குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, February 24, 2014

யார் ஞானி பகுதி இரண்டுஎனது பால்ய பிராயத்தில் எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் பெயர் வேலாயுததேவர். அவர் சிவபெருமானைப் போற்றி பாடல்களை எழுதுவார். ஆவணம் பெரியகுளத்துகரையில் உள்ள சிவபெருமானிடம் அவருக்கு அவ்வளவு பக்தி. அவர் சிவபெருமானைத் துதித்து எழுதும் பாடல்களை புத்தகமாகப் பிரிண்ட் போடுவார். பிரிண்ட் போடுவதற்கு அச்சகத்தில் எழுத்துக் கோர்ப்பவர் தான் தாத்தாவுக்குப் பிரச்சினை.

தாத்தாவின் கையெழுத்து வீச்சு வீச்சாய் இருக்கும். அவ்வளவு  எளிதில் படித்து விட முடியாது. அச்சகத்தில் வேலை பார்ப்பவருக்கு வீச்செழுத்துப் படிப்பதில் பிரச்சினை. புத்தகம் பிரிண்ட் ஆகி வரும் போது பார்த்தால் ஒற்றுப் பிழை, புள்ளிகள் பிழை, எழுத்துப் பிழை என்று ஒவ்வொரு பக்கமும் பெரியவரின் திருத்திய சுவடுகளாய் இருக்கும். அதற்காக பெரியவர் ஒரு வேலை செய்தார்.

அந்தப் பிரச்சினையின் காரணமாகத்தான் அவர் தன் பாடல்களை அழகிய கையெழுத்தில் தன் பாடல்களை எழுத என்னைத் தேர்ந்தெடுத்தார். 

என் அம்மாவிடம் தாத்தா பேசி, தன் பாடல்களை என்னை எழுதரச் சொல்லக் கேட்டிருப்பார் போல. அம்மா என்னிடம் வந்து தாத்தாவுக்கு பாட்டு எழுதிக் கொடுப்பா என்றுச் சொல்ல அன்றிலிருந்து நானும் அவர் கொண்டு வந்து கொடுக்கும் வீச்சுக் கையெழுத்தினைப் பிரதியினைப் படித்து புரியாதவற்றை அவரிடம் கேட்டு அதன்படி எழுதிக் கொடுப்பேன். அவர் என் கையெழுத்துப் படியை எடுத்துக் கொண்டு போய் அச்சகத்தில் கொடுத்து புத்தகமாக்கி கொண்டு வருவார். அதில் ஒரு புத்தகமும் எனக்குத் தருவார்.

நான் ஐந்தாவது படித்த காலத்தில் இருந்து பனிரெண்டாவது படிக்கும் காலம் வரை அவருக்கு பாடல்களை எழுதிக் கொடுப்பேன்.

ஆவணம் ஆவிகுளத்துக்கரையில் இருக்கும் பள்ளியின் பின்புறம் பெரிய புளிய மரம் ஒன்றிருக்கும். பரந்து விரிந்து நிழல் கொடுக்கும் அம்மரத்தின் அடியில் பயிர் அடிப்பது,  நெற்போர் வைப்பது, நெற்போரடிப்பது,  நெல் காயப்போடுவது என்று பல வித விவசாய வேலைகளுக்கும் பயன்படும். அங்குதான் மதிய வேலையில் பள்ளிச் சிறார்களாகிய நாங்கள் விளையாடுவோம். அது பெரிய புளியமரம். அப்படி ஒரு விருட்சத்தை இதுவரையில் நான் எங்கும் கண்டதில்லை. 

திடீரென்று ஒரு நாள் அவர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டு என்னை அந்த புளியமரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அமர்ந்து சில பாடல்களை எழுதினோம். அவர் சொல்லச் சொல்ல அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுத்தேன். பாடல்கள் எல்லாம் எழுதி முடித்த பிறகு பழமையான அந்த சிவபெருமான் சன்னதிக்கு என்னை அழைத்துச் சென்றார். சன்னதியில் உட்காரச் சொல்லி விட்டு பின்புறம் சென்றார். கம்பிகள் பாவிய மரக்கதவுகளூடே சிவபெருமான் பிரம்மாண்டமாக தெரிந்தார். கோவிலின் பின்புறம் சென்றவர் கையில் சில இலைகளுடன் வந்தார். அதைக் கொண்டு போய் சிவபெருமானின் சன்னதியின் முன்பு இருக்கும் படிக்கட்டில் வைத்து விட்டு என் அருகில் வந்து நின்று கொண்டு கை கூப்பி எம்பெருமானை தொழுத நேரத்தில் அந்தப் பச்சை இலைகள் திடீரென்று தீபம் போல பற்றி எரிந்தது. 

எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். என்னடா இது இலைகள் இப்படி எரிகின்றனவே என்று நினைத்துக் கொண்டிருந்த போது என் தலைமீது கை வைத்து என்னவோ சொன்னார். பின்னர் எரிந்து கொண்டிருக்கும் இலைகளை தொட்டு கும்பிட்டார். நானும் கும்பிட்டேன். இலைகள் கருகி சாம்பலாய் கிடந்தது. அங்கிருந்து வந்து விட்டோம். 

அடுத்த நாள் மதியம் நானும் என சக வகுப்புத் தோழர்கள் சிலருடன் மீண்டும் சிவபெருமான் சன்னதிக்குச் சென்று தோழர்களிடம் சொல்லி இலைகளைப் பறித்து வந்து படியில் வைத்து “இம்..இம்” சொல்ல ஒன்றும் நடக்கவில்லை. நான் சொன்னதை என் சக தோழர்கள் எவரும்  நம்பத் தயாரில்லை. வெட்கமாய்ப் போய் விட்டது.

அடுத்த நாள் காலையில் தாத்தாவைப் பார்த்து இது பற்றிக் கேட்க, அவர் என்னைப் பார்த்து சிரி சிரியென்று சிரித்தார். பின்னர் ஏதோ சொன்னார். அது என்னவென்று எனக்கு நினைவில் இல்லை.

தொடர்ந்து இணைந்திருங்கள் என்னுடன்....


1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பாக உள்ளது...! தாத்தா சொன்னது அடுத்த பகிர்வில் வரும் என்று நினைக்கிறேன்...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.