குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 11, 2016

தூரத்தில் ஏதோ லட்சியம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல், அந்தச் சூழலுக்கு ஏற்ப சிந்தனைகள், செயல்கள், லட்சியங்கள் அதன் விளைவுகள். தினமும் எழுகிறோம் ஓடுகிறோம் தூங்குகிறோம் பின்பு எழுகிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அனைவருக்கும் ஒரே குறிக்கோள் - பணம். இதைத்தான் தேடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டே இருக்கின்றோம். குதிரையின் கண்ணுக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்படும் கொள்ளுப்பை போல லட்சியத்தை முன்னால் வைத்துக் கொண்டு ஓடுகிறோம்.

வீடு கட்ட வேண்டும். லட்சியம். வீடு கட்டி முடித்தாகி விட்டது அடுத்து? மீண்டும் தேடல் ஓடல். இந்த ஓட்டம் உடல் நோயில் விழும்போது முடிந்து விடுகிறது. பின்னர் ஆறுதல் தேடுகிறது, அடைக்கலம் தேடுகிறது. அன்பினைத் தேடுகிறது. கொடுப்பதற்கு எவருமில்லை. ஏனென்றால் ஆறுதல் தருபவரும், அடைக்கலம் தருபவரும், அன்பு தருபவரும் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.

லட்சியங்கள் நிறைவேற நிறைவேற எதிரில் வெற்றிடம் நின்று கொண்டிருப்பதை அதன் பிறகுதான் உணர முடியும். வெற்றி என்பது வெற்றிடத்தைத்தான் தரும். வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் ஒரே மாதிரியாக இரு என்பதன் அர்த்தம் என்னவென்று புரிந்து விடும்.

எனது நண்பரொருவன் சவுதியில் ஒட்டகம் மேய்த்து வீட்டுக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அவனின் அம்மா தன் மகள்களுக்கு அந்தப் பணத்தை முழுவதும் செலவு செய்திருக்கிறார். இது அவனுக்குத் தெரியவில்லை. பணம் மொத்தமும் அப்படியே இருக்குமென்று நினைத்துக் கொண்டு இந்தியா வந்திருக்கிறான். ஒரு தொழிலைத் தொடங்கலாம் என்று முடிவு செய்து அம்மாவிடம் பணம் கேட்க அம்மா கையை விரித்து விட்டார். எங்கே போனது பணமெல்லாம் என்று கேட்டபோது மகள்களுக்குச் செய்து விட்டேன் என்றாராம். தன் அக்காள்களிடம் உதவி கேட்டபோது அவர்கள் கை விரித்து விட்டார்கள். வீட்டுக்கு வந்திருந்தான். பிழியப்பிழிய அழுதான். எனது இந்தத் தியாகத்தை எனது சகோதரிகள் கூட மறந்து விட்டார்கள். என் பத்து வருட வாழ்க்கையை இழந்து சம்பாதித்த பொருளை வைத்து அவர்கள் வசதியானவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நானோ? அருவியாய் கொட்டியது கண்கள். அழுது முடித்தான்.

தியாகம் என்பது ஒரு சில புத்திசாலி அயோக்கியர்களுக்காக ஒருவரோ அல்லது பலரோ ஏமாற்றப்படுவது. அது உறவாக இருந்தாலும் சரி மதமாக இருந்தாலும் சரி. தியாகம் என்பது முற்றிலும் மனிதனை ஏமாற்றப்பயன்படும் ஒரு வார்த்தை அவ்வளவுதான். ஒரு அரசியல்வாதி தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காக தன் தொண்டனை தியாகி ஆக்குவான். மன்னன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போர் வீரனை தியாகி ஆக்குவான். யோசித்தால் எல்லாமும் ஒரு வகை சுய நலமாகத்தான் இருக்கும். ஒருவன் வாழ இன்னொருவன் தன்னை இழப்பதுதான் தியாகம் என்றால் அது ஒரு கொடுமை அல்லவா? கொலை என்றச் சொல்லை விட தியாகம் என்றச் சொல் படுபயங்கரமானது.

’போடா முட்டாப்பயலே, போய் வேற வேலை இருந்தாப்பாருடா’ என்றுச் சொல்லி முடித்ததும் அவனுக்கு சற்றே சந்தோஷம். ஏதோ கடை வைத்திருக்கின்றானாம். நன்றாக வியாபாரம் ஆகிறது தங்கவேலு என்கிறான். காசு வந்ததும் தியாகப் பிரச்சினை மறந்து விட்டது.

Wednesday, August 10, 2016

கோச்சிங் சரியில்லை

பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்கு நின்று கொண்டிருக்கையில் அருகில் நின்று கொண்டிருந்த மாணவியின் அம்மா ’பத்தாவது வரை தான் இந்த ஸ்கூலில் கோச்சிங் நல்லா இருக்காம். பனிரெண்டாம் வகுப்பிற்கு கோச்சிங்க் சரியில்லையாம்’ என்றுச் சொன்னதாக மனைவி சொன்னார். மனைவியின் உறவினர் ஒருவர் தன் குழந்தையை ஒவ்வொரு பள்ளியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். கோச்சிங் சரியில்லையாம்.

’தேர்வு எழுதுவது வாத்தியாரா? ஸ்டூடண்டா?’ என்று கேட்டேன். கோதை என் முகத்தையே பார்த்தார். ’அரசுப் பள்ளியில் படிக்கிறவர்கள் கூட இன்றைக்கு அதிக மார்க் எடுக்கின்றார்கள் கோதை அங்கெல்லாம் கோச்சிங் எப்படி இருக்கும் என்று யோசித்தாயா?’ என்று கேட்ட போது பேசாமல் இருந்தார்.

1992ல் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் வருவதற்கு முன்பே கணிணியில் பேசிக், ஃபோர்ட்டான், பாஸ்கல், கோபால், சி லாங்குவேஜ்களைப் படிக்க முயன்று பல்வேறு மனப்பிறழ்வுகளுக்கு உட்பட்டவன் அடியேன். ஒரு சாதாரண கூட்டலைக்கூட பேசிக் மொழியில் எழுத வராது. அதன் வரிசை என்று ரெம் என்றால் என்ன என்ற கேள்வி இப்படி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு தான் பேசிக் லாங்குவேஜின் புரோகிராமிங் டெக்னிக்கே புரிபட்டது. அடுத்து போர்ட்டான், பாஸ்கல், கோபால் மொழிகள் எல்லாம் என்னை படாத பாடு படுத்தின. விண்டோஸ் 3.1 என்று நினைக்கின்றேன். ஒரே ஒரு கணிணியில் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தார்கள். கலர் மானிட்டரெல்லாம் காஸ்ட்லி. அதில் வரும் சில படங்களைப் பார்க்கையில் சுவாரசியமாக இருக்கும். பூண்டி கல்லூரியில் படிக்கும் போது முதல் செமஸ்டரில் தமிழில் மட்டும் அதிக மார்க். 92 மார்க் என்று நினைக்கிறேன். மற்ற சப்ஜெக்டில் ஆவரேஜ். எல்லாம் ஆங்கிலம். யாருக்குப் புரியும்? ஆனால் எனது சிறு வயதில் ஜோசப் வாத்தியாரால் அறிமுகம் செய்யப்பட்டு தினமும் ஹோம் வொர்க்காக எழுதிச் சென்ற பனிரெண்டு வகை வாக்கியங்களால் எனக்கு மனதில் தைரியம் வர ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ள முயன்றேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். சுஜாதாவெல்லாம் கல்லூரிக்கு வந்திருந்தார். என்னவோ மீட் நடத்தினார்கள் சீனியர்கள். அவரிடம் பேச மாணவர்கள் அலைமோதினர். நானெங்கே பேசுவது? ஒரு சீனியர் மாணவர் சேலத்தைச் சேர்ந்த சசிகுமார் எனக்கு நண்பர், அவர் மூலமாக ஒரே ஒரு பேக் கிடைத்தது. கொடுத்த காசுக்கு வசூல் செய்து விட்டேன். இதர மாணவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

காலம் மாறியதில் பேசிக் எல்லாம் ஓடிப்போய் விட்டன. இப்போது என்னென்னவோ புதுப்புது மொழிகள் வந்து விட்டன. சாஃப்ட்வேர் படித்தவரெல்லாம் அமெரிக்கா சென்று லட்ச லட்சமாய் சம்பாதித்தார்கள். பி.எஸ்.சி முடித்ததும் எனக்கும் ஆசை வர நானும் மைக்ரோசாஃப்ட் எம்.சி.எஸ்.சி படித்து ஆன்லைனில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். ஊனமுற்றவன் என்பதால் எனக்கு அமெரிக்க கதவு மூடப்பட்டு என் கனவுக்கும் குழி வெட்டப்பட்டது. ஒரு சாதாரணவன் எளிதில் கற்று விடும் கல்வி எனக்கு படுபயங்கர வலிகளைக் கொடுத்தது. இருப்பினும் அதையெல்லாம் நானொரு ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஒரு கிலோ மீட்டர் தூரம் முட்டிபோட்டு வெறுங்காலில் சூடு கொப்பளிக்கும் கப்பிக்கல் சாலையில் தவழ்ந்து சென்ற போது எனக்கு கால் மட்டும் தான் வலிக்கும். மனது அது பாட்டுக்கு இருக்கும். அமெரிக்க கதவினை எம்பசியில் மூடியபோதுதான் அம்மா மீது கோபம் கொப்பளித்தது. அன்றே கொன்று விட்டிருந்தால் இன்றைக்கு இந்த அவமானம் எனக்கு ஏற்பட்டிருக்குமா என்று மனது கொந்தளித்தது. நான் வெகு சிரமப்பட்டு படித்த எம்.சி.எஸ்.சிக்கு இப்போது மதிப்பில்லை.  

பள்ளியில் படிக்கும் போது வகுப்பில் முதல் மார்க். எனக்கும் என் மச்சான் பிரான்ஸிஸ்காசனுக்கும் போட்டியோ போட்டி. பத்தாவது வரை அப்படித்தான். என் கூடப்படித்த மாணவி உமாவின் அப்பா டீக்கடையும், ஹோட்டலும் வைத்திருந்தார். அவர் ஜோசியம் கூட பார்ப்பாராம். அம்மா அவரிடம் என் ஜாதகத்தைக் காட்டினாராம். அவர் சொன்னாராம் உன் பையன் பட்டனைத் தட்டித்தான் சம்பாதிப்பான் என்று. அம்மாவுக்கு அப்போது டெலிபோன் பட்டன் தான் தெரியும். எனக்கு டியூசன் சொல்லிக் கொடுத்த ஓவிய வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி தங்கி இருந்த வீட்டுக்கு அருகில் டெலிபோன் எக்சேஞ்ச் இருந்தது. அங்கு சென்று பார்ப்பேன். இங்கு தான் எதிர்காலத்தில் வேலை செய்யப்போகின்றேனோ என்று கேள்வி இருந்தாலும் ஐயர் சொல்லிட்டாரு அது சரியாகத்தான் இருக்கும் என்ற நினைப்பில் டெலிபோனை ஆர்வத்துடன் பார்த்து வருவேன்.

என்னென்னவோ தொழில் செய்து தற்போது ரியல் எஸ்டேட்டில் மையம் கொண்டிருக்கிறேன். என் மச்சானோ தோல் பாக்டரியில் வேலை செய்து ஊரில் பெரிய வீடு கட்டிக்கொண்டிருக்கின்றான். இந்த ரியல் எஸ்டேட் தொழிலிருக்கிறதே முகம் தெரியாத வில்லன்களுடன் மோதுவது போன்றது. மனிதனைப் எளிதில் படித்து விடும் அற்புத அறிவினை எனக்கு இந்தத் தொழில் கற்றுக் கொடுத்துள்ளது. அரசியல் தானாகவே எனக்குள் முளை விட ஆரம்பித்துள்ளது. 

ஆரம்ப காலத்திலிருந்து பத்தாவது வரை முதல் மதிப்பெண் பெற்ற எனக்கு அந்த மதிப்பெண்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது முகத்தில் படீரென்று அறையும் உண்மை. வருடா வருடம் ஸ்டேட்டில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் எல்லோரின் தற்போதைய நிலை என்னவென்று பார்த்தால் கொடுமையாக இருக்கும். எதார்த்தம் என்னவென்றே தெரியாத நிலையில் தங்கள் பிள்ளைகளைப் படாத பாடு படுத்தி படிக்கச் சொல்லி துன்பப்படுத்தும் பெற்றோர்களில் நூற்றில் 99 சதவீதமானோர் கானல் நீரைத்தான் பார்க்கப் போகின்றார்கள்.

வாழ்க்கை என்பது பணம் சம்பாதிக்க இல்லை. வாழ்க்கை என்பது வாழ்வதற்கு என்று புரிய வரும் போது எல்லாம் கையை மீறிப் போய் இருக்கும். பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்போரின் மொத்தப் பணமும் கார்ப்பொரேட் சாமியார்கள் வசம் சென்று சேர்ந்து விடும்.

நிலையில்லா ஒவ்வொரு பொழுதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பி.ஈ படித்த ஒரு பெண் என்னிடம் 1500 ரூபாய் சம்பளம் தர முடியுமா? என்று கேட்டார்.  இன்றைக்கும் 5 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து விட்டு வேலையின்றித் தவிக்கின்றார்கள். கொட்டிக் கொடுத்த பணம் கையில் இருந்தால் அவனொரு தொழிலைச் செய்து கொண்டிருப்பான். அதுவும் போச்சு இதுவும் போச்சு. 

குழந்தைகளுக்கு கல்வியைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். நான்கைந்து மொழிகளைக் கற்றுக் கொடுங்கள். வேறு ஏதேனும் தொழில் சார்ந்த இணைப்படிப்புகளைக் கற்றுக் கொடுங்கள். அது அவர்களுக்கு எதிர்காலத்தில் மிக உதவியாய் இருக்கும்.

அதை விடுத்து கோச்சிங் சரியில்லை என்று ஆரம்பித்தால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை.

Sunday, August 7, 2016

ஆதண்டங்காய் வற்றல்

நீளமான பச்சை மிளகாய் ஒரு மூட்டை, கத்தரிக்காய் ஒரு மூட்டை, கொத்தவரங்காய் ஒரு மூட்டை, அரிசி வடகம், பெரிய மாமரத்து அட மாங்காய் ஊறுகாய், வெந்தய மாங்காய் ஊறுகாய் என கோடைக்காலத்தில் அம்மா தயாரிப்பார்கள். நீளமான பச்சை மிளகாயில் ஓட்டை போடணும். அப்போதுதான் உப்புச்சாறு உள்ளே இறங்கும். அதற்கு விளக்குமாத்துக் குச்சியையும், கோணி ஊசியையும் பயன்படுத்துவேன். சக்சக்சக்சக் என்று நான்கு குத்து மிளகாயின் மேல். உப்பில் ஊறப்போட்டு வெயிலில் காய வைப்பார்கள். கத்திரிக்காயை நான்காக வகுந்து வேக வைத்து வெயிலில் காய வைப்பார்கள். 

இதெல்லாம் குருவைச்சாகுபடி செய்யும் போது வயலில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு கொண்டு செல்லும் காலை உணவிற்கு சைடு டிஷ். ஐந்து ஐந்து அடுக்காய் பிரித்துக் கட்டி வைக்கப்படும் பனைமரத்து ஓலையை வாகாய் குழித்து கட்டி சூடான கஞ்சியுடன் மாங்காய் ஊறுகாய், வடகம் வற்றலுடன் ஒரு கும்பாய் சோறு குடிப்பார்கள் வேலைக்காரர்கள். பெரிய தவலைப்பானையில் சுடுசோறு, தயிர் கலந்து அம்மா வயக்காட்டுக்கு தூக்கிச் செல்வார்கள்.

ஆதண்டங்காய் என்றொரு வஸ்து. பச்சைப்பசேல் என்றிருக்கும் அந்தக் காய். அதை அறிந்து வற்றல் போடுவார்கள். அதை எண்ணெயில் பொறித்துச் சாப்பிட்டால் கசப்பும் துவர்ப்புமாக கறித்துண்டு போல இருக்கும். கோவையில் நான் தேடாத இடமில்லை. சலித்தே போய் விட்டது. 

(இதுதான் அந்த ஆதண்டங்காய். வற்றல் ஊரில் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வீடு வந்து சேரும் என நம்புகிறேன்)


அதே போல குண்டுச்சுரைக்காய். கோவை உக்கடம் மார்க்கெட்டிலிருந்து தேடாத இடமில்லை. குண்டுச் சுரைக்காயைத் தேடி சலித்து விட்டேன். ஒரு முறை ஈரோடு சென்றிருந்த போது இரண்டு சுரைக்காய் கிடைத்தது. அடுத்து கரூரிலிருந்து கோவை வந்து காய்கறி கடை வைத்திருந்த ஒரு பெண்மணி கொண்டு வந்து தந்தார். இப்போதெல்லாம் சுரைக்காய் பீர்க்கங்காய் போல இருக்கிறது. குண்டுச் சுரைக்காயுடன் இரால் சேர்த்து குழம்பு வைத்து தருவார் மனைவி. அதன் வாசமும், இரால் வாசமும் சேர்ந்து சும்மா அள்ளும்.

நேற்று இரவு ஒரு நண்பரின் குடும்பப்பிரச்சினைக்காக வக்கீல் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். நேரமாகி விட்டதால் கோர்ட்டு அருகில் இருக்கும் அன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டலில் ஒரு ரோஸ்ட் வாங்கி வந்தேன். வீட்டுக்கு வந்து பார்சலைப் பிரித்து ரோஸ்ட், சாம்பார், தக்காளிச்சட்னி, தேங்காய்ச் சட்னியை தட்டில் வைத்தார் மனையாள். வாயில் வைக்க முடியவில்லை. ரோஸ்ட் இனித்தது. சாம்பார், தக்காளிச்சட்னி, தேங்காய் சட்னி அனைத்தும் இனித்தது. 

விஜய் டிவியில் சமையல் சமையல் நிகழ்ச்சி நடத்தும் வெங்கடேஷ் பட் ஒவ்வொரு சமையலிலும் சுகரைச் சேர்ப்பார். அவருக்குப் பிடிக்குமாம். சுத்தப் பைத்தியக்காரத்தனமான குறிப்பு அது. ஆனால் அதை அவர் தொடர்ந்து தன் சமையல் குறிப்புகளில் செய்து வருகிறார். 

கடந்த நாட்களில் சென்னை வடபழனியில் இருக்கும் பிரசாத் ஸ்டூடியோ அருகில் இருக்கும் ஸ்டுடியோ 36 ஹோட்டலில் தங்கி இருந்த போது சரவணபவன் ஹோட்டலில் இருந்து சாப்பாடும், டிபனும் வரும். அனைத்திலும் சுகர். அடுத்த நாள் பார்வதிபவனிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார்கள் அதிலும் இனிப்பு. வாயில் புண் வந்து விட்டது.

சாப்பாட்டில் ஊற்றப்படும் சாம்பார் இனிக்கிறது. ரசம் புளியோடு சேர்ந்து இனிக்கிறது. எந்த வீட்டிலும் சாப்பிடப்போனாலும் ஒரே வகையான சாம்பார் சுவைதான். மிளகின் காரத்தோடும், புளியும் சேர்ந்து அத்துடன் பூண்டு சீரகத்தின் சரியான கலவையில் ஒரு கொதியில் வீடெங்கும் பரவும் ரசத்தின் மனம் இப்போதெல்லாம் எங்கும் கிடைப்பதில்லை. ஏனென்றால் ரசத்தில் கலக்கப்படும் அந்த மசாலா ரெடிமேடாக கிடைத்து விடுகிறது. எந்தப் பெண்ணும் ரசத்துக்கு பொடி தயாரிப்பதில்லை.

தஞ்சாவூர் பக்கம் சாம்பாரில் சீரகம் சோம்பு, பூண்டு அரைத்து புளி சேர்த்த பிறகு சேர்ப்பார்கள். அதன் வாசமும் குழம்பின் சுவையும் அற்புதமாய் இருக்கும். கொறவை மீனைச் சுத்தப்படுத்தி (இந்த மீன் தண்ணீர் இல்லையென்றாலும் நீண்ட நேரம் உயிரோடு இருக்கும்) மிளகாய் பொடியும், புளியும் சரியான விகிதத்தில் சேர்ந்து கொதிக்க வைத்து அத்துடன் புளிப்பான மாங்காயைச் சேர்த்து குழம்பு கொதிக்கும் போது கொறவை மீனைப் போட்டு இறக்கி வைத்து சுடு சோற்றில் ஊற்றிச் சாப்பிட்டால் நாக்கில் தெரியும் அந்தச் சொர்க்கம். ஹோட்டல் மீன் குழம்பில் வினிகரைச் சேர்த்து விடுகின்றார்கள்.புளிக்குழம்பில் கூட வினிகரைச் சேர்த்து விடுகின்றார்கள். நான்கு நாட்கள் தொடர்ந்தாற்போல ஹோட்டலில் சாப்பிட்டால் போதும் நன்றாக இருக்கும் உடம்பு நாறி விடும்.

இப்படியெல்லாம் இருந்த குழம்பின் சுவைகள் இன்றைக்கு முற்றிலுமாக மாறிப் போய் விட்டது. நம்பிச் சாப்பிட வருபவர்களை நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன இப்போதைய ஹோட்டல்கள். மேற்கண்ட தோசையையும், சாம்பாரையும் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வராமல் என்ன செய்யும்?

தமிழர்களுக்கு என இருந்த உணவு பதார்த்தங்கள், பாரம்பரியமான விளையாட்டுக்கள், விழாக்கள், கோவில்கள், உடைகள், இசை, பாடல்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. தமிழர் பாரம்பரியம் தன் முகத்தை இழந்து கொண்டே இருக்கின்றது. ஒரு சில அதிபுத்திசாலிகள் இந்தக் காரியத்தைச் செவ்வனே செய்து வருகின்றார்கள். ஆனால் இங்கிருப்பவர்களோ எதற்கெடுத்தாலும் நியாயம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

யூதர்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காத்துக் கொண்டதைப் போல தமிழர்களும் தங்கள் பாரம்பரியத்தைக் காத்துக் கொள்ள முயற்சிக்காவது வேண்டும். இல்லையென்றால் எங்கோ காங்கோ காடுகளில் வாழ்ந்து வரும் மக்களைப் போல நாமும் மாறி விடுவோம்.

Tuesday, August 2, 2016

மாறும் உறவுகள் சிக்கலில் எதிர்கால சந்ததிகள் இறுதிப்பகுதி


வீட்டிற்கு வந்தவுடன் என்னை எதிர்பார்த்து இரண்டு நபர்கள் உட்கார்ந்திருந்தனர். ஒருவர் எனது நண்பர். இன்னொருவர் அவரின் நண்பர். பிற விஷயங்களைப் பற்றி விசாரித்து விட்டு வந்த நோக்கமென்ன என்று வினவினேன். ”என்னை ஏதாவதொரு ஆசிரமத்தில் சேர்த்து விடுங்க” என்றார். ஏனய்யா அதற்குள் அவசரப்படுகிறாய்? என்று நினைத்துக் கொண்டு மேலும் விசாரிக்க ஆரம்பித்தேன்.

அவரின் இரண்டு குழந்தைகளும் ஆளுக்கொரு பக்கமாய் காதல் செய்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்களாம். இவருக்கும் மனைவிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். திருமணம் நடந்ததே எங்களுக்குத் தெரியாது. திடீரென்று குழந்தையுடன் வந்து நின்றார்களாம். உறவுக்காரர்களுக்கு கூட தெரியாதாம். இப்போது இந்த விஷயம் தெரிந்து அனைத்து உறவினர்களும் துக்கம் கேட்பது போல வீட்டுக்கு வந்து செல்கின்றார்களாம். இப்படி பல பிரச்சினைகளால் மனசு சரியில்லாமல் போய் விட்டதாம். ஆகவே இருக்கும் சொத்துக்களை தன் பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விட்டு ஆசிரமம் சென்று விடுகின்றார்களாம். அதற்கு நான் உதவி செய்ய வேண்டுமாம். வழி தேடி வந்துள்ளார். அவரின் பிரச்சினை இப்போது எனக்குள் வந்து விட்டது.

எனக்கொரு நண்பர் சென்னையில் இருக்கிறார். டிரேடிங் பிசினசில் கொடி கட்டிப்பறந்தவர். கார்னெட் மணல் ஏற்றுமதியில் நம்பர் ஒன்னாக இருந்தவர். அவர் செல்லாத நாடுகளே இல்லை எனலாம். ஒவ்வொரு நாட்டிலும் தொழில் அவருக்கு இருந்தது. நானும் எனது நண்பரும் ஆஃப்ரிக்கா நாடுகளுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் வாக்சின் ஊசி போட்டுக் கொள்ள சென்றிருந்தோம். அப்போது அவரின் வீட்டில் தான் தங்கி இருந்தோம். வீட்டில் அவரும் அவரின் மனையாளும் மட்டும் தான் இருந்தனர். அவரின் பெண் குழந்தைகள் எங்கே என்று விசாரித்தேன். அமெரிக்காவில் இருக்கின்றார்கள் என்று வருத்தமாகச் சொன்னார். மேலே எனது நண்பர் சொல்லிய அதே காரணம் தான். என்ன ஒன்று அவரின் பெண் ’நாளைக்கு எனக்கு கல்யாணம்ப்பா’ என்று போனில் சொல்லியதாம். இவரால் தடுக்கவா முடியும்? ’சரிம்மா நல்லா இரு’ என இருவரும் வாழ்த்தி இருக்கின்றார்கள். அன்றிலிருந்து ஆமை தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல இருவரும் ஆகி விட்டார்கள்.


வாழ்க்கை என்னதென்று தெரியாமல் வாழ்ந்து இறந்து போகும் மானிடப்பிறவி அல்லவா? ஆகவே அவர்கள் இருவரும் நிதர்சனம் என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை இனிமேல் ஒன்றுமில்லை என்பது போல மாற்றிக் கொண்டு விட்டார்கள். காமமும், இறப்பும் மனிதர்கள் வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. ஆனால் மனித சமூகம் காமத்தைப் பற்றிப் பேசாதே என்றுச் சொல்லிகொடுத்து வருகிறது. சாவைப் பற்றிப் பேசாதே என்று பயமுறுத்தி வருகின்றது. காமம் மனித வாழ்வினை பிரதி நிதிப்படுத்துவதை மறைத்து விடுகின்றார்கள். அது பாவம் என்கிறார்கள். சாவு என்பது கொடுமையானது என்று பயமுறுத்தி விடுகின்றார்கள். மனிதன் உருவானதே காமத்தால் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல சாவதும் உண்மை. ஆனால் இவை இரண்டும் மாபெரும் மறைவுப் பொருளாய் மாற்றப்பட்டுள்ளன.

காமத்தால் மனிதன் தன்னைப் பிரதிநிதிப்படுத்துக் கொண்டிருக்கின்றான். அவ்வாறு அவன் செய்யும் போது பிரதியை நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று எப்படி உத்தரவு போட முடியும்? வாழ்வு முடிந்ததும் பிரதி உன்னைத் தொடர்ந்து பிரதிநிதிப்படுத்துவான். இதில் ஏன் இருவரும் துன்பப்பட வேண்டும்? உலகிற்கு வந்தீர்கள், வாழ்ந்தீர்கள், உங்கள் பிரதியை நீங்கள் விட்டுச் செல்வீர்கள். அந்தப் பிரதி தனக்கான வாழ்வைத் தானே வாழ்ந்து விட்டுச் செல்லட்டுமே? ஏன் அந்தப் பிரதியின் வாழ்வையும் நீங்களே வாழ முயல்கின்றீர்கள் என்றொரு கேள்வியை என் நண்பரைப் பார்த்துக் கேட்டேன்.

அவருக்குள் என்ன தோன்றியதோ தெரியவில்லை. காஃபி வேண்டுமென்று கேட்டார். குடித்ததும் வீட்டுக்குச் சென்று விட்டார். மறு நாள் காலை போனில் அழைத்தார்.

“தங்கம், மனசு இலேசாகி விட்டதுப்பா, நானும் என் மனையாளும் சந்தோசத்துடன் இருக்கிறோம்” என்றார்.

இதைத்தவிர வேறென்ன வேண்டும் எனக்கு? அவரின் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டார் என்றால் அவரின் வாழ்க்கை மகிழ்வானதாகத்தானே இருக்க முடியும்?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இனி எதிர்கால சந்ததியினர் பிரச்சினைக்கு வருவோம். தனி மரம் தோப்பாகுமா? என்று எவரும் யோசிப்பதில்லை. தன் சுகம், தன் வாழ்க்கை, தன் குழந்தை என்று இருப்போர்களின் கடைசிக் கால வாழ்க்கை ஏதாவதொரு முதியோர் காப்பகத்தில் முடிந்து விடும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. நான் சம்பாதிக்கிறேன், என் வாழ்க்கை, நானே முடிவெடுப்பேன் என்று நினைத்து அதன்படி வாழ்க்கை நடத்துவது எந்தளவுக்கு முட்டாள்தனம் என்று நினைத்துப் பார்க்க வேண்டிய காலம் இது. அமெரிக்காவில் கூட குடும்பங்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றன.

மனிதனின் வாழ்க்கைப் சகமனிதனைச் சார்ந்தே இருக்கின்றன. அதுதான் அமைப்பே! உண்மையை உணருங்கள். வாழ்வினைச் செழிப்பாக்குங்கள்.

Friday, July 29, 2016

எம்.எல்.ஏ தொடர் (6) - பசி பட்டினி வீடில்லாதவர்கள் சரி செய்ய என்ன வழி?

சுதந்திரம் தன்னை யாரோ என்னவோ செய்து கொண்டிருப்பதாக மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார். சுதந்திரம் எம்.எல்.ஏவிடம் அடிமையாக இருப்பதை அவர் இதுவரைக்கும் புரிந்து கொள்ளவில்ல. ஆனால் அவ்வப்போது அவரின் மனசாட்சி அவரை குத்திக் கொண்டே இருக்கும். இருந்தாலும் அவரால் எம்.எல்.ஏவை விட்டு சென்று விட முடியாது. அது தானே ஜனநாயகம்?

அனைவரும் இந்திய நாட்டில் அனைவரும் சமம், அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது தான் ஜன நாயகம் என்று தெரிந்து கொள்வது மட்டும் தான் என்பது சுதந்திரத்திற்கு இன்னும் புரியவில்லை. ஜனநாயகம் என்றால் என்ன கேள்விக்குப் பதில் மட்டும் தான் தெரிய வேண்டும். உரிமை என நினைத்து விடக்கூடாது என்று எங்கோ படித்ததாக அவருக்கு அடிக்கடி நினைவு வந்து விடும். 

விடிகாலையில் நடைபயிற்சி செல்ல வேண்டும் என்று எம்.எல்.ஏ சொல்லி விட்டதால் அவருடன் சுதந்திரமும் நாய்க்குட்டி போல கூடச் சென்றார். வழியில் நடைபாதையில் ஆங்காங்கே மக்கள் அழுக்குப் போர்வைக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

சுதந்திரம் எம்.எல்.ஏவைப் பார்த்து “ஏண்ணா! இதையெல்லாம் சரி செய்யவே முடியாதா? வழியே இல்லையா?” என்றார்.

“யோவ், ரொம்ப யோசிக்காதே” என்று பொரிந்தவர், போனாப் போறான் இவனெல்லாம் யோசிச்சு என்னத்தைக் கிழிக்கப் போறான் என நினைத்துக் கொண்டு, ”யோவ் உனக்குப் புரியறா மாதிரி சொல்றேன் கேட்டுக்க! ஒருத்தன் பத்து ரூபாயை எடுத்துக்கிட்டு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனா ஓரளவு சாப்பிட்டு விடுவான். அதே பத்து ரூபாயை எடுத்துக்கிட்டு நாலு பேரு போனா சாப்பிட முடியுமாய்யா? நம்ம நாட்டுல மக்கள் தொகையும் பெருகுது வருமானமும் பெருகுது. ஆனா பெருகும் வருமானத்தில் முக்கால் வாசி காணாமப்போகுது. அந்தக் காணாமப் போவதைத் தடுத்தால் இந்தியாவில் இருப்பவன் ஒவ்வொருவரும் கோடீஸ்வரனாகத்தான்யா இருப்பான். ஆனா அந்தக் காணாமப்  போறது மட்டும் நிக்காதய்யா?  புரிஞ்சுதாய்யா?” என்றார் எம்.எல்.ஏ.

“ஒண்ணும் புரியலண்ணே!”

”உனக்குப் புரிஞ்சாலும் என்னய்யா செய்யப்போறே, பேசாம நட!” என்றார் எம்.எல்.ஏ.

Wednesday, July 27, 2016

எம்.எல்.ஏ தொடர் (5) - ஜல்லிக்கட்டு தமிழர்களின் தெய்வ வழிபாடு

யெம்மெல்லே காரில் சுதந்திரத்துடன் சட்டசபைக்குச் சென்று கொண்டிருந்தார். சுதந்திரம் யோசனையில் இருந்தார். சுதந்திரத்தின் முகத்தைப் பார்த்த எம்.எல்.ஏவுக்கு சிரிப்பு வந்தது. ’இவனெல்லாம் என்னத்தை யோசித்து என்னத்தைக் கிழிக்கப்போறானோ? சுதந்திரம் பெயரில் மட்டும் தான் இருக்கிறது என்பதை அவன் இதுவரைக்கும் உணரவே இல்லையே முட்டாப்பய’ என்று நினைத்துக் கொண்டார்.

”என்னய்யா சுதந்திரம்! யோசனையாவே இருக்கீயே? என்னா விஷயம்?”

“அண்ணே! இந்த ஜல்லிக்கட்டை நினைச்சேன்யா? கொன்னா தப்பு இல்லையாம், ஆனால் விளையாடினா தப்பாம். இது என்னங்கய்யா நியாயம்?”

“அட அதுவாய்யா? விஷயத்தைச் சொல்றேன், குறுக்க குறுக்க கேள்வி கேட்டு லொள்ளு பண்ணாதய்யா” என்றவர் தொடர்ந்தார்.

“நேற்று ஆயுத எழுத்து விவாதத்தில் பெருமாள் என்பவர் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அபிடவிட்டில் கிருஷ்ணர் காளையை அடக்கி விளையாண்டார் என்றும் அது மத சம்பந்தப்பட்டது என்பது போலவும் ஒரு பாயிண்டை குறிப்பிட்டிருந்தார்கள் என்றார். இதில் நுண்ணரசியல் இருக்கிறது என்றார். அது சரிதான்யா. 

நம்ம சிவன் கோவிலில் பார்த்தாய் என்றால் காளை மாடுதான் சிவனுக்கு வாகனம். காளை மாட்டினை நாமெல்லாம் வணங்குகிறோம். அதற்கு பல்வேறு உதாரணங்கள் உண்டு. ஆனால் இதைப் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. அதுமட்டுமல்ல சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ’பாரம்பரியம் என்பதாலே மாடுகளை வதைக்க அனுமதிக்க முடியாது’ என்கிறார்கள். 


மஞ்சு விரட்டு என்பது பாரம்பரியம் இல்லைய்யா. அது மத வழிபாட்டு முறை. தமிழர்கள் தான் உலகிலேயே மாட்டுப் பொங்கல் வைத்து மாடுகளை வணங்குபவர்கள். பசு மாடுகளுக்கு லட்சுமி என்று பெயர் வைப்பவர்கள். கோவிலுக்கு காளைகளை நேர்ந்து விடுவர். அவ்வாறு நேர்ந்து விடும் காளைகள் வயற்காட்டில் பயிர்களை மேய்ந்தால் கூட யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். இவ்வாறு தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றினைந்து தமிழரின் தெய்வ வழிபாட்டோடு கூட இருக்கும்  மாடுகளையும், ஜல்லிக்கட்டினையும் வேறு வழியில் திசை திருப்புவது இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்றே நம்ப வேண்டியிருக்கிறது. இந்திய அரசு தன் அபிடவிட்டில் நான் மேலே சொல்லி இருப்பதைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதை என்னவென்று புரிந்து கொள்வது?

அது மட்டுமல்ல கிருஷ்ணர் ஜல்லிக்கட்டினார் என்று அபிடவிட்டில் சொல்வது சரியில்லை. இங்கு தமிழகத்தில் இருக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்களில் இருக்கும் நந்திகள் சொல்லும் சாட்சியத்தினை ஏன் மத்திய அரசு குறிப்பிடவில்லை என்று புரியவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது மிக வலுவான ஆதாரங்களையும், அதற்கான சாட்சி ஆவணங்களையும் கொடுத்தால் நீதிபதிகள் நிச்சயம் அது பற்றி பரிசீலிப்பார்கள். 

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒரு சிலருக்கு இருக்கும் நோக்கம் போல தெரிகிறது. இயற்கை விவசாயத்தை அழித்த பிரிட்டிஷ் அரசு போல தமிழர்களின் வாழ்வியலை சீரழிக்கும் போக்கு ஒரு சில ஆதிக்க மனப்பான்மை கொண்ட சக்திகளுக்கு இருக்கிறது என்பது உண்மை என்பது போல நடக்கக்கூடிய சம்பவங்கள் சொல்கின்றன.

அதுமட்டுமல்லய்யா சுதந்திரம். இன்னொன்றையும் உன்னிடம் சொல்லி விட வேண்டும். இந்து மதம் என்பது இந்தியாவில் தெய்வ வழிபாட்டினை கொண்டுள்ளவர்கள் அனைவரையும் இணைத்து இந்து மதம் என்றுச் சொல்கிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சில புத்திசாலித்தனமுள்ள ஆதிக்கவர்க்கத்தினர் இந்து மதம் என்ற பெயரால் ஒவ்வொரு இன வழிபாடுகளை, முறைகளை, பாரம்பரியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட முயல்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறதய்யா? அப்படி சிதைத்து விட்டால் பல இன மக்களின் வழிபாட்டினை ஒரே முறையாக்கி அதற்கு தலைவராகி விடலாம் என்றொரு கருத்தும் பலராலும் முன் வைக்கப்படுகிறது.

நம் தமிழர் ஜல்லிக்கட்டின் பாரம்பரிய காரணத்தைக் கூட இவ்வாறு சிதைத்து விட முயல்கின்றார்களோ என்று அந்தப் பெருமாள் பேசியதில் விஷயம் இருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறதய்யா. 

விஷயம் புரிகிறதாய்யா? இனி மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்.


Saturday, July 23, 2016

எம்.எல்.ஏ தொடர் (4) - ரங்கராஜ் பாண்டேவின் கபாலி விவாதம்

சுதந்திரமும் யெம்மெல்லேயும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டிவியில் பாண்டே கபாலி திரைப்படம் வரமா? சாபமா? என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருந்தார்.

அவ்வப்போது சுதந்திரம் யெம்மெல்லேவின் முகத்தினைப் பார்ப்பதும் டிவியைப் பார்ப்பதுமாக இருந்தார். சுதந்திரத்துக்கு யெம்மெல்லே ஏதாவது பொன்மொழி சொல்வார் என்று ஆர்வம்.

யெம்மெல்லேவுக்கு கடும் கோபம். இந்தச் சுதந்திரத்திற்கு இதே பொழைப்பாப் போச்சு என. இருவரும் டிவியை விடாது பார்த்துக் கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சி முடிந்தது. சுதந்திரம் யெம்மெல்லேவைப் பார்த்தார். 

”நான் அடிக்கிறது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழுன்னு சொல்வாங்களே? அதுதான்யா இது!”

”சுதந்திரம்! மீடியா, சினிமா, அரசியல் மூன்றுமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்துள்ளதுய்யா. ஒருவரை விட்டு ஒருவர் வாழவே முடியாதுய்யா. அது பாண்டேவுக்கு நல்லா தெரியும். இருந்தாலும் கேள்வியைக் கேட்பார். டிக்கெட் விற்பனை குறித்து வழக்குப் போட்டவரிடம் பாண்டே அடுத்தடுத்து என்ன கேட்டார் என்று பார்த்தாயா? நீங்கள் ஏன் சினிமாவுக்கு மட்டும் வழக்குப் போடுகிறீர்கள்> மற்ற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றனவே அதற்கெல்லாம் வழக்குப் போட்டால் என்ன? என்று கேட்டு விட்டு வழக்குப் போட்டவரையே தான் செய்தது தவறு என்பது போல காட்டி விட்டார். அதுதான் மீடியா? அது யாருக்காக வேலை செய்கிறது என்று பார்த்தாயா? இது என்றைக்கும் மாறப்போவதில்லை, மாறவும் விட மாட்டார்கள். என்ன புரியுதாய்யா?” என்றார் யெம்மெல்லே.

சுதந்திரம் தனக்குள் நினைத்துக்கொண்டார் இப்படி.

கபாலி மேட்டர் இரண்டு டிவிக்களில் விவாதம் செய்தவுடன் அடங்கி போய் விடும். அவ்வளவுதான். அடுத்த வேலைக்குச் சென்று விடுவார்கள். அவர் இப்படிப் பேசினார், இவர் இப்படிப் பேசினார் என்று கருத்துக்களைப் பறிமாறிக் கொள்வார்கள். அதுமட்டும் தான் இந்தச் சுதந்திர நாட்டில் முடியும்.

சுதந்திரம் சோகமாக இருந்தார்.


மாறும் உறவுகள் சிக்கலில் எதிர்கால சந்ததிகள் பகுதி 1

ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 75 வருடங்களாக பீடு நடை போட்டு வந்த ஒரு மதுரையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சமீபத்தில் வங்கியில் வாங்கிய கடனுக்காக என்.பி செய்யப்பட்டது. 2000 தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். வங்கி அத்துடன்  விடவில்லை அந்த நிறுவனத்தினை உருவாக்கியவர் இறந்து விட, அவரின் மகள் தன் சுய சம்பாத்தியத்தில் நடத்தி வந்த நிறுவனத்தின் மீதும் கடனைக் கட்ட வழக்குப் போட்டது. அந்த நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் தனியாக வழக்குப் போட்டு அந்தப் பெண்ணையும், அம்மாவையும் கைது செய்து விட்டனர். பிரச்சினை விஸ்ரூபம் எடுத்து நிற்க என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற நேரத்தில் அவர்களை எனது நண்பரொருவர் என்னிடம் அழைத்து வந்தார்.

மாறும் உறவுகள் சிக்கலில் எதிர்கால சந்ததியினர் என்று தலைப்பிட்டு விட்டு ஏன் பிசினஸ் பற்றி எழுதுகிறேன் என்று உங்களுக்கு தோன்றும். நிச்சயம் தோன்ற வேண்டும். காரணம் இருக்கிறது.

ஒரு காலத்தில் நான் கணிணி விற்பனை செய்து வந்தேன். இதுவரை எனக்கு நினைவிலிருந்து சுமார் 3000 கணிணிகளை தயார் செய்து விற்பனை செய்துள்ளேன். ஆரம்பகாலத்தில் ஒரு கணிணிக்கு சுமார் 10000 ரூபாய் லாபம் கிடைக்கும். தொடர்ந்து வந்த காலத்தில் ஒரு கணிணிக்கு 2000 ரூபாய் லாபம் பார்ப்பதே அரிதாகி விட்டது. மூலைக்கு மூலை கணிணிக் கடை. வியாபாரம் முடிந்து போய் விட்டது. அந்தக் காலத்தில் ஒரு நிறுவனத்திற்கு சுமார் 5 கணிணிகளையும், ஆஃபீஸ் ஆட்டோமேஷன் சாப்ட்வேரை, விண்டோஸ் என்.டி சர்வர் மூலமாக இணைத்து வழங்கி இருந்தேன். புதிய பணியாளர்களால் பல தடவை சிஸ்டம் கிராஸ் ஆகி நின்று விடும். அதைச் சரி செய்ய அங்கு அடிக்கடி சென்று வருவேன்.

புதிய பெண் ஒருவரை கணிணியில் பணி செய்ய அமர்த்தியிருந்தது அந்த நிறுவனம். அப்பெண் சரியான அழகி. கோவில் சிலைபோல இருந்தார். அவருக்கு கணிணியில் எவ்வாறு அந்த ஆட்டோமேஷன் சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுத்தேன். அப்போதே எனக்கு ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் கட்டணம். பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விட்டாலும் 1000 ரூபாய் கட்டணம் தருவார்கள். இதனால் எனக்கு லாபம் என்று நினைத்து விடாதீர்கள். நிறுவனத்திற்குதான் பெரும் லாபம். 

அந்தப் பெண் ஒரு வாரம் கழித்து என்னை எனது அலுவலகத்தில் சந்தித்தார். விஷயத்தைக் கேட்டேன் வேலையை விட்டு நின்று விட்டாராம். அவரின் புத்திசாலித்தனத்துக்காக அவரை என்னிடம் கணிணி வாங்கிய வேறொரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன்.

ஏன் வேலையை விட்டு நின்று விட்டாய் என்று கேட்டதற்கு அந்தப் பெண், “சார், முதலாளி அலுவலகத்துக்கு வந்த உடனே பேண்டை கழட்டி ஹேங்கரில் மாட்டி விடுகிறார் சார். அவரின் மேஜைக்கு கீழே !” என்றுச் சொன்னவுடன் வெட்கம் வந்து விட்டது அப்பெண்ணுக்கு.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு என்று நினைத்துக்கொண்டு,’சரிம்மா! போதும்! போதும்!’ எனச் சொல்லி அவரை அனுப்பி வைத்து விட்டேன்.

அந்த நிறுவனம் மூன்றே மாதங்களில் வங்கியால் மூடப்பட்டது. இப்போது அந்த நிறுவனம் இருந்த இடத்தில் ஹோட்டல் ஒன்று உள்ளது. அந்த முதலாளி போக வேண்டிய இடத்துக்குப் போய் விட்டார். 

இப்போது புரிந்து இருக்குமே மேலே கண்ட நிறுவனம் ஏன் மூடப்பட்டுள்ளது என்பது? இதுதான் விஷயம்.

ஒரு பெண் என்பவள் ஆலமரம் போன்றவர். மற்ற உறவுகள் எல்லாம் அந்த ஆலமரத்தின் வேர் போன்றவர்கள். அந்தப் பெண்ணை வைத்துதான் மிகப் பெரிய குடும்பச் சங்கிலி உருவாகிறது. எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்த்து எதை எதை எப்போது செய்ய வேண்டும்? குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை அவளின் தாய் மூலம் கற்றுக் கொண்டு அதை வாழையடி வாழையாக கொண்டு செல்பவள். 

காலச் சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். அப்படி வேலைக்கு வரும் பெண்களை தன் சுய நலத்துக்காக கட்டாயத்தின் பெயரில் தவறான பாதைக்கு இழுத்து விடும் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனம் அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனவேதனைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். 

ஒரே ஒரு பாஞ்சாலி தான் பாரதப்போருக்கு காரணம். கோடிக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட காரணம் இந்தப் பாஞ்சாலி என்கிறது மகாபாரதம். சீதை தான் இராமாயணத்துக்கு காரணம்.

பல நிறுவனங்களின் நிறுவனர்கள் தெரிந்தோ தெரியாமலோ இந்தக் காரியத்தினை எளிதாகச் செய்து விடுகின்றனர். உப்பினைத் தின்று விட்டு தாகம் எடுக்காமல் இருக்க முடியும் என்று நம்புவது எவ்வளவு மடத்தனமோ அதே போலத்தான் குற்றம் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பி விடலாம் என்று நினைப்பது.

எனது ஒரு சில கார்ப்பொரேட் நிறுவனத்தைச் சார்ந்த நண்பர்களைக் கொண்டு இந்தப் பிரசினையிலிருந்து வெளிவருவதற்கு உதவிகளைச் செய்ய முயல்கிறேன் என ஆறுதல் கூறி அப்பெண்களை அனுப்பி வைத்தேன். கணவர் இதே வேலையைச் செவ்வனே செய்து வந்துள்ளவர் என்று அவரின் மனைவி சொன்னார். சொல்லும் போது அவரை அறியாமல் கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. எந்தப் பெண்ணின் கண்ணீரோ தெரியவில்லை 2000 பேர் வேலை இழக்கும்படி ஆகி விட்டது.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்தேன். அங்கு ஒரு பெரிய பிரச்சினை காத்துக் கொண்டிருந்தது. அது என்ன? அந்தப் பிரச்சினையினால் நானென்ன புரிந்து கொண்டேன் என்று விரைவில் எழுதுகிறேன்.

Friday, July 22, 2016

நிலம் (27) - சப்டிவிஷன்கள் செய்யப்படும் போது ஆவணங்கள் மாற்றப்படுகின்றன

அமெரிக்காவில் வசிக்கும் நண்பரொருவரின் நிலத்தின் பட்டாவையும், எஃப்.எம்.பி என்று அழைக்கப்படும் புல வரைபட நகலையும் பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அதற்காக பலமுறை அலைந்து நேற்று மாலை பெற்றேன்.

நண்பர் கிரையம் பெற்றபோது பெற்றிருந்த புலவரைபடமும், பட்டாவும்  புதிய சப்டிவிஷன் செய்யும் போது மாற்றப்பட்டிருந்தன. அந்த சப்டிவிஷன்களுக்கான புதிய பட்டாவும் வழங்கப்பட்டிருந்தன. பட்டாவைப் பெற்றுப் பார்க்கும் போது பல்வேறு புதிய சர்வே எண்களுடன் புதிய நபர்களின் பெயரும் இருந்தன. அந்த பட்டாவில் நண்பரின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது ஆனால் அளவீடு குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

இனி அந்தப்பட்டா எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும். இப்போதெல்லாம் பத்திரம் பதிவு செய்யும் போது பட்டாவையும் கேட்கின்றார்கள். பத்திரத்தில் சொத்து இருக்கிறது என்றாலும் பட்டாவில் அளவு சரியில்லை என்றால் கிரையம் செய்யத் தயங்குவார்கள் தானே? வேறு எந்த பணிகளையும் செய்ய முடியாது அல்லவா?

ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் நிலத்திற்கான பட்டாவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், புல வரைபட நகலை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் சொத்தினைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உங்களுக்கே. புதிய சப்டிவிஷன்கள் என்ற பெயரில் அளவீடுகள், பெயர்கள் எல்லாமும் மாற்றப்படுகின்றன. ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

Thursday, July 21, 2016

நிலம் (26) - வெளி நாட்டில் வாழ்பவர்கள் பொது அதிகார முகவர் ஆவணம் எழுதுவது எப்படி?

சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொன்னார். வெளி நாட்டில் தொழில் செய்து கொண்டிருக்கும் இந்த நண்பரின் நண்பர் அவரின் நண்பருடன் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டுமென்று ஆவலினால் நண்பருடன் பேசி  ஒரு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அந்த நிறுவனம் வெளி நாட்டில் வசிப்பவரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. முதலீடு முழுவதையும் இவரே போட்டிருக்கிறார். இந்தியாவில் இருந்தவர் வொர்க்கிங்க் பார்ட்னராக இருந்திருக்கிறார். ஆனால் ஆவணத்தில் இந்தியாவில் இருந்தவர் தான் மேனேஜிங் டைரக்டராக இருந்திருக்கிறார் என்பதை வெளி நாட்டில் வசித்தவர் கவனிக்கவில்லை.

தொழிலும் நன்றாகப் போய்க் கொண்டிருந்திருக்கிறது. மேலும் முதலீடு தேவைப்படுவதால் வெளி நாட்டில் வசித்தவர் அதிக கடின உழைப்பினைப் போட்டு பொருள் சேர்த்து இந்தியாவில் இருந்தவருக்கு அனுப்பி இருந்திருக்கிறார். தொழிலை நல்ல முறையில் வளர்த்து வந்திருக்கிறார் இந்தியாவில் இருந்தவர். எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்த போது வெளிநாட்டு நண்பர் உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறார். அவருக்கு மூன்று பெண்கள் திருமணமாகாமல் இருக்கின்றனர்.

வெளிநாட்டில் வாழ்ந்தவரின் மனைவி, தொழிலில் பார்ட்னராக இருந்தவரிடம் சென்று என்னை தொழிலில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுச் சொன்னவுடன், இங்கே பாரும்மா இந்த தொழில் முழுவதும் என்னால் நடத்தப்படுவது, இதற்கு உன் புருஷன் ஒரு பங்குதாரர் ஆகவே அவரின் பங்கினை மட்டும் கொடுத்து விடுகிறேன் என்றுச் சொல்லி இருக்கிறார். திடுக்கிட்ட அந்த விதவைப் பெண் தெரிந்த வக்கீலைச் சென்று பார்க்க இவர் அவரை திட்டமிட்டு ஆரம்பத்திலேயே ஏமாற்றி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அவரின் முதலீட்டை வைத்து அவரை ஏமாற்றி அவர் பெயரில் தொழில் நடப்பதாகச் சொல்லி அந்தத் தொழிலுக்கு தான் தான் முதல்வர் என ஆவணங்கள் தயாரித்து முழுவதுமாக ஏமாற்றிக் கொண்டே வந்திருக்கிறார் அவர். இப்போது அக்கவுண்டில் வந்த பணத்தை மட்டும் அந்த விதவைப் பெண்ணிடம் கொடுத்து ஓரங்கட்டி விட்டார். 

சட்டத்திற்கு ஆவணங்களே முக்கியம். மனச்சாட்சி, உண்மை என்பதெல்லாம் தேவையே இல்லை. அந்த விதவைப் பெண்ணால் தனியாக வளர்ந்து நிற்கும் இவரை எதிர்க்க முடியுமா?  கோர்ட்டு மூலமாக தீர்ப்பு கிடைக்குமா? அந்த விதவைப் பெண்ணின் கணவரின் உழைப்பினை வேறொருவர் சுரண்டி விட்டார். அந்தக் குடும்பம் நிர்கதியாக நிற்கிறது.

இது போன்ற பல இன்னல்களை பல வெளி நாடு வாழ் மக்கள் அனுபவித்து வருகின்றதை பலரும் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். தன் வாழ்க்கையை, தான் வாழ்ந்த பூமியை, தன் கலாச்சாரத்தை, தன் இன்பத்தை எல்லாம் இழந்து வெளிநாட்டில் உழைத்து பணம் சம்பாதித்து நல்ல வாழ்க்கையை தன் குடும்பத்துக்கு கொடுத்து மகிழ வேண்டுமென்பதற்காக எத்தனையோ மனிதர்கள் தங்கள் இளமையை இழந்து தன்னலமில்லாமல் தியாக வாழ்க்கை வாழ்கின்றார்கள். அவர்களைக் கூட இந்த உலகம் ஏமாற்றி விட துடிக்கிறது என்பதை நினைக்கும் போது மனதுக்குப் பாரமாக இருக்கிறது.

உண்மையைச் சொல்லி தொழில் செய்தால் என்ன? குறைந்தா போய் விடும்? இன்னொருவரின் உழைப்பை அடாது பெற ஏன் முயல வேண்டும்? இதே காரியத்தினை வேறொருவர் இவருக்குச் செய்து விட மாட்டாரா? என்பதையெல்லாம் எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

சமீபத்தில் வெளி நாட்டில் வசிக்கும் ஒருவர் தன் முன்னோர் சொத்தில் தனக்கு உரிய பாகத்தை விற்பனை செய்ய விரும்பினார். அதற்காக அவர் இந்தியா வந்து செல்வது என்பதெல்லாம் முடியாது. அவரின் நண்பர் மூலமாக தன் தம்பிக்கு தன் பாகத்தினை விற்க பவர் கொடுப்பதாக முடிவு செய்து பவர் எழுதச் சொல்லி இருக்கிறார். ஆவண எழுத்தரும் ஒரு பவர் டாக்குமெண்ட்டினை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தன்னை முழுவதுமாக தன் தம்பியிடம் அடகு வைத்து விடும் அளவுக்கு அந்த ஆவணம் இருந்திருக்கிறது. அவரின் மனைவிக்கு அந்த ஆவணத்தின் மீது சந்தேகம் ஏற்பட நெட்டில் துழாவி என்னைப் பிடித்தனர்.

வெளி நாடுகளில் வசிப்போர் என்ன காரியத்துக்காக பொது அதிகார முகவர் பத்திரம் எழுத விரும்புகிறார்கள் என்று முதலில் அறிய வேண்டும். அந்தக் காரணத்துக்காக மட்டுமே அந்த ஆவணம் எழுதப்பட வேண்டும்.

தனக்காக நிலம் கிரையம் பெற தனி ஆவணம், தன் பாகத்தினை விற்க தனி ஆவணம், வீடு கட்ட பிளான் அப்ரூவல் பெற தனி ஆவணம், அதற்கொரு கால நிர்ணயம், தனக்காக கடன் மட்டும் வாங்க தனி ஆவணம் என்று தனித்தனியாக பொது அதிகார முகவர் ஆவணத்தை ஏற்படுத்தல் மிக அவசியம். செலவு ஆகிறது என்று முற்றிலுமாக தன்னை பிறரிடம் அடகு வைத்து விடக்கூடாது.

அந்த நண்பருக்கு அவருக்குத் தேவைப்பட்ட ஆவணத்தை எழுதி அனுப்பி வைத்தேன். 

ஆகவே வெளிநாடுகளில் வசிப்போர் தன்னை பிரதிநிதிப்படுத்தும் பொது அதிகார முகவர் ஆவணங்கள் எழுதிக் கொடுக்கும் போது வெகு கவனத்துடன், ஜாக்கிரதையாக எழுத வேண்டும் என்பதை நினைவில் கொள்க. இது பற்றி வேறேதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை மெயில் மூலம் அணுகவும். என்னால் இயன்ற உதவியைச் செய்து தருகிறேன்.

இந்தியாவில் தன் பெயரில் நிறுவனம் தொடங்க, நிலம் விற்க, நிலம் வாங்க, தன் பெயரில் உள்ள நிலத்தில் வீடு கட்ட, கடன் பெற என்ற அனைத்துக் காரியங்களுக்கும் தனித்தனி ஆவணங்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.