குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, August 22, 2016

2016 கோவை புத்தக திருவிழாவில் ஒரு நாள்

பொழுது புலரும் முன்பு எழுந்து கொள்வேன். ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீர். கொழுப்பைக் குறைக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்கும் என நண்பர் சொல்லி இருந்தார். டீ, காபி, சுக்கு மல்லிக்காஃபி எல்லாம் போயிடுச்சு. வழக்கம் போல உழவர் சந்தைக்குச் செல்லாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். மனையாள் சந்தைக்குச் சென்று விட்டார்.

வீட்டில் சுத்த சைவம். இலை தழைகள் தான். உறவினரும், நண்பர்களும் வீட்டுப்பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை. அப்படி வந்தாலும் ஒரு நாள் அதிகபட்சம் இரண்டு நாட்கள். விட்டால் போதும் என ஓட்டம் பிடிப்பார்கள். காரம், புளி இல்லாமல் அரை உப்புச் சாப்பாடு என்றால் எவர் தான் இருப்பார்கள்?தினமலரில் கோவை கொடீசியா வளாகத்தில் புத்தக திருவிழா என்று போட்டிருந்தார்கள். பசங்க ஞாயிறுகளில் பதினோரு மணிவாக்கில் டிவியில் உட்கார்ந்து விடுவார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லாத பொழுது போக்கு டிவி. கொடீசியா கிளம்பினேன். 

வீல் சேர் கொண்டு வந்து கொடுத்தார்கள். முன்புறம் பெரிய பந்தல் போட்டு பெரிய பெரிய புத்தக கம்பெனிகள் ஸ்டால் போட்டிருந்தார்கள். கூட்டமும் அதிகம் தான். எனக்குத் தேவையான ஓஷோ புத்தகங்களை கவிதா பப்ளிகேசனில் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் ராம்ப் இல்லை. படிக்கட்டுகள் எதிரே இளித்தன. இரண்டு பக்கமும் இருந்த ராம்பை அடைத்து வைத்திருந்தார்கள். புத்திசாலிகள்.

ஒரு வழியாக இறங்கி பின் வீல் சேரினை தூக்கி வைத்து உள்ளே சென்றேன். பையன் வீல் சேரினைத் தள்ளிக் கொண்டு சென்றான். நிவேதிதா ஒவ்வொரு ஸ்டாலாக சென்று உள்ளே இருக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றினையும் எடுத்து எடுத்துப் பார்ப்பதும் பின்னர் விலையைப் பார்ப்பதுமாய் இருந்தது. பையனும் இருக்கும் ஆங்கில சிறுவர் இதழ்களை எல்லாம் அலசி ஆராய்ந்து புத்தகங்களைத் தேர்வு செய்தான். நானும் மனையாளும் ஸ்டாலின் வாசலில் உட்கார்ந்திருந்தோம். மூன்று மணி ஆயிற்று. இன்னும் அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி முடியவில்லை.

பசி கிள்ளல் போட்டது. கேண்டீன் சென்றோம். பசங்க வெஜ் பிரியாணியும், நானும் மனையாளும் இரண்டு சப்பாத்திகளும் சாப்பிட்டோம். அங்கு டேபிள் துடைத்துக் கொண்டிருந்த பெண்மணி மிகவும் களைத்துப் போயிருந்தார். சாப்பிட்டாயாம்மா எனக் கேட்டேன். இன்னும் சாப்பிடவில்லை சார் என்றது அது. மனையாள் கொஞ்சம் காசு கொடுத்துப் போய் சாப்பிடும்மா என்றார்.

மீண்டும் புத்தகத்தேடல் ஆரம்பித்தது. ஆயிற்று ஐந்து மணி. ஒரு வழியாக எல்லா ஸ்டால்களையும் பார்த்து புத்தகங்களைப் புரட்டி தேவைக்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி வீடு வந்து சேர்ந்தோம்.

வந்ததும் பசங்க இருவரும் பேனாவை எடுத்து ஒவ்வொரு புத்தகங்களிலும் பெயரும் தேதியும் எழுதினார்கள். மனையாளுக்கு அடியேன் சலுகை விலை பொன்னியின் செல்வன் பதிப்பினை வாங்கிக் கொடுத்திருந்தேன். இருக்கும் வேலைப்பளுவில் அவர் ஐந்து பாகங்களையும் படிப்பதற்கு ஐந்து வருடம் ஆகும் என நினைக்கிறேன்.

உயிர்மையில் கூட்டம் இல்லை. அதே போல கிழக்குப் பதிப்பகத்திலும் அதிகம் இல்லை. காலச்சுவடு சொல்லவே வேண்டாம். புத்தகத்தை எடுத்தாலே திகீர் என்கிறது. ஒவ்வொன்றும் 200, 300, 500, 1000 என்று இருக்கிறது. 

குழந்தைகள் அதிகம் வந்திருந்தார்கள். குழந்தைகள்  புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. லயன் காமிக்ஸ் ஸ்டாலில் கூட்டம் அதிகம். ஆனால் அவர்களும் அதிக விலை வைத்து விற்கின்றார்கள். 50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் ஆங்கில நாவல்கள் கலர் கலரான புத்தகங்கள் விற்பனை செய்தார்கள். பையன் அங்கு சென்று கொஞ்சம் புத்தகங்களை கொண்டு வந்து என்னிடம் காட்டினான். ஒரு புத்தகத்தினை பிரித்தேன். கண்ணில் பட்ட வார்த்தை அய்யோ என கதறவிட்டது. அவனுக்கு இன்னும் கொஞ்சம் வயது வரட்டும் என்று நினைத்து மறுத்து விட்டேன். 

மனையாள் வெளிநாட்டு இலக்கிய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். ’உள்நாட்டு இலக்கியத்தைப் படிக்கவே முடியவில்லை. இதில் அயல் நாடு வேறா தூக்கித்தூரப்போடு’ என்றேன். பின்னே எரிச்சலாக இருக்காதா? கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளவே முடியாது. அந்தக் கலாச்சாரத்தைப் படித்து என்ன கிழிக்கப்போகின்றோம்? நமக்கெல்லாம் ஜானகிராமன் வகையறாக்கள் தான் சரிப்படும். பிகேபி, சுபா, ராஜேஷ்குமார் எல்லாம் படித்து ஏமாந்ததுதான் மிச்சம். பொட்டுப் பிரயோஜனம் இல்லை. இந்த நாசமாப்போகும் சினிமா, டிவிக்கு இந்தப் புத்தகங்கள் எவ்வளவோ பரவாயில்லை. 

கொட்டகையில் இருந்த புத்தக ஸ்டால்களில் கூட்டம் புத்தகங்களை அள்ளியது. வியாபாரம் சூப்பர் சார் என்றார் பில் போடுபவர். ஸ்டாலுக்கு பத்து நாளைக்கு 36000 ரூபாய் கட்டணமாம். ‘பின்னர் ஆள் கூலி, சாப்பாடு, ஹோட்டல் பில், போக்குவரத்துச் செலவு என்று அதற்குப் பிறகுதான் லாபம்’ என்றார். ’அதெல்லாம் தாண்டியாச்சு சார்’ என்றார் அவர் தொடர்ந்து. வளரும் பதிப்பாளர்கள் என்றொரு பகுதியில் ஒரு டேபிளில் கொஞ்சம் புத்தகங்களை வைத்திருந்தார்கள். ஒரு பெரிய புக் ஸ்டாலில் வாசலில் ஒரு பையன் நின்று கொண்டு உள்ளே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருந்தார். இதில் அயர்னி என்னவென்றால் கிண்டில் வேறு விற்றுக் கொண்டிருந்தார்கள். புத்தகத்துக்கும் கிண்டிலுக்கும் சரிப்பட்டு வருமா?

பசங்க இருவரும் புத்தகங்களை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டு சீரியசாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அடியேனும் தான். மனையாள் சமையல் செய்யச் சென்று விட்டார். அந்தப் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் கிச்சனையே பார்த்துக் கொண்டிருந்தன. 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.