குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, June 13, 2014

நிலம்(8) - மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டா?

மிகச் சமீபத்தில் சில அழைப்புகள் வந்தன. ஒருவர் அமெரிக்காவிலிருந்து அழைத்திருந்தார். இன்னொருவர் சென்னையிலிருந்து அழைத்திருந்தார். அவர்களின் கேள்வி மூதாதையர் சொத்தைப் பற்றி இருந்தது.அதிலும் பெண்களுக்குப் பங்கு உண்டா என்பதைப் பற்றி இருந்தது. ஆகையால் அது பற்றிய ஒரு சில விளக்கங்களைப் பார்க்கலாம். பெரிய விஷயம். கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகிறேன். வேலைப்பளு அதிகம். ஓகே !

மூதாதையர் சொத்தில் வாரிசுகளுக்கு பாத்தியம் உண்டு என்று பெரும்பாலானோர் சொல்வார்கள். மூதாதையர் சொத்தில் நிச்சயம் வாரிசுகளுக்கு பங்கு உண்டு என்பது உண்மைதான் என்றாலும் ஒரு சில சிக்கல்களும் உண்டு. 

இந்து குடும்ப சட்டத்திருத்தம் 1990ன் படி மகள்களுக்கு பங்கு உண்டு என்ற திருத்தம் வந்தாலும் வந்தது பெரும்பான்மையான பெண்கள் வழக்கு மேல் வழக்குகள் தொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆசையின் வடிவமாய் கருதப்படும் பெண்கள் வழக்குத் தொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவர்களுக்கு உரிமையும் உண்டு என்று அரசே சொல்லி விட்டதால் மேலும் உற்சாகமடைந்த பெண்கள் இதே காரணத்தை வைத்து வழக்குத் தொடுப்பேன் என்றுச் சொல்லி பலருக்குப் பீதியையும், ரத்தக் கொதிப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். வழக்கு போடுவேன் என்றுச் சொல்லியே காசைப் பிடுங்கிக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள்.

குடும்ப உறவின் சிக்கல்கள் இந்த ஒரு சட்டத்திருத்தத்தால் மேலும் தீவிரமடைந்தன என்று நிச்சயம் சொல்லலாம். இந்துக் குடும்பத்தில் தாய் மாமன் உறவு ஒரு தந்தைக்கும், தாய்க்கும் மேலான ஒன்றாக கருதப்படுகிறது. உதாரணம் சொல்ல வேண்டுமெனில் தன் அக்காவோ அல்லது தங்கையின் மகளோ, மகனோ ஊனமாகப் பிறந்து விட்டால் தாய் மாமன் வயது சரியாக இருந்தால் திருமணம் செய்து கொள்வான், இல்லையெனில் தன் மக்களுக்குத் திருமணம் செய்து கொள்வான். தன் சகோதரிகளின் வாரிசுகளின் ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் அவன் தான் பொறுப்பு. அவனின் கடமை அத்துடன் முடிந்து விடுவதில்லை. அது வாழையடி வாழையாக தொடர்ந்து வரும் பொறுப்பு. அதை அவன் மகிழ்ச்சியுடன் செய்வான்.

இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்துக் குடும்பம். இந்தச் சட்டம் வந்தாலும் வந்தது. தாய் மாமன்கள் பாடு பெரும்பாடாய் போனது.

தொடரும்...

Thursday, June 12, 2014

நிலம் (7) - பிரிபடாத பாகச் சொத்து

எனக்குத் தெரிந்த நண்பரொருவருக்கு அவசரத் தேவை. அதனால் அவரின் நிலத்தினை விற்பனை செய்ய முடிவெடுத்து என்னிடம் வந்தார்.

இடத்தைப் பார்த்து விட்டு வந்த பிறகு டாக்குமெண்ட்களை கேட்டேன். கொண்டு வந்து கொடுத்தார். படித்த பிறகுதான் தெரிந்தது அது பிரிபடாத பாகச் சொத்து என்பது. அந்தச் சொத்தை எவருக்கும் விற்க முடியாது. வாங்கவும் மாட்டார்கள். நண்பருக்குப் பிரச்சினையோ தலைக்கும் மேல் இருக்கிறது. என்ன தான் வழி? இதற்கும் ஒரு வழி இருக்கிறது.

முதலில் அது என்ன பிரிபடாத பாக சொத்து என்பதைப் பார்க்கலாம்.

ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் இருபது செண்ட் நிலம் விற்கபடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த இருபது செண்ட் பூமிக்கு செக்குபந்தி குறிப்பிடாமல் பொதுவில் இருபது செண்ட் என்று எழுதிக் கொடுப்பார்கள். ஒரு ஏக்கரில் பொதுவில் இருபது செண்ட் என்றால் எந்தப்பக்கம் என்று நாம் கண்டுபிடிப்பது? இதைத்தான் பிரிபடாத பாக சொத்து என்றுச் சொல்வார்கள். 

ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த இருபது செண்ட் நிலம் எந்தப் பகுதியில் உள்ளது என்று பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை என்றால் இந்த நிலத்தை எவரும் வாங்க மாட்டார்கள்.

இப்போது புரிகிறதா என்ன பிரச்சினை என்று. 

இதை எப்படி விற்பது? இதுதான் உங்கள் பகுதிச் சொத்து என்று எப்படி பிரிப்பது? இதற்கென்று சில நடவடிக்கைகள் எடுத்து பாகச் சொத்தில் இது தான் எனது பங்கு என்று டாக்குமெண்ட் உருவாக்கிய பின்னர் தான் விற்க முடியும்.

ஆகவே சொத்து வாங்கும் போது செக்குபந்தியில் அதிக கவனம் தேவை என்று இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும்.

செக்குபந்தி மட்டும் சரியாக இருந்தால் போதுமா? நிச்சயம் போதாது. பிற விஷயங்களும் இருக்கின்றன. அது என்ன என்பதை வரக்கூடிய பகுதிகளில் பார்க்கலாம்.

குறிப்பு: மெயில் மூலமும், போன் மூலமும் ஆலோசனை கேட்போருக்கு இதுதான் சரியான தீர்வு என்று சொல்ல முடியாது. தங்களிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை தீர ஆய்வு செய்து படித்த பிறகுதான் மிகத் துல்லியமான தீர்வை வழங்க முடியும். ஆகவே டாக்குமெண்ட்களை எனக்கு கொரியரில் அனுப்பி வைக்கவும்.

மிக மிகத் துல்லியமான பத்திரங்கள் எழுதவும், லீகலுக்கும் அணுகலாம்.

முகவரி : 
கோவை எம் தங்கவேல்
ஸ்ரீ சாய் ரத்னம் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
33, பாரதி நகர் 2வது தெரு, கணபதி,
கோயமுத்தூர் - 641006,
போன் : 9600577755

Friday, June 6, 2014

சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் திரு உருவசிலை பிரதிஷ்டை விழா

ஆத்ம சகோதர, சகோதரிகளே !

உங்கள் அனைவருக்கும் ஆத்ம வணக்கம்.

நிகழும் சுப வருடம் வைகாசி மாதம் 25ம் நாள் (08.06.2014) ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 8.00 மணிக்கு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் திரு உருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அது சமயம் அனைத்து சித்த வித்யார்த்திகளும், மெய்யன்பர்களும் விழாவில் கலந்து கொண்டு குரு அருள்  பெற அன்போடு அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல் :-

காலை 8.00 மணிக்கு - திரு உருவ சிலை பிரதிஷ்டை
காலை 9.00 மணிக்கு - சிற்றுண்டி
பகல் 12.00 மணிக்கு - கூட்டு ஜெபம்
மதியம் 1.00 மணிக்கு - அன்னமளிப்பு

இங்கணம்

வெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவ சமாதி
ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் ஆசிரமம் மற்றும் ட்ரஸ்ட்
முள்ளங்காடு போஸ்ட், செம்மேஉ, பூண்டி,
கோவை - 641114

தொடர்புக்கு 
டாக்டர் ஏ. நாகராஜ் M.B.B.S, D.C.H.,
மேனேஜிங் ட்ரஸ்டி
போன் : 94426 45711

ஜோதி ஸ்வாமிகள் 
போன் : 9894815954

Monday, June 2, 2014

கதை சொல்லும் வீடு - (1)

எகிப்திய பிரமிடுகள், இந்துக் கோவில்கள் போன்ற மர்மங்கள் நிறைந்து கிடக்கும் இடங்கள் இவ்வுலகில் பல உண்டு. இந்த மர்மங்களுக்குச் சாட்சியமாய் இருந்த மனிதர்கள் கால ஓட்டத்தில் ஒரு நாள் காணாமலே போய் விடுகின்றார்கள். அவர்களூடே அவர்கள் சம்மந்தப்பட்ட மர்மங்களும், ரகசியங்களும் மறைந்து போய் மேலும் மேலும் புதிராய், வரலாற்றுச் சுவடாய் நின்று கொண்டிருக்கின்றன. அந்த ரகசியங்கள் வெளிப்பட்டிருந்தால் மனிதனுக்கு உதவியாக இருந்திருக்கும். 

நான் அப்படி இருக்கப் போவதில்லை. எனக்குள் மனிதர்களால் நிகழ்த்தப்படும் ரகசியங்களை நான் எழுதத் துணிந்து விட்டேன். நானொரு வீடு என்று உங்களுக்குத் தெரியும். வீடு கதை சொல்லுமா என்றெல்லாம் யோசித்து மூளையைச் சூடாக்கிக் கொள்ளாதீர்கள்.

பாலு மகேந்திராவின் வீடு படம் பார்த்திருக்கின்றீர்கள் தானே. அந்த வீடு சொல்லும் கதையைப் பார்த்திருக்கின்றீர்கள் தானே? அதைப் போலத்தான் நானும் உங்களிடம் கதைச் சொல்லப் போகின்றேன். நான் பிறந்த தேதி எனக்குத் தெரியும். என் வாழ் நாள் எத்தனை நாட்கள் என்று எனக்குத் தெரியாது. நானும் மனிதனைப் போலத்தான். 

 நான் சொல்லும் கதையைக் படிக்க விரும்பியவர்கள் படிக்கலாம்.

-
தொடரும்



Saturday, May 31, 2014

போலிகள் உஷார்

இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் நான் பல தடவை பெரிய ஏமாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறேன். ஏதாவதொரு முறையில் நான் ஏமாந்து விடுகிறேன். சிலர் வெளியில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் எனது இந்த அனுபவம் பலருக்கு உபயோகப்படும். 

சமீபத்தில் எனது நண்பரொருவரால் புத்திசாலித்தனமாக ஏமாற்றப்பட்டேன். என்னிடம் நைச்சியமாகப் பேசி விஷயங்களைக் கறந்து கொண்டு விட்டு, அதன் மூலம் அவர் பலனடைந்து விட்டார்.  

நான் அவர் மீது வைத்திருந்த நட்பு தூய்மையானது. அவர் என்னை ஏமாற்றியதால், எனக்கு எந்த வித மனக்கிலேசமும் ஏற்படவில்லை. அவர் எனக்குச் செய்த தீமைக்காக நானும் ஒரு தீமையை அவருக்குச் செய்து விட இயலும். ஆனால் அது என் இயல்பு அல்ல. நான் துறவி போல இருக்க விரும்புவன். ஆகையால் அவருடன் இன்றைக்கும் எப்போதும் போல பேசிக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் அவர் என்னுடன் பேசுவதை பெரும்பாலும் தவிர்க்க விரும்புவதை அறிந்து நகைப்புத்தான் ஏற்பட்டது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.இது போல பலர் இருக்கின்றார்கள். எனது அனுபவம் உங்களனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.

எவனொருவன் தவறு செய்கின்றானோ அவன் தான் தண்டனைக்குப் பயப்பட வேண்டும். கவலைப்பட வேண்டும். தவறு செய்யாதவன் எதற்கும் பயப்பட வேண்டியதும் இல்லை. கவலைப்பட வேண்டியதுமில்லை.

எதிரில் உட்கார்ந்திருப்பவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தால் உங்களை ஏமாற்ற துணிந்து விடுவான். அது யாராக இருந்தாலும் சரி. சந்தேகத்துடனே அணுகுங்கள்.

இந்த உலகத்தில் நல்லவர்கள் அரிதாகிக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் இருக்கும் பணத்தை எதையாவது சொல்லி கறந்து விடுகிறார்கள். அல்லது ஏமாற்றி விடுகிறார்கள். அதற்கொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். காரியத்தைச் சாதித்து விடுவார்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் நண்பனிடம் கூட பேசும் போது வெகு கவனமாய் பேசுங்கள்.

ஜாக்கிரதை! உங்களைச் சுற்றியும் போலிகளும், போலி வேடதாரிகளும் உலாவுகின்றார்கள். அவர்கள் பல விஷயங்களைச் சொல்லி உங்களிடமிருந்து பொருளைப் பறிக்க பார்ப்பார்கள். வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


Monday, May 26, 2014

பேரழகியால் வந்த பிரச்சினை

ஒல்லியான தேகம்.  நல்ல உயரம். நெற்றியில் வகிடெடுத்து குங்குமம் தீட்டி இருக்கும். வலது மூக்கில் மூக்குத்தி.

வலது கையில் டீ கேன். இடது கையில் பலகாரம்.

திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாறிய டெண்டரால் இவருக்கு அந்தக் கடை கிடைத்ததாம். ஒரு வேளை அதிமுகவின் கடை நிலைத் தொண்டராக இருக்கக்கூடும்.  சிங்கா நல்லூர் உழவர் சந்தையில் இருக்கும் தேநீர்க்கடையில் மேலே சொல்லும் பெண் இருக்கிறார்.

ஓரிடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்கமாட்டார். சுறு சுறுவென நடை. டீ ஊற்றிக் கொடுப்பது என்ன? பலகாரம் எடுத்துக் கொடுப்பது என்ன? அடுத்த நபரிடம் இவ்வளவு பாக்கி என்றுச் சொல்லி காசு வாங்கி வைத்துக் கொள்வது என மனித தேனீ போல உழைத்துக் கொண்டிருப்பார் அப்பெண்.

அன்பு நண்பர்களே! இன்றைய பெரும்பாலான வீட்டில் இருக்கும் பெண்கள் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறார்கள் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

வீடு சுத்தம் செய்து, வாசல் தெளித்து, கோலம் போடுவது எத்தனை பெண்கள் என்று எண்ணிப் பாருங்கள். 

இயற்கையின் கொடையான சாணத்தை எத்தனை பெண்கள் வாசலில் தெளிக்கின்றார்கள் என்று நினைத்துப் பாருங்கள். 

இந்தச் சாணியில் தானே அந்தக் காலத்துக் குழந்தைகள் புரண்டு உருண்டு வளர்ந்தன. அப்போதெல்லாம் எந்த மருத்துவமனைக்கு குழைந்தகளை அழைத்துச் சென்றார்கள்? நோயெதிர்ப்பு மருந்தாகிய சாணத்தை இன்று எந்தப் பெண்ணாவது தொட விரும்புவாரா?

சுத்தம் சுத்தம் என்றுச் சொல்லி கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தி முடிவில் மருத்துவ மனைக்குத்தானே சென்று கொண்டிருக்கிறோம்.

பெண்கள் இன்றைக்கு உடம்பு வியர்க்க வேலை செய்கிறார்களா என்று கேட்டால் வேலையா நானா என்பார்கள். துவைக்க, அரைக்க, சாப்பிட என எல்லாமே ரெடிமேட்.

முடிவில் நோயாளியாய் மாறி மருத்துவ மனைக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களைச் சுற்றி இருக்கும் பல பெண்கள் நோயோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சருமம் மட்டும் பளபளவென இருந்தால் அழகோ அழகு என்று நினைக்காதீர்கள். அது அழுகிக் கொண்டிருக்கும் உடம்பு என்பதை உணருங்கள். தினமு உழைத்து உழைத்து உரமேரிப் போன பெண்கள் தானே பேரழகிகள்.

வாரம் தோறும் உழவர் சந்தைக்குச் செல்லும் வழக்கம். என்னைப் பார்க்கும் போதெல்லாம், ”அண்ணா டீன்னா” என்று கேட்பார் அவர். மறுத்து விடுவேன். இது வாரம் தோறும் நடக்கும் ஒரு சம்பவம். இந்த சம்பவத்தால் ஒரு பிரச்சினை வந்து விட்டது எனக்கு.

நானும், மனையாளும், மனைவியின் உறவினர் அரசமரத்தோட்ட கவுண்டரும் பேசிக் கொண்டிருந்தோம். நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், “கோதை, இந்த ஏரியாவிலேயே பேரழகி இவர் தான்” என்று அப்பெண்ணைப் பார்த்துச் சொன்னேன். அப்படி வெட்கப்பட்டார் அப்பெண். கோதைக்குச் சிரிப்பு.

அவர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து அகன்றதும், கவுண்டர் என்னைப் பார்த்து, “ ஏங்க, எம்ம புள்ளைய பக்கத்துல வச்சுக்கிட்டே இப்படிப் பேசுறீங்களே”ன்னார்.

அசட்டுச் சிரிப்பொன்றினைச் சிரித்து வைத்தேன்.

பிரச்சினை இத்தோடு முடியவில்லை. இப்போது சந்தைக்குச் சென்றால் அவர் அருகில் வந்து விட வேண்டுமென்ற உத்தரவால் ஆப்பசைத்த குரங்கு கதையாகிப் போனது எனக்கு.


Wednesday, May 21, 2014

இப்படியும் சில பெண்கள்

இன்று காலையில் வழக்கம் போல வினாயகரை தரிசனம் செய்து விட்டு, வயதான அர்ச்சகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இரயில்வேயில் டிரைவராக இருந்தவர். 32 வருடம் சர்வீஸ். ஒரு முறை கூட ஆக்சிடெண்ட் செய்யாதவர். அதற்காக பத்தாயிரம் ரூபாய் அவார்டும், ஹெச் எம் டி வாட்ச்சும் பரிசு பெற்றவர்.

”சார், ரேஷன் கார்டு முகவரி மாற்றத்திற்காக கோவை ஆர்டிஓ ஆபிசில் அருகில் இருக்கும் தாசில்தார் அலுவலகத்தின் மேல் மாடியில் இருக்கும் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.கணிணியில் ஒரு சீட்டுக் கொடுத்தார் அங்கிருந்த பெண்மணி” என்றார்.

ஒரு வாரம் கழித்து முகவரி மாற்றம் செய்து வாங்கி வரலாம் என்று சென்றேன். ”நாளை வாருங்கள். தாசில்தார் வெளியே சென்று விட்டார் என்றுச் சொல்ல நானும் வந்து விட்டேன். இப்படியே மூன்று மாதமாய் என்னை படாதபாடு படுத்தினார் அப்பெண்மணி" என்றார். 

ரிட்டயர்மெண்ட் வாங்கிக்கொண்டு வயதான காலத்தில் அமைதியாக இருக்க வேண்டிய வயதுள்ள கிழவரை, ரேசன் கார்டில் முகவரி மாற்றத்திற்காக அவரை மூன்று மாதம் அழைக்கழித்திருக்கிறார் அந்தப் பெண்மணி. என்ன ஒரு மனசோ அவருக்கு தெரியவில்லை.

மூன்றாவது மாதம் ஒரு நாள் காலையில் சென்றவர் அந்தப் பெண்மணியுடன் சண்டைக்குச் சென்றிருக்கிறார். அதற்கு அப்பெண்மணி ”உஷ் இது அலுவலகம்” என்று மிரட்டி இருக்கிறார்.

”இன்றைக்கு ரேஷன் கார்டு தரவில்லை என்றால் கலெக்டரிடம் போவேன்” என்றுச் சொல்லி சத்தம் போட்டிருக்கிறார் பிராமணர். 

அதன் பிறகு அவரின் கைப்பையில் இருந்து முகவரி மாற்றப்பட்ட ரேஷன் கார்டை எடுத்துக் கொடுத்திருக்கிறார் அவர்.  "இது போல கட்டாக பல ரேஷன் கார்டுகளை அவர் கைப்பையில் வைத்திருந்தார்" என்றார் பெரியவர்.

"கடவுளாகப் பார்த்துக் கொடுத்த வேலைக்காவது அவர்  நியாயமாக இருக்கவில்லை அந்தப் பெண்மணி" என்றார் அவர்.

வயதானவர்களிடம் சாபம் பெற்று அவர் என்ன சாதித்து விடப்போகிறார் என்று தெரியவில்லை.

கோடி கோடியாய் குவித்து வைத்திருக்கும் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் கைகளைக் கட்டிக் கொண்டு கோவில் கோவிலாய் ஏறி இறங்குகின்றார்கள். தான் செய்த பாபம் கழிக்க வெளியில் தெரியாமல் அனேக காரியங்களைச் செய்கிறார்கள். 

பெண்களுக்கு இரக்க உள்ளம் என்கிறார்கள். இந்தப் பெண்மணிக்கு என்ன மாதிரியான உள்ளமோ தெரியவில்லை.

ஏழை அர்ச்சகரின் சாபம் பலித்து விடக்கூடாது என நினைத்தேன். 


Thursday, May 15, 2014

தாவணியும் பழைய சாதமும்




தமிழர்கள் ஏன் தங்களது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வருகின்றார்கள் என்பதே புரியவில்லை. இவர்கள் என்ன தான் நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்றே புரியவில்லை. அமெரிக்காகாரன் ஆராய்ச்சி செய்து, “பழைய சாதத்தில் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும், உடலுக்கு ஊட்டம் தரும் சக்தியும், அத்துடன் இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் மேலும் உடலுக்கு வலு சேரும்” என்று சொல்கிறான். ஆனால் பழைய சாதத்திற்குச் சொந்தக்காரர்களோ பழைய சாதமா “அய்யே! “ என்கிறார்கள்.

இரவு படுக்கப் போகும் முன்பு, மண்சட்டியில் இரவு வடித்த ஆறிய சாதத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வைத்து விட்டு மறு நாள் காலையில் கிடைக்கும் சாதமும், அதன் நீரும் தான் “அமிர்தம்”

இதற்காகவே ஊருக்குச் சென்றிருக்கும் போது மண்சட்டி வாங்கி வந்து மனையாளிடம் கொடுத்தேன். நகரத்தில் வாழ்ந்தவள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பெரும்பாலும் குழம்பு, பொறியல் போன்றவைகள் மண்சட்டியில் தான் சமைக்கிறார்.

இப்போதெல்லாம் காலையில் கொஞ்சம் மோர் விட்டு, கரைத்து, தொட்டுக்கொள்ள காய்கறிகள் கூட்டும், கொஞ்சம் சின்ன வெங்காயமும் சாப்பிடுகிறேன். தற்போது கோவையில் குளிராக இருந்தாலும் அமிர்தச் சாப்பாடு இல்லையென்றால் எனக்கு இறங்கவே இறங்காது. வாரம் நான்கைந்து தடவை பழைய சாதமும், சின்ன வெங்காயமும் தான்.

சமீபத்தில் ஒரு கோவிலுக்குச் சென்றிருந்த போது அங்கு வந்திருந்த பெரும்பாலான இளம் பெண்கள் சுடிதார், டைட் டீசர்ட், பேண்ட் அணிந்து வெகு கவர்ச்சியாய் பார்ப்போரை கிளர்ச்சியடையும் விதமாக வந்திருந்தார்கள்.

அதில் ஒரு சில பெண்கள் தாவணி அணிந்து, தலையில் பூச்சூடி, நெற்றியில் திலகம் துலங்க “அம்மனைப்” போல வந்திருந்தார்கள்.

தமிழர்கள் தனி அடையாளமான “தாவணியும் பாவாடையும்” கொஞ்சம் கொஞ்சமாய் காணாமலே போய்க் கொண்டிருக்கிறது. தமிழனுக்குரிய அடையாளத்தை இழந்து அப்படி என்ன மிகச் சிறந்த நாகரீக வாழ்க்கை வாழ்கிறார்களோ தெரியவில்லை.

மலேயாக்காரர்கள்,சீ னர்கள் எங்கு சென்றாலும் தங்கள் அடையாளங்களை எப்போதும் இழப்பதில்லை. ஆரியர்கள் என்றுச் சொல்லக்கூடிய பிராமணர்களும் தங்களுக்குரிய எந்த ஒரு அடையாளத்தையும் இழக்கவே மாட்டார்கள். யூதர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்க நாடில்லாத போது ஒரு தனிப்பட்ட குழுவை உருவாக்கி, அவர்களுக்கு உதவி செய்து யூத கலாச்சார, இலக்கிய விழுமியங்களை பாதுகாத்து வந்தார்கள். இன்றைக்கு இஸ்ரேல் என்றொரு தனி நாட்டையே உருவாக்கி வாழ்ந்து வருகிறார்கள்.

உலகிற்கே நாகரீகம் கற்றுக் கொடுத்த தமிழர்கள் இப்படியா தரம் தாழ்ந்து போவார்கள்.

மனது வலிக்கிறது.


Saturday, May 10, 2014

ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா




கீரமங்கலம் அரசு பள்ளியில் ப்ளஸ் 1, 2 படித்துக் கொண்டிருந்த போது பைங்காலில் இருந்த சின்னம்மா வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்தேன். தம்பி நடராஜ் தான் அழைத்து வருவான்.

காலை, மாலை சின்னம்மா வீட்டில் சாப்பாடு, மதியம் மட்டும் செட்டியார் கடையில் சாப்பாடு. செட்டியார் அழுக்கு வேட்டி கட்டி இருப்பார். எப்போதுமே வியர்வையுடனே இருப்பார். புகை படிந்த ஹோட்டல். இரண்டு பக்கமும் பெஞ்ச் போடப்பட்டிருக்கும்.

மாதா மாதம் செட்டில்மெண்ட் என்பதால் எனக்கு இரண்டு ரூபாய் சாப்பாடு எனக்கு ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா. சிறு வயதிலிருந்தே அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் 75பைசா விலை குறைத்து தான் சாப்பாடு போட்டார்.

வாழை இலை மீது சூடான சாதத்தைப் போட்டு குழம்பு ஊற்றுவார் அப்படி ஒரு வாசம் வரும். அத்துடன் அவர் வைக்கும் கூட்டு சுவையோ சுவையாக இருக்கும். ஆனால் மோர் மட்டும் புளிச்ச வாடை இல்லாது இருக்கவே இருக்காது.

அருகில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் இலையில் மீன் வறுவல் வைப்பார். என்னைப் பார்ப்பார் வைக்கவா என்பார். நான் மறுத்து விடுவேன்.

கிட்டத்தட்ட ஆறு மாதம் அக்கடையில் சாப்பிட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் மீன் வைக்கவா என்று அவர் கேட்கத் தவறுவதில்லை. நான் மறுப்பதையும் விடுவதில்லை.

அவர் ஏன் தினமும் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது எனக்குப் புரியவே இல்லை.

செட்டியார் கடைச் சாப்பாட்டுச் சுவையும், அவை வைக்கும் கூட்டும் இன்றைக்கும் என் நாவில் மறையாது இருக்கிறது.

அது ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா சாப்பாடு என்பதால் தானோ என்னவோ அவ்வளவு சுவையாக இருந்தது போலும்.

அதுமட்டுமல்ல காரணம் !

செட்டியாரின் மீன் வறுவலும் தான் என்கிறது மனசு !


Wednesday, May 7, 2014

நிலம்(6) – பத்திரங்கள் எழுதும் போது கவனம்

சமீபத்தில் ஒருவர் தன் இரண்டு மனைகளை விற்பனை செய்ய சப்ரெஜிஸ்டர் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். கிரையப்பத்திரம் எழுதும் போது சர்வே எண் தவறாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால் இவர் முன்பு கிரையம் பெற்றவரின் பத்திரத்திலும் இதே தவறு நடந்திருக்கிறது. இதை எவரும் கண்டுபிடிக்கவில்லை. இரண்டு பத்திரங்கள் தவறான சர்வே எண் குறிப்பிடப்பட்டு பதிவாகி இருக்கிறது. இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் இல்லாத சொத்துக்கு பத்திரம் இருக்கிறது என்பதுதான்.

இரண்டு பத்திரங்களில் பிரச்சினை இருக்கிறது. இதை எப்படிச் சரி செய்வது? வழி என்ன? என்று குழம்பிப் போய் நம்மிடத்தில் வந்தார்கள்.

பத்திரங்கள் எழுதும் போது மிகக் கவனமாய் இருத்தல் முக்கியம். அவசர அவசரமாக பத்திரம் எழுதுவது, தெரிந்தவர் தானே என நினைத்துக் கொண்டு எழுதுவது இதெல்லாம் செய்தால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினை வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

கிராமப்புறங்களில் சொத்து வாங்குவது என்பது வேறு. அதே நகர்ப்புறங்களில் சொத்துக்கள் வாங்குவது என்பது வேறு. கிரையம் செய்யும் போது ஒவ்வொரு ஆவணங்களையும் சரி பார்த்து, சிட்டா, அ பதிவேடு மேலும் இன்ன பிற ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தல் வேண்டும். சில லீகல் ஒப்பீனியன் வழங்கும் வக்கீல்களே தவறு செய்கின்றார்கள். ஆகவே வெகு கவனமாய் இருத்தல் மிக அவசியம்.

இல்லையென்றால் உழைத்துச் சேர்த்த பணத்தினை இழக்க நேரிடும்.