மாலை நேரம் !
மனதை மயக்கும் பறவைகளின் ஒலியில் கரைந்து கொண்டிருக்கும் காலத்தினூடே நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் இருவர் ஆற்றங்கரை ஓரமாய் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர் குரு மற்றொருவர் சீடன்.
ஆற்றங்கரையோரமாய் இருக்கும் தவக்குடிலுக்கு அவ்வப்போது வரும் சீடன் குருவிற்கு பணிவிடைகள் செய்து, குடிலுக்கான காரியங்களைச் செய்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுவான். இப்படியோ கொஞ்ச நாட்கள் கழிந்து கொண்டிருந்தன.
சீடனுக்கும் குருவைப் போல சந்நியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் ஆவல். ஆனால் அழகே உருவான மனைவி, ஆசைப் பிள்ளைகள், அன்பே உருவான தாய், தந்தை மற்றும் உறவினர்களையும், அவர்கள் இவன் மீது வைத்து இருக்கும் பாசத்தை எண்ணியும் சந்நியாசம் பற்றி மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.
சீடனின் மனக்குழப்பத்தின் காரணம் அறிய குரு” சீடனே உனக்குள் என்ன பிரச்சினை? “ என்று கேட்டார்.
சீடனும் குருவிடம் விஷயத்தை மறைக்காமல் சொன்னான். அதற்கு குரு ”சீடனே, உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். அதை நீ வீட்டுக்குச் சென்ற உடன் சொன்னாயானால், உன் குழப்பத்துக்கு ஒரு விடை கிடைக்கும் ” என்றார்.
அதன்படி குரு சீடனுக்கு அந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.
சீடனும் வீட்டை நோக்கி பீடு நடை போட்டுச் சென்றான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் அழகான மனைவி அவனுக்கு அமுது படைத்திட அருகில் குழந்தைகளுடன் ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தான்.
அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கை அறைக்குச் சென்றனர்.
சீடன் குரு உபதேசித்த மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் சீடனின் உடல் தானாகவே படுக்கையில் விழுந்தது. மூச்சு நின்றது. உடம்பு பிணம் போல ஆனது. ஆனால் சீடன் அவன் உடம்பை பார்த்துக் கொண்டிருந்தான். இது என்ன குழப்பம் என்று யோசித்த போது குரு உபதேசித்த மந்திரத்தின் மகிமை என்று அவன் புரிந்து கொண்டான்.
படுக்கையறைக்கு வந்த மனைவி பிணம் போல கிடந்த கணவனைக் கண்டு அலறினாள், துடித்தாள், துவண்டாள். கண்ணீரில் அவளின் கண்கள் குழமாயின. அழுது அழுது அவள் முகம் சிவந்து போனது. மணாளன் மறைந்து விட்டானென்று அவளும், சீடனும் உறவினர்களும் அழுது புரண்டனர். வீடே அழும் வனமாக மாறிப்போனது.
இது அத்தனையும் சீடனின் ஆன்மா பார்த்துக் கொண்டிருந்தது. உறவினர்களை எண்ணி அவன் மனம் துடித்தது. எவ்வளவு பாசக்காரர்கள் இவர்கள் என்று அவன் புளகாங்கிதமடைந்தான்.
சீடனின் குருவிற்கு தகவல் எட்டி அவர் சீடனின் வீட்டுக்கு வந்தார்.
அழும் அனைவரையும் பொறுமையாகப் பார்த்து விட்டு அனைவரையும் அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.
”என் சீடனுக்காக இவ்வளவு பாசம் கொண்ட உறவினர்கள் இருப்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆகையால் நானொரு காரியம் செய்யலாமென்று நினைக்கிறேன்” என்றார்.
அனைவரும் குருவினைப் பார்த்தனர்.
”என் தவ வலிமையால் சீடனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வேறொரு உயிர் வேண்டும். யார் இவனுக்கு உயிர் கொடுத்து உதவுகின்றீர்கள்” என்று கேட்டார்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஒருவரும் சீடனுக்காக உயிரைக் கொடுக்க முன் வரவில்லை.
குரு சீடனின் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சென்றார். அவர்களைப் பார்த்து, “உங்களில் யார் என் சீடனுக்காக தங்கள் உயிரைக் கொடுக்க விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.
சீடனின் மனைவி குருவிடம், “அவர் இறந்தது இறந்தது போலவே இருக்கட்டும், இனி உயிர் பெற்று ஒன்றும் ஆகப் போவதில்லை. நான் என் குழந்தைகளுடன் வாழ்ந்து கொள்கிறேன்” என்றாள்.
குரு சிரித்துக் கொண்டே கமண்டலத்தை எடுத்தார். தண்ணீரை சீடனின் முகத்தில் தெளித்தார். தூக்கத்திலிருந்து எழுந்த சீடன் யாரிடமும் எதுவும் பேசாமல் குருவின் பின்னே நடந்தான்.