குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, August 12, 2016

குளங்கள்

புதுக்கோட்டை மாவட்டமும் தஞ்சாவூர் மாவட்டமும் இணையும் பார்டரில் தான் எனது ஊர் நெடுவாசலும், அம்மா பிறந்த ஊர் ஆவணமும் இருக்கின்றன. விவரம் தெரிந்த நாளில் இருந்து மாமா ஊரில் தான் அம்மாவுடன் வசித்து வந்தேன். ஊரில் காவிரி ஆற்று விவசாயம் மற்றும் குளத்துப் பாசனமும் உண்டு. ஊரின் கிழக்கே தான் வயற்காடுகள் இருக்கும். ஆறு, குளங்கள் நிறைந்த பகுதி. பச்சைப்பசேல் என்று பசும்பட்டாடை போர்த்திக் கொண்டிருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கின்றன. எதுவும் மாறவில்லை. வெளி நாடு சென்று வந்தவர்களும், ஒரு சிலரும் வீடுகள் கட்டி இருக்கின்றனர். சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. பதினெட்டு நாட்டு அகமுடையார் ஊரில் தலைக்கிராமம் ஆவணம். அடுத்து நெடுவாசல் கிராமம். 

ஒவ்வொரு ஊரின் நீர் வளத்துக்கு காரணம் அந்த ஊர் குளங்கள்தான். அந்தக் காலத்தில் மோட்டார் எல்லாம் இல்லை. குளிப்பதற்கு குளங்கள் தான் ஒரே வழி. இல்லையென்றால் மண்குடத்தில் தண்ணீர் பிடித்து பொக்கைகளில் நிரப்பி வீட்டில் குளித்துக் கொள்ள வேண்டும். கிணற்றிலிருந்து தான் குடி தண்ணீர் கிடைக்கும். போரெல்லாம் கிடையாது.

ஊரின் மேற்கே சின்னக்குளம் இருக்கும். அது பள்ளிவாசலின் அருகில் இருக்கும். மூன்று நான்கு இடங்களில் படிக்கட்டுகள் இருக்கும். மாலைகளில் பெண்கள் வீட்டுத்துணிகளைக் கொண்டு போய் துவைத்து குளித்து விட்டு வருவார்கள். ஆண்கள் படித்துறை தனியாக இருக்கும். மழைக்காலங்களில் வெள்ளை வெளேரென்று இருக்கும் தண்ணீர் நாளடைவில் ஆரஞ்சு வண்ணத்தில் மாறி விடும். அதிக மழை பெய்யும் போது சின்னக்குளம் நிரம்பி எங்கள் வீட்டு நாவல்மரத்தின் வழியாக வழிந்து சென்று ஆவிகுளம் சென்று சேரும். ஆவிகுளம் நிரம்பினால் தூண்டிக்காரன் கோவில் குளத்தை சேரும். இந்தக் குளமும் நிரம்பினால் ஆவணத்தான் குளத்துக்குச் சென்று சேரும் படி நீர் வழிப்பாதைகள் இருந்தன.

சின்னக்குளத்திற்கு அம்மா என்னைத் தூக்கிச் சென்று குளிக்க வைப்பார்கள். கால்களுக்கு இடையில் இருத்திக் கொண்டு தலைகீழாக தலைமுடியில் சீவக்காய்தூள் போட்டு அலசி விடுவார்கள். குளிப்பதற்கு ஆனந்தமாக இருக்கும். விவரம் தெரிந்த நாட்களில் இருந்து நான் தனியாக குளிக்க கிளம்பி விடுவேன் நண்பர்களுடன்.

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புச் செல்ல வேண்டிய நேரம். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. மூன்று சக்கர சைக்கிள் வேண்டுமென்று விண்ணப்பித்திருந்தோம். அதற்காக உடல் தேர்ச்சிக்காக தஞ்சாவூர் சென்றோம். அங்கு மூன்று மருத்துவர்கள் அமர்ந்திருந்தனர். மாமா என்னிடம் சொன்னார். டாக்டர் கை கொடுப்பார். நன்றாக வலிக்கும்படி அழுத்தினால் தான் உனக்கு வண்டி கிடைக்கும் என்றார். விட்டேனா பார் என்று டாக்டரின் கையை அழுத்திய அழுத்தில் போதுமப்பா என்று அலறினார் மருத்துவர். ஏதோ மெலட்டூரோ என்னவோ நினைவுக்கு வரவில்லை. எம்.ஜி.ஆர் அப்போது சி.எம்.ஆக இருந்தார். அந்த ஊர் திரையரங்கத்தில் விழா. ஏதோ ஒரு மினிஸ்டர்தான் எனக்கு சைக்கிளை வழங்கினார். ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தது சைக்கிள்.

அதன் பிறகு வீட்டில் என்ன வேலை? எனது பள்ளி நண்பர்கள் சேகரும், சேதுராமனும் வந்து விடுவார்கள். மூவரும் குளிக்கச் செல்வதென்ன? ஊர் சுற்றச் செல்வதென்ன? கிளம்பினால் மாலைதான் வீட்டுக்கு வருவேன். இவர்கள் எல்லோருக்கும் டியூசன் எடுக்க வேண்டும். நான் பள்ளியில் லீடர். இவர்கள் சுமாராகத்தான் படிப்பார்கள். சொல்லிக் கொடுக்க வேண்டும். டியூசன் தனியாக நடக்கும், ஊர் சுற்றலும் தனியாக நடக்கும்.

சின்னக்குளத்துக்கு அதிகமாகச் செல்ல மாட்டேன். அங்கு சமாதிகள் இருக்கும். அதைப் பார்த்தாலே எனக்குப் பயம். பிச்சநரிக்குளத்துக்குத்தான் அதிகம் குளிக்கச் செல்வதுண்டு. போகும் வழியில் மாரியம்மன் கோவில் குளம் இருக்கும். அதில்  நான் குளிப்பதில்லை. பிச்ச நரிக்குளத்தில் தண்ணீர் வறண்டால் ஆவணத்தான் குளத்துக்கு செல்வதுண்டு. அது புதுக்கோட்டை பட்டுக்கோட்டை வழிச்சாலையில் நான் படித்த அரசு மேல் நிலைப்பள்ளி தாண்டி இருக்கும். காக்கா நீச்சல், தண்ணிக்குள்ளேயே நீச்சல் என்று எல்லா நீச்சலும் அடித்துப் பார்ப்பதுண்டு. ஆற்றில் தண்ணீர் வந்தால் அதில் ஆட்டம்.

பண்ணண்டா குளம் ஒன்று இருக்கிறது. எங்கள் வயலுக்கு அந்தக் குளத்திலிருந்துதான் தண்ணீர் மடை வழியாக வரும். இந்தகுளமும் ஆவணத்தான் குளமும் ஆற்றினை ஒட்டியவாறு கிழக்குப்பகுதியில் இருக்கும். இந்த இரண்டு குளங்களில் இருந்து பாசனம் நடைபெறும். கோடைக்காலத்தில் இந்தக் குளத்து நீரினை வைத்து குளத்தருகில் இருக்கும் வயல்களில் விவசாயம் நடக்கும். அந்த நேரத்தில் அங்கு குளிக்கச் செல்வதுண்டு. இந்தக் குளத்தின் அருகில் தான் மாயன்பெருமாள் கோவில் இருக்கும். சுத்துப்பட்டு ஊரில் இருந்து கோடையில் இந்தக் கோவிலில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மாட்டு வண்டியில் தான் செல்வோம். பெரிய பானையில் சர்க்கரைப்பொங்கலும், வெண்பொங்கலும் வைப்பார்கள். 

அரசு ஆரம்பபள்ளியின் அருகில் ஆவிகுளமும், தூண்டிக்காரன் கோவில் குளம் என்கிற புதுக்குளமும் இருக்கும். மழைக்காலத்தில் தூண்டிக்காரன் கோவில் குளத்தில் தான் குளிக்கச் செல்வது உண்டு. ஆவிகுளத்தில் அவ்வளவாக குளித்தது இல்லை.

காலம் செல்லச் செல்ல வடக்கித்தெரு சுப்பையாதேவர் தன் தோப்பில் போர் போட்டு விட்டார். அகலமான குளியல் தொட்டி போன்று கட்டி இருந்தார். பூமியிலிருந்து கொட்டும் தண்ணீர் குளியல் ஆரம்பித்து விட்டது. இந்தக் குளியல்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் தான் நடக்கும். பள்ளி நாட்களில் எங்கள் வீட்டுக் கிணற்றுத் தண்ணீரை வாளியில் இறைத்து பொக்கையில் நிரப்பிக் குளிப்பதுண்டு. எனது அப்போதைய சோப்பு என்ன தெரியுமா? மைசூர் ஜாஸ்மின் சோப். இப்போது அந்தச் சோப்பைக் காணமுடியவில்லை.

குளத்தில் குளிப்பது என்பது அவ்வளவு சந்தோஷத்தைத் தரக்கூடிய அற்புதமான தருணம். கொண்டு செல்லும் அழுக்குதுணிகளைத் துவைத்து அலசி வைத்து விட்டு பின்னர் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு சில்லிட்ட தண்ணீரைக் கையால் எடுக்கும் போது உடல் சிலிர்க்கும். உள்ளே இறங்க கொஞ்சம் தயக்கமாக இருக்கும். குளித்து விட்டு வெளியில் வருபவர் தண்ணீரை அள்ளி மேலே தெளித்து விடுவார். பின் என்ன? ஒரே குதியல். மூச்சு முட்ட தண்ணீருக்குள் அமிழ்ந்து வெளியில் வந்து கண்கள் சிவக்கச் சிவக்க ஆட்டம் போட்டு விட்டு கரைக்கு வந்து சோப்பு போட்டு உடலை நன்கு தேய்க்க வேண்டும். மீண்டும் குளத்திற்குள் தஞ்சம். உடல் சூடு எல்லாம் காணாமல் போய் விடும்.

இப்போது குழாயில் வடியும் தண்ணீரைப் பிடித்து தலையில் ஊற்றிக் கொண்டு ஷாம்பூ, சோப்பு போட்டு உடலைக் கழுவி காய வைத்து குளியலை முடித்து விடுகிறேன். காரில் செல்லும் போது வழியில் தென்படும் குளங்களைப் பார்க்கையில் மனது அசைபோட ஆரம்பித்து விடுகின்றன.

நாகரீகம் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதனை வெகுதூரம் தள்ளிக் கொண்டு போய் விட்டது. இயற்கையும் மனிதனின் வாழ்வும் தனிதனியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தனிமையில் வாழ்வது போன்று ஆகி விட்டது. பூமிக்கும் நமக்குமான தொடர்பு அற்றுப் போய் விட்டது போல தெரிகிறது.

இனி அந்தகாலம் வரவா போகிறது?

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.