இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் நான் பல தடவை பெரிய ஏமாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறேன். ஏதாவதொரு முறையில் நான் ஏமாந்து விடுகிறேன். சிலர் வெளியில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் எனது இந்த அனுபவம் பலருக்கு உபயோகப்படும்.
சமீபத்தில் எனது நண்பரொருவரால் புத்திசாலித்தனமாக ஏமாற்றப்பட்டேன். என்னிடம் நைச்சியமாகப் பேசி விஷயங்களைக் கறந்து கொண்டு விட்டு, அதன் மூலம் அவர் பலனடைந்து விட்டார்.
நான் அவர் மீது வைத்திருந்த நட்பு தூய்மையானது. அவர் என்னை ஏமாற்றியதால், எனக்கு எந்த வித மனக்கிலேசமும் ஏற்படவில்லை. அவர் எனக்குச் செய்த தீமைக்காக நானும் ஒரு தீமையை அவருக்குச் செய்து விட இயலும். ஆனால் அது என் இயல்பு அல்ல. நான் துறவி போல இருக்க விரும்புவன். ஆகையால் அவருடன் இன்றைக்கும் எப்போதும் போல பேசிக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் அவர் என்னுடன் பேசுவதை பெரும்பாலும் தவிர்க்க விரும்புவதை அறிந்து நகைப்புத்தான் ஏற்பட்டது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.இது போல பலர் இருக்கின்றார்கள். எனது அனுபவம் உங்களனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.
எவனொருவன் தவறு செய்கின்றானோ அவன் தான் தண்டனைக்குப் பயப்பட வேண்டும். கவலைப்பட வேண்டும். தவறு செய்யாதவன் எதற்கும் பயப்பட வேண்டியதும் இல்லை. கவலைப்பட வேண்டியதுமில்லை.
எதிரில் உட்கார்ந்திருப்பவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தால் உங்களை ஏமாற்ற துணிந்து விடுவான். அது யாராக இருந்தாலும் சரி. சந்தேகத்துடனே அணுகுங்கள்.
இந்த உலகத்தில் நல்லவர்கள் அரிதாகிக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் இருக்கும் பணத்தை எதையாவது சொல்லி கறந்து விடுகிறார்கள். அல்லது ஏமாற்றி விடுகிறார்கள். அதற்கொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். காரியத்தைச் சாதித்து விடுவார்கள்.
எந்தச் சூழ்நிலையிலும் நண்பனிடம் கூட பேசும் போது வெகு கவனமாய் பேசுங்கள்.
ஜாக்கிரதை! உங்களைச் சுற்றியும் போலிகளும், போலி வேடதாரிகளும் உலாவுகின்றார்கள். அவர்கள் பல விஷயங்களைச் சொல்லி உங்களிடமிருந்து பொருளைப் பறிக்க பார்ப்பார்கள். வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.