அன்பு நண்பர்களே,
உங்களை அன்போடு இப்பதிவினைப் படிக்க அழைக்கிறேன். விஷயம் கொஞ்சம் கடுமையானதுதான். இப்பதிவு திருமணமனமானவர்களுக்கு மட்டும் என்றுச் சொல்லி இருப்பதால் வயதுப் பெண்கள், குழந்தைகள் இவ்விடத்திலிருந்து விலகி விடும்படி வேண்டிக் கொள்கிறேன்.
தாய் தந்தை இச்சையினாலே தாரணியிலே நான் பிறந்தேன்
நாய்பட்ட பாடெல்லாம் நான்படவோ பரம்பொருளே!
தண்ணீரைக் கூட தவறி மிதித்தறியேன்
கண்ணீரைச் சிந்திக் கலங்குவதேன் பரம்பொருளே!
அல்லற்பட் டாற்றாது அழுதேன் எனக்குவந்த
தொல்லையெல்லாம் தீர்த்துத் துயர்துடைப்பாய் பரம்பொருளே!
மாட்டின்மேல் உண்ணியைப் போல் மானிடர்கள் செய்கின்ற
கேட்டை எல்லாம் நீக்கிக் கிளைத்தருள்வாய் பரம்பொருளே!
தோழன் என எண்ணித் தொடர்ந்தேன்; நீயும் ஒரு
வேழம்போ லானால் விதிஎதுவோ பரம்பொருளே!
கொண்ட மனையாளும் கொட்டுகின்ற தேளானால்
பண்டு நான் செய்ததொரு பாவமென்ன பரம்பொருளே!
ஈன்றெடுத்த பிள்ளைகளும் எனக்கே பகையானால்
சான்றோர்க்கு நான் செய்த தவறேதுவோ பரம்பொருளே!
தடம்பார்த்து நான்செய்த சரியான தொழில்கூட
கடன்காரனாக்கியதே! கைகொடுப்பாய் பரம்பொருளே!
ஒரு வேளைச் சோற்றை உட்கார்ந்தே உண்ணுகையில்
மறுவேளைச் சோறெனுக்கு மயங்குவதே பரம்பொருளே!
செய்யாத குற்றமெல்லாம் செய்தே எனச்சொல்லி
பொய்யான வழக்கென்மேல் போடுவதேன் பரம்பொருளே!
எந்தவழக் கானாலும் என்னோடு நீயிருந்து
சொந்தமெனக் காத்து துணையிருப்பாய் பரம்பொருளே!
பஞ்சாட்சரம் சொல்லிப் பழகா திருந்ததற்கு
நஞ்சாய்க் கொடுத்தாய் நீ நானறந்தேன் பரம்பொருளே!
உன்னைத் தவிரஒரு உயிர்த்துணையைக் காணாமல்
எண்ணி வதைகிறேன்! எனைக்காப்பாய் பரம்பொருளே!
கண்ணாடித் துண்டுகளென் காலிலே தைக்கவில்லை
கண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே!
எங்கும் நிறைந்தாயே எவரையும் நீ காப்பாயே
தங்குவதற் கென்வீடு தரமிலையோ பரம்பொருளே!
கங்கையிலே மூழ்கிவரக் காசுபணம் இல்லையென்று
என்கையால் விளக்கொன்றை ஏற்றுகிறேன் பரம்பொருளே!
ஏற்றுகின்ற விளக்குக்கு எண்ணையில்ல என்றக்கால்
ஊற்றுகின்ற நெய்யாக ஓடிவா பரம்பொருளே!
ஊனக்கண் எத்தனைதான் உலகத்தைப் பார்த்தாலும்
ஞானக்குருடனுக்கு நலமேது பரம்பொருளே!
பாலூட்ட வந்தாயே பரிந்தே எனையணைத்து
தாலாட்ட வருவாயா தாயே! பரம்பொருளே!
ஆற்றில் ஒரு காலும் அறியாமை என்பதொரு
சேற்றிலொரு காலுமாகத் திரிகின்றேன் பரம்பொருளே!
எந்தக்கால் வைத்தாலும் ஏதோ தடுக்கிறது
சொந்தக்கால் இல்லை எனத் துணிந்தேன் பரம்பொருளே!
உன்காலை வாங்கி உலாவ மறந்த பின்னர்
என் காலைக் கொண்டு பாப் எது செய்வேன் பரம்பொருளே!
தான்போட்ட கண்ணியிலே தானே விழுந்தது போல்
நான் போட்டு விழுந்தேனே நலந்தருவாய் பரம்பொருளே!
சூதாடித் தோற்றவர்க்கு துணையிருக்க வந்தாயே
வாதாடிக் கெட்டவர்க்கு வழியொன்று காட்டாயோ
அரக்க குலமெல்லாம் அன்றோட ழியவில்லை
இரக்கமில்லார் வடிவாக இன்னும் இருக்குதய்யா!
பாய்விரித்துச் சோறு பல்பேர்க்கும் தந்தவனே
வாய் நிறையும் சோற்றுக்கும் வழிகாட்ட மாட்டாயா!
எத்தனையோ கேள்விகளை எழுப்பி விட்டாய் பூமியிலே
இத்தனைக்கும் நான் ஒருவன் எப்படித்தான் பதில் சொல்வேன்!
துன்பத்தைத் தானே தொடர்தெனுக்கு வைத்தாய்
இன்பத்தை எப்போது எனக்கு வைப்பாய் பரம்பொருளே!
ஐயா நின் பாதம் அடியேன் மறவாமல்
மெய்யாய்த் தொழுகிறேன்! வினை தீர்ப்பாய் பரம்பொருளே!
காவல் ஒரு வில்லாகக் கருணை ஒரு வேலாக
கோவில் உருக் கொண்டாயே குறைதீர்க்க மாட்டாயோ?
தூங்குகிற வேளை நீ தோன்றுவாய் கனவில் என
ஏங்குகிறேன் ஐயா! நீ எப்போது வருவாயோ!
மஞ்சளினைச் சுண்ணாம்பு மணந்தால் சிவப்பது போல
நெஞ்சமெல்லாம் துன்பத்தால் நிறைந்து சிவப்பதென்ன!
பழுதறியாப் பிள்ளை இது பாவமே செய்தாலும்
அழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே!
நெஞ்சறிய ஓர்போதும் நிறைபாவம் செய்ததில்லை
அஞ்சாமற் சொல்கின்றேன் அகம்தானே என் சாட்சி!
மாற்றார் உரிமையை நான் மனமறியக் கவர்ந்திருந்தால்
ஆற்றா தழுவதுதான் அகக்கடமை என்றிருப்பேன்!
இந்துமதச் சாத்திரங்கள் எதையும் பழித்திருந்தால்
பந்துபடும் பாடு படுவதற்குச் சம்மதிப்பேன்!
நற்கோவில் சிலையதனைக் நான் உடைத்துப் போட்டிருந்தால்
தற்காலத் தொல்லைகளைத் தாங்கத் துணிந்திருப்பேன்!
அடுத்தார் மனைவியை நான் ஆசைவைத்துப் பார்த்திருந்தால்
படுத்தால் எழாதபடி பாய் விரித்துக் கிடந்திருப்பேன்!
நல்லதொரு தண்ணீரில் நஞ்சை விதைத்திருந்தால்
கல்லாய்க் கிடப்பது உன் கருணை என நினைத்திருப்பேன்!
தாயை மகனைத் தனித்தனியே பிரிந்திருந்தால்
நாயையே என்னை விட நற்பிறவி என்றிருப்பேன்!
கல்யாண மாகாத கன்னியரைப் பற்றியொரு
சொல்லாத வார்த்தையினைச் சொன்னால் அழிந்திருப்பேன்!
பருவம் வராதவளைப் பள்ளியறைக் கழைத்திருந்தால்
தெருத்தெருவாய் ஒரு கவளம் தேடித் திரிந்திருப்பேன்!
நானறிந்து செய்ததில்லை; நலமிழந்து போனதில்லை;
வாய் திறந்து கேட்கிறேன் வாழவைப்பாய் பரம்பொருளே!
சக்தியுள மட்டில் தவறாமல் நாள் தோறும்
பக்திசெயப் புறப்பட்டேன் பக்கம்வா பரம்பொருளே!
மாடுமனை மாளிகைகள் மலர்த்தோட்டம் கேட்கவில்லை
பாடும்படும் என் நெஞ்சில் பாலூற்று பரம்பொருளே!
தாயும் நீ தந்தை நீ சார்ந்திருக்கும் சுற்றமும் நீ
வாயும் நீ வயிறும் நீ வரமளிக்கும் தேவனும் நீ!
நோயும் நீ மருந்தும் நீ நோவுடன் சுகமும் நீ
ஆயும் குணமளிக்கும் ஆறாவதறிவும் நீ!
இறப்பும் பிறப்பும் நீ இருட்டும் வெளிச்சமும் நீ
மறப்பும் நினைப்பும் நீ மனக்கோவில் தேவதை நீ!
எல்லாமும் நீயே எனைப் பெற்ற பெருந்தாயே
இல்லாதான் கேட்கிறேன் இந்தவரம் அருள்வாயே!
இன்பவரம் தாராமல் இதுதான் உன் விதியென்றால்
துன்பமே இன்பமெனத் தொடர்வேன் பரம்பொருளே!
கண்ணதாசனின் புலம்பலைப் படித்தீர்கள் அல்லவா? இவ்வரிகளை அவர் எழுதும் போது ஆண்டு அனுபவித்து, முடித்து, ஓய்ந்த வயதில் அறிவுக் கனல் கொண்டு வார்த்தைகளை வடித்தார். இந்தப் புலம்பல் எல்லாம் எழுத்தாளன் எழுதுவது. கண்ணதாசன் பிழை செய்து விட்டார். காவியமே, உம் பாடலுக்கு எம் வள்ளுவன் ஒரு பாடலைப் பதிலாக தந்து விட்டாரே? நீங்கள் கவனிக்கவில்லையா? அல்லது மறந்து போனீர்களா?
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்!
விதியின் காரணமாக தோற்றாலும் முயற்சி வெற்றி தரும் என்றாரே வள்ளுவர். மறந்து போனீர்கள் கண்ணதாசன் அவர்களே!
இந்த உடல் உயிரற்று பூமியில் வீழும் வரை எதற்கும் அசைந்து கொடுக்கலாமா? குடும்பத்தைக் காக்க வேற்று நாடுகளில் தங்கி, உள்ளம் குமுறக் குமுற, உற்றாருக்கு உழைப்பதால் துவண்டு விழக்கூடியவரா நாம்? உயிர் பிழைக்க நாடு விட்டு, நாடு விட்டு ஓடி ஒளிந்து கடலலையில் வீழ்ந்து உயிரை விடக்கூடிய சாமானியரா நாம்?
இல்லை...! இல்லை!! நாம் வீரம் செருந்திய வேங்கைகள் அல்லவா? தியாகம் நிரம்பிய தங்கங்கள் அல்லவா? நம் வயிற்றுக்காகவா உழைக்கிறோம்? ஒரு கவளம் போதுமென்றா உழைக்கிறோம்? ஓடுகிறோம்? இல்லவே இல்லை. நமக்கும், நம்மைச் சுற்றி இருப்போருக்கும் அல்லவா உழைக்கிறோம். உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்!
விதியின் காரணமாக தோற்றாலும் முயற்சி வெற்றி தரும் என்றாரே வள்ளுவர். மறந்து போனீர்கள் கண்ணதாசன் அவர்களே!
இந்த உடல் உயிரற்று பூமியில் வீழும் வரை எதற்கும் அசைந்து கொடுக்கலாமா? குடும்பத்தைக் காக்க வேற்று நாடுகளில் தங்கி, உள்ளம் குமுறக் குமுற, உற்றாருக்கு உழைப்பதால் துவண்டு விழக்கூடியவரா நாம்? உயிர் பிழைக்க நாடு விட்டு, நாடு விட்டு ஓடி ஒளிந்து கடலலையில் வீழ்ந்து உயிரை விடக்கூடிய சாமானியரா நாம்?
இல்லை...! இல்லை!! நாம் வீரம் செருந்திய வேங்கைகள் அல்லவா? தியாகம் நிரம்பிய தங்கங்கள் அல்லவா? நம் வயிற்றுக்காகவா உழைக்கிறோம்? ஒரு கவளம் போதுமென்றா உழைக்கிறோம்? ஓடுகிறோம்? இல்லவே இல்லை. நமக்கும், நம்மைச் சுற்றி இருப்போருக்கும் அல்லவா உழைக்கிறோம். உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
என் வாழ்க்கையைப் போல இன்னொருவர் வாழ முடியாது. என்னைப் போல எவரும் போராட முடியாது. என்னைப் போல ஒருவரும் சகித்துக் கொள்ள முடியாது. என்னைப் போல துரோகத்தால், சூழ்ச்சியால் பாதிப்பட்டு இருக்க முடியாது. என்னைப் போல இன்னொருவர் சாதாரண விஷயங்களைக் கூட இழந்திருக்க முடியாது. நாமெல்லாம் அடிக்கடிச் சொல்வோமே, ‘அந்த அவன்’ என் மீது கொள்ளை கொலைவெறியில் இருப்பான் போல. பிறந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அடித்துக் கொண்டே இருக்கிறான். வீழ்கிறேன். அடிக்கிறான் அடியோடு அழிய. மீண்டும் திமிறி எழுகிறேன். அடிக்கிறான். வீழ்கிறேன். உள்ளத்துக்குள் பொங்கிப் பிரவாகமெடுத்து ஆர்ப்பரிக்கும் தன்னம்பிக்கையோடு உடல் துடிக்க மீண்டும் மீண்டும் எழுகிறேன். அடித்துக் கொண்டே இருக்கிறான். மீண்டும், மீண்டும், மீண்டும் எழுந்து கொண்டே இருக்கிறேன். ஒரு நாளும் உள்ளம் சோர்ந்து, உடல் விதிர்த்து உட்கார்ந்திருந்தது இல்லை. நான் அழிந்து போகக்கூடியவன் அல்ல. சாம்பலானாலும் மீண்டும் முளைப்பேன் வேறொரு செடியாக, மரமாக, உயிராக. இயற்கையின் சிந்தாந்தம் அது.
அடுத்த நொடியில் என்ன நடக்கும்? என்று தெரியாத உலகிது. ஏன் சோர்வு அடைய வேண்டும். முட்டாள்களின் தன்னம்பிக்கையற்ற வார்த்தைகளுக்கு ஏன் காது கொடுக்க வேண்டும். பிடிக்காத வாடை என்றால் விலகிச் செல்வது போல, விலகி வெற்றியை நோக்கி உறுதியான அடிகளை எடுத்து வைக்காமல் சோம்பிக் கிடப்பதில் என்ன பயன்? வீணர்களின் வெட்டிப் பேச்சுக்கும், போலிகளின் பொய்யான வாய்ச்சொல்லுக்கும் ஏன் மயங்க வேண்டும்? வீறு நடை போட்டு, எதிரில் வரக்கூடிய துன்பங்களை துவைத்து, வெளுத்து வெற்றியாக்க வேண்டும். எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்!!
சோம்பேறியா சோகத்தில் மூழ்க?
முட்டாளா புலம்பித் திரிய?
எழுந்திருங்கள்!!!
உங்களின் எண்ணத்தை, மனதை எழுப்புங்கள். உடல் கூடவே எழும்....!
முண்டாசுக் கவி பாரதியைப் பாருங்கள். அவன் வடித்த கவிதையைப் படியுங்கள்.
சென்றதினி மீளாது மூடரே நீர்
சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து
கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!
அதுமட்டுமல்ல, எனது ப்ரியத்துக்கு உரிய வீரத்துறவி விவேகானந்தர் வார்த்தைகளைப் படியுங்கள்.
கோழையும் முட்டாளுமே ‘இது என் விதி’ என்பான். ஆற்றல் மிக்கவனோ ‘என் விதியை நானே வகுப்பேன்’ என்று கூறுவான் என்றார் விவேகானந்தர்.
உங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் வரும் துன்பங்களை உதைத்து, உதைத்து உற்சாகமாய் கோல் போடுவோம். துன்பத்தையே வெற்றிப் பந்தாக்குவோம். வாழ்க்கையே இதுதான்....!
நிற்க...!
பதிவு பெரிதாகிப் போனதால், அடுத்தப் பதிவில் உங்களை அதிர வைக்குமொரு உண்மையை அனுபவ உண்மையை எழுதப் போகிறேன்....!
நன்றி : கண்ணதாசனுக்கும், அவரது பதிப்பகத்தாருக்கும்....!
மேலும் கொஞ்சமே கொஞ்சம்...!
ஒரு கடிதம் கீழே !
வணக்கம் ஐயா,
உங்களது நிலம் சம்பந்தப்பட்ட கட்டுரை
படித்தேன். அதுவும் சரியான நேரத்தில் அந்த திருசெந்தில் ஆண்டவரே எனக்கு
தங்கவேலை காட்டியுள்ளதாக நினைக்கின்றேன். சொன்னா நம்ப மாட்டீர்கள். எனது
காதில் வெற்றிவேல் வீரவேல் பாடல் ஒலித்துக் கொண்டுள்ளது. எல்லாம் அவனின்
செயலென்று நினைக்கின்றேன். ஐயா நான் XXXX. நேரில் தங்களை சந்தித்து எனது
பிரச்சினைகள் தீர்க்க பேசவேண்டும். அனுமதி வேண்டும். எனது பெயர் XXXXXXXXX, மொபைல் & வாட்சப் எண் XXXXXXXXXX. உங்களின் பதிலுக்காக
.....
நண்பரே! நாமெல்லாம் வெற்றி பெற மட்டுமே பிறந்தவர்கள். ஊருக்குச் சென்று பத்திரமாகத் திரும்புங்கள். அதுவரை காத்திருக்கிறேன் உங்களுக்காக. சந்திப்போம். பிரச்சினையை உடைப்போம். தூள் துளாக்குவோம்.
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
விரைவில் சந்திப்போம்.....!