குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, April 12, 2019

நிலம் (51) - சப்டிவிஷன் சர்வே எண்களில் ஏமாற்றுகிறார்கள்

பூமி - மனிதர்களின் அத்தனைக்குமான உன்னதம். காற்று, உணவு, உடை இப்படி எல்லாவற்றிற்கும் காரணமான இயற்கைக் கடவுள். அது தன்னைத் தானே ஒரு முறை குலுக்கிச் சிலிர்த்தால் தற்போதைய இந்தியாவின் உன்னத உத்தம பிரதமரும், அம்பானியும், அதானியும் காணாமல் போவர். சாதிகள் போகும், சண்டைகள் போகும், அதிகார மமதை போகும், எல்லாமும் போயே போய் விடும். தான் மட்டுமே உண்மையானவன் என்பது போல, ஒரு பெண்ணிடம் தன் அயோக்கியத்தனத்தைக் காட்டி, அதிகாரத்தினை அடையத் துடிக்கும் அற்பத்தனத்தை, அயோக்கியத்தனத்தை ஆம்பளைத்தனம் என்கிறார்கள் பலர்.

இயற்கையின் முன்னே மனிதர்கள் பதர்களை விடச் சிறியவர்கள். ஆனால் பாருங்கள்! ஒரு ஜான் அளவு இருக்கும் வயிற்றுக்கு, தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை என்னென்ன கொடுமைகள் செய்கின்றார்கள் இவர்கள் என. மலைகளை உடைக்கின்றார்கள், ஆறுகளை தடுத்து தண்ணீரை உறிஞ்சுகின்றார்கள், சாயத்தைக் கலந்து பூமிக்குள் மோட்டார் வைத்து செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்(திருப்பூரில்), இப்படி பூமியை சித்தரவதை செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்ப மனிதர்கள்.

மனித தன்மை கொஞ்சமாவது இருந்தால் ஆற்றில் கிடக்கும் மண்ணை அள்ளி விற்று தன் சுகத்துக்காகவும், பிள்ளைகளுக்கும் சொத்தினைச் சேர்த்து வைப்பார்களா? எல்லாவற்றையும் விற்று, பலரைப் பட்டினி போட்டு சாகடித்து, தான் மட்டும் வாழ்ந்து உயிரோடா இருக்கப் போகின்றார்கள்? என்றைக்கு மனிதன் பிறந்து விழுந்தானோ அன்றைக்கே அவனுக்கு எக்ஸ்பைரி தேதி குறித்தாகி விட்டது. அந்தத் தேதி தெரிந்தால் எந்த அறிவிலிகளும் இத்தனை ஆட்டம் ஆடாதுகள். தேதி தெரியாது. ஆட்டம் போடுகின்றதுகள்.

எத்தனை எத்தனை மதங்கள் இருந்தாலும், எத்தனை எத்தனை நல்ல நூல்கள் இருந்தாலும், கடவுள்கள் இருந்தாலும் மனிதன் தனது வயதான காலத்தில் தான் உணர்கின்றான். எதைச் செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்ற அறிவு இன்றி, இறுதியில் தன் கைமீறி நடக்கும் அத்தனைக்கும் தானும் ஒரு காரணம் என எண்ணி வெம்புகிறான் திரு.அத்வானி போல.

அன்பைத் தவிர, சக மனிதன் மீதான அன்பைத் தவிர இந்த உலகில் வேறு ஏதாவது ஒன்று பெரிதா? சொல்லுங்கள் நண்பர்களே!!!!

சுயமோகிகளாலும், இந்த வாழ்க்கை நிரந்தரம் என எண்ணிக் கொண்டிருக்கும் அற்பர்களாலும் எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் ஏமாற்றப்பட்டு, அல்லல்பட்டு அயராது உழைத்த பொருளை இழந்து, வேதனையில் விழுந்து, மனம் நொந்து போய் இறந்து போகின்றார்கள். 

மீபத்தில் என்னிடம் ஒரு அன் அப்ரூவ்ட் மனையின் சொத்து அப்ரூவலுக்காக வந்தது. தினக்கூலி ஏழை அவர். அவரின் கனவு ஒரு வீடு. அவ்வளவு தான். எளிமையான அவரின் வீட்டு மனையினை அப்ரூவல் செய்வதற்காக, ஆன்லைனில் பதிவு செய்து அப்ரூவலுக்கு லோக்கல்பாடிக்குச் சென்ற போது இந்த மனை பதிவு செய்யப்பட்டிருக்கும் சர்வே எண்ணுக்கு உரித்தான ஆவணங்களைக் கொண்டு வரும் படி கேட்டிருக்கின்றார்கள்.

என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது என்று அவரிடமிருந்த ஆவணங்களைக் காட்டி இருக்கிறார். ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். ஒன்றும் புரியாமல் என்னிடம் வந்தார்.

லோக்கல்பாடியில் அவரின் மனைக்கான மூல ஆவணங்களைக் கேட்டிருக்கின்றார்கள். அவரிடம் இருந்த ஆவணங்களில் அவர் மனை அமைந்திருக்கும் சர்வே எண் இல்லை. விஷயம் விளங்கியதா? ஆனால் பிளான் இருக்கிறது. மூலப்பத்திரங்களை ஆய்வு செய்த போது கிரையம் பெறாத ஒரு பகுதியை சேர்த்து மனையாக போட்டு விற்பனை செய்திருக்கிறார்கள். இவரும் ஒரு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் மனையைக் கிரையம் செய்திருக்கிறார். வக்கீலும் சரி பார்த்துதான் கொடுத்திருக்கிறார்.

வக்கீல் மூல ஆவணங்கள், பட்டாக்கள், கிரையம் ஆவணம், மேப் இவைகளை ஆராய்ந்து இருக்கிறார். எல்லாம் சரிதான். ஆனால் மனை இருக்கும் இடம் வேறொருவருக்கு உரித்தானது என்பதைக் கண்டறிய மறந்து போனார். அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும் எனக் கேட்கத் தோன்றும். அது அனுபவத்தில் வரக்கூடியது. மூளை சூடாகி கொதி கொதியென கொதிக்கும். கவனம் சிறிது பிசகினாலும் தவறாகிப் போகும். ஷார்பான புத்தியுடன் அமைதியான இடத்தில் அமர்ந்து ஆவணங்களை ஆராய்ந்து சரி பார்க்க வேண்டும்.

தனக்கு உரிமையில்லாத இடத்தில் மனை போட்டு விற்றிருக்கின்றார்கள். மனை விற்றவரை இனிப் பிடிக்க முடியுமா? அது சாத்தியமில்லாத ஒன்று. ஒரே வழி வழக்குப் போடுவது மட்டுமே. அவரின் உழைப்பு? அவரின் கனவு? அவரின் வாழ் நாள் ஆசை? எல்லாமும் பறிபோனது.

இந்த மனையில் நடந்திருக்கும் உள்குத்து என்ன தெரியுமா? தவறான சப்டிவிஷனைக் காட்டி மனையினை விற்றிருக்கின்றார்கள். ஆனால் மனை அமைந்திருந்த இடம் வேறு ஒருவருடையது. இதிலும் ஒரு கோல்மால் வேலை நடந்திருக்கிறது. யாரையோ சரிக்கட்டி அந்த சப்டிவிஷனுக்கான பட்டாவில் தன் பெயரையும் சேர்ந்திருக்கிறார் அந்தக் கில்லாடி ஆள்.

சப்டிவிஷன் ஆகும் போது க.ச. எண்.100 என்பது 100/1,2,3 என இடத்துக்கு தக்கவாறு, கிரைய ஆவணத்துக்கு ஏற்றபடி மாற்றம் செய்வார்கள். மேலும் உபபிரிவுகள் 100/3ஏ1, 3ஏ2,3ஏ3 என்று பிரியும். இந்த சப்டிவிஷன்கள் பிரிபடும் போது இல்லாத ஒருவரை பட்டாவில் ஏற்றி பல்வேறு கூத்துகளை அரங்கேற்றுவார்கள் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் ஆட்கள். அவர்களுக்கு பணம். நிலத்தின் உரிமையாளர்களுக்கு துன்பம். பிறரின் துயரம் தானே இன்னொருவருக்கும் வருமானம்.

இடிந்து போய் உட்கார்ந்திருந்தார் என் முன்னே. ”ஏதாவது செய்யுங்களேன் தங்கம்” என்று அரற்றினார். வேதனைதான் உள்ளத்தில் நிறைந்தது. அவருக்கு நியாயம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அவரின் மகிழ்ச்சியான முகத்தை விரைவில் பார்க்கும் நாள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். பெரும் போராட்டம் தான். இருக்கட்டும் போராடிப் பார்த்து விடலாம் என முடிவு செய்து கொண்டு, “கவலை வேண்டாம், சரி செய்து விடலாம்” என்று அவரைத் தேற்றி அனுப்பினேன்.

ஆகவே நண்பர்களே, டிடிசிபி அப்ரூவல் மனைகள் என்றாலும், அன் அப்ரூவ்ட் மனைகள் என்றாலும், நிலங்கள் என்றாலும் சரி கவனமாய் இருங்கள். கவனமாய் இருங்கள். 

வாழ்க வளமுடன்.....!

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.