துன்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை எவரும் அறிவார் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம். அதுதான் சரி என்று உடும்பாய் இருப்பர். அதனால் விளையும் செயல்களால் உருவாகும் துன்பங்களை அவர்கள் அறிவதுமில்லை. அதைப் பற்றிய சிறிய அலசல் கூட செய்ய மாட்டார்கள்.
சர்க்கரை வியாதி வந்து விட்டது என்பார்கள். என்ன மருந்து சாப்பிட்டாலும் குறைய மாட்டேன் என்பார்கள். ஆனால் வாயைக் கட்ட மாட்டார்கள். நாக்கைக் கட்டுப்படுத்தி விட்டால், பின் நடப்பவை எல்லாமே நன்மைதான். நாற்பது வயது வந்து விட்டதா? உடனே அசைவ உணவுக்கு டாட்டா சொல்லி விட வேண்டும். ஆனால் யார்தான் செய்கிறார்கள்? உழைத்து உழைத்து ஓய்ந்து போகும் உடல்பாகங்களுக்கு மென்மையான வேலைகளை அல்லவா கொடுக்க வேண்டும். சிக்கன் 65 பார்த்தால் நாக்கில் எச்சில் ஊற்று எடுக்கிறது. மசாலா வாசனையை நுகர்ந்தால் வயிறு கபகபவென பசிக்கிறது. நாக்கில் உமிழ் நீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. பிறகென்ன பாதி மென்றும், மெல்லாமலும் வயிற்றுக்குள் அவை சேகரமாகி விடுகின்றன. அதன் பலனை தொடர்ந்து அனுபவித்துதானே ஆக வேண்டும்?
நம் உடல் என்ன வேலை செய்கிறது அதற்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உடம்பினைச் சீராக வைத்துக் கொண்டால் உடம்புத் துன்பம் அற்றுப் போய் விடும். அதையும் மீறி உடல் துன்பம் வருகிறது என்றால் அது கர்ம வினை என்று உணரத் தெரிய வேண்டும்.
ஜோசியக்காரர்களிடம் சென்றால் பல நல்ல விஷயங்கள் உங்களின் எதிர்கால வாழ்வில் நடக்கப்போகிறது என்பார்கள். ஆனால் எதுவும் நடக்காது. ஏன் என்று கேள்வியைக் கேட்டால் உங்கள் கர்மபலன், உங்களுக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களைத் தடுக்கிறது என்பார்கள். ஒரு சிலர் பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்பார்கள். அதற்கு தனிக் கட்டணம் என்பார்கள்.
ஆறறிவுக்கு எட்டாத கர்மபலனை நினைத்து நாம் ஒரு சில சமயம் வருத்தப்படுவதுண்டு. இந்தக் கர்மபலனைத் தீர்க்கவே முடியாதா? என்று ஏங்கும் நிலைமையும் ஒரு சிலருக்கு வரும்.
விதி கர்மபலனை அனுபவித்துதான் தீர வேண்டும் என்றுச் சொல்கிறது. கீதையும் அதைத்தான் சொல்கிறது. மனுதர்மமும் அதைத்தான் சொல்கிறது. வேதமும் அதைத்தான் சொல்கிறது.
நாம் அறியாமல் செய்யும் அற்பச் செயலின் பலனைக்கூட நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும் என்கிறது அனைத்தும். சுவற்றில் மீது வீசப்பட்ட பந்து திரும்பவும் வரத்தானே செய்யும்?
இதற்கு என்னதான் வழி ? என்று யோசிக்கின்றீர்கள்? அப்படித்தான் நானும் ஒரு நாள் யோசித்தேன். விடாது தொரத்திய கர்மபலனை விட்டொழித்து விட்டு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென யோசித்தேன்.
அதன் விடை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்... !