பனிரெண்டாம் வகுப்பு முடிந்தது. அடுத்துப் படிக்க வேண்டும். எல்லோரும் டி.பார்ம் படித்து விட்டு மெடிக்கல் வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அக்கா தஞ்சை அதிமுக மாவட்ட பிரதிநிதி. சேவல் சின்னத்தில் போட்டியிட்ட குழ.செல்லையா மாமாவுக்கு நெருக்கம். ரெகமெண்டேசன் கடிதம் பெற்று தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியில் டி.பார்ம் சேர முயற்சித்தேன் கிடைக்கவில்லை.
வீட்டுக்கு பின்னால் ரங்கசாமி அண்ணன் இருந்தார். அவரைச் சந்திக்கச் செல்வதுண்டு. அப்போதே வேதாந்தமாகப் பேசுவார். அவர் என்னிடம் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்தையும், பகவத் கீதையையும் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.
அதுவரை மாலைமதி, ராணிமுத்து, ராஜேஷ்குமார், சுபா (எனக்குப் பிடித்த நாவல் தங்கக் கொலுசு மற்றும் தூண்டில் முள்), குமுதம் வகையறாக்களே எனக்குத் தெரியும். ஒரு புது உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ரங்கசாமி அண்ணனுக்கு நன்றி.
உள்ளே இழுத்துக் கொண்டார் கண்ணதாசன். கண்ணனைப் பற்றிய அவரது புலம்பல் கண்ணன் மீது மாறாப்பற்றுக் கொள்ள வைத்தது. கண்ணனைத் தேடினேன். அப்போதெல்லாம் இணையம் ஏது? காணும் புத்தகத்திலெல்லாம் கண்ணன் படம் கிடைத்தால் கட் செய்து வைத்துக் கொள்வேன். தூண்டிக்காரன் பத்ரகாளி, வீரபத்திரர் என்று தேவர் இனத்தின் அடையாளங்களை விட்டு விட்டு என் மனம் கண்ணனைத் தேடியது. ஜெயதேவரின் அஷ்டபதியில் ராதே கண்ணன் பற்றி கண்ணதாசனின் எழுத்துக்கள் மோகப்படுத்தியது. விடாது தேடினேன் கண்ணனை.
ஒரு வழியாக கரூர் ராமகிருஷ்ண மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பொழுது கண்ணன் பற்றிய அத்தனைப் புத்தகங்களையும், பாடல்களையும் விடாது கேட்க ஆரம்பித்தேன். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கெளதமானந்தரையும் விடவில்லை. எனக்கு ராமகிருஷ்ண கோவிலில் மந்திர தீட்சை கொடுத்த பேலூர் மத்தின் தலைவர் எனது குரு காலம் சென்ற ரங்கநாதனந்தரையும் விடவில்லை. ஆஸ்ரம தலைவர் ஆத்மானந்தா அவர்கள், ’ஏனப்பா கண்ணன் மீது இவ்வளவு பற்று?’ என்று கேட்டு விட்டு அவனைப் பற்றிய புத்தகங்கள், பாடல்கள் எங்கு கிடைத்தாலும் கொண்டு வந்து கொடுப்பார்.
கண்ணனில் மூழ்கி கிடந்தேன். இப்போதெல்லாம் எனக்கு கடவுள் பற்றிய ஒரு தெளிவான முடிவிற்கு வந்து விட்டேன். ஆனால் இந்தக் கண்ணன் மீதான ஈர்ப்பு மட்டும் இன்றைக்கும் என்னை விடாது துரத்திக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு அவனைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். கண்ணனின் வாழ்க்கை சொல்வது வேறு ஏதோ. அது என்னவென்று உணர வேண்டும் . ஓஷோவின் பகவத் கீதை ஒரு தரிசனம் மற்றும் அஷ்டவக்ர மகா கீதை புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். காலம் வரட்டும்.
இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. உங்களுக்காக இரண்டு பாடல்களை இங்கு இணைப்புக் கொடுக்கிறேன். கேட்டுப்பாருங்கள். மனதை அள்ளி விடுவான் கிருஷ்ணன்.
ராகுல், சிந்துஜா மற்றும் மிருளாளினியின் குரல்களின் வழியே கண்ணனின் அன்புக் கரங்களின் தழுவலில் மனது ஒடுங்கி நிற்கும் அற்புதத்தை அவசியம் அனைவரும் உணருங்கள். இசை வழியே உள்ளத்துக்குள் ஊடுறுவும் அற்புத தரிசனத்தை ஒரு நொடி உணருங்கள். மாயவன் அழகனாய் மனக்கண்ணுக்குள் வெளிப்படும் ஆனந்த தரிசனத்தை உணருங்கள்.
- கோவை எம் தங்கவேல்.