குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, August 5, 2015

நிலம்(16) - தொல்லியல்துறை நிலங்களை கிரையம் பெற்றால் என்ன ஆகும்?

அமெரிக்க சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் தந்தையார் என்னைச் சந்திக்க வேண்டுமென போனில் கேட்டார். 

வீட்டிற்கு வரச்சொல்லி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கை நிறைய டாக்குமெண்ட்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். 

”சார், என் பையன் அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் உழைப்பில் கிடைக்கும் காசில் கொஞ்சம் நிலம் வாங்கி வைத்தால் அவன் எதிர்காலத்துக்கு பயன்படுமே என நினைத்துக் கொண்டிருந்த போது, எனது நண்பர் மூலமாக இந்த பத்து ஏக்கர் நிலம் விலைக்கு வந்திருக்கிறது. பத்து இலட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துதான் இந்த பேப்பர்களை வாங்கி இருக்கிறேன். என் பையன் உங்களின் பிளாக்கைப் படிப்பானாம். அதனால் உங்களிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டு வாங்கிய பிறகு கிரையம் செய்யலாம் என்றுச் சொன்னான், அதனால் தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றார்.

”நாளை மாலை என்னை வந்து பாருங்கள்” என்றுச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அவர் கொண்டு வந்த ஆவணங்களில் வக்கீல் ஒருவரின் கருத்துரையும் இருந்தது. முதலில் அதனை ஆராய்ந்தேன். அனைத்தும் சரியாக இருந்தன. வில்லங்கச்சான்றிதழ், மூலப்பத்திரங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. அடுத்து எனது மேல் கட்ட ஆவண ஆய்வினைத் தொடர்ந்தேன்.

மேற்படி நிலத்தின் மொத்த மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி இருக்கும். கிரையச் செலவு அது இதென்று கிட்டத்தட்ட இரண்டு கோடியே இருபது இலட்சம் செலவாகும்.

எனது ஆய்வில் மேற்படி நிலம் தொல்லியல் துறையினால் தடைசெய்யப்பட்ட  நிலம் என அறிந்து கொண்டேன். தொல்லியல் துறையினால் எடுக்கப்பட்டு, அதில் எந்த வித கட்டிடங்களோ அல்லது வேறு எந்த வித நடவடிக்கையுமே எடுக்க முடியாத நிலம் அது. அதுமட்டுமல்ல அந்த நிலத்தின் அருகிலிருந்து 300 அடியிலிருந்து 900 அடி வரை எந்த வித கட்டிடங்களோ வேறு எந்த மாற்றமும் செய்ய நினைத்தால் தொல்லியல் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இதே போல நிலம் சென்னையில் இருக்கிறது. இந்த நிலத்தினைக் கிரையம் பெற்ற பல சென்னைவாசிகள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்ல தமிழகமெங்கும் இது போன்ற நிலங்கள் இருக்கிறது. கோவையில் ஒரு முக்கியமான ஊரில் இந்த நிலங்கள் இருக்கின்றன. நிலத்தின் உரிமையாளர் பெயர், பட்டா போன்றவைகளில் எந்த வித மாற்றத்தினையும் தொல்லியல் துறையினர் ஏற்படுத்தவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.

ஆகவே அந்த நிலம், நிலமாகத்தான் இருக்குமே ஒழிய வேறு ஒன்றினையும் செய்ய முடியாது. அப்படி செய்ய  முனைந்தால் அபராதம் மட்டுமின்றி சிறை வாசமும் உண்டு என்கிறது தொல்லியல்துறை.

மறு நாள் மாலை பெரியவர் வந்தார். காஃபி கொடுத்து உபசரித்து விட்டு அதன் பிறகு மேற்படி விஷயத்தை சொன்னேன். அதற்குரிய ஆவணங்களை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவருக்குப் படபடவென்று வியர்க்க ஆரம்பித்து விட்டது. கொடுத்த அட்வான்ஸ் தொகையை எப்படி வாங்குவது என்று இப்போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்.

இப்படி பல்வேறு சிக்கல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நிலத்தினை வாங்கும்போது சரியான லீகல் ஒப்பீனியன் தருபவரிடம் லீகல் பெறவில்லை எனில் சம்பாதித்த பணம் வீணாய்ப் போய் விடும்.

அமெரிக்காவிலிருந்து சாஃப்ட்வேர் இன்ஞ்சினியர் போனில் அழைத்து பல முறை நன்றி நன்றி எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.