குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஞானி. Show all posts
Showing posts with label ஞானி. Show all posts

Saturday, February 8, 2014

யார் ஞானி?


தன்னை அறிந்தவர் தன்னை வெளிப்படுத்தார். எப்படி திடீரென்று வந்தோமோ அப்படியே திடீரென்று சென்று விடுவதையும், நிழல் மறைவது போல மனிதனும் மறைந்து விடுவான் என்பதையும், நிலையற்றவையே நிலையானது என்பதையும் அறிந்தவர்கள் எவரும் தன்னை வெளிக்காட்டவே மாட்டார்கள்.

ஆறு சட்டைகள் போட்டுக் கொண்டு ஒருவர் பைத்தியக்காரனைப் போல பேரூர் தாண்டிய பகுதியில் அவ்வப்போது தென்படுவார். அவர் யார்? எங்கிருந்து வந்தார்? அவருக்கு என்னதான் வேலை? இப்படி எந்தக் கேள்விக்கும் அவரிடம் இருந்து பதிலே கிடைக்காது. அவர் யாரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. ஆனால் கேட்டோருக்கு அவர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இன்னொருவர் கடந்த இருபத்தைந்தாண்டு காலமாக ஒரே சடாமுடி, ஒரே உடையுடன் மருதமலைக்கும் பழனிக்குமாய் நடந்து கொண்டே இருக்கிறார். ஏன் அவர் அப்படி நடக்கிறார்? அவர் என்ன செய்கிறார்? யாருக்காவது தெரியுமா? அவரிடம் நெருங்கினால் சிரிப்பொன்றே பதிலாய் தருவார். இப்படிப்பட்டவர்கள் ஏன் பூமியில் அவதரிக்கின்றார்கள். இதெல்லாம் புரிந்து கொள்ளவே முடியாத ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள்.

நிலையற்ற வாழ்க்கையின் நிலையாமைத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் எவரும் எந்த போதிலும் தான் யார், தன்னிடமிருக்கும் மகிமை என்பது பற்றி எவரிடமும் சொல்வதில்லை.

என் சிறுவயதில் நான் கண்ட ஒருவரைப் பற்றிய அனுபவம் இது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமான ஆவணத்தில் இருக்கும் சிவன் கோவில் நான் சிறு வயதாக இருந்த போது சிதிலமடைந்து கிடக்கும். சிவன் கோவிலின் எதிரே மிகப் பெரிய புளிய மரமொன்று இருக்கும். சிவன் கோவிலின் வடபுறமாய் குளமொன்று பரந்து விரிந்து கிடக்கும். 

இக்கோவிலின் அருகில் தான் நான் படித்த அரசுப்பள்ளி இருக்கும். தாத்தா என்னிடம் அடிக்கடிச் சொல்வார், ”சிவன் கோவிலிலிருக்கும் லிங்கத்தை மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போய் மன்னார்குடி பக்கமிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார்கள்” என்று.  மஹா சிவராத்திரியன்றும் இன்னுமொரு விஷேசத்தின் போது வெகு விமர்சையாக விழா கொண்டாடுவார்கள். அப்போது சிவ பெருமான் தகதகவென்று ஜொலிப்பார். இப்படியான காலத்தில் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் காலத்தில் தான் இந்த அனுபவம் எனக்கேற்பட்டது.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா? அவர்கள் இறைவன் பால் பக்தி கொண்டு தன்னையே அவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியும் வாழ முடியுமா என்றெல்லாம் நாம் சிறு வயதில் படித்த அவர்களின் வரலாறு நமக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும்.

லிங்கத்தின் கண்ணில் ரத்தம் வடிந்ததற்காக தன் கண்ணையே தோண்டி எடுத்து லிங்கத்தில் பதித்த கண்ணப்ப நாயனார் கதை உங்களுக்குத் தெரியும் தானே? இதெல்லாம் சாத்தியம் தானா? என்று உங்களுக்கு தோன்றுகிறதல்லவா? இப்படியும் இருப்பார்களா ? நம்பமுடியவில்லையே என்றெல்லாம் தோன்றுபவர்கள் தொடர்ந்து படியுங்கள்.