எனக்கொரு பிரச்சினை இருக்கிறது. சொல் பொறுக்க மாட்டேன். மனதளவில் யாரைப் பார்த்தும் பொறாமையோ அல்லது எரிச்சலோ, கெடு எண்ணமோ எந்தக் காலத்திலும் நினைத்ததும் இல்லை, நினைக்கப்போவதும் இல்லை. இது எனது இயல்பு. இந்த இயல்பின் காரணமாக பல பேரின் அக்கிரமங்களைக் காணும் போது எரிச்சலும், ஆற்றாமையும் ஏற்பட்டு மனது வெம்பி விடும் எனக்கு. கமல்ஹாசனின் மஹாநதி படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். விமர்சனம் படித்தேன். அன்றைக்கு மனதுக்குள் வலித்த வலியில் அப்படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை. அதே போல விக்ரம் நடித்த காசி படத்தைப் பார்க்கச் சென்று பாதியில் எழுந்து வந்து விட்டேன். அந்தளவுக்கு துரோகமும், அக்கிரமங்களும் நிகழும் பட்சத்தில் அதைக் காட்சியாக்க் கூட காண என் மனது விரும்பாது. மன உளைச்சல் அதிகமாகி விடும். சமீபத்தில் அதை நான் பிக்பாஸ் பார்த்த போது அனுபவித்தேன்.
எவிக்சனில் குறைவான ஓட்டுப் பெற்றவரை ஒப்புக்குச் சப்பாணிக் காரணத்தைச் சொல்லிக் காப்பாற்றினார்கள். அன்றைக்கு நடத்தப்பட்ட இந்த அறம் மீறிய செயலால் எனக்கு மனது ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அதை கமல் நியாயப்படுத்தினார் வெகு சாதுரியமாக. கமல்ஹாசனின் பிக்பாஸ் அறம் அவர் மீதான அவ நம்பிக்கையின்மையை உருவாக்கியது. நான் அவர் மீது அவ நம்பிக்கை அடைவதால் அவருக்கு ஒன்றும் இழப்பு இல்லை. நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதால் எனக்கோ இல்லை அவருக்கோ ஒரு பயனும் இல்லை என்பது வேறு விஷயம். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று வெற்று ஜம்பமாகப் பேசிக் கொள்வதில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்திருக்கிறேன். பொருளை முன் வைத்து உலகம் இயங்க ஆரம்பித்ததிலிருந்து யாரும் யாருக்கும் எதையும் இலவசமாகவோ அல்லது தானமாகவோ செய்து விட மாட்டார்கள். பிரதி பிரயோஜனம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. கொடுத்தால் தான் உறவு என்பார்கள். ஒரு சில விதிவிலக்குகளை உடனே முன்னிறுத்தி விடக்கூடாது.
நேற்றைய நிகழ்ச்சியில் கமல் காயத்ரியிடம், நீங்களும் நானும் ஒரே ஜாதி என்பதால் உங்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறேன் நான் என்றுச் சொல்கிறார்கள் என்றார். எனது பிளாக்கில் “அவா” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை ஸ்ரீபிரியா அவர்களுக்கு டிவீட்டிருந்தேன். அது உண்மையில்லை என்பதற்கு உரிய காரணங்களை அவர் தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் போட்டியாளர்களைப் போல உண்மையை மறைத்து நழுவி விடமுடியாது.
ஜூலி என்கிற பெண் என்ன பாவம் செய்தாள்? அவளுக்கு மட்டும் படம் போட்டு சுருக்கென்று ஊசி தைப்பது போல கேள்வி கேட்டாரே? காயத்ரிக்கு மட்டும் படமும் போடாமல், தானும் கேள்வி கேட்காமல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தவர்களைக் கேள்வி கேட்க வைத்து ஏன் நழுவினார்?மோதிரைக் கை அவர்கள் என்று கை காட்டி கழுவுற தண்ணியில நழுவும் மீன் போல் நழுவினார். இந்தச் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் ’அவா’ விற்குத்தான் வருமே ஒழிய பிறருக்கு வரவே வராது.
ஜூலிக்கு படம் போட்டு விளக்கம் கேட்ட கமல், காயத்திரிக்குப் படம் போட்டுக் காட்டவில்லை என்பதற்கான ஒரு மிகச் சரியான காரணத்தை சொல்ல முடியுமா? இந்தக் கனிவு ஏன் இதர போட்டியாளர்களிடம் காட்டவில்லை என்று சொல்வாரா?
தமிழன் என்றொரு வார்த்தையை அவர் நிகழ்ச்சியின் முடிவில் சொன்னார். உலக நாயகன் என்றொரு அடைமொழியைக் கொடுத்தார்களே அப்போது நான் உலக நாயகத் தமிழன் என்று சொல்ல மறந்து விட்டாரா? திடீர் தமிழ்ப்பாசமும் பற்றும் கமல்ஹாசனின் அடுத்த கட்ட நகர்வினைக் காட்டுகிறதா?
பிக்பாஸில் இருப்போர்களிடம் கேள்விகள் கேட்டார்கள். ஒருவர் கூட உண்மையைப் பேசவே இல்லை. வையாபுரி மட்டும் ஆமாம் நான் பாட்டுப் பாடினேன், தவறுதான் என்று சுஜாவிடம் மன்னிப்புக் கேட்டார். கூட்டாகச் சேர்ந்து கொண்டு ஒருவரை ஏமாற்றுவது, ஃபன்னிக்காகத்தான் செய்தோம், அது மனதை ஹர்ட் செய்து விட்டால் மன்னித்து விடுங்கள் என்று கொலை செய்து விட்டு செத்துப் போனவரிடம் மன்னிப்புக் கேட்பது போல பிந்து மாதவி சுஜாவிடம் கேட்டார்.
டிவி பார்ப்பவர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கு ஒருவரும் உண்மையானப் பதிலைச் சொல்லவே இல்லை. காயத்ரி உண்மையைப் பேசவே இல்லை. ஹாட்ஸ்டாரில் அந்தப் பகுதி உள்ளது. மீண்டும் பாருங்கள். போலியாக நடித்தே பழக்கமானவர்களுக்கு உண்மை பேசுவது என்றால் மறந்து போய் விட்டது என்றே நினைக்கிறேன். அந்த விஷயத்தைக் கூட அவர் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் சினிமாக்காரர்கள் அல்லவா?
சினிமா ஹீரோக்களை உண்மையான ஹீரோக்கள் என்று நம்பி நம்பியே தன் சுய கவுரவம், இனம், மொழி, செல்வம், கலை, கலாச்சாரம் அனைத்தையும் இழந்து நிற்கும் எம் தமிழர்களை ஆள்வதற்கு அத்தனை தகுதியும் கமலிடம் இருக்கிறது என்று உள்ளம் சொல்கிறது. இந்தச் சாமர்த்தியமும், பிறரை தான் சொல்வது சரிதான் என்று நம்ப வைக்கும் சாணக்கியத்தனமும் கமல்ஹாசனுக்கு உள்ளது. ஆகவே அவர் தமிழகத்தினை ஆள சரியான ஆள் என்றே நினைக்கிறேன். ஏமாறுவது என்பது தமிழர்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம். தமிழர்களின் மரபணுவில் சினிமாக்காரர்கள் தான் நம்மை ஆள வேண்டும் என்று பதிவாகி விட்டது. மரபணுவை இனி மாற்றவெல்லாம் முடியாது. ஆகவே கமல்ஹாசன் தமிழகத்தின் சி.எம் ஆக வரலாம். மறக்காமல் காயத்ரியை உள்ளாட்சித்துறை அமைச்சராக்கி விடுங்கள். அது ரொம்பவும் முக்கியம்.