அமெரிக்காவில் வசிக்கும் நண்பரொருவரின் நிலத்தின் பட்டாவையும், எஃப்.எம்.பி என்று அழைக்கப்படும் புல வரைபட நகலையும் பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அதற்காக பலமுறை அலைந்து நேற்று மாலை பெற்றேன்.
நண்பர் கிரையம் பெற்றபோது பெற்றிருந்த புலவரைபடமும், பட்டாவும் புதிய சப்டிவிஷன் செய்யும் போது மாற்றப்பட்டிருந்தன. அந்த சப்டிவிஷன்களுக்கான புதிய பட்டாவும் வழங்கப்பட்டிருந்தன. பட்டாவைப் பெற்றுப் பார்க்கும் போது பல்வேறு புதிய சர்வே எண்களுடன் புதிய நபர்களின் பெயரும் இருந்தன. அந்த பட்டாவில் நண்பரின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது ஆனால் அளவீடு குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.
இனி அந்தப்பட்டா எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும். இப்போதெல்லாம் பத்திரம் பதிவு செய்யும் போது பட்டாவையும் கேட்கின்றார்கள். பத்திரத்தில் சொத்து இருக்கிறது என்றாலும் பட்டாவில் அளவு சரியில்லை என்றால் கிரையம் செய்யத் தயங்குவார்கள் தானே? வேறு எந்த பணிகளையும் செய்ய முடியாது அல்லவா?
ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் நிலத்திற்கான பட்டாவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், புல வரைபட நகலை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் சொத்தினைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உங்களுக்கே. புதிய சப்டிவிஷன்கள் என்ற பெயரில் அளவீடுகள், பெயர்கள் எல்லாமும் மாற்றப்படுகின்றன. ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.