குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, May 1, 2019

நிலம் (52) - பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையம் செல்லுமா?

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலாளிதான். அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். தொழிலாளி இன்றி பெரும்பான்மை உலகியல் இயக்கம் நடக்காது. அந்த வகையில் மாந்தர் வாழ்வியல் சக்கரங்களை தொழிலாளிகள் சுழல வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

சரி விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

சமீபகாலமாக சுப்ரீம் கோர்ட் பவர் ஆஃப் அட்டர்னி மூலமாக கிரையமோ அல்லது வேறு ஏதாவது ஆவணமோ எழுதப்பட்டு அதன் மூலம் சொத்துக்களின் உரிமை மாற்றம் செய்வது செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்ததாக ஒரு செய்தி வாட்ஸ்சப் மூலம் பலருக்கும் பரிமாறிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்த தீர்ப்பு ஒரு வழக்கிற்காக வழங்கப்பட்டது. அந்த வழக்கில் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை செய்யப்பட்டது செல்லாது என்பது தீர்ப்பு என நினைக்கிறேன். அந்த தீர்ப்பினைத் தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்தால் ஏதாவது ஒரு பதிவில் இணைத்து விடுகிறேன். ஆனால் முழுமையான விசயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்தப் பதிவு எழுதி இருக்கிறேன்.


(இதுதான் எனக்கும் வாட்சப்பில் வந்த செய்தி)

இது பற்றிய உண்மைதான் என்ன? என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். 

சொத்துரிமை மாற்றம் மற்றும் ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி சட்டம் 1882ன் படி பகுதி 5 மற்றும் 54ல், ஜிபிஏ (GPA) மூலம் ஒரு அசையாச் சொத்தின் உரிமையை வேறொருவருக்கு அட்டர்னி மாற்றலாம் எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆகையால் அந்த வகையான உரிமை மாற்றம் செல்லும் ஒன்றுதான் என்பதில் எவருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.

இதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் தேவையில்லை. ஆனால் இந்தப் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையமோ அல்லது லீசோ கொடுக்கப்படும் போது பெரும்பாலானவர்கள் கவனிக்க தவறும் ஒரு சில அம்சங்கள் உள்ளன. அவைகளை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அதைக் கவனிக்காது விட்டால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் உரிமை மாற்றம் ஏற்பட்டிருப்பது செல்லாது போய் விடும் ஆபத்து உள்ளது. அது என்ன அம்சம் என்பதை எழுத இயலாது. உருவாக்கப்படும் ஆவணங்களைப் பொறுத்து வேறுபடும் என்பதால் பொதுவாக குறிப்பிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்ரீம் கோர்ட் அரசாங்கத்துக்கு புதிய சட்டம் இயற்றுங்கள் எனவும், பவர் ஆஃப் அட்டர்னி பற்றிய தெளிவான சட்டம் அவசியம் என்பதற்கான அவசியத்தையும் குறிப்பிட்டது. ஒரு சில இணைய தளங்கள் தலைப்பினை தவறாக குறிப்பிட்டு விட்டன. அதனால் பலரும் கிலி பிடித்தலைந்தார்கள் என்பது உண்மை. ஆகவே அது பற்றிய கவலைகளை விட்டு விடவும். ஆனால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை மாற்றம் செய்யப்படும் போது வெகு கவனமாக இருத்தல் அவசியம். அதற்கு தகுந்த அட்வைஸ்சர்களை அணுக வேண்டியது அவரவர் கடமை.

சுப்ரீம் கோர்ட் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பால் மட்டுமே தீர்ப்பு வழங்கும் அமைப்பு. அதற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. ஒரு சில விஷயங்களுக்கு அது சட்டத்துக்கு உட்பட்டு சில உத்தரவுகளை பிறப்பிக்கலாம். சட்டம் என்பது பல வித உள் விஷயங்கள் உடையவை. வெகு நுணுக்கமானவை. இது பற்றிய ஒரு பதிவினை முன்பே எழுதி இருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் விடுபட்டது வெகு நுணுக்கமான விஷயம் ஆகும். இதை எழுதி இருக்கிறேன். தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எல்லாம் வல்ல கில்லாடிகளுக்கு சட்டத்தினை உடைக்கும் வழி முறைகள் தெரியும். உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் கீழே விகடனில் வந்துள்ள ஒரு செய்தியை அளிக்கிறேன். சட்டத்தின் ஓட்டைகள் மூலம் எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதைத்தான் சட்டத்தின் ஓட்டைகள் என்கிறார்கள். ஓட்டை என்றால் ஏதோ பானை, ஓட்டை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

நெடுஞ்சாலைத் துறையில் அடேங்கப்பா ஊழல்! - எடப்பாடி பழனிசாமி மீது ‘பகீர்’ புகார் - ஜூனியர் விகடன் - 01.05.2019ல் ( நன்றி ஜூனியர் விகடன்) 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ‘யாரை முதல்வராக்குவது’ என்று கூவத்தூரில் கூடி விவாதித்தபோது, எல்லா அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் ‘சமாளிக்கும்’ அளவுக்கு சமத்தர் என்றுதான் எடப்பாடியைத் தேர்வு செய்தது சசிகலா அண்ட் கோ. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எடப்பாடி அந்தளவுக்கு செல்வத்தையும், செல்வாக்கையும் வைத்திருந்ததுதான் காரணம்!

முன்பு எல்லாம் அரசு ஒப்பந்தப் பணிகள் என்றால், 10 சதவிகிதம், 15 சதவிகிதம் என்று அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷன் வெட்ட வேண்டியிருக்கும். அ.தி.மு.க ஆட்சியில் குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, இந்த கமிஷன் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. உடனே, பணிகள் நியாயமாக நடக்கின்றன என்று ஆச்சர்யப்பட வேண்டாம். பழைய ஒப்பந்ததாரர்களுக்கு பெரும்பாலும் பணிகள் தரப்படுவதே இல்லை. பெரும்பாலும் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களே ஒப்பந்தங்களை ‘பறிமுதல்’ செய்துவிடுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டும் இதுதான்.

ஏற்கெனவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்த வழக்கை, சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அசராமல் இப்போது, 652 கோடி ரூபாய் மதிப்புகொண்ட ஒரு சாலை ஒப்பந்தத்தில் பிரமாண்டமான ஊழல் அரங்கேறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘பழனி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டச் சாலைகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கமான மதுரை நிறுவனம் ஒன்றுக்கு, விதிமுறைகளை வளைத்துக் கொடுத்துள்ளனர். இதில் முதல்வரின் அரசியல் உதவியாளரான மணியானவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது’ என்பதே அந்த குற்றச்சாட்டு.

பெயர் குறிப்பிட விரும்பாத சாலை ஒப்பந்ததாரர்கள் சிலர், “சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்த அழைப்பு மார்ச் 5-ம் தேதி விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விவரங்களை ஆன்லைனில் மார்ச் 22-ம் தேதிதான் பதிவேற்றம் செய்துள்ளனர். முன்அனுபவம் குறித்த தகவல்கள் ஏப்ரல் 1-ம் தேதிதான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்க மே 2-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயித்துள்ளனர். முன் அனுபவம் உட்பட முழுமையான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு 45 நாள்கள் அவகாசத்துக்கு பின்னரே ஒப்பந்தத்தை திறக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் ஏப்ரல் 1ம் தேதி கணக்குப்படி முதல் 30 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான விதிமீறலாகும்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதைக் கணக்கிட்டு முன்கூட்டியே ஒப்பந்த அழைப்பை விடுத்தவர்கள், நடத்தை விதிமுறைகள் முழுமையாக விலக்கப்படுவதற்கு முன்னதாகவே, இறுதி நாள் கெடுவையும் குறித்துள்ளனர். ஏன் இந்த அவசரம்? பெரும்பாலான சாலை ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் தேர்தல் முனைப்பில் இருக்கும் போது, சந்தடியில்லாமல் வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன. இதில் ஆர்.ஆர். தவிர்த்து மற்ற இரண்டும் டம்மி நிறுவனங்கள். விதிமுறைகளைத் தளர்த்தி, முதல்வருக்கு நெருக்கமான மதுரை ஆர்.ஆர். இன்ஃப்ரா கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றவர்களிடம், “எல்லா ஒப்பந்தங்களும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படுவதாகவும், இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பே இல்லை எனவும் முதல்வர் தெரிவித்திருக்கிறாரே?” என்றோம்.

“கிடையாது. கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தங்களில், வெறும் 30 கோடிக்குதான் ஆன்லைன் மூலமாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதி எல்லாம், டெண்டர் பெட்டியில்தான் போடப்பட்டன. சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்தம்கூட ஆன்லைனில் கோரப்படவில்லை. டெண்டர் பெட்டியில் போட நாங்கள் செல்லும்போது, குண்டர்களாலும் அதிகாரிகளாலும் தடுக்கப்படுகிறோம். (இது ஒரு ஓட்டை)

மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்த அழைப்புகளில், இயந்திரங்கள் உரிமைகளுக்கான சான்றாவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சாலைப் பணியை மேற்கொள்ள இருபது ரோடு ரோலர்கள் இருப்பதாகக் கணக்கு காண்பித்தால் போதுமானது. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத் துறையின், சாலை ஒப்பந்தங்களில் இயந்திரங்கள் இயங்கு நிலையில் இருப்பதற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர்தான் தரவேண்டும். அவர் யாருக்கும் தரமாட்டார். அமைச்சர் கைகாட்டும் நிறுவனத்துக்கு மட்டுமே தரச்சான்றிதழ் அளிக்கப்படும். மற்ற நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்பில் செல்லும் அவலம் எல்லாம் இங்கு அரங்கேறுகிறது. (இது இன்னொரு ஓட்டை)

ஒப்பந்தம் கோரும் நிறுவனத்தின் நிகர மதிப்பு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் மொத்தத் தொகையில் 20 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், பழனி கோட்ட சாலைகளைப் பராமரிக்க விடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில், இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. 652 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, குறைந்தது 15 கோடியாவது கட்டியிருக்க வேண்டும். ஒப்பந்தம் எடுக்க விரும்பும் ஒரு நிறுவனம், ஒப்பந்தத்தில் கோரியுள்ள பணிகளைப் போன்று பல பணிகளை முன் அனுபவமாக முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்த வகையில் மட்டும் சராசரி ஆண்டு வரவு - செலவுக் கணக்கு, ஒப்பந்த தொகையில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால், பழனி கோட்ட ஒப்பந்தத்துக்கு 260.87 கோடி ரூபாய் வரவு - செலவுகொண்ட பணியை செய்துமுடித்த அனுபவத்தைக் கொண்ட நிறுவனம்தான் ஒப்பந்தம் எடுக்க முடியும். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஆண்டு வரவு செலவு 227.12 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, முன்அனுபவ விதி 25 சதவிகிதமாக தளர்த்தப்பட்டு, 163.05 கோடிக்கு வரவு செலவு இருந்தாலே போதுமானது எனத் தகுதி குறைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.(இது சட்டமீறல், இதை கோர்ட் மூலம் நிரூபித்து டெண்டரையும் டெண்டர் கொடுத்தவரையும் டரியலுக்கு உட்படுத்தலாம்)

இதுபோன்ற பெரிய பணிகளைத் தவிர்த்து, சிறிய ஒப்பந்தங்களுக்கும் 17 சதவிகிதம் கமிஷன் தர வேண்டியிருப்பதாகவும் கூறும் ஒப்பந்ததாரர்கள், ‘‘எந்த ஒப்பந்தப்பணியை எடுத்தாலும், ஆட்சி மேலிடத்துக்கு மொத்த ஒப்பந்தத் தொகையில் 17 சதவிகிதம் கமிஷனாகக் கொடுக்கவேண்டும். அதிகாரிகளுக்கு ஏழு சதவிகிதம், உள்ளூர் அரசியல் பிரமுகர் மற்றும் போலீஸுக்கு இரண்டு சதவிகிதம், ஜி.எஸ்.டி ஐந்து சதவிகிதம் என 31 சதவிகிதத் தொகை இப்படியே போய்விடும். மீதமிருக்கும் 69 சதவிகிதத்தில்தான் பணி செய்யவேண்டும். அதிலும் லாபம் போக, 50 சதவிகிதத் தொகையில்தான் பணியே நடக்கிறது. இதில் எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்? இந்த கமிஷனுக்காகவே 100 கோடி ரூபாய் பெறுமான வேலைக்கு, 200 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் விடப்படுகிறது. விதிமுறைகளுக்கேற்ப நிறுவனங்களைத் தேர்வு செய்யாமல் நிறுவனங்களுக்கேற்ப விதிமுறைகளைத் தளர்த்துவதுதான் இங்கு நடக்கிறது’’ என்றனர். (இந்த கமிஷன் பிரச்சினையை எளிதாக சரிசெய்யலாம். ஆனால் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் அரசியல் செய்ய முடியாது. அரசும் இயங்காது. ஊழல் என்பது வலிக்காமல் செல்லமாக கிள்ளுவது போல இருக்க வேண்டும். ஆனால் இப்போது ஊழல் என்பது பெரும் பள்ளமாக தோண்டி பலருக்கும் தெரிய செய்யப்படுகிறது. ஊழல் இன்றி ஒரு அரசு இயங்க முடியுமா? என்றால் நான் அடித்துச் சொல்வேன் இயங்கவே இயங்க முடியாது. ஊழல் பற்றிய டெஃபனிஷன்கள் பல உண்டு. வாரிசுகளுக்கு பணி வழங்குவது கூட என்னைப் பொறுத்தவரை ஊழல்தான். யாரோ ஒருவரின் தகுதி அவ்விடத்தில் வாரிசு என்கிற முறையில் மறுக்கப்பட்டு விடுகிறது என்பதுதான் உண்மை)

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம், மதுரை பி.ஆர்.பி கிரானைட்ஸ் பழனிசாமியின் உறவுக்காரரான ராமு என்பவருக்கு சொந்தமானது. குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், “எல்லா டெண்டர்களும் ஆன்லைன் மூலமாகவே செய்யப்படுகின்றன. யார் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஒப்பந்தம் அளிக்கமுடியும். தரமில்லாத இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட நிறுவனம் தகுதியுள்ளதா என்பதைக் கண்காணிக்கவுமே தரச்சான்றிதழ் கோரப்படுகிறது. யாருக்காகவும் விதியைத் தளர்த்தவில்லை. இதில் முறைகேடு நடக்கவாய்ப்பில்லை என நீதிமன்றமும் கூறியுள்ளது’’ என்றனர். (இது சட்டம், அதன் ஓட்டைகளை முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ளேன்) சம்பந்தப்பட்ட ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவன தரப்பும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.  

ஊழலுக்கு வழி வகுப்பதாகக் கூறப்படும் தமிழக நெடுஞ்சாலைத்துறையில், தரச்சான்றிதழ் கோருவது தொடர்பாக மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம், “செருப்புக்கேற்ப காலை வெட்டுகிற கதையாக, தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, விதிகளைத் தளர்த்துகின்றனர். முன்பெல்லாம், சாலை புதுப்பிப்புப் பணி என்றாலும், புதிய சாலை போட வேண்டும் என்றாலும் அந்தந்த கோட்டப் பொறியாளர் மதிப்பீடு செய்து, மாநிலத் தலைமைக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டு அந்தக் கோட்டப் பொறியாளரின் கண்காணிப்பில் பணிகள் நடக்கும். பணிக்கான தொகையும் குறைவாக இருக்கும். இப்போது, 38 கோட்டங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் வேலையைத்தான் அரசு செய்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது” என்றார்.

ஊழல் நடக்கிறதென்பது ஊர் உலகத்துக்கே தெரிகிறது. யாரால், எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என்றுதான் தெரியவில்லை!

- ந.பொன்குமரகுருபரன்

குறிப்பு: சிவப்பு வண்ணத்திலும், ஊதா வண்ணத்திலும் இருப்பவை எனது குறிப்புகள். 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.