குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, August 20, 2016

கேடிஎம் பைக்

பாம்பே நண்பரும் நானும் வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வர ஏற்பாடு. ரெட் டாக்சியில் மணியகாரம்பாளையம் வழியாக, வடவள்ளி, தொண்டாமுத்தூர் தாண்டி செம்மேடு வழியாகப் பயணித்தோம். அனேக இடங்களில் வெங்காயம் விளைந்திருந்தது. படல்களில் வெங்காயத்தை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். மழை பெய்திருந்ததால் காற்று சில்லென்று இருந்தது. சுற்றிலும் பசுமை படர்ந்திருந்த பகுதிகளின் ஊடே செல்லும் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

முட்டம் முத்துவாளி உடனமர் நாகேஸ்வரர் கோவிலில் இறங்கினோம். முத்துவாளியம்மனுக்கு அன்று அபிஷேகம் நடந்தது. மதுரை மீனாட்சி, குமரி அம்மன் மற்றும் முத்துவாளியம்மன் மூவரும் ஒருவரே என்று முன்பு ஒரு முறை கோவிலில் பூஜை செய்பவர் சொல்லி இருந்தார். அழகி என்றால் அழகி. பார்க்கும் போது சொக்கி விடும். மூப்பே இல்லாத அழகி. அருளை அள்ளித்தரும் பேரழகி முத்துவாளியம்மன். அபிஷேகம் முடிந்து காருக்கு திரும்பிய போது ஒரு பெண், ‘அண்ணா, சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்’ என்று முகம் பார்த்துச் சொன்னது. 

பாக்குமட்டைத் தட்டில் நெய், பஞ்சாமிர்தம், பொங்கல், புளிசாதம், தயிர்சாதம், பச்சைப்பயறு சுண்டல் வைத்துக் கொடுத்தது. பத்து உருண்டை சாதம் கொஞ்சம் காய்கறிகளோடு எனது உணவு. ஆனால் இதுவோ மிரள வைத்தது. மனையாளோ தியானம் செய்யாமல் உணவெடுக்க மாட்டார். அக்கா பையன் பிரவீனிடம் நீட்டினேன். ’என்னவோ தெரியவில்லை மாமா, இன்றைக்குப் பார்த்து பயங்கரமாக பசிக்கிறது’ என்றான். பிரச்சினை தீர்ந்தது.

ஆசிரமத்திற்குத் திரும்பினோம். மீண்டும் பள்ளத்தை தோண்டி விட்டார்கள். லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதிக்குச் செல்லும் பாதையை ஏன் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே புரியவில்லை. பெரிய பள்ளமாய் தோண்டி வைத்திருந்தார்கள். பள்ளத்துக்குள் இறங்கி பின்னர் நடந்து செல்ல வேண்டும். யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. அங்கிருக்கும் மலைவாழ் மக்கள் குளிப்பதற்கு அந்தப் பாதையைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதையும் தடுக்கிறார்கள். விரைவில் அவர்களே தானாகவே அமைதியாகி விடுவார்கள் என நினைக்கிறேன்.

சுவாமியின் ஜீவசமாதியில் தியானம் முடித்து உணவருந்தி விட்டு வீடு திரும்பினோம். வீட்டுக்கு நுழையவே இல்லை, பணிக்காக மீண்டும் பயணம் ஆரம்பித்தது.

கார் சென்று கொண்டிருந்த போது திடீரென்று காரின் முன்னால் பைக் ஒன்று வலது பக்கமிருந்து கட் செய்து முன்னால் செல்ல டிரைவர் பிரேக்கை அழுத்த நமக்கு திகீர் என்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்காரன் பறந்து விட்டான். 

இப்படித்தான் ஒரு முறை சென்னை வடபழனியிலிருந்து ஏர்போர்ட்டுக்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்த போது ஒரு பைக் ஓட்டி வந்தவன் காரின் பின்னால் தட்டென்று மோதினான். காரை நிறுத்தி டிரைவர் இறங்குவதற்குள் பறந்து விட்டான். அந்தப் பைக்கும் இந்த பைக்கும் ஆரஞ்சுக் கலர்.

’கேடிஎம் பைக் சார் இது,  சிசி அதிகம்ச. பறக்குறானுவ. டக்டக்குன்னு கட் செய்றானுவ சார். காரில வர்ரவங்க தப்பிச்சுக்குவாங்க. பைக்குல வர்றவங்க தடுமாறி விழுந்தா பின்னாடி வரும் காரோ லாரியோ ஏத்திடுவானுங்க சார். கேட்டா சட்டுனு பிரேக் பிடிக்கலன்னு சொல்லிடுவாங்க. அக்கிரமம் செய்றானுங்க சார். இந்தப் பயலுகள ரோட்டுக்குப் பெத்து விட்டுருக்கானுவ சார் இந்த அப்பனுங்க’ என்றார் கார் டிரைவர்.

அந்த கேடிஎம் பைக் காரின் முன்னால் வந்து சென்ற போது சில்லென்று திகில் பரவி பின்னர் அடங்கியது. படபடப்புத் தீர ஐந்து நிமிடம் ஆனது. எங்காவது ஒரு கல்லோ பள்ளமோ இருந்தால் அந்தப் பையனின் நிலை?

புண்ணியவான்களே, நீங்கள் பைக் ஓட்டுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் பாவப்பட்ட சில மனிதர்கள் ஏதோ ஒரு இருசக்கர வாகனத்தில் வருவார்கள். அவர்களுக்கு குடும்பம் உண்டு என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். உங்களின் அதீத சந்தோஷம் பிறருக்கு ஆபத்தாகி விட வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.