குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, December 26, 2011

ரிலையன்ஸின் திமிரும் கண்டுகொள்ளாத மத்திய தொலைத்தொடர்பு துறையும்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தாரின் இணையத் தொடர்பை பயன்படுத்தி வரும் பலருக்கும் யூடியூப் மற்றும் சில ஃபைல் சேரிங் வெப்சைட்டுகளை பயன்படுத்த முடியாது. காரணம் இவர்களின் தயாரிப்பில் வெளியான “டான் டூ” என்ற திரைப்படம் வெளியான பிறகு ஃபைல் சேரிங் வெப்சைட்டுகளை தடை செய்தால் திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியாது என்பதால் இச்செயலைச் செய்திருக்கின்றார்கள். 

வெப்சைட்டை தடை செய்ய இந்திய அரசு மட்டுமே உத்தரவிட முடியும் என்கிற போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இத்தகைய செயல் “வாடிக்கையாளருக்கான் துரோகம்” ஆகும். 

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் இதுவரை ஏதும் செய்யவில்லை. இந்திய அரசின் வேலையை ரிலையன்ஸ் செய்து கொண்டிருக்கிறது. பேசாமல் காங்கிரஸ் அரசுக்கு ரிலையன்ஸ் அரசு என்று பெயர் சூட்டி விடலாம். நேற்று, கஸ்டமர் கேரில் கேட்ட போது, கம்ப்ளைண்ட் கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

இது பற்றிய செய்திகளை கீழே இருக்கும் இணைப்பில் பாருங்கள்.


இது பற்றி சிலரின் கருத்துக்களை கீழே பார்க்கலாம்


இந்தியா கார்ப்பொரேட் கம்பெனிகளின் முதலாளிகளின் கை விரல் அசைவுக்கு ஏற்ப ஆட்சி செய்யப்படுகின்றது என்பதை மீண்டும் உறுதி செய்கிறது ரிலையன்ஸின் போக்கு.

- அன்புடன் 
கோவை எம் தங்கவேல்

குழந்தைகளை தடம் மாறச் செய்யும் சினிமா( இது நாட்டுச் சுரைக்காய் )


( இது நீளச் சுரைக்காய், சப்பென்றிருக்கும்)வரதராஜபுரம் சந்தைக்குச் செல்ல வேண்டி இருந்ததால், சிங்கா நல்லூர் டூ ஹோப்ஸ் காலேஜ் சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராபிக்கினால் நிற்க வேண்டி இருந்தது. என்னவென்று விசாரித்தேன். அலாஃப்ட் ஹோட்டலில் “விஜய்” வந்திருக்கிறார் என்றார்கள். சாலையின் இருமருங்கிலும் கும்பல்.  மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சில பெரியவர்கள் நின்று கொண்டிருந்தனர். படக்குழுவினரின் வேன்களுக்கு காவல்துறையினர் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். வேன்களும், கார்களும் மெதுவாக ஊர்ந்தன. சினிமாக்காரர்களுக்கு சமூக பிரக்ஞை இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய புகுந்தோம் என்றால் எதிரிகளைத் தான் சம்பாதிக்க வேண்டும். 

உண்மையைப் பேசக்கூட பெரும் தயக்கம் இருக்கும் காலகட்டம் இது. வாய்மூடி மவுனியாய் இருப்பவன் புத்திசாலி. உண்மையைப் பேசுபவன் “பிழைக்கத் தெரியாதவன்”. 

பதிவர்கள் “ராஜபாட்டை” திரைப்படம் பைசாவுக்கு பிரயோசனம் இல்லை என்கிறார்கள். தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. ஆனால் டிவிக்களில் ”ராஜபாட்டை” திரைப்படம் ஆஹா ஓஹோ என்று ஓடுவதாய் நடிகர் விக்ரம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.விக்ரம் வந்தால் அவரைப் பார்க்க கூடும் கூட்டத்தாரை நினைத்துப் பாருங்கள். ரசிகர்களை நடிகர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்பது தான் உண்மை. “ஒஸ்தி” திரைப்படம் ஊத்திக் கொண்டது என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் டிவிக்களில் “ஒஸ்தி” பிரமாதமான வசூல் என்கின்றார்கள். மீடியாவைப் பற்றி எழுதிய பதிவை இப்போது நினைத்துப் பாருங்கள். மக்களை ஏமாற்றும் செயலைச் செய்து வரும் மீடியாக்களின் “தீவிரவாதப் போக்கினை” நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் 15 வயதுப் பெண்ணை, அவரின் உறவினர் தூக்கில் தொங்க வைத்திருக்கிறார். இப்பெண் பலபேருடன் இணைந்து இல்லீகல் ஆக்டிவிட்டீஸ்ஸில் ஈடுபட்டு, அதை எம் எம் எஸ் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் பெருத்த அவமானம் ஏற்பட்டிருப்பதாக இப்பெண்ணைக் கொன்றவர் பேட்டி அளித்திருக்கிறார். கோவையில் பதினைந்து வயதுப் பையன் தன் சக வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கி இருக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு பத்தியில் மன நல மருத்துவர்கள் மாதம் பத்திலிருந்து பதினைந்து கிளையண்டுகள் இது போன்ற கம்ப்ளைண்டுடன் வருகின்றார்கள் என்கிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சமூக கட்டுப்பாடுகள் மீதான வெடிகுண்டுகளை பிரபல ஹோட்டல்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. இனி வரும் காலங்களில் எட்டாம் வகுப்பு மாணவிகள் ஹாஸ்பிட்டல்களில் கருக்கலைக்க வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். உலகிற்கே முன்னுதாரணமான “தமிழ் கலாச்சாரம்” நாளை இப்படியான சம்பவங்களைப் பார்க்கத்தான் போகின்றது.

ஏன் இப்படி சமூகம் மாறியது? இதற்கு சுட்டு விரலை மட்டுமல்ல கையை மொத்தமாக நீட்ட வேண்டிய இடம் “ சினிமாக்காரர்கள்” மற்றும் “மீடியாக்கள்”. ஏன் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். 

வெள்ளி தோறும் வரதராஜபுரம் சந்தைக்கு முருங்கைக்கீரை வரும் என்பதால் நானும் மனையாளும் அங்குச் சென்றோம். ஆச்சரியமாக குண்டுச் சுரைக்காய் ஒன்றைப் பார்த்தேன். நீளமான பெரிய உருளை வடிவ சுரைக்காய் சப்பென்றிருக்கும்.

ஊரில் அம்மா அழகான சுரை விதையை ஊன்றி வைப்பார்கள். அதன் மீது பிய்ந்து போன சாணி எடுக்கும் தட்டுக்கூடையை கவிழ்த்து வைப்பார்கள். நாளடைவில் வெளிவரும் சுரைக்கொடி படர்ந்து பூ விட்டு, பிஞ்சாய் காய்த்துத் தொங்கும். காலையில் அப்பிஞ்சு சுரைக்காய் ஒன்றினைப் பறித்து பொறியல் செய்து தருவார்கள். சுடுசோற்றில் மோர் ஊற்றி அதனுடன் இச்சுரைக்காயைச் சாப்பிட “அமிர்தம்”. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகியது நாட்டுச் சுரைக்காயைப் பார்த்து. 

சந்தையில் அதைப் பார்த்ததும் அம்மாவின் சமையல் நினைவுக்கு வந்து விட்டது. ஒரு கட்டு முருங்கைக் கீரை ஐந்து ரூபாய் என்றார் பாட்டி.

மறு நாள், பிரான் வாங்கி வந்து சுரைக்காயுடன் சேர்த்து மனையாள் குழம்பு வைத்துக் கொடுத்தாள். நாட்டுச் சுரைக்காயுடன் பிரான் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அது ஒரு வித்தியாசமான சுவை.


இந்தச் சுரைக்காய் பற்றி கீழே இருக்கும் முக்கியமான விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். 

என்ன இருக்கு?

நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.


யாருக்கு நல்லது?

எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம். யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.


என்ன பலன்கள்? 

இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.ஒரு சுவைக்காக பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டிய “ நாகரீக” காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது வருத்தம் தான் ஏற்பட்டது.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Saturday, December 24, 2011

சசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன?

தினமலரில் தினமும் சசிகலா பற்றிய கட்டம் கட்டிய செய்திகள். தினமணியில் அதிகமாய் ஒன்றையும் காணவில்லை. ஜூனியர் விகடனில் சசிகலா பிரச்சினை, நக்கீரனில் இன்னும் பிளாக்குகளில் எல்லாம் சசிகலா போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டார். சசிகலா கும்பல் களையெடுக்கப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் பரபரப்பாய் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.டீக்கடைகள், கட்சிகள், பத்திரிக்கைகள் என்று மனிதர்கள் இருக்கும் இடமெல்லாம் பரபரப்பான செய்தி “சசிகலா பெயர்ச்சி”.

இத்தனை பரபரப்பாய் பேசப்படும் செய்தியில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று கேட்டால், யாருக்குமே தெரியாது. உண்மைப் பிரச்சினை தான் என்ன?

ஜெயலலிதா அவர்களுக்கும், சசிகலா அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை ஏதோ இவர்கள் தினமலர், தினமணி, ஜூனியர் விகடன், நக்கீரன் பத்திரிக்கை முதலாளிகளை அழைத்து வந்து விலாவரியாகச் சொன்னது போல எழுதுகின்றார்கள்.

இருவருக்கும் மட்டுமே தெரிந்த உண்மையை, எதுவும் தெரியாத இவர்களை கலந்து கட்டி எழுதுவது தான் “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்கிறார்கள். 

என்ன பிரச்சினை என்பதை இருவரும் யாரிடமும் சொல்லப் போவதுமில்லை, அது பிரச்சினையாய் உருவெடுத்து தமிழ் நாட்டை அழிக்கப்போவதும் இல்லை. எதுவுமே நடக்கப் போவதில்லை. ஆனால் ஏதேதோ நடக்கப் போவதாக எழுதுகின்றார்கள். நடந்து கொண்டிருப்பதாய் எழுதுகின்றார்கள். 

ஏன் இப்படி என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மையான பத்திரிக்கைகளுக்கு முதலாளியாய் இருப்பவர்கள் ஹேஸ்யங்களை உண்மைகளாய் உருவகப்படுத்துகின்றார்கள். அதன்மூலம் தன் இருப்பை பிறருக்கு கவனப்படுத்துகின்றார்கள். அந்த இருப்பின் மூலம் தன் அதிகாரத்தை பிறரிடம் திணிக்க முற்படுகின்றார்கள். மீடியாக்கள் இதைத்தான் செய்கின்றன. இதற்குப் பெயர் பிழைப்புவாதம். மற்றொரு பெயர் “ பத்திரிக்கை தீவிரவாதம்”. 

இத்தகைய முதலாளிகள் தான் உண்மையான ”தீவிரவாதிகள்”. மக்களிடம் பீதியைக் கிளப்புவது, உண்மையற்ற செய்திகளை உண்மை என்பது போல எழுதுவது, மக்களிடம் குழப்பத்தை உருவாக்குவது, நடக்காத ஒன்றை நடந்தது போல எழுதுவது போன்ற இழிசெயல்களை பத்திரிக்கைச் சுதந்திரம் என்கிற பெயரில் எழுதுகின்றார்கள். இவ்வகை தீவிரவாதிகளிடமிருந்து மக்கள் வெகு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். 

தினசரிகளைப் படிப்போரும், இதழ்களை படிக்கும் போதும் சுயசிந்தனை கொஞ்சம் தேவை.

ஜெயலலிதா, சசிகலா பிரண்டாக இருந்தபோதும், இருவரிடமும் பிரச்சினை என்கிறபோதும் யாருக்கும் பணமோ வேறு ஏதோ வரப்போவதில்லை. இந்தச் செய்தியால் தமிழக மக்களுக்கு எள்ளளவு பிரயோசனமும் இல்லை.

உழைக்க வேண்டும். அதனால் வாழ வேண்டும். இதை விடுத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை பற்றி பேசினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? தீமைதான் பரிசாய் கிடைக்கும். 

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்


Friday, December 23, 2011

பெரும்பான்மையான திரைப்படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன?எல்லோருக்கும் பிடித்தமான பொய் உலகம் “சினிமா”. சினிமாவில் வெற்றியடைவோர் இல்லவே இல்லை. தோல்விதான் முடிவில். அது யாராக இருந்தாலும் சரி. படைப்பாளிகள் அனைவரும் வெற்றியடைகின்றார்களா என்றால் நிச்சயம் இல்லை. ஏன் இல்லை?

கலைஞர் டிவியில் திரைப்பட பிதாமகன், புரட்சியாளர் திரு பாரதிராஜாவின் “அப்பனும் ஆத்தாளும்” என்ற தொடரில் நடிகை சுகன்யா தாவணி போட்டுக் கொண்டு இளமை வேடத்தில் நடித்தார். நம்பினால் நம்புங்கள். எனக்கு திரு பாரதி ராஜாவின் நம்பிக்கையின் மீது சந்தேகமே வந்து விட்டது. கர்வமும், தானென்ற நினைப்பும் எந்த ஒரு படைப்பாளிக்கும் வந்து விட்டால் இது போன்ற அவலக்காட்சிகளைத் தான் படம் பிடிக்க முடியும்.

இயல்பு மாறும் எந்த ஒரு படைப்பும் முடிவில் தோல்வியைத் தரும் என்பதில் பாரதி ராஜாவும், பாலச்சந்தரும் விதிவிலக்கல்ல என்பதற்கு கண்களால் கைது செய் திரைப்படமும், பொய் திரைப்படமும் உதாரணம்.

இயல்பு மாறாத திரைப்படங்கள் வெற்றியைத் தந்தே தீரும். நாடோடிகள் திரைப்படத்தின் கதை மாந்தர்கள் கதையோடு ஒன்றியவர்களாய், கதைக்களம் நடிகர்களோடு ஒன்றியதாய் இருந்தது. 

மைனா படத்தின் காட்சிகள் ஆக்கமும், ஆடுகளம் திரைப்படத்தின் காட்சிகளும் வெகு இயல்பாய் படத்தின் கதைக்கும், நடிகர்களுக்கும், களத்திற்கும், இசைக்கும், உரையாடலுக்கும் எந்த வித மன அதிர்ச்சி வேறுபாடின்றி இருந்தன. 

இருட்டில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகனுக்கு திரைப்படம் ஆரம்பித்த அடுத்த சில நொடிகளில் அவனின் இருப்பு திரைப்படத்திற்குள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் படம் தோல்விப் படம் என்றுச் சொல்வதை விட படைப்பாளி தோற்று விட்டான் என்று அர்த்தமாகிவிடும்.

கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ஓடுவதில்லை. ஓட வைக்கப்படுகின்றன. இவர்களுக்கான மார்க்கெட்டுகள் என்று எதுவுமே இல்லை. ஆனால் உருவாக்கப்படுகின்றன. இதற்கு சாட்சியாய் ரஜினி, கமல், சூர்யா, விஜய, அஜித் என்று காட்ட இயலும். ஆனால் இவர்களைத் தான் பெரும் நடிகர்கள் என்று காட்டுகின்றன மீடியாக்கள் (போலிகளின் ராஜ்ஜியத்தில் பத்திரிக்கை உலகம் இருக்கிறது)

திரைப்பட ரசிகனை தன் படைப்பிற்குள் இழுத்துக் கொள்ளாத எந்த ஒரு படைப்பும் வெற்றி அடையாது. தன் நடிப்பு எனும் மாயவலைக்குள் ரசிகனைக் கட்டிப் போடாத எந்த ஒரு நடிகனும் “சோப்” விற்கும் விளம்பர மாடலாக மட்டுமே நிலைக்க முடியுமே தவிர, நடிகனாய் பரிணமளிக்க முடியாது. இதற்குத் தேவை கர்வமற்ற, தானென்ற நினைப்பற்ற படைப்பாளிகளும் அவருக்கு உதவி செய்யும் சினிமாவைக் காதலிக்கும் டெக்னீஷியன்களும். கோடிகளில் சம்பளம் வாங்கும் “சோப்புக் கலைஞர்கள்” இது போன்ற படைப்பாளிகளுக்குத் தேவையே இல்லை.

தொழிலைச் சரியாகச் செய்தால் “பணம்” தானாக வரும் என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்.

Thursday, December 22, 2011

போலிகள் நடமாடும் புனைவுலகம்

இன்றைய செய்தித்தாள் ஒன்றில் எழுதும் எவையும் உண்மை என்று நினைக்காதீர்கள் என்ற அர்த்தத்தில் ஒரு பத்தி வெளியாகி இருக்கிறது. எது உண்மை, எது பொய் என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்தால் பரவாயில்லை.

நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சிகள் புகுந்தால், கிடைக்கும் பலன்களைப் பற்றி பிரஸ்தாபிக்க ஒன்றுமில்லை. அது நம்பிக்கையின் பால் கட்டப்பட்டிருக்கும் இரும்புக் கோட்டையின் கதவுகளைத் திறக்கும் அளவுக்கு பலமான ஆராய்ச்சியாக இருந்தாலும் கூட.

சாகித்ய அகாதமி பெற்ற “காவல் கோட்டம்”  பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எதிர்க்கப்பட்டது என்கிறது ஒரு செய்தி. ஜெயமோகன் அந்த நாவலை ஆதரித்தார் என்கிறது மேலும் ஒரு செய்தி. இது பற்றிய விமர்சனங்கள் இனி இணைய பக்கங்களில் அள்ளிக் கொட்டப்படும். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இது வரையில் தார்மீக ரீதியிலான, தர்க்க ரீதியிலான, மனிதாபிமான வகையிலான, நீதி சார்பான, சுயச்சார்பற்ற எழுத்துக்கள் எவையேனும் எழுத்துலக பிரம்மாக்கள் நாங்கள் என்றுச் சொல்லக்கூடிய அல்லது நடிக்கக் கூடியவர்களால் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஒரு நிமிடம் மனச் சுத்தியுடன் யோசித்துப் பாருங்கள். நிச்சயம் இல்லை.

ஏன் இல்லை என்று கேட்டால் “கொன்று போடுவார்கள்” என்பார்கள். கொல்வதற்காக சித்தாங்களும், வேதாந்தங்களும், உண்மைகளையும் மறைப்பேன் என்கிற புனைவுலகத்தாருக்கு என்ன பெயர் வைக்கலாம்?

புனைவுலகில் நடமாடும் போலிகள் முற்றிலும் சுயச்சார்பு உடையவர்களாய், சுய சிந்தனையை வருமானம் பெறக்கூடிய வகையில் மாற்றி, மக்களை தாங்கள் எழுதுவது “உண்மை” என்று நம்பும்படிச் செய்வதில் வல்லவர்கள். எழுத்து ஒரு தவம் என்பார்கள். ஆனால் இன்றைய பத்திரிக்கைகளைப் படித்துப் பாருங்கள். அது எங்காவாது, எவராலாவது எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட கருத்துக்களின் வாந்திகள் என்பது புரியவரும்.

ஒரு சமூகம் தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள, அதன் மக்களால் அதன் மொழியால் உருவாக்கப்படும் படைப்புகள், சேகரிப்புகள், ஒழுங்குகள், நடைமுறைகள், விழாக்கள் போன்றவை உதவும். இவ்வகைப் புதுப்பித்தலில் புனைவுலகத்தாரின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் பெரும். இன்றைய தமிழ் உலக மக்கள் முகவரி அற்று, கண்டதே காட்சி கொண்டதே கோலம், எல்லாமே இன்பமயம் என்கிறதாய் மாறி நிற்க புனைவுலகப் போலிகள் தான் மிகவும் முக்கிய காரணிகளாய் நிற்கின்றார்கள்.

சூதும், வாதும், பொய்யும், புரட்டும், களவும், திருட்டும் கொண்டலையும் போலிகளிடமிருந்து தமிழர்கள் மட்டுமல்ல உலக மக்கள் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள பெரும் தன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எப்படி நடக்கும், எங்கு நடக்கும், யார் முன்னெடுத்துச் செல்வார் என்பதெல்லாம் காலம் தான் சொல்ல வேண்டும்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, December 20, 2011

விடைகள் தவறாகவே வரும் கணக்குகள்அரசியல் இன்றி இவ்வுலகம் அணு அளவு கூட இயங்காது. ஆனால் அரசியலில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்றால் அரசியல் கணக்குகள் எதுவும் மிகச் சரியான விளைவுகளை அல்லது விடைகளைத் தருவதே இல்லை. இவ்வகைக் கணக்குளின் விடைகள் முற்றிலும் தவறானதாகவே முடிந்து போய் விடும்.

நேருவின் காஷ்மீர் கணக்கு, இந்திரா காந்தியின் ப்ளூ ஸ்டார் கணக்கு, ராஜீவ் காந்தியின் அமைதிப்படைக் கணக்கு, சஞ்சய் காந்தியின் அரசியல் கணக்கு, 2ஜியில் திமுகவின் கணக்கு, சினிமாவில் சன் குழுமத்தாரின் கணக்கு என்று நமக்குத் தெரிந்த பல கணக்குகளின் விடைகள் அனைத்தும் கணக்குப் போட்டவர்களுக்கு எதிராய் திரும்பியது வரலாறு.

அரசியல் என்பது ஆற்று வெள்ளம் மாதிரி. பதவிகள் என்பது அதில் மிதக்கும் துரும்பு மாதிரி. ஆனால் பதவி என்ற அந்தஸ்து வரும் போது கூடவே மூளை நோயும் வந்து விடும். யோசிக்க மறக்க வைக்கும் நோயை பதவி கூடவே கொண்டு வந்து விடும்.

2ஜியில் எளிதாய் தப்பி இருக்கலாம். அதாவது எந்த ஒரு ஊழலையும் சத்தமே இல்லாமல், யாருக்கும் தெரியாமல் செய்யலாம். ஆனால் பதவியில் இருப்பவர்களுக்கு அந்தளவுக்கு யோசிக்கவே முடியாது. வழக்குகளில் இருந்து  வெகு எளிதாய் வெளியேறலாம் அது கொலைக் குற்றமாய் இருந்தாலும் கூட. அதற்குத் தேவை ஒன்றே ஒன்று தான் புத்திசாலித்தனம். அந்தப் புத்திசாலித்தனம் பதவியில் இருப்போரிடத்தில் இருக்கவே இருக்காது. அல்லக்கைகளிடம் கூட காண முடியாது. 

மக்கள் போடும் கணக்கு எப்படித் தவறாகிறது என்பதை இப்போது பார்த்து விட்டு இப்பதிவை முடிக்கலாம்.

தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அவன் மக்களோடு மக்களாய் வாழ்ந்தவனாய் இருக்க வேண்டியது முதல் படி. அடுத்து அவன் மனிதாபிமானம் மிக்கவனாய் இருத்தல் வேண்டும். அடுத்து எதையும் பகுத்தறிவு செய்து பார்ப்பவனாய் இருத்தல் வேண்டும். மக்களின் நன்மையை உத்தேசிப்பவனாய் இருத்தல் வேண்டும். ஆனால் இன்றைய எந்த ஒரு அரசியல்வாதியும் அப்படி இருக்கின்றார்களா? என்று ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள் உங்களுக்குத் தெரியும் அரசியல். 

நல்லது செய்வார் என்றெண்ணி யாருக்கு ஓட்டுப் போடுகின்றார்களோ அவர்களின் தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதால் மக்களின் நல்லது கணக்கு முடிவில் தவறான விடை தருகிறது. அதன் காரணமாய் அடுத்தவர் தேர்வாகின்றார்கள். போடக்கூடிய கணக்கில் தவறு இருக்கும் போது விடை என்ன சரியாகவா வந்து விடும் ?

அரசியல் என்பது மாயக்கயிறு. அதில் தலைவர்களெல்லோரும் ஊசலாடும் பொம்மைகள். மக்கள் பொம்மைகளின் ஆட்டங்களை வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள். தங்கள் உரிமை பரிபோவதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல் மயங்கிக் கிடக்கும் மடமைகள்.

அரசியல் பற்றிப் பேசி வீணாய் பொழுதினைப் போக்க வேண்டாம் என்பதற்குத்தான் இப்பதிவு. இனி இன்னும் பலப் பல செய்திகளை உங்களுடன் பகிர்வேன். அதுவரை தொடர்ந்திருங்கள். 

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

Friday, December 9, 2011

தர்மத்தின் தீர்ப்புகள் - எதிர் விளைவுகள்(காளான் வைத்த பிரட் துண்டுகள்)


(பில்லூர் அணை)

சமீபத்தில் குழந்தைகள், மனைவியுடன் எனக்கும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இந்தக் காய்ச்சலின் அறிகுறி முதலில் தொண்டையில் அழற்சி ஏற்பட்டு, அதன் பிறகு காய்ச்சல் உண்டாகிறது. காய்ச்சல் சரியான பிறகு சளி ஏற்படுகிறது. சளி கொஞ்சம் கொஞ்சமாய் சரியான பிறகு வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவழியாக சரியாகிறது. இதற்குள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது ஒருவரைச் சந்தித்தேன். அவரைப் பற்றியதுதான் இப்பதிவு.

நர்ஸ் ஒருவரிடம் இதுபற்றி விசாரித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றார். நாங்கள் பயன்படுத்துவது பில்லூர் டேம் தண்ணீர். அதை பியூர் இட்டில் வடிகட்டி, நன்கு கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறோம். இருப்பினும் இந்த நோய் தொற்று ஏற்படுகிறது. இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்றெல்லாம் மனது சிந்திக்க வைக்கிறது. எவராவது தண்ணீரில் ஏதாவது கலக்கின்றார்களோ என்றெல்லாம் தோன்றுகிறது. வேறு வழி இன்றி தற்போது மினரல் வாட்டர் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.  யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. மனிதனுக்கு மனிதனே அழிவு சக்தியாய் மாறிக்கொண்டிருக்கும் சம்பவங்களை நாம் தினம் தோறும் படித்துக் கொண்டு வருகிறோம்.

ஆனால் அன்பே கடவுள், எல்லாக்கடவுளும் அன்பை மட்டும் தான் போதிக்கிறது என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் எல்லாவற்றிலும் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதனோ எதனாலும் மாறாமல் மீண்டும் மீண்டும் சக மனிதர்களை அழிக்க முயன்று கொண்டிருக்கிறான். படித்தவன் என்றால் பலபேரைக் கொல்ல முயல்கிறான். படிக்காதவன் என்றால் சில பேரைக் கொல்ல முயல்கிறான். கல்வி அறிவு மனிதனுக்குள் மிருக குணத்தை மீட்டெடுத்து தந்திருக்கிறது.

மருத்துவமனையின் சீஃப்பிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, ஹாஸ்பிட்டலின் வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த போது, பெரியவர் ஒருவர் அருகில் வந்து அமர்ந்தார். சில விசாரிப்புகளைத் தொடர்ந்து அவரே பேசிக் கொண்டிருந்தார். “ தெய்வமே இல்லை தம்பி ! “ என்று ஆரம்பித்தார். நான் அவர் பேசுவதை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

”மனைவிக்கு நோய், மகளுக்கு நோய், மருமகளுக்கு நோய், எனக்கு நோய்” என்று புலம்பிக் கொண்டிருந்தார். ”என் மனைவி எவ்வளவு நல்லவள் தெரியுமா? பசி என்று வந்தால் உடனே உணவு கொடுப்பாள், ரோட்டில் எவராவது பிச்சை எடுத்தால் அவர்களுக்கு 100 ரூபாய் கொடுப்பாள், மகளோ பிறரின் மீது கொள்ளை அன்பைப் பொழிவாள்” என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார்.

”தினம் தோறும் ஹாஸ்பிட்டல் வர வேண்டி இருக்கிறது” என்று சோகத்துடன் தன் குடும்பத்துக் கதையை வேற்றார் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார் எந்த ஒரு லஜ்ஜையும் இன்றி. செவனேன்னு கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் அவரிடம் ”நீங்கள் எங்கே வேலை பார்க்கின்றீர்கள்?” என்று கேட்டேன். ”இன்னும் ரிட்டயர்ட் ஆக இரண்டு வருடம் இருக்கிறது. ஹெல்த் டிபார்ட்மெண்டில் இன்ஸ்பெக்டராக இருக்கிறேன்” என்றார்.

நல்ல மனிதராய் இருப்பார் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு,  ஹெல்த் டிபார்ட்மெண்டில் வேலை செய்து கொண்டிருக்கும் நண்பரைத் தொடர்பு கொண்டு இவரைப் பற்றி விசாரித்தேன்.

எவருக்கும் எதுவும் தானாக வருவதில்லை, அது அவரவர் செய்யும் வினையின் விளைவு என்பதை அன்று நான் உறுதியாய்ப் புரிந்து கொண்டேன்.

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமுள்ள பல உணவு சம்பந்தமான கடைகள் எதுவும் ’வாடிக்கையாளர்கள் நலனைக் கருத்தில் கொள்வதே இல்லை, கெட்டுப் போன பொருட்கள், காலாவதியான பொருட்கள், உடலுக்குத் தீங்கு தரும் பொருட்கள் இவற்றை எந்த வித மன உறுத்தல் இன்றியும் விற்பனை செய்து வருகின்றன’. இதனைக் கட்டுப்படுத்தும் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு மாதா மாதம் “கையூட்டு” சென்று கொண்டிருக்கிறது. மேலே என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர் கையூட்டுப் பெறுவதில் நம்பர் ஒன்னாம். நண்பர் சொன்னார் “இவரைப் போன்ற ஒருவரை இனிப் பார்ப்பது அரிது”.

அந்த நபர் ஏன் மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருக்கிறார் என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன். செய்த வினை நோயின் வடிவிலே வந்து கொண்டிருக்கிறது. சம்பாதிக்கும் பணமெல்லாம் மருத்துவமனைக்குச் செலவழிக்கிறார் அந்த நபர். ஆனாலும் இன்னும் அவர் திருந்தவே இல்லையாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபல டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மனைவியை இறக்கி விட்டு, வெளியில் நின்றிருந்தேன். அப்போது ஒரு பணியாள் இரண்டு பிரட் பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து, மேனேஜரிடம் காட்டிக் க் கொண்டிருந்தார். நான் அருகில் நின்றிருந்ததைக் கூடக் கவனிக்காமல், ”அந்த பூஞ்சையை எடுத்து விட்டு, விற்பனைக்கு கொண்டு போய் வை” என்றார். அந்தப் பையன் என்னைப் பார்த்தான். மேனேஜர் என்னைச் சங்கோஜத்துடன் பார்த்தார். என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் பார்ப்போம் ?

ஏதோ நம்பிக்கையுடன் நாம் வாழ வேண்டி இருக்கிறது. வேறென்ன சொல்ல முடியும். 

- கோவை எம் தங்கவேல்

Thursday, December 8, 2011

மையலும் காதலும்

உதயணனன் - வாசவதத்தை கதை தெரியுமா உங்களுக்கு?  ஐங்குறு காப்பியத்தில் ஒன்றான பெரும்கதையின் கதாமகன் தான் உதயணன். இசைக்கு மயங்காதோர் யாதுமில்லை இவ்வுலகிலே என்பதற்கு உதாரணமாய் தன் ”கோடபதி” என்னும் யாழ் இசையால் வெறி கொண்ட யானையைக் கூட மயக்கும் திறமை கொண்டவன் இந்த உதயணன். இந்த உதயணனுக்கு மனைவிகள் ஏராளம். ஆனால் அவனின் முதல் மனைவியும், காதலியுமானவள் “வாசவதத்தை” என்பாள். பொதுமையை அவன் மணமுடிக்க காரணமே அவள் வாசவதத்தையைப் போன்று இருந்தாள் என்பதற்காகத்தான் என்று  நா.பார்த்தசாரதி “வெற்றி முழக்கம்” என்ற நூலில் எழுதியிருக்கிறார். காதல் என்பது வேறு. மையல் என்பது வேறு. மையலைக் காதலாய் கருதுவதால் கொலைகள் நடக்கின்றன. விவாகரத்துக்கள் நடக்கின்றன.

சினிமாக்களில் இன்றைய காதலை “பார்த்தவுடனே உள்ளுக்குள் பொங்கி வரணும்” என்ற முறையில் வரையறுக்கின்றார்கள். பார்த்தவுடனே பொங்கி வருவது காதல் அன்று அதன் பெயர் மையல்.  மையலைத் தான் இன்றைய உலகம் “காதல்” என்கிறது. மையல் கொண்டால் அதன் முடிவு எரிச்சல் தரும். ஒரே மனது ஒன்பதாய் மாறுவதும் மையலின் முடிவில்தான்.

மையல் வந்ததும் பற்றி எரிய வைப்பதும், மையல் தீர்ந்ததும் இல்லாதவைகளை எல்லாம் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதும் மனதுதான். அனிச்சை செயலாய் காற்றுக்கு ஒதுங்கும் துணியை இழுத்து விடும் பெண்ணின் கையும், மையலும் ஒன்றே !

மையல் கொண்ட காதல் எப்படி இருக்கும் என்பதற்கு உங்களுக்கு ஒரு நீண்ட கவிதையை படிக்க அளிக்கிறேன். இக்கவிஞனின் கவியோட்டத்தின் ஊடே நீங்கள் நுகரப் போகும் அந்தத் தன்மைதான் “மையல்”.
இதோ அந்தக் கவிதை வரிகளின் இணைப்பு -> சலனம் - ஜேவியர் தாசையன்

காதல் என்பது என்ன தெரியுமா? 

பிரதிபலன், குற்றம், குறை பாராமல் அப்படியே ஏற்றல். எங்கே உங்கள் மனதினை ஒரு முறைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம். உங்களிடம் இருப்பது என்னவென்று?


- இனிய வணக்கங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Friday, December 2, 2011

கொடுத்தல் பெறுதல்

பெண்ணுரிமைப் போராளி ஒருவருடன் எதேச்சையாக பேச நேர்ந்தது. ஆண்கள் மீது அவர் தீராத வெறியுடன் இருப்பதை அவரின் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன். சம்பாதிப்பது ஒன்றைத் தவிர வேறென்ன தெரியும் ஆண்களுக்கு? என்றார். பெண்கள் சமையலறையில் கிடந்து உழல்கிறோம், நெருப்போடு வெந்து சாகிறோம் என்றார் தொடர்ந்து. எனக்கு அவரின் பேச்சினைக் கேட்கக் கேட்கவே ஆண்களின் மீது வெறுப்பு வர ஆரம்பித்து விட்டது.

ஒரு பெண் டோட்டல் டிபடெண்டாக ஆணை நம்புவது தவறு என்கிறார் அந்தப் பெண்ணுரிமைப் போராளி.


என்ன டிபன் என்பதிலிருந்து, என்ன செய்ய வேண்டுமென்பது வரை ஒரு பெண் கணவனை மட்டுமே நம்பி இருக்கிறாள் என்றால் அவள் என்ன அடிமையா? இப்படியான பெண்களிடம் பேசிப்பார்த்தால் தெரியும். அவர்களின் ஒரே பதில் “அதில் ஒரு சுகம்” என்பார்கள். திருமண வாழ்வு என்பது கொடுத்தலும் பெறுதலுமான ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட். அது சமூகக்கட்டுப்பாட்டால் கணவனும் மனைவியும் ஒருங்கிணைக்கப்பட்டு, குடும்பம், மரியாதை, மானம் என்கிற காரணிகளால் ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கிறது. கணவன் யாருக்காக உழைக்க வேண்டும்? சொல்லுங்கள் பார்ப்போம். அவன் தந்தைக்காக, தாய்க்காக, மனைவிக்கா, மகனுக்காக, மகளுக்காக, உடன் பிறந்தோர்களுக்காக உழைக்கிறான். 

குடும்பம் என்றால் என்ன என்பதற்கு ஒரு உண்மைச் சம்பவத்தைக் கீழே எழுதுகிறேன். படித்துப் பாருங்கள்.

ஊரிலிருந்து வரும் சகோதரியை அழைக்க விடிகாலைக்கும் முன்பாக அதாவது மூன்று மணி அளவில் காந்திபுரம் சென்று கொண்டிருந்தேன். அப்போது சிங்கா நல்லூர் தாண்டி பெட்ரோல் பங்க் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். காவி உடை. தோளில் பை. செருப்புக்கூட இல்லை. அவருக்குக் கிட்டத்தட்ட 55 வயது இருக்கும். பனி பரவி, சில்லென்று இருந்தது. சாதாரணக் காவிச் சட்டை, வேஷ்டி அணிந்திருந்தார். கண்ணில் கண்ணாடி வேறு போட்டிருந்தார். சரியான குளிர் அடிக்கும் இந்த நேரத்தில் இப்படி உட்கார்ந்திருக்கிறாரே என்று நினைத்துக் கொண்டு, லிப்ட் கொடுக்கலாம் என்று அருகில் சென்று வண்டியை நிறுத்தி, ”காந்திபுரம் போகிறேன் வருகின்றீர்களா?” என்று கேட்டேன். 

உடனடியாக மறுத்து விட்டார். “வேண்டுதல் அய்யா” என்றா.”இந்த வயதான காலத்தில் ஏன் அய்யா இப்படி உங்களை வருத்தப்படுத்திக் கொள்கின்றீர்கள்?” என்று விசனத்துடன் கேட்டேன். ”என் மகளுக்கு குழந்தைப் பிறக்கவில்லை அய்யா, முருகனிடம் வேண்டிக் கொண்டேன். மறு வருடம் குழந்தை பெற்றுக் கொண்டாள் அய்யா. வேண்டுதலை சரிசெய்ய, கால் நடையாக சென்று கொண்டிருக்கிறேன் அய்யா ”என்றார். 

”எப்படி அய்யா உங்களை உங்கள் குடும்பம் அனுமதித்தது?” என்றேன். 

”நான் கிளம்பும் போது என் மகளின் அழுத முகம் இன்னும் என்னுள்ளே அப்படியே பதிந்து போய் கிடக்கிறது அய்யா. பேரனின் சிரித்த முகம் என்னை இன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது அய்யா. என் மகள் நல்வாழ்வுக்காக நான் செத்துப்போவதில் தான் அய்யா இன்பம் இருக்கிறது” என்றார். கேட்ட எனக்கு கண்கள் பனித்து விட்டன.

”என் மகள் முகத்தினை மீண்டும் பார்ப்பேன் அய்யா, இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தால் போதும், மீண்டும் தயாராகி விடுவேன்” என்றார்.

உங்கள் வேண்டுதல் நிறைவேறவும், நீங்கள் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியமாக இருக்கவும், எல்லா வல்ல இறைவன் முருகனிடம் வேண்டுதலைச் செலுத்துகிறேன்” என்றுச் சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன்.

பெண்ணுரிமைப் பேசும் வாதிகள் பலபேர் பிழைப்பிற்காக, குடும்பம் என்கிற கட்டமைப்பை உடைக்க முயல்கின்றனர். இன்று தனித்தனியாக அபார்ட்மெண்டுகளில் வாழும் பல குடும்பப் பெண்கள் “மன நோயாளிகளாய்” இல்லையென்றால் முழு நோயாளியாய் மாறி வாழ்க்கையை பெரும் அவதிக்குள்ளாக்கி அவஸ்தைப்படுகின்றனர்.

நல்லது கெட்டது சொல்ல முதியோர் இன்றி, படாதபாடு படுகின்றனர். அதுமட்டுமில்லை தன் இன்பமே முக்கியம் என்று கருதும் நிலைக்குப் பெண்களைச் சில சமூகத் துரோகிகள் செய்கின்றார்கள். பெண்களைத் தனிமைப் படுத்தி, தன் இச்சைக்கு அவர்களைப் பயன்படுத்தி பின்னர் சக்கையாய் தெருவில் வீசுகின்றனர். சக்கையான பின்பு என்ன செய்து என்ன புண்ணியம் ? பெண்கள் உரிமை பேசி தன் வாழ்க்கையினை வீணாக்கிக் கொள்கின்றனர். குடும்ப வாழ்க்கை என்பது அன்பினைக் கொடுத்தலும் பெறுதலுமான ஒரு பரிமாற்றம். இது மனித வாழ்விற்கு அடி நாதம். பாதுகாப்பைத் தரும் பந்தம். குடும்ப அமைப்பே தவறானது என்று எவர் பேசினாலும், அவரிடமிருந்து விலகி இருக்க முயற்சியுங்கள். உறவுகளையும், நட்புக்களையும் நேசியுங்கள். அதனால் நீங்கள் இழக்கப்போவது எதுவுமே இல்லை.

நான் சந்தித்த எத்தனை எத்தனையோ பெண்களிடமிருந்து நான் அறிந்து கொண்ட உண்மையை எழுதி இருக்கிறேன்.

- கோவை எம் தங்கவேல்

Tuesday, November 29, 2011

பள்ளியறையின் மிச்சமே வாழ்க்கையின் தத்துவம்

அறுவடைக் காலமது. வயலில் வடகாட்டிலிருந்து வந்த வேலையாட்கள் கதிரறுத்து, நெல் தூற்றி மூட்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஜோசப் வாத்தியாரிடம் டியூசனுக்குச் சென்ற நானும், என் தங்கையும் ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி விடுவோம். அன்றைக்கு எட்டு மணி வரையிலும் வராது கண்டு, வீட்டிற்கு நெல்மூட்டை கொண்டு வந்த வேலையாட்களுடன், உறவினர்கள் சேர்ந்து தேட ஆரம்பித்து விட்டனர்.

நாங்கள் இருவரும் நாட்டியக் குதிரை ஸ்பெஷல் கேள்விப்பட்டிருப்பீர்களே, குதிரைக்கார வி எஸ் எம் ராவுத்தர் வீட்டில் “பாசமலர்” திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம். வீட்டில் நடந்த களேபரம் எதுவும் தெரியவில்லை. வெளி நாட்டிலிருந்து வந்த வீடியோ பிளேயரில் படம் போட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் டிவி என்பது பெரிய அதிசயம்.

இந்திராகாந்தி இறந்த போதும், எம் ஜி ஆர் இறந்த போதும் என் நண்பனின் வீட்டில் இருக்கும் டிவியில் நேரடி ஒளிபரப்பினைப் பார்த்தோம். கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் இருப்பார்கள். எம் ஜி ஆருக்கு கூட்டம் அதிகம் என்றுப் பேசிக் கொண்டது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து மாமாவிடம் பூவரசன் கம்பால் நான்கு அடிகள் வாங்கிக் கொண்டோம். வேலைக்கு வந்தவர்கள் மாமாவின் கோபத்தைச் சரி செய்தார்கள்.தங்கைக்குத்தான் தடித்துப் போய் விட்டது. அடுத்த ஒரு வாரத்தில் மாமா ஆபீசில் லோன் போட்டு பெரிய டயனோரா டிவி ஒன்றினைக் கொண்டு வந்து விட்டார். கருப்பு கலரில் இரண்டு பக்கமும் திறக்கும்படியான பிளாக் அண்ட் வொயிட் டிவி அது. படத்தினைக் கீழே பார்த்துக் கொள்ளுங்கள்.எனக்கு சிலோனின் ரூபவாகினிதான் பிடிக்கும். ஊர் கடற்கரையோரம் இருந்ததால், சிலோன் ரேடியோவும், எப்போவாவது ரூபவாஹினி டிவியும் கிடைக்கும். அவ்வப்போது தமிழ் நாடகங்கள் கூட போடுவார்கள். படம் பிரிண்ட் செய்தாற்போல இருக்கும்.

டிவி ஆபரேட்டராய் மாறிய பின்பு வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் படம் பார்க்க கூட்டம் கூடும். மளிகைக் கடை செட்டியாருக்கு கிரிக்கெட் என்றால் பைத்தியம். கடையை யாராவது பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, கிரிக்கெட் நாட்களில் வீட்டுக்கு வந்து டிவி போடச் செய்து என்னை எரிச்சல் படுத்துவார். ஆனாலும் அவர் கொண்டு வந்து தரும் மேரி பிஸ்கட், பட்டாணி, பேரீச்சைக்கு ஆசைப்பட்டு நானும் கிரிக்கெட் பார்ப்பதுண்டு. செட்டியார் மாமாவின் நண்பர் வேறு என்பதால் மறுக்கவெல்லாம் முடியாது. இந்த அன்பினால் அவரின் கல்லாப்பெட்டிக்கு காவலனாய் கோடை விடுமுறையில் அவரிடம் வேலைக்குச் சென்றதுண்டு. மாதம் 50 ரூபாய் கொடுத்தார். அத்துடன் தினமும் இலவச இணைப்பாய் ரொட்டிகளும், பேரீச்சையும் ஒரு பள்ளிக்கூடப் பையும் கொடுத்தார்.

இப்படியான நாட்களில் எங்கள் வீட்டுக்கு இடது பக்கமாய் மரக்காட்டுக்குள் இருந்த ஒரு வீட்டின் பெண்மணி அடிக்கடி டிவி பார்க்க வருவார். எம் ஜி ஆர் பாடல் என்றால் அவருக்கு உயிர். விபரம் தெரியாத வயதில் அவர் சொல்லியது எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. “வீட்டுக்காரனுடன் படுத்துக் கொண்டிருக்கும் போது, நான் எம் ஜி ஆரைத்தான் நினைச்சுக்குவேன்” என்றார் அந்தப் பெண்.


சாகித்ய அகாடமி பரிசு பெற்ற திரு நீல பத்ம நாபன் அவர்களின் பள்ளிகொண்டபுரம் நாவலைப் படிக்க நேர்ந்த போது, நாவலின் பிரதான கதாபாத்திரமான அனந்தன் நாயரின் வாழ்க்கையை எழுத்தின் மூலம் உணர்ந்தேன்.


கதை ஒன்றும் முக்கியமில்லை. கதாபாத்திரப் படைப்பின் மூலம் உலக வாழ்வியலை அலசுதல் என்பதுதான் முக்கியமானது. இந்த நாவலின் ஹீரோவான அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயனி வேறொருவருடன் ஓடிப் போய் விடுவாள். அனந்தன் நாயரின் வீழ்ச்சி இங்கு ஆரம்பமாகிறது. ஒரு நாள் வாழ்க்கையோடு அவரின் கதை நினைவுகளின் சொச்சமாய் எழுத்தாய் வரும் போது வெளிப்படும் நிதர்சன உண்மைகள் பலவும், சிந்தித்துப் பார்க்கையில் மனிதன் தனக்குள்ளே போட்டுக் கொண்ட அவிழ்க்க முடியா முடிச்சுக்கள் ஒவ்வொன்றிற்கும் அவனே காரணமாய் இருப்பதினை நீல பத்ம நாபன் வெகு அழகாய் வெளிப்படுத்தி இருப்பார். மனிதனின் வீழ்ச்சிக்கும், உயர்வுக்கு அவனே காரணம் என்பதை இந்தப் பள்ளிகொண்டபுரம் நாவல் வெளிப்படுத்தி இருக்கிறது. 

இளம் வயது வாலிபன் ஒருவன் வரப்போகும் முதுமை காலத்தினை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால், பொருள் சார்ந்த ஆடம்பர வாழ்க்கையின் மிச்சத்தை அவனால் நிச்சயம் உணர முடியும். மனிதனாகப் பிறந்த எவருக்கும் முதுமை வந்தே தீரும் என்கிற போது, இன்றைக்கே வாழ் என்கிற உணர்ச்சி ததும்பும் இன்பம் தரும் வாழ்க்கை என்பது போலியானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி ஆணுக்கு வாழ்க்கை என்பது திருமணப் பந்தத்தின் மிச்சமாய் கண் முன்னே நடமாடும் வாரிசுகளை வைத்துத் தான் தொடரும். உடலிச்சை மீதான ஆர்வம் பின்னர் மயங்கிக் கிடக்கும் பாச வலைக்குள் வாரிசுகளிடம் சிக்கிய பின்புதான் முழுமையடைகிறது. 

பள்ளிகொண்டபுரம் நாவலைப் படித்த போது மேலே நான் சொன்ன பெண்மணியின் கூற்றும், நம் வாழ்க்கையின் தத்துவமே பள்ளியறையின் மிச்சமாய் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.  நேரமிருந்தால் ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான நாவல்தான் “பள்ளிகொண்டபுரம்”.

இந்த நாவல் பற்றி திரு ஜெயமோகன் எழுதியிருக்கும் பத்தியினை நீங்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். 


- கோவை எம் தங்கவேல்

* * * * *