(6) – பத்திரங்கள் எழுதும் போது கவனம்

சமீபத்தில் ஒருவர் தன் இரண்டு மனைகளை விற்பனை செய்ய சப்ரெஜிஸ்டர் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். கிரையப்பத்திரம் எழுதும் போது சர்வே எண் தவறாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால் இவர் முன்பு கிரையம் பெற்றவரின் பத்திரத்திலும் இதே தவறு நடந்திருக்கிறது. இதை எவரும் கண்டுபிடிக்கவில்லை. இரண்டு பத்திரங்கள் தவறான சர்வே எண் குறிப்பிடப்பட்டு பதிவாகி இருக்கிறது. இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் இல்லாத சொத்துக்கு பத்திரம் இருக்கிறது என்பதுதான்.

இரண்டு பத்திரங்களில் பிரச்சினை இருக்கிறது. இதை எப்படிச் சரி செய்வது? வழி என்ன? என்று குழம்பிப் போய் நம்மிடத்தில் வந்தார்கள்.

பத்திரங்கள் எழுதும் போது மிகக் கவனமாய் இருத்தல் முக்கியம். அவசர அவசரமாக பத்திரம் எழுதுவது, தெரிந்தவர் தானே என நினைத்துக் கொண்டு எழுதுவது இதெல்லாம் செய்தால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினை வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

கிராமப்புறங்களில் சொத்து வாங்குவது என்பது வேறு. அதே நகர்ப்புறங்களில் சொத்துக்கள் வாங்குவது என்பது வேறு. கிரையம் செய்யும் போது ஒவ்வொரு ஆவணங்களையும் சரி பார்த்து, சிட்டா, அ பதிவேடு மேலும் இன்ன பிற ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தல் வேண்டும். சில லீகல் ஒப்பீனியன் வழங்கும் வக்கீல்களே தவறு செய்கின்றார்கள். ஆகவே வெகு கவனமாய் இருத்தல் மிக அவசியம்.

இல்லையென்றால் உழைத்துச் சேர்த்த பணத்தினை இழக்க நேரிடும்.


Wednesday, April 16, 2014

குக்கூச் சத்தமும் ஒரு அனுபவமும்





சித்திரை ஒன்றாம் தேதியன்று அன்று குருநாதர் ஆசிரமத்திற்குச் சென்று அவரிடம் அமர்ந்திருந்தேன். ஏகப்பட்ட நபர்கள் வந்து குரு நாதரை வணங்கிச் சென்றார்கள். அங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதாவது கொண்டு வந்து அவரிடத்தின் முன்பு வைக்கின்றார்கள். பக்தி என்பதை விட குருநாதரின் மீதான அன்பின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி வைத்திருந்த பலாப்பழம் அன்றுச் சரியான மணத்துடன் நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது.

குருநாதர் அமைதியாக யோகத்தில் இருந்தார்.

அவரிடம் உட்கார்ந்திருந்தாலே அமைதி, ஆனந்தம் தான். குளிர்ச்சி தவழும், அமைதியான அவ்விடத்தில் அமர்ந்திருப்பதே ஒரு கொடுப்பினை தான். விழித்திருக்கும் போது ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லாது எங்கெங்கோ அலைபாயும் மனம் அவரிடத்தில் அமர்ந்திருக்கும் போது அமைதியுடன் இருக்கும்.

சிறிது நேரம் கழித்து, குரு நாதரின் அறையிலிருந்து வெளியில் வந்து எம் குரு ’ஜோதி சுவாமி’களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

அப்போது குருநாதரைச் சந்திக்க வந்த அன்பர், குருநாதருடன் நேரடியாகப் பேசிப் பழகி மருத்துவ சிகிச்சை பெற்ற திரு.கனகராஜைச் சந்தித்தேன்.

திரு.கனகராஜ் இ.எஸ்.ஐயில் பணி செய்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு நோய்க்காக அலோபதி மருத்துவம் பார்த்திருக்கிறார். ஒரே ஒரு மாத்திரைதான் சாப்பிட்டாராம். எழுந்து உட்கார முடியவில்லை என்றார் அவர் கண்களில் ஒளி மின்ன.

இனி கனகராஜ் முடிந்தான் என்றுச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்கள். எல்லாமே படுக்கையில் என்றாகி விட்டதாம். அலோபதி மருத்துவமும் கைவிட அவர் தன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று முடிவு கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவரின் நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ”முள்ளங்காடு வெள்ளிங்கிரி சாமிக்கிட்டே போ!” என்றுச் சொல்லி பேரூந்தில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

உடம்பு முழுவதும் வீங்கிப் போய், நடக்க முடியாமல், உட்கார முடியாமல் பேருந்திலிருந்து நடத்துனர் இறக்கி அங்கேயே விட்டு விட்டுப் போய் விட்டாராம்.

அங்கிருந்து நடக்க முடியாமல் உருண்டே ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கிறார். சாமி அவரைப் பார்த்ததும் பதியில் இருந்த ஒரு சிலரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் போய் சிவனார் வேம்பு என்கிற மூலிகையின் வேரினைப் பறித்து வர சென்றிருக்கிறார்.

”கை பெரிசு சார், பச்சைப் பசேல்னு இருந்தது” என்றார் கனகராஜ்.

கை அளவு பெரிய சைஸ் சிவனார் வேம்பின் வேரை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து கனகராஜிடம் கொடுத்து இதைக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் வா என்றுச் சொன்னாராம்.

யார் யாரையோ பிடித்து வீட்டுக்குச் சென்ற கனகராஜ், தன் அம்மாவிடம் வேரைக் கொடுத்து இதை அரைத்துத்  தா என்றுச் சொல்லி படுக்கையில் படுத்து விட்டாராம்.

என் அம்மா அந்த வேரை எப்படித்தான் அரைத்தாரோ தெரியவில்லை. என்றார் கனகராஜ். ஒரு குவளை அரைத்த பச்சைப்பசேல் விழுதினை குடித்து விட்டு படுத்திருக்கிறார். அது நாள் வரை தூக்கமே இல்லாமல் இருந்தவர் நன்கு தூங்கியிருக்கிறார். மறு நாள் எழுந்து விட்டார்.

”ஆச்சரியம்! அதிசயம் !!” என்றார்.

”இன்று உங்கள் முன்பு பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றுச் சொல்லி தலைமேல் இருந்த குரு நாதரின் புகைப்படத்தைப் பார்த்துச் சிரித்தார் அவர்.

”அது இருக்கும் ஒரு இருபதாண்டுக்கும் மேல்” என்றார் தொடர்ந்து

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

எம் குரு ’ஜோதி சுவாமி’ புன்னகையுடன் உட்கார்ந்திருந்தார்.

அப்போது குரு நாதரின் அறைக்குள்ளிருந்து ”குக்கூ குக்கூ” என்றொரு சத்தம் வர ஆரம்பித்தது.

உள்ளே பார்த்தேன். வெள்ளுடை உடுத்திய தேகப்பொலிவுடன் பெரியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரிடமிருந்து தான் அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது.

“சாமி, அவர் என்ன செய்கிறார்?”

“வாசியோகத்தில் உள்மூச்சுப் பயிற்சியில் தியானத்தில் இருக்கிறார்”

“அப்படின்னா?”

“அவர் இப்போது மூச்சினை வெளியில் விடுவதும் இல்லை, உள்ளே இழுப்பதும் இல்லை, உள்ளுக்குள்ளேயே மூச்சினை செலுத்திக் கொண்டு தியானத்தில் இருக்கிறார்” என்றார்.

அந்தப் பெரியவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனசு சலனமற்று இருந்தது.

உள்ளே குரு நாதர் அமைதியுடன் யோகத்தில் உட்கார்ந்திருந்தார்.



ஜல் ஜல் சலங்கை ஒலி



ஆவணம் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் முடிவாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆரம்பமாகவும் இருக்கும் ஒரு ஊர். காவிரி ஆறு பாயும் கடை நிலைக் கிராமம். எனது தாத்தா ஊர் அதுதான். 

காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து தான் ஊரில் விவசாயம் ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று குளங்கள் இருக்கின்றன.

விவசாயம் ஆரம்பித்து விட்டால் விடிகாலையில் மாட்டு வண்டிகள் வயல்களுக்குச் செல்ல ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு விதம். சில மாடுகள் கருத்தாய் இருக்கும். சில மாடுகள் சண்டித்தனம் செய்யும்.

என்ன தான் இருந்தாலும் அதுகள் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையும், வண்டிச் சக்கரத்தின் கடையாணியில் மாட்டியிருக்கும் ஒரு வித பூ இலை போன்ற தகடுகளும் இசைக்கும் ஒலிக்கு இணையாக எதையும் சொல்லி விட முடியாது.

சல சலவென மடையிலிருந்து வயலுக்குள் பாயும் தண்ணீரை உழப்பி இரண்டடி ஆழம் புதையும் சகதிக்குள் கால்களை வைத்து கொண்டு வெண்ணெய் போல உழும் வண்டி மாடுகளைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. மாடுகள் இல்லையென்றால் மனிதர்கள் வாழ்வதற்கு பெரும் சிரமப்பட்டிருப்பார்கள்.

விவசாயம் ஆரம்பித்த உடனே ஆவணத்து ஆற்றங்கரையோரம் புதியதாக ஒரு இட்லிக் கடை முளைக்கும். சூடாக டீயையும், இட்லியையும் விற்றுக் கொண்டிருப்பார்கள். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆற்றுக்கு அடுத்து குளங்கள் அதைத் தொடர்ந்து வயல்வெளிகள், அவ்வயல்களுக்கு இடையே ஊர்ந்து செல்லும் வெள்ளை பாம்பு போல சிற்றாறுகள் என கண்களைக் கட்டி இழுக்கும் ஆவணம் கிராமம்.

விவசாயமெல்லாம் முடிவும் தருவாயில் ஆவணத்தான் குளத்தின் மறுகரையில் இருக்கும் மாயன்பெருமாள் கோவில் பொங்கல் வந்து விடும். மாட்டு வண்டி கட்டிக் கொண்டு அம்மாவுடன் கோவிலுக்குச் செல்வோம். ஜெயராஜ் மாட்டினைக் குளிப்பாட்டி கழுத்தில் சலங்கை கட்டி விடுவார். சும்மா ஜல் ஜல் என ஜலங்கைகள் ஒலிக்க மாட்டு வண்டியில் பயணிப்பதே ஒரு அலாதி சுகம் தான்.

மாமா, தாத்தா, அக்கா, தங்கை என அனைவரும் அங்கு ஆஜராவோம். சிறு வயதில் எனக்கு பெரிய ஆற்றைப் பார்க்க பயம். அதுவும் கருப்புக் கலரில் இருக்கும் தடுப்பையும், தடுப்பை மீறிக் கொப்பளிக்கும் தண்ணீரையும் பார்த்தால் கிலி பிடித்து விடும்.

கண்ணையும், காதையும் பொத்திக் கொண்டு குப்புறப்படுத்துக் கொள்வேன். ஆனால் மாரிமுத்து திரையரங்கில் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டை போடும் போது நானும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் தோழிகளின் முதுகில் டிஸ்ஸூம் டிஸ்ஸூம் என்று குத்தி சண்டையிடுவேன் என்று அம்மா சொல்வார்கள்.

இதெல்லாம் எனது கடந்த கால நினைவுகளாய் எதிரே மாட்டுக் கொம்பில் ஜலங்கை கட்டி, வண்டியில் தன் குடும்பத்தோடு வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைக் கண்ட போது எனக்குள் நிழலாடியது.

எங்கெங்கு காணினும் பஸ்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் என்று வெள்ளிங்கிரி மலை அடிவாரம் முழுவதும் ஆட்கள் மயம்.

பலரின் கையில் ஊன்று கோல்களுடன் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசிக்கவும், மணோண்மணியம்மையைத் தரிசிக்கவும் ஆட்கள் படை படையாய் வந்திருந்தனர். நிமிஷத்திக்கொரு தரம் பஸ்கள் நிரம்பி வழியும் ஆட்களுடன் பயணித்துக் கொண்டிருந்தன.

சித்திரை மாதம் முதல் தேதி அல்லவா? அதனால் நானும் மனையாளும் குருதேவரைச் சந்திக்கச் சென்று விட்டு, மதியம் பதினொன்று போல முட்டம் நாகேஸ்வரரையும், முத்துவாளியம்மனையும் தரிசிக்கச் சென்று கொண்டிருந்த போது பார்த்தவை தான் மேலே உள்ளவை.

சித்திரை முதலாம் தேதி அன்று தான் அம்மனைத் தொட்டு வழிபாடு செய்ய அனுமதிப்பார்கள். சுமார் 5000 ஆண்டுகள் பழமையான அம்மன் அல்லவா அவர். வெள்ளி வளையம் அணிந்து அம்மனின் பாதங்கள் சிலு சிலுவென குளிர்ந்தது. ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி அவருக்கு பாதம் சுத்தம் செய்து அம்மனின் பாதம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன். மனசு இலேசாகிப் போனது. இதை விட பேரின்பம் என்ன வேண்டி இருக்கு?

நாகேஸ்வரப் பெருமான் பாம்பு சுற்றி இருக்க முழு அலங்காரத்தில் கொள்ளை அழகில் பார்ப்போர் மனதைச் சொக்கி இழுத்தார். சொக்கியின் கணவர் அல்லவா? எல்லோரையும் சொக்க வைத்து விடுவதில் அவருக்கு நிகர் அவரே.

காளகஸ்தி சென்று ராகு கேது பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்கே நாகேஸ்வரரைச் சந்தித்து பசும்பாலில் வாரமொரு தடவை அபிஷேகம் செய்தால் சொக்கியின் கணவர் ராகுவையும், கேதுவையும் சும்மா இருங்கப்பா, நம்ம பையன் இவர் என்றுச் சொல்லி சிபாரிசு செய்வார்.

தரிசனம் முடித்து பேரூர் நோக்கி வந்து கொண்டிருக்கையில் மாதம்பட்டியில் புதியதாய் முளைத்திருந்த ஒரு கும்பகோணம் டிகிரி காப்பிக் கடையில் ஒரு காப்பியையும், வாயில் இட்டவுடன் கரைந்தோடிய பக்கோடாவையும் சாப்பிட்டு விட்டு சந்தோசத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டுக்குள் நுழைந்தும் ஜல் ஜல் சலங்கை ஒளி  காதுகளில் கொண்டே இருந்தது.

நாம் இழந்து போன இன்பம் அல்லவா அந்தச் சத்தம் !


Monday, March 31, 2014

மனதைப் போட்டு அழுத்துகிறதா பிரச்சினை? இதோ வழி

மனிதர்களில் பெரும்பாலானோருக்குப் பிரச்சினையே அவர்களின் மனசு தான். அரை நிமிடம் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? அப்படியே அரை மணி நேரம் மனதில் எந்த ஒரு சிந்தனையும் இன்றி இருந்தால்....

தூக்கத்தில் தான் மனசு சிந்தனையற்று இருக்கும். அதுகூட சில சமயங்களில் கனவாய் வந்து மிரட்டும்.

வேறு வழி இன்றி தன்னிலை மறக்க தமிழக அரசின் மரணக்கடைக்குச் செல்ல வேண்டியதுதான். வித விதமான மருந்துகளை வாங்கிக் குடித்து தன்னிலை மறந்து போதையில் திளைத்தால் தான் மனதைப் பிடித்து அழுத்திக் கொண்டு படாதபாடு படுத்தும் அந்தப் பிரச்சினை தீரும்.

காதலி கோவித்துக் கொண்டு ஊடலாகி விட்டாள். உடனே தமிழக அரசின் மரணக்கடை மருந்து. மனைவி கோவித்துக் கொண்டு போய் விட்டார். உடனே தமிழக அரசின் மரணக்கடை மருந்து என்று எதற்கெடுத்தாலும் மருந்தாய்க் குடித்துக் குடித்து மரணத்துக்கு வரவேற்பு வைக்கின்றார்கள்.

சரி என்னதான் வழி என்கின்றீர்களா?

ஒரு பிரச்சினை வந்து விட்டது. பிரச்சினை ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும். முடிவு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொண்டு விடுவோம் அல்லவா? அதற்குள் ஏன் மனதைப் போட்டு குழப்பி, குழம்பி அய்யோ அம்மா என்று அரற்ற வேண்டும்?

ஆகவே என்ன பிரச்சினை வந்தாலும் சரி, உடனே அட... என்று உதறித் தள்ளி விடுங்கள். மனசு இலேசாகி விடும். ஒரு நாள் அதை மறந்து விடுங்கள். பின்னர் அப்பிரச்சினைக்கு ஒரு முடிவு உங்களுக்கே தெரியும். மேட்டர் ஓவர்.

ஏதாவது ஒரு அரசியல்கட்சித் தலைவரை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 

ஒரே ஒரு தொழில், ஒரே ஒரு மனைவி, ஒன்றிரண்டு பிள்ளைகள் வைத்திருக்கும்  நம்மை விட எத்தனைப் பிரச்சினைகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்திப்பார்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் கவலைப்பட்டு உள்ளுக்குள் புழுங்க ஆரம்பித்தால் அவர் ஹாஸ்பிட்டலில் ஹோமாவில் படுத்திருக்க வேண்டும். என்ன செய்கிறார்? சிந்தியுங்கள்.

ஆகவே ... இனி என்ன பிரச்சினை வந்தாலும் தூக்கித் தூர கடாசி விட்டு, அடுத்த வேலையில் மூழ்குங்கள். பிரச்சினை வந்த இடம் தெரியாமல் ஓடிப் போய் விடும்.

ஓகே !

”ஏங்க... ஏங்க....”

-இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் ஏங்கனுமோ தெரியலை!-(மனசுக்குள் நான்)

”என்ன கோதை?”

“லேட்டாயிடுச்சு... வந்து காய்கறி நறுக்கிக் கொடுங்க...” என்றாள்.

”என்ன கோதை காலையிலேயே ஆரம்பிச்சுட்டே, பேப்பர் படிக்க விட மாட்டியா?, தொந்தரவு செய்கிறாயே?” என்றேன்.

“அதுக்கு நீங்க சாமியாரா இருக்கணும். யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க” என்றார்.

வேறு வழி !!! 

இது போன்ற பிரச்சினைகளை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தீரவே தீராது.



Monday, March 24, 2014

பிரம்மஸ்ரீ எஸ்வி.ராமசாமி அய்யாவின் குருபூஜை

அன்பு நண்பர்களே,

பிரம்மஸ்ரீ எஸ்.வி.ராமசாமி அய்யாவின் முதலாமாண்டு குரு  பூஜை விழா நாளை 25.03.2014 அன்று காலை 10 மணி முதலாய் தொடங்க இருக்கிறது.

அதுசமயம் அய்யாவின் குருபூஜையில் கலந்து கொள்ள விழைவோர் கீழ்கண்ட முகவரிக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.


செந்தில் நகர்,
சிவலிங்கபுரம்,
எஸ்.ஐ.எச்.எஸ். காலனி,
ஒண்டிப்புதூர், கோவை

தொடர்புக்கு :

ஜோதி சுவாமி - 9894815954
பாலன் - 9486207916

Saturday, March 22, 2014

நிலம்(5) - வெளியூரில் சொத்துக்கள் வைத்திருக்கின்றீர்களா கவனம்!

வெளியூர்களில் சொத்து வைத்திருக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இது. பொறுமையாகப் படிக்கவும்.
          
சமீபத்தில் ஒரு பூமி விலைக்கு வந்தது. அந்தப் பூமியில் ஒரு பிரச்சினை. டிடிசிபி அப்ரூவல் பெற்ற மனையிடத்தில் ஒரு மனையினை முத்து என்பவரின் மனைவி தேவி என்கிறவர் நில புரமோட்டரிடமிருந்து 1980ஆம் ஆண்டு கிரையம் பெறுகிறார். வில்லங்கச் சான்றிதழில் தேவியின் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது பதிவாகி இருக்கிறது. சொத்து தேவிக்கு உரிமையானது.

2011ம் வருடம் ராம் என்பவர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்கிறார். அது என்னவென்றால் எனக்குச் சொந்தமான பூமியை தேவி என்கிறவர் போலியாக ஆவணம் தயாரித்து உரிமை கொண்டாடுகிறார் என ராஜேஷ் என்பவரின் மனைவி தேவி என்றுக் குறிப்பிட்டு தேவி மீது (கவனிக்க) வழக்குத் தொடர்கிறார். 

தேவியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஏனென்றால் அப்படி ஒருவர் இல்லவே இல்லை. முத்துவின் மனைவி தேவிதான் இருக்கிறாரே தவிர ராஜேஷ் என்பவரின் மனைவி என்பவர் இல்லவே இல்லை.  பிரதிவாதியிடமிருந்து பதிலேதும் இல்லை.

ஆகையால் கோர்ட் ராம் என்பவருக்கே சொத்து உரிமையானது என்று உத்தரவு பிறப்பிக்கிறது. அந்த உத்தரவைக்  கொண்டு ராம் நில உடமைப் பதிவேடுகளில் மாற்றம் செய்கிறார்.

நில உடைமைப் பதிவேடுகளில் இப்போது நிலம் ராமுக்குச் சொந்தமானது. அப்போது தேவியின் சொத்து என்ன ஆனது?

மேற்படிச் சொத்துக்கு யார் உரிமையாளர்?

நிச்சயம் தேவிதான் உரிமையாளர்.

ராம் டாக்குமெண்டுகளை தயார் செய்திருக்கிறாரா என்றால் அதுவுமில்லை. அவர் கிரையம் பெற்றது சரியானது தான். அது எப்படி?

டிடிசிபி புரமோட்டருக்கு நிலம் எழுதிக் கொடுத்தவர்களுக்கு இன்னும் கொஞ்சம் சொத்து அவ்விடத்தில் இருந்திருக்கிறது. அந்தச் சொத்தினைதான் ராம் வாங்கி இருக்கிறார்.

அதெப்படி ஒரே சொத்துக்கு இருவர் உரிமையாளர்களாக இருக்கமுடியும் என்கின்றீர்களா?

நிச்சயம் முடியவே முடியாது.

அப்போது ராமின் பத்திரத்தில் என்னதான் பிரச்சினை?

ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறது.

சொத்து விபரத்தில் குறிப்பிட்டுள்ளது முந்தைய உரிமையாளர்களுக்கு பாத்தியமற்ற வேறொரு இடம். அதுதான் பிரச்சினை. ராம் தவறான சொத்தினை வாங்கி இருக்கிறார்.

இதைக் கண்டுபிடித்து சரி செய்ய எத்தனை காலம் ஆகும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.தேவிக்கு எவ்வளவு பிரச்சினை உண்டாகி இருக்கிறது என்று பாருங்கள்.

இந்தப் பிரச்சினையின் முழு காரணகர்த்தா டாக்குமெண்ட் எழுதியவர் மற்றும் சொத்தினை ராமுக்கு விற்றவர் இருவர் மட்டும் தான்.

ராம், தான் எந்தச் சொத்தை வாங்குகிறோம் என்று தெரியாமல் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் அவர் வழக்குத் தொடுத்தது யார் மீது என்று பார்த்தால் அதுவும் தவறானது. ராம் நிச்சயம் கோர்ட்டை ஏமாற்றி இருக்கிறார் என்றே தெரிய வருகிறது.

இப்படியும் பிரச்சினை வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு என்னதான் வழி !

நன்கு அனுபவம் வாய்ந்த எழுத்தர்கள் அல்லது நல்ல சர்வீஸ் கம்பெனிகளை அணுகுவதுதான் சாலச் சிறந்தது.

இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.


Monday, March 17, 2014

பெண்கள் சுயநலமானவர்களா?

பள்ளியில் இருந்து வரும்போது அம்மு முகத்தை தூக்கி வைத்திருந்தார்.

எனக்குத் தாங்காது.

விஷயமென்னவென்று விசாரித்தேன். 

பையன் லீவு நாளில் பாஸ்கெட் பால் ட்ரெய்னிங்கில் சேர்ந்து விட்டானாம்.
பயிற்சிக்கு அவன் பள்ளிக்குப் போக வேண்டும். அதனால்  நாங்கள் யாரும் வெளியூர் போக முடியாது. அம்முவின் ஆண்டி அவளை மஸ்கட்டுக்கு லீவுக்கு அழைத்திருப்பதால் அவள் எப்படி மஸ்கட்டுக்குப் போவது? இதுதான் பிரச்சினை.

உன்னாலே நான் வீட்டுக்குள்ளேயே கிடக்கனுமா? என்று ரித்தியுடன் சண்டை. அதனால் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு இருந்தார்.

”உங்க மக ஊரு சுத்தறதுக்கு எம் மவன்(எப்பூடி பேசுறாங்கன்னு பாருங்க) பயிற்சிக்கு போகாக்கூடாதுங்கறளே, இவளைப் பார்த்தீங்களா?”ன்னு கோதை எரியற நெருப்புல எண்ணெயை ஊத்த அம்முவுக்கு பத்திக்கிட்டு வந்துருச்சு. அம்மு கண்ணுல தண்ணி. எனக்கு கிர்ரென்னு இருந்தது. மகள் அழுதுட்டா எனக்கு தன்னாலே பிபி உச்சத்துக்கு எகிறிடும்.

சாப்பிடும் போதும் அம்மு உம்முனே இருந்தார்.

ஒரு வழியா சாப்பிட்டு முடித்து உம்மென்ற முகத்தோடு படித்துக் கொண்டிருந்தார் அம்மு.

நான் மெதுவாக ஆரம்பித்தேன்.

”கோதை இன்னும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தால் அம்மு கூட யாராவது விளையாட கூட இருப்பாங்களே”

“ஆமா, என்ன என்ன செய்யச் சொல்றீங்க. எனக்கு இரண்டுதான்னு ஆயிருச்சு” என்றார் கோதை.

”வேற ஏதாவது ஐடியா இருந்தாச் சொல்லேன் கோதை” என்றேன்.

”வேற ஐடியாவா...? இனி ஒன்னே ஒன்னுதான் பாக்கி, நீங்க இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டா இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கலாம்” என்றார் கோதை.

”சரி பொண்ணுக்கு எங்கே போறது?”

“ அதான் உங்க அக்கா, தங்கை, மாமா, அம்மான்னு ஆயிரம் பேர் இருக்காங்களே உங்களுக்கு. சொன்னா எங்காவது பிடிச்சு ஒரு பொண்ணைக் கொண்டாந்து நிறுத்திடுவாங்களே!”

”சரி அம்மாகிட்டே போனைப் போட்டுச் சொல்றேன். அம்முக்கு கூட விளையாட ஆள் வேணுமாம். அதானால நானும் கோதையும் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம். இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டு இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கலாம்னு ஐடியா, அதனால பொண்ணு பாருன்னு பேசட்டுமா?”

“உடனே அதைச் செய்யுங்க...”

படித்துக் கொண்டிருந்த அம்மு  நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு வெளியில் வந்தார்.

”நான் எங்கேயும் போகல. உனக்குக் கல்யாணமெல்லாம் வேணாம்” என்றார்.

“இல்லம்மா, நீதானே மஸ்கட்டுக்குப் போகனும், ரித்தி இருந்தாதானே நல்லா இருக்கும்னு சொன்னியே” என்றேன்.

“சும்மா சொன்னேன். உடனே அப்பத்தாகிட்டே பேசி பொண்ணெல்லாம் பார்க்கச் சொல்லாதே. நானும் ஏதாவது ஒரு பயிற்சியில் சேர்ந்துக்கலாம்னு இருக்கேன்” என்றார். அம்முவின் கண்கள் கோதையை ரகசியமாய் சந்தித்தன. அம்மாவும் மகளும் ரகசியமாய்ச் சிரித்துக் கொண்டதை தெரிந்தும் தெரியாமலும் பார்த்தேன்.

சிரித்துக் கொண்டே அலுவலகம் கிளம்பினேன்.

பெண்கள் எப்போதும் சுய நலமே உருவானவர்களாகவே இருக்கிறார்கள் போல தெரிகிறதே என  நினைத்தேன்.

சுயநலம் எப்போதும் நன்மையைத் தருமென்றால் அது நலம் தானே !