வெளியூர்களில் சொத்து வைத்திருக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இது. பொறுமையாகப் படிக்கவும்.
சமீபத்தில் ஒரு பூமி விலைக்கு வந்தது. அந்தப் பூமியில் ஒரு பிரச்சினை. டிடிசிபி அப்ரூவல் பெற்ற மனையிடத்தில் ஒரு மனையினை முத்து என்பவரின் மனைவி தேவி என்கிறவர் நில புரமோட்டரிடமிருந்து 1980ஆம் ஆண்டு கிரையம் பெறுகிறார். வில்லங்கச் சான்றிதழில் தேவியின் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது பதிவாகி இருக்கிறது. சொத்து தேவிக்கு உரிமையானது.
2011ம் வருடம் ராம் என்பவர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்கிறார். அது என்னவென்றால் எனக்குச் சொந்தமான பூமியை தேவி என்கிறவர் போலியாக ஆவணம் தயாரித்து உரிமை கொண்டாடுகிறார் என ராஜேஷ் என்பவரின் மனைவி தேவி என்றுக் குறிப்பிட்டு தேவி மீது (கவனிக்க) வழக்குத் தொடர்கிறார்.
தேவியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஏனென்றால் அப்படி ஒருவர் இல்லவே இல்லை. முத்துவின் மனைவி தேவிதான் இருக்கிறாரே தவிர ராஜேஷ் என்பவரின் மனைவி என்பவர் இல்லவே இல்லை. பிரதிவாதியிடமிருந்து பதிலேதும் இல்லை.
ஆகையால் கோர்ட் ராம் என்பவருக்கே சொத்து உரிமையானது என்று உத்தரவு பிறப்பிக்கிறது. அந்த உத்தரவைக் கொண்டு ராம் நில உடமைப் பதிவேடுகளில் மாற்றம் செய்கிறார்.
நில உடைமைப் பதிவேடுகளில் இப்போது நிலம் ராமுக்குச் சொந்தமானது. அப்போது தேவியின் சொத்து என்ன ஆனது?
மேற்படிச் சொத்துக்கு யார் உரிமையாளர்?
நிச்சயம் தேவிதான் உரிமையாளர்.
ராம் டாக்குமெண்டுகளை தயார் செய்திருக்கிறாரா என்றால் அதுவுமில்லை. அவர் கிரையம் பெற்றது சரியானது தான். அது எப்படி?
டிடிசிபி புரமோட்டருக்கு நிலம் எழுதிக் கொடுத்தவர்களுக்கு இன்னும் கொஞ்சம் சொத்து அவ்விடத்தில் இருந்திருக்கிறது. அந்தச் சொத்தினைதான் ராம் வாங்கி இருக்கிறார்.
அதெப்படி ஒரே சொத்துக்கு இருவர் உரிமையாளர்களாக இருக்கமுடியும் என்கின்றீர்களா?
நிச்சயம் முடியவே முடியாது.
அப்போது ராமின் பத்திரத்தில் என்னதான் பிரச்சினை?
ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறது.
சொத்து விபரத்தில் குறிப்பிட்டுள்ளது முந்தைய உரிமையாளர்களுக்கு பாத்தியமற்ற வேறொரு இடம். அதுதான் பிரச்சினை. ராம் தவறான சொத்தினை வாங்கி இருக்கிறார்.
இதைக் கண்டுபிடித்து சரி செய்ய எத்தனை காலம் ஆகும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.தேவிக்கு எவ்வளவு பிரச்சினை உண்டாகி இருக்கிறது என்று பாருங்கள்.
இந்தப் பிரச்சினையின் முழு காரணகர்த்தா டாக்குமெண்ட் எழுதியவர் மற்றும் சொத்தினை ராமுக்கு விற்றவர் இருவர் மட்டும் தான்.
ராம், தான் எந்தச் சொத்தை வாங்குகிறோம் என்று தெரியாமல் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் அவர் வழக்குத் தொடுத்தது யார் மீது என்று பார்த்தால் அதுவும் தவறானது. ராம் நிச்சயம் கோர்ட்டை ஏமாற்றி இருக்கிறார் என்றே தெரிய வருகிறது.
இப்படியும் பிரச்சினை வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்கு என்னதான் வழி !
நன்கு அனுபவம் வாய்ந்த எழுத்தர்கள் அல்லது நல்ல சர்வீஸ் கம்பெனிகளை அணுகுவதுதான் சாலச் சிறந்தது.
இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.