குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, February 22, 2017

நிலம் (35) - கோவை ஏர்போர்ட் விரிவாக்க நிலமெடுப்பு

சமீபத்தில் எனது நண்பரின் மூலமாக ஒரு நபர் லீகல் ஒப்பீனியனுக்காக அணுகினார். எளியவர். இருக்க ஒரு வீடு வேண்டுமென்பதற்காகப் பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்து வைத்து சமீபத்தில் ஒரு இரண்டு பெட்ரூம் கட்ட நிலம் வாங்கிட முனைந்திருக்கிறார்.

நில உரிமையாளருக்கு கடன் பிரச்சினை இருப்பதால் மார்கெட் விலையில் இருந்து சல்லிசாக கொடுக்க முன் வந்திருப்பதாக புரோக்கர் மூலம் தெரிய வந்து அந்த நிலத்தை வாங்கிட அட்வான்ஸ் போட்டு விட்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.

ஆவணங்கள் எல்லாம் மிகச் சரியாக இருந்தன. இருந்தாலும் மனதுக்குள் குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது. என்னவென்று அறியமுடியவில்லை. ஒரு வேலை நிமித்தமாக ஏர்போர்ட் வரையிலும் செல்ல வேண்டி இருந்தது. அப்போது ஏர்போர்ட் பகுதி உப்பிலிபாளையம் கிராமத்தில் வருவதாக பேசிக் கொண்டிருந்தார்கள். பளிச்சென்று எனக்குள் வெளிச்சமடிக்க வீடு வந்து சேர்ந்து அவசர அவசரமாக ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட சர்வே எண்களைப் பார்த்தேன். அதே தான். அவரை வரச்சொல்லி நிலம் கையகப்படுத்தும் அரசாணையைக் கொடுத்து அட்வான்ஸை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன். ஆள் மகிழ்ச்சியுடன் கொஞ்சம் கூடுதலாகவே கட்டணத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார். இந்த ஆர்டர் இந்த வருட ஆரம்பித்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. 

சமீபத்தில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலமாக ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு உப்பிலிபாளையம் கிராமத்தில் கையகப்படுத்திய சர்வே எண்களின் விபரம் கீழே இருக்கிறது. பயனடைந்து கொள்ளுங்கள்.

கோயமுத்தூர் மாவட்டம், கோயமுத்தூர் தெற்கு வட்டம், உப்பிலிபாளையம் கிராமத்தில் சர்வே எண்கள்: 

321/3, 
322/1பி, 3பி,
333/2பி பார்ட்,
334/2பி பார்ட்,
332/2 பார்ட்,
332/3 பார்ட்,
332/4ஏ பார்ட்,
335/1 பார்ட்,
337/4 பார்ட்

ஆகிய பழைய சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 22 செண்ட் அளவு கொண்ட நிலம். இதன் தற்போதைய டி.எஸ். நம்பர், உரிமையாளர்களின் பெயர்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவும். 

Monday, February 20, 2017

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்

இந்திய அரசியலும், அரசும் அதன் இயங்கும் விதத்தையும் பற்றியும் எழுத ஆரம்பித்தால் வாழ்க்கையே வெறுத்துப் போய் விடும். அரசமைப்பியல் அந்தளவுக்கு கேடுகெட்டதாய் ஆகி விட்டது. இனி மாற்றம் வரும் என்பதெல்லாம் நடக்கும் என்று எவரும் நம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும் மாற்றம் ஒன்றே மாறாதது என்றொரு இயற்கைச் செயல்பாடு இருக்கிறது என்பதால் ஓர் அணுவத்தளவும் நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. ஆயாசமாக இருந்தாலும் அந்த நம்பிக்கை தரும் ஊக்கம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

இந்தியாவில் தென் தமிழகம் மட்டுமே மனிதர்கள் வாழக்கூடிய தட்ப வெப்ப நிலைகளுக்கு தகுந்ததாகும். தென் தமிழகத்தில் மட்டுமே ஆன்மீகம் தழைத்திருக்கிறது. உலகிற்கே உயர்வு வாழ்வு நெறி காட்டிய தமிழும், தமிழர்களும் கலை மோகம் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தின் அடி வேரினையே பிடுங்கி எறிந்து கொண்டிருக்கின்ற அவக்கேடு எந்த உலகத்திலும் உள்ள எந்த ஒரு இனத்திலும் நடக்காத ஒன்று. தமிழ், தமிழ் என்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவார்கள். தமிழர்கள் பாரம்பரியம் என்பார்கள். ஆனால் வீட்டிலோ ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஜீன்ஸ் உடைகள், சல்வா துப்பட்டாக்களை உடுத்துவார்கள். மலையாளத்துக் காரர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். ஓணம் பண்டிகைகளில் பாருங்கள். 

ஆனால் தமிழர்களோ தமிழ் பண்டிகைகளின் போது என்ன உடுத்துவார்கள்? வேஷ்டி எங்கே போனது? சேலை எங்கே போனது? தாவணிகள் எங்கே சென்றன? தானும் கெட்டும் தன் இனத்தையும் கெடுத்துக் கொண்டு வாழும் ஒரு இனம் இந்த உலகில் இருக்கிறதென்றால் அது தமிழினம் மட்டுமே. இனி எந்தக் காலத்தில் தமிழர்கள் உருப்பட்டு உருப்படிக்கு வருவார்கள் என்பதெல்லாம் நடக்கக்கூடிய ஒன்றா? தன் இனத்துக்கு ஒரு அமைப்பினை உருவாக்கி தன் இனத்தையும் தன் மொழியையும் வளர்த்து வரும் பிராமணர் சங்கம் போல தமிழர்கள் தங்களையும் தங்கள் மொழியையும் வளர்த்திட வேண்டாமா? 

தமிழர்கள் எங்கே வளர்க்கின்றார்கள்??? குறுந்தாடிகளைத்தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மலைகள் இணையத்தில் வெளியான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம் கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். படித்து வையுங்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்றுமுகம்


பதினைந்தாயிரம் பேர் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியாமலே யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளிவந்த விஷக்காற்றினால் உயிரை விட்டனர். லட்சக்கணக்கான பேர் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டனர். மூளை வளர்ச்சி குன்றியும், கண் போயும், இன்னும் சொல்ல முடியாத நோய்களுக்கெல்லாம் ஆட்பட்டு இன்றும் நோயின் பிடியில் சிக்கி உயிரோடு வேதனைப்பட்டு வருகின்றனர். ஆலையின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தின் முதல் குற்றவாளி ஆண்டர்சன். மற்ற குற்றவாளிகள் இந்த ஆலையின் நிர்வாகத்திலிருந்தவர்களும், டெக்னீஷியன்களும். இந்த வழக்கு முதல் குற்றவாளி இல்லாமலே நடந்து கொண்டிருந்தது.

இந்தியாவையே உலுக்கிய இந்தப் படுபயங்கர கொலைகளுக்கான தீர்ப்பு இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட போது, இத்தீர்ப்பினைப் பற்றி வட மாநில மீடியாக்களில் சூடான விவாதங்கள் நடத்தப்பட்டன. தீர்ப்பு வெளியான அன்று ஆண்டர்சன் உயிரோடு இருந்தார். அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று டிவிக்கள் கண்டுபிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அவரை கைது செய்யக்கூட இந்திய அரசால் முடியவில்லை. இதே ஒரு சாதாரணன் என்றால் சட்டமும் சட்டத்தின் காவலர்களும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

இந்த தீர்ப்பை கூர்ந்து அவதானிக்கும் போது நெஞ்சை உலுக்கும் சில உண்மைகள் நிர்வாணமாக வெளிப்படுகின்றன. இந்த உண்மைகள் சாதாரண மக்களிடையே இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்ற கேள்விக்குறி எழுவதில் வியப்பேதும் இல்லை. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற மாயையினால் ஆளும் அதிகார வர்க்கமும் அதற்கு துணையாக இருக்கும் கோடீஸ்வரர்களும் எவ்வாறெல்லாம் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் அப்பட்டமாகத் தெரியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் இந்தியப் பிரஜைகள் என்று சட்ட மேதை அம்பேத்கார் எழுதிச் சென்றார். ஒரு நீதிபதி நில மோசடியில் சிக்குகின்றார். அரசு புறம்போக்கு நிலத்தை தன் பதவியை வைத்து கபளீகரம் செய்கிறார். பொதுமக்களை அந்த நிலத்திற்குள் வர விடாமல் தடுக்கிறார். மீடியாக்களில் இந்த விஷயம் வெளிப்பட்ட பிறகு அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கின்றது. விசாரணை செய்து அந்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்துள்ள விஷயம் பற்றி அறிக்கை அளிக்கின்றது. ஆனால் சட்டத்தை அமுல் படுத்தி வரும் உச்ச நீதிமன்றம் சர்ச்சையில் சிக்கியவரை வேறு ஊருக்கு மாறுதல் செய்கிறது. சர்ச்சையில் சிக்கியவர் பணி நாள் முடிவடையும் வரை நீதிபதியாகத்தான் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அரசு நிலத்தை தன் அதிகாரத்தால் கபளீகரம் செய்யும் நீதிபதியைத் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இந்த நீதிபதி தண்டிக்கப்பட கூடியவர் என்றால் அது ஏன் இன்னும் செய்யப்படவில்லை? இந்திய நீதிபதிகள் தங்களைச் சட்டத்திற்கும் மேலானவர்களாக, கடவுளாக கருதிக் கொள்கிறார்கள் என்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும் இதற்கு முன்பு நடந்த சில சம்பவங்கள் மூலமாக தெரிய வருகிறது. அதாவது நீதிபதிகள் விஷயத்தில் அவர்கள் கொலைக் குற்றமே செய்தாலும் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பது மற்றொரு உண்மை என்பதை இவ்விடத்தில் புரிந்து கொள்க.

1976ல் ஜஸ்டிஸ் கே. வீராச்சாமி மேல் சிபிஐயினால் பதிவு செய்யப்பட்ட கரப்ஷன் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலே 108 எம்பிக்கள் ஒன்று சேர்ந்து திரு ஜஸ்டிஸ். கே.வீராச்சாமியின் மருமகன் திரு ஜஸ்டிஸ் ராமசாமி மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக நடவடிக்கை எடுக்க கையெழுத்திட்ட சம்பவங்களையும் பத்திரிக்கைகள் வாயிலாக நாம் அறியலாம். இந்திய நீதிபதிகள் சில பேர் மீது இருக்கும் வழக்குகளை மெயில் டுடே என்ற பத்திரிக்கை 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி அன்று கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. கட்டுரையினை இந்த இணைப்பில் படிக்கலாம்.
ஒரு நீதிபதி இரு நீதிபகள் என்று இல்லை. ஊழல் வழக்கிலும் மற்ற வழக்குகளிலும் எண்ணற்ற இந்திய நீதிபதிகள் சிக்கினார்கள். இது பற்றிய கட்டுரைகள் பல பல பத்திரிக்கைகளில் வெளி வந்தன. ஆனால் சட்டத்தினால் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஓய்வு பெற்று இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஓய்வூதியம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது போன்ற குற்றச்செயல்களில் சாதாரணன் ஈடுபட்டால் அதே சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏன் முதலில் நீதிபதிகளைப் பற்றி எழுதுகிறேன் என்றால் சட்டங்களை அமுல் படுத்துவதும், சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதும் நீதி மன்றங்கள்தான். ஆனால் நீதிமன்றத்தின் தலைவர்களான நீதிபதிகளாலே சட்டங்கள் மீறப்படுவது என்பது சட்டத்திற்கே சட்டம் எதிரியாக இருப்பது போன்றது. ஜனநாயக நாடான இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்வதில் சிறு துளி உண்மை இருக்கிறதா என்றால் நம்புவது கடினம். அடுத்து மற்றொரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

அடுத்து யூனியன் கார்பைடு ஆலையின் அதிபர் ஆண்டர்சன், ஆலையின் அலட்சியத்தால் நடந்த விபத்திற்குப் பிறகு அரசு செலவிலே, அரசு விமானத்திலே, முதலமைச்சரின் ஆலோசனையின் படி, காவல்துறையினரின் பாதுகாப்போடு அவரது சொந்த நாட்டிற்கு எந்தவித இடையூறும் இன்றி அனுப்பி வைக்கப்படுகிறார். அவர் இந்தியாவில் இருந்தால் சட்ட ஒழுங்கு அமைதிக்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று காரணம் சொன்னார் அன்றைய மாநில முதலமைச்சர் திரு.அர்ஜூன் சிங். ஒருவரால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் அவரைக் கைது செய்வார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஆண்டர்சன் விசயத்தில் நடந்த சம்பவம் அவரைப் பாதுகாக்க மட்டுமே என்பது தான் உண்மை. பதினைந்தாயிரம் இந்திய மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், கொலைக்குக் காரணமானவரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் துணிந்திருக்கிறார். இவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் நம்பிக்கைக்கு இவர் செய்திருக்கும் துரோகம் என்னவிதமானது என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் ஒரு ஓட்டுக் கூட போடாத மாபெரும் கோடீஸ்வரனைப் பாதுகாக்க துணிந்த முதலமைச்சர் ஏழைகள் கொல்லப்பட்டது குறிந்து சிறு வருத்தமும் இன்றி செயல்பட்டதை எண்ணினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மறு முகம் பற்றிய நிர்வாணமான உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

தீர்ப்பு வெளியிட்ட நாளன்று அமெரிக்காவில் வசதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வரும் ஆண்டர்சனை, நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை சிபிஐயினால் கைது செய்ய முடியவில்லை. அவர் இருக்கும் இடத்தையும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது. அதன் பிறகு அவரை இந்தியா கொண்டு வர முயற்சிக்கப்படும் என்று சொல்கிறார்கள் ஆட்சியாளார்கள். ஆனால் சமீபத்தில் ஆண்டர்சன் இறந்தே போய் விட்டார். ஆண்டர்சனின் அலட்சிய நிர்வாகத்தால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஒன்றுமறியாத அப்பாவிகள். அவர்கள் செய்தது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம். ஏழைகள் சொல் அம்பலம் ஏறாது என்ற பழமொழிக்கு ஏற்ப நீதிமன்றமும் 26 ஆண்டுகள் கழித்து வழங்கிய தீர்ப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையின்மையும், ஆளும் அதிகார வர்க்கத்தினரின் பாசம் எந்தப்பக்கமாக இருக்கிறது என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பதினைந்தாயிரம் உயிரைப் பறிக்க காரணமாயிருந்தவர்களை, ஜாமீனில் செல்லக்கூடிய வகையில் தீர்ப்பு வழங்கி இருப்பது வழக்கையே இல்லாமல் ஆக்கும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். இருபத்தைந்தாயிரம் ரூபாய் ஜாமீன் தொகை செலுத்தி குற்றவாளிகள் அனைவரும் விடுதலையாகி விட்டார்கள். இது தான் ஏழைகள் சம்பந்தப்பட்ட வழக்கின் நிலைமை.

மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 150 பேர். சட்டம் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொண்டது? வழக்கு விசாரணையை ஒரே வருடத்தில் முடித்து தீர்ப்பும் வழங்கி விட்டது. ஏனென்றால் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தாக்கப்பட்டது இந்தியக் கோடீஸ்வரரின் ஹோட்டல். அதனால் வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விடட்து. யூனியன் கார்பைடு ஆலையினால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஏழைகள் கொல்லப்பட்டதற்கு தீர்ப்பு 26 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கின் தீர்ப்போ நகைப்புக்கிடமான ஒன்றாகும்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இரண்டு வழக்குகளிலும் தீர்ப்பு வெளியிடப்பட்ட நாட்கள் ஏன் வேறுபட்டதாக இருக்க வேண்டும்? நீதிபதிகளை சட்டம் ஒன்றும் செய்யாது. பணக்காரர்களை சட்டம் ஒன்றும் செய்யாது. அரசியல்வாதிகளை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அதிகாரவர்க்கத்தினரை சட்டம் தீண்டிக்கூட பார்க்க முடியாது என்றால் பின்னர் ஏன் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று சொல்கின்றார்கள்? ஏழைகளைக் கட்டுப்படுத்தவும், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கவும் தான் சட்டம். ஏழைகள் சட்டத்தை மீறக்கூடாது என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமானதா? சட்டத்திற்கு வேறு முகங்களும் இருக்கின்றன. மீண்டும் இங்கு ஒரு எழுத்தாளரின் எழுத்தை மேற்கோள் காட்டி பத்தியை முடிக்கிறேன். ”ஏழைகள் அதிகாரவர்க்கத்தினரின் இரக்கத்தின் பால் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்”.

Sunday, February 19, 2017

சசிகலா விடுதலையாக இயலுமா? மீண்டும் ஓர் அலசல்

சசிகலா தீர்ப்பு - விடுதலை அலசல் பற்றி எழுதிய ஒரு சில மணிகளில் பல நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்தது. சொல்லி வைத்தாற் போல பெரும்பாலும் சசிகலாவை எதிர்த்தே பேசினார்கள். அது அவர்களின் பிரச்சினை. 

மீடியாக்கள் கட்டமைக்கும் பிம்பத்தை வைத்து ஒருவரை குற்றவாளி, நல்லவர் என்று அனுமானித்துச் செயல்படும் போக்கு உலகெங்கும் இருக்கும் வழக்கமான ஒன்று. செய்தி தாள்களும், டிவி சானல்களும் இல்லாத காலங்களில் இருந்த நிம்மதி இன்று மக்களுக்கு இல்லை. அது போகட்டும் ஒரு பக்கம்.

என்னிடம் பேசிய அனைவரும் சொல்லி வைத்த மாதிரியே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்குத் தெரியாத ஒன்றா உங்களுக்குத் தெரிந்திருக்கும்? என்றே கேட்டார்கள். எனக்குத் தெரியும் தெரியவில்லை என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. சட்டப்படியான வழிகள் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்று ஆராய்வதில் தான் எனக்கு ஆர்வம். அதற்கு பிரபலமான குற்ற வழக்கை ஆதாரமாக வைத்திருக்கிறேன். 

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் என்ற கதைகளை எழுதியவன் அடியேன். விருப்பு, வெறுப்பின்றி ஒரு விஷயத்தை என்னால் அறிய இயலும். வாழ்க்கை என்னை பக்குவப்படுத்தி இருக்கிறது. ஆதரவு தெரிவிப்பதும், பின்னர் விலக்கி கொள்வதும் அதனால் பலனடைவதும் அரசியல் சார்ந்தவை. ஒரு விரல் நீட்டி ஒருவனைக் குற்றவாளி என்கிற போது மூன்று விரல்கள் குற்றவாளி என்றுச் சொல்கிறவனை நோக்கிக் நீட்டிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகின்றார்கள். ஆக தீயவர்கள் என்று எவரையும் விரல் நீட்டிட முடியாது என்பது உண்மை.

எது தர்மம் என்று கண்டுபிடிக்க சாதாரண மனிதனால் முடியவே முடியாது. தர்மத்தின் பாதை தனை கண்டறிவது வெகு சூட்சுமமானது. 

ஜெயலலிதா இறந்து போனது அவர் செய்த தர்மத்தின் பலன் என்று அறிகிறேன். அவர் அனைவருக்கும் உணவிட்டார். யார் பணத்தில் என்பதை ஆராய்ச்சி செய்வதை விட அவர் மூலம் என்பதுதான் இங்கே முக்கியம். அன்னதானத்தின் பலன் அவரை அவருக்கு நேர இருந்த அவமானத்திலிருந்து விடுபட வைத்திருக்கிறது. முதலமைச்சராக இருந்து நோயினால் இறந்து போனார். தர்மம் அவருக்கு நேர இருந்த அவமானத்திலிருந்து அவரைக் காப்பாற்றி விட்டது என்றே என் மனது நினைக்கிறது. அவர் இறக்கும் போதும் முதலமைச்சராகத்தான் இருந்தார். எப்படிச் செத்தார்? அதன் சர்ச்சை என்றெல்லாம் போகாதீர்கள். இறந்து விட்டார் அவ்வளவுதான் விஷயம். முதலமைச்சராக இருந்து ஜெயிலில் அடைபட்டு நான்காண்டுகள் தண்டனை பெற்று ஜெயிலில் கிடப்பது என்பது அவரின் மன நிலையை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்று நினைத்துப் பாருங்கள். 

இறைவனின் தர்மம் என்கிற நூலில் கட்டப்பட்ட மனிதன் எப்போதும் தர்மத்தின் பால் கட்டுண்டவனே. ஏனென்றால் பிறக்கும் போதே இறக்கும் வரம் வாங்கி வந்தவன் மனிதன்.

சரி வழக்கு விபரத்துக்கு வந்து விடுகிறேன்.

அடியேன் எழுதிய 547 பக்கத்தீர்ப்பு ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் விடுதலையாக சாத்தியமா? ஓர் அலசல் பதிவுக்கு அட்சாரம் சேர்க்கும் விதமாக ஜூனியர் விகடனில் வெளியான ஒரு பத்தி சாட்சியம் கூறுகிறது.

இதோ அந்தப் பத்தி. ( நன்றி ஜூனியர் விகடன்)

1991-1996 வரை நடைபெற்ற ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகளை எந்தெந்த வக்கீலிடம் கொடுப்பது என்ற மீட்டிங்கின் போது நடைபெற்ற சம்பவம் பற்றி ஜூனியர் விகடனில் வெளியானது கீழே இருக்கிறது.

===============================================================

‘யார் யார் என்னென்ன வழக்குகளை எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை ஆலோசித்துச் சொல்லுங்கள்’’ என்றார் ஜெயலலிதா.  

வழக்கறிஞர்கள் ஒவ்வொருவராக கருத்துகளை முன்வைத்தார்கள். மேஜையின் இன்னோர் ஓரத்தில் உட்கார்ந்திருந்த வழக்கறிஞர் ஒருவர், ‘‘சவாலான வழக்குகளைக் கையாளும் பிரபல வழக்கறிஞர்கள்கூட ஜெயிக்கக் கூடிய வழக்குகள் மீதுதான் கண் பதிப்பார்கள். இது சாதாரண வழக்கறிஞர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஜெயிக்கக் கூடிய டான்சி வழக்கை நான் எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார். 

அத்தனை பேரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. அந்த வழக்கறிஞர், என்.ஜோதி. ஜெயலலிதா ஆச்சர்யத்தோடு பார்த்தார். ‘‘அரசு நிலத்தை முதல்வரே வாங்கியதாகச் சொல்லி டான்சி வழக்கைப் போட்டிருக்கிறார்கள். இதை வைத்து என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க முடியும் என தி.மு.க-வே நம்பிக் கொண்டிருக்கும் வழக்கு அது. அந்த வழக்கில் எப்படி ஜெயிக்க முடியும் என நம்புகிறீர்கள்?’’ எனக் கேட்டார் ஜெயலலிதா. 

‘‘டான்சி வழக்கு ரொம்ப சிம்பிளான வழக்கு. நாம் ஜெயிப்பதற்கான நிறைய ஸ்கோப் இருக்கிறது’’ என அடித்துச் சொன்னார் ஜோதி. ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்’’ எனக் கேட்ட ஜெயலலிதா, தனது பக்கத்தில் இருந்த பி.ஹெச்.பாண்டியனை எழுப்பிவிட்டு அங்கே ஜோதியை அமர வைத்தார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றைப் புரட்டிய ஜோதி, அதை ஜெயலலிதாவிடம் காட்டினார். ‘‘கேரளா பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு சர்க்குலர் ஒன்றை அனுப்பி, ‘அனைத்துப் பள்ளிகளிலும் காலையில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும்’ எனச் சொன்னது. ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டபோது ஓரமாகப் போய் நின்று கொண்டார்கள். ‘ஜெகவோ மதத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள். தேவனை மட்டுமே வழிபடுவோம். தேசிய கீதத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், என் பிள்ளைகள் அதைப் பாட மாட்டார்கள். அது எங்கள் மதத்துக்கு எதிரானது’ என அந்த பிள்ளைகளின் தந்தை பிஜு இம்மானுவேல் பள்ளிக்குக் கடிதம் அனுப்பினார். அதைப் பள்ளி நிர்வாகம் ஏற்காமல், மாணவர்களைப் பள்ளியைவிட்டு நீக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரளா அரசு வெற்றி பெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் பிஜு இம்மானுவேல் அப்பீல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘தேசிய கீதம் பாடம் வேண்டும் என கேரளா அரசு சொன்னது சட்டம் அல்ல. அது சுற்றறிக்கைதான். நன்னடத்தை விதி, சட்டம் ஆகாது’ என பிஜு இம்மானுவேலுக்குச் சாதகமாக 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தீர்ப்பளித்தது’’ எனச் சொல்லி முடித்த ஜோதி, ‘‘அரசு விற்பனை செய்யும் ஆவின் பாலை அரசு ஊழியர்கள் வாங்கக்கூடாது எனச் சொல்ல முடியுமா? அரசு நிலத்தை அரசு ஊழியர் வாங்கக் கூடாது என்பது நன்னடத்தை விதிதான். அது சட்டம் அல்ல. அதனால் டான்சி வழக்கில் நாம் ஜெயிக்க முடியும்’’ என்றார் ஜோதி.  

சசிகலா ஜாதகம் - 17 தொடரில் ஒரு பார்ட்
==============================================================

இதைத்தான் நான் முன்பு எழுதி இருந்தேன். இப்போது நான் எழுதி இருப்பதற்கும் டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்றதும் உங்களுக்கு நினைவில் வந்து விடும் என்று நினைக்கிறேன். இந்தப் புத்திசாலித்தனம் தான் வேண்டும். டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற்றது சட்டப்படி சரியானது அல்லவா?

அடுத்து இன்னொரு வெகு முக்கியமான பாயிண்டினை உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதுவும் ஜூனியர் விகடனில் வெளிவந்த ஒரு பத்தியில் வெளியாகி இருக்கிறது. அது கீழே,

================================================================
‘‘ஜெயலலிதாவின் கணக்கில் வராத பணத்தை வைத்து, மற்ற மூவரும் நிறைய நிறுவனங்களைத் தொடங்கினார்கள். ஒரே நாளில் பத்து நிறுவனங்கள் தொடங்கப்பட்ட வரலாறும் உண்டு. மற்ற மூவருக்கும் வேறு எந்த வருமானமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் தொடங்கிய இந்தப் பல நிறுவனங்களுக்கு, சொத்துக்களை வாங்குவதைத் தவிர வேறு எந்த பிசினஸும் இல்லை. ‘இவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தது’ என ஜெயலலிதா சொல்ல முடியாது. அவருடைய வீட்டு முகவரியை வைத்தே பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. வங்கிக் கணக்குகளில் பணம் போடும்போது, எண் 36, போயஸ் கார்டன் என்ற முகவரியைக் குறிப்பிட்டே பணம் செலுத்தியிருக்கிறார்கள். ரத்த உறவாக இல்லாதபோதும், ஜெயலலிதாவின் வீட்டில்தான் இவர்கள் தங்கியிருந்தார்கள். அதனால் எல்லா குற்றங்களிலும் எல்லோருக்கும் பங்கு உண்டு’’ எனத் தெளிவாகத் தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குன்ஹா விதித்த அதே தண்டனையை உறுதி செய்தார்கள்.
=================================================================

இது போன்ற வழக்குகளில் எண்ணற்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தத் தீர்ப்புகளைப் படித்துப் பார்த்து எங்கோ மறைந்து கிடக்கும் அந்த ஒரு பாயிண்டினைப் பிடித்தால் வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு மொத்தமாக முடிக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. 

யார் அதைச் செய்வார்கள் என்று பார்ப்போம்? 

பணம் வந்த வழி என்ன என்று இதுவரை ருசுப்படுத்தப்படவே இல்லை. பதவியில் இருந்ததால் முறைகேடாக வந்த பணம் என்றால் அது எப்படி? அதற்கு என்ன ஆதாரம்? அந்தப் பணம் அதிகாரத் துஷ்பிரயோகத்தினால் வந்தது என்று ருசுப்படுத்தப்பட்டதா? இந்த வழக்குகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்ற எண்கள் சரியானவைதானா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன? எல்லாவற்றிற்கும் கேள்விகள் தேடினால் விடை கிடைத்தாலும் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.

 அது தர்மத்திற்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

Thursday, February 16, 2017

547 பக்கத்தீர்ப்பு ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் விடுதலையாக சாத்தியமா? ஓர் அலசல்

முதலில் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். நான் யாருக்கும் ஆதரவாளனும் இல்லை, எதிரியும் இல்லை. தர்ம நியாயங்களை நம்பும் ஒரு சாதாரணன். தர்மத்தின் மீது வெகுவான நம்பிக்கை உள்ளவன். ஆகவே இதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள்.

நேற்று விடிகாலைப் பொழுது 3 மணியிலிருந்து சுப்ரீம் கோர்ட் சசிகலா சொத்துக்குவிப்பு விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பினை வாசிக்க ஆரம்பித்தேன். தமிழகத்தின் வரலாற்றில் முக்கியமான ஒரு தலைவரை குற்றவாளி எனக் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு அது. குன்ஹா அவர்களின் தீர்ப்பினையும் படித்துள்ளேன். குமாரசாமி அவர்களின் தீர்ப்பினையும் படித்திருக்கிறேன். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு என் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.

ஜெயலலிதா மறைந்து விட்டார். ஆனாலும் அவரின் வரலாற்றில் அந்தக்கறை படிந்து இருக்கும். இனி அவருக்காக கோர்ட்டில் எவரும் வாதாடப்போவதில்லை. யாரும் அவரை நினைத்துக் கூடப்பார்க்க மாட்டார்கள். அரசியல் களம் அப்படித்தான் இருக்கும்.

மிகப் பெரிய பெண் போராளி அவர். ஆட்சி நடத்திய விதம் சர்ச்சைகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம். இதற்காக அவர் மீது ‘மட்டும்’ குற்றம் சுமத்திட முடியாது. “பாம்பு தின்னும் ஊருக்கு வாழச் சென்றால் பாம்பின் தலையையும், வாலையையும் தின்னாமல் நடுத்துண்டை சாப்பிட்டு வாழலாம்” என்றொரு சொல் வழக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள். சில பாம்புகளுக்கு தலையில் விஷம் இருக்கும். சில பாம்புகளுக்கு வாலில் விஷம் இருக்குமென்பதால் நடுத்துண்டே பாதுகாப்பானது. அவர் அதைத்தான் செய்தார். அரசு அமைப்பின் சிஸ்டம் அப்படி இருக்கிறது. மன்னர் காலத்திலிருந்து ஜன நாயக ஆட்சி வரை ஊழலும், சிபாரிசும், அதிகார துஷ்பிரயோகங்களும் வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகின்றன.

நாட்டையும், நாட்டு மக்களையும் திருத்த முடியாது. எத்தனையோ கடவுள்கள் இருக்கின்றார்கள். எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. இருந்தும் என்ன பலன்? எவராவது திருந்தினார்களா? கோவிலுக்குச் செல்பவனும், பிற மத இடங்களுக்குச் சென்று வருபவனும் தான் குற்றச்செயல்களைச் செய்கின்றார்கள். மனம் கூசாமல் கொலைகளைச் செய்கின்றார்கள். 

இதையெல்லாம் தெரிந்து கொண்டதனால் அவர் தனக்கான வழியைத் தேர்ந்தெடுத்தார். ஜெயலலிதா தனிமையாக வாழ முடியாது. கலைஞருக்கு குடும்பம் இருக்கிறது. அவர்கள் அவரைப் பாதுகாத்தார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு மாற்று வழி தெரியவில்லை. மாற்று வழி இருந்தாலும் அவருக்கு உகந்தவர்களாக மன்னை ஆட்கள் இருந்தார்கள். கூட வைத்துக் கொண்டார். எதுவும் தவறில்லை. கலைஞர் தன் குடும்ப உறுப்பினர்களால் பத்தாண்டுகள் ஆட்சியையே இழக்கவில்லையா? அது போல்தான் இதுவும்.

மன்னர் ஆட்சியும் ஜன நாயக ஆட்சியும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான். மன்னராட்சியில் மன்னர் குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவார்கள். மக்களின் கருத்துக்கள் கேட்கப்படாது. ஜனநாயக ஆட்சியில் மீடியா திருட்டுக்கூட்டத்தினால் மக்களின் மூளைச் சலவை செய்யப்பட்டு யார் தேர்வாக வேண்டுமென்று தயார் செய்யப்படுத்தப்படுவார்கள். ஓட்டு அதிகாரம் இருப்பதாக கற்பனையாக கதை கட்டி அதையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். இது ஜனநாயக ஆட்சி. இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. 

ஜெயலலிதா நல்லவராகவே இருந்தாலும் அரசியல் அப்படி இருக்க விடாது. அரசியல் என்றாலே உங்களுக்கு சகுனிகளும், சாணக்கியன்களும் நினைவுக்கு வந்து விட வேண்டும். சாணக்கியன் தான் கொண்ட சபதத்தினை மக்கள் நலனை முன்னிறுத்தி மன்னருக்காக மக்கள், மக்களுக்காக மன்னர் என்ற அர்த்தசாஸ்திரத்தை உருவாக்கினான். சகுனியோ சுய நலம் ஒன்றினையே குறிக்கோளாய் கொண்டவன். இந்தப் பாரத பூமியில் சகுனிகளும், சாணக்கியன்களும் தங்களுக்குள்ளே ஆடும் பகடை தான் அரசியல். இப்படிப்பட்ட அரசியலில் நல்லவர்களுக்கு இடமேது? நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு இடம் நிச்சயம் இருக்கவே இருக்காது.

அவர் தனிப்பட்ட முறையில் மனிதாபிமானவர். மனிதர்களுக்கு இருக்கும் குணம் தான். எல்லாம் கிடைத்தும் எதுவும் கிடைக்காத வாழ்க்கை அவரது. அழகு, படிப்பு, அறிவு, பதவி, அதிகாரம், புகழ் அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. ஆனால் வாழ்க்கை? எதுவும் காரணமின்றி அமையாது. அந்த ஆராய்ச்சியை செய்யத்துவங்கினால் அது பெரும் வரலாறாக மாறிப்போகும். ஆகவே விட்டு விடுவோம்.

மீண்டும் வழக்கு விபரத்துக்கு வந்து விடுகிறேன்.

ஒவ்வொரு தீர்ப்பு வழங்க்கபடும்போது, அந்தத் தீர்ப்பில் வழக்கு விபரங்கள், வாதிகள் தரப்பு வாதம், பிரதிவாதிகளின் வாதம், சாட்சி ஆவணங்கள் போன்றவற்றுடன் தீர்ப்பு வழங்க ஏதுவாக இது போன்ற வழக்குகளில் முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புகள் என விவரித்து இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறு வழக்குகளின் தீர்ப்பின் ஊடே மேற்கோள் காட்டப்பட்டுள்ள தீர்ப்புகள் ஆகியவைகளைப் படித்து வெகு முக்கியமான பாயிண்ட் என்றால் கணிணியில் சேமித்து வைத்துக் கொள்வேன். நானொன்றும் வக்கீலுக்குப் படிக்கவில்லை. வக்கீலுக்குப் படித்தால் தான் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆர்வம் மட்டுமே. ஆகவே சட்ட புத்தகங்களை படிப்பதும், நீதிமன்றத்தீர்ப்புகளை வாசிப்பதும் எனது வாடிக்கையாகவே வைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த தீர்ப்பினையும் வாசிக்க ஆரம்பித்தேன்.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பினைப் படிக்கவோ அல்லது பார்க்கவோ விரும்புகின்றீர்களா? கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்யுங்கள்.

http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=44563

இந்தத் தீர்ப்பின் மொத்தப்பக்கங்கள் 547. இதில் பாயிண்டுகள் தான் வழக்கு விபரங்களை விவரித்துச் செல்லும். 154வது பாயிண்டிலிருந்து 239 பாயிண்ட் வரை பல தரப்பட்ட வழக்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நால்வரின் மீதான குற்றங்களின் சட்டம் என்ன சொல்கிறது என்று விவரிக்கப்பட்டுள்ளன. 1991லிருந்து 1996 வரை அவர்கள் சேர்த்த சொத்துக்கள் அதன் உண்மை மதிப்புகள் வரிசையிடப்பட்டிருக்கின்றன. ஊழல், கரப்ஷன் போன்ற விசயங்கள் அலசப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சொத்துக்கும் விவரங்களும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அக்யூஸ்டு ஏ1 - ஜெயலலிதா முதல் ஏ4-இளவரசி வரை குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கணக்குகள் மிகச்சரியாக கணக்கிடப்பட்டிருக்கின்றன. கோர்ட்டு வழக்கு ஆவணங்கள், சாட்சிகள் இவைகளைக் கொண்டு யார் குற்றவாளி என்று தீர்ப்பு கொடுக்கும் வழக்கப்படி சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் மூவரும் விடுதலையடைய வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று சொல்லி விடேன் ஏன் இத்தனை இழுப்பு என்று நீங்கள் கேட்கின்றீர்கள். அதற்கு முன்னால் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்.

”பல குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது” என்கிறது நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.  அதைத்தான் இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

கவனிக்க “பல குற்றவாளிகள் தப்பினாலும்”.

இதற்கு நம் சட்டமைப்பு இடம் கொடுக்கிறது என்பது முரண்பாடு. முரண்பாட்டில் கூட ஒரு நல்ல விசயம் என்னவென்றால் நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். 

இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. அது வெகு எளிதானதுதான். மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை. சட்டப் புத்தகங்களை பிரித்துப் படித்து மூளையை கடைய வேண்டியதில்லை. நம் நீதிமன்றத் தீர்ப்புக்கள் அதற்கான வழியைத் தருகின்றன. அந்த நம்பிக்கையில் தான் வழி இருக்கிறது என்கிறேன். கீழமை நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, மேல்முறையீட்டில் ஒரு தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு என்றெல்லாம் நாம் படித்து வருகிறோம். (மறக்காமல் படிக்கவும் இந்தியாவின் அசைக்க முடியாதவர்கள் )

ஆகவே இதுகாறும் ஊழல் வழக்குகளில் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்புகள், இன்கம்டாக்ஸ் மற்றும் பொருளாதார குற்ற வழக்குகளில் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்புகளைப் படித்தால் இவர்களின் விடுதலைக்கு சட்டப்படியான தீர்வுகள் நிச்சயம் கிடைக்கும் வாய்ப்புகளும், சாத்தியக்கூறுகளும் இருக்கலாம். ஆனாலும் இந்தத் தீர்ப்பு தகுந்த ஆதாரங்களைக் கொண்டு வெகு சுத்தமாக வழங்கப்பட்டிருக்கிறது. 

இதை உடைக்க அதீதப் புத்திசாலியால் தான் இயலும். அந்தப் புத்திசாலி வக்கீல் யார் என்று அறிவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகமிருக்கிறது. சட்டத்தின் ஊடே விளையாடுவது என்பது மாபெரும் சாகசக்கலை. அதில் தர்மம் இருக்க வேண்டுமென்பது எனது ஆசை.

Wednesday, February 15, 2017

புத்திசாலி சாமர்த்தியசாலி ஒரு நீதிக்கதை

புத்திசாலிகள் வெற்றிபெறுவதில்லை. சாமர்த்தியசாலிகளே வெற்றி பெறுகின்றார்கள். இரண்டு நபர்களை உதாரணமாகச் சொல்லலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புத்திசாலியானவர். நம் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் புத்திசாலி மட்டுமல்ல சாமர்த்தியசாலியும் கூட. அறிவு மட்டும் இருந்தால் பணியாளராக இருக்கலாம் . சாமர்த்தியமும் இருந்தால் முதலாளியாக இருக்க முடியும் என்பதற்கு இவர்களே சாட்சி.

சாமர்த்தியசாலிகளைப் பற்றிய ஒரு நீதிக்கதை உண்டு. அதை இப்போது படியுங்கள். 

ஒரு ஊரில் புத்திசாலி பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்குச் சொந்தமாகப் பெரிய ஆட்டு மந்தைக் கூட்டம் இருந்தது. நிலங்களும் பெரிய அளவில் இருந்தன.  அவன் ஆடுகளை வளர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல, அவைகளின் தோலுக்காகவும், கறிக்காவும் தான் வளர்த்து வந்தான். அவன் பணக்காரனாக இருந்தாலும் மகா கருமி. அவன் நிலத்தைச் சுற்றிலும் வேலி போட அவனுக்கு விருப்பமில்லை. வேலி போட்டால் செலவு அதிகமாகும் என்ற நினைப்பு. 

அந்த ஆடுகளில் ஒரு சில புத்திசாலிகள் இருந்தன. அவைகள் இவன் தங்களைக் கொன்று பிழைக்கின்றான் என்றும் பேசிக் கொண்டன. அதனால் கூட பல ஆடுகள் அருகில் இருக்கும் காடுகளுக்குத் தப்பிச் சென்றும் விட்டன. அடிக்கடி ஆடுகள் வேலி தாண்டிச் சென்றும் விடும். இதன் காரணமாக அவனுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டன.

இந்தப் புத்திசாலி பணக்காரன் செலவும் ஆகக்கூடாது, ஆடுகளும் தப்பித்துச் செல்லக்கூடாது, இதற்கொரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தான்.

ஒரு நாள் அனைத்து ஆடுகளையும் அழைத்து அவைகளிடையே பேச ஆரம்பித்தான்.

ஆடுகளுக்கு எப்போதும் இறப்பே வராது என்றும், அதன் தோல்களை நீக்கும் போது வலியே ஏற்படாது என்றும், அதனால் அவைகளின் உடல் நன்கு பாதுகாக்கப்பட்டு, மீண்டும் தோல் வளர்ந்து எப்போதும் சாவதே இல்லை என்றும் அவைகளுக்கு நம்பிக்கை ஊட்டி வசியப்படுத்தினான்.

ஆட்டு மந்தைக் கூட்டத்தின் மீது அவன் அளவற்ற அன்பு கொண்டுள்ளதாகவும், அவைகளின் நன்மைக்காக உலகில் இருக்கும் அத்தனை நலன்களையும் அவைகளுக்குச் செய்து வருவதாகவும், அந்த ஆடுகளின் நன்மையைத் தவிர வேறு எதையும் அவன் சிந்திப்பதே இல்லை என்றும், அவன் அவைகளுக்கு நல்ல எஜமானனாக இருப்பதாகவும் விவரித்துப் பேசினான்.

அவைகளுக்கு எந்தக் காலத்திலும் துன்பம் ஏற்படவே ஏற்படாது என்றும், அவைகளுக்குத் துன்பம் ஏற்படவே கூடாது என்பதற்காக அவன் தன் வாழ் நாளையே தியாகம் செய்து பணி செய்து வருவதாகவும் பேசினான். அப்படி அவைகளுக்குத் துன்பம் ஏற்பட்டு விட்டால் அது தான் உயிரோடு இருக்கும் வரையில் நடக்காது என்றும் வீராவேசமாகப் பேசினான்.

அதுமட்டுமல்ல அந்த ஆடுகளில் பல ஆடுகளே இல்லை என்றும் அவைகளும் நாளை நல்ல எஜமானனாகும் தகுதி உடையவை என்றும், பல ஆடுகள் சிங்கங்கள் என்றும், பல ஆடுகள்  புலிகள் என்றும், பல ஆடுகள் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்றும், பல ஆடுகள் தியாகமே உருவான தொண்டர்கள் என்றும் ஆடுகளையே ஆடுகள் இல்லை என்ற தோற்றத்தினை உருவாக்கினான். அவன் பேசியதைக் கேட்ட ஆடுகள் தங்களை ஆடுகளே இல்லை என நம்ப ஆரம்பித்தன.

அவன் பேசப் பேச ஆடுகளுக்கு அவன் மிக நல்ல எஜமானன் என்று தோன்றின. அவைகள் அவனை நம்பின. அன்றிலிருந்து எந்த ஒரு ஆடும் வேலி தாண்டிப் போவதில்லை. அவன் நிலத்துக்குள்ளேயே வசித்து வர ஆரம்பித்தன. அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடாக கொன்று தோலை உரித்து, கறியை விற்பனை செய்து சுகமாக வாழ்ந்து வந்தான்.

அந்த ஆடுகள் தாங்கள் கொல்லப்படுவதையோ, தாங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையோ அறிந்திருக்கவில்லை. தங்கள் எஜமானன் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தன.

கதையைப் படித்து விட்டீர்களா?

இந்தக் கதையில் வரும் ஆடுகள் யார்? அந்த சாமர்த்தியசாலியும் புத்திசாலியுமான எஜமானன் யார் என்று உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். ஆகவே.... !!!




Sunday, February 12, 2017

மஞ்சள் குளிர்பானம் அதீத ஆபத்து

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் பாகப் பிரிவினை நடைபெறுகிறது. நிலத்தில் பாகத்தைச் சரியாகப் பிரித்துக் கொடுக்கும் பணியில் பிசியாக இருந்தேன். மிகச் சரியாக பாகத்தைப் பிரித்துக் கொடுக்கவில்லை என்றால் நீயும் பாகமும் என்று கிண்டலடித்து விடுவார்கள். ஆகவே தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் அமர்ந்து பேசி அவரவர் கோரிக்கைகளைக் குறித்துக் கொண்டு மிகக் கவனமாக நிலப்பாகத்தினை அளந்து உறுதி செய்து கொண்டேன். பின்னர் நிலத்தில் அளக்கும் போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

அவரவர் வீடு இருக்கும் பகுதியில் நிலமும் வர வேண்டும். மரங்களும் சரியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிலத்திற்கும் பாதை இருக்க வேண்டும். அந்தப் பாதைகளின் மொத்த அளவு அதிகமாக இருக்கக்கூடாது அதுமட்டுமல்ல இன்னும் இது போன்ற பல்வேறு சிக்கல்களுடன் நில அளவை நடந்து கொண்டிருந்தது.

இதுவெல்லாம் பிரச்சினையே இல்லை. நான் சுவாசிப்பதே நிலத்தைப் பற்றித்தான். நிலம் மட்டும் இல்லையென்றால் மனிதனே இல்லை. பூமித்தாய் ஒவ்வொரு மனிதனையும் தன் இரத்தத்தால் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதை நேசிப்பதில் அதனுடன் உறவாடுவதில் அதனுடன் இயைந்து இருப்பதில் எனக்கு எல்லையில்லா ஆனந்தம். இந்தப் பூமியில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் மனிதனுக்காகத்தான் பயன்படுகிறது. காற்றிலிருந்து, வெளிச்சத்திலிருந்து பூமி தான் மனிதனுக்கு அள்ளி அள்ளி வழங்குகிறது. கண்ணை மூடி ஒரு நிமிடம் பூமி நமக்கு தருவன பற்றி நினைத்துப் பாருங்கள். பூமியின் மீது நடப்பதற்கே கூச்சமாக இருக்கும். 

எனக்குப் பிரச்சினை ஆரம்பித்தது மனிதர்களாலே. ஒவ்வொரு வீட்டிலும் காஃபி, டிஃபன், குடிநீர் சாப்பிட வற்புறுத்த ஆரம்பித்து விட்டார்கள். முதன் முதலில் வந்திருக்கின்றீர்கள், ஒரு வாய் டீ என்று ஆரம்பித்து தொல்லைகள் வர ஆரம்பித்தன. அப்போதுதான் ஹார்லிக்ஸ் குடித்திருப்பேன். ஐந்து நிமிடம் கூட இருக்காது. இள நீரைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். பஜ்ஜி சுடச்சுட கொண்டு வந்து தருவார்கள். என்னை வேலை செய்யவே விடவில்லை. 

மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நேரம் காலம் தெரியாமல் அவர்கள் செய்த உபசரிப்பின் காரணமாக எரிச்சலின் உச்சத்திற்கே சென்று கொண்டிருந்தேன்.

மாலையில் அவசரமாக வேறு வேலை நிமித்தமாக கிளம்பிய போது மஞ்சள் கலர் குளிர்பானத்தைக் கொண்டு வந்து நீட்டினார்கள். வெயிலில் காய்ந்ததால் இதமாக இருக்கட்டுமே என்று இரண்டு மிடக்கு மஞ்சள் குளிர்பானத்தை விழுங்கினேன். ஒரு மணி நேரம் வேறு பணியை முடித்து விட்டு வீடு வரும் முன்பு மற்றொரு நண்பர் இடையில் பிடித்துக் கொண்டார். ஏதாவது சாப்பிடுங்கள் என்று வற்புறுத்த ஆரம்பித்தார். சுடுதண்ணீர் கொண்டு வந்து தாருங்கள் என்றுக் கேட்டு அருந்தினேன். அடுத்த இரண்டு நொடிகளுக்குள் நெஞ்சுக்குள் வலி சுருக் சுருக் என ஆரம்பித்தது. பதட்டமானேன்.  நண்பரோ விடாமல் பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் நெஞ்சுக்குள் வலி எடுக்கிறது என்றுச் சொல்லி விடைபெற்றேன். 

வண்டியில் வரும் போது ஏப்பமாக வந்து கொண்டே இருந்தது. இடது நெஞ்சில் வலி பின்னிப் பெடலெடுத்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து பாயில் படுத்தேன். என்னால் படுக்கவே முடியவில்லை. பிரஷர், ஹார்ட் பீட் எல்லாம் சோதனை செய்த போது அனைத்தும் நார்மல். ஆனால் வலி மட்டும் குறையவில்லை. மூச்சை உள்ளே இழுத்தால் சுருக்கென்றது. உணவில் ஏதோ பிரச்சினை என்று அறிந்து கொண்டேன். மருத்துவ நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். ஒரே ஒரு மாத்திரையைப் பரிந்துரைத்தார். வெறும் கஞ்சி கொண்டு வரச் சொல்லிக் குடித்து விட்டு மாத்திரையைப் போட்டுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது. அரை மணி நேரத்தில் சுருக் வலி நின்று போனது. ஆனால் ஏப்பம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. காலையில் கூட வெறும் ஏப்பம் தான் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் நான் அந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர. வேண்டாம் என்றாலும் விடாமல் படுத்தி எடுக்கின்றார்கள். கிராமத்து ஆட்கள் வெள்ளந்தியானவர்கள். ஒருவர் வாழைக்காய் சிப்ஸைக் கொண்டு வந்து கொடுத்து தோட்டத்தில் இருந்து பறித்து உங்களுக்காக மனைவியைச் செய்யச் சொல்லி கொண்டு வந்திருக்கிறேன் என்று படுத்திக் கொண்டிருந்தார். 

அடியேனோ எண்ணைப் பலகாரங்கள், பால், டீ, காஃபி, மட்டன், சிக்கன், மீன், நண்டு, இறால், முட்டை என எதையும் சாப்பிடுவதே இல்லை. நாக்குக்கு அடிமைப்பட்டு நெஞ்சைக் கிழித்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடே இல்லை. சாதம் என்றால் பத்து வாய் அத்துடன் கொஞ்சம் காய்கறிகள். மாலையில் பழங்கள், காய்கறிகள் என்பதோடு நிறுத்திக் கொள்வதுண்டு. வேறு வழியே இல்லையென்றால் ஹார்லிக்ஸ் என்பதோடு நிறுத்திக் கொள்வேன். அதுவும் எனக்கு உடன்பாடு இல்லை. எவ்வளவு கவனமாக இருந்த போதும் ஏதோ ஒரு நினைவில் குளிர்பானம் என்கிற கெமிக்கல்ஸ் நிறைந்த குடிபானத்தினால் எனக்கு ஏற்பட்ட ஒவ்வாமை கொடுமையானது.

நான் குடித்த மஞ்சள் கலர் குளிர்பானத்தின் மகிமை என்று மருத்துவர் சொன்னார். பத்து மிலி கூட குடித்திருக்க மாட்டேன். அது செய்த பிரச்சினை இன்னும் முற்றிலுமாகத் தீரவில்லை. எனது அனுபவம் இது. ஆகவே நண்பர்களே, மஞ்சள் கலர் குளிர்பானம் என்றால் ஜாக்கிரதையாக இருங்கள்.

Friday, February 10, 2017

எப்பொழுதும் எந்த நொடியும் சந்தோஷமாக வாழ்வது எப்படி?

போன் வருகிறது. பிள்ளை கீழே விழுந்து விட்டான். அடிபட்டு விட்டது என்கிறது அது. மனசுக்குள் திடுமென்று பயம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. எண்ணங்கள் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று அலைபாய மனதுக்குள் பாரம் அடுத்து அடுத்து ஏற்றப்பட்டுக் கொண்டே முடிவில் பெரும் துன்பகரமனதாக வேதனையில் விழுந்து வெம்மி விடும். பையனை நேரில் பார்க்கும் வரை வேதனையில் மனது வெந்து சாகும். அவனை நேரில் பார்த்தால் சின்ன அடி தான் என்றவுடன் மனசு லேசாகி விடும். அவ்வளவு நேரம் துயரப்பட்ட மனசு பட்டென்று லேசாகி சந்தோஷமாகி விடும். காரணம் அறியாமல் உண்மை தெரியாமல் மனது தனக்குள்ளேயே தவறான முடிவு எடுத்து துயரப்பட ஆரம்பித்து விடும். 

மனம் எப்போதுமே உண்மையை உணர்ந்து கொள்ளாது. மனதுக்கு முதல் எஜமான் உணர்ச்சிகள் தான். உணர்ச்சியின் பிடியில் சிக்கிய மனம் முழு உடலையும் ஆட்டுவிக்கிறது. கோபம் கொள்ளச் செய்கிறது. அழச் செய்கிறது. உண்மையை மறைத்து விடுகிறது. இறந்தகாலத்துக்குச் சென்று எதிர்காலத்துக்குச் சென்று இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி துயரத்தில் ஆழ்த்தி விடுகிறது.

இறந்த காலமும் இல்லை
எதிர்காலமும் இல்லை
இந்த இரு இல்லாமைகளுக்கிடையில்தான் மனம்
இருக்கிறது
அதனால் தான் துன்ப துயரங்கள்

மனதால் வாழ்வது துயர வாழ்க்கை
வேதனை மிகுந்த நரகம்
மனமே நரகம் தான்

சட்டென இதை உணர்ந்தால்
புதிய வாசல் பிறக்கும்
அது நிகழ்வின் தீர்ப்பு
இயல்பின் திறப்பு இது.

இருக்கிற ஒரே காலம் நிகழ்காலம் மட்டுமே
இருப்பதே அதுதான்
அதில் நீ இரு, அப்போது நீ விடுதலையடைவாய்
அதில் வாழ்க, அதுவே பரவசம்!

நன்றி : ஓஷோ - ஒரு கோப்பை தேநீர் புத்தகத்திலிருந்து ஒரு கவிதை

நான் சொல்ல வந்தது இதுதான். எது நடந்தாலும் என்ன நடந்தாலும் நடந்ததை அழித்து விட்டு புதிதாக ஆரம்பிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. நடந்து விட்டது இனி என்ன செய்யலாம்? நடந்து விட்டதை நமக்கு சாதகமாக பிறருக்கு பாதகம் ஏற்படா வண்ணம் சரி செய்ய முடியுமா? என்று மட்டும் தான் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டால் வாழ்க்கையின் போக்கு நிச்சயமாக மாறிப்போய் விடும். தட்டுத்தடுமாறி இப்பாதைக்கு மாறி விடுங்கள். எதையும் எளிதாக வெற்றி கொள்ளலாம்.

ஏதேனும் புரியவில்லை என்றால் மெயில் அனுப்பவும். விவரித்து எழுதுகிறேன்.

Tuesday, February 7, 2017

துளசி அய்யா வாண்டையார் - மறக்க இயலாத மாமனிதர்

பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கணிணி அறிவியல் தான் படிக்க வேண்டுமென்ற ஆவலில் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் மாமாவோ மெடிக்கல் வைப்பதற்குப் படி என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். அதிமுக செயலாளர் குழ.செல்லையாவிடம் சென்று சிபாரிசு கடிதம் வாங்கிக் கொண்டு தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியில் அப்ளை செய்தோம். ஆனால் சீட் கிடைக்கவில்லை. எனது மனதுக்குள் கணிணி மட்டுமே விஸ்வரூபம் எடுத்து நின்றது. ஒரு வருடம் வீட்டில் இருக்க வேண்டியதாகி விட்டது. குமுதம் புத்தகத்தில் வெளியான கணிணி படத்தை கட் செய்து சுவற்றில் ஒட்டி வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.

அடுத்த கல்வியாண்டில் எப்படியாவது கணிப்பொறிப் படிப்பில் சேர்ந்து விட வேண்டுமென்ற ஆவலில் முயற்சிகளை மேற்கொண்டேன். எனது உறவினர் ரங்கசாமி மற்றும் பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்த  குருவின் மூலமாகவும் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ சிங்காரத்தைச் சந்தித்து சிபாரிசுக் கடிதம் பெற்றுக் கொண்டேன். ரங்கசாமியின் சித்தப்பாதான் எம்.எல்.ஏ. இவரும் பூண்டி துளசி அய்யா வாண்டையாரும் நல்ல நண்பர்கள் என்று கேள்விப்பட்டேன். பூண்டி புஷ்பம் கல்லூரியில் சீட்டுக்கு அப்ளை செய்திருந்தேன். இண்டர்வியூவிற்கு வரச் சொல்லிக் கடிதம் வந்திருந்தது.

(துளசி அய்யா வாண்டையார்)

பூண்டி சென்று துளசி அய்யா வாண்டையார் அவர்களின் வீட்டுக்குச் சென்று அவரிடம் மாமா கொடுத்திருந்த லெட்டரைக் கொடுத்து அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு கல்லூரிக்குச் சென்றேன்.

முதன் முதலாக பிரின்ஸிபல் மெய்பொருள் அவர்களை அவரது கேபினில் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் உன்னால் ஸ்டூலில் எல்லாம் உட்கார முடியாது ஆகவே நீ காமர்ஸ் எடுத்துப் படி என்றுச் சொல்லி கம்ப்யூட்டர் படிப்புக்கு அனுமதி தர முடியாது என்றுச் சொல்லி மறுத்து விட்டார்.

சரியான கோபம் வந்து விட்டது. மீண்டும் துளசி அய்யா வாண்டையாரைச் சந்திக்கச் சென்றேன். ”சீட் கிடைத்து விட்டதாப்பா?” என்று கேட்க நான் விஷயத்தைச் சொன்னேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் பிரின்ஸ்பல் அய்யா வீட்டுக்கு வந்து விட்டார். அவரிடம் ”ஏன் இவனுக்கு கம்ப்யூட்டர் படிக்க அனுமதி கொடுக்கவில்லை?” என்று கேட்டார். ”இவனால் ஸ்டூலில் உட்கார முடியாது” என்றுச் சொன்னார் பிரின்ஸிபல். ”அதைத் தூக்கி தரையில் வைத்துச் சொல்லிக் கொடு” என்று உறுமினார். ஆடிப்போய் விட்டார் பிரின்சிபல்.

ஒரு வழியாக கணிணி படிக்க அனுமதி கிடைத்து கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஹாஸ்டல் துவங்க நாள் ஆகும் என்பதால் பூண்டியில் இருந்த நடராஜன் என்பவரது அறையில் தங்கிக் கொண்டேன். என் தம்பி ஜெயபாலும், நவ நீதகிருஷ்ணனும் வகுப்பு லீவு போட்டு விட்டு சைக்கிளில் என்னைக் கொண்டு போய் கல்லூரியில் விட்டு மீண்டும் அழைத்து வருவார்கள். மூன்றாவது மாடியில் எனக்கு வகுப்பு இருந்தது. நான் படியில் தவழ்ந்து சென்று வகுப்பறைக்குள் செல்லும் போது எனது டிரஸ் எல்லாம் வியர்வையில் நனைந்திருக்கும். அறை குளுகுளுவென இருக்கும். கொஞ்ச நேரத்தில் வியர்வை சரியாகி விடும். அய்யாவின் முயற்சியால் மூன்றாவது மாதத்தில் முன்னாள் அதிமுக மந்திரிகள் அழகு திருநாவுக்கரசரும், எஸ்.டி.எஸும் சைக்கிள் வழங்கினார்கள். அதன் பிறகு ஹாஸ்டலில் இருந்து வகுப்பறைக்குச் சென்று வருவது எளிதானது.

இதற்கிடையில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அய்யா வீட்டில் பல ஏழை மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். அவர்களுக்கு இருக்க இடமும், உணவும், கல்விக்கு பணமும் கொடுத்துப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பெரிய கோடீஸ்வரர் அய்யா. பூண்டி என்கிற ஊர் மட்டுமல்ல சுத்துப்பட்டு ஊர் பூராவும் அய்யா குடும்பத்தினருக்குச் சொந்தமானது.

தினமும் அவர் பகவத் கீதை வகுப்பு நடத்துவார். தினமும் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். ஒரு நாள் நான் உட்கார முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அய்யா அவரருகில் நாற்காலி ஒன்றினைக் கொண்டு வந்து போட்டு அருகில் உட்கார்ந்து கொள் என்றுச் சொல்லி விட்டார். என்னால் மறுக்கவே முடியவில்லை. அவரருகில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வகுப்பினைக் கேட்க ஆரம்பித்தேன். பிரச்சினை என்னவென்றால் கீழே பிரின்ஸ்பல் உட்கார்ந்திருந்தார். அத்துடன் எனக்குப் பாடம் எடுக்கும் புரபசர்கள் வேறு உட்கார்ந்திருந்தனர். அது எனக்கு அசகவுரியமாக இருக்க ஹாஸ்டல் திறந்ததும் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டேன்.

அதன் பிறகு எனக்கும் பிரின்சிபல் அவர்களுக்கு நல்ல உறவு ஏற்பட்டது. அடிக்கடி அவரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்து விட்டு வருவதுண்டு. ஒரு தடவை அட்டெண்டன்ஸ் குறைந்து விட்டது. பிரின்ஸ்பல் எனக்கான ஃபைனை அவர் செலவு செய்து கட்டினார். கணிணி புரபஸர் சக்ரவர்த்தி, சிவகுமார் ஆகியோரிடமிருந்து செலவுக்குப் பணம் பெற்றுக் கொள்வதுண்டு. அப்போதெல்லாம் வீட்டுக்குச் சென்று பணம் வாங்கி வந்தால் தான் உண்டு. ஒரு முறை பிரின்ஸ்பலிடமிருந்தும் செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டேன். எந்த வித முகச் சுளிப்பும் இன்றி கொடுப்பார். திரும்பக் கொடுக்கும் போது வைத்துக் கொள் என்று சொல்வார். மறுத்து விடுவேன்.

என் வசதிக்காக வகுப்பறையை எனது ஹாஸ்டல் அறைக்கு அருகில் மாற்றிக் கொடுக்க உத்தரவிட்டவர் அய்யா. மூன்று வருடம் வரை வெகு சொகுசாக இருந்தேன். எனக்கு என்ன தேவையோ அவரிடம் சென்றால் உடனே கிடைக்கும் படி செய்து விடுவார். அவர் அப்போது எம்.பி ஆக இருந்தார். தினமும் அவரைச் சந்திக்க முடியாது. சந்திக்கும் போதெல்லாம் நன்றாக இருக்கின்றாயா? என்று கேட்பதை அவர் தவிர்க்கவே இல்லை.

ஒரு தடவை கல்லூரியில் ஸ்ட்ரைக் நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன் என்று பிரின்ஸிக்கு படுபயங்கர கோபம். சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தார். அய்யாவிடம் சென்றேன். அடுத்த நொடி சஸ்பெண்ட் ரத்தாகி விட்டது. ஹாஸ்டலில் உணவு சரியில்லை என்று மாணவர்கள் போராட்டம் நடந்தது. ஆனால் எனக்குப் பிரச்சினை இல்லை. மாணவர்களுடன் சேரவில்லை என்றால் அவர்கள் என்னை தனிமைப் படுத்தி விடுவார்கள். வேறு வழி இன்றி பசியுடன் போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஹாஸ்டல் வார்டன் என்னைப் பற்றி அய்யாவிடம் தவறாக போட்டுக் கொடுத்து விட்டார். வேறு வழி இன்று ஹாஸ்டலின் உணவு தரம் பற்றி அய்யாவிடம் சென்று விவரித்து விட்டேன். உடனடியாகச் சரி செய்தனர். அதன் பிறகு வார்டன் என்னுடன் எந்தப் பிரச்சினையையும் செய்வதில்லை. 

ஒரு தடவை கல்லூரி லீவ் முடிந்து வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்குச் சென்ற போது பஸ் கிடைக்காமல் வேறு வழி இன்றி இரவு அய்யா வீட்டின் முன்புறம் இரவு தூங்க வேண்டியதாகி விட்டது. அவர் அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலியில் படுத்து உறங்கி விட்டேன். அவர் தினமும் வெளியில் வந்து அமரும் பெஞ்ச் அது என்று எனக்குத் தெரியாது. நான் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அனைவரிடமும் அவனை எழுப்பி விடாதீர்கள் என்றுச் சொல்லி விட்டுச் சென்றாராம். தூங்கி விழித்தவுடன் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். படபடப்பு அதிகமாகி விட்டது. அய்யாவை மீண்டும் பார்த்து மன்னிப்புக் கோரினேன். சிரித்து விட்டு ”நன்றாகப் படி என்றுச் சொல்லி ஆசீர்வதித்தார்.

ஹாஸ்டலில் எனக்கு எந்த அறை வசதியோ அதைத்தான் தருவார்கள். விரும்பும் போதுதான் விடுதிக் கட்டணமும் கட்டுவேன். எதையும் கேட்கமாட்டார்கள். கல்லூரியில் நானொன்றும் பிரச்சினை செய்பவனல்ல. சாலையில் போராட்டம் நடக்கும் அவ்வழியே செல்லும் போது நாமும் சிக்கிக் கொள்வோம் அல்லவா அது போல கல்லூரியில் மாணவர்கள் செய்யும் போராட்டத்தில் விரும்பவில்லை என்றாலும் கலந்து கொண்டுதான் ஆக வேண்டிய சூழல். இது போன்ற சிக்கல்கள்தான் எனக்கு ஏற்பட்டன.

ஹாஸ்டலில் எனக்கு ராஜ வாழ்க்கை தான். மெஸ்ஸில் சப் வார்டன்கள், உணவு கிட்டங்கியாளர்கள். பரிமாறுபவர்கள், சமையற்காரர்கள் அனைவரும் என்னுடன் நட்புடனே பழகி அந்த நட்பின் காரணமாக அதீதமாக கவனித்தார்கள். ஒருவருக்கு ஒரு முட்டை தான் ஆனால் எனக்கோ நான்கைந்து முட்டைகள். உருளை சிப்ஸ் என்றால் ஒரு வாளி கிடைத்து விடும். ஞாயிறுகளில் மொடா மொறு மொறு தோசை போட்டு தனியாக உட்கார்ந்து சாப்பிட்டு வருவேன். கேட்கும் சுவையில் ரசம், குழம்புகள் செய்து தருவார்கள். துவையல் அறைத்துக் கொடுப்பார்கள். எனது நண்பர்கள் பெருமூச்சு விடுவார்கள். அவ்வப்போது அவர்களுக்கு என்னால் முடிந்த பொருள் உதவியை வழங்குவேன். ராஜேந்திரன் என்றொரு சர்வர் இன்னும் இருக்கிறார். அவரின் செல்லப்பிள்ளையாகத்தான் இருந்தேன். சாப்பிடுங்க சாப்பிடுங்க என்றுச் சொல்லி தட்டை ரொப்பி விடுவார்.

முதல் வகுப்பில் தேறிய பிறகு சர்ட்டிபிகேட்ஸ் பெற்றுக் கொண்டு அய்யாவைச் சந்தித்து விடை பெற்றுக் கொண்டேன். 

இருபது வருடம் கடந்து சென்ற பிறகு, எனது நண்பரின் திரைப்பட ஷூட்டிங் தஞ்சாவூரில் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்ப்பதற்காக என்னை அழைத்திருந்தார். அங்கு சென்ற போது பூண்டிக்குச் சென்று அய்யாவைப் பார்த்து விட்டு வந்தேன். எனது காரை அய்யா வீட்டின் முன்பு நிறுத்தவே கூடாது என்று தடுத்தார்கள். புது ஆட்கள், புது ரூல்ஸ்.

என்னைப் பார்த்ததும் “நன்றாக இருக்கின்றாயா?” என்று கேட்டார். ”மாமா எப்படி இருக்கிறார்? எப்படி இங்கு வந்தாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? யார் உன்னை அழைத்து வந்தது?” என்று விசாரித்தார். டிரைவரிடம் ”பார்த்துக் கூட்டிக் கொண்டுச் செல்” என்றுச் சொன்னார். புது ஆட்கள் எல்லாம் திணறிப் போய் விட்டனர். 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே போலத்தான் இன்றைக்கும் இருந்தார். அவர் மாறவே இல்லை. பெரிய மனிதர்கள் என்றைக்கும் பெரியமனிதர்களாகவே இருப்பார்கள்.

என் வாழ்வில் என் கனவுப் படிப்பான கணிணி அறிவியல் படிக்க உதவி செய்து இது நாள் வரையிலும் என் மனதிலிருந்து நீங்கவே நீங்காத மாமனிதராய், கோவில் கோபுரமாய் உயர்ந்து நிற்கிறார் துளசி அய்யா வாண்டையார் அவர்கள்.

இது போல உங்கள் அனைவருக்கும் யாரோ எங்கோ ஒருவர் உதவி இருப்பார். அவரின் உதவியாலே உங்கள் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அவர்களை வருடத்தில் ஒரு தடவையாவது நினைத்துப் பாருங்கள். அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன். 



Friday, February 3, 2017

இந்தியாவின் அசைக்கமுடியாதவர்கள்

மலைகள் இணைய இதழின் 115வது இதழுக்காக அடியேன் எழுதிய “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்” என்றொரு கட்டுரை வெளியாகி உள்ளது. படித்துப் பாருங்கள். நான் எழுதியது உண்மை என்று நீங்கள் உணர்ந்தால் ஆசிரியர் சிபிசெல்வன் அவர்களுக்கு ஒரு மெயிலை அனுப்புங்கள்.


கட்டுரையை வெளியிட்டு ஆசிரியருக்கு நன்றிகள்.

கெணத்தடிப்பாம்பு - சிறுகதை

மலைகள் இணைய 114 இதழில் வெளியான கிணத்தடிப்பாம்பு என்கிற சிறுகதை இங்கு வெளியிடுகிறேன். ஆசிரியர் சிபிச் செல்வனுக்கு நன்றிகள் பல. மலைகள் இணையப்பக்க இணைப்பு : http://malaigal.com/?p=9735

இனி சிறுகதையை தொடர்ந்து படிக்கவும்:-

சாயங்காலம் பள்ளிக்கொடத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது கெணத்தடியில் ஆட்கள் குறைவாக இருந்ததைப் பார்த்தேன். வீட்டுக்கு வடக்கே இரண்டு தெரு தாண்டி கிழ மூலையில் பெரிய கெணறு ஒன்னு நாலு பொறமும் தண்ணி இறைக்க சகடைகள் தொங்கியபடி இருக்கும். மரத்தினால் செய்யப்பட்டிருக்கும் இந்த சகடைகள் மீது கயித்தப் போட்டு தண்ணி எறைக்கனும். கட கடவென சவுண்டு விட்டுக்கிட்டு சுத்தும் சகடைகள். வெத்து வாளி உள்ளே போவதும் தண்ணி வாளி வெளியே வருவதுமாய் பொழுதன்னைக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கும். யாராவது குளிச்சிக்கிட்டும், துணி தொவைச்கிட்டும், தண்ணி எடுத்துக்கிட்டும் இருப்பாங்க.

குளிக்கிறதுக்கும் துணி தொவைக்கிறதுக்கும் அந்தப் பகுதிப் பெண்கள் பொழுது மசங்கின நேரத்தில் அந்தக் கெணத்துக்குச் செல்வார்கள். பாவாடையை மார்பின் மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு கெணத்திலிருந்து நீர் எறைச்சு மேலே ஊத்திக் கொண்டு குளிப்பார்கள். கெணத்துக்கு குளிக்கச் செல்வதற்கு முன்பே சீவக்காயை வடிச்ச கஞ்சியோடு சேர்த்து குழப்பி தலையில் தடவி கொண்டை போட்டுக் கொள்வார்கள். குளிச்ச பின்னாடி வழுவழுன்னு மின்னும். கையோடு அழுக்குத் துணியையும், உப்புச்சவக்காரத்தையும் கொண்டு போவார்கள். அவங்க குளிக்கும் போது ரவுண்டா முட்டை மாதிரி இருக்கும் மைசூருசாண்டல் மேல்சோப்பு வாசம் அடிக்கும்.

கல்யாணம் ஆனவர்கள் கையோடு வாளியில் துவைக்க துணிகளையும்,. குழந்தைகளையும் அழைத்துச் சென்று வாளியில் தண்ணி எறைச்சு சிண்டுகளைக் குளிப்பாட்டி இடுப்பில் துண்டைக் கட்டி விட்டு தலையை காயவைன்னுச் சொல்லி விடுவார்கள். துணிகளைத் தொவச்சு பிழிஞ்சு வாளியில எடுத்து வெச்சுட்டு குளிப்பார்கள். அதுவரைக்கும் சிண்டுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், குளிக்கிற தண்ணி வழிஞ்சோடும் வாய்க்காப் பக்கமாக கால்களை நனைச்சுக்கிட்டும் அம்மாகிட்டே திட்டு வாங்கிக் கொண்டும் பராக்குப் பார்த்தபடி கழிப்பார்கள்.

அது பொதுக்கெணறு. யாரு வேண்டுமானாலும் தண்ணி எடுத்துக் கொள்ளலாம். சைக்கிளில் ரெண்டு பக்கமும் செப்புக் குடத்தைக் கட்டிக்கிட்டு ட்ரிப்அடிப்பார்கள் ஆண்கள். வேலையாட்களுக்கு தண்ணி சுமக்கிறது பெண்டு நிமித்தும் பெரிய வேலை. எல்லா வீட்டிலும் கெணறுகள் இருக்காது. ஒரு சில வீடுகளில் தான் கெணறு இருக்கும். வற்றவே வற்றாத தண்ணீர் அமிர்தமென சுரந்து கொண்டே இருக்கும் கெணறுகள் எங்கள் வீட்டிலும் இருந்தன.

கைகாட்டி கொல்லையில் ஒரு கெணறு இருந்தது. தண்ணீர் வற்றிப்போகவே போகாது. ஏற்றமிரைத்து தான் விவசாயம் நடக்கும். நெலக்கல்லை தான் அதிகம் பயிர் செய்வார்கள். உளுந்து, துவரை, மரவள்ளிக்கிழங்கு போடுவார்கள். கொல்லையைச் சுத்தியிலும் தென்னமரமும், பலாக்காய் மரமும் இருக்கும். இந்தக் கெணத்துத் தண்ணீ உப்புகரிக்கும். தென்ன மரத்துக்கும், பயிர்களுக்கும் ஏத்தம் போட்டு எறைச்சு தண்ணி ஊத்தனும். கல்லைக்கு வாய்க்காலில் வரும் தண்ணியை தட்டு வெச்சு விசிறி அடிக்கணும். தரை நனையனும். வடக்குக் கொல்லை சோம்பி வீட்டுக்காரரு போரைப் போட்டாரு. கெணத்து தண்ணீயெல்லாம் காணாமப் போச்சு.

வடக்கித் தெரு கெணத்துத் தண்ணிக் கொஞ்சம் சப்பைமாதிரி இருக்கும். குளிக்க மட்டும்தான் பயன்படும். ஆனால் எங்கள் வீட்டுக் கெணத்துத்தண்ணி குடிக்க டேஸ்டா இருக்கும். தெக்கித் தெருவிலிருந்தெல்லாம் தண்ணி கொண்டு போக தவலைப்பானை, கொடமெல்லாம் கொண்டு வந்து விடுவார்கள். இரும்பு பூட்டையில் தொங்கிக் கொண்டிருக்கும் வாளியில் இறைத்து நிரப்பிக் கொண்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு செல்வார்கள். அம்மா யாரையும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

கெணத்துக்கு உறை கொண்டு வந்து போட்டார்கள். மழை பேஞ்சா கெணத்து வாய் மண்ணெல்லாம் கரைஞ்சு போய் அகன்று விடும். கெணத்து வாயைச் சுத்திலும் ரவுண்டு ரவுண்டா புல் தரையைச் செதுக்கு அடுக்கி வைக்கணும். இருந்தாலும் வாய் அகண்டு போயிடும். வீட்டில் செமண்டு உரையை வாங்கி வந்து பதினெஞ்சு அடிக்கு போட்டு விட்டார்கள். அடிக்கடி கெணத்துக் கயிறு அறுந்து போகும். ரப்பர் கயிறு வாங்கி வந்து போட்டார்கள். இந்த ரப்பர் கயிறு பூட்டையில் சிக்கிக் கொண்டு இறைக்க முடியாது.

மழை பேஞ்சுடுச்சின்னா கெணத்தில் தண்ணீ நெறஞ்சு கிடக்கும். கையாலே தொடலாம். வழிந்தோடும். தண்ணி சுண்ணாம்பு கலந்த மாதிரி இருக்கும். கொஞ்ச நாளுல பளிங்கு மாதிரி ஆயிடும். தண்ணீ குறைஞ்சாத்தான் அம்மா வடக்கித் தெருக் கெணத்துக்கு குளிக்க அழைத்துச் செல்வார்கள். அந்த வடக்கித் தெரு கெணத்தடியைச் சுற்றிலும் நான்கடி அகலத்துக்கு சிமெண்ட் போட்டு பார்டரு கட்டி தண்ணி போக வழி வைத்திருந்தார்கள். மூன்று துவைக்கும் கல்லும் கட்டி இருந்தார்கள். அவ்வப்போது சண்டைகள் நடக்கும். கொஞ்ச நேரம் தான் சத்தமாக்க் கேட்கும். ஆம்பளைங்க யாரும் அந்தப் பக்கம் போக மாட்டாங்க. குளியலும் துவைத்தலும் முடிந்ததும் ஆரவாரமின்றிக் கிடக்கும். வடக்கித்தெரு சுப்பைத்தேவர் வீட்டுப்பக்கமாய் குளிக்கிற தண்ணி, துவைக்கிற தண்ணி வடிந்து போகும். அவர் வாழை போட்டிருந்தாரு. அந்த வாழைகளும் சவுக்காரத்தண்னி, சீயக்காய் தண்ணீ, வடிச்ச கஞ்சித் தண்ணி, மஞ்சத்தண்ணியெல்லாம் குடிச்சு வளமா வளந்து கொலை கொலையா தள்ளுச்சு.

சவுக்காரத்தண்ணி வாழைக்காய்னு சொல்லி ராவுத்தப்பய வெலையைக் குறைச்சுப்பிட்டான் குட்டியம்மாஎன்று சாயங்காலமா வீட்டு வந்த சுப்பையாத்தேவர் அம்மாகிட்டே புலம்பிக்கிட்டு இருந்தார். கைகாட்டியில ஏலக்கட வச்சிருக்கிற ராவுத்தருக்கு இந்த வெஷயத்தை எவனோ போய் சொல்லிப்புட்டான்என கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.

போன வாரம் வடக்கித் தெரு கெணத்துக்குள்ளே பாம்பு விழுந்துடுச்சுன்னு பேசிக்கிட்டாங்களேண்ணே, பாம்பைப் பிடிச்சாச்சா?” என அம்மா கேக்க ”அதையேன் கேக்கிற குட்டியம்மா! சம்முகம் வாத்தியாரு பொண்டாட்டி கெணத்துல தண்ணி எடுக்கப் போயிருக்கா, வாளியோடு தலையை நீட்டிகிட்டு பாம்பு வந்ததைப் பார்த்தவ கத்துன கத்துல ஊரே கூடிடுச்சு. அவளுக்கு பாம்பப் பார்த்துப் பயமா? என்னமா நடிக்கிறாங்கறே. பத்தடி நீளமெருக்கும். தண்ணிக்குல கிடந்து ஊருது. நல்லபாம்பு மாதிரி தெரியுது. எவனும் கிட்டக்கே போக மாட்டேங்குறானுங்க. இன்னும் எடுக்கலை இந்த சனிக்கிழமை ஊருல கூட்டம் போட்டு தான் ஆளை அனுப்பனும்னு அருணாலம் சொன்னான்” என்றார்.

இனி அந்தப் பக்கம் எவரும் போக மாட்டார்கள். வடக்கித் தெரு சுப்பையாதேவரு வாழைகளுக்குத்தான் சிரமம். சவுக்காரத் தண்ணி கெடக்காம வாடிப்போய்டும். தெக்கிவீடு சலுவா வீட்டில ரெண்டு கெணறு இருக்கும். சப்பைத்தண்ணின்னு. யாரும் சீந்த மாட்டாங்க. கைலி மாதிரி லுங்கியைக்கட்டிக்கிட்டு மேலே துண்டைப் போட்டுக்கிட்டு திரியும் சலுவாகிட்டே தண்ணி எரைச்சுக்கிறேன்னு எவரும் போய் கேக்கமாட்டாங்க. ராவுத்தரு வீட்டுல போய்த் தண்ணி எடுக்கறதான்னு வீராப்பு.

மேக்கால கொலுசு வீட்டில ஒரு கெணறு இருந்துச்சு. பூமியோட பூமியா ரெண்டு பக்கமும் கவட்டைக் கம்புல பெரிய மரச்சகடை மாட்டிக் கிடக்கும் கெணத்தைச் சுத்தியும் செடியும் கொடியும் மரமுமாய் இருக்கும். பாம்பு கீம்பு வந்துரும்னு அந்தக் கெணத்துப் பக்கமும் யாரும் போக மாட்டாங்க.

வீட்டுக்கு வீடு கெணறு இருந்தாலும் எங்க வீட்டுக் கெணத்துத்தண்ணி மாதிரி டேஸ்டுஎங்கேயும் இல்லைன்னுச் சொல்லிக்கிட்டே தெனமும் குடிக்கத் தண்ணி வேணும்னு சொல்லிக்கிட்டு வந்துகிட்டே இருப்பாங்க. பெரிய மாமரத்தடி நெழலு குளுகுளுன்னு இருக்கும். தண்ணி எடுக்க வர்ரவுங்க நெழல்ல உக்காந்து ஊர்க்கதை உலக கதையெல்லாம் அம்மாகிட்டே பேசிட்டுதான் கெணத்துல தண்ணி எறைக்கவே போவாங்க. அம்மாவும் அவங்கிட்டேப் பேசிக்கிட்டே ரெண்டு மூனு குடம் தண்ணியை வீட்டுக்கு கொண்டு வந்துடுவாங்க.

மார்கழி மாசம் வந்துச்சுன்னா குளிரு பின்னும். வாசப்பக்கம் வந்தா பல்லு தந்தியடிக்கும். பள்ளிக்கொடத்துக்குப் போக குளிக்கணும்கிறதை நெனச்சாலே சில்லிடும். சூரியன் கொஞ்சமா வெளிய வந்து தலையை நீட்டியவுடனே கிணத்துல தண்ணி எறைச்சு பொக்கையில நெப்பி வைச்சுக்கிட்டு குளிச்சா வெது வெதுன்னு இருக்கும். சூரியன் வாரதுக்கும் குளிக்கிறதுக்கும் ஸ்கூலுக்குப்போறதுக்கும் இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருக்கும். அவசர அவசரமா மோத்தண்ணிச் சோறை மாங்காய் ஊறுகாயோட தின்னுட்டு பைக்கட்டை எடுத்துக்கிட்டு பிரேயர் ஆரம்பிக்கிறதுக்குள்ளே போய்ச் சேர்வது பெரும்பாடா இருக்கும். தை ஒன்னாம் தேதி வந்துடுச்சுன்னா குளிரு கொஞ்சம் குறையும். இருந்தாலும் மார்கழி மாசக் குளிரு குளிருதான்.

கோடைகாலமென்று நினைக்கிறேன். சாயங்காலமா குளிக்கலாம்னு கெணத்தடிக்குப் போய் தண்ணி இறைக்கப்போனா உள்ளே கருகருவென பாம்பு நெளியுது. அம்மாகிட்டே வந்து சொன்னேன். மறு நாள் தட்டுக்கூடையில வைக்கோலப் போட்டு உள்ளே கட்டித் தொங்க விட்டாங்க. வேடிக்கைப்பார்க்க கருவேல மரத்தடியில இருந்த திண்டுல உக்கார்ந்திருந்தேன். அம்மா கெணத்தடிப்பக்கமா வரவே கூடாதுன்னுட்டாங்க. கூடையை மேலே கொண்டு வந்தா பாம்பு குதிக்குமுன்னு சொல்லியிருந்தாங்க. பயத்துல தான் தள்ளி உக்காந்திருந்தேன். ஆட்கள் சுற்றிலும் நின்று கொண்டு ஒரு ஆள் கயிறை இழுக்க மெதுவா தட்டுக்கூடை மேலே வந்தது. அதில் கயிற்றில் சுற்றிக் கொண்டு பனிரெண்டு நீளத்துக்குப் பாம்பு கூடையில இருந்த்தைப் பாத்து விட்டு ஆளுக எல்லாம் தெரிச்சு ஓடுனாங்க. கயித்தை மரத்துல கட்டிப்புட்டு கம்பை எடுக்க ஓடுனாங்க. அந்தப் பாம்பு அதுக்குள்ளே சீறிக்கிட்டு ஒரே தாண்டு. சரியா நான் உக்காந்திருந்த திண்டுக்கிட்டே விழுந்துச்சு. பயத்துல நான் கத்துன கத்துல பாம்பு வக்கப்போரு ஓரமா வேகமாகச் செல்ல ஒரு ஆளு ஓடி வந்து கம்பால ஒரே அடி. நடுங்கிப் போயிட்டேன். அத்தப் பெரிய கருகரு நாகப்பாம்பை பக்கத்துல பாத்தா சிரிப்பா வரும்? அம்மா என்னைத் திட்டிகிட்டே இருந்தாங்க. அதுதான் கடைசி. அந்தப் பாம்பைப் பார்த்ததுக்கப்புறம் கெணத்தடிப்பக்கமே போவதில்லை. வீட்டின் அருகில் இருக்கும் பொக்கைத்தண்ணியில தான் குளிப்பேன்.